Monday, May 30, 2011

இன்றைய செய்திகள்.

இலங்கை ராஜதந்திரிகள் நாட்டுக்குச் சேவையாற்றுவதை விட குடும்ப முன்னேற்றமே நோக்காகக் கொண்டு செயற்படுகின்றனர்: அமைச்சர் விமல் வீரவங்ச.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் ராஜதந்திரிகள் தமது குடும்ப முன்னேற்றத்தை முன்னிறுத்திச் செயற்படுவதன் காரணமாகவே சர்வதேச மட்டத்தில் இலங்கை குறித்த தப்பான பிரச்சாரங்கள் வலுப்படுவதாக அமைச்சர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டுகின்றார்.பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் பெற்றுக் கொள்ளும் பெரும்பாலான இராஜதந்திரிகள் வெளிநாடுகளுக்குச் சென்றவுடன் தங்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வி உள்ளிட்ட குடும்ப முன்னேற்றம் கருதிய செயற்பாடுகளுக்கே முதலிடம் கொடுக்கின்றனர்  என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டுகின்றார்.
அதன் காரணமாகவே அவர்களால் இலங்கைக்கு ஆதரவான முறையில் சர்வதேச மட்டத்திலான பிரச்சாரங்களை மேற்கொள்ளவோ அல்லது எதிர்ப்பிரச்சாரங்களை முறியடிக்கவோ செயலற்றவர்களாக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
அதன் காரணமாக வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அரசாங்கத்துக்கு எதிரானவர்களின் செயற்பாடுகள் பலமான நிலையை அடைந்துள்ளதாக குறிப்பிடும் அமைச்சர் விமல் வீரவங்ச அதற்கான ஒரே தீர்வாக இலங்கையின் வெளிநாட்டுச் சேவை முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்.ஞாயிறு சிங்களப் பத்திரிகையான லக்பிம இரிதா பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
உன்னைப் பிறகு கவனித்துக் கொள்கின்றேன்! லங்காதீப ஆசிரியருக்கு ஜனாதிபதி நேரடி அச்சுறுத்தல்.
"உன்னைப் பிறகு கவனித்துக் கொள்கின்றேன்" என்று கடுமையான முறையில் லங்காதீப சிங்களப் பத்திரிகையின் ஆசிரியருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.தேசிய வெற்றிக் கொண்டாட்ட தினத்தின் போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் வெள்ளைக் கொடி வழக்கிலான சாட்சியத்துக்கு அதி்க முக்கியத்துவம் கொடுத்து பத்திரிகையில் பிரசுரித்திருந்ததே ஜனாதிபதி லங்காதீப பத்திரிகை ஆசிரியரை அச்சுறுத்தியமைக்கான காரணம் என்று அறிய முடிகின்றது.
வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கில் சாட்சியமளித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா,  விடுதலைப் புலிகளுடனான யுத்த காலத்தின் போது ஜனாதிபதியின் செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்புச் செயலாளரின் ஊழல்கள் குறித்து பல தகவல்களை வெளியிட்டிருந்தார்.அவரது பிரஸ்தாப சாட்சியம் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்ததனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற தினத்தில் லங்காதீப பத்திரிகையில் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்பட்டிருந்தது.
அதனைக் கண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் கோபமடைந்துள்ளார். "இப்படியான செய்திகளை நீங்கள் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்தால் நான் எந்த முகத்துடன் சென்று பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வது? இதையெல்லாம் யார் செய்கின்றார்கள் என்று எனக்குத் தெரியும்..உங்களையெல்லாம் பிறகு கவனித்துக் கொள்கின்றேன்" என்றவாறு கடுமையாக அவர் தொலைபேசி மூலம் லங்காதீப பத்திரிகை ஆசிரியர் சிரி ரணசிங்கவை கடுமையாக ஏசியுள்ளார் என்று அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியாவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு அனோமா பொன்சேகா கொப்பிகள் விநியோகம்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமை நிலையில் இருக்கும் பாடசாலை மாணவர்களுக்கு அனோமா பொன்சேகா இலவச கொப்பிகளை விநியோகித்துள்ளார்.ஜனநாயக தேசிய முன்னணியின் இளைஞர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரஸ்தாப வைபவத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா மற்றும் அவர்களின் இளைய மகள் அபர்ணா பொன்சேகா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமை நிலையில் இருக்கும் மாணவர்களுக்கான நலனோம்புகை செயற்திட்டங்களை எதிர்காலத்திலும் தனது கணவனின் கட்சியூடாக தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக அவர் அங்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.தனது கணவன் முன்னெடுத்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கு அனோமா பொன்சேகாவின் இலவசக் கொப்பிகள் வழங்கும் செயற்திட்டம் வெறும் கண்துடைப்பு நடவடிக்கை என்றும், அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர் அவர்களைத் தண்டிப்பதை தடுத்துவிட முடியாது என்றும் பிரதேச மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்திய அழுத்தம் காரணமாக அவசரகாலச் சட்டம் நீக்கப்படவுள்ளது : தேசப்பற்றுடைய தேசிய அமைப்பு.
இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக அவசரகாலச் சட்டம் நீக்கப்பட உள்ளாக தேசப்பற்றுடைய தேசிய அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.இந்தியாவின் அழுத்தங்களுக்காக அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டிய அவசியமில்லை என தேசப்பற்றுடைய தேசிய அமைப்பின் சமூக விவகாரச் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது இரு நாடுகளும் கூட்டாக இணைந்து வெளியிட்ட அறிக்கையில் அவசரகாலச் சட்டம் ரத்து செய்யப்படவுள்ளமை குறித்து அறிவிக்கப்பட்டது.தேசப்பற்றுடைய தேசிய இயக்கம், விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் இணை இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து உள்நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்நேற்று மாலை ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கான விஜயத்தை ஆரம்பித்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளதாக கட்சித் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்திய ஆளம் கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் மற்றும் நிபுணர் குழு அறிக்கை ஆகியன தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போர் நிறுத்தம்: கடாபியை சந்திக்கிறார் தென் ஆப்பிரிக்க தலைவர்.
லிபியாவில் நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டுவர தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜாகப் சுமா திரிபோலி செல்கிறார். போர் நிறுத்தம் மற்றும் பேச்சு வார்த்தைக்காக இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.லிபியாவில் கடந்த பெப்பிரவரி மாதம் 15ஆம் திகதி முதல் கர்னல் கடாபிக்கு எதிராக புரட்சி போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்கு லிபியா ராணுவம் காட்டு மிராண்டி தனமாக சுட்டு வருவதில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
லிபிய மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நேட்டோ படைகளை அங்கு அனுப்பி உள்ளது. பன்னாட்டுப் படைகள் லிபியா தலைநகர் திரிபோலியில் கடாபி வீட்டுக்கு அருகே குண்டு மழைகளை பெய்து வருகிறது.
வெடிகுண்டுகள் தாக்குதலில் சிக்காமல் இருக்க கடாபி மருத்துவமனையில் பதுங்கி இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. கடாபி கடந்த 42 ஆண்டுகளாக லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார்.அவரை பதவி விலக்க வேண்டும் என்பதில் அங்குள்ள மக்களும் மேற்கத்திய நாடுகளும் விரும்புகின்றன. லிபியாவில் ஜனநாயக ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பது சர்வதேச நாடுகளின் விருப்பமாகவும் உள்ளது.
தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சுமா திரிபோலிக்கு முதன் முறையாக கடந்த ஏப்ரல் மாதம் சென்றார். அந்த பயணத்தின் போது உரிய பலன் கிடைக்கவில்லை. லிபியாவில் போராட்டம் ஏற்பட்டு 100 நாட்களுக்கு மேல் ஆகின்றன.லிபியாவில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக சுமா இந்தப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் என ஆப்பிரிக்க ஒன்றியத்தின் செய்தித் தொடர்பாளர் நௌரேடின் மெஸ்னி தெரிவித்தார்.
லிபியாவின் பெங்காசி நகரம் போராட்டக்காரர்களின் ஆதிக்க பகுதியாக உள்ளது. அங்கு போராட்டக்குழு தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் போராட்டம் துவங்கி சனிக்கிழமையுடன் 100 நாள் ஆவதை குறிப்பிட்டார். கடாபி பதவி விலக வேண்டும் என ரஷ்யாவும் தற்போது கூறி இருப்பதை அவர் வரவேற்றார்.
ஹிட்லரின் உதவியாளர் பிரிட்டனுக்கு மர்ம பயணம்.
இரண்டாம் உலகப்போரின் போது சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரின் உதவியாளர் ஹெப் பிரிட்டனுக்கு தனி விமானத்தில் பறந்தார்.அவரது மர்மமான பயண விவரம் குறித்து அடால்ப் ஹிட்லருக்கு தெரியும் என புதிதாக வெளியாகி உள்ள ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்த போது வரலாற்று ஆய்வு நிபுணர் இந்த தகவலை கண்டுபிடித்துள்ளார்.
நாஜி படை தலைவர் அடால்ப் ஹிட்லரின் கவனத்திற்கு தெரியாமல் ஹெப் ரகசிய பயணம் மேற்கொண்டதாக கருதப்பட்டது. ஆனால் ஹெப் பயண விவரம் ஹிட்லருக்கு தெரியும் என்கிற விவரம் மாஸ்கோ ஆவணத்தொகுப்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.இந்த ஆவணத்தை 28 பக்கத்தில் கார்ல் ஹெய்ன்ஸ் பின்ட்ஸ்ச் எழுதியுள்ளார். இவர் ஹெப்பிடம் உதவியாளராக இருந்தார். இந்த ராணுவ அதிகாரி 1941ஆம் அண்டு மே10ஆம் திகதி ஹெப் பிரிட்டனுக்கு மேற்கொண்ட பயண விவரத்தை தெளிவாக எழுதியுள்ளார்.
பெர்லினுக்கும் லண்டனுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ஹெப் பிரிட்டன் பயணத்தை மேற்கொண்டார். இந்த பயண விவரம் ஹிட்லரின் அனுமதி இல்லாமல் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டது என இதுவரை கருதப்பட்டது.ஆனால் கார்ல் எழுதியுள்ள கடிதத்தில் ஹிட்லருக்கு அந்த விமான பயண விவரம் குறித்து தெரியும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கார்ல் பின்ட்ஸ்ச் போரின் போது ரஷ்ய ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
அவர் சோவியத் சிறை முகாமில் வைககப்பட்டிருந்த போது 1948ஆம் ஆண்டு எழுதிய 28 பக்க அறிக்கையில் ஹெப்பின் பிரிட்டன் விமானப்பயணம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய சிறையில் இருந்த கார்ல் பின்ட்ஸ்ச் 1955ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.ஹெப் ஸ்காட்லாந்தில் இருந்த போது கைது செய்யப்பட்டார். அவர் போர் குற்ற நிகழ்வுகளுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் 1987ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி பெர்லினின் ஸ்பான்டூ சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
காசா பகுதிக்கு கப்பல் பயணம்: கனடா அரசு எச்சரிக்கை.
பாலஸ்தீனம் காசா திட்டுப்பகுதி எல்லைகள் தடுக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் தண்ணீர் உட்பட அடிப்படை வசதிகளின்றி தவிக்கிறார்கள்.அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக சர்வதேச சமூகத்தினர் நிவாரணப் பொருட்களை ஏந்திய சிறு படகுகள் மூலம் கப்பல் பயணத்தை மேற்கொள்கின்றனர்.
நிவாரண உதவிப் பொருட்களுடன் வரும் கப்பல்களை இஸ்ரேல் தடுத்து வருகிறது. இந்த நிலையில் அங்கீகாரம் இல்லாமல் காசா திட்டுப் பகுதிக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம். அதிகாரப்பூர்வ மற்ற நடவடிக்கைகள் வன்முறையை தூண்டுவதாக அமையும் என கனேடிய அரசின் தலைமை ராஜ்ய உறவு நிர்வாகி எச்சரித்து உள்ளார்.வருகிற ஜுன் மாதம் நிவாரணப் பொருட்களுடன் செல்வதாக கனேடியர்கள் குழு தெரிவித்து உள்ளது. இது குறித்து கனேடிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் பெய்ர்ட் கூறுகையில்,"அங்கீகாரம் பெறாமல் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் நடவடிக்கை பதட்டத்தை ஏற்படுத்தும். காசாவில் பரிதவிக்கும் மக்களுக்கும் உதவி செய்ய முடியாத நிலை ஏற்படும்" என்றார்.
2010ம் ஆண்டு மே 31ம் திகதி சர்வதேச நிவாரண உதவிப் பொருட்களுடன் மவி மர்மரா கப்பல் காசாவை நோக்கி முன்னேறி வந்தது. இந்தக் கப்பலை இஸ்ரேலிய கடற்படையினர் தடுத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சர்வதேச நீர் எல்லையில் 9 துருக்கி சமூக ஆர்வலர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் இந்த கொடூரத் தாக்குதலுக்கு சர்வதேச சமூகம் கண்டனம் தெரிவித்தது.கனடாவில் உள்ள 100 அமைப்புகள் ஒரு கனேடிய படகில் நிவாரணப் பொருட்களை அனுப்ப போவதாக தெரிவித்துள்ளன. இரண்டாவது சுதந்திர கப்பல் பயணம் என்ற இந்த கடல்வழி திட்டத்தில் மொத்தம் 15 கப்பல்கள் நிவாரணப் பொருட்களுடன் செல்கின்றன.
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைத் தாக்குதல்: 52 பேர் பலி.
ஆப்கானிஸ்தானின் தென்பகுதி மாகாணம் ஒன்றில் நேட்டோ விமானப் படைகள் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் உள்ளிட்ட 52 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. அதைத் தடுக்கும் வகையில் சந்தேகத்திற்குட்பட்ட இடங்களில் நேட்டோ விமானப்படைகள் குண்டுகளை வீசித் தாக்கி வருகின்றன.
ஆப்கனின் ஹெல்மாண்டு என்ற தென்பகுதி மாகாணத்தில் நடந்த குண்டுவீச்சில் பெண்கள் உட்பட 14 பேர் பலியாகினர். இம்மாகாணத்தின் நவ்ஜாத் மாவட்டத்தில் உள்ள அமெரிக்காவின் கடற்படை வீரர்கள் தளம் ஒன்று நேற்று சில ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் சிலரால் தாக்குதலுக்குள்ளானதை அடுத்து நேட்டோ விமானப்படைகள் குண்டுவீச்சைத் துவக்கின. இதில் 52 பேர் பலியாகினர்.
உளவு சொன்னதாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி கைது.
எகிப்தில் ஹோஸ்னி முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலகிய பின் அந்நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஈரான் அரசுக்கு உளவறிந்து சொன்னதாக ஈரான் தூதரக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.எகிப்தில் உள்ள ஈரான் தூதரக அதிகாரி காசிம் அல் உசேனி என்பவர் முபாரக் வெளியேற்றத்துக்கு பின் எகிப்து அரசியலில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் குறித்து உளவறிந்து பல்வேறு தகவல்கள் அளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டார்.
கடந்த 1979ல் இஸ்ரேல் உடன் எகிப்து உறவை ஏற்படுத்திக் கொண்ட பின் ஈரான், எகிப்துடனான தனது உறவை துண்டித்துக் கொண்டது. அதன்பின் இரு தரப்புக்கும் இடையில் தூதரக ரீதியாக முழுமையான உறவுகள் பேணப்படவில்லை. எனினும் குறைந்த அளவிலான தூதரக செயல்பாடுகளை இரு நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன.
ஏமன் போராட்டம்: முக்கிய நகரை கைப்பற்றியது அல்கொய்தா.
ஏமனில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி தென்பகுதி மாகாணம் ஒன்றின் தலைநகரை அல்கொய்தா பயங்கரவாதிகள் கைப்பற்றி விட்டனர்.இந்நிலையில் அதிபர் படைகள் மற்றும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலான சண்டை முன்னறிவிப்பு எதுவுமின்றி திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலக மூன்றாவது முறையாக மறுத்ததை அடுத்து அங்கு பிரதான பழங்குடியினமான ஹஷித் ஆதரவாளர்களுக்கும், அதிபரின் படைகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
கடந்த ஐந்து நாட்களாக நடந்த இச்சண்டையில் 120 பேர் பலியாகினர். பல ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் சனாவை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் கடந்த இருநாட்களாக இருதரப்பினருக்கிடையிலான சண்டை திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது.இதற்கிடையில் ஏமனின் தென்பகுதியில் உள்ள அப்யான் மாகாணத் தலைநகர் ஜின்ஜிபார் என்ற நகரை ஆயுதம் ஏந்திய அல்கொய்தா பயங்கரவாதிகள் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகின. எனினும் அவர்கள் அல்கொய்தாவைச் சேர்ந்தவர்கள் தானா என்பது உறுதி செய்யப்படவில்லை.
அரசியல் நிபுணர் அமின் அல் ஹிம்யாரி கூறியதாவது: அவர்கள் அல்கொய்தாவினர் அல்ல. அதிபரின் ஆதரவாளர்கள் தான். ஏற்கனவே தான் பதவி விலகினால் நாடு அல்கொய்தா வசம் போய்விடும் என்று நாடகம் போட்டார் அதிபர். இப்போது இச்சம்பவத்தைக் காட்டி அதிபராகத் தொடரலாம் என்ற நப்பாசையில் தனது ஆதரவாளர்களை ஏவி விட்டுள்ளார்.அவரது கூற்றை உறுதிப்படுத்தும் விதத்தில் ஜின்ஜிபார் பகுதியைச் சேர்ந்தவர்களும் அந்த வீரர்களை அல்கொய்தாவினர் என்று கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கனில் பொது மக்கள் பலி: மன்னிப்பு கோரிய நேட்டோ படையினர்.
ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்போர் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அங்கு ஸ்திரத்தன்மை மற்றும் அமைதி ஏற்படாத வகையில் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.அங்கு பொது மக்களை பாதுகாக்கவும் அமைதி நிலையை ஏற்படுத்தவும் பன்னாட்டு படைகள் முகாமிட்டுள்ளன. இந்த கூட்டுப்படை முகாமில் அமெரிக்கா, கனடா, ஜேர்மனி படை துருப்புகள் உள்ளன.தலிபான் தீவிரவாதிகளை கொல்வதற்காக பன்னாட்டுப்படைகள் ஹெல்மாண்ட் மாகாணத்தில் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர் என கர்சாய் குற்றம் சாட்டினார்.
இறந்தவர்களில் 9 பேர் அப்பாவி மக்கள் ஆவார்கள் என சர்தேசப்படை தெரிவித்துள்ளது. பொது மக்கள் கொல்லப்பட்ட நிகழ்வுக்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமித் கர்சாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.சனிக்கிழமை பன்னாட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு சர்வதேச பாதுகாப்பு உதவிப்படை(ஐ.எஸ்.ஏப்) மேஜர் ஜெனரல் ஜான் மூலன் அறிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் தென் மேற்கு பிராந்தியமான ஹெல்மாண்ட் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் அப்பாவி மக்கள் இறந்ததற்கு வேதனை அடைகிறோம். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது இரங்கலை தெரிவிக்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.சனிக்கிழமை தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்வதை அமெரிக்காவும் நேட்டோ படைகளும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமித் கர்சாய் எச்சரித்ததை தொடர்ந்து பன்னாட்டு படைகளின் மேஜர் ஜெனரல் மன்னிப்பு கோரியுள்ளார்.
விரைவில் ஒபாமாவின் ஊழல் விவரங்களை வெளியிடுவேன்: நிபுணர் எச்சரிக்கை.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அரசின் முதல் மிகப் பெரிய ஊழல் விரைவில் வெளிப்படப் போவதாக அரசியல் நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.அமெரிக்காவில் அடுத்தாண்டில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் அந்தத் தேர்தலுக்கு முன் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் அதிபர் ஒபாமா நிர்வாகத்தில் நடந்த மிகப் பெரிய ஊழல் ஒன்று வெளியுலகுக்கு தெரிய வரும் என்று பிரண்டன் நைஹான் என்பவர் தெரிவித்துள்ளார்.பிரண்டன் நைஹான் அமெரிக்காவில் அரசியல் நிபுணராகவும், ஊடக விமர்சகராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் 1977 முதல் 2008 வரையிலான அமெரிக்க அதிபர்களின் ஊழல்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் செயல்பட்டு வரும் மிச்சிகன் பல்கலைகழகத்தில் இப்பணியை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: அரசியல் மற்றும் ஊடகத் துணையுடன் அதிகார வர்க்கத்தின் மேல் மட்டத்தில் நிகழும் தவறான நடவடிக்கைகள் தான் ஊழல்.அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் ஒபாமாவின் ஊழல் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் வெளியுலகுக்கு தெரிய வரும். அமெரிக்காவின் மிகச் சில அதிபர்கள் தாங்கள் ஆட்சியில் நீடிப்பதற்காக ஊழலைத் தவிர்த்தனர்.
இதை அதிபர்கள் பற்றிய என்னுடைய ஆராய்ச்சியில் நான் கண்டறிந்தேன். அவ்வகையில் ஒபாமா மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர். ஒபாமா நிர்வாகத்துக்கு ஆதரவாக இல்லாத ரிபப்ளிகன் கட்சியின் ஒரு சிலரின் ஆதரவுடன் நான் எனது ஆய்வை முடித்துள்ளேன்.தங்கள் ஆட்சியில் முதன்முறையாக ஊழல் குற்றச்சாட்டுகளைச் சந்தித்த ரொனால்ட் ரீகன் மற்றும் பில் கிளிண்டன் ஆகியோரைப் போல ஒபாமாவும் வீழ்ச்சியடைவார். இவ்வாறு பிரண்டன் நைஹான் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் ராணுவத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் குண்டானவர்கள்: அதிர்ச்சித் தகவல்.
பிரிட்டிஷ் படை வீரர்களுள் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் எடை கூடியவர்களாக அல்லது உடல் பருமன் மிக்கவர்களாகக் காணப்படுகின்றனர்.அதிசயிக்க வைக்கும் இந்த உண்மை நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் நிதி உதவியுடன் இராணுவ வீரர்கள் குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்விலேயே இது தெரியவந்துள்ளது.57 வீதமான படை வீரர்கள் தமக்கான உயரத்துக்குரிய எடையிலும் பார்க்க கூடுதலான எடையுடன் காணப்படுகின்றனர். 12 வீதமான படை வீரர்கள் உடல் பருமன் மிக்கவர்களாகக் காணப்படுகின்றனர்.
இந்த நிலைமை சிவிலியன்களின் நிலைமையோடு ஒப்பிடுகையில் குறைவாகத்தான் உள்ளது. இருப்பினும் இராணுவ வீரர்களின் ஆரோக்கியத்தை இது கெடுத்து விடுவதோடு அவர்களை மோதல்களுக்கு உபயோகமற்றவர்களாக்கிவிடும் என்று இந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.இராணுவத்தில் 27 வருட அனுபவம் கொண்ட மேஜர் தரத்திலான ஒரு அதிகாரியின் தலைமையில் தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இராணுவத்தில் உள்ள அநேகமான ஆண்களும் பெண்களும் அதிகம் சதை கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். 57 வீதமானவர்கள் இப்படி இருப்பது விரும்பத்தகாத ஒன்று.
இது மிகவும் அதிகமானது என்றும் ஆய்வாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேஜர் போல் சென்டர்ஸன் என்பவர் தான் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளார். 50000 இராணுவ வீரர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.இந்தத் தரவுகள் தற்போது பிரிட்டிஷ் இராணுவத்தின் விஞ்ஞான பிரிவான பாதுகாப்பு பகுப்பாய்வு முகவராண்மையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பின்லேடனுன் தொடர்புடைய இரு தலிபான்கள் கைது.
ஆப்கானிஸ்தானில் எஸ்.ஏ.எஸ் சிறப்பு படைபிரிவினர் நடத்திய அதிரடி வேட்டையில் தலிபான் தீவிரவாத இயக்கத்தின் 2 கமாண்டர்கள் பிடிபட்டனர்.இவர்கள் அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் பின்லேடனுன் நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள். பிடிபட்ட இருவரும் எதிர்தாக்குதல் நடத்தாமல் சரண் அடைந்ததாக சிறப்பு படையினர் கூறினர்.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கா துருப்புகளின் மீது நடந்த பல தாக்குதல்களுக்கு இந்த இரு தலிபான்கள் கமாண்டர்களுக்கும் தொடர்பு உண்டு.
தலிபான் தலைமையகமான குவெட்டா சுரா அமைப்பின் உறுப்பினர்களாக பிடிபட்ட தலிபான்கள் ரகுமான் மற்றும் முகமது உள்ளனர். அவர்களுடன் வந்த 3 உதவியாளர்களும் கைது செய்யப்பட்டனர். 128 ஆயிரம் பவுண்ட் மதிப்பு உள்ள 80 கிலோ பதப்படுத்தப்பட்டாத போதை மருந்து அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.எஸ்.ஏ.எஸ் வீரர்கள் நடவடிக்கைக்கு ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவம் உதவியது. இந்த ஆண்டு துவக்கத்தில் கூட்டணிப்படைகள் ஆப்கானிஸ்தானில் ஏராளமான தலிபான் கமாண்டர்களை கொன்றதுடன் பலரை கைது செய்தது. அப்போது பாகிஸ்தான் எல்லை வழியாக தப்பியவர்களாக ரகுமானும், முகமதுவும் இருந்தனர்.
வேலை இல்லா திண்டாட்டம் கடுமையான அளவுக்கு உயர்வு.
கடந்த 14 ஆண்டுகளை ஒப்பிடுகையில் மிக அதிக அளவு வேலை இல்லா திண்டாட்டம் பிரிட்டனில் தற்போது உருவெடுத்துள்ளது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.ஒரு வருடத்திற்கும் மேலாக உரிய வேலை வாய்ப்பு பெறாதவர்கள் எண்ணிக்கை 1997ஆம் ஆண்டு கணக்கெடுப்பை ஒப்பிடுகையில் தற்போது மிக அதிகமாக உள்ளது. எட்டரை லட்சம் நபர்கள் 12 மாதங்களுக்கும் மேலாக உரிய வேலை பெறாத நிலை உள்ளது என ஐ.பி.பி.ஆர் அரசியல் ஆய்வு நிபுணர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலம் வேலை இல்லாத நபர்களின் எண்ணிக்கை கவலை அளிப்பதாக உள்ளது என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 2009ஆம் ஆண்டு முதல் நீண்டு காலம் வேலை இல்லா திண்டாட்டம் தலை தூக்க துவங்கி உள்ளது.1990ஆம் ஆண்டுகளின் இறுதியிலும் 2000ஆம் ஆண்டு கால கட்டத்திலும் நீண்ட கால வேலை இல்லா திண்டாட்ட எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.
2009ஆம் ஆண்டில் ஒரு ஆண்டுக்கு மேல் வேலை இல்லாத ஆண்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரமாக இருந்தது. தற்போது 5 லட்சத்து 68 ஆயிரம் ஆண்கள் நீண்ட காலம் வேலை இல்லா நிலையில் உள்ளனர். வேலை இல்லா திண்டாட்டம் 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரித்துள்ளது.ஆண்களைப் போன்று பெண்களும் ஒரு ஆண்டுக்கு மேல் வேலை இல்லாமல் இருக்கும் நிலை அதிகரித்துள்ளது. 2009ஆம் ஆண்டில் 1 லட்சத்து 9 ஆயிரம் பெண்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்தனர்.
நடப்பாண்டில் 2 லட்சத்து 82 ஆயிரம் பெண்கள் நீண்ட காலம் வேலை இல்லாத துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் பிரிவில் 19 சதவீதமாக இருந்த நீண்ட கால வேலை இல்லா திண்டாட்டம் தற்போது 27 சதவீதமாக அதிகரித்து உள்ளது.இந்த வேலை இல்லா திண்டாட்டம் முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாக உள்ளது என வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் கிறிஸ் கிரே லிங்க் தெரிவித்தார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF