கூகுள் நிறுவனம் "குரோம்புக்" என்ற பெயரில் மடிக்கணணியை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் கணணியில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் தேடல் பொறியாக கூகுள் விளங்குகிறது.இந்நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோக்குப் போட்டியாக, கூகுள் குரோம் என்ற ஆணைத் தொகுப்பில் இயங்கக் கூடிய குரோம்புக் என்ற பெயரில் மடிக்கணணியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்வகை கணணிகளை சாம்சங் மற்றும் ஏசர் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. சந்தையில் உள்ள இதர மடிக்கணணிகளை விட கூகுள் குரோம் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.இதில் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் அல்லது வேர்டு போன்ற மென்பொருள்களுக்கு பதிலாக கூகுள் வழங்கும் "கிளவுட் கம்ப்யூட்டிங்" வசதி மூலம் இணையத்தில் நேரடியாக மின்னஞ்சல் மற்றும் ஸ்பிரெட் ஷீட் வசதிகளை பயன்படுத்தலாம்.
மேலும் வைரஸ் தடுப்பு மென்பொருள் உள்ளிட்ட மென்பொருள்களை இந்த மடிக்கணணியில் நிறுவிக் கொள்ளாமல் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.வரும் ஜூன் 15ம் திகதி முதல் சப்ளை தொடங்கும் என்று கூகுள் அறிவித்துள்ளது. தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், பிறகு ஆசிய சந்தைகளிலும் இந்த மடிக்கணணிகள் விற்பனைக்கு வர உள்ளன.
இது தவிர வணிக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கான குரோம்புக் மடிக்கணணிகளையும் கூகுள் அறிமுகப்படுத்துகிறது. இதில் வர்த்தக பயன்பாட்டிற்கான மாதச் சந்தா 28 டொலர் எனவும், கல்வி சார்ந்த பயன்பாடுகளுக்கான சந்தா 20 டொலர் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக கூகுளின் குரோம்புக் மடிக்கணணி விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.