Friday, May 13, 2011

இன்றைய செய்திகள்.

ஐ.பி.எல். போட்டிகளுக்கு சவால் விடும் வகையில் ஸ்ரீ லங்கா பிரீமியர் கிரிக்கட் போட்டிகள் ஜுலையில் ஆரம்பம்.

இந்தியாவின் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டிகளுக்குச் சவால் விடும் வகையில் இலங்கை பிரீமியர் (எஸ்எல்பிஎல்) போட்டிகள் எதிர்வரும் ஜுலையில் ஆரம்பமாகவுள்ளன.இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டிகளின் போது ஒவ்வொரு மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தலா ஒவ்வொரு பிரீமியர் லீக் கிரிக்கட் அணி இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் கீழ் உருவாக்கப்படவுள்ளது. 
தொடர்ச்சியாக பதினெட்டு நாட்கள் வரை 24 போட்டிகளைக் கொண்டதாக நடைபெறும்  இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டிகளும் உலகெங்கும் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளன. அதற்கான ஒளிபரப்பு உரிமையை முதல் இரண்டு வருடங்கள் வரை கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் சேனல் பெற்றுக் கொண்டுள்ளது.
பிரஸ்தாப சேனல் ஜனாதிபதியின் இரண்டாம் மகனும் கடற்படை அதிகாரியுமான யோஷித்த ராஜபக்ஷவின் காதலிக்கு உரித்தானது என்பது குறிப்பிடத்தக்கது.இதன்போது வடக்கு கிரிக்கட் அணிக்கு ஒரிக்ஸ் அணி என்றும் கிழக்கு கிரிக்கட் அணிக்கு நாகா (நாகம்) என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

செனட்சபையை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது! கெஹலிய.

அரசியல் தீர்வு தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தைகளின் போது மேல் நாடாளுமன்றம் அல்லது செனட் சபை அல்லது அது போன்ற ஏதாவது மாற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

தமிழ் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தை சுமுக நிலையில் இடம்பெற்று வருகின்றது. தீர்வொன்றை எட்டக் கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. அரசியல் தீர்வு காண்பதற்காக 13 அவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்துக்கு மேலாகவும் செல்ல நேரிடலாம். அதன்படி மேல் நாடாளுமன்றம் அல்லது செனட் சபை அல்லது அது போன்ற வேறு ஏதாவது மாற்று நடவடிக்கை ஒன்று குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

இதேவேளை சர்வகட்சி பேரவையின் தலைவரும் சிரேஸ்ட அமைச்சருமான திஸ்ஸ வித்தாரண கருத்து தெரிவிக்கையில், சர்வகட்சி பேரவையின் இறுதி அறிக்கையாக செனட்சபை அமைய வேண்டும் என்றார்.இதன்படி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படக் கூடிய 63 அங்கத்தவர்களையும் மொத்தமாக 75 அங்கத்தவர்களைக் கொண்ட செனட் சபையாக அமைய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளோம். 

ஒவ்வொரு மாகாணசபைகளிலிருந்தும் 7 பேர் வீதம் 9 மாகாண சபைகளில் இருந்தும் 63 பேர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவர். 63 மாகாணசபை அங்கத்தவர்களில் இருந்தும் 10 பேர் தெரிவு செய்யப்படுவர். இருவர் பெரும்பான்மை சமூகத்தில் இருந்து ஜனாதிபதியினால் நியமிக்கப்பட வேண்டும் என்று சர்வகட்சி பேரவை பரிந்துரை செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பதவி விலகினார் கருணாநிதி! மே 15 ஆம் திகதி பதவியேற்கிறார் ஜெயலலிதா.

தமிழக தேர்தல் முடிவுகள் முழுதாக வெளிவரும் முன்பே ஊடகங்களில் வந்த தகவல்களைப் பார்த்து விட்டு உடனடியாக ஓடோடிச் சென்று ஆளுநரிடம் தனது ராஜினாமாக் கடிதத்தைச் சமர்ப்பித்து விட்டார் கருணாநிதி.. 

திமுக தலைமையிலான சட்டமன்றமும் கலைக்கப்பட்டது. எதிர்வரும் 15 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் ஜெயலலிதா 3 ஆவது முறையாக தமிழ்நாடு முதல்வராக பதவி ஏற்கிறார்.தற்போதைய நிலவரப்படி ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க கூட்டணி 190 இடங்களைப் பெற்று முன்னணியிலும், கருணாநிதி தலைமையிலான தி.மு.க கூட்டணி 35 இடங்களைப் பெற்று ஜீரணிக்க முடியாத தோல்வியையும் சந்தித்துள்ளது.. தி.மு.க வின் பணபலம், அதிகாரபலம், போன்றவற்றை எல்லாம் தமிழக மக்கள் சிதறடித்து விட்டார்கள்..
கின்னஸ் சாதனை படைத்த மாபெரும் ஊழலான ஸ்பெக்ட்ரம், பக்கத்தில் 7 கோடிப் பேர் இருந்தும் ஈழத்தமிழர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை நிறுத்த முடியாமல் போனதால் அதனை தமிழக மக்களால் ஜீரணிக்க முடியாமை..போன்ற காரணங்கள் தி.மு.க தேர்தல் முடிவுகளை தெளிவாகக் காட்டுகின்றன.



திமுகவுக்கு எதிரான கோபத்தை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர் : ஜெயலலிதா

திமுகவுக்கு எதிரான கோபத்தை வாக்காளர்கள் இத்தேர்தலில் காண்பித்துள்ளார் என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா  கூறியுள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பது குறித்து இன்று மாலை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். இதன் போது அவர் கூறியதாவது:
தேர்தல் வெற்றி எங்களுக்கு கிடைத்த வெற்றி அல்ல. ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. மக்களுக்கு கிடைத்த வெற்றி. திமுகவுக்கு எதிரான கோபத்தை வாக்காளர்கள் தங்கள் வாக்குகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். தி.மு.க., ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். மக்கள் தேர்தலுக்காக காத்திருந்தனர். வாய்ப்பு கிடைத்ததும் தி.மு.க., ஆட்சியை தூக்கி எறிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இத்தேர்தலில் பணபலம் தோல்வி அடைந்துள்ளது.

தமிழகத்தின் பொருளாதார நிலையை அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு சீரமைக்கும். தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சியின் போது பொருளாதார நிலை சீர்தூக்கியே இருந்திருக்கிறது.
கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகத்தை தி.மு.க., ஆட்சி சீரழித்து விட்டது. 1 லட்சம் ரூபாய் கடனில் தமிழக மக்களை ஆழ்த்தியுள்ளது. ஒரு கட்டடம் முழுமையாக சிதைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மற்றொரு புதிய கட்டடத்தை மேல் எழுப்ப வேண்டிய கட்டத்தில் அ.தி.மு.க., இருக்கிறது. அதை திறம்பட செய்து நல்லாட்சி செலுத்துவோம். அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும்.
இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி தர வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை. இலங்கை தமிழர்களின் இந்த நிலைக்கு அந்நாட்டு அரசு தான் காரணம். இதனை மாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கலாம். அப்படி பொருளாதார தடை விதித்தால் இலங்கை அதிபர் ராஜபக்ஷே பணிந்து தான் ஆகவேண்டும். மேலும் போர்க்குற்றம், இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். இதற்கு மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும். அதனை நாமும் வலியுறுத்துவோம்.
தேர்தல் வெற்றிக்காக தமிழக மக்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் 18 மாதங்களில் நிறைவேற்றப்படும். அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகள் நலத்திட்டங்கள் மற்றும் நல்லாட்சிக்கு வித்திடும் வாக்குறுதிகளை கொண்ட ஒரு முழுமையான தேர்தல் அறிக்கையாக இருந்தது என்பதை இந்த தருணத்தில் நினைவு கூறுகிறேன்.
தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளால் இந்த முறை தேர்தல் நேர்மையாக, நியாயமாகவும் நடந்துள்ளது. மக்களின் உண்மையான உணர்வுகளை தேர்தல் கமிஷனின் நடத்தை விதிமுறைகள் அனுமதித்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்திய தேர்தல் கமிஷனுக்கு மனமார்ந்த் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.ஆளுநர் அழைப்பு விடுத்த பின்னரே, நாங்கள் பதவி ஏற்கும் தேதி குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார்.

பின்லேடன் மீதான தாக்குதலை தடுத்தால் பாகிஸ்தான் படையினரையும் தாக்க ஒபாமா உத்தரவிட்டிருந்தார்?

ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லும் நடவடிக்கைக்கு இடையூறாக பாகிஸ்தான்இராணுவம் வருமாயின் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டதாகவும்,இதற்காகவே தான் கூடுதல் படையினரை அனுப்புவதற்கு அவர் சம்மதித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.பாகிஸ்தான் அபோதாபாத்தில் மறைந்து வாழ்ந்துவந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கா நாட்டின் கடற்படை சீல் வீரர்கள் சுற்றுவளைத்து சுட்டுக் கொன்றனர்.
மிக மிக இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின் பின்னரான பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.இந்நிலையில் பின்லேடன் மீதான தாக்குதலுக்கு இடையூறாக பாகிஸ்தான்இராணுவம் செயற்பட்டால் அவர்கள் மீதும் தாக்குதலை தொடுக்க ஒபாமா உத்தரவிட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கென பாகிஸ்தானுக்குள் சென்ற ஹெலிகொப்டர்கள் தவிர பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில்இரண்டு தாக்குதல் ஹெலிகொப்டர்களையும், அதிக அளவிலான வீரர்களையும் அமெரிக்கா தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒசாமாவின் மனைவி அமெரிக்காவிற்கு தகவல்களை தரலாம்: ஒமரின் நண்பர்.
ஆசிரியையாக பணியாற்றியவரும், நன்கு படித்தவருமான ஒசாமா மனைவியிடம் இருந்து அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சில தகவல்களைப் பெறலாம் என பின்லேடன் மகனின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.ஒசாமா பின்லேடனின் வாழ்க்கை வரலாற்றை எழுத அவரின் மகன் ஒமருக்கு உதவியாக இருந்தவர் ஜீன் சாசன். ஒமரின் நெருங்கிய நண்பர் இவர்.
ஒசாமாவின் மனைவியர் குறித்து அவர் கூறியதாவது: ஒசாமா பின்லேடனின் மனைவியர் எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்தவர்கள். ஒசாமாவின் சதித் திட்டம் மற்றும் செயல்பாடுகள் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. தப்பித்தவறி ஒசாமாவிடம் அவர்கள் எதுவும் கேட்டாலும் அவர் சொல்லமாட்டார்.
அவர்களுடன் எதைப் பற்றியும் விவாதிக்க மாட்டார். ஒசாமாவை பார்க்க வரும் யாரையும் அவரின் மனைவியர் பார்க்கவோ அல்லது சந்திக்கவோ அனுமதி கிடையாது. யாராவது ஒருவர் ஒசாமாவின் மனைவியரை பார்க்க வேண்டும் என அவர்கள் வீட்டிற்கு வந்தாலும் அவரை யாரும் சந்திக்கவும் மாட்டார்கள்.ஒசாமா கொல்லப்பட்டது முதல் அவரின் மனைவியர் எல்லாம் பாகிஸ்தான் நிர்வாகத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளனர். வேண்டுமானால் அவர்கள் ஒரு சில தகவல்களை மட்டுமே தெரிவித்திருக்க முடியும்.
ஒசாமா பின்லேடன் மனைவியரில் ஒருவர் நன்கு படித்தவர். ஆசிரியராக பணியாற்றியவர். அதனால் அவர் மட்டும் வேண்டுமானால் அமெரிக்க விசாரணை அதிகாரிகளிடம் சில தகவல்களைத் தெரிவிக்க வாய்ப்பு உண்டு.ஒசாமாவின் மற்றொரு மனைவி ஏமன் நாட்டைச் சேர்ந்தவர். அவர் படிக்காதவர். கணவனே கண்கண்ட தெய்வம் என வாழ்ந்தவர். அதனால் அவரிடம் இருந்து அமெரிக்க அதிகாரிகள் தகவல்களைப் பெறுவது மிகவும் கடினமே.
ஒசாமா இறந்து விட்டதற்கான ஆதாரங்களைத் தரும்படி அவரின் உறவினர்கள் கேட்கின்றனர். அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். ஒசாமா விவகாரத்தில் என்ன நிகழ்ந்தது, அவர் கொல்லப்பட்ட பின் தங்களை அழைக்காதது ஏன் என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.மேலும் ஒசாமாவின் உடலை பார்க்கவும், இறந்தது அவர்தானா என்பதை உறுதி செய்யவும் விரும்பினர். ஆனால் அதுவெல்லாம் நடக்கவில்லை. ஒசாமா இறந்து விட்டதற்கான ஆதாரங்களை அவரின் குடும்பத்தினரிடம் காண்பித்தால் உறவினர்கள் உட்பட பலரும் அவர் இறந்து விட்டார் என்பதை நம்புவர்.
"தனது தந்தைக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்படும். சதாம் உசேன் போல தன் தந்தைக்கு எதிராகவும் வழக்கு விசாரணை நடக்கும்" என ஒசாமாவின் மகன் ஒமர் நம்பினார். ஒசாமா செல்லும் பாதை சரியில்லை, அப்பாவிகளை கொல்ல வேண்டாம் என அவரிடம் பல முறை வாக்குவாதம் செய்தவர் ஒமர்.
சிரியாவில் துப்பாக்கிச் சூடு: 18 பேர் பலி
சிரியா ராணுவம் நடத்திய தாக்குதலில் 8 வயது சிறுவன் உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.இத்தகவலை மனித உரிமை மீறல் தடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் வசிக்கும் இடங்களின் மீது சிரியா ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
1982ம் ஆண்டு ஆஸத் தந்தை ஹபீஸ் அகமது அதிபராக இருந்தபோது சன்னி முஸ்லிம்களை ஒழிப்பதற்காக இதுபோன்ற தாக்குதலை நடத்தினார். அதை நினைவுபடுத்தும் விதமாக இப்போதைய தாக்குதல் அமைந்ததாக தன்னார்வ தொண்டு அமைப்பினர் தெரிவித்தனர்.அப்போது ஹமா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. சிரியாவில் உள்ள மனித உரிமை அமைப்பின் தலைவர் அமர் குராமி பேசுகையில், புதன்கிழமை பீரங்கியால் நடத்தப்பட்ட தாக்குதலில் இவர்கள் உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.
அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் இதுவரை 770 பேர் கொல்லப்பட்டதாகவும் ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுவரை சிறையில் உள்ளோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்துக்கும் அதிகம் என்றும் குராபி கூறினார். மக்கள் அதிகம் வாழும் 3 பகுதிகளில் பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயந்திரத் துப்பாக்கி மூலம் சுடுவது உள்ளிட்ட வெடிச் சத்தம் விடிய விடிய தொடர்ந்து கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பகுதி முழுவதும் தொலைத் தொடர்பு வசதி மற்றும் மின் வசதியை அரசு துண்டித்துள்ளது.இதன் மூலம் நகர்களை தனிமைப்படுத்தி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க ராணுவம் முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு: 69 பேர் பலி.
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள துணை நிலை ராணுவ பயிற்சி மையத்தில் இன்று பயங்கர குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 69 பேர் இறந்தனர் என பொலிசார் தெரிவித்தனர்.
முதல் குண்டு மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைப்படை நபரால் வெடிக்கப்பட்டது. இரண்டாவது குண்டு வெடிப்பு ஏற்கனவே புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மூலம் ஏற்பட்டது என தகவல்கள் கூறுகின்றன.இந்த மாத துவக்கத்தில் அல்கொய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க சிறப்புப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதலை நடத்தி உள்ளோம் என பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் கூறியுள்ளனர்.
பயிற்சி முடித்து வாகனத்தில் புதிய வீரர்கள் அமர்ந்து இருந்த போது குண்டு வெடிப்புகள் ஏற்பட்டன. குண்டு வெடிப்பில் இறந்த 65 பேர் துணை ராணுவ நிலையத்திற்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள். மிகச்சிறிய அளவில் பொது மக்களும் இறந்துள்ளனர் என அதிகாரிகள் கூறினர்.
குண்டு வெடிப்பில் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த வீரர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். குண்டு வெடிப்பு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.பெஷாவரின் வடமேற்கில் 35 கி.மீ தொலைவில் உள்ள சாபகதர் பகுதியில் இரட்டை குண்டு வெடிப்பு நடந்தது. இந்த இடம் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ளது. குண்டு வெடிப்பில் வாகனங்களும் சேதம் அடைந்தன.
விண்வெளித் துறைக்கான நிதி குறைப்பு: பிரிட்டனில் கடும் எதிர்ப்பு.
அறிவியல் மற்றும் விண்வெளித் துறையினருக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை பிரிட்டன் அரசு குறைத்துள்ளது. இதற்கு எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.உலக நாடுகளில் விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாக பிரட்டன் திகழ்கிறது. தற்போது இத்துறைக்கு அளிக்கப்படும் நிதி குறைக்கப்படுவதன் மூலம் விண்வெளி ஆய்வாளர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகள் நிதி குறைப்பு நடவடிக்கையால் தங்களது ஆராய்ச்சியில் தேவையான ஆதார வளத்தை தேடுவதில் நெருக்கடி ஏற்படும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி மற்றும் ஆய்வுத் துறையில் எதிர் காலத்தில் இளைஞர்கள் ஈடுபடுவதற்கு வாய்ப்பையும் இந்த நிதி குறைப்பு தடுக்கிறது. கடந்த இளவேனிற்கால செலவின ஆய்வில் அறிவியல் துறைக்கான நிதி அறிக்கையில் பெருமளவு நிதி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 4 ஆண்டுகளுக்கு விண்வெளித்துறைக்கு மேற்கொள்ளப்படும் செலவினங்களில் 21 சதவீதம் குறைக்கப்படுகிறது. 2010 -11 ஆண்டில் அறிவியல் விண்வெளித்துறைக்கு பிரிட்டன் அரசு 100 மில்லியன் பவுண்ட ஒதுக்கீடு செய்தது.2014-15 ம் ஆண்டு காலகட்டத்திற்கு இந்த செலவினத் தொகை 79 மில்லியன் பவுண்ட ஆக விண்வெளி ஆராய்ச்சித்துறைக்கு குறைக்கப்பட்டுள்ளது. முந்தய நிதி அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியில் 21 சதவீதம் தற்போதைய ஒதுக்கீட்டில் விண்வெளித்துறைக்கு குறைக்கப்பட்டுள்ளது.
துனிஷிய முன்னாள் ஜனாதிபதி பென் அலி உதவியாளர்களின் கணக்குகள் பறிமுதல்.
துனிஷியாவின் முன்னாள் ஜனாதிபதி பென் அலியின் 4 உதவியாளர்களின் 12 வங்கி கணக்குகளை பிரான்ஸ் புதன்கிழமை முடக்கியது.இந்த நடவடிக்கை மூலம் 120 இலட்சம் யூரோக்கள் முடக்கப்பட்டுள்ளன. முன்னாள் துனிஷிய ஆட்சியாளரின் குடும்பத்தினருக்கு சொந்தமான விமானம் ஒன்றை பிரான்ஸ் நீதிமன்றம் ஏற்கனவே பறிமுதல் செய்தது.
கடந்த ஜனவரி மாதம் பென் அலி துனிஷியா ஜனாதிபதி பதவியில் இருந்து விலக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மீதும், அவரது உதவியாளர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பென் அலியின் குடும்பத்தினர் மீதும், அவரது உதவியாளர்கள் மீதும் ஊழல் தடுப்பு அமைப்புளான ஷெர்பா, பிரான்ஸ் சர்வதேச வெளிப்படை அமைப்பு மற்றும் அரபு மனித உரிமை அமைப்பு ஆகியவை மேற்கொண்ட வழக்கின் அடிப்படையில் இத்தகைய பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஷெர்பா அமைப்பின் வழக்கறிஞர் வில்லியம் பொர்டன் கூறுகையில்,"இந்த பறிமுதல் முடிவு ஒரு கடலில் ஒரு துளியாகும்" என்றார். ஊழல் விசாரணையில் பாரிசை சுற்றி உள்ள 10 இடங்கள் உள்பட 30 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
அயல்நாடுகளில் கனேடிய துருப்புகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும் திட்டம் இல்லை: ஜெனரல் பீட்டர்.
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கனேடியத் துருப்புகள் இந்த ஆண்டு இறுதியில் நாடு திரும்புகிறது.இதற்காக ஆப்கானிஸ்தானில் இருந்து பெரும் பீரங்கிகள், ஆயுதங்கள் ஆகியவற்றை கனடா துருப்புகள் எடுத்து வருகின்றன. ஆப்கானிஸ்தானில் இருந்து துருப்புகள் நாடு திரும்பும் நடவடிக்கையால் அடுத்த ஒரு ஆண்டிற்கு அயல்நாடுகளில் கனேடிய துருப்புகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும் திட்டம் இல்லை.
இதுகுறித்து லெப்டினஸ்ட் ஜெனரல் பீட்டர் கூறியதாவது: ஹெலிகாப்டர்கள், கனரக வாகனங்கள், ஆயிரம் கடல் கண்டெய்னர்கள் கருவிகளை கனடா கொண்டு வர வேண்டி உள்ளது. தற்போது அயல்நாட்டு முகாம் பணியை நிறைவு செய்வதற்கு சில காலம் ஆகும் என்பதால் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான் இதர அயல்நாடுகளில் கனேடிய துருப்பை அனுப்புவது குறித்து முடிவு செய்ய முடியும்.2012 ஆம் ஆண்டு டிசம்பர் காலகட்டத்தில் அயல் நாடுகளுக்கு துருப்புகளை அனுப்பும் நிலையை அடைந்திருப்போம் என்றால் கனேடிய ராணுவத்தின் ஆயுத வாகனங்கள் தரம் மேம்படுத்தவும் இலண்டன் ஒண்டரியோவில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் மேற்கு காந்தகார் பகுதியில் தலிபான் தீவிரவாதிகளை எதிர்த்து கனேடிய துருப்பினர் போராடுகிறார்கள். காபூலில் நேட்டோ படைக்கு மேஜர் ஜெனரல் மைக்டே வியாழக்கிழமை பொறுப்பேற்றுள்ளார்.இந்தப்படைப்பிரிவு ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கிறது. பயிற்சியில் தெரிவு செய்ய்ப்பட்ட 23 ஆயிரம் ஆப்கானிஸ்தான் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். டே கனேடிய சிறப்பு படைப்பிரிவின் முன்னாள் தலைவர் ஆவார். இவரது தலைமையில் 950 கனேடிய பயிற்சியாளர்கள் ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பார்கள்.
நாஜிப்படையில் பணியாற்றியவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை.
இரண்டாம் உலகப்போரின் போது ஜேர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் நாஜிப்படையில் பணியாற்றிய ராணுவ வீரர் ஒருவர் போர் குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாஜி இயக்கத்தில் ராணுவ வீரராக பணியாற்றிய டெமிஜன்ஜூக்(91) என்ற உக்ரைன் நாட்டு ராணுவ வீரர் மீது இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் போர் குற்றவாளியாக அறிவித்தது.
இவர் இரண்டாம் உலகப்போரின் போது போலாந்து நாட்டில் உள்ள டெரிபிலிங்கா முகாமில் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த வேளையில் இவர் மீது 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூதர்களை போலாந்தின் சோபிபூர் நகரில் கொன்று குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.ஹிட்லரின் ஆணைப்படி இதை செய்ததாகவுகம் கூறப்படுகிறது. தற்போது இவர் அமெரிக்காவின் ஒஹிகோ மாகாணத்தில் மெக்கானிக்கல் என்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
ராணுவத்திலிருந்து ஒய்வு பெற்ற ப‌ோதும் இவர் மீதான வழக்கு ஜேர்மனியின் முனிச் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் இவர் போர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை தொடர்நது 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பிரிட்டன் எம்.பிக்கு தரப்பட்ட ரகசிய பணம் அம்பலம்.
பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பொதுக்கணக்கு குழு(பி.ஏ.சி) பாராளுமன்றத்தின் தணிக்கை அறிக்கையைப் பார்வையிட்டது.அதில் பிரிட்டன் பாராளுமன்ற எம்.பி ஜார்ஜ் கல்லோவே என்பவருக்கு 1,35,000 பவுண்ட் பணம் லண்டனில் உள்ள பாகிஸ்தான் ஹை கமிஷன் மூலம் தரப்பட்டது தெரிந்தது.
இந்தப் பணம் எதற்காக தரப்பட்டது என வெளியுறவு அமைச்சகம் அளிக்கவில்லை. இதுகுறித்து வெளியுறவுச் செயலரிடம் பி.ஏ.சி கேட்ட போது,"இது வெளியுறவு அமைச்சகத்தின் ரகசிய நிதியில் இருந்து அளிக்கப்பட்டது. அதுபற்றிய விவகாரங்களை பகிரங்கமாகத் தெரிவிக்க முடியாது" என்றார்.காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் தரப்பை முன்மொழிவதற்காக பிரிட்டன் எம்.பிக்கு இப்பணம் ரகசியமாகக் தரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவிற்கு ஆதரவு தரும் ரஷ்யா.
அமெரிக்காவின் எத்தகைய தீர்மானத்திற்கும் நாங்கள் ஆதரவு தருகின்றோம் என்று ரஷ்யா கூறியுள்ளது.ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ரஷ்ய பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் செர்ஜி கூறியதாவது: கடந்த 2001ல் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட போது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இயற்றிய "அமெரிக்கா தன்னை பாதுகாத்து கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கலாம்" என்ற தீர்மானத்துக்கு நாங்கள் ஆதரவு அளித்தோம்.
அதன்படி ஒசாமாவை கொல்ல அமெரிக்காவுக்கு உரிமை உண்டு. ஆனால் அமெரிக்கா, பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் நடத்திய அதிரடி நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா விளக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
தொலைக்காட்சியில் தோன்றிய கடாபி: சர்ச்சை தீர்ந்தது.
லிபியாவில் நேட்டோ படைகளின் கடுமையான தாக்குதலை தொடர்ந்து கடாபி பற்றிய தகவல்கள் வெளியாகாமல் இருந்தன.இந்நிலையில் திரிபோலியில் உள்ள ஒரு ஹோட்டலில் பழங்குடியின தலைவர்களை கடாபி சந்தித்து பேசியது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
லிபியாவில் கடாபியை எதிர்த்து கடந்த மூன்று மாதங்களாக கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றன.
கடந்த மாதம் 30ம் திகதி திரிபோலியில் உள்ள கடாபியின் வீடு மீது நேட்டோ படைகள் நடத்திய பயங்கர தாக்குதலில் கடாபியின் இளைய மகன் மற்றும் மூன்று பேர குழந்தைகள் பலியாயினர். இந்நிலையில் கடாபி உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பது குறித்த சர்ச்சை நீடித்து வந்தது.சர்ச்சையை தீர்க்கும் வகையில் கடந்த புதன்கிழமை திரிபோலியில் உள்ள ஒரு ஹோட்டலில் பழங்குடியின தலைவர்களை கடாபி சந்தித்து பேசியது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
அல் ஜமாஹிரியா என்ற தொலைக்காட்சியில் பழங்குடியின தலைவர்களுடன் கடாபி உரையாடுவது போன்ற காட்சி காட்டப்பட்டது. அப்போது,"லிபியன் பழங்குடியினரின் பிரதிநிதிகள் நாம் என்பதை உலகிற்கு காட்டுவோம்" என்று கடாபி கூறினார். பதிலுக்கு கூட்டத்தில் இடம் பெற்ற பழங்குடியின பெரியவர் ஒருவர், "நீங்கள் வெற்றி பெறுவீர்கள்" என்று கடாபியை பார்த்து கூறினார்.
கூட்டத்தை முன்னிட்டு ஹோட்டலின் சில அறைகள் சீல் வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின. ஹோட்டலில் கடாபியின் தலைமையில் கூட்டம் நடைபெறுவதை அறிந்த நேட்டோ படையினர் அதன் மீது தாக்குதல் நடத்தினர்.இதில் ஹோட்டலின் ஜன்னல்கள் பழுதடைந்தன. லிபியா கிளர்ச்சியாளர்களுக்கு உதவ அமெரிக்கா 11 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்து இருந்தது. இதில் ஒரு பாகமாக முதன் முதலாக கிளர்ச்சியாளர்களுக்கு அனுப்பப்பட்ட உணவு பொட்டலங்கள் லிபியா வந்து சேர்ந்தன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF