Monday, May 23, 2011

இன்றைய செய்திகள்.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையினால் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் யுத்தக் குற்றச் செயல்கள் பற்றி விசாரணை நடத்தலாம்: ஐ.நா. பேச்சாளர் மார்ட்டின் நெசர்கி.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையினால் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் யுத்தக் குற்றச் செயல்கள் பற்றி விசாரணை நடத்தலாம் என ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின்  நெசர்கி குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அல்லது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஆகிய கிளை அமைப்புக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் யுத்தக் குற்றச் செயல்கள் பற்றி விசாரணை நடத்தலாம் ஐ. நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்கி சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறில்லாதபோது இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் மட்டுமே இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் முதன்மை அதிகாரம் இலங்கை அராசங்கத்திடம் காணப்படுகின்றது. குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் மற்றும் விசாரணை நடத்தும் அதிகாரம் உள்நாட்டு அரசாங்கங்களுக்கே வழங்கப்படுகின்றன என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும்  30ம் திகதி தொடக்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சிலின் அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன. அவ்வாறான நிலையில் இலங்கை தொடர்பான பல போர்க்குற்ற ஆதாரங்களை புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மனித உரிமைக்கவுன்சிலுக்கு சமர்ப்பித்துள்ளன.அவ்வாறான நிலையில் மனித உரிமைக்கவுன்சில் கோரிக்கை விடுத்தாலும் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஐ.நா. பேச்சாளர் தெரிவித்திருப்பது பெரும் நம்பிக்கைக் கீற்றாக இருப்பதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
இலங்கை விவகாரத்தில் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் இரட்டை நிலைப்பாடு.
இலங்கையின் போர்க் குற்றச்சாட்டுகள் விடயங்களைக் கையாள்வதில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. வீக்கன்ட் லீடர் இணையத்தளத்தில் போல் நியூமன் என்பவர் இந்த விமர்சனங்களைத் தெரிவித்திருக்கிறார்.
அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது;
இலங்கையில் இழைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படும் போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிப்பதில் முதலாவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தயக்கம் காட்டியிருந்தார். அதன் பின்னர் 2011 மார்ச் 31 ல் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கை தயார் செய்யப்பட்டது. ஏப்ரல் 18 வரை பான் கீ மூன் அதனை பகிரங்கப்படுத்தவில்லை. இந்த நடவடிக்கையின் பின்னால் பான் கீ மூனின் தலைமை அதிகாரி விஜே நம்பியார் இருந்ததாக அனுமானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தேர்தல்களின் பின்னர் அறிக்கையை வெளியிடுவதற்கான முன்னகர்வின் பின்னணியில் விஜே நம்பியார் இருந்ததாக அனுமானிக்கப்படுகிறது. ஏப்ரல் 13 ல் தமிழகத் தேர்தல் இடம்பெற்றது. காங்கிரஸையும் தி.மு.க.வையும் அசௌகரியமான நிலையிலிருந்து பாதுகாப்பதற்காக இந்த விடயம் இடம்பெற்றதாக ஊகிக்கப்படுகிறது.2010 ஜூனில் இந்த நிபுணர் குழுவை பான் கீ மூன் அமைத்திருந்தார். போர்க்குற்றங்கள் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றம் சமாதானத்திற்கு எதிரான குற்றம் தொடர்பாக 2010 ஜனவரியில் டப்ளினில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இலங்கை மீது குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் 2010 மார்ச்சில் அந்த அறிக்கையை சர்வதேச நெருக்கடிக் குழு வெளியிட்டிருந்தது. அந்நிலையிலேயே 2010 ஜூனில் நிபுணர் குழுவை பான் கீ மூன் நியமித்திருந்தார்.
ஐ.நா. நிபுணர் குழு இலங்கைக்கு செல்வதற்கு இலங்கை அனுமதியளிக்க மறுத்தபோது பான் கீ மூனும் சர்வதேச சமூகமும் மௌனம் காத்தனர். ஏனைய பல விடயங்கள் தொடர்பாகவும் பான் கீ மூன் அமைதியாகவே இருந்தார். ஐ.நா. அலுவலகங்கள் மற்றும் நிவாரண விநியோக நிலையங்கள் தாக்குதலுக்குள்ளானதாக ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை கூறுகின்றது. ஆனால், இந்த விடயம் குறித்து இலங்கையை எச்சரிப்பதற்கு ஐ.நா. எதனையும் செய்திருக்கவில்லை.
போர் வலயங்களில் தொடர்ந்தும் சர்வதேச அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்களும் ஐ.நா. முகவர் அமைப்புகளும் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க வேண்டுமென்ற வலியுறுத்தல் தொடர்பாக எந்தவொரு அழுத்தத்தையும் இலங்கைக்கு விடுத்திருக்கவில்லை. அவ்வாறு செயற்பட்டிருந்தால் மனித பேரவலத்தை தவிர்த்திருக்க முடியும். வன்னியில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு இன்றும் கூட ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
2008 செம்டெம்பரில் மோதல் வலயத்திற்குள் 4,20000 பொதுமக்கள் இருந்ததாக ஐ.நா. உலக உணவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஒரு இலட்சம் பேர் மட்டுமே இருந்ததாக அரசாங்கப் புள்ளி விபரங்கள் குறிப்பிட்டுள்ளன. இதன் விளைவாக ஐ.நா. உலக உணவுத் திட்டமானது பொதுமக்களுக்கான உணவில் 1/4 பங்கையே வழங்கக்கூடியதாக இருந்தது. மே 13 ல் மோதல் வலயத்திற்குள் ஒரு இலட்சம் பொதுமக்கள் இருந்ததாக ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அரசாங்கம் பத்தாயிரமே இருந்ததாக கூறியது. யுத்த வெற்றியின் பின்னர் 282000 பொதுமக்கள் மெனிக் பாம் முகாம்களுக்குள் சென்றனர். மீதிப்பேருக்கு என்ன நடந்தது என்பதற்கு ஐ.நா. பதிலளிக்க வேண்டிய தேவையுள்ளது.
ஐ.நா. நிபுணர் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு இலங்கைக்கு தன்னால் கட்டாயப்படுத்த முடியாதென பான் கீ மூன் உறுதியாகக் கூறுகின்றார். ஐ.நா. வின் முறைமையில் ஏற்பட்ட தோல்விகளை வெளிப்படுத்துவது நிபுணர் குழுவின் பிரதான நோக்கம் அல்ல. ஆனால், தமிழர்களுக்கு எதிரான தவறான நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்யப்படவேண்டுமென்பதே நிபுணர் குழுவின் பரிந்துரையாகும்.யுத்தம் முடிவடைந்து விட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகால ஒழுங்கு விதிகள் இப்போதும் அமுலில் உள்ளன. இலங்கைத் தமிழர் விவகாரமானது தமிழர்களுக்கான பிரச்சினையாக மட்டும் அமைந்துள்ளதா அல்லது மனிதத்துவத்திற்கான பிரச்சினையாக இது இல்லையா? தனது மனச்சாட்சியை தேடுவதற்கு பான் கீ மூன் அதிகளவுக்கு செயற்பட வேண்டியுள்ளது.

உலகம் அழியும்! பொய்யாகிப்போன மத பரப்புரை! 

கடந்த 21.05.2011ஆம் தேதி அன்று இறைவனின் நியாயத் தீர்ப்பு நாள் எனவும் நேற்றைய தினத்துடன் உலகம் முடிந்துவிடும் எனவும் அமெரிக்காவிலுள்ள மத போதகரும் அவரின் ஆதரவாளர்களும் உலகெங்கும் செய்த பிரசாரம் பொய்த்துள்ளது. 

கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த 89 வயதான ஹரோல்ட் கேம்பிங்கின் எனும் கிறிஸ்தவ மத போதகரே நேற்றைய தினத்துடன் உலகம் அழிய போவதாக கூறியிருந்தார். மே 21 ஆம் தேதி ஓவ்வொரு நாட்டிலும் உள்ளுர் நேரப்படி மாலை 6 மணியுடன் பூகம்பங்கள் போன்ற அழிவுகள் ஏற்படும் எனவும் சிறந்த கிறிஸ்தவர்கள் சொர்க்கத்துக்கு கொண்டு செல்லப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார். 

முக்கிய கிறிஸ்தவ அமைப்புகள் எதுவும் நேற்று உலகம் முடியப்போவதாக கூறவில்லை. ஆனால்,முன்னாள் பொறியியலாளரான ஹரோல்ட் கேம்பிங்கின் பரப்புரையினை பெமிலி ரேடியோ.காம் எனும் இணையத் தளம் மற்றம் அவர்களின் வானொலிகள், தொலைக்காட்சிகள், செய்தி தொலைக்காட்சிகள் மூலம் உலகெங்கும் 61 மொழிகளில் ஒளிபரப்ப பட்டது. இந்த பிரசாரத்தை நம்பிய பலர் தமது தொழிலையும் விட்டு விட்டு ஊர் ஊராக சென்று உலக முடிவு பரப்புரையை மேற்கொண்டனர். இறைவனின் நியாயத் தீர்ப்பு நாள் மே 21 ஆம் தேதி எனவும் அதனால் தத்தமது பாவங்களுக்காக வருந்துமாறும் மக்களிடம் அவர்கள் கோரினர்.

இதன்படி முதலாவது நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் பூகம்பம் போன்ற அழிவுகள் ஏற்பட்டு, நேரம் செல்லச் செல்ல ஏனைய நகரங்களிலும் அது தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவுமே நடைபெறவில்லை. 
நோவா காலத்து வெள்ளத்தின் அடிப்படையிலான கணிப்பு? பைபளில் குறிப்பிடப்படும் நோவாவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ள பேரழிவு சம்பவத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட கணிப்பொன்றின் மூலம் நேற்று உலக முடிவு தினமாக கணிக்கப்பட்டிருந்ததாம். நோவாவின் படகு குறித்து கூறப்படும் மிக பெரிய வெள்ள நிகழ்வு இடம்பெற்ற நாளிலிருந்து சரியாக 7000 ஆண்டுகள் பூர்த்தியானவுடன் உலக அழிவுக்கான நியாயத் தீர்ப்பு நாள் வரும் என ஹரால் கேம்பிங்கும், அவரின் விசுவாசிகளும் கருதுகின்றனர். 


மேற்படி வெள்ள சேதம் கி.மு.4990 ஆம் ஆண்டில் ஏற்பட்டதாக ஹரோல்ட் கேம்பிங் கருதுகிறார். கிறிஸ்துவுக்கு முந்தைய 4900 ஆண்டுகளுடன் கிறிஸ்துவுக்கு பிந்திய 2011 வருடங்களையும் சேர்த்தால் 7000 வருடக் கணக்கு சரியாகிறது.

இதனால் இவ்வருடம் உலகம் அழியும் என்பதே ஹரோல்ட் கேம்பிங்கின் வாதமாக இருந்தது.1994 ஆம் ஆண்டும் இப்படி உலகம் அழியப்போவதாக அவர் கூறினார். எனினும் அப்போது சில கணிப்புகள் தவறாகிவிட்டதால் பிழையான தேதியை உலக அழிவு தினமாக அறிவித்துவிட்டதாகவும் இந்த முறை அந்த நிகழ்வு நடக்காமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை எனவும் அவர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இன்று இரண்டு நாள்கள் கடந்துவிட்டது. எனினும் ஹரோட் கேம்பிங்கும் அவரின் ஆதரவாளர்களும் செய்த பரப்புரை போல் எதுவும் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகவில்லை.



பின்லேடன் சிக்கியதற்கு அவரது மனைவி தான் காரணம்: பாகிஸ்தான் அமைச்சர்.
அமெரிக்க படையினரிடம் பின்லேடன் சிக்கியதற்கு அவர் இளம் மனைவி அமல் அல் சதா காரணமாக இருக்கலாம் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறியுள்ளார்.
அமெரிக்க உளவுத்துறையினர் அளித்த தகவல் படி பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இந்த தகவல் 100 சதவீதம் உறுதி செய்யப்படவில்லை எனவும் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். பின்லேடன் அமெரிக்க படையினரிடம் எப்படி சிக்கினார் என்பது பற்றி பாகிஸ்தானில் பல கருத்துகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.இந்நிலையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: உறுதியான தகவல் கிடைக்காமல் அமெரிக்கப்படையினர் அபோதாபாத் மாளிகையில் நுழைந்திருக்கமாட்டார்கள்.
பின்லேடன் மாளிகையில் உள்ளவர்கள் மற்றும் அவர்களின் வயது உள்பட அனைத்து குறிப்புகளும் சீல் பிரிவு கமாண்டோக்கள் விட்டு சென்ற புத்தகத்தில் உள்ளது. இளம் மனைவி அமல் அல் சதா பின்லேடனை காட்டிக் கொடுத்திருக்கலாம் என மற்ற இரண்டு மனைவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.பின்லேடன் பற்றி அவரது வீட்டில் வசித்த ஒரு நபர்தான் நிச்சயம் தகவல் கொடுத்திருக்க வேண்டும். இவ்வாறு ரகுமான் மாலிக் கூறியுள்ளார்.
அமெரிக்கா-பிரிட்டன் நாடுகளின் கூட்டுப் பாதுகாப்பு அமைப்பு.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த வார இறுதியில் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்கிறார். அவரது வருகையின் போது அமெரிக்க-பிரிட்டன் கூட்டு பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்துகின்றன."தேசிய பாதுகாப்பு நிலைப்பாடு அமைப்பு" என்ற புதிய கூட்டு அமைப்பின் தலைவராக பிரிட்டிஷ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பீட்டர் ரிக்கர்ட்ஸ் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் டாம் டொனிலான் இருப்பார்கள். நீண்ட கால அயல் கொள்கை ஒத்துழைப்பில் உதவுவதற்காக இந்தக் கூட்டு பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படுகிறது.
இந்த அமைப்பு குறித்த விவரங்கள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இரண்டு நாள் அரசு பயணமாக பிரிட்டன் வருகிறார். புதிதாக அமைக்கப்படும் அமெரிக்க-பிரிட்டன் கூட்டு பாதுகாப்பு அமைப்பு புதிதாக அதிகரித்து வரும் சவால்கள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ள உதவும்.அத்தகைய சவால்களை எவ்வாறு அணுக வேண்டும் என்றும், நீண்ட கால மேம்பாட்டு நிகழ்வுகளுக்கு தற்போதைய நமது கொள்கையை எவ்வாறு பின்பற்றலாம் என்பதை முடிவு செய்யவும் உதவும் என பிரிட்டிஷ் தலைவர் டேவிட் காமரூனின் ஆலோசகர் தெரிவித்தார்.
அயல் மற்றும் பாதுகாப்பு செயல்பாடுகளில் இந்த கூட்டு பாதுகாப்பு அமைப்பு வெகுவாக உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். புதியதாக அமைக்கப்படும் கூட்டு பாதுகாப்பு அமைப்பு ஒரு ஆண்டில் பலமுறை கூடி விவாதிக்கும். தற்போது நிலவும் அரபு நாடுகள் போராட்டம் குறித்தும் அவை விவாதிக்கும்.பிரிட்டன் அயல்துறை அமைச்சர் வில்லியம் ஹாக் கூறுகையில்,"அமெரிக்க-பிரிட்டன் இடையே சிறப்பான உறவு நிலவுகிறது. நமது அணு ஒத்துழைப்பு ஆயுதப்படை பிரிவுகள் அமெரிக்கா, பிரிட்டன் இடையே மிகுந்த ஒத்துழைப்பு நெருக்கத்தை ஏற்படுத்தி உள்ளன" என்றும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் விமானப்படைத் தாக்குதல்: தலிபான்கள் பொறுப்பேற்பு.
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள கடற்படை தளத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நேற்று இரவு தாக்குதல் நடத்தி 2 அமெரிக்கத் தயாரிப்பு ஹெலிகாப்டர்களை அழித்தனர்.இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 5 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்கப் படைகளால் அல்கொய்தா தலைவர் பின்லேடன் கொல்லப்பட்ட 3 வாரங்களுக்குப் பின்னர் இந்த பயங்கரவாத தாக்குதலை தலிபான்கள் நடத்தியுள்ளனர்.
பைஸல் விமானதளத்துக்குள் உள்ள கடற்படை விமானநிலையமான பி.என்.எஸ் மெஹ்ரானில் 15க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியும், தானியங்கி துப்பாக்கி சுடும் எந்திரங்களால் சரமாரியாக சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது.அந்த தளத்தில் இருந்து 15 முறை பலத்த வெடிச் சப்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவித்தன. நேற்று இரவு 10.40 மணிக்கு தொடங்கிய துப்பாக்கிச்சண்டை இன்று காலை வரை நீடித்தது.
இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பின்லேடன் கொல்லப்பட்டதில் இருந்து பாதுகாப்பு நிலைகளின் மீதான தாக்குதல்களை இந்த அமைப்பு தீவிரப்படுத்தி வருகிறது.பின்லேடன் உயிரிழந்த பின்னர் தாக்குதல் நடத்தப்போவதாக நாங்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தோம். இதைவிடப் பெரிய தாக்குதல்களை நடத்துவோம் என வடமேற்கு பாகிஸ்தானில் ஒரு மறைவிடத்தில் இருந்து தலிபான் செய்தித் தொடர்பாளர் இசானுல்லா இசான் வெளிநாட்டு அமைப்புகளிடம் தெரிவித்தார்.
பி.என்.எஸ் மெஹ்ரான் கடற்படைத் தளத்துக்குள் அனுப்பப்பட்டவர்கள் அந்த தளத்தை 3 நாட்கள் முற்றுகையிடுவதற்கு தேவையானவற்றை எடுத்துச் சென்றுள்ளனர் என அவர் கூறினார்.நிலைமையை கண்காணிக்குமாறு உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கை கராச்சிக்கு பிரதமர் யூசுப் ரஸா கிலானி அனுப்பியுள்ளார். அவர் கூறுகையில்,"3 பக்கங்களில் இருந்து கடற்படைத் தளத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்துள்ளனர்" என்றார்.
அந்த தளத்துக்குள் ஒரு கட்டடம் இன்னும் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கிருந்து அவர்கள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுடுகின்றனர். வீரர்கள் அதிக அளவில் உயிரிழக்காமல் பயங்கரவாதிகளை முழுமையாக தோற்கடிக்க முயற்சித்து வருவதாக ரஹ்மான் மாலிக் கூறினார்.இது கடற்படை ஸ்தாபனத்தின் மீதான தாக்குதல் மட்டும் அல்ல, பாகிஸ்தான் மீதான தாக்குதல் என்றார் அவர். இந்த தாக்குதலில் 4 அல்லது 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என அரசு தொலைக்காட்சியான பிடிவி தெரிவிக்கிறது.
ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பால் பரவும் சாம்பல்: பிரிட்டன் விமான சேவை நிறுத்தம்.
ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பால் வான் பகுதியில் கரும் சாம்பல்கள் பரவி வருகின்றன. பல கிலோ மீற்றர் தூரம் பரவியுள்ள சாம்பலால் வான் வழியே செல்லும் விமானங்களுக்கு பாதை தெரியவில்லை.இதனால் பிரிட்டன் விமானச்சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. டன் கணக்கில் எரிமலை சாம்பல்கள் வான் பகுதியில் உள்ளன. இந்த சாம்பல்கள் விமான என்ஜின்களுக்கு பெரும் அபாயத்தை விளைவிக்ககூடும் என்பதால் மேற்கு ஐரோப்பா விமானங்கள் தரை இறக்கப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் இதே போன்ற பிரச்சனை காரணமாக விமானம் தரை இறக்கப்பட்டது. எரிமலை சாம்பல் பரவல் காரணமாக வடக்கு அட்லாண்டிக் தீவு பகுதியில் விமானங்கள் தரை இறக்கப்பட்டுள்ளன.எரிமலை வெடிப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து 220 கி.மீ தொலைவு(120மைல்) வரை விமானங்கள் பறக்க அனுமதி இல்லை. செவ்வாய்க்கிழமை மதியத்தில் எரிமலை சாம்பல் ஸ்காட்லாந்து பகுதியை வந்தடையும் என அதிகாரிகள் கூறினர்.
ஐஸ்லாந்து எரிமலையில் தொடர்ந்து வெடிப்பு ஏற்பட்டால் அந்த சாம்பல் பிரிட்டன், மேற்கு பிரான்ஸ் மற்றும் வடக்கு ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை வந்தடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்லாந்தின் முக்கிய சர்வதேச விமான நிலையமான கெப்ளாவிக் விமான நிலையம் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டது. ஐஸ்லாந்து பகுதி முழுவதும் எரிமலை சாம்பல்கள் பரவி உள்ளன. ஐஸ்லாந்தின் கிரிம்ஸ்வோடன் பகுதி எரிமலை வெடிப்பு மேற்கு ஐரோப்பாவின் விமானப் போக்குவரத்தில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 1998 மற்றும் 2004ஆம் ஆண்டில் கிரிம்ஸ்வோடோன் பகுதியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு பிரிட்டன் விமானப்போக்குவரத்தை பாதிக்கவில்லை. தற்போதைய வெடிப்பு பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது.


தலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா ஓமர் படுகொலை.
தலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா ஒமர் படு‌கொலை செய்யப்பட்டதாக தகவல்‌கள் தெரிவிக்கின்றன.ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவர் முல்லா முகமது ஓமர் பாகிஸ்தானில் கொல்லப்பட்டுவிட்டதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.
குவெட்டாவில் இருந்து வடக்கு வாஜிரிஸ்தானுக்கு செல்லும் வழியில் அவர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தானின் டோலோ தொலைக்காட்சி தெரிவித்தது.எனினும் அவர் எப்படி, யாரால் கொல்லப்பட்டார் என்ற விவரத்தை அந்த தொலைக்காட்சி வெளியிடவில்லை.
இதனிடையே முல்லா ஓமர் கொல்லப்பட்டதை பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தினார். முல்லா ஓமர் கொல்லப்பட்ட தகவல் சரியானது தான் என்றார் அவர்.எனினும் முல்லா ஓமர் கொல்லப்பட்ட தகவலை தெஹ்ரீக் இ தலிபான் அமைப்பு மறுத்துள்ளது.
ஜேர்மானியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்: ஏங்கலா மார்கெல் வலியுறுத்தல்.
மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளின் மக்கள் பணிச்சூழல் குறித்து கடந்த வாரம் ஜேர்மனி அதிபர் ஏங்கலா மார்கெல் கருத்து தெரிவித்தார்.அவரது கருத்து கடும் விமர்சனத்திற்கு ஆளான நிலையில் பாதிப்பை சரி செய்யும் வகையில் மார்கெல் முயற்சி மேற்கொண்டுள்ளார். தற்போது தமது ஜேர்மனி மக்களும் கடுமையாக உழைக்க வேண்டும் என அதிபர் கூறியுள்ளார்.
அவரது கருத்தை டெர் ஸ்பைகல் நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதிபர் ஏங்கலா மார்கெல் கிரீஸ், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளின் பணிச்சூழல் குறித்து கருத்து வெளியிட்டார். அந்த கருத்து கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
அதிபர் கருத்து குறித்து அரசு செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் செய்பெர்ட் கூறுகையில்,"உலக தர நிலைக்கு ஏற்ப ஐரோப்பிய மக்கள் மிகுந்த திறன் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். மிக சிறப்பாகவும் செயல்பட வேண்டும் என்பது அதிபரின் கருத்து ஆகும். அதனை அவர் தெளிவாக ஐரோப்பிய மக்களுக்கு தெரிவித்துள்ளார்" என்றார்.ஐரோப்பிய நாடுகள் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த போது ஜேர்மனி பல நூறு கோடி யூரோ கணக்கில் நிதி உதவி அளித்துள்ளது. இது குறித்து அதிபர் ஏங்கலா மார்கெல் கூறுகையில்,"கடன் பிரச்சினை அதிகரிக்காமல் இருக்கவே தாம் அத்தகைய கருத்தை தெரிவித்ததாக விளக்கம் அளித்தார்".
கிரீஸ், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் போன்ற நாடுகளில் கூடுதல் விடுமுறையை ஊழியர்கள் பெறுவது குறித்து மார்கெல் விமர்சித்து இருந்தார். இதற்கு அந்த நாடுகளின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.மேற்குறிப்பிட்ட நாடுகளில் ஊழியர்கள் முன்னதாக ஓய்வு பெறும் நிலை இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க மறுக்கும் குவைத் அரசு.
பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை குவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.சுற்றுலா, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக குவைத்திற்கு வர விசா கேட்டு விண்ணப்பம் செய்துள்ள பாகிஸ்தான், சிரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை குவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
எனினும் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், பாதுகாப்பு சூழல் சீரடைந்ததும் இந்த தடை விலக்கிக் கொள்ளப்படும் என்றும் அந்நாட்டு குடியேற்றத்துறை அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளது. 
லண்டனை தகர்ப்போம்: அல்கொய்தா மிரட்டல்.
இங்கிலாந்து தலைநகர் லண்டன் மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்தப் போவதாக அல்கொய்தாவின் புதிய தலைவர் சயீப் அல் ஏடெல் மிரட்டல் விடுத்துள்ளார்.ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து அவரது முதன்மை பாதுகாப்பு அதிகாரியான சயீப் அல் ஏடெல் அல்கொய்தாவின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு அல்கொய்தாவின் மற்ற தலைவர்களுடனும், தலிபான் அமைப்பின் முக்கிய தலைவர்களுடனும் சயீப் அல் ஏடெல் ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர்களின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் பின்லேடனை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லண்டன் நகரை தாக்கி சீர்குலைக்குமாறு அல்கொய்தா தீவிரவாதிகளை சயீப் அல் ஏடெல் கேட்டுக்கொண்டார் என்று தலிபான் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் எசனுல்லா தெரிவித்தார்.
ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் பிரிட்டன் தான் முதுகெலும்பாகத் திகழ்வதாக சயீப் கருதுகிறார். லண்டன் மீது தாக்குதல் தொடுத்து சீர்குலைவை ஏற்படுத்திவிட்டால் ஒட்டுமொத்த ஐரோப்பிய கண்டமும் ஆட்டம் கண்டுவிடும் என்றும் அவர் நினைக்கிறார். இதனால் தான் லண்டனை தாக்கும் மெகா திட்டத்தை அவர் வகுத்து வருகிறார் என்றும் எசனுல்லா குறிப்பிட்டார்.லண்டன் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அல்கொய்தா எச்சரிக்கை விடுத்ததை அடுத்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லண்டனில் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி பாதுகாப்பு வீரர்களை அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
2008ல் மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது போல லண்டனில் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தக் கூடும் என்று பிரிட்டன் கருதுகிறது.இதனால் ஓடும் ரயில்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பாதுகாப்பில் ஈடுபடும் வீரர்கள் எந்த நேரத்திலும் நவீன ஆயுதங்களை கையாள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளம்.
கியூபெக்கின் ரிச்செலியு ஆற்றில் வரலாறு காணாத வகையில் மழை வெள்ளம் உயர்ந்துள்ளது. வெள்ள நீர் பல வீடுகளில் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.மழை வெள்ளத்தை கட்டுப்படுத்த நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு வானிலை ஒத்துழைக்கவில்லை. பலத்த காற்றுடன் மழை தொடர்ந்து பெய்யும் என வானிலை துறை எச்சரித்து உள்ளது.
கியூபெக் மக்கள் பாதுகாப்பு சேவை செய்தித் தொடர்பாளர் பிரான்ஸ் வில்வியே லோய்சல் கூறுகையில்,"இன்னும் சில நாட்களில் மழை வெள்ள அளவு 30 செ.மீக்கும் மேல் அதிகரிக்கும்" என்றார்.
இதனால் பெய்த மழை அளவு 100 செ.மீயை எட்டக்கூடும். காற்றும் மழையும் வடக்குப்பகுதியில் இருந்து தண்ணீரை பெருமளவு கொண்டு வரும். இதனால் செயின்ட் ஜுன் சர் ரிசெலியு பிராந்தியம் மழை நீரில் மேலும் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.இந்தப் பகுதி மொன்றியலின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. மழைக் காற்று மணிக்கு 80 கி.மீ வேகத்தில் வீசும். மழை கொட்டுவதால் உள்ளூர் வணிகம் மிக மந்தமாக உள்ளது. இதனால் வர்த்தகர்கள் கவலை அடைந்துள்ளனர். தண்ணீருக்கு இடையே தான் நாங்கள் நின்று கொண்டு இருக்கிறோம் என வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
நோயின் பகுதியில் 210 வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளனர். அங்கு 100 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அரச நிர்வாக நஷ்டஈடு பெற தகுதி உள்ளவர்களாக உள்ளனர்.மழை வெள்ளம் பாதித்த பகுதியை கியூபெக் முதல்வர் ஜுன் சாரஸ்ட் பார்வையிட்டார். தெற்கு மொன்றியலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 800 ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.கடந்த ஒரு மாதத்திற்கு முன் பெய்ய துவங்கிய மழை தொடர்ந்து நீடிப்பதால் 3 ஆயிரம் வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன. ஆயிரம் பேர் அவர்களது வீடுகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அதிகரித்த கதிர்வீச்சு அபாயம்: ஜப்பானில் பிரச்சனை.
ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருவாரங்களுக்கு முன் வெளியேற்றப்பட்ட கதிர்வீச்சு கலந்த நீரில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 100 மடங்கு கதிர்வீச்சு கலந்திருந்ததாக டெப்கோ நிறுவனம் கூறியுள்ளது.புகுஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தை இயக்கி வரும் "டெப்கோ" வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மே 11ம் திகதி 3ம் உலையில் இருந்து வெளியேறிய கதிர்வீச்சு கலந்த நீரில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 100 மடங்கு அதிகமாக கதிர்வீச்சு கலந்திருந்தது.
மொத்தம் 41 மணிநேரம் வரையிலும் இந்த நீர் வெளியேறிக் கொண்டிருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் அணுமின் நிலையத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள 90 ஆயிரம் டன் கதிர்வீச்சு கலந்த நீரின் ஒரு பகுதியை இடம் மாற்றுவதற்காக அணுமின் நிலையம் அருகில் கடலில் மிதவை வடிவிலான கட்டுமானம் ஒன்று மிதக்கவிடப்பட்டது.ஷிஷூவோகா என்ற நகரில் இந்தக் கட்டுமானம் கடலில் மீன்பிடிப்பவர்களுக்கான மிதக்கும் பூங்காவாக செயல்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மிதவைக் கட்டுமானம் தவிர வேறு பல பெரிய அளவிலான தொட்டிகளும் கதிர்வீச்சு நீரைச் சேமிப்பதற்காகக் கட்டப்பட்டு வருகின்றன.
சட்டதிட்டங்களை மீறிய பெண் கைது.
சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறியும் பெண் டிரைவர் ஒருவர் சமூக வலைதளங்களான பேஸ்புக், யூடியுப் மூலமாக கார் ஓட்டும் பிரசாரம் செய்ததாக கைது செய்யப்பட்டார்.
வளைகுடா நாடான சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தனி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பெண்கள் கார் ஓட்டினால் அது பாவமான செயல் என்றும், அப்படி அவர்கள் கார் ஓட்டக் கற்றுக்கொண்டால் ஆண் பொலிசார் அல்லது ஆண் மெக்கானிக் ஆகியோருடன் ஒன்றாக கலந்து விடுவர் என சவூதி அரசு நினைத்து வந்தது.இதன்படி வீட்டில் கார் வைத்திருப்பவர்கள் பெண்களுக்கு கார் ஓட்ட கற்றுத்தரவோ, சாலைகளில் கார் ஓட்டவோ கூடாது. சம்பளத்திற்கு ஆண் டிரைவர்களை தான் பயன்படுத்த வேண்டும் என சட்டம் உள்ளது. மீறுபவர்கள் தண்டனைக்குள்ளாவர்.
இந்நிலையில் லண்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகையில் வெளியிட்டுள்ள செய்தியில், சவூதி அரேபியாவின் கூபார் நகரைச் சேர்ந்த மன்னால் அல் ஷெரீப் என்ற பெண் ரகசியமாக கார் ஓட்ட கற்றுக்கொண்டு அதனை மற்ற பெண்களிடம் பிரசாரமாக செய்திட நூதன வழியினை கையாண்டார்.சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் நண்பர்களை ஏற்படுத்தி அவர்களுக்கு கார் ஓட்டுவது குறித்து பயிற்சி பாடம் நடத்தியுள்ளார். பின்னர் யூடியுப் எனும் வீடியோ வளைதளமாக நேரடியாக தானே கார் ஓட்டியும் பெண்களிடம் பிரசாரம் செய்துள்ளார். தானாக முன்வந்து நாட்டில் உள்ள பெண்களுக்காக இந்த பிரசாரம் செய்துள்ளதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதிலடி தாக்குதல் நடத்துவோம்: அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை.
எங்கள் மண்ணில் அத்துமீறி விமானத் தாக்குதல் நடத்தி வருவதை இனிமேலும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதல் தொடர்ந்தால் பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.அமெரிக்க உளவுப் பிரிவு(சி.ஐ.ஏ) துணை இயக்குநர் மைக்கேல் மொரேலும், பாகிஸ்தான் உளவுப் பிரிவு(ஐ.எஸ்.ஐ) அதிகாரிகளும் இஸ்லாமாபாதில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.அப்போது பாகிஸ்தானின் பழங்குடியினர் பகுதியில் அமெரிக்கா தொடர்ந்து ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தி வருவதற்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவுத் தலைவர் அகமது சுஜா பாஷா அதிருப்தி தெரிவித்தார்.
பழங்குடியினர் பகுதியில் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்த வேண்டாம் என்று பல தடவை வேண்டுகோள் விடுத்துவிட்டோம். ஆனால் நீங்கள் எங்களது கோரிக்கைக்கு செவி மடுக்க மறுக்கிறீர்கள். உங்களின் இந்த போக்கை நாங்கள் இனிமேலும் பொறுத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
தாக்குதல் தொடர்ந்தால் நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும் என்று அகமது சுஜா பாஷா அழுத்தமாக தங்களது நாட்டின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதாக பத்திரிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது.பாகிஸ்தான் பழங்குடியினப் பகுதியில் உள்ள ராணுவ சோதனைச் சாவடி மீது நேட்டோ ஹெலிகாப்டர் சில தினங்களுக்கு முன்பு திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருவர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்தும் மொரேலிடம் சுஜா பாஷா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகத் தெரியவந்துள்ளது. அமெரிக்கா தாக்கினால் நாங்கள் பதிலடி கொடுப்போம் என்று சுஜா பாஷா கடுமையாக எச்சரித்த போதும் அதற்கு மைக்கேல் மொரேல் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.பாகிஸ்தான் மண்ணில் உள்ள பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்க இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்படுவதன் அவசியத்தை மட்டுமே வலியுறுத்தினார் என்றும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தான் பழங்குடியினப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து நேட்டோ படை ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்படுவதாகப் பாகிஸ்தான் கூறுவதோடு தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகிறது.ஆனால் பாகிஸ்தானின் வேண்டுகோளை அமெரிக்கா ஏற்க மறுக்கிறது. இதனால் இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
எகிப்திற்கு நிதியுதவி அளிக்கும் சவுதி அரேபியா.
எகிப்தில் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்கிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். அதை தொடர்ந்து 17 நாட்களுக்கு பிறகு முபாரக் பதவி விலகினார்.தற்போது எகிப்தின் ஆட்சி அதிகாரம் ராணுவ கவுன்சில் வசம் உள்ளது. இந்நிலையில் போராட்டத்தை தொடர்ந்து கலவரத்தால் பாதிக்கப்பட்ட எகிப்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த சவுதி அரேபியா முன்வந்துள்ளது.
எகிப்துக்கு அந்நாடு ரூ.20 ஆயிரம் கோடி நிதிஉதவி அளிக்கிறது. இதில் மானியமும், கடனுதவியும் அடங்கும். இத்தகவலை எகிப்தின் ராணுவ கவுன்சில் தலைவர் உசேன் தத்தாவி தெரிவித்துள்ளார்.இதே போன்று எகிப்துக்கு அமெரிக்காவும் ரூ.9 கோடி கடனுதவி அளிக்கிறது என்று அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.
விண்வெளி வீரர்களுடன் தொடர்பு கொண்டு பேசிய போப்.
சர்வதேச விண்வெளி மையத்துக்கு எண்டவர் விண்கலம் கடந்த வாரம் புறப்பட்டு சென்றது. அதில் கமாண்டர் மார்க் கெல்லி தலைமையில் 6 வீரர்கள் சென்றனர்.தாங்கள் எடுத்துச் சென்ற ஆல்பா மேக்னடிக் ஸ்பெக்ட்ரோ மீற்றரை விண்வெளி மையத்தில் பொருத்தும் பணியில் நாசா வீரர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் விண்வெளி மையத்தில் உள்ள வீரர்களுடன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர் போப் 16ம் பெனடிக்ட், வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.கமாண்டர் மார்க் கெல்லியிடம் பேசிய போப்,"விண்வெளியிலிருந்து நீங்கள் பூமியை பார்க்கும் போது நாமெல்லாம் ஒரே கூட்டுக்குள் ஒன்றாக வாழ்கிறோம் என்பது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். ஆனால் இங்கு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு பலியாவது எவ்வளவு அபத்தமாக உள்ளது" என குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்த கெல்லி,"உலகத்தில் உள்ள அனைத்து நாடுகள் மீதும் நாங்கள் சுற்றிக் கொண்டிருக்கிறோம். இங்கிருந்து பார்க்கும் போது நாடுகளுக்கு இடையே எந்த எல்லையும் இல்லை. ஆனால் வன்முறையால் மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்வது அபத்தமாகத்தான் இருக்கிறது என்பதை உணர்கிறோம்" என்றார்.துப்பாக்கி சூட்டில் தலையில் காயம் அடைந்த கெல்லியின் மனைவியும், அமெரிக்காவின் அரிசோனா மாநில எம்.பி.யுமான கேப்ரேல் கிப்போர்ட்ஸ் குணமடையவும் போப் வாழ்த்து தெரிவித்தார். தனது மனைவிக்கு ஆசிர்வாதம் வழங்கிய போப்புக்கு கமாண்டர் கெல்லி நன்றி தெரிவித்தார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF