Saturday, May 7, 2011

இன்றைய செய்திகள்.

ஐ.நா. அறிக்கையை மாலைதீவு நிராகரிப்பு.
ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை கடுமையாக எதிர்ப்பதாக மாலைதீவு தெரிவித்துள்ளது.கொழும்புக்கு விஜயம் செய்துள்ள மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அகமட் நஸீம் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராக இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை போர் முடிவுற்ற பின் நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அது பெற்ற வெற்றியை நாம் பாராட்ட வேண்டும் என மாலைதீவின் அமைச்சர் அகமட் நஸீம் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாடுகளினதும் வெளிநாட்டுக் கொள்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே தான் கொழும்புக்கு வந்திருப்பதாக தெரிவித்த அவர், தனது விஜயத்திற்கும் தருஸ்மன் அறிக்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கையையிட்டு தாம் கவலையடைவதாகக் குறிப்பிட்ட அவர், இது உண்மையில் ஆக்கபூர்வமானதல்ல எனவும் தெரிவித்தார். மாலைதீவில் அரசியல் நிலைமைகள் இன்னும் கொந்தளிப்பாகவே உள்ளன.அந் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் நாட்டில் இடம்பெற்ற கலவரங்கள் முன்னாள் மாலைதீவு ஜனாதிபதி கயூமுக்கு ஆதரவான எதிர் வரிசையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களால் தோற்றுவிக்கப்பட்டது. 
1978ஆம் ஆண்டுக்கும் 2008ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மாலைதீவின் ஜனாதிபதியாக இருந்த கயூமின் ஆட்சிக் காலத்திலேயே பாரிய ஊழல்கள், சித்திரவதைகள் மற்றும் அரசியல் கொலைகள் என்பன நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது எனவும் மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அகமட் நஸீம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஆதிவாசிகளின் தலைவருக்கும் ஊடகப் பேச்சாளர் நியமனம்.
இலங்கையின் ஆதிவாசிகளான வேடுவர்களின் தலைவர் ஊருவரிகே வன்னியெலத்தோவிற்கும் ஊடகப் பேச்சாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தம்பான பிராந்திய ஒலிபரப்பின் அறிவிப்பாளரான சம்பத் சதுரங்க தென்னகோன் என்பவரே வேடுவர் தலைவர் ஊருவரிகே வன்னியெலத்தோவின் ஊடகப் பேச்சாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆதிவாசிகளின் ஊடகப் பேச்சாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள சம்பத் சதுரங்க தென்னகோன்தம்பானை பிரதேசத்தைச் சோ்ந்தவர் என்பதுடன், ஆதிவாசிக் குடும்பமொன்றைச் சோ்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதற்கான நியமனம் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவுக்கும் வேடுவர் தலைவரினால் அறிவிக்கப்பட்ட பின் கடந்த 01ம் திகதி  வழங்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் வேடுவர் இனம் தொடர்பில் கரிசனை காட்டிய போதும் அரசாங்க அதிகாரிகள் அசமந்தமாகச் செயல்படுவதால் வேடுவர் இனத்துக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் கிட்டாது போகின்றன.
அதன் காரணமாக இனிவரும் காலங்களில் எங்கள் இனத்தின் அனைத்துத் தகவல்களையும் எமது ஊடகப் பேச்சாளர் மூலமாகவே வெளியிடத் தீர்மானித்துள்ளோம். ஏனைய அனைத்து அமைப்புகளுக்கும் ஊடகப் பேச்சாளர்கள் இருக்கும் நிலையில் எங்கள் இனத்துக்கும் தனியானதொரு ஊடகப் பேச்சாளர் இருப்பதில்  தவறில்லை என்பதாக வேடுவர் இனத் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு கலைக்கப்பட்டது.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த ஐக்கிய நாடுகள் நிபுணர்குழுவை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் நேற்றுக் கலைத்துள்ளார்.விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு தருஸ்மான் தலைமையிலான மூவர் குழுவை கடந்த வருடம் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்திருந்தார்.
அக்குழுவின் அறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் முதலில் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. அதன் பின் ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டது.
அவ்வாறான நிலையில் நிபுணர் குழுவின் செயற்பாடுகள் முற்றுப்பெற்றுள்ளதால் நேற்று ஐ.நா. செயலாளர் பான் கீ  மூன் அதனைக் கலைத்துள்ளார். தன் பதவிக்காலம் முடிவதற்கிடையில் அவர் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.அத்துடன் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்குரிய தகவல்களை அளித்தவர்கள் தொடர்பான விபரங்களை எதிர்வரும் இருபது வருடங்களுக்குள் வெளியிடக் கூடாது என்றும் நிபுணர் குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி நீதித்துறைக்குள் வரம்புமீறி ஆதிக்கம் செலுத்த பார்க்கின்றார்: முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீதித்துறைக்குள் வரம்பு மீறி ஆதிக்கம் செலுத்த முனைவதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குற்றம் சாட்டுகின்றார்.அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட உத்தேசிக்கப்பட்டிருக்கும் பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் மூலமாகவே ஜனாதிபதி நீதித்துறைக்குள் வரம்பு மீறி ஆதிக்கம் செலுத்துவதற்கான வழியேற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டுகின்றார்.
பிரஸ்தாப அரசியலமைப்புத் திருத்தம் மூலமாக பிரதம நீதியரசரின் பதவிக்காலம் ஐந்து வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் அவர் தானாகவே ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.அதே போன்று நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரை ஜனாதிபதி நியமிப்பதற்கு இடமளிக்கப்படுவதன் மூலம் நாட்டின் ஏனைய நீதிமன்றங்கள் அனைத்தும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விடுகின்றது.
இலங்கையின் நீதித்துறையின் 200 ஆண்டு கால வரலாற்றில் இதற்கு முன் ஒருபோதும் இப்படி நடந்தது கிடையாது.இலங்கையின் அரசியலமைப்புக்கும் இது மாற்றமானது. அது மாத்திரமன்றி உலகில் வேறெந்த நாட்டிலும் இதுபோன்ற நடைமுறை காணப்படுவதில்லை என்றும் சரத் என் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒசாமா பின்லேடனுக்காக சென்னையில் நடந்த விசேட தொழுகையால் பரபரப்பு!

அமெரிக்காவுக்கு தண்ணி காட்டி பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கமாண்டே படையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுட்டுக்கொன்றனர். அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனுக்காக சென்னை அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் இஸ்லாமிய மையத்தில் விஷேச தொழுகை (ஜனாஷா) நேற்று பகல் 1.30 மணிக்கு நடைபெற்றது. 

இதில் இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த தொழுகைக்கு பிறகு மக்கா மஸ்ஜித் இஸ்லாமிய மையத்தின் நிர்வாகிகள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். 

அப்போது அவர்கள் கூறியதாவது:- 

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்ப்பு சம்பவத்திற்கு பின்லேடன் தான் காரணம் என்று அமெரிக்கா கூறி வந்தது. ஆனால் அதற்கான ஆதாரத்தை அமெரிக்கா வெளியிடவில்லை. இப்போது ஒசாமாவை கொன்று கடலில் வீசியிருக்கிறார்கள். இஸ்லாமிய முறைப்படி அவரை அடக்கம் செய்யவில்லை. அவர்கள் ஒசாமா பின்லேடனை நீதிக்கு முன்பு நிறுத்தியிருக்க வேண்டும். அதை விட்டு அவரை சுட்டுக்கொன்று இருப்பது எந்த விதத்தில் நியாயம்? அவர் அநாதை இல்லை. 

முஸ்லிம் சமுதாயத்தின் பங்கு. அவருக்காக இன்று `ஜனாஷா' தொழுகையை நடத்தியிருக்கிறோம். நாங்கள் தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் ஆதரிக்கவில்லை. ஒசாமா பின்லேடன் மீதான குற்றத்தை அமெரிக்கா நிரூபிக்கவில்லை. உண்மையிலேயே அமெரிக்கா தான் பயங்கரவாத நாடு. இந்தியாவால் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த, மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரபாகரனுக்காக தமிழ்நாட்டில் இரங்கல் தெரிவித்து கூட்டம் நடத்தினார்கள். 

தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்போது, நாங்கள் தொழுகை நடத்தினால் என்ன தவறு? நாங்கள் எங்கள் பள்ளிவாசலுக்குள்ளே தான் செயல்படுகிறோம். வெளியில் ஆர்ப்பாட்டம் எதுவும் நடத்தப்போவதில்லை. மறைந்த ஒசாமா பின்லேடனுக்காக தமிழகம் முழுவதும் மசூதிகளிலும், பள்ளிவாசல்களிலும் தொழுகை நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். தொழுகைக்கு முன்பாக ஒசாமா பின்லேடனுக்கு ஆதரவாக பேசிய இஸ்லாமியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒசாமா பின்லேடன் பெயரை சூட்ட இருப்பதாக தெரிவித்தனர். பள்ளிவாசலை சுற்றி சில இடங்களில் ஒசாமா பின்லேடனுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒசாமாவின் கடைசிப் பேச்சு: விரைவில் வெளியிட அல்கொய்தா முடிவு.
பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனின் குரல் பதிவு கொண்ட ஓடியோ விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஒசாமா கொல்லப்படுவதற்கு ஒருவாரம் முன்னதாக அந்த ஓடியோ பதிவு செய்யப்பட்டதாகவும், விரைவில் அது வெளியிடப்படும் என்றும் அல்கொய்தா தெரிவித்துள்ளது.
ஒசாமா கொல்லப்பட்டதற்காக அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை பழிவாங்குவோம் என்று அவரது ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர்.இந்நிலையில் அவரது கடைசிப் பேச்சு அடங்கிய ஓடியோவை வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதுகுல வளையம்: புது விதமான ஸ்டைல்.
இளைஞர்கள் மத்தியில் லண்டனில் புதுவித பேஷன் பரவி வருகிறது. முதுகில் ஓட்டை போட்டு தொங்கவிடப்படும் வளையத்தில் ஷூ லேஸ் கட்டுவது போல ரிப்பன் கட்டிக் கொள்ளும் பழக்கத்திற்கு டொக்டர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உடல் முழுக்க அருவருப்பான, ஆக்ரோஷமான படங்களை பச்சை குத்திக் கொள்வது, ஆங்காங்கே குட்டி குட்டி வளையங்களை குத்திக் கொள்வது, நாக்கில் "ரிங்" போட்டுக் கொள்வது என நவநாகரிக உலகை பதம் பார்க்கும் இளைஞர்களின் கலாச்சார எல்லை விரிந்து கொண்டே போகிறது. பேஷன் உலகில் அதிநவீன கலாசார சீரழிவு கண்டுபிடிப்புகள் பெருகி வருகின்றன.
லண்டன் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கும் அத்தகைய அபரிமிதமான லேட்டஸ்ட் கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் போதிய இடைவெளி விட்டு முதுகின் இரண்டு பக்கத்திலும் வளையங்களை குத்திக் கொள்வது.
பின்னர் அந்த வளையங்களில் ஷூ லேஸ் கட்டுவது போல கலர் ரிப்பன்களை குறுக்கே கட்டிக் கொள்வது. இதற்கான பீஸ் - 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே. ஒரு மணி நேரத்துக்கு முதுகில் வலி பின்னியெடுக்கும். அதற்கு பிறகு பேஷன் தூள் கிளப்பும். காதில், மூக்கில் குத்துவது போல் அல்லாமல் இது தற்காலிகமானது தான்.
வளையங்களை எடுத்து விட்டால் ஓரிரு வாரங்களில் அந்த இடத்தில் தோல் மூடி விடுகிறது. சிறியளவில் வடு மட்டும் இருக்கிறது என்கிறார்கள் ஸ்டைல் விரும்பிகள்.இந்த பேஷனை சிரமேற்கொண்டு தொழிலாக செய்து வரும் லண்டனை சேர்ந்த லாரா ஹன்ட் கூறியதாவது: தொண்டை, இடுப்பு என விரும்பும் இடங்களில் இந்த ரிப்பன் அலங்காரத்தை செய்து கொள்ளலாம். ஊசியால் குத்தி வளையத்தை பொருத்தும் போது வலி இருக்கும். இருந்தாலும் இந்த பேஷனை பலர் விரும்பி செய்து கொள்கிறார்கள். மேற்பகுதி தோலிலேயே குத்துவதால் உடல்ரீதியாக பெரிய பாதிப்பு இருக்காது.
வழக்கம் போல் இந்த ஆபத்தான தோல் பேஷனை எச்சரித்துள்ள டொக்டர்கள்,"ஊசியால் குத்தி உடம்பை புண்ணாக்குவது என்பது எளிதான விடயம் அல்ல. தோலில் பாதிப்பு ஏற்பட்டு கடுமையான பின்விளைவுகள் ஏற்படும்" என்று கூறியுள்ளனர்.
பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர் அமெரிக்காவிற்கு திடீர் பயணம்.
பாகிஸ்தான் உளவுத்துறையின் தலைவர் ஷுஜா பாஷா திடீரென அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.மே 2ம் திகதி இஸ்லாமாபாத் அருகே ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அவர் பாகிஸ்தானில் தங்கியிருந்தது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளிடம் விளக்கம் அளிப்பதற்காக ஷுஜா பாஷா சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்கா புறப்படும் முன்னர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஐ.எஸ்.ஐ அமைப்பின் முகாம் அதிகாரியை அவர் சந்தித்துப் பேசினார் என்று கூறப்படுகிறது.
ராணுவக் குடியிருப்புக்கு அருகிலேயே ஒசாமா பதுங்கியிருந்தது குறித்து பாகிஸ்தானுக்கு தெரியும் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று அமெரிக்கா நேற்று கூறியிருந்தது. எனினும் தங்கள் தரப்பில் விளக்கம் அளிப்பதற்காக ஐ.எஸ்.ஐ தலைவர் அமெரிக்கா சென்றிருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.2005ம் ஆண்டு முதல் ஒசாமா தங்கியிருந்த கட்டடம் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு சொந்தமானது என்றும், ஐ.எஸ்.ஐ ஆதரவுடன் தான் அவர் அங்கு வசித்து வந்தார் என்றும் தகவல் வெளியாகியாகி உள்ளது.
இதனால் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு மற்றும் பாகிஸ்தான் மக்களின் கடும் கோபத்தில் இருந்து தப்பிக்க உளவுத்துறை மீது அரசு பழி சுமத்தியுள்ளது. இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர உளவுத்துறை தலைவர் பதவியில் இருந்து விலக ஷீஜா பாஷா முடிவு செய்துள்ளார். அதற்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.இந்த தகவலை மூத்த உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அவரது ராஜினாமா எப்போது என தெரியவில்லை. உளவுத் துறை தலைவர் ஷீஜா பாஷா ராணுவ தலைமை தளபதி கயானியின் நண்பர் ஆவார்.
அவரை கடந்த 2008ம் ஆண்டு இப்பதவியில் கயானி அமர்த்தினார். இதற்கிடையே ராணுவ அதிகாரிகள் கூட்டம் தலைமை தளபதி கயானி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது உளவுத்துறையை மேலும் பலப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
சுட்டுக் கொன்றதும் பின்லேடனை படி வழியாக இழுத்துச் சென்றனர்: ஒசாமாவின் மனைவி தகவல்.
பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் பங்களாவில் வாழ்க்கை நடத்திய பின்லேடனை அமெரிக்க வீரர்கள் கூட்டுக் கொன்றனர்.அந்த பங்களாவில் பின்லேடன் மற்றும் குழந்தைகளுடன் 5 ஆண்டுகளாக ரகசியமாக வாழ்ந்து வந்தார். தாக்குதல் சம்பவத்தில் தப்பிய பின்லேடனின் மனைவிகளில் ஒருவர் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளிடம் நடந்த சம்பவம் குறித்து விவரித்தார்.
அவர் கூறியதாவது: பின்லேடன் அபோதாபாத் பங்களாவில் மாடியில் தங்கி இருந்தார். அதில் 3 அறைகள் உள்ளன. அமெரிக்க வீரர்கள் திடீர் என்று மாடியில் இறங்கி தாக்குதல் நடத்தினார்கள். இதில் பின்லேடன் உயிர் இழந்ததும் அவரது உடலை மாடிப்படிகள் வழியாக தரதரவென்று இழுத்துக் கொண்டு கீழே வந்ததாக தெரிவித்துள்ளார்.
இதே போல் பின்லேடனின் மகளும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளிடம் தனது தந்தையை அமெரிக்க வீரர்கள் கொன்று மாடிப்படிகள் வழியே இழுத்து வரப்பட்டதை நேரில் பார்த்ததாக தெரிவித்துள்ளார். இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
பின்லேடன் அமெரிக்காவை பயமுறுத்தி வைத்திருந்தாலும் அவரது மறைவுக்கு பிறகு அவரது குழந்தைகள் எந்த நாட்டிலும் குடியுரிமை இன்றி இருக்கிறார்கள். 1994ம் ஆண்டு சவுதி அரேபியா, பின்லேடனின் குடியுரிமையை ரத்து செய்து விட்டது.அதன் காரணமாக அவரின் பிள்ளைகள் குறிப்பிட்ட நாட்டின் குடியுரிமை இல்லாது இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அதிகாரி கூறினார். பின்லேடனின் குழந்தைகள் ராவல்பிண்டியில் உள்ள ஒரு வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 4 வயது முதல் 12 வயது வரை இருக்கும்.
இந்தோனேஷியாவில் பயங்கர விமான விபத்து: 15 பேர் பலி.
இந்தோனேசியாவில் கிழக்கு மாகாணத்தில் மேற்கு பபுவா பகுதியில் சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்தது.மேற்கு பாபுவா மாகாணத்தில் உள்ள சோரங் என்னும் இடத்தில் இருந்து கைமனா நகருக்கு புறப்பட்டபோது இந்த விபத்து நடைபெற்றது.
அந்த விமானத்தில் 21 பயணிகளும், பைலட் உட்பட 4 விமான ஊழியர்களும் இருந்துள்ளனர். இதுவரை 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்துறை செய்தித் தொடர்பாளர் பாம்பங் எர்வன் தெரிவித்தார்.மேலும் 10 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. விபத்து நடந்த இடத்தில் பொலிசார் மீட்புப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய விமானம் இந்தோனேசிய அரசுக்கு சொந்தமானதாகும்.
பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல் நடத்திய அமெரிக்கா.
பாகிஸ்தானின் வடக்கு வெஜிரிஸ்தானில் அமெரிக்க படைகள் வான் தாக்குதல் நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து பாகிஸ்தானின் தொலைக்காட்சி சானல் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான வடக்கு வெஜிரிஸ்தானில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கூறி அமெரிக்கப்படைகள் வான் தாக்குதல் நடத்தின. இதில் 13 அப்பாவிகள் பலியாகியுள்ளனர்.
கடந்த 30ம் திகதியன்று தான் நள்ளிரவில் பின்‌லேடன் பதுங்கியிருந்த அபோதாபாத் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி சுட்டுக்கொன்றனர். அதன் பிறகு ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக அமெரிக்க வான் தாக்குதல் நடத்தியுள்ளது.2011ம் ஆண்டு வரை அமெரிக்கப்படைகள் பாகிஸ்தானில் அத்துமீறி 26 முறை வான் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதில் பயங்கரவாதிகள் என நினைத்து வடக்கு வெஜரிஸ்தானில் 22 முறையும், தெற்கு வெஜரிஸ்தானில் 4 மு‌றையும் வான் தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்த தாக்கதல்களால் இதுவரை மொத்தம் 180 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பெரும்பாலும் அப்பாவி கிராம மக்களே பலியாகியுள்ளனர். இவ்வாறு அந்த தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நான்கு வருடங்களுக்கு முன் காணாமற்போன சிறுமியை தேடி அலையும் பெற்றோர்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் போர்ச்சுக்கல் நாட்டிற்கு விடுமுறை சுற்றுலா சென்ற போது சிறிய மகள் மேடலின் மாயமானார்.இவர் பெரும்பாலும் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என்றே அஞ்சப்படுகின்றது. இவர் மீண்டும் தங்களுக்குக் கிடைப்பார் என்ற உறுதியான நம்பிக்கையொடு பெற்றோரான தாய் கேட் மற்றும் தந்தை கெரி ஆகியோர் மனம் தளராது பல வழிகளிலும் தேடி வருகின்றனர்.
இந்தச் சிறுமியை தேடும் முயற்சியாக இவரின் பல படங்களையும் குறிப்புக்களையும் அடங்கிய புத்தகம் ஒன்றையும் பெற்றோர் வெளியிட்டுள்ளனர்.
இப்போதைக்கு உலகில் வாசிப்பவர்களின் நெஞ்சத்தை உருகச் செய்யும் ஒரு நூல் இதுவாகத்தான் இருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மெடலின் என்ற பெயரிலேயே சிறுமியின் படத்தை அட்டையில் தாங்கி இந்த நூல் வெளிவந்துள்ளது.
சுப்பர் மார்க்கட்டில் ட்ரோலியை தானே தள்ளிச் சென்று எளிமையாக பொருட்களை வாங்கிய இளவரசி கேட்!
உலகமே பார்த்து ரசித்த திருமணம் முடிந்த கையோடு பிரிட்டனின் எதிர்கால மன்னர் வேலைக்குத் திரும்பிவிட்டார்.எதிர்கால மகாராணியோ திருமணத்துக்கு முன்னரைப் போலவே அலைந்து திரிந்து பொருள் வாங்கக் கிளம்பிவிட்டார்.

பிரிட்டனின் ஏனைய குடும்பப் பெண்களைப் போலவே வருங்கால மகாராணி திருமதி வில்லியமும் தனது வாராந்த பொருள் கொள்வனவில் சர்வ சாதாரணமாக ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்டவை தான் இந்தப் படங்கள். எங்லஸி தீவில் உள்ள வெயிட் ரோஸ் என்ற சுப்பர்மார்க்கெட்டிற்கு இவர் வருகை தந்திருந்தார்.

சுபர்மார்க்கெட்டை வந்தடைந்ததும் தன்னுடன் கூட வந்திருந்த மெய்ப்பாதுகாவலரிடம் கார் சாவியைக் கொடுத்து விட்டு அவர் உள்ளே நுழைந்தார்.
எளிமையான முறையில் உடையணிந்திருந்த கேட் ஒரு சராசரி குடும்பப் பெண்போல் தனது ட்ரொலியை தானே தள்ளிச் சென்று அவர் தனக்குத் தேவையானவற்றை வாங்கினார். இடையில் அவர் இந்த சுப்பர்மார்க்கெட் ஊழியர்களிடம் சில பொருட்களைப் பற்றி விசாரிக்கத் தவறவும் இல்லை.
காரில் அவர் தானாகவே பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தததைக் கண்ட அங்குள்ள மக்கள் ஒரு பக்கம் தமது வருங்கால அரசியைப் பார்த்து ஆச்சரியமும் இன்னொரு பக்கம் ஆனந்தமும் அடைந்தனர்.

காரில் பொருட்களை ஏற்றிக் கொண்ட பின் வெற்று ட்ரொலியை அதற்கு உரிய இடத்தில் மீண்டும் கொண்டு வந்து வைத்துவிட்டே கேட் அங்கிருந்து புறப்பட்டார்.
இந்த கோடை காலத்தில் வில்லியம் தம்பதிகள் அமெரிக்காவின் ஹொலிவூட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இளவரசர் என்ற ரீதியில் வில்லியம் அமெரிக்கா செல்லவுள்ளமை இதுவே முதற் தடவையாகும். கேட் இதற்கு முன் அமெரிக்கா சென்றதே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

லிபிய தூதரக அதிகாரிகள் உடனே வெளியேற வேண்டும்: பிரான்ஸ் கடும் எச்சரிக்கை.
லிபியாவில் கர்னல் கடாபி அதிகாரத்தில் உள்ள 14 லிபிய தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது.லிபிய தூதரக அதிகாரிகள் 2 நாளில் வெளியேற வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஐ.நா தீர்மானப்படி லிபிய தூதரக அதிகாரிகள் பணியாற்றுவதற்கு உரிமை இல்லாதவர்கள் என பிரான்ஸ் இந்த முடிவை அறிவித்து உள்ளது.
கடந்த பெப்பிரவரி மாதம் கடாபிக்கு எதிராக புரட்சிப் போராட்டம் லிபியாவில் வெடித்தது. இந்த போராட்டத்தை ஒடுக்க லிபியா அப்பாவி மக்களை கொன்று குவித்ததை தொடர்ந்து ஐ.நா சர்வதேசப் படைகளை அனுப்பியது.
பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா, கனடா படைகள் தற்போது லிபியா ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. லிபியாவில் தேசிய சீரமைப்பு கவுன்சிலுக்கு அங்கீகாரம் அளித்த முதல் நாடாக பிரான்ஸ் திகழ்கிறது. இந்த சீரமைப்புக் கவுன்சிலை கடாபிக்கு எதிராக போராடும் புரட்சியாளர்கள் அமைத்துள்ளனர்.
மக்களுக்கு எதிராக கடாபி ராணுவம் செயல்படுவதை தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கு பிரான்ஸ் தூதர்கள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். அயல்நாடுகளில் முடக்கப்பட்ட கடாபி சொத்துக்களை லிபியா தேசிய சீரமைப்பு கவுன்சிலின் நிதி தொகுப்புக்கு அளிக்க சர்வதேச தொடர்பு குழு முடிவு செய்துள்ளது.இது குறித்து கடாபி அரசு வெள்ளிக்கிழமை கடுமையாக விமர்சித்தது. இது பயங்கர திருட்டு எனவும் சாடியது.

'job well done' : ஒசாமாவை கொன்ற அமெரிக்க படைகளை சந்தித்த ஒபாமா வாழ்த்து.

இரட்டைக்கோபுர நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் ஒபாமா
அல் கைதா தலைவர் ஒசாமா பின்லேடனை கொன்ற அமெரிக்க விஷேட அதிரடிப்படையினரை கெண்டகியில் உள்ள Fort Campbell இல் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சந்தித்தார்.இதன் போது இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றிய அவர், குறித்த தாக்குதலை முன்னெடுத்த Navy Seals குழுவினருக்கு தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
அமெரிக்க மற்றும் உலக மக்களால் உங்களுக்கு சொல்லப்படும் வாழ்த்து 'job well done'! என அவர் தெரிவித்தார். எனினும் பயங்கரவாதிகளுடனான யுத்தம் முடிவடையவில்லை. அது தொடரும் எனவும் எமக்கான நீதியை நாம் பெற்றுக்கொண்டு விட்டோம் எனினும் செப்டெம்பர் 11 தாக்குதலின் வடு எம்மை விட்டு அகழப்போவதில்லை என தெரிவித்தார். மேலும் இவ்வாறானதொரு தாக்குதல் எதிர்கால அமெரிக்காவில் இடம்பெறாது என்பதை, தற்போது அல் கைதாவின் 'தலை' துண்டிக்கப்பட்டதிலிருந்து உறுதி செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.

கடலில் தடுப்புச் சுவர் கட்டுவதற்காக 3 அணு உலைகளின் பணிகள் நிறுத்தி வைப்பு.
ஜப்பானில் மீண்டும் சுனாமி தாக்குதலால் அணு உலைகளில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க கடலில் தடுப்புச்சுவர் கட்டுவதற்காக மூன்று அணு உலைகளில் மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.கடந்த மார்ச் மாதம் 11ம் திகதி நிகழ்ந்த சுனாமி தாக்குதலில் புகுஷிமா, டச்சி அணு உலைகள் வெடித்து சிதறி கதிர்வீச்சை ஏற்படுத்தின. 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாயினர்.
ஜப்பானில் மொத்தம் 54 அணு உலைகள் உள்ளன. இந்நிலையில் சுனாமி போன்று மீண்டும் நிகழாமல் தடுக்க அந்நாட்டில் மேலும் கடல்கரையை ஒட்டியுள்ள அணு உலைகளில் பாதுகாப்பு குறித்த கூட்டம் நடந்தது.இதில் ஹ‌ேமோகா எனும் மிகப்பெரிய அணு உலை பசிபிக் கடற்கரையிலிருந்து 100 மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இதனை சுனாமி தாக்காதவாறு கடல் மேல் தடுப்புச்சுவர் எழுப்ப முடிவு செய்து அதற்கான கட்டுமானப்பணிகளை துவக்கியுள்ளது.
இதற்காக அப்பகுதியில் உள்ள மேலும் இரண்டு அணு உலைகளில் மின் உற்பத்தியை ஜப்பான் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த தடுப்புச்சுவர்கள் இரண்டு வருடங்களில் கட்டிமுடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து ஜப்பான் பிரதமர் நேட்டோ கான் கூறுகையில்,"இத்தகைய தடுப்புச்சுவர்கள் எப்படிப்பட்ட சுனாமி தாக்குதல்களையும் தாங்கும் அளவுக்கு 90 சதவீதம் உறுதியாக இருக்கும்" என்றார்.
ரயில்பாதைகளை தகர்க்க பின்லேடன் போட்ட திட்டம் அம்பலம்.
அமெரிக்காவில் நியூயார்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ ஆகிய நகரங்களின் ரயில் பாதைகளை தகர்க்க அல்கொய்தாவினர் திட்டமிட்டிருந்ததாக அபோதாபாத் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.பாகிஸ்தானின் அபோதாபாத் வீட்டில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அங்கிருந்து கையால் எழுதப்பட்ட ஆவணங்கள், கணணிகள், சீடிக்கள் என ஒசாமாவின் ஏராளமான ரகசிய ஆவணங்களை அமெரிக்க அதிரடிப்படையினர் கைப்பற்றினர்.
கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று அமெரிக்க விமானத்தை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது. அதற்கு பிறகு அமெரிக்க புலனாய்வுத்துறை போக்குவரத்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர்.அபோதாபாத் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் கடந்த பெப்பிரவரி மாதம் கிடைத்த சில ஆவணங்களைக் கொண்டு அமெரிக்க படையினர் ஆய்வு செய்தனர்.
அதில் நியூயார்க் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதன் 10ம் ஆண்டு நினைவு தினத்தன்று அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட நகரங்களின் ரயில் பாதைகள் மற்றும் பாலங்களை தகர்க்க அல்கொய்தாவினர் திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.இச்செய்தியை உள்துறை அமைச்சக அதிகாரி கூறியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற பயத்தில் தாவூத்தை தப்பி ஓட விட்ட பாகிஸ்தான்.
இந்தியாவில் மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளி தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருந்து சவுதி அரேபியாவுக்கு தப்பியோடி விட்டான்.அல்கொய்தா இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ தாவூத்தை பாதுகாப்பாக அனுப்பி வைத்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பல இடங்களில் கடந்த 1993ம் ஆண்டு பயங்கர வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் பலர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.இந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி தாவூத் இப்ராகிம். மும்பையில் சதி திட்டத்தை நிறைவேற்றிய பின் இவன் தனது குடும்பத்துடன் பாகிஸ்தானுக்கு தப்பி விட்டான்.
அங்கு கராச்சி நகரில் அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் பாதுகாப்பில் வசித்து வந்தான். "பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான தாவூத் இப்ராகிமை ஒப்படைக்க வேண்டும்" என்று இந்திய  அரசு பலமுறை பாகிஸ்தானிடம் வலியுறுத்தியுள்ளது.அதற்கான ஆதாரங்களையும் அந்நாட்டுக்கு மத்திய அரசு அளித்தது. ஆனால் தாவூத் தங்களது நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் அரசு மறுத்து வருகிறது. போதைப் பொருள் கடத்தல், கூலிக்கு கொலை செய்தல் போன்ற வழக்குகளில் சர்வதேச பொலிசாராலும் தாவூத் தேடப்பட்டு வருகிறான்.
இவன் தனது குடும்பத்துடன் கராச்சி நகரில் கிளிப்டன் பகுதியில் சவுதி மசூதி அருகே சொகுசு மாளிகையில் வசித்து வந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து சவூதி அரேபியாவுக்கு மே 1ம் திகதி இரவு தாவூத் தனது நெருங்கிய கூட்டாளி சோட்டா ஷகீலுடன் தப்பிவிட்டதாகவும், அதற்கு ஐ.எஸ்.ஐ முழு ஏற்பாடு செய்ததாகவும் புலனாய்வுத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
ஒசாமா தங்கியிருந்த வீடு தரைமட்டமாக்கப்படும்: பாகிஸ்தான் அரசு.
அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த வீட்டை விரைவில் இடிக்கப் போவதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் பாதுகாப்பு துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் "டெய்லி நியூஸ்" என்ற பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: பின்லேடன் தங்கியிருந்த பண்ணை வீட்டுக்கு தற்போது ஏராளமானோர் வரத் துவங்கி விட்டனர்.
இந்த வீட்டிற்கு வரும் அனைத்து வழிகளும் ராணுவத்தால் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த வீட்டை விரைவில் இடித்து தரைமட்டமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்கு முன்பாக இந்த வீட்டிற்கு பத்திரிகையாளர்களை அனுமதிப்பதா, இல்லையா என்பது பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.இதற்கிடையே அபோதாபாத் நகர பொலிஸ் அதிகாரி நசீர்கான் கூறுகையில்,"தாக்குதல் நடந்த வீட்டில் எந்த சடலத்தையும் நாங்கள் பார்க்கவில்லை. இந்த கட்டடம் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. வெளிப் பகுதியில் தான் நாங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். அந்த வீட்டுக்குள் செல்ல எனக்கு கூட அனுமதி கிடைக்கவில்லை" என்றார்.
ஒசாமாவை தப்பிக்க விடாமல் தாக்குதல் நடத்த அழைத்துச் செல்லப்பட்ட நாய்.
அமெரிக்க கடற்படையின் "சீல்" அதிரடிப்படையினர் ஒசாமாவிற்கு எதிராக தாக்குதல் நடத்தச் சென்ற போது ராணுவத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற மோப்ப நாயையும் அழைத்துச் சென்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகேயுள்ள அபோதாபாத்தில் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் இருந்து சில நூறு அடிகள் தூரத்தில் இருந்த பங்களாவில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கக் கடற்படையின் "சீல்" அதிரடிப்படையினர் கடந்த ஞாயிறன்று இரவு சுட்டுக் கொன்றனர்.
ஒசாமா பின்லேடனை கொல்ல சீல் அதிரடிப்படையினர் 79 பேர் ஹெலிகாப்டரில் சென்ற போது அவர்களுடன் ராணுவத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற மோப்ப நாயையும் அழைத்துச் சென்றனர்.ஒசாமா தங்கியிருந்த பங்களாவின் மேல் பகுதியில் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் சீல் அதிரடிப்படையினர் இறங்கிய போது அவர்களுடன் கழுத்தில் தோள்பட்டை கட்டப்பட்ட அந்த நாயும் இறக்கப்பட்டது. இருந்தாலும் ஒசாமாவிற்கு எதிரான 40 நிமிட அதிரடி தாக்குதலின் போது நாய் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்த தகவல் இல்லை.
அதே நேரத்தில் அந்தப் பங்களாவில் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய மற்ற பொருட்கள் எங்கிருக்கின்றன என்பதை கண்டறிய இந்த நாய் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஒரு வேளை ஒசாமா தப்பிச் செல்ல முற்பட்டிருந்தால் அவரை பிடிக்கவும், விரட்டிச் செல்லவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.மோப்ப நாயின் பெயர் பற்றிய விவரம் தரவும் இல்லை. அதே போல அதிரடிப்படையினர் பெயரும் ரகசியமாக உள்ளது. ஒசாமாவிற்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையின் போது நாய்க்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
அதற்கேற்ப பாதுகாப்பு கவசத்துடன் அந்த நாய் முன்னால் ஓடியது. அதிரடி நடவடிக்கை முடிந்தவுடன் படையினருடன் திரும்பி விட்டது. அனேகமாக இந்த நாய் ஜெர்மன் ஷெப்பர்டு அல்லது பெல்ஜியன் மாலினோய்ஸ் வகையைச் சார்ந்ததாக இருக்கலாம் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கூறியுள்ளது.
இதுதொடர்பாக பத்திரிகையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ஹெலிகாப்டரில் இருந்து சீல் படையினருடன் நாய் கீழிறக்கப்பட்ட போது அதன் உடலில் கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதில் இந்த வகை நாய் மிகத் திறமையானவை.3 கி.மீ தூரத்தில் எதிரிகள் இருந்தாலும் அதை தன் மோப்ப சக்தியால் உணர்ந்து விடும். மேலும் ஜெர்மன் ஷெப்பர்டு மற்றும் பெல்ஜியன் மாலினோய்ஸ் வகை நாய்கள் எல்லாம் மனிதர்களை விட இரண்டு மடங்கு வேகமாக ஓடக்கூடியவை.
ஒரு வேளை ஒசாமா தப்பி ஓட முயற்சித்திருந்தால், அதை இந்த நாய்கள் தடுத்திருக்கும். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கப் படையினர் எடுத்து வரும் நடவடிக்கையில் இதுபோன்ற 500க்கும் மேற்பட்ட நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அமெரிக்க ராணுவத்தில் பயிற்சி பெறும் இந்த நாய்கள் கடித்தால் அது ஒரே நேரத்தில் பல கிலோ சதையை குதறிவிடும். மேலும் மனிதர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளைப் போலவே இந்த நாய்களுக்கும் ராணுவத்தில் கடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த நாய்களை கையாள்பவர், அவை எந்த பொருளை முகர்ந்து பார்க்கின்றன என்பதை ஆயிரம் அடி தூரத்தில் இருந்தே கண்காணிக்க முடியும்.மேலும் நாய் அணிந்திருக்கும் உடையில் இருக்கும் ஸ்பீக்கர் மூலம் அதற்கு உத்தரவு பிறப்பிக்கவும் முடியும். வெடிகுண்டுகளை கண்டறியவும், போர்க்களத்தில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு உதவவும், அமெரிக்க ராணுவத்தில் தற்போது இதுபோன்ற 2,800 நாய்கள் உள்ளன. இவ்வாறு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்கள் தொடரும்: அல்கொய்தா கடும் எச்சரிக்கை.












அமெரிக்காவின் தாக்குதலுக்கு உள்ளாகி மரணமடைந்த ஒசாமா பின்லேடனின் ரத்தம் வீணாகாது என்றும், அதற்கு காரணமான அமெரிக்கா மீதான தாக்குதல்கள் தொடரும் என்றும் அல்கொய்தா அறிவித்துள்ளது.ஒசாமா பின்லேடனின் மரணத்தையும் அல்கொய்தா இயக்கம் உறுதிபடுத்தியுள்ளது. இஸ்லாமிய இணையதள குழுக்களுக்கு அல்கொய்தா அனுப்பியுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சைட்" என்னும் இணையதள கண்காணிப்பு நிறுவனம் இத்தகவலை கண்டறிந்து மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. ஒசாமாவை கொன்றதற்காக அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட அதன் கூட்டு நாடுகளை பழிவாங்கப் போவதாகவும், ஆயுதப் போராட்டத்தில் இருந்து விலகப் போவதில்லை என்றும் அல்கொய்தா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவ்வறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒசாமாவின் ரத்தம் அமெரிக்கர்களையும் அவர்களின் முகவர்களையும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒரு சாபமாக துரத்தும். அவர்களது மகிழ்ச்சி கவலையாக மாறும். ஒசாமாவுக்காக குரல் எழுப்ப முன்வருமாறு பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமியர்களை கேட்டுக் கொள்கிறோம்.துரோகிகளாலும் திருடர்களாலும் உங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்கவும், அமெரிக்காவின் கட்டுப்பாட்டை விலக்கவும் முன்வருமாறு கோருகிறோம்.
பின்லேடனை அமெரிக்கா கொலை செய்திருக்க கூடாது: ஜேர்மனி.
அல்கொய்தா தீவிரவாத தலைவர் பின்லேடனை அமெரிக்க கொலை செய்திருக்க கூடாது. அவரது கொலையில் சந்தோஷப்படுவதற்கு ஒன்றும் இல்லை.பின்லேடனை உயிருடன் பிடித்து விசாரணைக்கு உட்படுத்தி இருக்க வேண்டும் என பெரும்பாலான ஜேர்மானிய மக்கள் கூறியுள்ளனர்.ஏ.ஆர்.டி பொது ஒலிபரப்பு நிறுவனத்திற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது வாக்கெடுப்பில் கலந்த கொண்டவர்களில் 64 சதவீத ஜேர்மனியர்கள் பின்லேடன் கொல்லப்பட்ட விடயம் மகிழ்ச்சியை தரவில்லை என்றனர்.
28 சதவீதம் பேர் அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்ட நிகழ்வு திருப்தி அளிப்பதாக உள்ளது என தெரிவித்தனர். 42 சதவீத ஜேர்மனியர்கள் கருத்து கூறுகையில்,"பின்லேடனை கொல்வதற்கு அமெரிக்காவுக்கு உரிமை உள்ளது" என்றனர்.52 சதவீத மக்கள் பின்லேடனை உயிருடன் பிடித்து சர்வதேச தீர்வாயம் முன்பாக விசாரணைக்கு நிறுத்தி இருக்க வேண்டும் என்றும், 51 சதவீத மக்கள் பின்லேடன் மரணத்தால் குறுகிய காலத்திற்கு பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர்.
பின்லேடன் தாக்குதல் அபாயம் அதிகரித்துள்ளது என நம்புவதாக அவர்கள் கூறினர். ஆனால் 45 சதவீத மக்கள் தீவிரவாத அச்சுறுத்தல் நிலை அதிகரிக்கவில்லை அப்படியே உள்ளது என்றனர்.2 சதவீத மக்கள் பின்லேடன் கொலையில் தீவிரவாதம் குறைந்துள்ளது என்றும், 80 சதவீத மக்கள் பின்லேடன் கொலையால் தீவிரவாத தாக்குதலை ஜேர்மனி எதிர் கொள்ள வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
பின்லேடன் கொல்லப்பட்டது ஜேர்மனி அதிபர் ஏங்கலா மார்க்கெல் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதற்கு ஜேர்மனி அரசியல் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் பின்லேடன் மரணம் குறித்த மக்கள் கருத்து கணிப்பு எடுக்கப்பட்டது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF