Sunday, May 15, 2011

இன்றைய செய்திகள்.


இலங்கையின் முதல் பெண் பிரதம நீதியரசர்.

இலங்கையின் வரலாற்றில் முதலாவது பெண் பிரதம நீதியரசர் ஆகின்றார் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க. இவர் எதிர்வரும் 17 ஆம் திகதி பிரத நீதியரசராக பதவி ஏற்கின்றார். 

இவர் இலங்கையின் 33 ஆவது பிரதம நீதியரசர் ஆவார். இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்.

ஜெயலலிதா முதலமைச்சராக பதவி ஏற்பதனால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை – இலங்கை பத்திரிகை.

ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லை என இலங்கை பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.கடந்த சில காலமாக அனைத்து இந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரான ஜெயலலிதா ஜெயராம் இலங்கை அரசாங்கத்தின் எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
எனினும், முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டதன் பின்னர் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் என அரசியல் விமர்சகர் மொஹான் சமரநாயக்க லக்பிம பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.தமிழகத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஜெயலலிதா இவ்வாறு இலங்கைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டதன் பின்னர் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்களவர்களைப் போன்றே தமிழர்களுக்கும் நாட்டுப்பற்று முக்கியம்: மனோ கணேசன்.
சிங்கள மக்களைப் போன்றே தமிழ் மக்களுக்கும் நாட்டுப்பற்று இருக்க வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.இன்று வெளிவந்திருக்கும் ஞாயிறு வாராந்த திவயின பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மக்களைப் போன்று இலங்கையின் தமிழ் மக்கள் மத்தியிலும் இலங்கையானது எங்கள் நாடு என்ற எண்ணம் தலைதூக்கியிருக்க வேண்டும். அதாவது பிறந்த நாட்டின் மீது தாய்நாட்டுப் பற்று அனைவருக்கும் அவசியமானது.அதே போன்று எங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வை வெளியாரைக் கொண்டு தீர்த்துவிட முடியாது. அதற்குப் பதிலாக நாங்களே எங்களுக்குள்ளான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே இணக்கப்பாட்டுக்கான வழியாக இருக்கும்.
நம் நாட்டின் தலைவர்களை சர்வதேசத்திடம் ஒப்படைத்து தண்டனை வாங்கிக் கொடுப்பதால் ஆகப் போவது ஒன்றுமில்லை. நம் நாட்டின் தலைவர்கள் நம்முடன் இருந்தாக வேண்டும்.நம் நாட்டின் அரசியல் தலைவர்கள் நம்முடன் இருந்தால் மட்டும் தான் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவும், நாட்டை அபிவிருத்தி செய்து கொள்வதற்குமான சூழல் ஏற்படும்.இலங்கையராகிய நாம் எமது பிரச்சினைகளை வெளியுலகுக்குக் கொண்டு சென்றதே நாம் செய்த தவறாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரையை நடைமுறைப்படுத்த இலங்கை அரசு இணக்கம்.
இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் செயலாளரின் நிபுணர் குழு அறிக்கையில் பரிந்துரைத்துள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளது. இந்த தகவலை லக்பிம செய்திதாள் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தரப்புக்களை கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐ.நா.நிபுணர் குழுவின்  அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹன, ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனை சந்தித்துள்ளார்.
இதன்போது இந்த அறிக்கையில் சுட்டிக்;காட்டப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய குழு ஒன்றை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுடன் இணைந்ததாக இருக்கும் என அறிவிக்கப்படுகிறது.அதனை தவிர இறுதிப்போரின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக இந்தக்குழு கண்டறிந்தால் அது தொடாபிலான விசாரணைகளையும் முன்னெடுக்கும் என்றும பாலித கோஹனவும் பான் கீ மூனும் இணங்கியுள்ளனர்.
அதேநேரம் நிபுணர் குழுவின் அறிக்கையில் வேறு பல விடயங்களையும் நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாக லக்பிம குறிப்பிட்டுள்ளது.இலங்கை அரசாங்கம்;, சிங்கள மக்களுக்கு ஒன்றையும் சர்வதேசத்துக்கு ஒன்றையும் கூறிவருவதாக ஜே வி பி அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்த்க்கது.
தலிபான் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்த 6 பேர் மீது குற்றச்சாட்டு.
பாகிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்ததாக 6 பேர் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதில் 3 பேர் அமெரிக்கர்கள் ஆவார்கள்.இவர்களில் இரண்டு பேர் ப்ளோரிடா மசூதிகளில் இமாம்களாக உள்ளவர்கள் ஆவார்கள். குற்றம் சாட்டப்பட்டுள்ள இதர 3 பேர் பாகிஸ்தானில் உள்ளனர்.
பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அமெரிக்கா-பாகிஸ்தான் உறவில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள 6 பேருக்கும் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.தலிபான் தீவிரவாதிகளுக்கு நிதி உதவியதாக 6 பேர் மீது நான்கு நிலை குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த விவரத்தை ப்ளோரிடாவுக்கான அமெரிக்க சட்ட அதிகாரி விப்ரடோ பெர்ரர் தெரிவித்தார்.
தீவிரவாதிகளுக்கு 50 ஆயிரம் டொலர் வரை நிதி உதவி செய்து இருப்பதாக குற்றச்சாட்டு ஆவணத்தில் உள்ளது. ஒரு பனிப்பாறையில் இது சிறிய அளவு தான் என்று பெர்ரர் கூறினார். தலிபான்களுக்கு உதவிய ப்ளோரிடா நபர் ஹபீஸ்கான், அவரது மகன்கள் இர்பான்கான் மற்றும் இசார்கான் ஆகியோர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மியாமியில் உள்ள ப்ளாக்லர் மசூதியில் ஹபீஸ்கான் இமாமாக உள்ளார். இசார்கான் மியாமிக்கு அருகே உள்ள மார்கேட் ஜமாத் அல்முமினின் மசூதியில் இமாமாக உள்ளார். இந்த மசூதியில் தவறான செயல்களில் ஈடுபடவில்லை என அதிகாரிகள் கூறினார்.பாகிஸ்தானில உள்ள அல்ரகுமான், அலாம் செப், அமீனாகான் தலிபான்களுக்கு நிதி உதவியாக செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆள்கடத்தல் கொலைசதிக்கும் இவர்கள் உதவியுள்ளதாக கூறப்படுகிறது.

முகத்தில் அசிட் ஊற்றிய காதலனை அதே பாணியில் பழிவாங்கிய காதலி! ஈரானிய நீதிமன்றம் அதிரடி .

ஒரு தலைப்பட்சமாகக் காதலித்த தனது காதலியின் முகத்தில் அஸிட் ஊற்றி அவரின் தோற்றத்தை விகாரமாக்கி ஒரு கண்ணையும் குருடாக்கிய காதலனின் முகத்தில் அஸிட் ஊற்றி பழிக்குப் பழி வாங்கும் சந்தர்பபத்தை நீதிமன்றம் பாதிக்கப்ட்ட அந்தப் பெண்ணுக்கு வழங்கியுள்ளது. ஈரானிய நீதிமன்றமே இந்தப் பழிக்குப் பழிவாங்கும் உரிமையை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. 32 வயதான ஆமினா பஹ்ரமி என்ற பெண்ணே பாதிக்கப்பட்டவராவார். 


இவரும் இவரின் முகத்தில் அஸிட் ஊற்றிய அவரின் காதலரும் டெஹ்ரான் கல்கலைக்கழகத்தில் பயிலுபவர்கள். பழங்கால தீர்ப்பு முறைகள் ஈரானில் இன்னமும் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றே பழிக்குப் பழி வாங்கும் உரிமையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்குதல். அந்த முறையின் கீழேயே இந்தத் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. 27 வயதான மாஜித் மொஹவதி என்பவரே சல்பூரிக் அமிலத்தை இந்தப் பெண் மீது வீசியவர்.

அதனால் அழகிய தோற்றமுடைய அவரின் முகம் விகாரமாகிப் போனது. தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு இந்தப் பெண்ணைப் பல தடவைகள் கெஞ்சியும் அவர் அதற்கு சம்மதிக்காததால் ஆத்திரமடைந்தே மாஜித் இந்தக் கொடூரத்தைப் புரிந்துள்ளார். ஆமினாவுக்கு 19 சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டும் அவருக்கு கண் பார்வையோ அல்லது பழைய தோற்றமோ கிடைக்கவில்லை. 


2004ல் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம் ஆமினாவுக்கு 19000 பவுண்களை நட்டஈடாக வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டு மாஜித்துக்கு சிறைத் தண்டனையும் வழங்கியது. ஆனால் இந்த நட்டஈட்டை ஆமினா ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த ஆறு வருடங்களுக்கு மேல் தான் அனுபவித்து வரும் வேதனையை மாஜித்தும் அனுபவிக்க வேண்டும் என்று கூறி தனக்கு பழிவாங்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டு மேன்முறையீடு செய்தார். 


பழிவாங்கத் துடிக்கும் ஆமினாவிடம் மாஜித்தின் தாயார் மன்றாடியுள்ளார். அவருக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் ஆமினா தனது பிடிவாதத்தைக் கை விடவில்லை. இப்போது மேன்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம் ஆமினாவுக்கு சார்பாகத் தீர்ப்பளித்துள்ளது. மாஜித் தற்போது நோய்வாய்ப்பட்டு டெஹ்ரான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


இருந்தாலும் நீதிமன்ற உத்தரவின் படி நேற்று நண்பகல் அவரது இரு கண்களிலும் தலா 20 துளிகள் வீதம் அஸிட்டைச் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கடைசி நேரத்திலேனும் ஆமினா மனம் மாறினால் இந்தத் தண்டனை இரத்தாகலாம் என்று தெரிவிக்கப்பட்டது... 


ஆனால் ஆறு வருடங்களின் பின் தனக்கு இப்போதாவது நீதி கிடைத்துள்ளமை தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக ஆமினா நேற்று தெரிவித்துள்ளார். இருந்தாலும் நாம் இருவருமே தோற்றுப் போனவர்கள் காரணம் இருவருமே அதிக துன்பங்களைச் சந்தித்து விட்டோம் என்றும் ஆமினா தெரிவித்துள்ளார். 


கடைசியாக இன்று வெளியாகியுள்ள தகவல்களின் படி சர்வதேச அழுத்தங்களினால் காதலனின் முகத்தில் அசிட் ஊற்றுவது பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் மீண்டும் பயங்கர குண்டுவெடிப்பு: 6 பேர் பலி.
பாகிஸ்தானின் கரியன் நகரில் நேற்று நடந்த பஸ் குண்டு வெடிப்பில் 6 பேர் பலியாயினர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே பொலிஸ் பயிற்சி மையத்தில் நேற்று முன்தினம் நடந்த இரண்டு மனித குண்டு தாக்குதலில் 73 பொலிசார் உள்பட 90 பேர் பலியாயினர்.
100க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலை நடத்திய பாகிஸ்தானின் தெக்ரிக் இ தலிபான் அமைப்பினர்,"பின்லேடன் கொல்லப்பட்டதற்காக நடத்தப்படும் முதல் பழிக்குப் பழி நடவடிக்கை இது" என கூறினர்.
இந்நிலையில் பாகிஸ்தானில் ராணுவ மையம் அமைந்துள்ள கரியன் நகரின் சக் கமல் பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்த பஸ்சில் குண்டு வெடித்தது.
இதில் 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 6 பேர் பலியாயினர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கும் தலிபான் அமைப்பே பொறுப்பேற்றுள்ளது.
நேட்டோ படைகளின் தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும்: பிரிட்டன் வலியுறுத்தல்.
கடாபியை ஆட்சியில் இருந்து அகற்ற நேட்டோ படைகள் தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் என பிரிட்டன் ஆயுதப்படை வலியுறுத்தி உள்ளது.பிரிட்டன் பாதுகாப்புத் துறை தலைவர் ஜெனரல் சர்டேவிட் ரிச்சர்ட்ஸ் சண்டே டெலிகிராபுக்கு அளித்த பேட்டியில்,"லிபியாவில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட தாக்குதல்களை கூட்டுப் படைகள் தீவிரப்படுத்த வேண்டும். தாக்குதல் தீவிரமாக மேற்கொள்ளப்படாத பட்சத்தில் கடாபி பதவியில் ஒட்டிக் கொண்டு விடும் விபரீதம் உள்ளது" என அவர் எச்சரித்துள்ளார்.
லிபியாவில் தற்போதைய நிலையில் நேட்டோ மற்றும் நமது அரபு கூட்டாளிகள் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளனர். இருப்பினும் நாம் கூடுதலாக செயல்படவேண்டி உள்ளது. கடுமையான நடவடிக்கையை எடுக்காத பட்சத்தில் கடாபியை பதவியில் இருந்து விலக்குவது கடினம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.நேட்டோ படைகள் தற்போது லிபியாவில் உள்கட்டமைப்பு இலக்குகளை தாக்கவில்லை. கடாபிக்கு நெருக்கடி தருவதற்கு கூடுதல் இலக்குகளை குறிவைத்து தகர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடாபியை நேரிடையாக தாக்க வேண்டும் என்பது நேட்டோ படைகளின் இலக்கு அல்ல. லிபியாவின் கடலோரப் பகுதியான பிரகா நகரில் மக்கள் கொல்லப்படுவதாக தகவல்கள் வருகின்றன.இது குறித்து லிபிய அரசு கூறுகையில்,"வான் வழித்தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மத குருமார்கள். அமைதி வேண்டி பிரார்த்தனைக்கு கூடிய போது கொல்லப்பட்டுள்ளனர்" என்றார்.
அரசு பதுங்கு குழியையே நேட்டோ படைகள் குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கடாபிக்கு எதிராக பெப்பிரவரி 14ம் திகதி முதல் லிபியாவில் போராட்டம் நடந்து வருகிறது. லிபிய மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக நேட்டோ படைகள் அங்கு முகாமிட்டுள்ளன.
ஜேர்மனியில் தொழிலாளர்கள் பற்றாக்குறை: 20 லட்சம் அயல்நாட்டு நிபுணர்கள் தேவை.
ஜேர்மனியில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு இன்னும் சில ஆண்டுகளில் 20 லட்சம் திறன் வாய்ந்த அயல்நாட்டு நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள்.ஜேர்மனியின் தொழிலாளர் ஏஜென்சியின் தலைவர் பிராங்க் ஜூர்கன் வெய்ஸ் கூறுகையில்,"ஜேர்மனிக்கு இன்னும் சில ஆண்டுகளில் 20 லட்சம் தகுதி வாய்ந்த நிபுணர்கள் தேவை" என தெரிவித்துள்ளார்.
அயல்நாட்டில் இருந்து போதிய தொழிலாளர்கள் வந்தால் தான் ஜேர்மனியின் தொழிலாளர் பற்றாக்குறை சரியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் சில துறைகளிலும் சில பிராந்தியங்களிலும் பணியாளர்கள் தட்டுப்பாடு ஏற்கனவே தலைதூக்க துவங்கியுள்ளது.
வருகிற 2025ஆம் ஆண்டு கால கட்டத்தில் ஜேர்மனிக்கு 60 லட்சம் முதல் 70 லட்சம் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர் பற்றாக்குறை பாதியளவு தற்போது குறைக்க வேண்டும் என்று பிளங் வெய்ஸ் டே வெல்ட் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.பணியாளர்கள் உள்ள இடங்களை தேடியே நிறுவனங்கள் செல்லும் நிலை உள்ளது. இதனால் நிறுவனத்தினர் கூடுதல் தொழிலாளர்களை எதிர்பார்க்காத நிலையும் உள்ளது என்று பிராங்க் வெய்ஸ் எச்சரித்தார்.
ஜேர்மனியில் ஐரோப்பியர் அல்லாத இதர நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணி வாய்ப்பு தேட கடந்த மார்ச் மாதம் அதிபர் ஏங்கலா மார்கெல் அரசு அயல் நாட்டு தொழில் நிபுணர்களை அங்கீகரிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.ஜேர்மனியில் எப்போதும் இல்லாத வகையில் தற்போது வேலையில்லாத் திண்டாட்டம் வெகுவாக குறைந்துள்ளது இந்த மாத இறுதியில் வேலையில்லாத் திண்டாட்டம் 30 லட்சத்திற்கும் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேர்மனியின் மிக சிறிய வேலைகளுக்கு மாத ஊதியம் 400 யூரோவாக உள்ளது.
கப்பலில் கடத்தப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல்: 4 பேர் கைது.
மலேசியா நாட்டுக்கு கப்பலில் ரூ.54 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி நகரில் இருந்து மலேசியா நாட்டுக்கு சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு கப்பல் வந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த கப்பலை மலேசியா பொலிசார் சோதனை செய்தனர்.
சோதனையில் சிமெண்ட் மூட்டைகளுக்கு இடையே 215 கிலோ ஹிராயின் என்ற போதை பொருளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பொலிசார் பறிமுதல் செய்தனர்.அதன் மதிப்பு ரூ.54 கோடியாகும். இந்த போதை பொருளை கடத்தி வந்த பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்கண்ட தகவலை கோலாலம்பூரில் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சகோதரரின் கொலைக் காரணத்தை அரசு மூடி மறைக்கிறது: பெண் குற்றச்சாட்டு.
நோவஸ்காட்டியாவைச் சேர்ந்த பெண் தனது சகோதரர் ஹாவர்டு ஹைடே கொலைக் காரணத்தை நோவஸ்காட்டியா அரசு மூடி மறைக்கிறது என குற்றம் சாட்டினார்.தனது சகோதரர் சிறையில் இருந்த நிலையில் விசாரணையின் போது கொடுமைப்படுத்தப்பட்டு இறந்துள்ளார் என மாகாண முதல்வர் டாரல் டெக்ஸ்டருக்கு எழுதிய கடிதத்தில் ஜோனா பிளேர் குறிப்பிட்டுள்ளார்.
சகோதரரின் கொலைக்கான விசாரணையில் அரசின் அதிகாரப்பூர்வ பதில் அதிர்ச்சி அளிப்பதாகவும் வருத்தம் அளிப்பதாகவும் உள்ளது என ஜோனா பிளேர் கூறியுள்ளார். பிளேரின் கடிதத்தில் அரசு தனது சகோதரர் மற்றும் நோவாஸ்காட்டியா மக்கள் விடயத்தில் ஏமாற்றி உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாவலர்களின் நெருக்குதல்கள் காரணமாக சகோதரரின் மூச்சு சுவாசம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜோனா பிளேர் எழுதிய கடிதம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. சகோதரரின் மரணம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ள கருத்தில் நம்பிக்கை இல்லை. எனவே விசாரணையை எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
நோவஸ்காட்டியா நபரின் மரணம் குறித்து மாகாண அரசு பதிலளிக்கையில்,"அதி நவீன டேசர் துப்பாக்கியை பயன்படுத்துவதில் விதிமுறை வரையறை முடிவு செய்யவில்லை. சக்தி வாய்ந்த துப்பாக்கி ஆயுதங்களை மனநிலை பாதிக்கப்பட்ட தனி நபர்களிடம் எப்படி பயன்படுத்த வேண்டும்" என ஆய்வு செய்கிறோம் என்று கூறியது.பொலிசாரின் பிடியில் மரணம் அடைந்த ஹாவர்டி ஹைடே 20 வயது இருக்கும் போது ஸ்கிசோ பிரஎனியா என்ற மனநல பிரச்சனைக்கு ஆளானார் என டெரிக் விசாரணையில் தெரிவிக்கப்பட்டு மரண வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. தனது சகோதரர் மனநலக் குறைபாடுடன் இறந்தார் என கூறுவது தவறு என சகோதரி பிளேர் கூறினார்.
அத்திமீறி தாக்குதல் நடத்தினால் சுட்டுத் தள்ளுவோம்: பாகிஸ்தான் மிரட்டல்.
தங்கள் நாட்டின் மீது அத்துமீறி பறந்து தாக்குதல் நடத்தினாலோ, ஆள் இல்லாத விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்கினாலோ தகுந்த பதில் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று அமெரிக்காவை பாகிஸ்தான் எச்சரிக்கிறது.
11 மணி நேர நீண்ட விவாதத்துக்குப் பிறகு பாகிஸ்தான் நாடாளுமன்றம் சனிக்கிழமை நிறைவேற்றிய ஒரு மனதான தீர்மானத்தில் இந்த எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் எல்லை மீது ஒருதலைப்பட்சமாக டுரோன் ரக விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டால் நேட்டோ படைகள் பாகிஸ்தான் எல்லையில் தங்கி இளைப்பாறவும், எரிபொருள் நிரப்பவும் தரப்படும் வசதிகள் நிறுத்தப்படும் என்று தீர்மானம் எச்சரிக்கிறது.
ஒசாமா பின்லேடனை தலைநகர் இஸ்லாமாபாத் அருகில் உள்ள அபோதாபாத் நகரிலேயே ஹெலிகாப்டரில் தரை இறங்கி வீட்டுக்குள் புகுந்து அமெரிக்க கடற்படை கமாண்டோக்கள் சுட்டுக்கொன்றதை நேரடியாகக் கண்டிக்க முடியாமல் பாகிஸ்தான் நாடாளுமன்றம் இத் தீர்மானத்தை இயற்றியிருக்கிறது.
அபோதாபாத் நகரில் மே 2ம் திகதி காலை நடந்த அமெரிக்க கமாண்டோ தாக்குதல் குறித்து சுயேச்சையான குழு விசாரிக்க வேண்டும். அப்படி நம்முடைய வான் எல்லையில் அத்துமீறிப் பறக்கவும் நினைத்த இடத்தில் இறங்கித்தாக்கவும் அவர்களுக்கு அனுமதி கொடுத்தது யார்?
அப்படி அவர்கள் அனுமதி இல்லாமல் இறங்கியிருந்தால் அவர்களைத் தடுக்கத் தவறியது யார்? பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதன் மூலம் பாகிஸ்தானின் இறையாண்மையை அலட்சியம் செய்திருக்கிறார்கள்? சர்வதேசச் சட்டத்தையே மீறியிருக்கிறார்கள்.
அபோதாபாதில் நடந்த தாக்குதலும் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய எல்லைப்புற மாகாணத்தில் பாகிஸ்தானியப் பழங்குடிப் பகுதிகள் மீது டுரோன் ரக விமானங்கள் மூலமும் அமெரிக்கா நடத்தும் தாக்குதல்களை இனியும் சகித்துக்கொள்ள முடியாது. இது தொடர்ந்தால் நேட்டோ படைகளுக்கு அளித்துவரும் இடை தங்கல் வசதிகளைத் திரும்பப் பெற நேரிடும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானில் பின்லேடன் தங்கியிருந்ததைக் கண்டுபிடிக்கத் தவறியதற்காக தார்மிகப் பொறுப்பேற்று பதவி விலகத் தயார் என்று பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் அகமது ஷுஜா பாஷா முன்வந்தாராம். அவரையும், ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் அஷ்பக் நதீம் அகமது, விமானப்படை துணைத் தளபதி ஆசிம் சுலைமான் ஆகியோரையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கேள்விகளால் துளைத்தெடுத்தனர் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க கடற்படை கமாண்டோ படை தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவுள்ள குழுவை பிரதமரும் தாமும் சேர்ந்து தேர்வு செய்யப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் செளத்ரி நிசார் அலி கான் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
டுரோன் ரக விமானங்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த 2 வழிகள் உள்ளன. அப்படி தாக்குதல் நடத்தும் டுரோன்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை திருப்பித் தாக்குவது அல்லது நேட்டோ படைகளுக்கு அளித்துவரும் இடை தங்கல் வசதிகளை நிறுத்திவிடுவது என்று செய்தித்துறை அமைச்சர் பிர்தெளஸ் ஆஷிக் அவான் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மீது எல்லை தாண்டி தாக்குவதில் தவறு இல்லை என்ற சர்வதேச நிலைப்பாட்டை ஒட்டியே தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அதற்குத் தங்களுக்கு முழு உரிமை உண்டு என்றும் அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்திருக்கிறது.
இந்த எச்சரிக்கைக்குப் பிறகு டுரோன் தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்தாது என்று பாகிஸ்தானுக்கும் தெரியும். நாட்டு மக்களைச் சமாதானப்படுத்துவதற்காக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.
கதிர்வீச்சின் தாக்கம்: வேலை செய்து கொண்டிருந்தவர் திடீர் மரணம்.
ஜப்பானில் உள்ள புகுஷிமா அணு உலையில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.அணு உலையின் கழிவுப் பொருட்களை அகற்றும் பிரிவில் பணியாற்றி வந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக அணு உலையை நிர்வகித்து வரும் டோக்யோ எலக்ட்ரிக் பவர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் நயூகி மட்சுமோடோ தெரிவித்தார்.அந்த ஊழியர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து எதுவும் தெரியவில்லை என அவர் கூறினார். எனினும் கதிர்வீச்சு பாதிப்பு காரணமாகவே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் புகுஷிமா அணு உலை கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கிருந்து வெளியேறும் கதிர்வீச்சால் பல கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.புகுஷிமா அருகேயுள்ள பகுதிகளில் பால், கீரை, குடிநீர் ஆகியவற்றில் கதிர்வீச்சின் அளவு அதிகமாக உள்ளதால் அவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று ஜப்பான் அரசு ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் அணு உலை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF