Thursday, May 19, 2011

இன்றைய செய்திகள்.

ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட இலங்கை விருப்பம்! அமைச்சர் பீரிஸ் கடிதம்.
தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள செல்வி ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ள இலங்கை அரசு அவருடன் இணைந்து செயற்படவும் விருப்பம் தெரிவித்துள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், அவரது சகாக்களையும் போர்க்குற்றம் தொடர்பாகச் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என்று ஜெயலலிதா தெரிவித்திருந்த நிலையில் வெளிவிவகார அமைச்சர் தமிழக முதல்வருக்கு வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
இந்தியப் பிரதமர்மன்மோகன்சிங், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர்மேனன் ஆகியோரைச் சந்தித்த பின்னர் புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் செய்தியாளர்களுக்கு வழங் கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
பேட்டியின்போது மேலும் அவர் தெரிவித்தவை வருமாறு:
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஜெயலலிதா அரசின் உதவிகளைப் பெற்று செயற்படுவதில் ஆர்வம் கொண்டுள்ளோம். இந்தியத் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் இலங்கையில் போருக்குப் பிந்தைய அரசியல் நிலைமை, முகாம்களில் உள்ள தமிழ் மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் ஆகியவை விவாதிக்கப்பட்டன. மீள் குடியமர்வு என்பது மனிதர்களை ஓர் இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றும் பணியல்ல. மக்களுக்கு வாழ்வாதாரம், வசிக்கத் தேவையான கட்டமைப்புகள் ஆகியவற்றை உருவாக்கவேண்டும்.இலங்கை போர் தொடர்பாக ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கை சர்வதேச நெறிகளுக்கு எதிரானது. மோசடியாகத் தயாரிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதால், இந்தியாவின் விருப்பப்படி இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துச் சமூகத்தினருக்கும் அரசியல் உரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.ஆட்சிப் பகிர்வுக்கு வகை செய்யும் விதத்தில் இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் நடவடிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்.சர்வதேச அளவில் இலங்கைக்கு உள்ள நற்பெயரையும், நன்மதிப்பையும் சீர்குலைக்கும் வகையில் செயல்படும் சில சக்திகளின் செல்வாக்குக்கு ஐ.நா.சபை அடிபணியக்கூடாது. இந்த உண்மை இலங்கையில் கள ஆய்வில் ஈடுபட்டு நேரில் உண்மைகளைக் கண்டறியும்போது தெளிவாகும்.
ஐ.நா. குழு நிபுணர் குழு அறிக்கை அளித்த விதம், வெளிப்படையாகச் செயல்பட்ட இலங்கை அரசின் நடவடிக்கைக்கு நேர் எதிரானது. சர்வதேச நீதிக்குப் புறம்பானது. எனவேதான் நிபுணர் குழு அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என வலியுறுத்துகிறோம்.இலங்கை அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பை அளித்து வருகிறது. தனது அறிக்கையில், இலங்கை அரசைக் குற்றவாளிகளாகவும், அதே சமயம், புலிகளை ஒழுக்க சீலர்களைப் போலவும் போர் வீரர்களைப் போலவும் ஐ.நா. குழு சித்திரித்துள்ளதுஇலங்கைத் தமிழர் நலன் விவகாரத்தில், தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுபேற்றுள்ள செல்வி ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளேன். அவரது அரசின் உதவிகளைப் பெற்று செயற்படுத்துவதில் ஆர்வமாக இருக்கிறேன். இப்படி அவர் தெரிவித்தார்.
இனிமேலாவது சிந்திப்பீர்களா? கருணாநிதிக்கு பழ.நெடுமாற‌ன் கடிதம்.
தி.மு.க தலைவ‌ர் கருணா‌நி‌தி‌க்கு இல‌ங்கை த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌த்‌தி‌ன் ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன் ப‌கிர‌ங்கமாக கடித‌ம் ஒ‌ன்றை எழு‌தியு‌ள்ளா‌ர்.இது தொட‌ர்பாக கருணா‌நி‌தி‌க்கு அவ‌ர் எழு‌தியு‌ள்ள கடித‌த்த‌ி‌ல்,
மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம்.
எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.
தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது.பொடா சிறையில் நான் இருந்தபோது, நீங்கள் எழுதிய "தொல்காப்பியப் பூங்கா'  நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன்.
ஆனால், தாங்கள் செய்த, செய்துவரும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் தங்களது இலக்கியத்தைப் பாராட்டுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்திருந்தும் திசை திருப்புவதற்கு முயற்சி செய்திருக்கிறீர்கள். இப்போது மட்டுமல்ல, நீண்டகாலமாகவே இவ்வாறு செய்து வருகிறீர்கள்.1969 ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் முதல்முதலாக என் மீது பொய் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனாலும், முதலமைச்சராக அண்ணா இருந்தவரை, அந்த வழக்கு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் முதலமைச்சரான உடனேயே என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தீர்கள்.
6 மாத நன்னடத்தை ஜாமீன் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எனது மனசாட்சி ஏற்க மறுத்தது. எந்தக் குற்றமும் செய்யாதபோது நன்னடத்தை ஜாமீன் எழுதிக்கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அதன் விளைவாக, ஆறு மாதம் சிறையில் இருக்க நேர்ந்தது.காமராஜ் மதுரை சிறைக்கே வந்து என்னைப் பாராட்டினார். அதைவிடச் சிறந்த பாராட்டு வேறு இல்லை. இதன் விளைவாக, தமிழகம் முழுவதற்கும் நான் அறிமுகமானேன். இதற்குக் காரணம் நீங்களே என்பதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
1978ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது, அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் உங்கள் தொண்டர்கள் அவரது உயிருக்கு உலை வைக்க முயன்றார்கள். உங்களால் ஏவி விடப்பட்டவர்களின் கொடூரமான தாக்குதல்களிலிருந்து இந்திராவைக் காப்பாற்றிய பேறு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் அகில இந்திய அளவில் அறிமுகமானேன். இதற்கும் நீங்களே காரணம் என்பதை உணர்ந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
1985ம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் துணையுடன் இலங்கைத் தமிழர் பகுதியில் இரகசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு சிங்கள இராணுவம் இழைத்து வரும் கொடுமைகளை ஆதாரபூர்வமாக அறிந்துவந்து வெளியிட்டபோது, நீங்கள் முரசொலி இதழில் என்னைப் பாராட்டி முழுப்பக்க அளவில் கட்டுரை எழுதினீர்கள். இப்போதும் அதை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
ஆனால், நாம் ஒன்று கூடி உருவாக்கிய "டெசோ' அமைப்பை நீங்கள் தன்னிச்சையாகக் கலைத்தீர்கள். ஈழத் தமிழர் பிரச்சினையில் உங்களுக்கு உண்மையான ஈடுபாடு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தபோது, உங்களுக்கு எதிர்நிலை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.காமராஜரோடு உங்களை ஒப்பிட்டும், உங்கள் ஆட்சியை காமராஜ் ஆட்சி என வருணித்தும் காங்கிரஸ்காரர்கள் சிலர் பேசுகிறார்கள். புரிந்து பேசுகிறார்களா அல்லது புரியாமல் பேசுகிறார்களா என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்.
காமராஜ் மக்கள் தொண்டுக்காகத் திருமணத்தைத் துறந்தவர். பெற்ற தாயைக்கூட தன்னுடன் வைத்துப் பேணாதவர். ஒன்பது ஆண்டுகள் ஆங்கிலேயரின் கொடுமையான சிறையில் வாடியபோதும் அதுகுறித்து ஒருபோதும் பேசாதவர். மறையும்போது தான் உடுத்தியிருந்த துணிகளைத் தவிர, வேறு சொத்து இல்லாதவர்.ஆனால், நீங்களோ மனைவி, துணைவி என பல்கிப் பெருகிய குடும்பங்களுடன் வாழ்பவர். அது மட்டுமல்ல, ஏழைக் குடும்பமான உங்கள் குடும்பம், இன்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
தனது தாய் உள்பட, தனது குடும்பத்தவர் எவரையும் அரசியலில் அனுமதிக்காதவர் காமராஜ். அதைப்போலவே தான் உருவாக்கிய தி.மு. கழகத்தில் அண்ணா, தனது பிள்ளைகள் எவரையும் வாரிசாக அறிமுகப்படுத்தவில்லை.ஆனால், நீங்கள் செய்ததை நாடறியும். 1970-களில் உங்களது மூத்த மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத் திரையுலகில் களமிறக்கினீர்கள். கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு ரசிகர் மன்றங்களை உருவாக்கினீர்கள். இறுதியில் மு.க.முத்துவை நிலைநிறுத்தவும் முடியவில்லை. எம்.ஜி.ஆரை கழகத்தில் நீடிக்க வைக்கவும் முடியவில்லை.
இதன் விளைவாக, 13 ஆண்டுகள் நீங்கள் பதவி இல்லாத இருளில் தடுமாற நேர்ந்தது. ஆனாலும் நீங்கள் பாடம் கற்கவில்லை. இப்போது இளம் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோருக்குப் போட்டியாக உங்கள் பேரன் அருள்நிதியை கலை உலகில் இறக்கியிருக்கிறீர்கள். விஜய்யின் படங்களுக்கு பல முட்டுக்கட்டைகளைப் போட்டுத் தடுக்க நடைபெற்ற முயற்சி வெற்றி பெறவில்லை. விஜய்யின் பகையைத் தேடிக் கொண்டதுதான் மிச்சம். திரையுலகைக் கபளீகரம் செய்ய உங்கள் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் உங்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டதே!
கடைசிவரை அண்ணா காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே திகழ்ந்தார். மதுவிலக்குக் கொள்கையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அண்ணா மறைந்த உடனேயே நீங்கள் மதுக்கடைகளைத் திறந்து இளைய தலைமுறையின் சீரழிவுக்குக் காரணமானீர்கள். அதைப்போல 1971ஆம் ஆண்டில் காங்கிரசுடன் கைகோக்கத் தொடங்கி இன்றுவரை அந்த உறவை நீட்டிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறீர்கள்.
நேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாரும் பிரித்துவிட முடியாது எனத் தம்பட்டம் அடிக்கிறீர்கள். 1959ம் ஆண்டு சென்னைக்குப் பிரதமர் நேரு வந்தபோது கறுப்புக் கொடி என்ற பெயரில் அவர் மீது உங்களது தம்பிகள் செருப்புகளை வீசினார்கள்.
1978ல் மதுரைக்கு இந்திரா காந்தி வந்தபோது கொலை முயற்சி நடைபெற்றது. அது மட்டுமல்ல, பாட்னாவில் வி.பி. சிங் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, நான் வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவன் இல்லை என ராஜீவைச் சாடினீர்கள். நேரு குடும்பத்தின்மீது நீங்கள் வைத்திருக்கிற அளவற்ற அன்பின் அறிகுறிகள் இவை.

நோக்கியாம் இனி மைக்ரோசாப்ட்டிடம்?

மொபைல் உலகின் முன்னணி நிறுவனமான நோக்கியாவை வாங்குகிறது மைக்ரோசாப்ட் என தகவல்கள் வெளியாகியுள்ளதால் கார்ப்பரேட் உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நோக்கியாவின் ஹேண்ட்செட் யூனிட்டை வாங்கும் பேச்சுக்களில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக, மொபைல் ரிவியூ பத்திரிகை ஆசிரியர் தனது ப்ளாகில் தெரிவித்துள்ளார். 
இந்த ஆண்டின் இறுதிக்குள் இது குறித்த டீல் எட்டப்படும் எனத் தெரிகிறது. மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஆப்பிள் ஐபோனுடன் போட்டி போட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது விண்டோஸ் மொபைல். அதற்கு நோக்கியாவை வாங்குவது உதவும் என நம்புகிறது. 

மேலும் மொபைல் ஹேண்ட்செட் வடிவமைப்பில் இன்னும் அழகிய வடிவமைப்பைக் கொடுக்கவும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது மைக்ரோசாப்ட். நோக்கியாவும் மைக்ரோசாப்டும் தொழில்நுட்ப ரீதியில் இணைந்து செயல்படப் போவதை முன்கூட்டியே கணித்துச் சொன்னது இந்த மொபைல் ரிவ்யூ பத்திரிகைதான் என்பதால், இப்போது அவர்கள் வெளியிட்டுள்ள இந்த புதிய செய்திக்கும் முக்கியத்துவம் கிடைத்துள்ளது.
குழந்தைகள் தற்கொலைப் படை நபர்களாக மாறும் அவலம்: தலிபான்களின் அட்டகாசம்.
ஆப்கானிஸ்தானில் குழந்தைகள் தற்கொலைப் படையை தலிபான் தீவிரவாதிகள் உருவாக்கி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர்.அவர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஈடுபட்டுள்ளன. எனவே அவர்களை அழிக்கவும், அரசுக்கு நெருக்கடி கொடுக்க பொதுமக்கள் மீதும் தலிபான் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்காக அப்பாவி இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அவர்களிடம் இன வெறியை தூண்டி மூளை சலவை செய்து தற்கொலை படையில் சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இளைஞர்கள் மட்டுமின்றி தற்போது குழந்தைகளையும் தற்கொலை படையில் சேர்த்து வருகின்றனர்.ஆப்கானிஸ்தானில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் வாழும் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். அவர்களின் பெற்றோருக்கு தீவிரவாதிகள் பண ஆசை காட்டுகிறார்கள். பின்னர் குழந்தைகளை விலைக்கு வாங்கி சென்று தங்கள் இயக்கத்தில் சேர்க்கின்றனர்.
ஒன்றும் அறியாத மனதில் தீவிரவாதம் என்ற நஞ்சை கலக்குகின்றனர். அவர்களுக்கு துப்பாக்கி சுடுதல், வெடிகுண்டுகளை கையாளுதல் போன்ற பயிற்சிகளை அளிக்கின்றனர். இறுதியில் தற்கொலை தாக்குதல் நடத்தும் போது உடைகள் அணிவது, வெடி குண்டுகளை இயக்கி வெடிக்க வைக்க கற்றுக் கொடுக்கிறார்கள்.
இதற்காக வறுமையில் வாடும் 10 முதல் 16 வயது குழந்தைகளை தேர்ந்தெடுத்து குழந்தை தற்கொலைப் படை அமைத்து வருகின்றனர். பெரும்பாலும் இந்த முகாம்கள் நகர்புறங்களில் இருந்து மிக உள்ளடங்கிய கிராமப்புறங்களில் செயல்படுகின்றன. இங்கு அமெரிக்க படையினர் சென்று அதிரடி தாக்குதல் நடத்தி குழந்தை தற்கொலை படை தீவிரவாதிகளை மீட்டு வருகின்றனர்.
திட்டமிடாமல் செலவு செய்வதில் பெண்களை மிஞ்சும் ஆண்கள்.
பொதுவாக செலவு செய்வதில் பெண்கள் தான் முன்னிலை வகிக்கின்றனர். ஆனால் புதிதாக ஒரு பொருளை பார்த்தவுடன் உணர்ச்சி வசப்பட்டு திட்டமிடாமல் திடீரென்று செலவு செய்வதில் பெண்களையே மிஞ்சி உள்ளனர் ஆண்கள்.இது தொடர்பாக இங்கிலாந்தைச் சேர்ந்த என் அன்ட் பவர் நிறுவனம் 2000 ஆண் மற்றும் பெண்களிடம் ஒரு ஆய்வு நடத்தியது. அதன் விவரம்: எந்த ஒரு பொருளையும் வாங்குவதற்கு முன்பு திட்டமிடுவது வழக்கம்.எனினும் சில சமயங்களில் திட்டமிடாமல் செலவு செய்யவும் நேரிடும். இப்படி செலவிடுவதில் பெண்களைவிட ஆண்கள் முன்னிலையில் இருப்பது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதாவது ஆண்கள் ஒவ்வொருவரும் திட்டமிடாமல் சராசரியாக ஒரு வாரத்துக்கு ரூ.1800 செலவழிக்கின்றனர். ஆனால் பெண்கள் ரூ.1400 மட்டுமே செலவிடுகின்றனர். உணவுப் பொருள், மதுபானம் மற்றும் டிவிடி ஆகியவற்றுக்காக ஆண்களும், ஆடைகள், பத்திரிகைகள், ஒயின், புத்தகங்கள், ஷூக்கள் ஆகியவற்றுக்காக பெண்களும் அதிகம் செலவழிப்பது தெரியவந்துள்ளது.
ஒரு வாரத்துக்கு ரூ.1800 செலவிடுவது பெரிய விடயமாக தெரியாது. ஆனால் ஒருவரது வாழ்நாளில் இப்படி சிறுகசிறுக செலவழிக்கப்படும் ஒட்டுமொத்த தொகை ரூ.51 லட்சமாகிறது. இப்படிப்பட்ட திட்டமிடா செலவை தவிர்த்தால் ஒரு வீடு வாங்கலாம் அல்லது கடனை அடைக்கலாம் அல்லது கார் வாங்கலாம் என ஆய்வை மேற்கொண்ட எமிலி ஸ்டேக் தெரிவித்துள்ளார்.
பொதுவாக இப்போதைய சூழலில் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயையும் எப்படி சேமிக்கலாம் என்று தான் பெரும்பாலானவர்கள் திட்டமிடுகின்றனர். எனினும் பிறந்தநாள் பரிசு, பணிபுரியும் நிறுவனத்திலிருந்து கிடைக்கும் ஊக்கத்தொகை, பரிசுச்சீட்டில் விழும் பணம் என எதிர்பாராமல் பணம் வரும் போது அதை திட்டமிடாமல் செலவு செய்து விடுவதாக ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.திடீரென்று செலவு செய்ய வேண்டும் என்ற உணர்வை கட்டுப்படுத்திக் கொள்வதாக பத்தில் ஆறு பெண்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பத்தில் நான்கு ஆண்கள் மட்டுமே இந்த கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
பின்லேடன் பாகிஸ்தானில் இருந்தது அந்நாட்டு தலைவர்களுக்கு ஏற்கனவே தெரியும்: அமெரிக்கா.
அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் பதுங்கி இருந்தார்.அவர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு 30 மைல் தொலைவில் உள்ள அபோதாபாத் நகரில் பதுங்கி இருந்த விவரம் அந்த நாட்டு அரசுக்கு எப்படி தெரியாமல் போகும் என அமெரிக்கா கேள்வி எழுப்பியது.இந்த மே மாதம் 2ஆம் திகதி பின்லேடனை அமெரிக்க கமண்டோக்கள் அபோதாபாத்தில் சுட்டுக்கொன்றனர். பின்லேடன் 5 ஆண்டுகளுக்கு மேல் பாகிஸ்தானில் பதுங்கி இருந்த விவரம் சில பாகிஸ்தான் நபர்களுக்கு தெரியும்.
பாகிஸ்தான் தலைவர்களுக்கும் அந்த நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கும் தெரியும் என்பதற்கான ஆதாரம் இல்லை என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ரொபர்ட் கேட்ஸ் தெரிவித்தார்.பாகிஸ்தானின் செயல்பாடு குறித்து அமெரிக்க நாடாளுமன்றம் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியது. அமெரிக்க ராணுவ தலைமை அதிகாரி அட்மிரல் மைக் முல்லன் உள்பட சில அமெரிக்க தலைவர்கள் பாகிஸ்தானுக்கு அளிக்கும் நிதி உதவியை நிறுத்த கூடாது என வலியுறுத்தினர்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாகிஸ்தான் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட கேட்ஸ், பின்லேடன் பதுங்கி இருந்த விவரம் பாகிஸ்தான் தலைவர்களுக்கு தெரியும் என்பதை உறுதிபடுத்த முடியவில்லை என்றார்.தீவிரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் உறுதி கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். அமெரிக்க கூட்டுப்படைகளின் தலைவரான முல்லன் கூறுகையில்,"பாகிஸ்தானுடன் உறவை தொடர வேண்டியுள்ளது. தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அஸ்பக் கயானி உறுதி கொண்டுள்ளார்" என்றார்.
அயர்லாந்துடன் மோதல்: பிரிட்டன் ராணியின் கவலை.
அயர்லாந்து நாட்டிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தை பிரிட்டன் ராணி மேற்கொண்டுள்ளார். கடந்த 100 ஆண்டு காலத்தில் அயர்லாந்துக்கு பயணம் மேற்கொண்ட முதல் நபராக பிரிட்டன் ராணி உள்ளார்.கடந்த காலத்தில் பிரிட்டன் மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு இடையே கடுமையாக கருத்து வேறுபாடுகளும் போர்களும் நடந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே தற்போது மீண்டும் நட்புறவை வலுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இங்கிலாந்து ராணி அயர்லாந்து சென்றுள்ளார்.
இந்த பயணத்தை ஐரிஷ் கடல் பகுதியின் இரு கரை மக்களும் வரவேற்றுள்ளனர். இங்கிலாந்து ராணிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்தில் வரலாற்று சிறப்பு மிக்க உரையை ராணி நிகழ்த்தினார்.அந்த உரையில் கடந்த கால கசப்பு அனுபவங்களை எண்ணி வேதனைப்படுவதாக அவர் தெரிவித்தார். இரு தரப்பிலும் தவறுகள் நடந்துள்ளன. இதில் பிரிட்டனின் நிலைபாட்டுக்கு தாம் வருந்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
1979ஆம் ஆண்டு ராணியின் கணவரின் மாமா லூயிஸ் மௌன்ட் பேடடன் ஐ.ஆர்.ஏ வெடிகுண்டில் கொல்லப்பட்டதையும் ராணி நினைவு கூர்ந்தார். அயர்லாந்தின் அந்த தாக்குதல் பிரிட்டன் அரசக்குடும்பத்திலும் உயிரிழப்பு ஏற்படுத்தியதை சுட்டிக்காட்டிய ராணி கடந்த கால தவறுகளை எண்ணி வருந்துவதாக தெரிவித்தார்.
முந்தைய போரின் போது இரு தரப்பிலும் மிக நேசத்துக்கு உரியவர்களை இழந்துள்ளோம். முந்தைய கால கருத்து வேறுபாடுகள் நமக்குள் இதயவலியை ஏற்படுத்தியது. கடந்த கசப்பான நினைவுகளை மறந்து தற்போது நட்புறவிற்கு கரம் நீட்டியுள்ளளோம் என்று ராணி அயர்லாந்து அரச நிர்வாகம் சார்பில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் உணர்ச்சிபூர்வ உரை நிகழ்த்தினார்.பிரிட்டன் ராணி 59 ஆண்டுகள் தலைமை நிர்வாகத்தில் இருந்து வருகிறார். அவர் ராணியாக பதவியேற்ற காலத்தில் இருந்து இதுவரை ஆற்றிய மிகச்சிறந்த வரலாற்று சிறப்பு மிக்க உரையாக அயர்லாந்து பயண உரை அமைந்திருந்தது.
அமெரிக்க படை வீரர்களை சுட்டு வீழ்த்தும் சீன ராணுவம்.
அமெரிக்க நாட்டு படைவீரர்களை சீன ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்துகின்றனர். இந்த தாக்குதல் சம்பவங்களை தற்பொழுது சீனா வெளியிட்டுள்ளது.இந்த போர் இரு நாட்டு எல்லையில் நடைபெறுவது அல்ல, கணணி விளையாட்டில். இந்த தாக்குதல் சம்பவங்கள் சீனா சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ விளையாட்டில் உள்ளது.பொதுவாக அமெரிக்கா தான் இதுபோன்ற வீடியோ விளையாட்டுக்களை அதிகம் வெளியிடும். அந்த வீடியோக்களில் அமெரிக்க ராணுவம், மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்வோரை தாக்கி அழிக்கும்படி அது வடிவமைக்கப்பட்டிருக்கும்.
பிடல் கேஸ்‌‌ட்ரோவை தாக்குவது போல அமெரிக்கா வீடியோ விளைாட்டு ஒன்றில் வெளியிட்டிருந்தது. தற்போது சீனா அறிமுகப்படுத்தியுள்ள வீடியோ விளையாட்டில் அமெரிக்கப் படையினரை சுட்டுவீழத்துவதாக உருவாக்கப்பட்டுள்ளது.இந்த வீடியோ விளையாட்டு வல்லரசான அமெரிக்காவை கோபமூட்டிருக்கிறதோ இல்லையோ, மத்திய கிழக்கு நாடுகளை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.



லிபியாவிற்கு தொகுப்புக்குண்டுகளை விற்ற நிறுவனத்திற்கு ஜேர்மன் வங்கி கடனுதவி வழங்கியது அம்பலம்.
லிபியாவில் கர்னல் மோமர் கடாபியின் ராணுவம் போராட்டக்காரர்களை ஒடுக்குவதாக கூறிக் கொண்டு அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகிறது.கடந்த பெப்பிரவரி மாதம் 15ஆம் திகதி கடாபி ஆட்சிக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தை எதிர்க்க முடியாமல் லிபிய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியது.இந்த தாக்குதலின் போது ஒரு பெரும் குண்டில் இருந்து பல அபாய குண்டுகளை உதிர்க்கும் தொகுப்புக் குண்டுகளை லிபியா பயன்படுத்தியது. இந்த குண்டு வீச்சு பொது மக்கள் உள்ள குடியிருப்புகளில் பெரும் உயிரிழப்பையும் சேதத்தையும் ஏற்படுத்தியது.
மனித உரிமை விவகாரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் தூதரான நவிப்பிள்ளை கடந்த ஏப்ரல் மாதம் 20 திகதி வெளியிட்ட அறிக்கையில்,"லிபிய ராணுவ துருப்புகள் போர் குற்ற நிகழ்வுகளை மேற்கொள்கின்றன. அவை பயங்கர ஆயுதங்கள் மற்றும் தொகுப்புக் குண்டுகளை பயன்படுத்துகினறன. பொது மக்களுக்கு எதிராக இந்த அபாய குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன" என்று குறிப்பிட்டு இருந்தார்.அபாய தொகுப்புக் குண்டுகளை தயாரிக்கும் நிறுவனமாக ஸ்பெயினின் இன்ஸ்டால்சா நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் லிபியாவுக்கு தாராளமாக குண்டுகளை விற்பனை செய்துள்ளது.
இத்தகைய குண்டுகளை தயாரிக்கும் இன்ஸ்டலசா நிறுவனத்திற்கு ஜேர்மனியின் டுட்சே வங்கி 10 லட்சம் யூரோவுக்கு மேல் கடன் உதவி அளித்துள்ளது. இதனை அரசு சாரா நிறுவனமான அர்ஜ்வால்ட் கூறியுள்ளது.இந்த தகவல் டே செட் வார இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. தொகுப்புக் குண்டுகள் பாதிப்பால் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பது குழந்தைகள் ஆவார்கள். இத்தகைய குண்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என 100க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
கடாபியின் மனைவி, மகள் துனிஷியாவிற்கு தப்பி ஓட்டம்.
லிபியா அதிபர் கடாபியின் 42 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக கடந்த பெப்பிரவரி மாதம் பொதுமக்களின் போராட்டம் தொடங்கியது. இப்போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.எனவே பொது மக்கள் மீது கடாபியின் ராணுவம் தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர்.இதை தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் களம் இறங்கி ராணுவத்துடன் போரிட்டு வருகிறது. எனவே லிபியா மக்கள் அங்கிருந்து வெளியேறி பக்கத்து நாடான துனிசியாவுக்கு குடி பெயர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிபர் கடாபியின் மனைவி ஷபியா அவரது மகள் ஆயிஷா ஆகியோரும் மக்களோடு மக்களாக லிபியாவை விட்டு வெளியேறி துனிசியாவுக்கு தப்பி சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பே தப்பி ஓடிய அவர்கள் துனிசியாவில் டிஜெர்பா தீவில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
லிபியாவில் மக்கள் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அதிபர் கடாபியின் மாளிகை மீது நேட்டோ படைகள் குண்டுவீசி தாக்கின. அதில் கடாபியின் இளைய மகனும், 3 பேரக்குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.போர்க்குற்ற நடவடிக்கைக்காக சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் கடாபி மீது கைது வாரண்டு பெற ஐ.நா.வின் பாதுகாப்பு குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் தனது ஆட்சிக்கு முடிவு நெருங்குவதாக கடாபி கருதுகிறார். இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க தனது மனைவி மற்றும் மகளை துனிசியாவுக்கு அனுப்பியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜி-20 மாநாடு: பாதுகாப்பு காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட நபர் விடுதலை.
கனடாவில் நடைபெற்ற ஜி-20 அமைப்பு மாநாட்டின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பைரோன் சோனே நேற்று விடுதலை ஆனார்.ஜி-20 மாநாட்டின் போது கைது செய்யப்பட்டவர்களில் கடைசியாக விடுதலை ஆன நபராக பைரோன் சோனே உள்ளார். 38 வயது டொரண்டோ கணணி பாதுகாப்பு நிபுணரான இவர் 2.5 லட்சம் டொலர் உத்தரவாத தொகை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு ஜுன் மாதம் டொரண்டோவில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே நடைபெற்ற இந்த மாநாட்டின் போது பொலிசார் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நிறைய பேரை கைது செய்தனர்.பயங்கர வெடி ஆயுதத்தை வைத்து இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சோனே 10 மாத இடைவெளிக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். விடுதனை ஆனதும் தனது பெற்றோருடன் சில காலம் கழிக்க விரும்புகிறேன் என அவர் தெரிவித்தார்.
சோனே மனைவியை விட்டு பிரிந்து விட்டார். எனவே அவர் மனைவி வசிக்கும் இடத்தில் இருந்து 500 மீற்றர் தொலைவிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சோனே இணையத்தளம் பயன்படுத்துவதிலும் கட்டுப்பாடுகள் உள்ளன. அவர் தனது கடவுச்சீட்டை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தன்னிடம் எந்த வித ஆயுதமும் வைத்திருக்க கூடாது. ஜி-20 எதிர்ப்பு போராட்டத்தில் பலி ஆடாக ஆக்கப்பட்டாரா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.
சிரியாவில் அரசுக்கு எதிரான போராட்டம்: அழைப்பு விடுத்த போராட்டக்காரர்கள்.
சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து வரும் எதிர்க்கட்சிக்கு ஆதரவான போராட்டக் குழுவினர் புதன்கிழமை நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர்.கிழக்காசிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக அரசுகளுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். ஜனநாயக முறையிலான அரசு வேண்டும், தனி மனித சுதந்திரம் வேண்டும் என இவர்கள் கோரி வருகின்றனர். எகிப்து, ஏமன் தொடங்கி இப்போது சிரியாவிலும் இது பரவி வருகிறது.
சிரியாவின் அதிபர் பஷார் அல்-அஸாத்துக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைக் கடுமையான வழிகள் மூலம் அரசு அடக்கி வருகிறது. இதுவரை 800 பேர் இதில் உயிரிழந்துள்ளனர் என்றும், 8000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் மனித நேய ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் சிரியாவுக்கு எதிராக பல தடைகளை விதித்துள்ளது. மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கத் திட்டமிட்டுள்ளன. சிரிய அரசுக்கு எதிராகப் போராட்டக்காரர்கள் புதன்கிழமை முழு அடைப்பு நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.
அனைத்துக் கல்விக்கூடங்களும் அன்று இயங்கக் கூடாது என அவர்கள் கூறினர். அது போல நாடு முழுவதும் வர்த்தகம் முடங்கும் விதமாக அனைத்துக் கடைகளும், நிறுவனங்களும் புதன்கிழமை அடைக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.இதற்காக அவர்கள் சமூக இணையதளமான பேஸ்புக்கில் அழைப்பு விடுத்தனர். ஆயினும் இந்த முழு அடைப்புக்குப் போதிய ஆதரவு இருக்கவில்லை. வாகனங்கள் வழக்கம் போல ஓடின. கடைகள் திறந்திருந்தன.
இதனிடையே எல்லைப் பகுதியில் சிரியாவைவிட்டு வெளியேற முயன்றவர்களுடன் ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர்கள், பொலிசார் 8 பேர் கொல்லப்பட்டனர். 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.தப்பித்து ஓட முயன்றவர்களை ராணுவத்தினர் வளைத்துப் பிடித்தனர். பிடிபட்டவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய மோதிரம்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது.
நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 21 கிலோ காரட் தங்கத்தில் 63.856 கிலோ எடையில் செய்யப்பட்டுள்ள மோதிரம் ஒன்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.துபாயில் உள்ள டெய்ரா தங்க வணிக நிறுவனத்தில் வாடிக்கையார்களின் பார்வைக்காக இவை வைக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் உலக தங்க கவுன்சில் 5.1 கிலோ எடையில் தயாரித்த கம்மல் தான் உலக சாதனையாக கருதப்பட்டு வந்தது.
இந்த மிகப்பெரிய மோதிரத்தின் மதிப்பு குறித்து சவுதி அரேபியாவை சேர்ந்த கான்ஸ் நகைகடையின் இயக்குனர் அனில் தனக் கூறுகையில்,"கடந்த 2000 ஆண்டில் ஒரு அவுன்சின் தங்கம் விலை 250 டொலராக இருந்தது. அதே அளவு கொண்ட தங்கத்தின் தற்போதைய விலை ஆயிரத்து ஐநூறு டொலராக உள்ளது. இதன் மூலம் மோதிரத்தின் மதிப்பை கணக்கிட்டு கொள்ளவும் என்று" தெரிவித்தார்.45 நாட்கள் தொடர்ச்சியாக 55 தொழிலாளர்கள் தினமும் 10 நேரம் இதற்கென உழைத்துள்ளனர் என்று மோதிரம் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த மோதிரத்தின் சர்வதேச மதிப்பு சுமார் 3 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.எப்.எம் தலைவர் பதவி ராஜினாமா: அடுத்த தலைவர் யார்?
ஹோட்டல் பணிப்பெண்ணை பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்க முயன்றதாக செய்ய குற்றம்சாட்டப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் டொமினிக் ஸ்டிராஸ்கான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுப்பதாக தனது ராஜிநாமா கடிதத்தில் ஸ்டிராஸ்கான் குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச நிதியமைப்பின் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்கான் வழக்கு அந்த அமைப்பின் தலைவர் பதவிக்கு இதுவரை ஐரோப்பா மட்டுமே உரிமை கொண்டாடி வந்ததை நிறுத்திவிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதனால் கானுக்கு அடுத்து இந்தியா, சீனா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் தலைவராகக் கூடும் என்று தெரிய வருகிறது. இவர்களில் இந்தியாவின் மான்டேக் சிங் அலுவாலியாவின் பெயரும் அடிபடுகிறது.கான் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐ.எம்.எப்.பின் முதல் துணை நிர்வாக இயக்குனராக இருந்து வரும் ஜான் லிப்ஸ்கியே நிர்வாக இயக்குனராக கூடுதல் பொறுப்பை கவனிப்பார் என்று ஐ.எம்.எப் நிர்வாகக் குழு அறிவித்தது.நிதிக் கையாள்கையில் லிப்ஸ்கியின் திறமை குறித்து ஜப்பான், அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் நம்பிக்கை தெரிவித்த போதும் அவர் அமெரிக்கர் என்பதால் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார மீட்பு விவகாரத்தில் கானைப் போல அவரால் அவ்வளவு செல்வாக்கு செலுத்த இயலாது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
கான் இதுவரை தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்யவில்லை. ஆனால் அவர் ராஜினாமா செய்யக் கோரி நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஐ.எம்.எப் நிர்வாகம் கானுடன் தற்போது தொடர்பில் இல்லை என்றாலும் இவ்வழக்கை கூர்ந்து கவனித்து வருகிறது.ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கி இரண்டிலுமே தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த அமைப்புகளில் தலைவராகப் பொறுப்பேற்பவர் முதலில் ஐரோப்பியராக இருந்தால் அடுத்து தலைவராக வருபவர் அமெரிக்கராக இருப்பார்.
இவ்விதம் சர்வதேச அமைப்புகளில் இதுவரை அமெரிக்காவும் ஐரோப்பாவும் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தன. கடந்த 1945 டிசம்பரில் இந்த அமைப்பு துவங்கப்பட்ட பின் இதுவரை கான் உட்பட 10 பேர் தலைவர்களாக இருந்துள்ளனர். இவர்கள் அனைவருமே ஐரோப்பியர்கள் என்பதும் இவர்களில் நான்கு பேர் பிரான்ஸ் நாட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஐ.எம்.எப் தலைவர் கானின் பாலியல் வழக்கு அந்த அமைப்பில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். மாபெரும் பொருளாதாரச் சக்திகளாக வளர்ந்து வரும் சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் இந்த சர்வதேச அமைப்புகளின் தலைமைப் பதவியை குறி வைக்கத் துவங்கிவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் டக்ளஸ் பகுதியில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனமான ஐ.எச்.எஸ்.சின் பொருளாதாரப் பிரிவான "குளோபல் சைட்" நிறுவனத்தின் ஆய்வாளர் ஜேன் ரேண்டோல்ப் இதுகுறித்து கூறியதாவது: ஐ.எம்.எப்.பின் தலைமைப் பதவியை இதுவரை ஐரோப்பா உரிமை கொண்டாடி வந்தது குறித்து வளர்ந்து வரும் நாடுகளிடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.இந்த நாடுகளில் இருந்து தான் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் ஐ.எம்.எப்.பின் முக்கிய பெரிய பங்குதாரராக உள்ள சீனா தனது செல்வாக்கை நிச்சயமாக பயன்படுத்தும்.
கடந்த 2008ல் ஐ.எம்.எப்.புக்கு சீனா வழங்கிய நிதியால் தான் அந்த அமைப்பின் கடன் வழங்கும் திறன் மும்மடங்கு அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ரேண்டோல்ப் தெரிவித்தார்.இதற்கிடையில் ஒரு செய்தி நிறுவனம் அடுத்த தலைவராக வரக்கூடிய வாய்ப்பு உள்ளவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் கார்டன் பிரவுன் உள்ளிட்ட 10 பேரை குறிப்பிட்டுள்ளது.
ஐ.எம்.எப் முன்னாள் அதிகாரி ஈஸ்வர் பிரசாத் கூறுகையில்,"சிங்கப்பூர் நிதி அமைச்சர் தர்மன் சண்முக ரத்னம், தென்னாப்ரிக்க முன்னாள் நிதியமைச்சர் ட்ரெவர் மானுவேல், துருக்கி முன்னாள் பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் கமால் டெர்விஸ் ஆகியோருக்கு வாய்ப்பு இருக்கிறது" என்றார். எனினும் இவர்கள் அனைவரையும் விட பிரான்ஸ் நிதியமைச்சர் கிறிஸ்டைன் லகார்ட்(55) என்ற பெண்மணிக்குத் தான் வாய்ப்புகள் அதிகம் என்று கருதப்படுகிறது.ஐ.எம்.எப்.புக்கு மேலும் பல நெருக்கடியான பணிகள் காத்திருப்பதால் ஜூன் அல்லது ஜூலையில் அடுத்த தலைவர் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.
முபாரக்கிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்படமாட்டாது: ராணுவம்.
எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ராணுவ ஆட்சி பொது மன்னிப்பு வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகின.ஆனால் அவரது வழக்கு குறித்த விசாரணையில் தலையிடப் போவதில்லை என எகிப்து ராணுவ ஆட்சித் தலைமை அறிவித்துள்ளது.
எகிப்து ராணுவ ஆட்சித் தலைமைக்கு முன்னாள் அதிபர் முபாரக் எழுதியுள்ள கடிதம் ஒன்றில் தனது சொத்துக்கள் அனைத்தையும் நாட்டுக்குத் தந்துவிடத் தயாராக இருப்பதாகவும், தனக்கும், தன் குடும்பத்தாருக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்ததாக செய்திகள் வெளியாயின.
இது முபாரக்கின் நாடகம் என்றும், ராணுவ ஆட்சியின் தலைவர் பீல்டு மார்ஷல் முகமது உசேன் டன்டாவி முபாரக்கின் கீழ் ஏற்கனவே பணியாற்றியவர் என்பதால் அவரை சிறையில் அடைக்க தயக்கம் காட்டி வருவதாகவும் சிலர் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் ராணுவ ஆட்சியின் உயர்மட்டக் குழு வெளியிட்ட அறிக்கையில்,"முபாரக்குக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பொது மன்னிப்பு வழங்குவது குறித்து ராணுவ ஆட்சி ஆலோசித்து வருவதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை. அவரது வழக்கில் ராணுவ ஆட்சி எவ்வித் தலையீடும் செய்யாது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
30 நாட்களில் பதவி விலக அதிபர் முடிவு: உலக நாடுகள் வரவேற்பு.
கடந்த நான்கு மாதங்களாக இழுபறியில் இருந்த ஏமன் பிரச்சனை நேற்று ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.அதிபர் அலி அப்துல்லா சலேயும், எதிர்க்கட்சியினரும், வளைகுடா கூட்டுறவு கவுன்சில்(ஜி.சி.சி) முன்வைத்த ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டனர். அதன்படி இன்னும் 30 நாட்களில் அதிபர் சலே பதவி விலகுவார். இதன் பிரதிபலனாக அவர் மீது எவ்வித விசாரணையும் நடத்தப்படமாட்டாது.
துனிஷியா, எகிப்து புரட்சியையடுத்து ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலகக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த நான்கு மாதங்களாக ஏமனில் நடந்த போராட்டத்தில் 180 பேர் பலியாயினர்.ஏமனில் அரசியல் நெருக்கடி நீடிக்கும் பட்சத்தில் அது அல்கொய்தாவுக்கு இரையாகிவிடும் என்றும், அதனால் அந்த பிராந்தியம் மற்றும் ஒட்டுமொத்த உலக பாதுகாப்புக்கும் குந்தகம் ஏற்படும் என்று அமெரிக்காவும், ஏமனின் அண்டை நாடான சவுதி அரேபியாவும் கவலையில் இருந்தன.
அதனால் ஏமன் பிரச்னையைத் தீர்க்க இரு நாடுகளும் பெரும் முயற்சியில் ஈடுபட்டன. அதன் ஒரு பகுதியாக வளைகுடா கூட்டுறவு கவுன்சில்(ஜி.சி.சி) ஒரு பரிந்துரையை முன்வைத்தது. அதிபர் சலே தனது பதவியை துணை அதிபர் அப்துல் ரபு மன்சூர் ஹாடியிடம் ஒப்படைக்க வேண்டும். அதில் இருந்து இரு மாதங்களுக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.இதற்கு பிரதிபலனாக அதிபர் சலே மற்றும் அவரது குடும்பத்தார் மீது எவ்வித விசாரணையும் நடத்தப்படமாட்டாது. அவர்களுக்கு வழக்கில் இருந்து முழு பாதுகாப்பு அளிக்கப்படும். முதலில் இதற்கு ஒப்புக் கொண்ட சலே பிறகு தயங்கி பின்வாங்கினார்.
எதிர்க்கட்சிகள் முதலில் இதை ஒப்புக்கொண்ட நிலையில் சலேவுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடாது. அவரை விசாரித்து தூக்கிலிட வேண்டும் என்று மக்கள் எதிர்த்து கொந்தளித்தனர். இந்நிலையில் இப்பிரச்னையில் ஒருமித்த கருத்து உருவாகாததால் கத்தார் நாடு இதிலிருந்து விலகியது.
தொடர்ந்து ஜி.சி.சி பிரதிநிதிகள் இரு தரப்பிடமும் பேசி வந்தனர். நேற்று ஜி.சி.சி.யின் பொதுச் செயலர் அப்துல் லத்தீப் ஜயானி தலைநகர் சனாவில் அதிபர் சலேயுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பலனாக அதிபர் ஒப்புக்கொண்டதாக அதிபரின் உயர் அதிகாரி ஒருவர் நேற்று அறிவித்தார்.எதிர்க்கட்சிகள் தரப்பில் முக்கிய பிரமுகரான யாகியா அபு அஸ்பாவும் இதை உறுதிப்படுத்தினார். இதையடுத்து நேற்று சனாவில் அதிபரும், எதிர்க்கட்சியினரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒப்பந்தப்படி இன்னும் 30 நாட்களில் சலே தனது அதிபர் பொறுப்பை துணை அதிபரிடம் ஒப்படைப்பார். பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் இதை வரவேற்றுள்ளன.
ஸ்டிராஸ்கான் கைதானது திட்டமிட்ட பழிச் செயலே: பிரான்ஸ் மக்கள் கருத்து.
பிரான்ஸ் சோசலிஸ்ட் கட்சியை சார்ந்த டொமினிக் ஸ்டிராஸ்கான் சர்வதேச நிதியத் தலைவராகவும் உள்ளார். வருகிற 2012ஆம் ஆண்டு பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இவருக்கு உள்ளது.இந்த நிலையில் ஸ்டிராஸ்கான் மீது நியூயார்க் ஹோட்டல் ஒன்றின் பெண் ஊழியர் தன்னை ஸ்டிராஸ்கான் கற்பழிக்க முயன்றார் என புகார் செய்துள்ளார். இந்த புகாரைத் தொடர்ந்து கான் அதிக வசதிகள் இல்லாத மோசமான சிறையில் அடைக்கப்பட்டார்.
கான் கைது நடவடிக்கை பிரான்ஸ் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பிரான்ஸ் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கணிப்பின் போது வாக்களித்த மக்கள் ஸ்டிராஸ்கான் மீது திட்டமிட்ட வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.
பிரெஞ்சு வாக்கெடுப்பு ஏஜென்சியான சி.எஸ்.ஏ இந்த கருத்துக் கணிப்பை நடத்தியது. நியூயார்க் ஹோட்டல் சம்பவத்திற்கு பின்னர் நடந்த இந்த கருத்துக்கணிப்பில் 57 சதவீத மக்கள் ஸ்டிராஸ்கான் மீது வேண்டும் என்றே பழி சுமத்தப்பட்டுள்ளது என உறுதியாக கூறினர்.
திங்கட்கிழமை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவு ப்ரீ டெய்லி 20 மினிட்சில் வெளியிடப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டில் கைதாகியுள்ள ஸ்டிராஸ்கானுக்கு நியூயார்க் நீதிபதி மெலிசா ஜாக்சன் ஜாமீன் தர மறுத்துள்ளார். அவர் தொடரந்து காவலில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்.கான் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பிரான்சில் உள்ள தலைவர்களும், அரசியல் விமர்சகர்களும் ஏற்கவில்லை. இந்த நிலையில் பிரான்ஸ் மக்களின் மனநிலையை அறிய இந்த கருத்தக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
வளரும் நாடுகளில் இருந்து ஐ.எப்.எம் தலைவர்: தென் ஆப்பிரிக்கா வலியுறுத்தல்.
வளரும் நாட்டில் இருந்து சர்வதேச நிதி ஆணையத்தின் அடுத்த தலைவரை தெரிவு செய்ய வேண்டும் என்று தென் ஆப்பிரிக்கா வலியுறுத்தியுள்ளது.அந்நாட்டின் நிதி அமைச்சர் பிரவின் கோர்தன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கருத்து கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: ஐ.எம்.எப் தலைவர் பதவிக்கு வளரும் நாட்டில் இருந்து ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது அனைத்து நாடுகளின் விருப்பமாகும். அந்த பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் பலர் உள்ளனர்.இதனிடையே தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் நிதி அமைச்சர் டிரவோர் மேனுல் ஐ.எம்.எப் தலைவர் பதவிக்கு முன்னிறுத்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.எம்.எப் அமைப்பின் தற்போதைய தலைவர் டொமினிக் ஸ்டிராஸ்கான் பாலியல் குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF