Monday, May 9, 2011

இன்றைய செய்திகள்.


காங்கேசன்துறைக்கான அபிவிருத்திப் பணிக்கு இந்தியா நிதியுதவி.

இந்திய துறைமுகங்களிலிருந்து வடபகுதிக்கு பொருட்களை கொண்டு வருவதற்கு அனுசரணையாக காங்கேசந்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா நிதியுதவி வழங்கவுள்ளது. 

இதுதொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படுமென புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதரக உயர் அதிகாரி சுகீஸவர சேனாதீர எக்ஸ்பிரஸ் செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார். 

யாழ்.காங்கேசன்துறை துறைமுகமானது இரு கட்டங்களாக அபிவிருத்தி செய்யப்படும். இலங்கையிலுள்ள கடல், வான்மார்க்க நுழைவு மையங்களில் ஒன்றாக காங்கேசன்துறை காணப்படுகிறது. காங்கேசன்துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான யோசனையை நிதி அமைச்சரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சமர்ப்பித்திருந்தார். 

கடந்த வாரம் அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. தற்போதுள்ள இறங்குதுறை மற்றும் கடலுக்குக் குறுக்கே அணை ஏற்படுத்துதல், துறைமுகப் பகுதியை ஆழமாக்குதல் போன்ற அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
பசில் ராஜபக்ஷவை இந்தியாவுக்கு அனுப்பவேண்டாம்! அவருடன் பேசத் தயாராக இல்லை: இந்திய அரசாங்கம்.

அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள இந்திய அரசாங்கம் தயாராக இல்லாத காரணத்தால் அவரை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டாமென அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பான கலந்துரையாடலுக்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான குழுவொன்று எதிர்வரும் தினங்களில் இந்தியா செல்லத் தயாராக இருந்தது.
ஆயினும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் எந்தவொரு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளத் தயாராக இல்லையென்று இந்திய அரசாங்கம் முகத்திலடித்தாற்போன்று இலங்கைக்கு அறிவித்துள்ளது.
அவ்வாறு நிபுணர் குழு அறிக்கை குறித்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டுமாயின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தலைமையிலான குழுவொன்றை அனுப்புமாறும் இந்திய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. அது தவிர எந்தவொரு அமைச்சர்  தலைமையில் குழுக்கள் வந்தாலும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள இந்திய அரசாங்கம் தயாராக இல்லையென்றும் கடுந்தொனியில்  அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் அதற்கு எதிராக இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதாயின் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்பன குறித்து கலந்தாலோசிக்க இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று மிக விரைவில் இலங்கைக்கு விஜயம்  செய்யவுள்ளது.
அக்குழுவில் இந்திய வெளியுறவுச் செயலளார் நிரூபமா ராவ், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மற்றும் இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோர் உள்ளடங்கவுள்ளதாக இந்தியத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
650 போலி பேஸ் புக் (FACE BOOK) கணக்குகள் முடக்கம்.
இலங்கையில் போலியான பேஸ் புக் (FACE BOOK)  கணக்குகளை பயன்படுத்தி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்ட பேஸ் புக்  கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.வேறும் நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தல், அவர்களின் தரவுகளை பயன்படுத்தல், நிதி மோசடிகளில் ஈடுபடல், கப்பம் கோரல், அச்சுறுத்தல் விடுத்தல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பில் 650 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக இலங்கை கணனி அவசர தொழிற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
பேஸ் இணையத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் தொடர்பில் 750 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரையில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் 650 போலி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.பேஸ் இணையத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் தொடர்பில் நாள்தோறும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பின்லேடன் பதுங்க அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தானிய உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ! அமெரிக்கா குற்றச்சாட்டு.

ஒசாமா பின்லேடனின் கொலை முடிந்து சர்ச்சைகள் தொடர்ந்து ஓயாமல் உள்ளன.. அபோதாபாத் நகரில் பின்லேடன் தனது 4 மனைவி மற்றும் மகன்களுடன் கடந்த 7 ஆண்டுகளாக தங்கி இருந்தது தெரியவந்துள்ளது. பின்லேடன் தங்கள் நாட்டுக்குள் இல்லை என்று பாகிஸ்தான் பல தடவை கூறியது. 

இந்த நிலையில் அந்த நாட்டுக்குள் பின்லேடன் வேட்டையாடப்பட்டது பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. பின்லேடன் விஷயத்தில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் முழு உண்மையையும் கண்டறியும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானிடம் அமெரிக்கா விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தங்கள் நிலையை தெளிவுப்படுத்த பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் பாஷா அமெரிக்கா சென்றுள்ளார். 

பாகிஸ்தான் உதவி இல்லாமல் பின்லேடன் அபோதாபாத் நகருக்குள் இவ்வளவு நாட்கள் தங்கி இருந்திருக்க இயலாது என்று அமெரிக்கா உறுதியாக நம்புகிறது. பின்லேடனுக்கு உதவி செய்த பாகிஸ்தான் அதிகாரிகளின் பெயர்களை அமெரிக்கா பட்டியலாக தயாரித்துள்ளது. அவர்களில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அஷ்பக் பெர்வீஸ் கயானி, ஐ.எஸ்.ஐ. தலைவர் சுஜா பாஷா, ஐ.எஸ்.ஐ. முன்னாள் தலைவர் நதீம்தாஜ் ஆகிய 3 பேர் மீது அமெரிக்கா அதிகமாக சந்தேகிக்கிறது. 

இவர்கள் மூன்று பேரும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யில் செல்வாக்குடன் திகழ்ந்தனர். கடந்த 6 ஆண்டுகளாக இவர்கள் பின்லேடனுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்துள்ளனர். பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்க ராணுவத்தை ஏவுகணை தாக்குதல் நடத்த சொல்லிவிட்டு, இவர்கள் பின்லேடனை அபோதாபாத்தில் மறைத்து வைத்துள்ளனர். அமெரிக்காவின் சந்தேகப் பார்வையில் சிக்கியுள்ள 3 பேரில் நதீம்தாஜ் மீதுதான் அமெரிக்கா அதிகம் சந்தேகப்படுகிறது. இவர் ஐ.எஸ்.ஐ. தலைவராக பதவி வகித்த நேரத்தில் அல்-கொய்தா வலிமை பெற்றது. இவரது நடவடிக்கைகளில் அப்போதே சந்தேகம் அடைந்த அமெரிக்கா, நெருக்கடி கொடுத்து அவரை ஐ.எஸ்.ஐ. பதவியில் இருந்து விரட்டியது குறிப்பிடத்தக்கது. நதீம்தாஜ் பதவி காலத்தில்தான் இந்தியா மீதும் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

அவரது சதி செயல்கள் தற்போது ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரத் தொடங்கி உள்ளன. பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. மற்றும் ராணுவத்தில் உள்ள மூத்த அதிகாரிகளில் யார்-யாரெல்லாம்? பின்லேடன் நடவடிக்கைக்கு உதவியாக இருந்தனர் என்ற தகவல்களை அமெரிக்கா கேட்டுள்ளது. ஆனால் அத்தகைய தகவல்கள் எதையும் அமெரிக்காவிடம் கொடுக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக கூறியுள்ளது. என்றாலும் பின்லேடனுக்கு நெருக்கமானவர்கள் என்றொரு பட்டியலை அமெரிக்க தயாரித்துள்ளது. இதன் மூலம் ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் பலர் சிக்க உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா சி.பி.எஸ்.தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தானில் பின்லேடனுக்கு பலர் உதவி செய்துள்ளனர் என்று கருத்து தெரிவித்துள்ளார். 

இது பற்றி நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்றார். அவர் மேலும் கூறுகையில், பாகிஸ்தானில் பின்லேடனுக்கு உதவுவதற்காக ஒரு நெட்வொர்க் இருந்துள்ளது. இதுபற்றி பாகிஸ்தானிடம் விசாரணை நடத்துவோம் என்றார். பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு அதன் தொடர்ச்சியான நடவடிக்கைக்கு ஒபாமா அளித்துள்ள அதிகாரப்பூர்வ கருத்து இதுவாகும். பாகிஸ்தானை விசாரிக்க போவதாக ஒபாமாவே வெளிப்படை யாக அறிவித்துள்ளதால் பாகிஸ்தான் அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை எப்படி சமாளிப்பது என்று பாகிஸ்தான் தலைவர்கள் தவித்தபடி உள்ளனர்.
வானில் தோன்றிய மக்களை வியப்பில் ஆழ்த்திய ஒளிக்கற்றை.
ரஷ்யாவில் இரவு நேரத்தில் வானில் ஒரு பிரகாச ஒளி தோன்றியது. அதைப் பார்த்த மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.ரஷ்ய ராணுவ தகவல் தொடர்புக்காக ஒரு செயற்கைகோள் சோயுஸ் ராக்கெட் மூலம் விண்வெளி பாதைக்கு அனுப்பப்பட்டது. இந்த செயற்கைகோள் இரவு நேரத்தில் ரஷ்யாவின் உரால் மலைப்பகுதியில் உள்ள எக்டேரின் நகரை கடந்த போது வானில் பிரகாசமான நீலநிறக்கோடு பளிச்சிட்டது.ராக்கெட் மூலம் சீறிச்செல்லும் போது வெளிப்பட்ட சிறிய துகள்களின் மீது நிலா வெளிச்சம் விழுந்ததால் இந்த பிரகாசமான நீலநிறக்கோடு ஏற்பட்டதாக கருதப்படுகிறது.

துருவப்பகுதிகளில் பூமி காந்தப்புலப் பகுதி காரணமாக பெரும் துகள்கள் திடீரென மோதிக் கொள்ளும் போது வானில் பிரகாசமான ஒளி ஏற்படுவது உண்டு. இந்த இயற்கை ஒளியைப் போன்று ரஷ்ய செயற்கை கோளின் வான்வெளி பயணத்தின் போது நீல நிற பிரகாச ஒளி ஏற்பட்டு பார்வையாளர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது.
ரஷ்ய ராணுவ செயற்கை கோள் ஏவுதல் குறித்த தகவலை முன் கூட்டியே அறியாதவர்கள் இந்த பிரகாச ஒளி வேற்றுக்கிரக விண்வெளிக் கப்பல் என்றே கருதினார்கள். வானில் தோன்றிய பிரகாச ஒளி விண்வெளி ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறவில்லை.


2012ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்: சர்கோசி நிலையில் தடுமாற்றம்.
2012ம் ஆண்டு பிரான்சில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நடப்பு ஜனாதிபதியான நிகோலஸ் சர்கோசி போட்டியிட்டு மீண்டும் பதவியில் அமர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.ஜனாதிபதி தேர்தலில் குறித்து மக்கள் மனநிலை என்ன என்ற ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் சர்வதேச நிதிய தலைவர் ஸ்ட்ராஸ்கான் முதல் சுற்று வாக்கெடுப்பில் இரண்டு சதவீத வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளார்.
வலதுசாரி இயக்கத்தலைவர் மரினேலே பென் 17 சதவீத வாக்குகளையும், சர்கோசி 16 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர். எல்.எச் 2 கணிப்புப்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது. 2007ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது சர்கோசிக்கு வெற்றி கிடைத்தது.2012ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சோசலிஸ்ட் வேட்பாளராக செகோலேனே ஹொயல் தேர்வு செய்யப்பட்டால் சர்கோசியிடமும் லேபென்னிடமும் ஹொயல் தோல்வியை சந்திப்பார் என கூறப்படுகிறது.
ஸ்ட்ராஸ்கான் போட்டியிட்டால் 35 சதவீத வாக்குகளை சர்கோசி இழக்க வேண்டி இருக்கும். மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சர்கோசி வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இருப்பினும் பிரதமர் பிரான்கய்ஸ் பிலான் கூறுகையில்,"சர்கோசி மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படுவார்" என்றார்.மே 6 மற்றும் 7ம் திகதிகளில் நடத்தப்பட்ட தொலைபேசி கணிப்பில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்தது. சர்வதேச நிதியத் தலைவர் கான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.
சிரியாவில் நீடிக்கும் போராட்டம்: டாங்கிகள் மூலம் ராணுவம் தாக்குதல்.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 50 நாட்களாக நடந்து வரும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.இப்போராட்டத்தில் இதுவரை 800 பேர் பலியாகி உள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். எனவே போராட்டத்தை ஒடுக்க அதிபர் ஆசாத் ராணுவ டாங்கிகளை பயன்படுத்தி வருகிறார்.
சிரியாவின் மூன்றாவது பெரிய "ஹோம்ஸ்" நகருக்குள் டாங்கி படைகள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இது தலைநகர் டமாஸ்கஸ்சில் இருந்து 165 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது.அங்கு மட்டுமில்லாமல் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார் 10 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஹோம்ஸ் நகரை சுற்றியுள்ள பாப் செபா, பாப் அம்ரோ, தல் அல் சோர்ம் மாவட்டங்களில் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.மேலும் காயம் அடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரண்டாம் உலகப்போர் முடிந்த 66வது ஆண்டு தின கொண்டாட்டம்: ஜேர்மனியில் உற்சாகம்.
இரண்டாவது உலகப்போர் நிறைவடைந்த 66வது ஆண்டு தினத்தையும், பிரமெனில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நீர்மூழ்கி கப்பல் தளம் திறப்பு நாளையும் ஞாயிற்றுக்கிழமை ஜேர்மனி கொண்டாடியது.இந்த நிகழ்ச்சியின் போது பிரிட்டிஷ் இசையமைப்பாளர் பெஞ்சமின் பிரிட்டன் இசையமைத்த இறந்த வீரர்களின் ஆன்மாவுக்கான இசைப்பாடலை 1250 பாடகர்கள் கலந்து கொண்டு பாடினர்.இந்தப் பாடகர்கள் ஐரோப்பாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்து வந்து பாடினார்கள். இரண்டாம் உலகப் போரில் மரித்த வீரர்களின் ஆன்மாவுக்காக இந்த இசைப்பாடல் முதன் முதலாக 1962ஆம் ஆண்டு மே மாதம் இசைக்கப்பட்டது.
இந்த போர் இசைப்பாடல் பாரம்பரிய லத்தீன் இசையுடன் பிரிட்டிஷ் வீரர் வில்பிரட் ஓவனின் போர் பாடலுடன் இசைக்கப்பட்டது. இந்த பிரிட்டன் வீரர் முதல் உலகப் போரின் இறுதியில் மரித்தார். போர் நினைவுப்பாடல் ரஷ்ய உச்ச ஸ்தாயில் பாடும் வகையிலும் இங்கிலீஷ் மற்றும் ஜேர்மன் இசை வடிவிலும் பாடும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.இதற்கிடையே ஜேர்மனியின் வடக்கு நகரமான பிரமனில் அதிகாரிகள் ஜேர்மனியின் பெரும் 2ஆம் உலகப் போர் நினைவுச் சின்னமான நீர்மூழ்கி கப்பல் தளத்தை திறந்து வைத்தனர். இந்த விலன்டின் தளம் 4 சதுர கிலோ மீற்றர் பரப்பளவை கொண்டது.
இதன் கட்டுமானப்பணி 1943ஆம் ஆண்டு துவங்கியது. இந்தப் பகுதியில் 1945ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரிட்டன் கடுமையாக குண்டு வீசி தாக்கியது. இந்த குண்டு தாக்குதல் காரணமாக நீர் மூழ்கி கப்பல் கட்டும் தளத்தை நாஜிக்கள் பாதியிலேயே கைவிட்டனர். நீர் மூழ்கி கப்பல் கட்டும் தளப்பணியை மேற்கொள்ள பல ஆயிரம் தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர்.இங்கு நாஜிப் படையினரால் கைதியாக கொண்டு செல்லப்பட்ட 87 வயது ஐரீஷ் நபர் ஹாரி காலன் நினைவு கூறியதாவது: தன்னை 17 வயதில் சிறை பிடித்துச் சென்றதாகவும், தினமும் 14 மணி நேரம் கொடுமையாக பணி செய்ய நாஜிக்கள் நிர்பந்தித்ததாகவும் அவர் கூறினார். நாஜிக்கள் தங்களை விலங்குகள் போல நடத்தினர் என்றும் அவர் கண்ணீருடன் கூறினார்.
ஆப்கனில் நடந்த தாக்குதல்: 23 மனித வெடிகுண்டுகள் அழிப்பு.
ஆப்கானிஸ்தானில் காந்தகர் மாகாணத்தில் தலிபான்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் நடத்திய வேட்டையில் 23 மனித வெடிகுண்டுகள் கொல்லப்பட்டனர்.மேலும் 4 பேர் மனித வெடிகுண்டாக உலாவியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் ஜமாரா பாஷ்ஹாரி காபூலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: காந்தகார் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய வேட்டையில் 23 மனித வெடிகுண்டுகள் கொல்லப்பட்டனர்.
மேலும் 4 ‌மனிதவெடிகுண்டுகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் காந்தகர் சிறையில் சுரங்கப்பாதை அமைத்து தப்பி‌யோடியவர்கள் ஆவார். நாட்டில் பன்முக தாக்குதல் நடத்தப் போவதாக தலிபான்கள் கூறிவருவதாக உளவு அமைப்புகள் எச்சரித்து வருகின்றன.இந்நிலையில் தலிபான்களை ஒழித்துக்கட்ட நேட்டோப்படையினருடன், ஆப்கான் பாதுகாப்புப்படையினரும் தீவிர ‌தேடுல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அகதிகளை ஏற்றி சென்ற கப்பல் பாறையில் மோதியது.
500 அகதிகளுடன் சென்ற கப்பல் பாறையில் மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.லிபியா நாட்டில் ஆசியா மற்றும் ஆப்ரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களில் 500 பேர் இத்தாலி நாட்டுக்கு அகதிகளாகச் செல்ல முடிவு செய்து ஒரு கப்பலில் புறப்பட்டனர்.
இத்தாலி அருகே லம்பிடிசா என்ற தீவில் ஞாயிற்றுக்கிழமை இவர்கள் சென்ற கப்பல் திடீரென்று ஒரு பாறையில் மோதி நின்றது. இதனால் கப்பலில் இருந்த அகதிகள் பயத்தில் அலறினார்கள். சிலர் கடலில் குதித்து தத்தளித்தனர். அப்போது இந்த வழியாக வந்த இத்தாலிய கடலோரக் காவல் படையினர் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
இந்த விபத்தில் சில அகதிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் 800 அகதிகளுடன் மற்றொரு கப்பல் ஞாயிற்றுக்கிழமை லம்பிடிசா தீவுக்கு வந்தது.இந்த ஆண்டு இது வரை 30 ஆயிரம் பேர் லம்பிடிசா தீவுக்கு அகதிகளாக வந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் துனிசியா நாட்டைச் சேர்ந்தவர்கள். துனிசியா நாட்டில் கடந்த ஜனவரி மாதம் புரட்சி வெடித்ததில் இருந்து பலர் வாழ்வு தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கிறார்கள்.
பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர் தலைமறைவு.
பாகிஸ்தானில் ஒசாமா பின்‌லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்வத்தில் ஐ.எஸ்.ஐயின் தோல்வி குறித்து கடும் விமர்சனம் எழந்தது.இந்த காரணத்தால் ஐ.எஸ்.ஐ அமைப்பின் தலைவர் அகமது சுஜா பாஷா அமெரிக்க செல்வதாக கூறிவிட்டு அமெரிக்க செல்லாமல் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 1ம் திகதியன்று பாகிஸ்தானில் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடன் அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் செயல்பாடுகள் குறித்து எதிர்கட்சியினர் கடும் விமர்சனம் செய்தனர்.
பாஷா பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். தனது பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்தும், அமெரிக்காவை சமாதானப்படுத்துவதற்காக கூறிவிட்டு நேற்று முன்தினம் சென்றவர் அமெரிக்கா வந்து செல்லவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.அவர் தலைமறைவாகி விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த பெப்பிரவரி மாதம் 4ம் திகதி தான் அகமது சுஜா பாஷாவின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டுகளுக்கு நீட்டித்து பிரதமர் யுசுப்ராஸா கிலானி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முஷாரப்பை உடனடியாக கைது செய்ய வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு.
பெனசிர் பூட்டோவுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பை கைது செய்ய அந்நாட்டு புலனாய்வுத் துறைக்கு பயங்கரவாத வழக்கு விசாரணை விசேட நீதிமன்றம் இரண்டு வார கெடு விதித்துள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் பூட்டோ 2007ம் ஆண்டு தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கு இஸ்லாமாபாத்தில் இதற்கான விசேட நீதிமன்றத்தில் நடக்கிறது.
பெனசிர் பூட்டோவுக்கு போதிய பாதுகாப்பு வழங்கத் தவறியதாக முஷாரப் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராணா நிசார் அகமது உத்தரவிட்டிருந்தார்.கடந்த பெப்பிரவரி மாதம் முஷாரபுக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அது முதல் கொண்டு ஒவ்வொரு முறையும் அரசு வக்கீல் இந்த விடயத்தில் கால அவகாசம் கோரி வந்தார்.
குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுடன் செய்யப்படாததால் முஷாரப்பை கைது செய்யும் விடயத்தில் இந்த நாடுகள் ஒத்துழைக்க மறுப்பதாக அரசு வக்கீல் குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து அரசு வக்கீல் மேலும் அவகாசம் கோரினார். ஆனால் இதற்கு மேல் முஷாரப்பை கைது செய்ய கால அவகாசம் அளிக்க முடியாது. இரண்டு வாரத்துக்குள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என எப்.ஐ.ஏவுக்கு நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
எகிப்தில் வெடித்த மதக் கலவரம்: 190 பேர் கைது.
எகிப்தில் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 190 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கெய்ரோவின் இம்பாபா மாவட்டத்தில் நேற்றிரவு இருதரப்பினருக்கும் இடையேஏற்பட்ட மோதலில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 186 பேர் காயமடைந்தனர்.இஸ்லாமிய இளைஞரை மணந்த பெண் ஒருவரை கிறிஸ்தவர்கள் அத்துமீறி தங்கள் கட்டுப்பாட்டில் பிடித்து வைத்துள்ளதாக தகவல் பரவியது.
இதையடுத்து காப்டிக் செயின்ட் மேனா தேவாலயத்திற்கு அருகே நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் திரண்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.இதையடுத்து பொலிசாரும் ராணுவத்தினரும் அங்கு விரைந்து வந்தனர். கலவரம் தொடர்பாக 190 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆளில்லா ஹெலிகாப்டர் சோதனை முயற்சி வெற்றி.
சீனா நாட்டின் ஷான்டோங்கில் உள்ள வெய்வேங் சியான்க்சியாங் என்ற விண்வெளி நிறுவனம் ஆளில்லா ஹெலிகாப்டரை சோதனை முயற்சியாக பறக்க செய்து சாதனை படைத்துள்ளது.இது 10 நிமிடங்கள் வரை பறந்து பின்பு பத்திரமாக தரை இறங்கியது. வி750 என்ற மாடல் வகையை சேர்ந்த இந்த ஹெலிகாப்டர் மணிக்கு 161 கி.மீ வேகத்தில் சுமார் 4 மணி நேரம் தொடர்ந்து பறக்கும் திறன் பெற்றது.
மேலும் தரையிலிருந்து 150 கி.மீ தொலைவில் இதனை இயக்கலாம் அல்லது தானாக இயங்கும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து அந்நிறுவனத்தின் இயக்குநர் செங் ஷென்ஜாங் என்பவர் கூறுகையில்,"கண்காணிக்கும் பணி, தேடுதல் மற்றும் மீட்கும் பணி, ராணுவ மற்றும் உள்நாட்டு சேவைகளுக்கும் இந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படும்" என்றார்.
பின்லேடனைக் கொன்ற வீரர்களுக்கு ஒபாமா பாராட்டு.
அல்கொய்தா தலைவர் பின்லேடனைக் சுட்டுக்கொன்ற அமெரிக்கப்படை வீரர்களை ஜனாதிபதி பராக் ஒபாமா நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.இந்நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதியால் வழங்கப்படும் மிக உயரிய பாராட்டுப் பத்திரத்தையும் ஒபாமா வீரர்களுக்கு வழங்கினார்.
அவர் கூறியதாவது: மிகச் சிறப்பாக உங்கள் பணியைச் செய்து முடித்தீர்கள். அமெரிக்க மக்கள் சார்பாகவும், உலக சமுதாயத்தின் சார்பாகவும் உங்களுக்கு என்னுடைய வணக்கங்கள் என்று பின்லேடனைக் கொன்ற படையினரைப் பார்த்துக் கூறினார் ஒபாமா.ஆப்கானிஸ்தானில் பணியாற்றிவிட்டுத் திரும்பிய அமெரிக்க வீரர்களையும் பின்லேடனைக் கொன்ற வீரர்களையும் அந்த நிகழ்ச்சியில் ஒபாமா சந்தித்தார். அமெரிக்க வீரர்களின் ஈடு இணையற்ற தியாகம், வீரம், அர்ப்பணிப்பு உணர்வு காரணமாக இது சாத்தியமாயிற்று என்றார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF