Thursday, May 26, 2011

இன்றைய செய்திகள்.

வெள்ளைக்கொடியுடன் சரணடைய வருகின்றவர்களைப் படுகொலை செய்யுமாறு கோத்தாபய உத்தரவிட்டிருந்ததாக கேள்விப்பட்டிருந்தேன்: சரத் பொன்சேகா.

வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைப் படுகொலை செய்துவிடுமாறு கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தததை தான் கேள்விப்பட்டிருந்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையில் நேற்று சாட்சியமளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைப் படுகொலை செய்து விடுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்ததாக யுத்தத்தின் இறுதிக் கட்டம் வரை இராணுவத்தினருடன் தங்கியிருந்த ஊடகவியலாளர்கள் இருவர் மூலமாகவே நான் கேள்விப்பட்டிருந்தேன்.
அதனையே நான் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸ் இடமும் தனிப்பட்ட முறையில் உரையாடும் போது தெரிவித்திருந்தேன். ஆனால் அவர் ஒருபோதும் என்னைப் பேட்டி கண்டதில்லை. சண்டே லீடர் சார்பில் வேறொரு ஊடகவியலாளரே என்னைப் பேட்டி கண்டிருந்தார். அச்சந்தர்ப்பத்தில் பிரட்ரிக்காவும் அங்கு பிரசன்னமாகி இருந்தார். நோ்காணலின் போது அவர் எந்தவொரு வினாவையும் தொடுக்கவில்லை. அதன் பின் என்னுடன் தனிப்பட்ட  ரீதியில் உரையாடும் போதே நான் மேற்கண்ட விடயத்தை அவரிடம் தெரிவித்திருந்தேன்.
ஆனால் அதற்கு மேல் என்ன நடந்தது என்பதை நானறியேன். அத்துடன் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் யாரும் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்ததாக நான் அறியவுமில்லை. இராணுவத் தளபதி என்ற வகையில் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள எனக்கு கால அவகாசம் வழங்கப்படவுமில்லை என்றும் சரத்  பொன்சேகா தனது சாட்சியத்தின்போது மேலும் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தலையிட வேண்டும்: செனட் உறுப்பினர் கோரிக்கை.
சரத் பொன்சேகாவை  விடுதலை செய்விக்கும் விடயத்தில் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் தலையிட வேண்டும் என்று மூத்த செனட் உறுப்பினர் ஜேம்ஸ் இன்ஹோப் கோரிக்கை விடுத்துள்ளார்.கெய்ரோவில் வீதியில் இறங்கிப் போராடிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எகிப்தில் தலையிட்டது போன்று சரத் பொன்சேகாவின் விடயத்திலும் தலையிட வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு எழுதியுள்ள கடிதமொன்றிலேயே செனட் உறுப்பினரான ஜேம்ஸ் இன்ஹோப்  மேற்கண்ட வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் சிறைத்தண்டனைக்கு ஒரு வருட பூர்த்தியாகும் தறுவாயில் அவரை விடுதலை செய்யுமாறு பொதுமக்கள் பெருமளவில் ஒன்று திரண்டு வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடாத்தியதை சுட்டிக்காட்டும் அவர், கெய்ரோவில் வெகுண்டெழுந்த பொதுமக்களின் உணர்வுகளையொத்த நிலையில் அவர்கள் காணப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றார்.சரத் பொன்சேகா குற்றமற்றவர் என்று நான் தீவிரமாக நம்புவதுடன், தற்போது  வசதிகளற்ற சிறைச்சாலைக்குள் அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக அவரது உடல்நலமும் நாளுக்கு நாள் பாதிக்கப்படுகின்றது.
எனவே கெய்ரோ போன்று இலங்கையிலும் இராஜாங்கத் திணைக்களம் தலையிட்டு சரத் பொன்சேகாவின் விடுதலை விடயத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.மூத்த செனட் உறுப்பினரான ஜேம்ஸ் இன்ஹோப் அமெரிக்காவின் பாதுகாப்பு சேவைகள், சூழலியல் மற்றும் பொதுமக்கள் சேவைகள், வெளிநாட்டு உறவுகள் ஆகிய மூன்று செனட் உபகுழுக்களின் உறுப்பினராகவும் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடசாலை அதிபர்களுக்கும் எதிர்வரும் நாட்களில் இராணுவப் பயிற்சி: கல்வியமைச்சின் செயலாளர்.
பாடசாலை அதிபர்களின் செயற்திறனை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கும் எதிர்வரும் நாட்களில் இராணுவப் பயிற்சியினை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.கொழும்பு இசிபத்தனை தேசிய பாடசாலையில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வியமைச்சின் செயலளார் எச்.எம். குணசேகர மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.
பாடசாலை அதிபர்களின் செயற்திறன் அதிகரிக்கப்பட்டால் தான் பாடசாலைகளின் கல்வித்தரம் அதிகரிக்கும். அதனை நோக்காகக் கொண்டு பாடசாலை அதிபர்களுக்கும் மூன்று மாத இராணுவப் பயிற்சியொன்று மிக விரைவில் வழங்கப்படவுள்ளது.
பாடசாலை அதிபர் மட்டுமன்றி பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளும் கூட செயற்திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். பாடசாலை மதிலால் ஏறிப்பாய வேண்டிய சந்தர்ப்பமொன்றை எதிர்கொண்டால் அதனையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும். மாணவர்கள் அங்கும் இங்குமாக ஒளித்துத் தப்பியோட முனையும் போது அவர்களை விரட்டிப் பிடிக்கக் கூடியவர்களாக, அதற்கான உடற்தகுதி கொண்டவர்களாக அதிபரும் ஆசிரியர்களும் இருக்க வேண்டும்.
அதற்கென முதற்கட்டமாக ஆயிரம் பாடசாலைகளின் அதிபர்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு இராணுவத்தினரின் மேற்பார்வையின் கீழ் பயிற்சிகக் வழங்கப்படவுள்ளனர். அவர்களுக்கான பயிற்சிகள் ரன்டம்பை இராணுவ முகாமில் வைத்து வழங்கப்படும் என்றும் கல்வியமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
போர் வெற்றி தொடர்பான தேசிய நிகழ்வு நாளை காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி தொடர்பான தேசிய நிகழ்வு நாளை காலி முகத் திடலில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார்.முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படை உட்பட படைத் தரப்பைச் சேர்ந்த 8277 பேர், போர் வெற்றி தொடர்பான தேசிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
கிழக்கு, யாழ்ப்பாணம் மற்றும் வன்னி என மூன்று பிரிவுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விசேட மரியாதை அணி வகுப்புக்கள் நடத்தப்படவுள்ளன.
நாளை தொடக்கம் யாழ்தேவி புகையிரதம் ஓமந்தை வரை பயணிக்கவுள்ளது.
புனரமைக்கப்பட்ட ஓமந்தை புகையிரத நிலையம் நாளை திறக்கப்படவுள்ளதால், யாழ்.தேவி புகையிரதத்தின் சேவைகளும் ஓமந்தை வரை விஸ்தரிக்கப்படவுள்ளன.வடக்கில் நிலவிய யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த புகையிரத நிலையங்களில் முதன்முதலாக புனரமைக்கப்பட்ட புகையிரத நிலையமான ஓமந்தைப் புகையிரத நிலையம் நாளை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
பிரஸ்தாப வைபவத்தில் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா, இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.அதனைத் தொடர்ந்து இதுவரை வவுனியா தாண்டிக்குளம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த யாழ். தேவி புகையிரதத்தின் சேவை நாளை தொடக்கம் ஓமந்தை வரை நீடிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

09 வருடமாக இழுபறிபட்டுவரும் கொழும்பு – தூத்துக்குடி கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!

கடந்த 09 வருடங்களாக பேச்சுகள் நடைபெற்றுவரும் கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 27 ஆம் திகதி கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு இச்சேவை ஆரம்பமாகவிருந்து. எனினும் தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளால் இச்சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எனினும் தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கான கப்பல் ஜூன் முதல் வாரத்தில் புறப்படும் எனவும் ஜூன் முதல் வாரம் கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கான கப்பல் சேவையும் ஆரம்பமாகும் எனவும் கப்பல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.இந்தியாவிலிருந்து கொழும்புக்கு வரவுள்ள கப்பலில் சுமார் 1000 பேர் பயணிக்க முடியும். பயணிகள் ஒவ்வொருவரும் 100 கிலோகிராம் எடையுள்ள பொருட்களை கொண்டுவர அனுமதிக்கப்படுவார்கள்.

280 கிலோமீற்றர் தூரமான இக்கப்பல் சேவை வாரம் 3 தடவைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பாக இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் பேச்சுகள் நடைபெற்ற காலம் தொட்டே இலங்கை அரசு இந்தியாவுடன் பேச்சுகளில் இடுபட்டு வந்தது. இன்றும் இந்த கப்பல் சேவை ஒரு கணல் நீரில் ஓடும் “காகிதக் கப்பலாவே” இருந்து வருகிறது.
சிறுவர்களும் பேஸ்புக்கை பாவிக்க வேண்டும்: ஸ்தாபகருக்கு எதிராக பெற்றோர்கள் போர்க்கொடி.
பேஸ்புக்கைப் பாவிக்கும் 13 வயதுக்குக் கீழ்பட்ட சிறுவர்கள் பல்வேறு ஆபத்துக்களை எதிர்நோக்குவதாக பல குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளது.இந்நிலையில் சிறுவர்கள் தனது சமூக வலைபின்னல் இணையத்தளத்தைப் பாவிக்க வேண்டும் என்றும், அவர்களை அதைப் பாவிக்கச் செய்யும் வகையில் தான் போராடப் போவதாகவும் பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் சுகர்பெக் தெரிவித்துள்ளார்.
தற்போது சுய நன்னடத்தை செயற்பாடுகளின் கீழ் பிரிட்டனில் 13 வயதுக்குக் கீழ்பட்டவர்கள் பேஸ்புக்கைப் பாவிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் இதுபோன்ற நிலைமையே காணப்படுகின்றது.ஆனால் 27 வயதான கோடீஸ்வர வர்த்தகரான சுகர்பெக் சிறுவர்கள் பேஸ்புக் மூலமாக கல்வி அடிப்டையிலான நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்தத் தடைகள் நீக்கப்படவேண்டும் எனக் கேட்டுள்ளார்.
பேஸ்புக் மட்டுமன்றி அது போன்ற ஏனைய சமூக இணையத்தளங்களையும் அவர்கள் பாவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். சுகர்பெக்கின் இந்த வேண்டுகோள் பெற்றோர்கள் மத்தியில் ஏற்கனவே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இந்தக் கூற்றைப் பல பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.
பேஸ்புக்கில் குற்றவாளிகளும், பாலியல் துஷ்பிரயோகக்காரர்களும் ஊடுருவி பல சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இது தொடர்பாகப் பல முறைப்பாடுகளும் உள்ளன. இவற்றுக்கான பாதுகாப்பு முறைகள் எதுவும் இல்லாத ஒரு இணைய வலைபின்னல் தான் பேஸ்புக் என்ற குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது.
செயற்கைகோள் உதவியுடன் மாயமான 17 பிரமிடுகள் கண்டுபிடிப்பு.
எகிப்தில் அரசக்குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இறந்தால் அவர்களது உடல்களை பதப்படுத்தி கூம்பு வடிவ பிரமிடுகளில் புதைத்து வைப்பார்கள்.இந்த பிரமிடுகளில் காணப்படும் தட்பவெப்பம் காரணமாக புதைக்கப்பட்ட அரசர்களின் உடல்கள் பல ஆண்டுகளாக கெட்டுப்போகாமல் இருக்கும். எகிப்து என்றவுடன் அங்குள்ள பிரமிடுகள் தான் ஞாபகத்திற்கு வரும்.
உலகப்புகழ்பெற்ற 17 பிரமிடுகள் நிலை என்ன என்று தெரியாமல் இருந்தது. இந்த பிரமிடுகள் தற்போது புதிதாக நடத்தப்பட்ட செயற்கைகோள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போன்று பழங்காலத்தில் பிரபலமாக திகழ்ந்து மரணம் அடைந்தவர்களின் நினைவாக நினைவு தூண்களும் கட்டப்பட்டன.
இந்த தூண்களின் அடியில் அந்த நபர்களின் உடல்கள் புதைக்கப்பட்டு இருந்தன. இறந்தவர்களுக்காக எழுப்பப்பட்ட 3 ஆயிரம் தூண்களும் இந்த செயற்கைகோள் ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எகிப்தில் பல அரிய நினைவுச்சின்னங்களை ஆய்வுக்குழுவினர் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இது அவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. அலபாமா பல்கலைகழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.
அவர்கள் பழங்கால 3 ஆயிரம் நினைவு சின்னங்களையும் கண்டறிந்துள்ளனர். ஆய்வுக்குழவினர் பூமியில் இருந்து 400 மைல் உயரத்தில் சக்திவாய்ந்த கமெராக்கள் மூலமாக படம் பிடித்துள்ளனர்.அவர்கள் புற சிவப்பு பிம்ப முறை மூலம் குறிப்பிட்ட நினைவுச்சின்னங்களை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட புரதான பொருட்கள் குறித்து இந்த மே மாதம் 30 திகதி பி.பி.சி ஒன் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஜி8 மாநாட்டில் அரபு போராட்டங்கள் குறித்து முக்கிய ஆலோசனை.
பிரான்சின் சுற்றுலாதலமான டெவ்விலியில் ஜி8 மாநாட்டில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் கூடுகிறார்கள்.இந்த மாநாட்டில் அரபு நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஏற்பட்டு வரும் போராட்டம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.
ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக புகுஷிமா அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட கதிர்வீச்சு பரவல் குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. ஜி8 மாநாட்டில் இணையதள சேவையை முறைமைப்படுத்துதல், உலகப்பொருளாதாரம் மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.
பிரிட்டனில் 3 நாள் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்ட பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்த மாநாட்டிற்கு வருகிறார். பின்னர் அவர் போலந்துக்கு பயணம் மேற்கொள்கிறார்.பிரான்சில் நடைபெறும் வளர்ந்த 8 நாடுகளின் கூட்டத்தில் துனிஷியா அரபு லீக் மற்றும் எகிப்து பிரதிநிதிகளும் கலந்து கொள்கிறார்கள். இந்த 2 நாடுகளில் ஜனநாயகம் மாற்றம் ஏற்பட பெரும் உதவி அளிக்கவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
லிபியாவில் நேட்டோ படைகள் தாக்குதல் நடத்துவதை ரஷ்யா கடுமையாக எதிர்க்கிறது. இதனால் ஜி8 மாநாட்டில் கருத்து வேறுபாடு காணப்படும். பிரிட்டனில் இருந்து பிரான்சிற்கு ஒபாமா புறப்படுவதற்கு முன்னர் கூறுகையில்,"சீனாவும் இந்தியாவும் உலக பொருளாதாரத்தில் உயர்ந்து வருவதால், உலக விடயங்களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாது" என்றார்.ஜி8 அமைப்பில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன.
லெனினின் உடலைப் புதைக்கக்கூடாது: ரஷ்யாவில் சர்ச்சை.
கம்யூனிஸ்ட் தலைவர் லெனினின் உடலைப் புதைப்பது என்பது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு. இதுபோன்ற முடிவுகள் சமூகத்தில் கொந்தளிப்பையே ஏற்படுத்தும் என்று ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச் எச்சரித்துள்ளது.சோவியத் ரஷ்யாவின் தலைவரான விளாடிமிர் லெனினின் உடல் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் அவருக்கான சமாதிக் கட்டடத்தில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அவரது உடலைப் பார்க்க அங்கு செல்கின்றனர்.
சோவியத் ரஷ்யா சிதைந்த பின் லெனின் உடலைப் புதைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. சமீபகாலமாக அக்கோரிக்கை வலுத்தும் வருகிறது. சமீபத்தில் அங்கு நடத்தப்பட்ட பொது கருத்துக் கணிப்பில் 60 சதவீதம் பேர் அவரது உடலைப் புதைப்பதற்கு ஆதரவளித்தனர். 30 சதவீதம் பேர் மட்டுமே அவரது உடல் பேணப்பட வேண்டும் என்று கூறினர்.
இந்நிலையில் ரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் சர்ச் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: லெனினின் உடலைக் காட்சிக்கு வைப்பது என்பது ரஷ்யப் பண்பாட்டுக்கு பொருத்தமானதல்ல தான். ஆனால் அவரது உடல் பற்றிய எவ்வித முடிவுகள் எடுப்பதற்கு முன் பல்வேறு சமூகக் குழுக்களின் கருத்துக்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.சமூகக் கொந்தளிப்புகளை உருவாக்கும் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். கடந்தாண்டில் ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புடின் இதுகுறித்துப் பேசிய போது,"லெனின் உடல் பற்றிய முடிவு எடுக்கக் கூடிய காலம் இன்னும் வரவில்லை" என்று குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தான் போரில் ஜேர்மனி வீரர் கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஜேர்மனியின் பண்டேஸ்வெர் ராணுவ வீரர் சாலை குண்டு வெடிப்பில் உயிரிழந்தார்.அவர் இறந்த தகவல் ஜேர்மனி நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் மேலும் ஒரு ஜேர்மனி வீரரும், ஜேர்மனி மொழிபெயர்ப்பாளரும் காயம் அடைந்தனர்.
வீரரின் உயிரை பலி வாங்கிய குண்டை தீவிரவாதிகள் தங்கள் கைகளில் கிடைத்த பொருட்களைக் கொண்டு செய்துள்ளனர். ஜேர்மனி வீரர் மரணத்தை பண்டேஸ்வர் ஐ.ஜி உறுதிப்படுத்தி உள்ளார். இந்த தகவலை டெர் ஸ்பைகல் பத்திரிகை வெளியிட்டுள்ளது.ஜேர்மனி வீரர் கொல்லப்பட்டது நமது இதயத்தை தொடுவதாக உள்ளது. தீவிரவாதிகள் கோழைத்தனமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகளால் ஜேர்மனி தனது தாக்குதல் நடவடிக்கையை ஆப்கானிஸ்தானில் மாற்றிக் கொள்ளாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் தாமஸ் டே மெய்ஸ்ரே தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் தமது நாட்டு வீரர் கொல்லப்பட்டதற்கு ஜேர்மனி அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ப்ரீ டெமாக்ரேடிக் கட்சி(எப்.டி.பி) தலைவர் ரைனர் ப்ருடெர்லே கூறுகையில்,"தீவிரவாதிகள் கோழைத்தனமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்" என்றார்.இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள ஜேர்மனி வீரர்களை உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும் என இடது சாரி கட்சி வலியுறுத்தியது. கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் ஜேர்மனி வீரர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளனர். இதுவரை 50 ஜேர்மனி வீரர்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளனர்.
ஐ.எம்.எப் அடுத்த தலைவராக கிறிஸ்டியானே: பிரான்ஸ் அரசு ஆதரவு.
சர்வதேச நிதியத்தின் தலைவர் டொமினிக் ஸ்டிராஸ்கான் பதவி விலகியதைத் தொடர்ந்து அந்த பதவிக்கு வர பிரான்ஸ் நிதித்துறை அமைச்சர் கிறிஸ்டியானே லாகர்டே முயற்சி மேற்கொண்டுள்ளார்.ஐ.எம்.எப்.பில் தலைமை பொறுப்புக்கு ஒரு பெண் வர வேண்டும் என ஐரோப்பிய நாடுகளும் கிறிஸ்டியானேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. கிறிஸ்டியானே சர்வதேச நிதியத்தின் தலைமை பதவிக்கு வர பிரான்ஸ் அரசும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை புதன்கிழமை தலைநகர் பாரிசில் அறிவித்தது. பிரான்ஸ் நாட்டின் சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த டொமனிக் ஸ்டிராஸ்கான். இவர் நியூயார்க் ஹோட்டல் பெண் ஊழியரிடம் தவறான முறையில் நடந்து கொண்டார் என குற்றம் சாட்டப்பட்டதால் அவர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் வீட்டுக்காவலில வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் ஐ.எம்.எப் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவி விலகலை தொடர்ந்து பிரான்ஸ் பெண் நிதித்துறை அமைச்சர் கிறிஸ்டியானே அந்த பதவிக்கு வர முன்வந்துள்ளார்.கிறிஸ்டியானே ஐ.எம்.எப் தலைமை பதவிக்கு வர பிரான்ஸ் அரசு முழு ஆதரவு அளிப்பதாக அரச செய்தித்தொடர்பாளரும், பட்ஜெட் அமைச்சருமான பிரான்ய்ஸ் பாரோய்ன் தெரிவித்தார்.
கிறிஸ்டியானே ஐஎ.ம்.எப் தலைமை பதவி முயற்சிக்கு ஐரோப்பாவின் பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பெல்ஜியம் நிதித்துறை அமைச்சர் டிடேடியர் ரெனால்ட்ஸ் கூறுகையில்,"கிறிஸ்டியானே மிக அற்புதமான ஐ.எம்.எப் வேட்பாளர்" என புகழ்ந்துரைத்தார்.ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ஜோஸ் மானுவல் பாரோசோவம் ஆதரவு தெரிவித்துள்ளார். ஜேர்மனி, பிரிட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகள் கிறிஸ்டியானேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. சீனாவும் கிறிஸ்டியானேவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பிரெஞ்சு அதிகாரிகள் கூறினர்.
உலகின் அமைதியான நாடுகள் பட்டியல்: கனடாவுக்கு எட்டாவது இடம்.
சர்வதேச ஆய்வு அமைப்பான பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் உலக அளவில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் கனடாவுக்கு எட்டாவது இடம் கிடைத்துள்ளது.இந்த ஆய்வுக்கு மொத்தம் 153 நாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் உலக அளவில் ஐஸ்லாந்துக்கு முதலிடம் கிடைத்தது.
இரண்டாவது இடம் நியூசிலாந்துக்கும், மூன்றாவது இடம் ஜப்பானுக்கும், நான்காவது இடம் டென்மார்க்கிற்கும், ஐந்தாவது இடம் செக் குடியரசுக்கும் கிடைத்தது.மேலும் ஆறாவது இடம் ஆஸ்திரியாவிற்கும், ஏழாவது இடம் பின்லாந்துக்கும், எட்டாவது இடம் கனடாவுக்கும், ஒன்பதாவது இடம் நோர்வேக்கும், பத்தாவது இடம் ஸ்லோவேனியாவுக்கும் கிடைத்தன. உலக நாடுகளில் மிக அமைதி குறைவான நாடாக சோமாலியா உள்ளது. இந்த நாடு கடைசி இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு ஆய்வு பட்டியலில் 14 இடத்தில் இருந்த கனடா தற்போது எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு டொரண்டோ ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது வன்முறை தாக்குதல்கள் நடந்ததால் முந்தய ஆண்டில் அமைதி நாடுகள் பட்டியலில் கனடாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
தற்போதைய ஆண்டில் எந்தவித சச்சரவும் இல்லாமல் மனித உரிமைகள் உரிய அளவில் மதிக்கப்படுவதால் தரவரிசை பட்டியலில் கனடா முன்னேறி உள்ளது.வன்முறை தாக்குதல், மோதல்களினால் ஏற்படும் மரணம், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் ராணுவத்திற்கு செலவிடப்படும் அளவு ஆகியவை இந்த ஆய்வுக்கு பரிசீலிக்க எடுத்துக் கொள்ளப்பட்டன.
பாகிஸ்தானில் அமெரிக்கப் படைகள் குறைக்கப்படும்: பெண்டகன்.
பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் படிப்படியாக குறைக்கும் நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளதாக பெண்டகனின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.படைகளை குறைக்க வலியுறுத்தி பாகிஸ்தான் அரசு அமெரிக்காவிற்கு எழுதிய கடிதத்தில் கேட்டுகொண்டது. இதனையடுத்து படைகளை குறைக்கும நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பெண்டகன்செய்தி தொடர்பாளர் கலோனல் டேவ் லாபன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் சுமார் 200க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் தங்கியுள்ளனர். பாகிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்தல் போன்ற பணிகளை அமெரிக்க ராணுவ வீரர்கள் உதவி புரிந்து வந்ததாக அவர் தெரிவித்தார்.
பெண்கள் கல்வி கற்க கூடாது: எச்சரிக்கையை மீறியதால் கொன்று பாடம் புகட்டிய தலிபான்கள்.
பெண்களுக்கு கல்வி கற்பிக்கக் கூடாது என்ற தங்களது எச்சரிக்கையையும் மீறி பெண்கள் பள்ளி ஒன்றின் தலைமையாசிரியர் செயல்பட்டதால் அவரை தலிபான்கள் சுட்டுக் கொன்ற கொடூர சம்பவம் ஆப்கானிஸ்தானில் நடந்துள்ளது.ஆப்கானிஸ்தானில் 1996 - 2001 காலகட்ட தலிபான்கள் ஆட்சியில் பெண்கள் கல்விக்கு தடை விதிக்கப்பட்டது. 2001ல் தலிபான் ஆட்சி வீழ்த்தப்பட்டதையடுத்து அங்கு பெண்களுக்கு சில உரிமைகள் கிடைத்துள்ளன.
எனினும் பெண்கள் பள்ளிக் கட்டடங்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான தாக்குதல்கள், பள்ளிக்குச் செல்லும் பெண்கள் மீது ஆசிட் வீசுதல், பள்ளிகளை தீக்கிரையாக்குதல், பெண்கள் பயிலும் பள்ளிக் கட்டடங்களுக்குள் விஷ வாயுவைச் செலுத்துதல் ஆகிய வன்கொடுமைச் செயல்கள் இன்னும் ஆப்கனில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.இதனால் ஆப்கனில் கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தலைநகர் காபூல் அருகில் உள்ள லோகர் என்ற பகுதியில் உள்ள பெண்கள் பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றி வந்தார் கான் முகமது.
தலிபான்களை பொருத்தவரை இஸ்லாமிய சட்டங்களின்படி பெண்களுக்கு கல்வி கற்பிக்கக் கூடாது. அதனால் அவர்கள் முகமதுக்கு பல முறை மிரட்டல்கள் விடுத்துள்ளனர். ஆனால் முகமது அதை பொருட்படுத்தாமல் தனது பணியைத் தொடர்ந்திருக்கிறார்.இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது வீட்டிலிருந்து வெளியே வந்தபோது தலிபான் பயங்கரவாதிகள் அவரைச் சுற்றி வளைத்து சுட்டனர். அதில் அவர் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இத்தாக்குதலில் முகமதுவின் மகனும் காயமடைந்தார்.
ஏமனில் அதிபர் பதவி விலக மறுப்பு: உள்நாட்டுப் போர் மூளும் அபாயம்.
ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலக மறுத்ததை அடுத்து அங்கு அவரது ஆதரவாளர்களுக்கும், பழங்குடியினருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் உள்நாட்டுப் போராக மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஏமனில் அதிபர் சலே பதவி விலகுவதற்கான பரிந்துரைகளை வளைகுடா கூட்டுறவுக் கவுன்சில் முன்வைத்தது. அதில் கையெழுத்திடுவதாக மூன்று முறை போக்குக் காட்டிய சலே 22ம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தான் பதவி விலகினால் நாடு உள்நாட்டுப் போர் மற்றும் அல்கொய்தா வசம் சிக்கவிடும் என்று கூறி பதவி விலக மறுத்துவிட்டார்.இதையடுத்து கடந்த மூன்று நாட்களாக ஏமனில் தலைநகர் சனாவில் அதிபரின் ஆதரவாளர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவரான ஷேக் சாதிக் அல் அமரின் ஆதரவாளர்களான பழங்குடியினருக்கும் இடையில் கலவரம் வெடித்துள்ளது.
இக்கலவரத்தில் இதுவரை 44 பேர் பலியாகியுள்ளனர். தேசிய செய்தி ஒலிபரப்பு நிறுவனமான சபா தேசிய விமான நிலைய அலுவலகமான ஏமனியா ஆகியவற்றின் கட்டடங்களை பழங்குடியினர் நேற்று கைப்பற்றினர்.தொடர்ந்து உள்துறை அமைச்சகக் கட்டடத்துக்குத் தீ வைக்க முயன்றனர். கலவரம் தீவிரம் அடைவதை அடுத்து சனாவில் உள்ள மக்கள் அதன் தென்பகுதிக்கு தப்பியோடி வருகின்றனர். ஏமனின் முக்கிய எதிர்க் கட்சியான "ஹாஷித்" என்ற பழங்குடியின கூட்டுக் குழுவின் தலைவராக அமர் செயல்பட்டு வருகிறார்.
நேற்று முன்தினம் அவரது வீட்டின் மீது அதிபர் ஆதரவாளர்கள் சிலர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட பணியாற்றிய ஒரு மூத்த அரசியல்வாதி காயம் அடைந்தார். பலர் பலியாயினர். இந்நிலையில் ஏமனில் இருதரப்பினரும் உடனடியாக மோதலைக் கைவிட்டு அமைதி நிலவ வகை செய்யும்படி வளைகுடா நாடுகள் அனைத்தும் கோரிக்கை விடுத்துள்ளன.
நேற்று இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அதிபர் அலி அப்துல்லா சலே கூறியதாவது: உள்நாட்டுப் போரைத் தூண்டி விடும் வகையில் அமரின் மகன்கள் செயல்பட்டு வருகின்றனர். நான் உள்நாட்டுப் போரில் ஈடுபட விரும்பவில்லை. இது உள்நாட்டுப் பிரச்னை.அதனால் இதை ஐ.நா.வுக்கு எடுத்துச் செல்ல மாட்டேன். ஏமன் தோல்வி அடைந்த நாடல்ல. இது சோமாலியாவோ, அல்கொய்தாவின் சொர்க்கமோ ஆக விடமாட்டேன். வரம்புக்குள் அமைந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் நான் இப்போது கூட ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடத் தயார்தான். இவ்வாறு சலே தெரிவித்துள்ளார்.
செய்யாத குற்றத்திற்கு கிடைத்த தண்டனை: அதிகாரியின் மகள் தவிப்பு.
அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றும் இந்திய அதிகாரி ஒருவரின் மகள் செய்யாத குற்றத்திற்காக சிறைப்பட்டு அங்கு அவமானப்பட்ட சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.அமெரிக்காவின் நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் இந்திய தூதரக அலுவலகம் உள்ளது. இங்கு துணைத் தூதரக அதிகாரியாக தேபாஷிஷ் பிஸ்வாஸ் பணியாற்றி வருகிறார். இவரது மகள் கிருத்திகா பிஸ்வாஸ்(18).
இவர் இந்தாண்டில் அப்பகுதியில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் படிப்பதற்காக சேர்ந்தார். பள்ளி ஆசிரியர்கள் பற்றி தரக்குறைவான மின் அஞ்சல்களை அனுப்பியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த பெப்பிரவரி 8ல் விசாரணைக்குப் பின் பொலிசாரால் கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்துக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார்.மாவட்ட அரசுத் தரப்பு வக்கீல் கிருத்திகா மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து அதற்கான ஆவணங்களை நீக்கிய பின்பும் கூட அவர் பள்ளியில் இருந்து ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
குற்றச்சாட்டுகள் பொய் என தெரிந்த பின் பள்ளியில் இருந்து ஒரு மின் அஞ்சல் அவருக்கு வந்தது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், அவர் பள்ளிக்கு மீண்டும் வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: எனக்கு தூதரக அதிகாரியின் மகள் என்ற விதத்தில் அதிகாரப் பாதுகாப்பு உண்டு. ஆனால் பொலிசார் அதைப் பொருட்படுத்தாமல் என்னை விலங்கிட்டு அழைத்துச் சென்றனர்.
என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. தரக்குறைவான மின் அஞ்சல்களை அனுப்பிய சீன மாணவனை அவர்கள் ஏன் கைது செய்யவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் என்னை கைது செய்யும்படி தலைமை ஆசிரியை கடுமையாக நிர்பந்தம் செய்தார் என்று மட்டும் தெரியும். இவ்வாறு கிருத்திகா தெரிவித்தார்.
கிருத்திகாவின் வக்கீல் ரவி பத்ரா இதுபற்றி கூறியதாவது: கிருத்திகாவை 24 மணி நேரத்துக்கும் மேலாக சிறையில் வைத்திருந்தது சர்வதேச அமெரிக்க மாகாண மற்றும் நியூயார்க் நகர சட்டங்களுக்கு விரோதமானது.அவரது தந்தை தேபாஷிஷ் பிஸ்வாசுக்கோ தூதரக தலைமை அதிகாரி பிரபு தயாளுக்கோ கூட இந்த கைது பற்றிய தகவல் தெரிவிக்கப்படவில்லை. அவருக்கு தூதரக அதிகாரியின் மகள் என்ற விதத்தில் அதிகாரப் பாதுகாப்பு உண்டு. ஆனால் அதையும் மீறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு வக்கீல் தெரிவித்தார்.
இந்திய தூதரக அலுவலக தலைமை அதிகாரி பிரபு தயாள் கூறுகையில்,"தூதரக பாதுகாப்பு என்பது அதிகாரிக்கு மட்டும் தான் உண்டு. அவரது குடும்ப உறுப்பினர்களுக்குக் கிடையாது" என்று தெரிவித்தார்.இந்நிலையில் இவ்வழக்கில் நீதி கிடைத்த பின் இந்தியா திரும்பப் போவதாக கிருத்திகா பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஒபாமா ஆணவம் பிடித்தவர்: பர்வேஷ் முஷாரப்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதிபர் ஒபாமா ஆணவம் பிடித்தவர் என்று விமர்சித்துள்ளார்.பாகிஸ்தானில் புகுந்து ஒசாமா பின்லேடனை கொல்லப்பட்ட விதமே ஒபாமா ஒரு ஆணவம் பிடித்தவர் என்று உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது என்றார் முஷாரப்.
அனுமதியின்றி அந்நிய நாட்டில் புகுந்து தாக்குதல் நடத்த எந்தவொரு நாட்டிற்கும் அதிகாரம் இல்லை.மேலும் எல்லா கட்டுப்பாடுகளையும் மீறி பாகிஸ்தானில் புகுந்து அனுமதியின்றி ஒசாமா பின்லேடன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது அநாகரிகமான செயல் என்றும் முஷாரப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு உதவி புரிய சீனா மறுப்பு.
பாகிஸ்தானில் இரண்டாவது கடற்படை தளம் அமைப்பதற்கு சீனா உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ மந்திரி அகமது முக்தார் கேட்டுக்கொண்டார்.பாகிஸ்தான் கடற்படை தளத்துக்குள் தலிபான்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக தான் இவ்வாறு மறுப்பு கூறப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
பாகிஸ்தானில் கராச்சி நகரில் ஒரு கடற்படை தளம் உள்ளது. இதுதவிர கவ்தார் என்ற துறைமுகத்தில் இன்னொரு கடற்படை தளம் அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் சீனாவை வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் அடுத்தடுத்து பயங்கர சூறாவளி: பலி எண்ணிக்கை 200ஐத் தாண்டியது.
அமெரிக்காவின் மத்திய பகுதியில் உள்ள ஒக்லஹாமா, கன்சாஸ் மற்றும் அர்கன்சாஸ் மாகாணங்கள் நேற்று வீசிய பயங்கர சூறாவளியால் பெரும் பாதிப்படைந்தன.இச்சூறாவளிக்கு இன்று மட்டும் 9 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 200ஐ தாண்டிவிட்டது. அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் கடந்த 22ம் திகதி மணிக்கு 320 கி.மீ வேகத்தில் "டொர்னடோ" என்றழைக்கப்படும் பயங்கர சூறாவளி வீசியது. இதில் 122 பேர் பலியாயினர்.அதைத் தொடர்ந்து நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலையில் ஒக்லஹாமா மாகாணத்தில் உள்ள ஒக்லஹாமா நகரின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள கிராமப் புறங்களைத் தாக்கியது. இதில் ஐந்து பேர் பலியாயினர்.
எல்ரெனோ நகரில் டொர்னடோ புயல் தாக்கியதில் ஒரு காஸ் நிலையம் தீப்பிடித்து எரிந்தது. எல்ரெனோ நகரில் பதிவான குறிப்புகளின்படி டொர்னடோ மணிக்கு 243 கி.மீ வேகத்தில் வீசியுள்ளது. ஒக்லஹாமா நகரின் கனடியன் பகுதியில் தரைமட்டமாகிப் போன வீடுகளைத் தவிர மீதமுள்ள 58 ஆயிரம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அவை இருளில் மூழ்கியுள்ளன.அதேபோல் கன்சாஸ் மற்றும் அர்கன்சாஸ் மாகாணங்களையும் டொர்னடோ தாக்கியது. இதில் அர்கன்சாஸ் மாகாணத்தில் பிராங்க்ளின் மற்றும் ஜான்சன் பகுதிகளில் இருவர் பலியாயினர். கன்சாஸ் மாகாணத்தில் இருவர் பலியாயினர்.
இன்னும் சில நாட்களில் வலுக்கும் இந்தப் புயல் வடகிழக்காகப் பயணிக்கக் கூடும் என்று அமெரிக்க வானிலை மையம் அறிவித்துள்ளது. அதனால் ஏற்கனவே டொர்னடோவால் பாதிக்கப்பட்ட மிசவுரி மாகாணத்தின் ஜாப்ளின் நகர மக்கள் மேலும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.டொர்னடோ பயணித்த பகுதிகளில் இருந்த வீடுகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் தரைமட்டமாகியுள்ளன. பல இடங்களில் கார்கள் மற்றும் மரங்கள் கடும் வேகத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த வீடுகளை இழந்தவர்கள் ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை இம்மாதிரி சூறாவளிப் புயல் வழக்கமான ஒன்று தான் என்றாலும், மிகக் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து தற்போது தாக்கி வருவதால் மேலும் பல தாக்குதல்களை நிகழ்த்துமோ என்ற பீதியைக் கிளப்பியுள்ளது.பாதிக்கப்பட்ட பகுதிகளை அமெரிக்க அதிபர் ஒபாமா வரும் 29ம் திகதி நேரில் பார்வையிடுவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
கடாபியை நேட்டோ படைகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க திட்டம்.
லிபிய பிரச்னையில் சுமுகமான முடிவை ஏற்படுத்த தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா அடுத்த வாரம் லிபியாவுக்குச் செல்ல இருக்கிறார்.லிபிய பிரச்னையில் அதன் தலைவர் கடாபியை பத்திரமாக வெளியேற்றி நிலையான அரசியல் சூழலை ஏற்படுத்துவதற்காக தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா அடுத்த வாரம் லிபியாவுக்குச் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திட்டம் இன்னும் ஆரம்ப நிலையில் இருப்பதாக "டாக் ரேடியா 702" செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் நடந்த ஆப்ரிக்க யூனியன் கூட்டத்தில் லிபிய விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் சில மணி நேரங்களிலேயே தோல்வியில் முடிவடைந்தன.
இதையடுத்து இப்போது தென் ஆப்ரிக்க அதிபர் அடுத்த முயற்சியில் இறங்கியுள்ளார். இந்நிலையில் நேற்றும் திரிபோலியில் கடாபியின் குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் பல இடங்களில் நேட்டோ விமானப் படைகள் குண்டுகளை வீசி கடுமையாகத் தாக்கின. இதில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாக லிபிய அரசு கூறியதை நேட்டோ மறுத்துள்ளது.
உலக போரின் போது நாய்களுக்கு பேசும் பயிற்சி அளித்த ஹிட்லர்.
ஜேர்மானியர்கள் நாய்களை மனிதனுக்கு சமமாக புத்தியுள்ள பிராணிகளாக கருதினார்கள். சர்வாதிகாரி ஹிட்லர் சிறந்த புத்தியுடைய நாய்களின் படை ஒன்றை வைத்திருந்தார்.இந்த பயங்கர நாய்கள் பேசும் நாய்களாக இருந்தன. இந்த நாய்கள் தங்கள் ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் பரிமாற்றிக் கொள்ள உதவும் என்று ஹிட்லர் நம்பினார்.
அவர் நாய்களுக்கு என்றே ஒரு சிறப்பு பள்ளி ஒன்றையும் வைத்திருந்தார். அப்பள்ளியில் நாய்களுக்கு பேச கற்றுக்கொடுக்கப்பட்டது. ஹிட்லரின் நாய்ப்படை அதிகாரிகள் கல்வியறிவு உள்ள நாய்களை பேச பயிற்சி அளித்ததோடு அவற்றின் பாதங்கள் மூலம் சிக்னல்களை கண்டறியவும் கற்றுக் கொடுத்தனர்.
ஒரு நாள் தனது பாதங்களை தட்டி எழுத்துக்களை பேசியது. அது மதசம்பந்தமாகவும், கவிதையையும் கற்றுக் கொண்டது என செய்திகள் கூறகின்றன. ஜேர்மானியர்கள் நாய்களை இவ்வாறு அதி புத்திசாலிகளாக பழக்கியதற்கு இரண்டாம் உலக போரில் ராணுவத்திற்கு அவை உதவியாக இருக்கும் என்பதே காரணமாகும்.மேலும் இத்தகைய நாய்கள் சிறைச்சாலைகளில் அதிகாரிகளின் பணிச்சுமையை குறைத்து நன்கு காவல்காத்தன என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF