Friday, May 6, 2011

இன்றைய செய்திகள்.

ஹசான் திலகரட்ணவிடம் மீண்டும் இரகசிய பொலிஸார் வாக்குமூலம்.

இலங்கை கிரிக்கட்டில் கடந்த 1992ம் ஆண்டு முதல் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தியிருந்த இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் ஹசான் திலக ரட்ணவை, இலங்கை இரகசிய பொலிஸார் மீண்டும் அழைத்துள்ளனர்.
இது தொடர்பில் ஏற்கனவே அவர் சில தினங்களுக்கு முன்னர் இரகசிய பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் அவர் இன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்கு, கொழும்பு கோட்டையில் உள்ள இரகசிய பொலிஸாரின் காரியாலயத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த சில தினங்களுக்கு முன் வழங்கிய வாக்குமூலத்தின் போது, அவர் இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிட்டிருக்கவில்லை.
இந்த நிலையில் இன்றைய தினம் அவர்களின் பெயர் விபரங்களை விசாரிக்கும் பொருட்டு அழைக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கனவே இந்த பெயர் விபரங்களை வெளியிட வேண்டாம் என கூறி, ஹசான் திலகரட்ணவுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தால் வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்படும்- ரஷ்யா.
இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்த நேரிடும் ரஷ்யா அறிவித்துள்ளதாக கொழும்பு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முயற்சிக்கப்பட்டால் அதனை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் எந்தவொரு நாடும் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.நிபுணர் குழு அறிக்கை பிழையானது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ரஷ்யா பூரண ஆதவரளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைகளின் நிர்வாகம் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ்!

உள்ளுராட்சி சபைகளின் நிர்வாக நடவடிக்கைகளை இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இதன் முதற் கட்டமாக காலி மற்றும் மாத்தறை நகரசபைகளின் நிர்வாகங்களுக்கு இராணுவத்தின் பிரிகேடியர்களை அரசாங்கம் நியமித்துள்ளது.

இவர்கள் தற்போது அந்தந்த மாநகரசபைகளில் பணிபுரியும் நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட நியமனங்களுக்கு அமையவே நிர்வாக நடவடிக்கைகளில் பணிபுரிவதாக நகரசபைகளுக்கு குறித்த பிரிகேடியர்கள் அறிவித்தல் கொடுத்துள்ளனர்.

பாதை அபிவிருத்திக்காக கட்டடங்களை இடித்தல் தொடக்கம் நகரசபைகளுக்கான ஆணையாளர்களுக்கு வழங்கப்பட்ட பணிகள் வரை இந்த பிரிகேடியர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் எச்.எல்..எம். அதாவுல்லா தெரிவிக்கையில், காலி மற்றும் மாத்தறை உள்ளுராட்சி சபைகளுக்கான நிர்வாக நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரை நியமிப்பது குறித்து இதுவரை உத்தியோகபூர்வமான தீர்மானம் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். சர்வாதிகார நாடுகள் போன்று ராணுவமயமனது எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று புத்தியீவிகள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கோத்தபாயவை குறுக்கு விசாரணை செய்த பிளேக்!

அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் றொபர்ட் ஓ பிளேக் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஜவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.றொபர்ட் ஓ பிளேக் வன்னிக்கு விஜயம் செய்த பின்னர் கோத்தபாய ராஜபக்ஸவை பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்துப் பேசியிருந்தார். இச்சந்திப்பின் போது இடம்பெற்ற கலந்துரையாடல்கள் குறித்து இருதரப்பிலிருந்தும் கருத்துக்கள் வெளியிடப்படவில்லை.

இச்சந்திப்பின்போது றொபர்ட் ஓ பிளேக் குறுக்கு விசாரணை செய்வது போன்றே கோத்தபாயவிடம் கேள்விகளை எழுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்படுத்த அமெரிக்கா முனைகிறதா என்று கலக்கத்தோடு றொபர்ட் ஓ பிளேக்கிடம் கோத்தபாய விசாரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

றொபர்ட் ஓ பிளேக்கிடம் இடம்பெற்ற சந்திப்பு குறித்து கோத்தபாய ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ளார். வன்னிக்குச் சென்றிருந்த பிளேக்கிடம் அங்குள்ள மக்கள் போரினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்கள் போதிய வேலைவாய்ப்பு இன்றி இருப்பதையே அடிப்படையான பிரச்சினைகளாக கூறியுள்ளனர் என்று கோத்தபாய தெரிவித்துள்ளார். பிளேக்குடனான சந்திப்பு ஊக்கமளிப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பின்லேடனின் பங்களா அருகே வீடு எடுத்துத் தங்கிய அமெரிக்க உளவுப்படை அதிகாரிகள்!
அமெரிக்காவின் விசேட அதிரடிப்படை வீரர்களால் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் உள்ள பங்களாவில் பல வருடங்களாக தங்கியிருந்தார்.அவரது இருப்பிடத்தை அமெரிக்கா உளவுபடை கண்டு பிடித்ததும் சில அமெரிக்க உளவாளிகளை அபோதாபாத் அனுப்பி வைத்தது. அவர்கள் பின்லேடன் தங்கியிருந்த பங்களா அருகிலேயே ஒரு வீட்டை எடுத்து பல மாதங்கள் தங்கியிருந்தார்கள்..அந்த வீட்டிலிருந்த படி பின்லேடன் தங்கியிருந்த பங்களாவை பல மாதங்களாக கண்காணித்தனர். தாங்கள் வெளியில் சென்றால் சந்தேகம் ஏற்படும் என்பதால் அதி நவீன கருவிகளை உளவு பார்க்க பயன்படுத்தினர்.

டெலிபோட்டோ லென்சுகள் அடங்கிய அதி நவீன கேமராக்களை பயன்படுத்தியும், புற ஊதா கதிர்களால் செயல்படும் கருவிகளை பயன்படுத்தியும் பின்லேடன் பங்களாவை உளவு பார்த்து தகவல்களைச் சேகரித்தனர்.பின்லேடன் பங்களாவில் இருந்து பேசும் உரையாடல்களை மிக நுண்ணிய ஒலிக்கருவிகளை பயன்படுத்தி ஒட்டு கேட்டனர். பின்லேடன் தப்பிக்க பங்களாவில் சுரங்கபாதை உள்ளதா? என்று செயற்கை கோள் மூலம் கண்காணித்தனர்.

இவ்வளவு நுணுக்கமான கருவிகளை உளவு துறை வரலாற்றில் இது வரை எந்த நாடும் பயன்படுத்தியது கிடையாது என்று அமெரிக்க உளவியல் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக பின்லேடன் பதுங்கியிருப்பதை அமெரிக்கா கண்டு பிடித்துவிட்டது.அவர்களுக்கு இன்னொரு சிக்கலும் இருந்தது. அமெரிக்க உளவாளிகள் தங்கியிருப்பது பின்லேடனுக்கு மட்டுமல்ல, பாகிஸ்தான் உளவு துறைக்கும், உள்ளூர் போலீசுக்கும் தெரியக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் அவதானத்துடனும் செயற்பட்டனர்.

பின்லேடன் பங்களாவுக்கு உயரமான மர்ம நபர் ஒருவர் அடிக்கடி வந்தார். அவர் தான் பின்லேடனா? என்பதை கண்டு பிடிப்பதிலும் சில சமயம் சிக்கல் ஏற்பட்டது. உளவாளிகளுக்கு பின்லேடனை உளவு பார்க்கும் பணி மட்டுமே வழங்கப்பட்டது.அவர்கள் அதனை திறம்படச் செய்தனர். அவர்கள் உறுதி செய்த பின்பு கப்பல் படை கமாண்டோ பிரிவிடம் தாக்குதல் நடவடிக்கை ஒப்படைக்கப்பட்டது.அவர்கள் கச்சிதமாக தாக்குதல் நடவடிக்கையை முடித்துவிட்டனர். இது அமெரிக்க உளவுப் பிரிவின் திறமையை எடுத்துக் காட்டுகிறது.
அழகு சத்திர சிகிச்சையின் போது டொக்டர் அலட்சியம் செய்ததால் பெண்ணொருவர் மரணம்.
ரொறன்ரோவைச் சேர்ந்த அழகு சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் மீது தொழில் ரீதியாக அலட்சியமாக இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.மேலதிக கொழுப்பை அகற்றுவதற்காக இவரிடம் சிகிச்சை பெற வந்த ஒரு பெண் மரணமடைந்துள்ளார். ஒன்ராறியோவின் மருத்துவ மற்றும் சத்திர சிகிச்சை நிபுணர் சங்கம் நடத்திய விசாரணைகளின் போதே இந்த மருத்துவர் தன்னிடம் சிகிச்சை பெற வந்த பல நோயாளிகளின் சிகிச்சையின் போது அலட்சியமாக இருந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
பெஹ்நார் யஸ்தன்பர் என்ற பெண் டொக்டர் மீதே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கிறிஸ்டியா ஸ்டரிலண்ட் என்ற பெண்ணே மரணமானவர். இந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கின்ற போது மேற்படி டொக்டர் கவனக் குறைவாக இருந்துள்ளமை நிரூபணமாகியுள்ளது. இது தவிர இன்னொரு பெண்ணுக்கான சிகிச்சையின் போதும் தவறு இழைக்கப்பட்டு உள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டிலேயே டொக்டர் யஸ்தன்பர் இந்தத் தவறுகளைப் புரிந்துள்ளார். 2005 முதல் 2007 வரையான காலப்பகுதியில் இவர் இன்னும் பல கொழுப்பகற்றும் சிகிச்சைகளின் போதும் முறையாக நடந்து கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது.இவரால் எத்தனை நோயாளர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை. குறைந்த பட்சம் 28 நோயாளிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இந்த விசாரணை பற்றி 300 பக்கங்களைக் கொண்ட அறிக்கையொன்றை விசாரணைக்குழு தயாரித்துள்ளது.
ஒசாமா தங்கியிருந்தது பாகிஸ்தானுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை: அமெரிக்கா விளக்கம்.
அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த இடம் குறித்து பாகிஸ்தானுக்கு தெரியும் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.இத்தகவலை அமெரிக்க ராணுவத் தலைமையகத்தின் மூத்த அதிகாரியான மைக்கேல் போர்நோ தெரிவித்துள்ளார். அவர் அமெரிக்க பாதுகாப்பு கொள்கைக்கான இணைச் செயலராக உள்ளார்.ஒசாமா சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் பென்டகன் உயர் அதிகாரி ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
"தற்போதைய சூழ்நிலையில் ஒசாமா பதுங்கியிருந்த தகவல் பாகிஸ்தானுக்கு தெரியும் என்பதை உறுதிபடுத்த போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை" என்று மைக்கேல் போர்நோ கூறியுள்ளார்.பாகிஸ்தானில் ராணுவக் குடியிருப்பு அருகே ஒசாமா கொல்லப்பட்டதும், அந்நாட்டு அரசுக்கும் உளவுத்துறைக்கும் அவர் பதுங்கியிருப்பது ஏற்கெனவே தெரிந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
பதவி ஆசையால் ஒசாமாவைக் காட்டிக் கொடுத்தார் ஜவாகிரி: புதிய தகவல்.
அல்கொய்தா தலைவர் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து தினமும் புது புது தகவல்கள் வெளியானபடி உள்ளன.பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பான தகவல்கள் மற்றும் படங்களை வெளியிட அமெரிக்க திட்டவட்டமாக மறுத்து விட்டதால் வளைகுடா நாட்டு தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் பல்வேறு தகவல்களை வெளியிடுகின்றன.அல்கொய்தா இயக்கத்தில் நடந்த பதவிப்போட்டி காரணமாக பின்லேடன் பதுங்கி இருந்த இடத்தை அமெரிக்க உளவுத்துறை மிக மிக எளிதாக கண்டுபிடித்து விட்டதாக சவூதி பத்திரிகை ஒன்றில் தகவல் வெளியாகி உள்ளது.
இது இஸ்லாமிய நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அல்கொய்தா இயக்கத்தில் பின்லேடனுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் இருப்பவர் அய்மன் அல்- ஜவாகிரி.இவர் எகிப்தில் உள்ள அல்கொய்தா படை பிரிவுக்கு தலைமையேற்று நடத்தி வருகிறார். கடந்த 2004ம் ஆண்டு பின்லேடன் உடல் நலக் குறையால் பாதிக்கப்பட்டார். அப்போது அல்கொய்தா இயக்கத்தை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர அல் ஜவாகிரி முயன்றார்.
இதனால் பின்லேடனுக்கும், ஜவாகிரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அல்கொய்தா இயக்கத்தில் ஜவாகிரிக்கு ஆதரவாக உலகின் பல நாடுகளில் ஆதரவாளர்கள் உள்ளனர். அவர்கள் தான் அமெரிக்க படைகளிடம் பின்லேடனை சிக்க வைக்க திட்டமிட்டு அந்த சதியை மெல்ல, மெல்ல அரங்கேற்றினார்கள்.ஆப்கானிஸ்தான் எல்லையில் பழங்குடி இன மக்கள் ஆதரவுடன் நல்ல பாதுகாப்பாக இருந்த பின்லேடனை அபோதாபாத் நகர பங்களாவுக்குள் கொண்டு வந்ததே ஜவாகிரி ஆட்கள் தான். அந்த விஷயத்தில் ஜவாகிரி ஆட்களின் வார்த்தையை நம்பி பின்லேடன் ஏமாந்து விட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்க படைகள் அதன் பிறகு ஒரு கூரியர் தபாலை வைத்து பின்லேடன் மறைவிடத்தை கண்டுபிடித்தனர். அந்த கூரியர் தபாலை பின்லேடன் பெயரிட்டு அனுப்பியது ஜவாகிரியின் வலதுகரமாக திகழ்ந்தவர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது தவிர பின்லேடன் அபோதாபாத் நகரில் பதுங்கி இருக்கும் தகவலை ஜவாகிரி ஆதரவாளர்களில் ஒருவரான சைக் அல் அடேல் என்பவர் தான் கசிய விட்டதாக தெரிய வந்துள்ளது. இதற்காகவே அவர் கடந்த ஆண்டு ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் வந்ததாக கூறப்படுகிறது.
அல் ஜவாகிரியும், அவரது ஆதரவாளர்களும் திட்டமிட்டு ரகசிய சதியை அரங்கேற்றி விட்டதாக சவூதி பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து அல்கொய்தா சார்பில் இதுவரை எந்த மறுப்பும் வெளியிடவில்லை. பின்லேடன் தொடர்பான இந்த புதிய தகவல் அரபு நாடுகளில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
இரட்டைக் கோபுர தாக்குதலை மறக்க முடியாது: ஒபாமா.
அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுரம் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி பின்லேடனின் சதித் திட்டத்தால் தகர்க்கப்பட்டது.இந்த தாக்குதல் நடந்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் அல்கொய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் மே 2ம் திகதி அமெரிக்கப் படையினால் கொல்லப்பட்டார்.
பின்லேடன் இறந்த பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இரட்டைக் கோபுரத் தாக்குதலில் இறந்தோரின் நினைவு இடத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பின்லேடன் தாக்குதலை அமெரிக்கா எப்பொதும் மறக்காது என ஒபாமா கூறினார். எதிரிகள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
உலக வர்த்தக மைய இடமான இரட்டைக் கோபுரத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு கிரவுண்ட் ஜீரோ நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.அந்த இடத்திற்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எதுவும் பேசவில்லை. தலையை கவிழ்த்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.
ஜப்பானில் இன்று நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி.
ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கடலில் சுனாமி பேரலைகள் உருவாகி ஜப்பானில் நில பரப்புக்குள் புகுந்தது. இதில் கடுமையான சேதம் ஏற்பட்டது.இந்த பேரழிவில் இருந்து ஜப்பான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இந்த சக்திவாய்ந்த நில நடுக்கத்தை தொடர்ந்து பல நாட்களாக மீண்டும் சிறிய அளவில் நில நடுக்கம் ஏற்பட்டு மக்களின் நிம்மதியை குலைத்து வருகிறது.
இந்நிலையில் இன்று ஜப்பானில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் தாக்கம் 6.1 ஆக பதிவாகியது. ஜப்பான் நேரப்படி அதிகாலை 12.58க்கு நிலநடுக்கம் உணரப்பட்டது.உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்‌லை. ஹொன்சு தீவில் செண்டாய் மாகாணத்தில் இருந்து 276 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்‌டிருந்தது.
கடந்த மார்ச் 11ம் தேதியன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 13,000 பேர் இறந்தனர். 14,000 பேர் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை.
பாலஸ்தீனத்திற்கு பிரான்ஸ் அங்கீகாரம் அளிக்கும்: சர்கோசி.
பாலஸ்தீன அமைதிப் பேச்சு வார்த்தை தோல்வியில் முடியும் நிலையில் உள்ள போதும் பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் அளிக்க பிரான்ஸ் தயாராகி உள்ளது என நிகோலஸ் சர்கோசி தெரிவித்தார்.இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யகுவுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் சர்கோசி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தில் இருபிரிவினராக செயல்படும் பாதி அமைப்பினரும், ஹமாஸ் பிரிவினரும் ஒற்றுமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கும் பிரசாரத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யகு மேற்கொண்டு உள்ளார். இது தொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதியுடனும் அவர் பேசுகிறார்.
பாலஸ்தீனத்தின் இரு பிரிவினர் கைகோர்ப்பது குறித்து நெடன்யகு குறிப்பிடுகையில்,"அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் விடயம் இது" என்றார்.பாலஸ்தீன தனி நாடு அறிவிப்பை பிரான்ஸ் அங்கீகரிக்கும். பேச்சு வார்த்தையில் தேக்கம் ஏற்பட்டாலும் பிரான்ஸ் தனது முடிவில் உறுதியாக உள்ளது என ஜனாதிபதி சர்கோசி எல் எக்ஸ்பிரஸ் வாராந்திர பத்திரிக்கைக்கு அளித்த நேர் காணலில் தெரிவித்துள்ளார்.
எதிர்கால பாலஸ்தீன நாட்டிற்காக அமைதி நடவடிக்கைகள் மீண்டும் தொடர பிரான்ஸ் பேச்சு வார்த்தை நடத்தும் என்றும் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் அலைன் ஜீபே புதன்கிழமை கூறினார்.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடன்யகு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமரூனை சந்தித்த பின்னர் பிரான்ஸ் வந்துள்ளார். ஒருமித்த பாலஸ்தீன நாட்டிற்கு ஐ.நா அங்கீகாரம் அளிப்பதை எதிர்ப்பது தொடர்பாக நெடன்யகு ஐரோப்பிய தலைவரை சந்தித்து வருகிறார்.
குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அல்கொய்தா தீவிரவாதிக்கு 5 ஆண்டு கால சிறைத் தண்டனை.
சிரியாவில் பிறந்து ஜேர்மனியில் குடியுரிமை பெற்ற அல்கொய்தா தீவிரவாத நபர் ரமி தனது குற்றங்களை பிராங்பர்ட் நீதிமன்றத்தின் தொடக்க நாள் விசாரணையில் ஒப்புக் கொண்டார்.குற்றவாளியாக அடையாளம் காணப்படுகிற 25 வயது இளைஞர் ரமிக்கு 4 ஆண்டு முதல் 5 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை அளிக்கப்படுகிறது.
நீதிமன்ற விசாரணையின் போது ரமி கூறுகையில்,"தனது இளவயதில் முஸ்லீமாக இல்லை என்றும், 22 வயதில் ரமலான் மாதத்தில் உண்ணாவிரத நோன்பினை கடைபிடித்து முஸ்லீம் நடைமுறையை கடைபிடித்ததாகவும்" கூறினார்.தீவிரவாத இயக்கத்துடன் உள்ள தொடர்பு குறித்து ஒப்புக்கொண்ட ரமி சில குற்றங்களை ஏற்க மறுத்தார். நீதிமன்றத்தில் விசாரணையாளர்கள் கூறியதாவது: 2009ம் ஆண்டில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் ரமி தீவிரவாத முகாமில் பயிற்சியில் ஈடுபட்டார் என்றும் பின்னர் பாகிஸ்தான் துருப்புகளுடன் மோதினார் என்றும் தெரிவித்தனர்.
பின்னர் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்ட ரமி ஜேர்மனிக்கு பயணமாக திட்டமிட்டார் என்றும் தெரிவித்தனர். கடந்த கோடை காலத்தின் போது பாகிஸ்தான் படையினர் ரமியை கைது செய்தனர்.ரமி ஐரோப்பிய பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கைதான ரமி பின்னர் ஜேர்மனிக்கு அனுப்பப்பட்டார். ஜேர்மனிக்கு திரும்ப பாகிஸ்தானில் உள்ள ஜேர்மனி தூதரகத்தை ரமி தொடர்பு கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.
வெடிப்பொருட்களை பயன்படுத்துவதால் வீரர்களுக்கு மூளைக்காயம்: ஆய்வில் தகவல்
முறையற்ற பொருட்களால் தயாரிக்கப்படும் வெடிபொருட்கள் கருவியால் கனேடிய வீரர்கள் மூளைக்காயங்கள் அடைகின்றனர். இந்த மூளைக்காயம் குறித்து அவர்களுக்கு தெரியவில்லை.தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதை அறியாமலேயே அவர்கள் நாடு திரும்பி அவதிப்படுகிறார்கள். ஹொரண்டோவில் உள்ள செயின் மைக்கேல் மருத்துவமனை நடத்திய ஆய்வின் போது ஐ.இ.டி எனும் வெடிப் பொருட்களின் அதிர்வின் காரணமாக போரில் ஈடுபடும் வீரர்களுக்கு மூளைக்காயம் ஏற்பட்டது தெரியவந்தது.
இந்த ஆய்வினை மேற்கொண்ட குழுவின் தலைவர் டொக்டர் ஆண்ட்ரூ பெக்கர் கூறியதாவது: போரில் ஈடுபடும் வீரர்களுக்கு உடலில் வெளிப்படையான காயங்கள் ஏற்படுவதுடன் அவர்கள் அறியாத வகையில் மூளை அதிர்வு காயங்களும் ஏற்படுகின்றன.குண்டுவெடிப்பு காரணமாக நுரையீரல், காது, அடிவயிற்றுப்பகுதி காயங்கள் ஏற்படுவது போன்ற கடுமையான வெடிகுண்டு அதிர்வுகளும் மூளை நரம்பில் பாதிப்பை ஏற்படுத்தி காயங்கள் ஏற்படுகின்றன.தாங்கள் நல்ல நிலையில் இருப்பதாக வீரர்கள் கருதினாலும் மெல்லிய மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு அவர்களது செயற்பாடுகளில் தடுமாற்றம் ஏற்படுகிறது என்றார்.
ஆய்வாளர்கள் நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்த போது போரில் ஈடுபட்ட வீரர்களின் மூளை நியூரான்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தாக்குதல் ஏற்பட்ட 72 மணி நேரத்தில் பாதிப்பு மூளையின் வெள்ளைப் பகுதியிலும் காணப்படுகிறது.இந்த வெள்ளைப் பகுதி ஒன்றொடொன்று தகவல்களை தொடர்பு கொள்ள உதவும் பகுதியாகும். குண்டு வெடிப்பு அதிர்வால் மூளை செயல்திறனில் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: பராக் ஒபாமா.
தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிக்க பாகிஸ்தானுக்குள் ராணுவத்தை அனுப்பி மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.உலகையே பயங்கரவாத செயல்களால் பயமுறுத்தி வந்த அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் கடந்த ஞாயிறன்று அமெரிக்க ராணுவம் சுட்டுக்கொன்றது.
பாகிஸ்தானில் பின்லேடன் பதுங்கியிருந்த மாளிகையில் ஹெலிகாப்டரில் சென்று இறங்கி தாக்குதல் நடத்தியது சிறப்பு அதிரடிப்படை. இப்படி ஒரு தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானுக்கே எல்லாம் முடிந்த பின்தான் தெரிந்தது.
"எங்கள் நாட்டில் புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாகிஸ்தான் கூறியது. ஆனால் அதை அமெரிக்கா நிராகரித்தது.
"தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்க தேவைப்பட்டால், மீண்டும் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவோம்" என்று எச்சரித்துள்ளது. இதை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே வாஷிங்டனில் நேற்று தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது: ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை கொன்று குவித்ததற்காக கடந்த 10 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ஒசாமா பின்லேடன், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகிலேயே பதுங்கி வசித்து வந்ததை அமெரிக்க படைகள் உறுதிப்படுத்தின.
பாகிஸ்தான் அரசுக்கு தெரிவிக்காமலே அதிபர் ஒபாமாவின் வழிகாட்டுதலின்படி அமெரிக்க நேவி சீல் படையினர் 40 நிமிடங்களில் அதிரடி தாக்குதல் நடத்தி பின்லேடனை கொன்றனர். இந்த தாக்குதல் பெரும் வெற்றி பெற்றுள்ளது. அது அமெரிக்கர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் தீவிரவாதத்தை எதிர்க்கும் மக்களிடம் ஆதரவை பெற்றுள்ளது.இதுபோன்ற ரகசிய தாக்குதல் கொள்கையை தொடர அதிபர் ஒபாமா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மிக முக்கிய தீவிரவாதிகள் இன்னும் எஞ்சியுள்ளனர். அவர்கள் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பது தெரிய வந்தால் இது போன்ற ரகசிய தாக்குதல்கள் மீண்டும் நடத்தப்படும்.என்றுதெரிவித்தார்.
கினியா நாட்டில் இனக் கலவரம்: 10 பேர் உயிருடன் எரித்துக் கொலை.
ஆப்பிரிக்க நாடான கினியா நாட்டில் நிகழ்ந்த இன கலவரத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.கினியா நாட்டின் தென்கிழக்கு மாகாணமான கேலாபையோக் நகரில் கடந்த செவ்வாயன்று கிப்ளீஸ் எனும் இனத்தவருக்கும், மலின்கீஸ் எனும் இனத்தவருக்கும் மோதல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று இருதரப்பிலும் ஒருவரை‌ய‌ொருவர் தாக்கிக் கொண்டதில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும், இவர்களில் 10‌ பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டதாகவும் கேலாப்பையோ நகர பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். காயமடைந்தவனர்கள் கிரிக்கோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.சம்பவ இடத்தில் தற்போது பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பழைய நிலை திரும்பியுள்ளதாகவும், எனினும் பலியானவர்கள் எண்ணிக்கை 36ஆக அதிகரித்துள்ளதாகவும் ஆங்கில பத்திரிகை அதன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
முதல் உலகப் போரில் கலந்து கொண்ட வீரர் மரணம்.
முதல் உலகப்போரில் பணியாற்றிய கடைசி ராணுவ வீரர் தனது 110 வயதில் இறந்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த கிளவுட்சோவ்லூஸ்(110) என்பவர் கடந்த 1901ம் ஆண்டு மார்ச் 3ம் திகதி பிறந்தார்.முதல் உலகப்போர் ந‌டந்து கொண்டிருந்த போது 15வயதில் இங்கிலாந்து ராய்ல் நேவி என்ற கப்பற்படையில் பணியாற்றினார்.
பின்னர் 1920ம் ஆண்டு அவுஸ்திரேலியா சென்ற இவர் 1956 வரை அந்நாட்டு ராணுவத்தில் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போரின் போது அவுஸ்திரேலியாவின் கப்பற்படையின் தலைமை ஆலோசகராகவும் இருந்தார்.உடல்நலக்குறைவால் நேற்று இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். மறைந்த கிளவுட்சோவ்லூஸிற்கு மனைவி, மூன்று மகள்கள் மற்றும் 11 பேரக்குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2009ம் ஆண்டு தான் முதல் உலகப்போரில் பணியாற்றிய பில்ஸ்டோன், ஹென்றி ஆலிங்ஹாம், ஹாரிபேட்ஜ் ஆகியோர் இறந்தனர்.
ஒசாமா படம் வெளியிடாததால் அமெரிக்காவிலும் சர்ச்சை கிளம்பியது.
அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் இறந்தது தொடர்பான புகைப்படங்களை வெளியிடாமல் இருப்பதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.பாகிஸ்தானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டது ஒசாமா தான் என்பதை உறுதி செய்யும் வகையில் அவரது சடலத்தை அமெரிக்க படையினர் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
இந்த புகைப்படங்களை வெளியிடப் போவது இல்லை என அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்து விட்டார். அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்காவிலேயே ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.குடியரசு கட்சி தலைவரும், அமெரிக்க செனட்டருமான லிண்ட்சே கிரகாம் கூறியதாவது: ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டார் என்பது எனக்கும் தெரியும். ஆனால் அதை உறுதி செய்யும் புகைப்படங்களை அரசு வெளியிட மறுத்தது வருத்தம் அளிக்கிறது.
இந்த விவகாரத்தில் அதிபர் எடுத்துள்ள முடிவில் இருந்து நான் வேறுபடுகிறேன். பின்லேடன் பதுங்கியிருக்கும் இடம் உறுதி செய்யப்பட்ட பின் அந்த இடத்தின் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தாமல் கமாண்டோ படையினரை அனுப்பி தாக்குதல் நடத்தப்பட்டது.பின்லேடன் மரணம் அடைந்தாரா, இல்லையா என்ற சர்ச்சையை தவிர்ப்பதற்காகவே இதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது அவரது புகைப்படத்தை வெளியிடப் போவது இல்லை என அதிபர் ஒபாமா எடுத்திருக்கும் முடிவு மிகவும் தவறானது.
பின்லேடனின் மரணத்தை உலக நாடுகளுக்கு எந்தவித சந்தேகமும் இல்லாமல் நிரூபிக்க வேண்டும். அதிபரின் இந்த முடிவின் மூலம் பின்லாடன் இறந்தாரா, இல்லையா என்ற விவாதம் நீண்ட நாட்களுக்கும் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.குடியரசு கட்சியின் மற்றொரு தலைவர் சாரா பாலின் கூறுகையில்,"பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டால் அதை பார்த்து மற்ற பயங்கரவாதிகளுக்கு பயம் ஏற்படும். அமெரிக்காவை அழிக்க நினைப்போருக்கு அது ஒரு பாடமாக இருக்கும்" என்றார்.
எகிப்து மாஜி அமைச்சருக்கு 12 ஆண்டு கால சிறைத் தண்டனை.
எகிப்து நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் அல் அட்லிக்கு 12 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.எகிப்து அதிபராக 30 ஆண்டு காலம் பதவி வகித்த ஹோஸ்னி முபாரக் ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் நடத்திய போராட்டத்தால் முபாரக் ஆட்சி கடந்த பெப்பிரவரியில் முடிவுக்கு வந்தது.
முபாரக் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது ஆயுத தாக்குதல் நடத்த உத்தரவிட்ட அப்போதைய உள்துறை அமைச்சர் ஹபீப் அல் அட்லி மீது மக்கள் மிகுந்த வெறுப்புக்குள்ளாயினர்.முபாரக் பதவி விலகியதும் ஹபீப் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர். ஹபீப் மீது ஊழல் மற்றும் போராட்டக்காரர்களை கொன்றது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அரசு பணத்தை தவறாக கையாண்டது தொடர்பாக ஹபீப் மீது குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு 12 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.முபாரக்கை எதிர்த்து போராட்டம் நடத்திய பலரை கொன்றது தொடர்பான வழக்கில் ஹபீப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF