Sunday, May 29, 2011

மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கும் சூரிய ஒளி.


சூரிய ஒளி மனிதனுக்கு எண்ணிலடங்காத நன்மைகளை வாரி வழங்கி வருகின்றது. எனினும் இந்தச் சூரிய ஒளி உங்களின் தோலுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பதனை நம்ப முடிகின்றதா?
சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்கள் உடல் தோலில் தாக்குமுறுவதனால் தோல் புற்று நோய்கள் ஏற்படுகின்றன. அதிலும் மிகவும் கொடிய வகை தோல் புற்று நோய்களில் ஒன்றான மெலானோமா அதிகளவு சூரிய ஒளி உடலில் படுவதனால் ஏற்படுகின்றது. இந்த மெலானோமா புற்று நோய் பற்றி இந்தப் பகுதியில் விபரிக்கப்பட்டுள்ளது.மெலானோமா என்பது ஒரு வகைப் புற்று நோயைக் குறிக்கின்றது. இது ஏனைய தோல் புற்று நோய் வகைகளை விடவும் வித்தியாசமானது. எனினும் இந்த புற்று நோய் மிகவும் ஆபத்தானது.
மெலானோமா உடலின் தோல் பகுதியை மட்டுமன்றி உடற்பாகங்களையும், எலும்புகளையும் பாதிக்கக் கூடும். எனினும் அதிர்ஷ்டவசமாக ஆரம்ப கட்டத்திலேயே நோயைக் கண்டுபிடித்தால் குணப்படுத்த முடியும்.
மெலானோமா என்னும் தோல் புற்று நோய் அதிக நேரம் சூரிய ஒளியில் இருப்பதனால் ஏற்படுகின்றது. அதிக நேரம் சூரிய ஒளி உடலின் தோல் பகுதியில் படுவதனால் சாதாரண தோல் கலன்கள் அசாதாரண நிலையை அடைகின்றது. இந்த அசாதாரண தோல் கலன்கள் தோலின் திசுக்களை விரைவில் தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகின்றன.பரம்பரை அடிப்படையிலும் இந்த புற்று நோய் ஏற்படுகின்றது. குடும்ப உறுப்பினர்களின் தோல் கலன்களில் அசாதாரண நிலைமை காணப்பட்டால் சில வேளைகளில் அது தோல் புற்று நோயாக மாற்றமடையக் கூடும்.
மெலானோமாவின் அறிகுறிகள்:
1. மெலானோமா தோல் புற்று நோயின் பிரதான அறிகுறியாக உடற் தோலின் தோற்றம் கருதப்படுகின்றது. குறிப்பாக தோல் மச்சங்களில் ஏற்படும் மாற்றம் மற்றும் தோல் வளர்ச்சி மாற்றம் என்பன மெலானோமாவின் அறிகுறியாக அமையக்கூடும்.
2. மச்சங்களின் அளவு, நிறம் போன்றவற்றில் காணப்படும் மாற்றங்கள். எனினும் தோலின் தெளிவான பகுதிகளில் மெலானோமா உருவாகின்றது. உடலின் எல்லா பாகங்களிலும் மெலானோமா புற்று நோய் உருவாக்கக்கூடும். எனினும் பொதுவாக ஆண்களின் மேல் முதுகுப் பகுதியிலும், பெண்களின் கால்களிலும் இவ்வாறு தோல் புற்று நோய் ஏற்படுகின்றது.
3. மெலானோமா புற்று நோய் மச்சங்கள் தட்டையாகவும், பிறவுண் நிறத்திலும், கறுப்பு மச்சங்களின் முனைகள் அமைப்பின்றியும் காணப்படும். மெலானோமாக்கள் சாதாரண உருவங்களில் காணப்படாது. மெலானோ மச்சங்கள் அளவுகளும் மாறுபட்டிருக்கும். உடல் மச்சங்களைப் போன்று அல்லாது மெலானோமாக்கள் வித்தியாசமாக அமைந்திருக்கும்.
மெலானோமா புற்று நோயை தடுப்பதற்கு:
1. சூரிய ஒளி அதிகளவில் உடலில் படுவதனை தவிர்ப்பதன் மூலம் மெலானோமா உள்ளிட்ட சகல வகைத் தோல் புற்று நோய்கள் ஏற்படுவதனையும் தடுக்க முடியும். வெளியே செல்லும் போது சூரிய ஒளியிலிருந்து தோலைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
2. சூரியனின் புற ஊதாக் கதிர்கள் உடலின் தோலில் தாக்கமுறுவதனை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியமானதாகும். நடுப்பகல் வேளைகளில் சூரிய ஒளி அதிகமாகப்படக் கூடிய இடங்களில் இருப்பதனை தவிர்க்க வேண்டும்.
3. உடைகளினால் உடற்பகுதிகளை பாதுகாத்துக்கொள்ள முடியும். தொப்பிகள், நீளக்கை சேர்ட், காற்சட்டை போன்றவற்றை அணிய வேண்டும்.
4. சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கும் கிறீம் வகைகளைப் பயன்படுத்த முடியும். ஆபத்தான சூரிய ஒளிக் கதிர்களிலிருந்து உங்களது தோலை இந்தக் கிறீம்கள் பாதுகாக்கும்.
5. அடிக்கடி சூரியக் குளியல் போடுவதனை தவிர்க்க வேண்டும்.
6. உங்களது தோலை ஒவ்வொரு மாதமும் சோதனை செய்து பார்க்கவும். இந்த சோதனைகளை நீங்களாகவே செய்ய முடியும். மச்சங்கள், அடையாளங்கள் அல்லது ஏதேனும் தோலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதனை அவதானிக்கவும்.
7. குறைந்த பட்சம் ஒரு ஆண்டுக்கு ஒரு தடவையேனும் மருத்துவரிடம் தோல் பரிசோதனை செய்யவும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF