Friday, May 20, 2011

இன்றைய செய்திகள்.


பொன்சேகாவின் மகள் விமான நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட பின்னர் விடுதலை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் மகள் அபர்ணா பொன்சேகா இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அபர்ணா பொன்சேகாவை அவரின் மூத்த சகோதரியும் ஹைகோர்ப் வழக்கில் தேடப்படும் தனுன திலகரட்னவின் மனைவியுமான அப்சரா பொன்சேகா என அதிகாரிகள் தவறாக எண்ணிவிட்டதே இச்சம்பவத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

அபர்ணாவும் அவரின் தாயாரான அனோமா பொன்சேகாவும் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனுன திலகரட்ன சம்பந்தமான வழக்கு தொடர்பாக தனது மூத்த மகள் குடிவரவு அதிகாரிகளின் கறுப்புப் பட்டியலில் உள்ளதாக அனோமா பென்சேகா தெரிவித்தார்.
இலங்கையில் இரட்டை பிரஜாவுரிமை முறை மாற்றியமைக்கப்படும்? புலம்பெயர் மக்கள் பாதிக்கப்படுவர்.

இலங்கையில் இரட்டை பிரஜாவுரிமையை மீள்பரிசீலனை செய்யும் முறையினால், வெளிநாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான இலங்கை பிரஜைகள் தமது உரிமைகள் இழப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரட்டைப் பிரஜாவுரிமை முறை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழும் பெருமளவான தமிழர்கள் உட்பட்ட சுமார் 35 ஆயிரம் இலங்கை பிரஜைகள் பல்வேறு ரீதியாக பாதிக்கப்படுவர்.
அத்துடன், அதற்கு பதிலாக கொண்டு வரப்படும் புதிய முறையால், இரட்டைபிரஜாவுரிமையை பெற்றுக்கொள்ள விரும்புவோர் கடின நிலைமையை எதிர்நோக்கவேண்டியிருக்கும்.இந்தநிலையில் இரட்டை பிரஜாவுரிமை ரத்துச்செய்யப்பட்டமையை மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக இலங்கையின்; குடிவரவு மற்றும் குடியகழு;வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் மீண்டும் இரட்டை பிரஜாவுரிமை முறை கொண்டு வரப்படுமா என்பதை தம்மால் கூறமுடியாது என்று அவர் கூறியுள்ளார்.இதேவேளை இரட்டை பிரஜாவுரிமை முறைக்கு பதிலாக புதிய முறை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும் அது இலங்கை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சூலாந்த பெரேரா தெரிவித்தார்.இதற்கிடையில் புதியமுறையின்படி இரட்டை பிரஜாவுரிமையை பெறவிரும்புவோர், தனிப்பட்ட தகுதி, சுகநலன் தகுதி, நிலையான வைப்பு, சிரேஸ்ட பிரஜாவுரிமை தன்மை, என்பன கவனிக்கப்படவுள்ளன.
அத்துடன் இரட்டை பிரஜாவுரிமை பெறுபவர் இரண்டு லட்சம் ரூபாவை செலுத்தவேண்டும்.தமது உறவுகளுக்கு இரட்டை பிரஜாவுரிமையை பெறவேண்டுமாயின் 50 ஆயிரம் ரூபாவை செலுத்தவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை இலஙகை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரர்களான பசில் ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் அமெரிக்காவிலும் இலங்கையிலும் இரட்டை பிரஜாவுரிமையை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு ரணிலுக்கு ஜெயலலிதா அழைப்பு.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் நாட்டுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார்.தமிழ்நாடு மாநிலத் தோ்தலில் அமோக வெற்றியீட்டி முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்திக்கு தொலைபேசி ஊடாக நன்றி தெரிவித்தபோதே பிரஸ்தாப அழைப்பையும் விடுத்துள்ளார்.
கடந்த 17ம் திகதி இரவு இருவருக்குமிடையிலான தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது. நீண்ட நேரம் வரை தொடர்ந்த அவர்களின் தொலைபேசி உரையாடலின் போது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்பான விடயங்கள் குறித்தே அதிகமாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளத்தக்கதான அதிகாரப் பகிர்வொன்றை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வழங்க வேண்டும் என்பதுடன், அதனை அனைத்துத் தரப்பினரதும் இணக்கப்பாட்டுடன் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் இருவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அத்துடன் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அழைப்பையேற்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மிக விரைவில் தமிழ்நாட்டுக்கான சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்ளவும் இணக்கம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு அமெரிக்க நிதியுதவி தேவைதானா? - 73% வீத அமெரிக்க மக்கள் ஆட்சேபம் - கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிப்பு.

ஃபொக்ஸ் நியூஸ் சேவை இது தொடர்பில் நடத்திய கருத்துக்கணிப்பில், அமெரிக்கா இஸ்லாமாபாத்திற்கு வழங்கிவரும் பொருளாதார, சமூக நிதியுதவிகள் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான பாதுகாப்பு நிதி என்பன தேவைதானா என கேள்வி எழுப்பியது. இதற்கு பதில் அளித்தவர்களில் 3/4 பேர், இவை அனாவசியமான செலவீனங்கள் எனவும் அமெரிக்க உடனடியாக இவ் உதவிகளை நிறுத்த வேண்டுமெனவும் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளனர்.


ஒசாமா பின்லாடக்கு தஞ்சமளித்தது உட்பட, தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் விளங்குகிறது எனவும், பாகிஸ்தானை, அமெரிக்காவின் நட்பு ரீதியான நாடாக ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனினும் இக்கருத்துக்கணிப்புக்களின் முடிவுகள், அமெரிக்க இராஜாங்க திணைக்கள செயற்பாட்டில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்லை என தெரிவித்திருக்கும் அரசியல் அவதானிகள், அமெரிக்க பாதுகாப்பு தொடர்பான பட்ஜெட் பட்டியலில், தீவிரவாத அடக்குமுறை செயற்பாட்டுகளுக்காக ஒரு தொகுதி பணம் மீண்டும் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரொபேர்ட் கேட்ஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரி முலென் ஆகியோரும் பாகிஸ்த்தானுக்கு தொடர்ந்து நிதி உதவி அளிக்க வேண்டிய தேவையை வலியுறுத்தியுள்ளனர்.
கருணாநிதியின் மகள் கனிமொழி கைது! திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், முன் ஜாமீன் வழங்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது. கனிமொழியை கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைக்க, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். கனிமொழி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், நாளை காலை 10 மணிக்கு மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.  தீர்ப்பின் படி கனிமொழி 15 நாட்கள் காவலில் வைக்கப்படுகிறார்.
இதையடுத்து, கனிமொழி கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்.இதேபோல், கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்படுகிறார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டால் ரூ.1.76 லட்சம் கோடி நாட்டுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து தொடரப்பட்டுள்ள வழக்கில், முக்கியப் பங்கு உள்ளது என சிபிஐ-யின் முதல் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்ட மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த முறைகேட்டில் கனிமொழிக்கும் பங்கு உள்ளது என்ற சிபிஐ, அவரது பெயரை துணைக் குற்றப்பத்திரிகையில் சேர்த்தது. கூட்டு குற்றச்சதி செய்ததாக கனிமொழி மீது குற்றம்சாட்டப்பட்டது. கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் பெயரும் அதில் சேர்க்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தங்களை நீதிமன்றக் காவலில் வைக்கக்கூடாது என கனிமொழியும் சரத்குமாரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
இதுகுறித்து மே 6-ம் தேதி நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் கனிமொழி சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜரானார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில், கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், பெண் என்பதால் அவருக்கு முன்ஜாமீன் அளித்தாக வேண்டும் என்றும் ராம் ஜெத்மலானி வாதிட்டார்.அதேநேரத்தில், கலைஞர் டிவி நிர்வாகத்தில் துவக்கம் முதல் மூளையாக இருந்து செயல்பட்டவர் கனிமொழியே என்றும், அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிமன்றம், முன் ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை மே 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு மே 14-ல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, மே 20-ம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்தார்.கலைஞர் டிவியின் செயல்பாடுகளின் பின்னணியில் கனிமொழி முக்கியப் பங்கு வகிக்கிறார் என்றும், 2009-ல் ஆ.ராசாவை தொலைத்தொடர்பு அமைச்சராக மீண்டும் நியமிப்பது தொடர்பாக திமுக தலைமையகம் மற்றும் இடைத்தரகர்களுடன் கனிமொழி தொடர்ந்து தொடர்புகொண்டு பேசிவந்துள்ளார் என்றும் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தது.
சினியுக் ஃபிலிம்ஸ் மற்றும் குசேகாவ் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் ஆகிய நிறுவனத்தின் வழியாக கலைஞர் டிவி நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொடர்புடைய ரூ.214 கோடி பணம் பால்வாவின் நிறுவனம் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதே சிபிஐ-யின் குற்றச்சாட்டு.ஆனால், பால்வாவின் நிறுவனம் மூலம் பெற்றது கடன் தொகையே என்றும், அதனை திருப்பித் தந்துவிட்டோம் என்றும் கலைஞர் டிவி தரப்பு விளக்கம் அளித்து வந்தது கவனத்துக்குரியது.
ஆப்கனில் அப்பாவி தொழிலாளர்களின் மீது தலிபான்கன் தாக்குதல்: 36 பேர் பலி.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன.அவர்களை வெளியேற்ற வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளாக வன்முறை சம்பவங்களில் தலிபான்கள் ஈடுபட்டு வருகின்றன.
பாகிஸ்தான் எல்லையில் பக்தியா மாகாணம் உள்ளது. அங்கு போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் ரோடு போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பல நிறுவனங்கள் உள்ளன.நேற்று அதிகாலை 2 மணியளவில் அங்கு திடீரென புகுந்த தலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். அங்கு இருந்த ரோடு போடும் எந்திரங்கள் மற்றும் உபகரணங்களை அடித்து நொறுக்கினார்கள்.
மேலும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதில் 36 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதே போன்று கடந்த பெப்பிரவரி மாதம் ஜலாபாத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 38 பேர் பலியாகினர். இவர்கள் கூலி பணத்தை வாங்க கூடியிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பிறகு தான் தற்போது மிகப்பெரிய தாக்குதலை தலிபான்கள் நடத்தியுள்ளனர்.
நேட்டோ படைகளின் தாக்குதல்: ராணுவத்திற்கு சொந்தமான 8 போர்க்கப்பல்கள் மூழ்கின.
லிபிய சர்வாதிகாரி கர்னல் கடாபியின் 8 போர்க்கப்பல்களை நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் மூழ்கடித்தன.தலைநகர் திரிபோலி, அல்கும்ஸ் மற்றும் சிர்தே பகுதிகளில் வியாழக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் இந்த போர்க்கப்பல்கள் நொறுங்கின. இது கடாபி ராணுவத்திற்கு மிகப் பெரும் பின்னடைவாக உள்ளது.
இந்த தாக்குதல் குறித்து நேட்டோ படைகளின் கடற்படை பிரிவு அதிகாரி கூறுகையில்,"லிபியாவில் அப்பாவி மக்களை காப்பாற்றுவதற்காக கடலில் முகாமிட்டுள்ளன. இதைத் தவிர வேறு வழி இல்லை" என்றார்.அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வியாழக்கிழமை அரபு நாடுகளின் போராட்டம் குறித்து உரை நிகழ்த்தினார். அப்போது கடாபி நீண்ட நாள் லிபியாவில் ஆட்சியில் நீடிக்க முடியாது என்றார்.
லிபியாவில் பல ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் கடாபி பதவி விலக வேண்டிய தருணம் வந்து விட்டது. லிபிய மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர் நோக்கியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.நேட்டோ பொதுச் செயலாளர் ஆண்டர்ஸ் போக் ரஸ்முசன் கூறுகையில்,"கடாபியின் படைகள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக அவரது ஆட்சியும் முடிவுக்கு வருகிறது" என்றார். ஒவ்வொரு நாளும் கடாபி ஆட்சி தனித்துவிடப்படுகிறது என்றார்.
லிபியாவில் கடந்த பெப்பிரவரி மாதம் 15ம் திகதி முதல் கடாபிக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. அப்பாவி மக்களை பாதுகாக்க நேட்டோ படையில் அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, நோர்வே, பிரிட்டன் படைகளும் உள்ளன. போராட்டக்காரர்கள் மிஸ்ரட்டா உள்ளிட்ட பல நகரங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
அமெரிக்க தூதரக அதிகாரியின் கார் மீது வெடிகுண்டு தாக்குதல்: பாகிஸ்தானில் பயங்கரம்.
பாகிஸ்தான் நகரமான பெஷாவாரில் சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு அமெரிக்க தூதரக அதிகாரியின் காரை தாக்கியது.இந்த வெடிகுண்டு தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தூதரக செய்தித் தொடர்பாளர் கூறினார். இரண்டு ஆயுதம் தாங்கிய வாகனங்கள் பல்கலைகழக சாலையில் பயணித்த போது இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இந்த தாக்குதலில் ஒரு வாகனம் சேதம் அடைந்தது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு 30 மைல் தொலைவில் உள்ள அபோதாபாத் நகரில் இந்த மே மாதம் 2ஆம் திகதி அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க கமண்டோக்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் பாகிஸ்தானில் வன்முறை தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அல்கொய்தா தலைவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் தீவிரவாத தாக்குதல்களை தொடருவோம். எங்களது பழி வாங்கும் நடவடிக்கை தொடரும் என தலிபான் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை வடமேற்கு பாகிஸ்தானில் இரண்டு மனித வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த பயங்கரத் தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டார்கள். பின்லேடன் மரணத்திற்கு பின்னர் தீவிரவாதிகள் நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும்.பின்லேடன் மரணத்திற்கு பின்னர் அமெரிக்க தூதரகம் தீவிரவாதிகளால் தாக்கப்படும் அபாயம் மேலும் அதிகரித்துள்ளது.
அயல்நாட்டு பணிகளில் ஜேர்மனி வீரர்கள் ஈடுபட வேண்டும்: பாதுகாப்புத்துறை அமைச்சர் வலியுறுத்தல்.
உலக நாடுகளில் வலிமை மிக்க நாடுகளில் ஒன்றாக ஜேர்மனி உள்ளது. இருப்பினும் அயல்நாடுகளில் ஏற்படும் பாதுகாப்பு பிரச்சனைகளில் ஈடுபட ஜேர்மனி அதிக ஆர்வம் காட்டுவதில்லை.லிபியாவில் தற்போது நேட்டோப்படைகள் முகாமிட்டுள்ளன. இந்த கூட்டுப்படைப்பிரிவில் பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் தங்கள் துருப்புகளை அனுப்பியுள்ளன.
ஆனால் லிபியாவுக்கு துருப்புகளை அனுப்புவதில் ஜேர்மனி ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஐரோப்பிய கூட்டாளி நாடுகளின் மன வருத்தத்திற்கு ஜேர்மனி ஆளாகியுள்ளது. லிபியா போன்ற அயல்நாட்டு பாதுகாப்பு பணிகளில் ஜேர்மனி அதிக அளவில் வீரர்களை அனுப்பி தனது ராணுவத் திறனை உறுதிப்படுத்த வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் தாமஸ் டேமெய்சிரே கூறியுள்ளார்.
நியூசிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, ஹாலந்து, நோர்வே ஆகிய நாடுகள் தங்களது வீரர்களை அயல்நாட்டு பணிகளுக்கு பெருமளவு அனுப்பி வருகின்றன. சர்வதேச சமூகத்தில் தங்களது நாட்டு கௌரவத்தை கருத்தில் கொண்டு அந்த நாடுகள் தங்கள் படைகளை அனுப்பி வருகின்றன.
அதே போன்று ஜேர்மனியும் அதிக அளவில் அயல்நாட்டு பணிகளில் தமது வீரர்களை அனுப்ப வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் தாமஸ் டேமெய்சிரி டெட்ஜ்லேண்ட் பங்க் ரேடியோவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.மேலும் உலக நாடுகளில் நாம் மிக முக்கியமான நாடாக உள்ளோம். சர்வதேச சமூகத்தில் நமது பங்களிப்பு மிகப்பெருமளவு இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுத்தினார்.
சர்வதேச பாதுகாப்பு பணிகளில் எதிர்காலத்தில் 10 ஆயிரம் ஜேர்மனி வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தற்போது உலக நாடுகளில் அமைதி பாதுகாப்பு பணிகளுக்கு 7ஆயிரம் ஜேர்மனி வீரர்கள் உள்ளனர். நேட்டோ உறுப்பினர் நாடாக ஜேர்மனி உள்ளது.இருப்பினும் லிபியாவுக்கு தனது படைகளை அனுப்ப எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த 2ஆம் உலகப்போரின் கசப்பான நினைவுகளை கருத்தில் கொண்டு ஜேர்மனி தனது படைகளை அயல் நாடுகளுக்கு அனுப்புவதில் அதிக விருப்பம் காட்டுவதில்லை.
சிறையில் வைக்கப்பட்டிருந்த பெண் பத்திரிக்கையாளரை விடுவித்தது ஈரான்.
ஈரான் சிறையில் இருந்த பெண் பத்திரிக்கையாளர் டோர்த்தி பர்வஸ் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள தனது குடும்பத்தினருடன் மீண்டும் சேர்ந்தார்.பெண் பத்திரிக்கையாளர் பர்வசை வான்கூவர் விமான நிலையத்தில உறவினர்கள் கட்டி பிடித்து தங்கள் அன்பை பகிர்ந்து கொண்டனர். அவரது தந்தை கூறுகையில்,"மிகச்சிறந்த பெண்மணியாக டோர்த்தி பர்வஸ் தோன்றுகிறார்" என நெகிழ்வுடன் கூறினார்.
அல்ஜசீரா தொலைக்காட்சியின் ஆங்கிலச் செய்தி பிரிவுக்காக பர்வஸ் பணியில் ஈடுபட்டார். அவரை ஏப்ரல் 29ம் திகதி சிரியா நிர்வாகத்தினர் கைது செய்து ஈரான் அனுப்பினர்.பர்வசுக்கு ஈரான் குடியுரிமையும் உள்ளது. செவ்வாய்க்கிழமை வரை பர்வஸ் நிலைமை என்னவென்று தெரியாமல் இருந்தது. பர்வஸ் வடக்கு வான்கூவரில் உள்ள தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தான் விடுவிக்கப்பட்ட தகவலை தெரிவித்தார்.
அல் ஜசீரா தொலைக்காட்சியின் தலைமையகமான கத்தாரில் இருந்து திரும்புவதாகவும் அவர் கூறினார். வான்கூவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் குடும்பத்துடன் மீண்டும் இணைந்து இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என கூறினார். பர்வேஸ் ஒருவித பதட்ட நிலையிலேயே காணப்பட்டார். கைது நிகழ்வு குறித்து மேலும் அவர் விவரிக்கவில்லை.
ஈராக்கில் வெடிகுண்டுத் தாக்குதல்: 25 பேர் பலி.
ஈராக்கில் வியாழக்கிழமை நடந்த 3 குண்டுவெடிப்புகளில் 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 79 பேருக்கு காயம் ஏற்பட்டது.ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள கிர்குக் நகர காவல்துறை தலைமை அலுவலகத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு காரில் பொருத்தப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. உடனே அங்கு மீட்புப் பணி தொடங்க ஆள்கள் குவிந்தனர். அப்போது மற்றொரு காரில் பொருத்தப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
இந்த இரு குண்டுவெடிப்புகளிலும் 25 பேர் கொல்லப்பட்டனர். 79 பேர் காயமுற்றனர். பல காவல்துறை வாகனங்கள், தனியார் வாகனங்கள் சேதமடைந்தன. காவல் துறை அலுவலக கட்டடத்தின் ஒரு பகுதி சேதத்துக்கு உள்ளானது.மூன்றாவது சம்பவத்தில் உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு மூத்த காவல் அதிகாரியின் வாகனமும், அவருடைய வாகன வரிசையும் சென்று கொண்டிருக்கும் போது மற்றொரு கார் வெடிகுண்டு வெடித்ததில் பல வாகனங்கள் சேதமுற்றன. அருகில் இருந்த வேறு பல தனியார் வாகனங்களும், பல கட்டடங்களும் சேதம் அடைந்தன.
லிபியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த பத்திரிக்கையாளர்கள் விடுதலை.
லிபியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த நான்கு வெளிநாட்டு செய்தியாளர்களை அரசு அதிகாரிகள் விடுவித்தனர்.லிபியா அரசுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் நடைபெற்று வரும் மோதல் குறித்து செய்தி சேகரிக்க பல நாடுகளிலிருந்து செய்தியாளர்கள் லிபியாவுக்குச் சென்றுள்ளனர். இவர்களில் நான்கு பேரை லிபிய அதிகாரிகள் கைது செய்தனர்.இதில் இணையதள செய்தி நிறுவனமான குளோபல் போஸ்ட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் போலி, செய்தி எழுத்தாளரான கிளேர் மார்கானா கில்லிஸ் ஆகிய இருவரும் அமெரிக்கர்கள்.
பிரிட்டனைச் சேர்ந்த நைஜல் சாண்ட்லர், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மனு பிராபோ ஆகியோர் மற்ற இருவர். இவர்கள் நால்வரும் கடந்த 6 வாரங்களாக லிபிய அதிகாரிகளால் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.இவர்களை புதன்கிழமை லிபிய அரசு விடுவிக்க உத்தரவிட்டது. விடுவிக்கப்பட்ட நால்வரும் லிபிய தலைநகர் திரிபோலியிலுள்ள ரிக்ஸஸ் ஹோட்டலுக்கு வந்து செய்தியாளர்களை சந்தித்தனர். லிபியாவில் செய்தி சேகரிக்க வந்துள்ள அனைத்து வெளிநாட்டு செய்தியாளர்களும் இங்குதான் தங்கியுள்ளனர்.
லிபியாவில் நிலைமை மோசமடைந்து வருகிறது என ஐக்கிய நாடுகள் சபைத் தலைவர் பான் கி மூன் கருத்து தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் அளித்த பேட்டியொன்றில் அவர் கூறியது: லிபியாவில் நடந்து வரும் சண்டையை நிறுத்தி அமைதி திரும்புவதற்கு ஐ.நா.வின் சிறப்புத் தூதுவராக அப்துல் இலா அல் காதிப் அனுப்பப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அவர் திரிபோலி போய்ச் சேர்ந்தார்.இவர் அங்குள்ள முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகிறார். அந்நாட்டில் அரசுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்து வரும் மோதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் கூறிவருகிறார்.
ஆயினும் நிலைமை மோசமடைந்து வருகிறது என்றே கூற வேண்டும். குறிப்பாக மிஸ்ராட்டா பகுதியில் கடந்த 2 மாதங்களாக லிபிய ராணுவத்தின் முற்றுகை தொடர்கிறது. 100க்கும் மேற்பட்டவர்கள் இங்கு உயிரிழந்திருக்கக் கூடும்.லிபியாவில் பல்வேறு மூத்த அதிகாரிகளை காதிப் சந்தித்திருக்கிறார். ஆனால் கடாபியை அவர் இதுவரை சந்திக்கவில்லை என்று பான் கி மூன் தெரிவித்தார்.தனது ஆட்சியைக் கவிழ்த்து லிபியாவின் வளங்களை மேற்கத்திய நாடுகள் சூறையாடவே இந்த சர்வதேசத் தாக்குதல் நடத்தப்படுகிறது என கடாபி கூறி வருகிறார்.
பாகிஸ்தான் மீது நடத்தப்படும் எந்த தாக்குதலும் சீனா மீது நடத்துவது போன்றது: சீன அமைச்சர்.
பாகிஸ்தான் மீது நடத்தப்படும் எந்த தாக்குதலும் சீனா மீது நடத்துவது போன்றது. பாகிஸ்தான் நாட்டின் இறையாண்மைக்கு அமெரிக்கா மதிப்பு அளிக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் சீனா வலியுறுத்தியுள்ளது.வாஷிங்டனில் கடந்த வாரம் அமெரிக்கா-சீனா இடையே பொருளாதார மற்றும் இரு நாட்டு உறவுகள் தொடர்பான பேச்சு வார்த்தை நடந்தது. இதில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கலந்து கொண்டார். அப்போது பாகிஸ்தான் நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அமெரிக்கா மரியாதை அளிக்க வேண்டும்.
"பாகிஸ்தான் மீது நடத்தப்படும் எந்த தாக்குதலும் சீனா மீது நடத்தப்படுவது போன்றது" என்று அமெரிக்க பிரதிநிதியிடம் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்ததாக தி நியூ டெய்லி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் இடையே நேற்று முன்தினம் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது பாகிஸ்தான் மீதான அமெரிக்கா தாக்குதல் பற்றி வாஷிங்டனில் நடந்த பேச்சு வார்த்தையின் போது அந்நாட்டிடம் எடுத்துரைக்கப்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியிடம் சீன பிரதமர் வென் ஜியாபோ தெரிவித்தார்.
இரு நாட்டு பிரதிநிதிகள் மற்றும் பிரதமர்கள் கலந்து கொண்ட கூட்டம் 45 நிமிடம் நீடித்தது. இதில் இரு நாட்டு உறவுகள், பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் சீனா வழங்கும் என்று கிலானிக்கு வென் ஜியாபோ உறுதி அளித்தார்.
இக்கூட்டத்திற்கு பின் பத்திரிகையாளர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் கிலானி அளித்த பேட்டியில் கூறியதாவது: தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானின் தியாகத்தை சீனா அங்கீகரித்துள்ளது. சர்வதேச அளவில் பாகிஸ்தானின் இந்த நோக்கத்திற்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டுடன் உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்று அமெரிக்காவிடம் சீனா வலியுறுத்தியுள்ளது. தைவான், திபெத் தொடர்பான சீனாவின் கொள்கைகளை ஆதரிக்கிறோம். ஐ.நா மறுசீரமைப்பு தொடர்பாக இரு நாடுகளும் தொடர்ந்து ஆலோசிக்கும். பாகிஸ்தானில் இரு நாடுகளும் இணைந்து அணு சக்தி, மின்சாரம் உட்பட பல்வேறு மின் உற்பத்திகளை நீண்ட கால திட்ட அடிப்படையில் மேற்கொள்ளும். இவ்வாறு கிலானி கூறினார்.
சீன பிரதமர் வென் ஜியாபோ கூறியதாவது: பாகிஸ்தான் வரலாற்றிலேயே தற்போது அந்நாடு இக்கட்டான சூழலை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டுடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் விரைவில் சிறப்பு பிரதிநிதிகள் கொண்ட குழு இஸ்லாமாபாத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இரு நாடுகள் இடையிலான 60 ஆண்டுகள் உறவை கொண்டாடும் வகையில் சீனாவின் மூத்த அமைச்சர் இந்த குழுவில் பங்கு பெறுவார்.
பின்லேடனின் குடும்பத்தை ஆதரிக்குமாறு சவுதி அரேபியாவை கேட்கவில்லை: பாகிஸ்தான்.
ஒசாமா பின்லேடனின் மனைவி மற்றும் குழந்தைகளை ஏற்றுக்கொள்ளும் படி சவுதி அரேபியாவிடம் கேட்கப்படவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் இரண்டு வாரங்களுக்கு முன் அமெரிக்க அதிரடி படையினரால் கொல்லப்பட்டார்.
இச்சம்பவத்தில் ஒசாமாவின் ஒரு மகனும் பலியானார். அபோதாபாத்தில் தங்கியிருந்த ஒசாமாவின் மூன்று மனைவிகளும், குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் தற்போது பாகிஸ்தான் அரசின் வசம் உள்ளனர்.
இவர்களை சவுதியிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இது குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் குறிப்பிடுகையில்,"ஒசாமாவின் மனைவி மற்றும் குழந்தைகளை சவுதி அரேபியாவிடம் ஒப்படைப்பது குறித்த பேச்சே எழவில்லை. சவுதியும் இது குறித்து எங்களிடம் விவாதிக்கவில்லை. நாங்களும் இது குறித்து அவர்களிடம் ஏதும் பேசவில்லை" என்றார்.
பேஸ்புக்கின் ரகசியங்கள் அம்பலம்.
மோசமான தந்திரங்களைப் பிரயோகிக்கும் வெகுசனத் தொடர்பு நிறுவனமொன்றை வாடகைக்கு அமர்த்தி கூகுள் நிறுவனத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேஸ்புக் நடந்து கொண்டது அம்பலமாகியுள்ளது.சமூக இணையத்தளமான பேஸ்புக் உரிமையாளர்கள் பேர்ஸன் மாஸ்டெல்லர் என்ற நிறுவனத்தின் சேவையை இதற்கெனப் பெற்றுள்ளனர். கூகுள் நிறுவனம் பற்றி எதிரிடையான செய்திகளை பத்திரிகைகளில் பிரசுரிக்கச் செய்வதே இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டப் பணி.
இந்த நிறுவனம் போக்லாந்து யுத்தத்தின் போது ஆர்ஜன்டீன ஆட்சியாளர்களை பிரதிநிதித்துவம் செய்த நிறுவனமாகும். வாசிப்போர் மத்தியில் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தும் வகையில் கூகுளின் சமூக வட்ட சேவை தொடர்பான கதைகளை இந்த நிறுவனம் வெளியிட்டது.
கூகுளின் சமூக இணையத்தளம்(சோஷியல் சேர்கள்) வாடிக்கையாளர்களின் இரகசியங்களை மீறிவிட்டது என்ற அடிப்படையில் தான் இந்தப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. பேஸ்புக்கிற்கு நேரடி சவால் விடுக்கக் கூடிய ஒரு சமூக இணையத்தளமாக இருப்பது கூகுளின் சோஷியல் சேர்கள் மட்டுமே.
வாடிக்கையாளர்கள் படங்கள், வீடியோக்கள் உட்பட பல்வேறு தகவல்களை இதில் தரவேற்றம் செய்ய முடியும். பேஸ்புக்கில் இருந்து அங்கீகாரமற்ற முறையில் தரவுகளையும், ஏனைய சேவைகளையும் இது பெற்றுக் கொள்வதாக பேஸ்புக் குற்றம்சாட்டியிருந்தது.பேஸ்புக்கால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட நிறுவனம் இது தொடர்பாக ஒரு குறிப்பை எழுதுவதற்கு அமெரிக்காவின் பிரபல சட்டத்தரணி ஒருவரை நாடியுள்ளது.
வாஷிங்டன்போஸ்ட் உட்பட பிரபல பத்திரிகைகளில் இந்தக் கட்டுரையைப் பிரசுரிக்க எழுதுமாறு கேட்டு அவரை நாடியுள்ளது. அவர் இந்த முயற்சிக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்று கேள்வி எழுப்பியபோது மேற்படி நிறுவனம் பதிலளிக்க மறுத்துவிட்டது.அதனையடுத்து அந்த சட்டத்தரணி இது தொடர்பான ஈ மெயில் தொடர்புகளை இணையத்தளம் வாயிலாக வெளியிட்டுள்ளார். அதனையடுத்தே பேஸ்புக்கின் குட்டு அம்பலமாகியுள்ளது.

ஆர்ஜென்டீனா விமானவிபத்தில் 22 பேர் உடல் கருகிப் பலி! 

அர்ஜென்டினாவில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் ரியோநெக்ரா மாகாணத்தில் உள்ள நியூகுயனில் இருந்து கமோடொரோ ரிவாடாவியா நகருக்கு புறப்பட்டு சென்றது. அதில் ஒரு குழந்தை உள்பட 19 பயணிகளும், 3 விமான ஊழியர்களும் இருந்தனர். 

அந்த விமானம் புறப்பட்ட 45 நிமிடத்தில் தெற்கு அர்ஜென்டினாவில் உள்ள படகோனியா என்ற இடத்தில் நடுவானில் வெடித்து சிதறியது. இதனால் தீப்பந்து போன்று எரிந்த நிலையில் தரையில் விழுந்தது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 22 பேரும் உடல் கருகி பலியானார்கள். 

விமானத்தின் பாகங்கள் எதுவும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தூள் தூளாக நொறுங்கியது. இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF