Saturday, May 14, 2011

இன்றைய செய்திகள்.


தற்கொலைப்படையை தயார் செய்வதாக கூறியது மேர்வினின் தனிப்பட்ட கருத்தாம்!

ஐ.நா. நிபுணர்குழு அறிக்கைக்கு எதிராக ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக தற்கொலை செய்து கொள்வதாக மேர்வின் சில்வா கூறிய கருத்தை அரசாங்கம் கருத்தில் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 
இதுதொடர்பாக தனியார் போக்குவரத்துச் சேவை அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவிக்கையில்,ஜனாதிபதிக்காக தற்கொலைப்படையை தயார் செய்து வைத்துள்ளதாக மேர்வின் சில்வா கூறிய கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகும். இந்தக் கருத்துக்கும் அரசாங்கத்திற்கும்  எந்தவிதமான சம்பந்தமில்லை என்றார்.

நிபுணர்குழுவின் அறிக்கைக்கு எதிராக ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் 18 பேரை தற்கொலைப்படையாக தயார் செய்து வைத்துள்ளதாக பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார்.மேர்வின் சில்வாவின் இந்த கருத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா என அமைச்சர் சி.பி.ரத்னாயக்கவிடம் கேட்டபோது அவர் இல்லை என மறுத்தார்.

ஒரு சிலர் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதத்தில் நடந்து கொள்வார்கள். மற்றும் ஒரு சிலர் அதற்கு எதிராக நடந்து கொள்வார்கள் என்று சி.பி.ரத்னாயக்க மேலும் தெரிவித்தார்.ஐ.நா. அறிக்கைக்கு எதிராக அமைச்சர் சி.பி.ரத்னாயக்க கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறார்.பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களை வெசாக் முடிவுற்ற பிறகு ஐ.நா சபைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக சி.பி.ரத்னாயக்க தெரிவித்தார்.
கொலைக்குற்றவாளி மஹிந்தவை ஜனாதிபதியாக விட்டது ரணில் விக்கிரமசிங்க செய்த குற்றம்: பொலிஸ் மாஅதிபர் பாலசூரிய.

கொலைக்குற்றவாளியாகி கம்பி எண்ணவிருந்த மஹிந்த ராஜபக்ஷவை தப்பவிட்டு, ஜனாதிபதியாக வரவிட்டது ரணில் விக்கிரமசிங்கவின் குற்றமென பொலிஸ் மா அதிபர் குறைப்பட்டுக்கொண்டுள்ளார்.
அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது வெளியாட்கள் முன்னிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபரை கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்திருந்தார். அதன் காரணமாக மனம் நொந்துபோன அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் தன் மனக்குறையை வெளியிட்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது பொலிஸ் மா அதிபர் பாலசூரிய இதுவரை வெளிவராமல் பொலிஸ் புத்தகங்களுக்குள் மட்டும் மறைந்து போயிருந்த பல உண்மைகளைத் தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அவற்றின் விபரம் கீழ்வருமாறு,1991ம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மிக நெருக்கமான பிரதேச அரசியல் சகாவான பெலியத்தை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.கே. குணரத்தின என்பவர், பிரதேச சபையின் பதவிப் பிரச்சினையொன்றின் காரணமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.
அதன் பின் பெலியத்தை பிரதேச சபைத் தோ்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அவர் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.அதன் மூலம் அன்றைய பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாடுகளுக்குப் பெரும் தடைகள் ஏற்பட்டது.
ஆனால் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்தபின் 1997ம் ஆண்டு பிரஸ்தாப குணரத்தின மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரது படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் 1997ம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும், ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் காமினி அத்துக்கோரளையும் இணைந்து பெலியத்தையில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன்போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐ.தே.க. பொதுச் செயலாளருமான காமினி அத்துக்கோரளை, ஐக்கிய தேசியக் கட்சி பதவிக்கு வந்தவுடன் குணரத்தினவின் கொலையாளிகள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தார்.
அதற்கேற்ப 2002ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய  தேசியக் கட்சி பதவிக்கு வந்தவுடன் குணரத்தினவின் படுகொலை மாத்திரமன்றி, தங்காலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜினதாச வீரசிங்கவின் புதல்வர் லலித் வீரசிங்க படுகொலைச் சம்பவம் தொடர்பிலும் விசாரிக்கவென குற்றப்புலனாய்வு அதிகாரிகளைக் கொண்ட விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன.
அன்றைய உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க பிரஸ்தாப படுகொலைச் சம்பவங்களின் விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பை பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லயனல் குணதிலக்கவிடம் ஒப்படைத்திருந்ததுடன், குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ். ஞானரத்தின அவரின் கீழ் பணியாற்றியிருந்தார்.உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஞானரத்தினவின் விசாரணைகளின் போது பிரஸ்தாப படுகொலைகள் இரண்டையும் அன்றைய (1994-2002) அமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான சகாவான சண்டி மல்லி எனப்படும் எம்.கே. ரஞ்சித் என்பவரால் மேற்கொள்ளப்பட்டிருந்ததற்கான தடயங்கள் கிடைத்திருந்தன.
அவரைக் கைது செய்து விசாரித்தபோது பிரஸ்தாப படுகொலைகள் இரண்டையும் மேற்கொள்ளுமாறு மஹிந்த ராஜபக்ஷவே தன்னைப் பணித்திருந்ததாகவும், கொலைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தும் ரகத்தைச்சோ்ந்தது என்றும், அதனை மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலையில்  அமைந்திருக்கும் கால்டன் வீட்டின் மேற்கூரையில் ஒளித்து வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.விசாரணையில் வெளிவந்த தகவல்கள் தொடர்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஞானரத்தின உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.  தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவர் பணிக்கப்பட்டுள்ளார்.
அதற்கேற்ப உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஞானரத்தின தலைமையிலான விசேட பொலிஸ் குழுவொன்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராபஜக்ஷவைக் கைது செய்வதற்காக தங்காலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கையில், அது பற்றிய தகவல் அறிந்த அவர் உடனடியாக அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைத் தொடர்பு கொண்டு தன்னைக் காப்பாற்றுமாறு தொலைபேசியில் கெஞ்சியிருக்கின்றார்.
ரணில் விக்கிரமசிங்க உடனடியாக உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்கவைத் தொடர்பு கொண்டு மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று பணிப்புரை விடுத்துள்ளார்.ஆயினும் ஜோன் அமரதுங்க அதற்கு பெரிதாக இசைந்து கொடுக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷவைக் கைது செய்வதற்கு போதுமான சாட்சியங்கள் இருப்பதாக அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அதன்போது அவருக்கு அரசியல் நிலவரங்கள் குறித்து விளக்கமளித்த ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவைக் கைதுசெய்வதென்பது அன்றைய ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு அரசியல் ரீதியில் பெரும் அனுகூலமாக அமைந்து விடும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியிலான பிளவுகள் தொடர இடமளிப்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கே நன்மை பயக்கும் என்பதன் காரணமாக இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசியல் களநிலவரம் அறிந்து பணியாற்றுமாறு அவர் ஜோன் அமரதுங்கவைப் பணித்துள்ளார்.
அதனையடுத்து மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்வதற்காக தங்காலை நோக்கிப் போய்க் கொண்டிருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஞானரத்தினவைத் தனது மொபைல் போன் ஊடாகத் தொடர்பு கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விசாரணை நடவடிக்கைககளைக் கைவிட்டு உடனடியாகக் கொழும்புக்குத் திரும்பி வரும்படி பணிப்புரை விடுத்துள்ளார்.
அதுமட்டுமன்றி அதன்பின் படுகொலை செய்யப்பட்ட குணரத்தின மற்றும் லலித் வீரசிங்க ஆகியோரின் கொலைச்சம்பவங்களின் விசாரணைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுடன், அதன் பின் வந்த காலத்தில் பிரஸ்தாப விசாரணை தொடர்பாக தங்காலை நீதிமன்றம் மற்றும் குற்றப்புலனாய்வுப் பொலிஸ் தலைமையகம் என்பவற்றில் பாதுகாக்கப்பட்டிருந்த அறிக்கைகளும் காணாமற்போயிருந்தன.
அதன்பின் வந்த காலப்பகுதியில் விசாரணைகளின் போது தன்னைக் காட்டிக்கொடுத்த கடுப்பில் தென் மாகாண அமைச்சராக இருந்த சண்டி மல்லி எனப்படும் எம்.கே. ரஞ்சித்தை வம்பொட்டா என்றொரு பாதாள கும்பல் தலைவன் ஊடாக மஹிந்த ராஜபக்ஷ தீர்த்துக் கட்டியிருந்தார்.அதனையடுத்து வந்த சில வருடங்களுக்குள் வம்பொட்டாவும் இனந்தெரியாத நபர்களால் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.அதன் காரணமாக மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட படுகொலைகளிலிருந்து அவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், இன்றைக்கு நாட்டின் ஜனாதிபதியாக வீற்றிருக்கும் அதிர்ஷ்டமும் அவருக்குக் கிட்டியுள்ளது.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்துவேன்: ஜெயலலிதா சூளுரை.
போர்க்குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று தமிழக முதல்வராக நாளை மறுநாள் பதவியேற்கவிருக்கும் ஜெயலலிதா சூளுரைத்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றியடைந்து எதிர்வரும் 15 ம் திகதி தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா, இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் இரண்டு தீர்வுகளை முன்வைத்துள்ளார்.
போர்க்குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுப்பதுடன் இலங்கை மீதான பொருளாதார தடையினை விதிக்க இந்திய மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜெயா தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நான் பலமுறை விளக்கியுள்ளேன். இது ஒரு சர்வதேசப் பிரச்சினை. எனவே தமிழக அரசால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே செயற்பட முடியும். அதற்கு மேல் செயற்படுவதானால் அது மத்திய அரசால் மட்டுமே, அதாவது இந்திய அரசால் மட்டுமே செயற்பட முடியும்.
இருப்பினும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நான் இரண்டு தீர்வுகளை முன்வைக்க விரும்புகின்றேன். போர்க்குற்றம் புரிந்ததாகத் தெரிவிக்கப்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச போர்க்குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம். அதை செய்யுமாறு இந்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்துவேன்.
இரண்டாவதாக, இலங்கைத் தமிழர்கள் கௌரவமான, சுதந்திரமான வாழ்க்கை வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும். அதைச் செய்ய இலங்கை ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் மறுத்தால், இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும்.அப்படிச் செய்தால், இலங்கை அரசு பணிவதைத் தவிர வேறு வழியில்லை. இதைச் செய்யுமாறு இந்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்துவேன்' என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க கிரீன்காட் லொத்தர் விஸா! கணினி கோளாறினால் தவறான அறிவிப்பு.
கணினி கோளாறு காரணமாக 22,000 இற்கும் அதிக எண்ணிக்கையானோருக்கு அமெரிக்க கிரீன் காட் விஸா லொத்தரில் வெற்றி கிடைத்திருப்பதாக தவறாக அறிவிக்கப்பட்டதாகவும் இதற்கான குலுக்கல் மீண்டும் நடத்தப்படும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.கணினி நிகழ்ச்சி நிரலாக்கத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த கிரீன்காட் லொத்தர் விஸாவுக்கான குலுக்கலில் 30 நாட்கள் கொண்ட விண்ணப்பக்காலம் முழுவதிலுமிருந்து விண்ணப்பதாரிகளை தெரிவு செய்வதற்கு பதிலாக முதல் இரு நாட்களிலிருந்து மாத்திரம் 90 சதவீதமானோர் தெரிவு செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
50,000 விஸா லொத்தருக்காக 19.6 மில்லியன் பேர் விண்ணப்பித்திருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தவறினால் ஏற்பட்ட அசௌகரியங்கக்கும் ஏமாற்றங்களுக்கும் கவலையடைவதாக இந்த கிரீன்காட் விஸா திட்டத்தை மேற்பார்வை செய்யும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி டேவிட் டொனாஹூ தெரிவித்துள்ளார்.தற்போது இந்த கணினி கோளாறு சீர்செய்யப்பட்டுள்ளதாகவும் விண்ணப்பதாரிகளுக்கு ஜூலை 15 ம் திகதியளவில் சரியான பெறுபேறுகள் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க விரும்பியவர் பரிதாப மரணம்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய ஜப்பானைச் சேர்ந்த மலையேறும் வீரர் ஒசாகி டகாஷி உடல்நலக்கோளாறு காரணமாக 8,600 மீற்றர் உயரத்தில் உயிரிழந்ததார்.எவரெஸ்ட் சிகரத்தை எட்டி விட முயன்ற இவர் அதற்கு சுமார் 100 மீற்றர் முன்னதாகவே மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் நேற்று மதியம் மரணமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒஸாகி டகாஷியின்(59) உடல் சனிக்கிழமை மலையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்படவுள்ளதுஇவ்வருடத்தில் இவர் உள்ளடங்கலாக 3 பேர் எவரெஸட் சிகரத்தில் ஏற முயற்சித்து உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்கு வழங்கும் உதவிகளை நிறுத்த வேண்டும்: உலக நாடுகள் கோரிக்கை.
பின்லேடன் அதிரடி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பின்லேடன் பாகிஸ்தானில் தங்கியிருந்தது அந்த நாட்டு உளவுபடைக்கு தெரியுமா என்ற சந்தேகம் உலகமக்களிடையே உள்ளது.இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்கு பதில் பாகிஸ்தான் தலைவர்கள் அமெரிக்க எதிர்ப்பு உணர்வுகளை பரப்பி வருகின்றனர். பாகிஸ்தானில் இன்னும் பல தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். அவர்களை பிடிப்பதில் கவனம் செலுத்தாத பாகிஸ்தான் அரசு அமெரிக்காவின் தாக்குதலை மட்டும் கண்டித்தது.
பின்லேடனை சுட்டுக் கொன்றதால் பாகிஸ்தான் அரசும் அந்த நாட்டில் உள்ள அணு உலைகளும் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது. இதை அமெரிக்கா உதவியின்றி பாகிஸ்தான் முறியடிப்பது கஷ்டம் என்று பல்வேறு நாட்டின் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் ஒரு தீவிரவாத ஆதரவு நாடு. எனவே பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வரும் ராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுவே தீவிரவாதத்துக்கு துணை போகும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளிக்கும் பதிலடியாக இருக்கும் என்று சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டம் நடந்தது. இதில் அமெரிக்காவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நேட்டோ படைகளின் தாக்குதல் கோழைத்தனமானது: கடாபி.
நேட்டோ படைக் குண்டுகள் என்னை தாக்க முடியாது என லிபிய அதிபர் கடாபி முழக்கமிட்டார்.அவரது ஓடியோ செய்தி அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தலைநகர் திரிபோலியில் வியாழக்கிழமை நேட்டோ படை நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
திரிபோலி தாக்குதலில் 3 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக லிபிய அரசு அதிகாரிகள் கூறினர். நேட்டோ படைத் தாக்குதலில் கடாபி காயம் அடைந்தார் என்றும் அவர் திரிபோலியை விட்டு வெளியேறி விட்டார் என்றும் இத்தாலி வெளியுறவுத் துறை அமைச்சர் தகவல் வெளியிட்டார்.
இத்தாலி அமைச்சரின் அறிக்கை வெளியான நிலையில் நேட்டோ படைகள் என்னை நெருங்க முடியாது என தற்போது கடாபி முழக்கமிட்டுள்ளார். லிபிய தலைநகர் திரிபோலியில் வெள்ளிக்கிழமை இரவு இரு பயங்கர குண்டு வெடிப்புகள் நடந்தன.வான் வழியே ஜெட் போர் விமானங்கள் சீறி பாய்ந்து உறுமல் சத்தம் கேட்டது. குண்டு வீச்சில் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் இல்லை.
கறுப்புப் பட்டியலில் இடம்பெறும் ஈரான் வங்கி.
ஜேர்மனியின் ஹம்பர்க்கில் ஈரான் வங்கி உள்ளது. இந்த வங்கிக்கும் ஈரானின் ரகசிய அணு ஆயுத திட்டத்திற்கும் தொடர்பு உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
மே 23ம் திகதி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அயல் துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஹம்பர்க்கில் செயல்படும் ஈரான் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.ஐரோப்பியர், ஈரானியர் வர்த்தக வங்கியாக ஹம்பர்க் ஈரான் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியானது 1971ம் ஆண்டு ஈரானிய வர்த்தகர்களால் ஹம்பர்க்கில் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வங்கி ஈரானின் ரகசிய அணு பரவல் திட்டத்தில் தொடர்பு கொண்டு இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டுபிடித்துள்ளது. கறுப்புப் பட்டியலில் அந்த வங்கியை வைப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.ஐரோப்பிய ஒன்றிய ஒருமித்த முடிவுப்படி ஹம்பர்க் ஈரான் வங்கி செயல்பாட்டுக்கு தடை விதிக்கவும் ஜேர்மனி அரசு முடிவு செய்துள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அணு ஆயுதங்களை ரகசியமாக தயாரித்து வருவதாக ஈரான் மீது சர்வதேச தடைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தங்களது அணு திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கான நோக்கமுடன் உள்ளது. அணு ஆயுதம் தயாரிப்பது எங்களது நோக்கம் அல்ல என டெகரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அணு ஆயுதத்திற்கு உதவும் யுரேனியம் செறிவூடுட்டலை ஈரான் நிறுத்த மறுத்ததால் ஜுன் மாதம் ஐ.நா கவுன்சில் ஈரான் மீது நான்காவது தடையை விதித்தது.
முன்னாள் ஜனாதிபதி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.
பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி ஜாக்குஸ் சிராக் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்கு உள்ளது. இந்த வழக்கு விசாரணையை தொடர்வது குறித்து பிரான்ஸ் தலைமை நீதிமன்றம் அடுத்த வாரம் முடிவு செய்கிறது.இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிரான்சின் உயர் தலைவர் மீது நடைபெறும் முதல் ஊழல் வழக்கு விசாரணையாக ஜாக்குஸ் சிராக் முறைகேடு வழக்கு உள்ளது.
சிராக் மீது ஊழல் வழக்கு விசாரணையை தொடர்வதற்கு முன்னர் அரசியலமைப்பு குழுவை ஆலோசிக்க வேண்டுமா? அல்லது ஊழல் விசாரணை தடை இல்லாமல் தொடர முடியுமா? என்பது குறித்து தலைமை நீதிமன்றம் முடிவு எடுக்கிறது.முன்னாள் ஜனாதிபதி சிராக் மீதான ஊழல் வழக்கின் முதல் விசாரணையை காசேஷன் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த நிலையில் சிராக் முறையீட்டை ரத்து செய்து விசாரணையை தாமதம் இல்லாமல் நடத்த வேண்டும் என ஒரு விசாரணையாளர் வலியுறுத்தினார்.
நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை கூறுகையில்,"மே 20ம் திகதியன்று 2 ஊழல் வழக்குகள் இணைக்கப்பட்டு ஒரு விசாரணையாக அரசியலமைப்பு ரீதியாக நடத்தப்பட வேண்டுமா? என்பது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும்" என்றார்.சிராக் ஊழல் வழக்கு விசாரணை மார்ச் மாதம் துவங்கியது. சிராக் பாரிஸ் மேயராக இருந்த போது ஏற்பட்ட 18 ஆண்டு ஊழல் வழக்கு விசாரணை இழுபறியாக உள்ளது. சிராக் 1995-2007 ம் ஆண்டில் ஜனாதிபதி ஆக இருந்தார். இதனால் விசாரணையில் இருந்து தப்பினார்.
மோசமான விபத்தில் இருந்து தப்பிப் பிழைத்த விமானம்.
மொன்றியலில் இருந்து புறப்பட்ட ஜெட் விமானத்தில் மின்கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவசரமாக ஹொரண்டோ விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.அமெரிக்கா ஈகிள் ஏர்லைன்ஸ் விமானம் 52 பயணிகளுடன் காலை 8 மணிக்கு மொன்றியல் விமான நிலையத்தில் இருந்து சிகாகோ விமான நிலையத்திற்கு புறப்பட்டது.
இந்த விமானம் புறப்பட்ட ஒரு மணிநேரத்தில் விமான கேபினில் மின்கசிவு பிரச்சனை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மொன்றியலில் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் காலை 9.04 மணிக்கு அவசரமாக தரை இறக்கப்பட்டது.கேபின் மின் கசிவு பிரச்சனை குறித்து 15 நிமிடம் பைலட் எச்சரித்ததை தொடர்ந்து விமானம் தரை இறக்கப்பட்டது. இதில் யாரும் காயம் அடையவில்லை. 49 பயணிகள் வேறு விமானங்கள் மூலமாக சிகாகோ அனுப்பப்பட்டனர்.
மின்கசிவு தொடர்பாக அமெரிக்க ஈகிள் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் எட் மார்டலே கூறுகையில்,"வழமையான நடைமுறையின்படி விமானம் ஹொரண்டோ விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது" என்றார்.கேபினில் உள்ள விளக்குகளை தொழில்நுட்ப நிபுணர்கள் அணைத்ததும் மின்கசிவு வாசனை பிரச்சனை சரி செய்யப்பட்டது. அமெரிக்க ஈகிள் ஏர்லைன்ஸ் விமானம் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு மீண்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஹோஸ்னி முபாரக்கின் மனைவி கைது.
எகிப்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி முபாரக்கின் மனைவி ஊழல் வழக்கு விசாரணை தொடர்பாக கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.70 வயது திருமதி முபாரக் இதய நலக்குறைவு காரணமாக பின்னர் ஷரம் எல் ஷேக் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். எகிப்தில் ஏற்பட்ட புரட்சிப் போராட்டம் காரணமாக முபாரக் கடந்த பெப்பிரவரி மாதம் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.
முறைகேடாக சொத்துக் குவித்தது தொடர்பாக முபாரக்கிடமும் அவரது மனைவியிடமும் விசாரணை நடைபெற்றது. முபாரக் 30 ஆண்டுகள் எகிப்தில் ஆட்சி செய்து வந்தார். அவர் ஊழல் முறைகேடு செய்து கைது செய்யப்பட்ட நிலையில் ஷரம் எல் ஷேக் மருத்துவமனியல் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.அவரைப் போலவே அவரது மனைவி திருமதி முபாரக்கும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெறுகிறார். ஷரம் எல் ஷேக் மருத்துவமனையின் தலைவர் முகமது பதல்லா கூறுகையில்,"திருமதி முபாரக் மாரடைப்பு மற்றும் உயர் ரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்படுகிறார்" என்றார்.
அவர் 24 மணி நேரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்படுகிறார். முபாரக் முறைகேடாக சொத்து குவித்தது குறித்தும் போராட்டக்காரர்களை கொடூரமாக கொன்றது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.83 வயது முபாரக் கைது செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனை சிகிச்சையை தொடர்கிறார். அவரது காவல் 15 நாள் நீடிக்கப்படுவதாக வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. திருமதி முபாரக் வங்கி கணக்கில் 30 லட்சம் டொலர் உள்ளது. அதே போன்று மிக சொகுசு பங்களா உள்ளது. இது குறித்து திருமதி முபாரக்கிடம் விசாரணை நடைபெறுகிறது.
கிராம வங்கி இயக்குநர் பதவியிலிருந்து யூனுஸ் திடீர் ராஜினாமா.
வங்க தேசத்தின் பொருளாதார நிபுணரும், கிராமின் வங்கி இயக்குனருமான யூனுஸ் தன்னுடைய இயக்குனர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.வங்க தேசத்தை சேர்ந்தவர் யூனுஸ். இவர் பொருளாதார நிபுணரும் கூட. தன்னுடைய நாட்டில் ஏழை மக்களுக்கு என்று தனியாக கிராமின் வங்கி என்ற கூட்டுறவு நிதிநிறுவனத்தை நடத்தி வந்தார்.
இவரின் முயற்சியால் வங்க தேச நாட்டு மக்களின் வாழ்வில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. இதனையடுத்து இவருக்கு கடந்த 2006ம் ஆண்டு சிறந்த சமூக சேவைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.தொடர்ந்து வங்கதேச அரசு கிராமின் வங்கியின் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டார். இவரின் தற்போதைய வயது 70. இவர் கடந்த 2000ம் ஆண்டிலிருந்து வங்கியின் இயக்குனர் பதவியில் இருந்து வருவதாகவும், வங்கியின் சட்டதிட்டத்தின் படி 60 வயதை கடந்துள்ளதால் இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நீக்கத்தை எதிர்த்து அந்நாட்டின் சுப்ரீம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும் யூனுசுக்கு எதிராக தீர்ப்பு கிடைத்தது. இதனால் மனம் வெறுத்த யூனுஸ் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அரசுக்கு கடிதம் எழுதினார்.இந்த கடிதம் குறித்து கருத்து தெரிவித்த நிதியமைச்சர் ஏ.எம்.ஏ.முகித், இணை இயக்குனராக உள்ள நூர்ஜஹான் பேகம் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அடுத்த மூன்று மாதங்களில் புது இயக்குனர் குழு நியமிக்கப்படும் என தெரிவித்தார்.
ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: 90 பேர் பலி.
ஆப்கானிஸ்தானில் பாரா மிலிட்டரி ராணுவ முகாம் அருகே நடந்த இரு குண்டுவெடிப்புகளில் 90 பேர் பலியாயினர்.ஆப்கானிஸ்தானின் ஷபிக்தார் மாகாணத்தில் உள்ளது செர்ஸாதா மாவட்டம். பழங்குடியினர் வசிக்கும் இந்த பகுதி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ளது.
இங்குள்ள பாரா மிலிட்டரி பயிற்சி முகாமில் நேற்று திடீரென குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதில் 90 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர்.பலியானவர்கள் அனைவரும் ராணுவ பயிற்சி பெறுவர்கள். தலிபான் பயங்கரவாதிகள் இந்த குண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF