Wednesday, May 11, 2011

இன்றைய செய்திகள்.

புலிகள் சரணடைவதை விரும்பாத கோத்தபாய - செஞ்சிலுவை சங்கதினரை அனுமதிக்காத பசில் : விக்கிலிக்ஸ் தகவல்.

இறுதிப்போரின்போது தமிழீழ விடுதலைப்புலிகள் சரணடைவதை இலங்கை அரசாங்கம் நிராகரித்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.அமெரிக்க தலையீட்டின் கீழ் இந்த சரணடைதலை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொள்ளவில்லை என்று விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கா அழுத்தம் கொடுத்தபோதும் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.அதேநேரம் போர் இடம்பெற்ற பகுதிகளுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரை அனுமதிக்க இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் பசில் ராஜபக்ச அனுமதி மறுத்ததாகவும் விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.நோர்வேக்கான இலங்கை தூதர், இலங்கையில் உள்ள அமெரிக்காவின் இலங்கைக்கான தூதருக்கு தகவல் ஒன்றை அனுப்பினார்.
அதில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி எனப்படும் செல்வராசா பத்மநாதன், தம்முடன் தொடர்புக் கொண்டு எவ்வித நிபந்தனையும் இன்றி சுயாதீனமான மூன்றாம் தரப்பின் ஊடாக தமிழீழ விடுதலைப்புலிகள் சரணடைய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளதாக நோர்வே தூதர் குறிப்பிட்டிருந்தார்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கைக்கான தலைமையாளர் போல் கெஸ்டேலா (Paul Castella) புலிகளின் தலைவர்கள் சரணடைவது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிடம் தகவல் அனுப்பினார். அதற்கு கோத்தபாயவும் இணக்கம் வெளியிட்டார்.சரணடைவதற்கு முன்னர் குறித்த புலித்தலைவர்களின் பெயர்களை தருமாறு அவர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் கேட்டிருந்தார்.
எனினும் குறித்த பெயர் பட்டியலை நோர்வே தரப்புக்கு புலிகளின் தரப்பு வழங்கவில்லை.இதேவேளை காயமடைந்த பொதுமக்களை காப்பாற்ற சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை போர் இடம்பெறும் பகுதிகளுக்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் அதற்கு அமைச்சர் பசில் ராஜபக்ச மூன்று நாட்களாக அனுமதி வழங்கவில்லை என்று அமெரிக்க தகவல் பரிமாற்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
புலிகளுடனான இறுதி போரின் போது மேற்குலக இராஜதந்திரிகளின் கருத்தை இலங்கை அரசாங்கம் தட்டிக்கழித்தது: விக்கிலீக்ஸ்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மேற்குலக இராஜதந்திரிகளின் கருத்துக்களை இலங்கை அரசாங்கம் தட்டிக்கழித்திருப்பதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப்புலிகளுடனான போரினை தற்காலிகமாகவேனும் இடைநிறுத்துவதற்கு மேற்குலக இராஜதந்திரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான 38 ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.அமெரிக்க வெளியுறவு அமைச்சிலிருந்து பிரஸ்தாப விடயங்கள் கசிந்ததாகவும் விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
அவற்றில் சில முக்கியமான விடயங்கள் கீழே தரப்படுகின்றன.
அரசாங்கப் படைகள் மூர்க்கத்தனமான முறையில் போரைத் தொடருமானால் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் பலியாக நேரிடும் எனவும், அது சர்வதேச கண்டனங்கள் மற்றும் சர்வதேச யுத்த விதிகள் மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கும் வழிவகுக்குமென அன்றைய அமெரிக்காவின் இலங்கைத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பின் போது 2009 மார்ச் மாதம் எச்சரித்துள்ளார்.
அதேவேளை போரில் விடுதலைப் புலிகளின் தோல்வி உறுதிசெய்யப்பட்டு விட்டதாகவும் அழிவு ஏற்படுவதற்கு முன்னர் சரணடையுமாறு விடுதலைப் புலிகளின் தலைமையுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த ஒரேயொரு மேற்குலக நாடான நோர்வே இராஜதந்திரிகள் விடுதலைப்புலிகளிடம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் விடுதலைப்புலிகள் அதற்குச் செவிசாய்க்கவில்லை.குருதி சிந்தப்படுவதைத் தடுப்பதற்கு நாங்கள் முழுமூச்சாகச் செயற்பட்டோம். எங்களால் முடிந்ததைச் செய்ததாக நாம் உணர்கின்றோம். எனினும் அவற்றையும் தாண்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை பார்க்கும்போது விரக்தியாக இருந்தது என்று இலங்கைக்கான அன்றைய நோர்வே தூதுவர் டோர் ஹெட்ரம் தெரிவித்துள்ளார்.
2009 மே மாதம் போர் வலயத்திற்குள் பொதுமக்கள் எவருமே இல்லை என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. அந்தக் கூற்று உண்மையல்ல என்பதையும் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்கள் உயிராபத்திற்குள் சிக்கியிருப்பதையும் எடுத்துரைக்கும் பல்வேறு அறிக்கைகள் அமெரிக்கக் தூதுவருக்குக் கிடைத்துள்ளன. அதனையடுத்து அழிவுகளைத் தடுக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிளேக் தொடர்பு கொண்டுள்ளார்.
காயப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களை வெளியில் எடுத்து வருவதற்கான அனுமதியை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வழங்குமாறு ரொபேர்ட் பிளேக் கோரிக்கை விடுத்த போதும் அவ்வாறு செய்ய முடியாது என பசில் ராஜபக்ஸ கடுந்தொனியில் பிளேக்கிடம் மறுப்புத் தெரிவித்துள்ளார்.அதே போன்று விடுதலைப்புலிகள் சரணடைவதற்கு தயாராக இருப்பதாகவும் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் அப்பகுதிக்கு ஹெலிகொப்டர்களை அனுப்புமாறு கோத்தாபய ராஜபக்ஸவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது அதற்கான நேரம் தாண்டிவிட்டதாக அவர் பதிலளித்துள்ளார்.
அழிவைத் தடுப்பது தொடர்பாக கொழும்பிலிருந்த இராஜதந்திரிகள் கொண்டிருந்த கருத்தினையே உலகெங்கும் பலரும் கொண்டிருந்தனர். இவர்களில் நோர்வே வெளியுறவு அமைச்சகத்தின் தலைவர் ஜான் எக்லண்டும் ஒருவராவார்.மேற்கண்டவாறாக இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் கடைசி மாதங்களின் நிகழ்வுகளை திகதி வாரியாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலை நோர்வேயின் aftenposten ஊடகம் விலாவரியாக தொகுத்து வெளியிட்டுள்ளது.
போர்க்குற்றச்சாட்டு விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் : ஐ.நா பாதுகாப்பு சபை வலியுறுத்து.
2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்டட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை நேற்று கூடிய போது அதில் போரின் போது பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடப்பட்டது.
ஐக்கிய நாடுகள் செயலாளரின் நிபுணர் குழு, இலங்கையில் இறுதிப்போரின் போது 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளதாக இதன்போது உரையாற்றிய ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உதவிசெயலாளர் வெலரி எமோஸ் ( Valerie Amos) குறிப்பிட்டார்.இந்தப்போரின் போது இரண்டு தரப்பினரும் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்றும் நிபுணர் குழு கண்டறிந்துள்ளது.எனவே இந்தக்குற்றச்சாட்டுக்கள் குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று வெலரி எமொஸ் கோரிக்கை விடுத்தார்.
அமர்வின்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சார்பில் பங்கேற்ற, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரத்தின் உதவி செயலாளர் இவான் சிமோனோவிக் (Ivan Simonovic) அரசியல், கலாசாரம், பொருளாதாரம் மற்றும் சமூக பிரச்சினைகளே வன்முறைகளுக்கான பிரதான காரணங்கள் என்று குறிப்பிட்டார்.வன்முறைகள் இடம்பெற்ற இலங்கை, சிரியா மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபை சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று சிமோனோவிக் தெரிவித்தார்.
இந்தநிலையில் போரில் ஈடுபட்டுள்ளோர் தமது இராணுவ நோக்கங்கள் தொடர்பில் தெளிவான சிந்தனையை கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.பான் கீ மூனின் நிபுணர் குழு, இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. எனவே நிபுணர் குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம், ஏற்றுக் கொள்ளவேண்டும்.அதன் அடிப்படையில் சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடு:த்தார்.
இதேவேளை அமர்வில் பங்கேற்ற ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தரப்பிரதிநிதி பாலித கோஹன, இலங்கையி;ல் 25 வருடங்களாக பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்ததாக குறிப்பிட்டார்.இலங்கை அரசாங்கம் போரின் போது, பொதுமக்கள் மற்றும் பயங்கரவாதிகள் என்ற பிரிவினரை அடையாளம் காண்பதில் தீவிரம் காட்டியதாக அவர் குறிப்பிட்டார்.இந்தநிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தோல்வியடையும் கட்டத்திலேயே போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாக பாலித கோஹன தெரிவித்தார்.
ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுங்கள்: ரவி கருணாநாயகவுக்கு மகாநாயக்கர்கள் ஆலோசனை.
தற்போதைய நிலையில் நாட்டை நல்ல முறையில் நிர்வகித்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுமாறு ஐ.தே.க.வின் புதிய தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்கவுக்கு மகாநாயக்கர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்த்தன, பிரேமதாச, விஜேதுங்க மற்றும் சந்திரிக்கா போன்றவர்களால் தோற்கடிக்க முடியாது போன பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி கண்டுள்ள நி்லையில் அவருடன் இணைந்து நாட்டின் எதிர்காலத்துக்காக செயற்படுவதே சிறந்த தெரிவாக இருக்க முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போதைக்கு ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தில் ஐ.தே.க.வையும் நாட்டையும் நிர்வகிப்பதற்கான அனுபவத்தையும், ஆற்றலையும் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர்கள் ரவி கருணாநாயக்கவுக்கு புத்திமதி கூறியுள்ளனர்.
ஆயினும் அவர்களைச் சந்தித்து விட்டு வெளியில் வந்த ரவி கருணாநாயக்க அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கில் செயற்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். அவ்வாறான நிலையில் ஐ.தே.க.விலிருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர்களை மீண்டும் இழுத்தெடுப்பதற்குப் பதில் புதியவர்களைக் கொண்டு கட்சியைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
சரத் பொன்சேகா அரசியல் பழிவாங்கலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்: ஐ.தே.க. பொதுச் செயலளார் திஸ்ஸ அத்தநாயக்க.
சரத் பொன்சேகா அரசியல் பழிவாங்கலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.நேற்றைய தினம் சரத் பொன்சேகாவைப் பார்வையிட ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தனவுடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு விஜயம் செய்திருந்த திஸ்ஸ அத்தநாயக்க, அதன் பின் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மையில் நாங்கள் சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின்  வருடாந்த அமர்வில் கலந்து கொண்டு இந்த அரசாங்கத்தால் சரத் பொன்சேகாவுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து முறையிட்டுள்ளோம்.
அவரது வழக்கு விசாரணைகளைப் பார்வையிடுவதற்காக சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் அவதானிப்பாளர்களை அனுப்புமாறும் நாம் அதன் போது கோரிக்கை விடுத்திருந்தோம். குறைந்த பட்சம் ஒரு அவதானிப்பாளரையாவது அவ்வாறு அனுப்புவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு என்றும் ஐ.தே. க.  பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவால்தான் அரசாங்கம் காப்பற்றப்பட்டதாம்!

சர்வதேச யுத்தக் குற்றம் தொடர்பிலான சாசனத்தில்  ரணில் விக்ரமசிங்க 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடாததினால் தான் இலங்கை காப்பாற்றப்பட்டுள்ளது என்று ஐக்கியத் தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

2002 ஆம் ஆண்டு ரோம் நகரில் சர்வதேச யுத்தக் குற்றம் தொடர்பிலான சாசனத்தில் அப்போதைய பிரதமரான ரணில் விக்ரமசிங்க கைச்சாத்திடாததினால் தான் இலங்கையில் இருந்து எவரையும் யுத்தக்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு சர்வதேசத்திற்கு எந்தவொரு அதிகாரமுமில்லை.

ரணில் விக்ரமசிங்க 2002 ஆம் கைச்சாத்திட்டிருந்தால் சர்வதேசம் இன்று எமது முப்படையினரையோ, பாதுகாப்புச் செயலாளரையோ, ஏன் ஜனாதிபதியையோ யுத்தக் குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தியிருக்கும்.
எனவே ரணில் விக்ரமசிங்கவிற்கு அரசாங்கம் நன்றிக்கடன் பட்டுள்ளது என்று ஜயலத் ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் அடுத்த வாரம் இந்திய உயர்மட்டக்குழு! ஜீ.எல்.பீரிஸ்.

ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்கு இந்திய உயர்மட்டக்குழுவொன்று இலங்கை வரவுள்ளதை ஜீ.எல்.பீரிஸ் உறுதி செய்துள்ளார். ஐ.நாவின் நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக கலந்துரையாட இந்தியாவின் உயர்மட்டக் குழுவினர் இலங்கைக்கு வரவுள்ளதாக வெளியான செய்திகளை இருநாட்டு வெளிவிவகார அமைச்சுக்களும் மறுத்திருந்தன.

ஆனால் அடுத்தவாரம் இந்தக்குழு இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உறுதிசெய்துள்ளார். நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களுடனான சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்தார்.இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் ஆகியோரை உள்ளடக்கிய குழுவே அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
சற்று நேரத்தில் உரோமாபுரி அழிந்து விடுமா?
இன்னும் சற்று நேரங்களுக்கு பின் உரோமாபுரி பாரிய பூமி அதிர்வில் அழிந்து விடுமா?
ஏனெனில் தலை சிறந்த வானியல் நிபுணர்களில் ஒருவரும், பூகம்பவியல் அறிஞரும், விஞ்ஞானியுமான Raffaele Bendandi உரோமாபுரி நகரம் 2011 ஆம் ஆண்டு மே 11 ஆம் திகதி பாரிய பூமி அதிர்வினால் முற்றாக அழிந்து விடும் என்று எதிர்வு கூறி உள்ளார். 
இவர் 1979 ஆம் ஆண்டு இறந்து விட்டார். 86 வருடங்கள் உயிர் வாழ்ந்து இருக்கின்றார். 

இவர் வாழ்நாளில் எதிர்வு கூறி இருந்த பூமி அதிர்வுகள் பல சொல்லி வைத்தபடி நடந்து இருக்கின்றன. கோள்கள், சூரியன், சந்திரன் ஆகியவற்றின் அசைவுகள் காரணமாகவே பூமி அதிர்வு ஏற்படுகின்றது என்பது இவரின் நம்பிக்கை.


அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்.
பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பிரமாண்ட மாளிகையில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை பிடிக்க அமெரிக்க படைகள் இரண்டு ஹெலிகாப்டர்களில் வந்தனர்.அதில் ஒரு ஹெலிகாப்டர் அபோதாபாத் மாளிகையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நொறுங்கி விழுந்தது.
பிளாக் ஹாக் ரக அந்த ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்களை அளிக்குமாறு அமெரிக்கா பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்திருந்தது.ஆனால் அமெரிக்காவின் கோரிக்கையை பாகிஸ்தான் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.இதற்கிடையில் சீனா உடைந்து போன அமெரிக்க ஹெலிகாப்டரை பார்வையிட அனுமதிக்குமாறு பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானும் சீனாவுக்கு அனுமதி கொடுக்கும் என தெரிகிறது.
அமெரிக்காவின் அடுத்த இலக்கு: முல்லா ஓமர்.
பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் அல்கொய்தா தலைவர் பின்லேடனை வீழ்த்திய அமெரிக்க படைகள் தற்போது ஆப்கன் தலிபான் தலைவர் முல்லா ஓமரைத் தேடி வேட்டையைத் தொடங்கியுள்ளன.ஓமரின் மறைவிடம் என சந்தேகிக்கப்படும் இடங்களில் அமெரிக்க மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கூட்டுப் படைகள் சோதனைகளை நடத்தி வருகின்றன. சமீபத்திய நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்ததால் அடுத்த கட்ட வேட்டையை அமெரிக்கப் படைகள் தொடங்கியுள்ளன.
ஆப்கன் எல்லை அருகே பாகிஸ்தானின் மேற்கு பாகிஸ்தானின் குவெட்டா நகரில் ஓமர் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் குறிப்பிடுகின்றன.பின்லேடன் கொல்லப்பட காரணமான அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கையால் அவமானம் அடைந்துள்ள பாகிஸ்தான் உளவுத்துறை ஓமரை முதலில் கண்டுபிடிக்க ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
அபோதாபாதில் பின்லேடனின் மறைவிடத்தில் இருந்து தகவல்களை சேகரித்த பின்னர் ஓமரின் மறைவிடத்தில் தாக்குதல் நடத்த அமெரிக்கப் படைகள் திட்டம் தீட்டி வருகின்றன.எனினும் அமெரிக்கப் படைகள் தன்னைக் கொன்று விடும் என்ற அச்சத்தில் கனரக ஆயுதங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஓமருக்கு பாதுகாப்பு அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல்கொய்தா இயக்கத்தின் எதிர்காலத் தலைவர் மாயம்.
பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் மே 2ம் திகதி அல்கொய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க சிறப்புப் படைகளால் கொல்லப்பட்டார்.இந்த தாக்குதலின் போது பின்லேடனின் மகனான 14 வயது சிறுவன் ஹம்சா தப்பி மாயமாகி உள்ளான். தீவிரவாத அமைப்பின் எதிர்காலத் தலைவராக கருதப்படும் இந்த சிறுவன் மாயமானதை தொடர்ந்து அமெரிக்காவும், பாகிஸ்தானும் கவலை அடைந்துள்ளன.
பின்லேடனின் 3 மனைவிகள் தற்போது பாகிஸ்தான் காவலில் உள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தங்களது 14 வயது மகனை காணவில்லை என அவர்கள் தெரிவித்தனர். பின்லேடனின் மிக இளவயது மகன் மாயமானது குறித்து கவலை எழுந்துள்ளது.அமெரிக்க வெள்ளை மாளிகை துவக்கத்தில் கூறுகையில்,"பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு 30 மைல் தொலைவில் உள்ள அபோதாபாத் நகரில் 20 வயது ஹம்சா கொல்லப்பட்டார்" என தெரிவித்தது. பின்னர் அந்த அதிகாரிகள் தங்களது கருத்தை மாற்றி கூறினர்.
அமெரிக்க தாக்குதலில் 22 வயது சகோதரர் காலித்து தான் கொல்லப்பட்டதாக அவர்கள் கூறினர். மரணம் அடைந்த பின்லேடன் 5 முறை திருமணம் செய்து 24 குழந்தைகளுக்கு தந்தை ஆனார். பின்லேடன் 5 ஆண்டுகளாக அபோதாபாத் நகரில் இருந்த போது யாருக்கும் தெரியவில்லை.மாயமாக சிறுவன் ஹம்சாவின் தாயாக காரியாசாபரும் பாகிஸ்தானின் பிடியில் உள்ளார். மாயமான சிறுவன் ஹம்சா அல்கொய்தா தீவிரவாதக் குழுவின் எதிர்கால தலைவர் என பிரிட்டன் பழமைவாத எம்.பி பாட்ரிக் கூறினார்.
மக்கள் போராட்டம்: அதிபரின் மனைவி தப்பியோட்டம்.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அவர்களை அடக்க ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ராணுவம் சுட்டதில் இதுவரை சுமார் 800 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர்.
ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியும் இன்னும் போராட்டம் ஓயவில்லை. தீவிரம் அடைந்து வருகிறது. எனவே அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு நெருக்கடி முற்றி உள்ளது.இந்த நிலையில் அவரது மனைவி அஸ்மா ஆசாத் தனது ஒரு குழந்தையுடன் நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அஸ்மா ஆசாத் இங்கிலாந்தை சேர்ந்தவர். அவரது உறவினர்கள் அங்கு உள்ளனர்.எனவே அவர் அங்கு பாதுகாப்பாக உள்ளார். அவரது குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளின் அரவணைப்பில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. உலக நாடுகளின் அதிபர் மனைவிகளில் அஸ்மா ஆசாத் மிகவும் கவர்ச்சியானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்சில் 7 தீவிரவாதிகள் கைது.
அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை தொடர்ந்து தலைநகர் பாரிசிலும் அதன் புறநகர் பகுதியிலும் பிரான்ஸ் அதிரடி சோதனை நடத்தியது.இந்த சோதனையில் 7 தீவிரவாதிகள் கைது ஆனார்கள். பின்லேடன் மரணத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 6 பேர் திங்கட்கிழமை பிடிபட்டனர். இதையடுத்த நாள் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரையும் பிடித்த பிரான்ஸ் பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இவர் சமீபத்தில் அல்ஜீரியாவில் இருந்து பிரான்ஸ் வந்தவர் ஆவார். தீவிரவாத தாக்குதல் பிரான்சில் நடைபெறும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை என உள்துறை அமைச்சர் கிளாடே கியூயன்ட் திங்கட்கிழமை தெரிவித்தார்.
இருப்பினும் ஜிகாதி எச்சரிக்கையைத் தொடர்ந்து பிரான்சில் பாதுகாப்பு அதிகரிக்கப்படவில்லை. பாரிசில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட இந்திய நபர் பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளவர் ஆவார். அவர் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரான்சில் தேர்வு செய்யப்படும் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் அனுப்பப்படுவதை உளவுத்துறை கண்டறிந்தது. இதனைத் தொடர்ந்து தலைநகர் பிரான்ஸ் பொலிசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் 4 நாள் வரை விசாரணை நடைபெற உள்ளது. வழக்கமான பாதுகாப்பு படையை விட கூடுதல் பாதுகாப்பு இருப்பதை பாரிஸ் மக்கள் உணர்ந்தனர்.
விக்கிலீக்ஸ் அசாங்கேவுக்கு சிட்னி அமைதி விருது.
அமெரிக்க தூதரகத்தின் தகவல்களையும், அமெரிக்க ராணுவத் தலைமையகம் பென்டகனின் தகவல்களையும் வெளியிட்டு உலக நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாங்கே.இவர் அவுஸ்திரேலியாவின் முன்னாள் கணணி நிபுணர். அவரது சேவையை பாராட்டி சிட்னி அமைதி விருதுக்கான தங்கப்பதக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சிட்னி அமைதி பவுண்டேஷன் கடந்த 14 ஆண்டுகளில் இதற்கு முன்னர் மூன்று முறை மட்டுமே இந்த விருதினை அளித்துள்ளது. தென் ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா, திபெத் தலைவர் தலாய் லாமா, ஜப்பானிய புத்த தலைவர் டாய்சகு இகேடா ஆகியோரைத் தொடர்ந்து இந்த விருது அசாங்கேவிற்கு அளிக்கப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் உள் அரசு நிர்வாகங்களில் வெளிப்படையான தன்மை மற்றும் நம்பகத்தன்மை மேற்கொள்ளப்பட வேண்டும் என அசாங்கே பல தகவல்களை வெளியிட்டுள்ளார். அவரது மன உறுதியை கௌரவிக்கும் வகையில் இந்த அமைதி விருதினை சிட்னி பவுண்டேஷன் அளித்துள்ளது.
உலக அரசுகளின் கடந்த கால ரகசிய நடைமுறைகளை உடைத்து எறியும் வகையில் அசாங்கே துணிச்சலாக தகவல்களை தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தகவல்கள் தாராளமாக வெளி வருவதற்கு புதிய பத்திரிகை இயலையும் அசாங்கே இணையதள ஊடகம் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார் என சிட்னி பவுண்டஷன் பாராட்டி உள்ளது.
உலக நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் உள்ளன. இந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்கள் தாங்கள் இருக்கும் நாடுகளின் தலைவர்கள் கொள்கை குறித்தும், அவர்களது செயல்பாடு குறித்தும் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு தொடர்ந்து பல ரகசிய தகவல்களை அனுப்பி வந்தனர்.இந்த தகவல்களை பெற்ற அமெரிக்கா உரிய நடவடிக்கைகளை குறிப்பிட்ட நாடுகளின் மீது எடுத்து வந்தது. பல ஆயிரம் அமெரிக்க கேபிள் தகவல்களை அசாங்கே தனது விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிட்டு அமெரிக்காவுக்கு அதிர்ச்சியையும் எரிச்சலையும் ஏற்படுத்தினார்.
முபாரக்கின் காவல் மேலும் நீட்டிப்பு.
எகிப்தின் முன்னாள் அதிபர் முபாரக்கின் விசாரணைக் காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து அரசுத் தரப்பு உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையில் முபாரக்கின் அமைச்சரவையில் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தவருக்கு ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் தற்போது விசாரணைக் காவலில் உள்ளார். அவரும், அவரது இரு மகன்களும் ஏப்ரல் 13ம் திகதி கைது செய்யப்பட்டனர்.
முபாரக் தற்போது சினாய் தீபகற்பத்தின் ஷரம் எல் ஷேக் நகரில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது விசாரணைக் காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து நேற்று அரசுத் தரப்பு உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையில் முபாரக்கின் அமைச்சரவையில் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த ஜாகிர் கரானா என்பவர் பல்வேறு ஊழல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
சுற்றுலாத் துறைக்கான உரிமங்களை சட்டவிரோதமாக பலருக்கு அவர் அளித்துள்ளது நிரூபிக்கப்பட்ட நிலையில், நேற்று அவருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.முபாரக்கின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த ஹபீப் அல் அட்லி ஊழல் அடிப்படையில் 12 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானுக்கான நிதி உதவியை ரத்து செய்ய கனடா முடிவு.
ஆப்கானிஸ்தானுக்கான நிதி உதவியை ரத்து செய்யும் முடிவில் கனடா உள்ளது.அங்கு முகாமிட்டு இருக்கும் தமது துருப்புகள் இந்த ஆண்டு திரும்ப முடிவு செய்துள்ள நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு நிதி உதவியை ரத்து செய்ய கனடா முடிவு செய்துள்ளது.
2011ம் ஆண்டிற்கு பின்னர் ஆப்கானிஸ்தானில் கனடா நிலைப்பாடு குறித்த விவரங்கள் அமெரிக்க தூதரகம் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு பெப்பிரவரி 18ம் திகதியன்று இந்த தகவலை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு உள்ளது.
கனேடிய துருப்புகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகினாலும் பயிற்சி செயல்பாட்டுக்காக ஒரு சில கனேடிய வீரர்கள் அங்கு இருப்பார்கள். ஆப்கானிஸ்தானின் நிதியத்திற்கு மட்டும் ஒரு சிறிய நிதியை அளிக்க கனடா முடிவு செய்துள்ளது என்றும் அமெரிக்கத் தூதரக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தலிபான் தீவிரவாதிகளால் உருக்குலைந்த ஆப்கானிஸ்தான் கட்டமைப்பில் உலக நாடுகள் உதவி வருகின்றன. இருப்பினும் ஆப்கானிஸ்தானுக்கு மிக அதிக அளவில் அன்னிய நிதி அளிக்கும் நாடாக கனடா திகழ்கிறது.
கனடாவின் வெளியேற்றுத் துறை அமைச்சர் லாரன்ஸ் கேன்னின் கொள்கை ஆலோசகரான ரீகன் வாட்ஸ் கூறுகையில்,"ஆப்கானிஸ்தானுக்கு சிறிய அளவிலேயே நிதி அளிக்க கனடா முடிவு செய்துள்ளது. 2011ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு 190 கோடி டொலர் நிதி உதவி அளிக்கும் திட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆப்கானிஸ்தானுக்கு நிதி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என கூறப்படுகிறது.
கனடாவின் இந்த நிதி குறைப்பு திட்டம் சில காலத்திற்கு தெளிவானதாக இருக்கும். இருப்பினும் உறுதியான முடிவாக இருக்காது என அமெரிக்க அதிகாரிகள் கருதுகிறார்கள். ஆப்கானிஸ்தான் நிலையை விட ஹைதி நிலநடுக்கத்திற்கு கனடா முக்கியத்துவம் தந்துள்ள விவரமும் இணையதள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாத அச்சுறுத்தல்: ஜேர்மன் தூதரக அதிகாரி கைது.
பாகிஸ்தானில் அந்நாட்டு நாடாளுமன்றம் மற்றும் அதிபரின் மாளிகைக்கு மேலாக ஜேர்மன் தூதரகப் பெண் அதிகாரி ஒருவர் பாராகிளைடிங் விமானத்தில் பறந்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.பாகிஸ்தானின் நாடாளுமன்றம் அதிபர் மாளிகை உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் உயர்நிலைப் பாதுகாப்புப் பிரிவுக்குட்பட்ட "சிவப்பு வளையத்துக்குள்" வருபவை.
இப்பகுதியின் மீது விமானங்கள் பறப்பது தடை செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமையன்று இந்தப் பகுதியின் மீது பாகிஸ்தானுக்கான ஜேர்மன் தூதரகத்தைச் சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர் ஷாஷா உல்ப் பாராகிளைடிங்கில் பறந்துள்ளார்.அவருடன் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த விமானப் பயிற்சியாளர்கள் ராவ் அக்தர் ஹுசைன் மற்றும் ஹசீப் ஹுசைன் ஆகியோர் பறந்துள்ளனர். தடை செய்யப்பட்ட பகுதியின் மீது பறப்பதைக் கண்ட விமானப் படையினர் இவர்களைக் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை மேற்கொண்டபின் தலைமைச் செயலக காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு தான் பறக்க முயற்சிக்கையில் தோல்வியடைந்து கீழே விழுந்து விட்டதாகவும், அதனால் காலில் அடிபட்டுள்ளதாகவும் பொலிசாரிடம் உல்ப் தெரிவித்துள்ளார். மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்த பொலிசார் தூதரக அதிகாரி போன்ற உயர் பதவியில் உள்ளதால் உல்பை விடுதலை செய்தனர்.
மற்ற இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு இவர்களுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு அடியாலா சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்த விடயம் குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீவிரவாதிகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் விமானத்தைக் கொண்டு இஸ்லாமாபாதின் மீது தாக்குதல் நடத்தலாம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் சமீபத்தில் எச்சரிக்கை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் சட்டத்திற்கு புரம்பாக வேலை செய்தவர்கள் கைது.
பிரிட்டனில் விசா காலம் முடிந்த பிறகும் ஆடை நிறுவனத்தில் சட்டத்திற்கு புறம்பாக பணியாற்றி வந்த நான்கு இந்தியர்கள் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.இந்தியாவை சேர்ந்த நான்கு பேர் சட்டத்திற்கு புறம்பாக பிரிட்டனில் உள்ள ஒரு ஆடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களில் 42 மற்றும் 48 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்கள் விசா காலம் முடிந்தவர்கள். மற்ற இருவரில் 46 வயது மதிக்கத்தக்க ஆண் அடைக்கலம் கேட்டு மறுக்கப்பட்டவர். 33 வயது பெண் சட்டத்திற்கு புறம்பாக பிரிட்டனுக்குள் நுழைந்தவர். இவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட உள்ள இவர்கள் பிரிட்டனில் தங்கியிருக்கும் வரை அந்நாட்டின் குடியுரிமை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். இவர்களுடன் இலங்கையை சேர்ந்த ஒரு ஆணும், பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
பிரிட்டன் பாதுகாப்பு படையின் கிழக்கு மிட்லேன்ட்ஸ் உதவி இயக்குனர் பில் டயர் கூறுகையில்,"அனுமதி இல்லாமல் இதுபோல் வெளிநாடுகளில் பணியாற்றுவது சட்டத்திற்கு விரோதமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நேர்மையான தொழிலதிபர்கள் இதுபோன்று சட்டத்திற்கு புறம்பாக செயல்களில் ஈடுபட்டால் தண்டிக்கப்படுவர்" என்றார்.
அத்து மீறிய அமெரிக்கா: ஒசாமா மகன் கடும் கண்டனம்.
யாருக்கும் தெரியாமல் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தான் நாட்டுக்குள் படைகளுடன் சென்று சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா.கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி நியூயார்க் இரட்டைக் கோபுரம் அல்கொய்தா பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது எவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியதோ அதை விட ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது அமெரிக்காவின் இந்த நடவடிக்கை.
இருப்பினும் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதல் அத்து மீறல் என மறைந்த ஒசாமாவின் மகன் ஒமர் பின்லேடன் அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் ஓமர் கூறியதாவது: அல்கொய்தா தலைவர் ஒசாமாவை அமெரிக்கா கைது செய்து நீதியின் முன் நிறுத்தியிருக்க வேண்டும் அமெரிக்கா. அப்படி செய்யாமல் சுட்டுக் கொன்றதுடன் அவரது உடலை கடலில் வீசியிருக்கிறது. இது கண்டனத்துக்கு உரியது.
கடாபி மற்றும் அவரது மகனை கைது செய்ய நடவடிக்கை: சர்வதேச கிரினிமல் நீதிமன்றம்.
லிபியத் தலைநகர் திரிபோலியில் நேட்டோ விமானப் படைகள் நேற்று குண்டு மழை பொழிந்தன. இதில் கடாபி குடியிருப்பு உள்ள வளாகம் பெரிதும் பாதிக்கப்பட்டது.லிபியாவில் கடாபிக்கு எதிரான நேட்டோ தாக்குதல் சமீப நாட்களில் தீவிரம் அடைந்துள்ளது. மிஸ்ரட்டா, ஜின்டான் ஆகிய நகரங்களில் கடாபித் தரப்புக்கும் எதிர்த் தரப்புக்கும் இடையிலான மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதற்கிடையில் திரிபோலியில் கடாபித் தரப்பு தகவல் தொடர்பு மையங்கள் என்று கருதப்பட்ட பல்வேறு இடங்கள் மீது நேட்டோ விமானப் படைகள் நேற்று குண்டு வீசித் தாக்கின. கடாபி குடியிருக்கும் வளாகத்தினுள்ளும் சில குண்டுகள் வந்து விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேட்டோ விமானப் படைகள் தாக்கிய இடங்களுக்கு செய்தியாளர்களை நேரில் அழைத்துச் சென்று குழந்தைகளுக்கான ஹை கமிஷன் கட்டடம் ஒன்று நேட்டோ தாக்குதலில் தரைமட்டமாகியுள்ளதை லிபிய அதிகாரிகள் காண்பித்தனர்.திரிபோலியில் நேட்டோ தாக்குதலில் நான்கு குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இருவர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் பேட்டியளித்த நேட்டோ அமைப்பின் தலைவர் பாக் ராஸ்முசன் கூறுகையில்,"கடாபி பதவியை விட்டு விலகும் காலம் கடந்து விட்டது. அவருக்கு அல்லது அவரது ஆட்சிக்கு இனி எதிர்காலமே இல்லை என்பதை விரைவில் அல்லது சற்று தாமதித்து அவர் உணர்வார்" என்றார்.அதன் பின்பு தான் நேட்டோ தன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் கடாபி மற்றும் அவரது மகன் சயீப் அல் இஸ்லாம் இருவரையும் சர்வதேச போர்க் குற்ற விதிகளின் படி கைது செய்யும் நடவடிக்கையில் சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் இறங்கியுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF