Sunday, May 22, 2011

இன்றைய செய்திகள்.

வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்திய விஜயம் இலங்கைக்கு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி எல் பீரிஸின் இந்திய விஜயம் இலங்கைக்கு வெற்றியளிக்கவில்லை என்று சண்டே ரைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.எந்த ஒரு வெளிநாட்டு அலுவல்கள் அதிகாரிகளுமின்றி இந்தியாவுக்கு சென்றிருந்த ஜி எல் பீரிஸ், அங்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உட்பட்டவர்களை சந்தித்திருந்தார். இதன் போது இலங்கை விடாப்பிடியாக இருந்த பல விடயங்களை அமைச்சர் ஜி எல் பீரிஸ் விட்டுக்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
13 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சரும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணாவும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிலும் ஒரு பந்தியில் 13 வது அரசியலமைப்பு அத்துடன் பிளஸ் என்ற உறுதிமொழியையும் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது.
இந்தியாவின் அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட 13 வது அரசியலமைப்புக்குள் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வருகின்றன. எனினும் அதனை மாகாண சபைகளுக்கு வழங்கப் போவதில்லை என்று அரசாங்கம் கூறிவந்தது.
இந்தநிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அந்த இரண்டு அதிகாரங்களும் இல்லாமல் இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தை பயனற்றது என்று தெரிவித்து வருகிறது. இந்தநிலையில் 13வது அரசியலமைப்பு பிளஸ் என்ற இலங்கை அரசாங்கத்தின் உறுதிமொழி எதனை குறித்து நிற்கிறது என்று சண்டே ரைம்ஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
நிச்சயமாக பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் அதில் உள்ளடங்கும் என்று சண்டே ரைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.இந்த இரண்டு அதிகாரங்கள் தொடர்பான கோரிக்கையையே இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமிழீழ விடுதலைப்புலிகளின் கோரிக்கை என்று கூறிவந்தார். இந்தநிலையில் இந்தியாவின் அழுத்தத்துக்கு மத்தியில் மாகாண சபைகளுக்கு வழங்கப்போகும் இந்த அதிகாரங்கள் தொடர்பில் அவர் சிங்கள மக்களுக்கு எதனைக் கூறப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அத்துடன் பான் கீ மூனின் நிபுணர் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு எதிரான போக்குக்கு ஆதரவு திரட்டும் முகமாகவே அமைச்சர் ஜி எல் பீரிஸ் இந்தியாவுக்கு சென்றிருந்தார். எனினும் அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச அழுத்தங்களை தவிர்க்க உள்ளூரில் சுயாதீனமான விசாரணையை மேற்கொள்ளுமாறு இந்தியா வலியுறுத்த அதனை இலங்கையும் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூட்டறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது. 
எனவே ஜி எல் பீரிஸின் இந்திய விஜயம் இலங்கைக்கு பாதகத்தையே கொண்டு வந்துள்ளது.
இதற்கிடையில் தமிழக புதிய முதல்வர் ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்தவுடன் இலங்கை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் மற்றும் அவர் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்தமை ஆகியன ராஜபக்ச அரசாங்கத்துக்கு சவால்களேயாகும் என்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பதவியைக் கைப்பற்றுவாரா யாழ். வம்சாவளித் தமிழர்?
சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பதவியைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பொன்று யாழ்.வம்சாவளித் தமிழரான சிங்கப்பூர் துணைப் பிரதமரை நாடி வந்துள்ளது.சிங்கப்பூர் நாட்டு துணைப் பிரதமரும் நிதியமைச்சரான தர்மன் சண்முகரட்னத்தை சர்வதேச நாணய நிதியத்தின்  தலைவராக நியமிக்க வேண்டும் என ஆசிய பசுபிக் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடப்பிடமாக கொண்ட தமிழரான இவர் 2007ம் ஆண்டு முதல் சிங்கப்பூர் நிதியமைச்சராக உள்ளார். கடந்த வாரம் இவரை துணைப் பிரதமராகவும் அந்நாட்டு பிரதமர் லீ சென் லூங் நியமித்துள்ளார்.
இந்நிலையில் இவரை சர்வதேச நாணயநிதியத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று பிலிப்பைன்ஸ், தாய்லாந்து நிதியமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்நாட்டு முக்கிய அரசியல் பிரமுகர்களில் ஒருவராகவும் பொருளாதார நிபுணராகவும் உள்ள  சண்முகரட்னம் சிங்கப்பூர் நிதி ஆணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.பாலியல் குற்றச்சாட்டில் கைதானதைத் தொடர்ந்து ஐஎம்எப் தலைவர் பதவியிலிருந்து டோமினிக் ஸ்டிராஸ் கான் ராஜானாமா செய்துள்ள நிலையில் அப்பதவியை தர்மன் சண்முகரட்னத்துக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தெற்காசிய நாடுகளிலிருந்து எழுந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் உருவாக்கப்பட்ட 1946ம் ஆண்டிலிருந்தே அதன் தலைவராக ஐரோப்பியர்களே இருந்து வருகின்றனர்.  இப்போது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை காக்க சண்முகரட்னம் போன்ற மிகச் சிறந்த பொருளாதார மூளைகளே உதவ முடியும் என்று பிலிப்பைன்ஸ் நிதித்துறைச் செயலாளர் சீசர் புருசிமா கூறியுள்ளார்.
இதற்கிடையே தர்மன் சண்முகரத்தினம்  தற்போதைக்கு சர்வதேச நாணய நிதிய நிறைவேற்றுக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
ஆனால் உலகின் முன்னணி பொருளியியல் வல்லூனர்கள், மத்திய வங்கிகளின் ஆளுநர்கள், நிதி அமைச்சர்கள் என பலரும் இப்பதவியை கைப்பற்ற முயற்சி செய்து வருகின்றனர். இந்தியா தென்னாபிரிக்க போன்ற நாடுகளில் உள்ளவர்களும் இந்த பதவியை பெறுவதற்கு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.அதே நேரம் சர்வதேச நாணய நிதியத்தின்  தலைமைப் பதவியை எளிதாக விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று சில ஐரோப்பியத் தலைவர்கள் ஏற்கனவே தெளிவு படுத்திவிட்டனர். ஜெர்மனி அதிபர் அங்கெலா மார்க்கல் ஐரோப்பியர் ஒருவர் தான் நாணய நிதியத்தின் தலைவராக வேண்டுமென்று தீவிரமாக செயற்படுகின்றார்.
இந்த பதவி ஐரோப்பிய நாடு ஒன்றிற்கே வழங்கப்பட வேண்டும் என ஐரோப்பிய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்ற போதிலும் இம்முறை இப்பதவிக்கு தென்னாபிரிக்கா, இந்தியா, எகிப்து, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்தும் போட்டி எழுந்துள்ளது.அவ்வாறு செல்வாக்கு மிக்க நாடுகளின் தெரிவாகவுள்ள உலகத்தலைவர்களுடன் சிங்கப்பூர் துணைப்பிரதமர் தர்மன் சண்முகரத்தினத்தின் பெயரும் முன்மொழியப்படுகிறது. ஆயினும் நாணய நிதியத்தின் தலைமைத்துவப் போட்டியை அடையும் நோக்கம் தனக்கு கிடையாது என அவர் வலியுறுத்தியுள்ளார்..
இலங்கையில் மூன்று தசாப்தங்களின் பின்னர் அவசரகால சட்டம் நீக்கப்படப் போகிறது?
இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தை முழுமையாக அகற்றுவதற்கான ஆலோசனையை மேற்கொண்டு வருகின்றது.அரசாங்கத்தின் உயர் அமைச்சர் ஒருவரை கோடிட்டு இந்த செய்தி வெளியாகியுள்ளது.
மூன்று தசாப்தங்களாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரக்கால சட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பட்டு வந்தது.இந்தநிலையில் அவசரகாலச் சட்டத்தை நீக்கினால் அது அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள மரியாதைக்குறைவை காப்பாற்றக்கூடியதாக இருக்கும் என்று சிரேஸ்ட அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் வலியுறுத்தல் இதற்கு முக்கியமான காரணமாகும்.இலங்கையில் அவசரகால சட்டம் ஜே.வி.பியின் இளைஞர்கள் 1971 ம் ஆண்டு மேற்கொண்ட கிளர்ச்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.அதன் பின்னர் இரண்டு தடவைகளை தவிர தொடர்ந்தும் அந்த சட்டம் நாட்டில் அமுல் செய்யப்பட்டது.
ஐ.நா.மனித உரிமைகள் சபையில் இலங்கை கடும் விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும்.
எதிர்வரும் 30 ஆம் திகதி; ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை கூட்டத்தில் எவ்வித முன் ஆயத்தங்களும் இன்றி இலங்கை பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளதுஇலங்கையில் இடம்பெற்ற போரின்போது மனித உரிமைமீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் என்பன நிகழ்ந்தாக ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்;கையிட்டுள்ளது
இந்தநிலையில் இலங்கையின் அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் ஜெனீவா செல்லவுள்ளனர்ஜூன் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த அமர்வுகளின்போது இலங்கைப்படையினர் கைதுசெய்யபட்ட தமிழீழ விடுதலைப்புலிகளை இலங்கைப்படையினர் சுட்டுக்கொல்லும் செனல் 4 தொலைக்காட்சியின் காணொளி தொடர்பில் பதில் வழங்கவுள்ளனர்
இலங்கையின் அமைச்சர்கள் இந்த காணொளிகள் உயர் தொழில்நுட்பத்தை வைத்து தயாரிக்கப்பட்டவையாகும் என்பதை அமர்வின்போது சுட்டிக்காட்டவுள்ளதுஎனினும் செனல் 4 இந்த காட்சி. களத்தில் இருந்து படைவீரர் ஒருவரின் கையடக்க தொலைபேசியின் மூலம் இந்த காட்சி படமாக்கப்பட்டதாக தெரிவித்து வருகிறது
இதனைதவிர பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை ஆதாரமற்றது என்றும் அது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கம் அல்ல என்ற வாதத்தையும் இலங்கை அமைச்சர்கள் வலியுறுத்தவுள்ளனர்எனினும் இந்த அறிக்கையின் பரிந்துரைகளுக்கு ஏற்ப இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரணை செய்ய சர்வதேச பொறிமுறை ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கதிர்வீச்சு கலந்த நீரை வெளியேற்ற ராட்சத தெப்பம் நன்கொடை.
ஜப்பானில் அணுமின் நிலையத்தில் சேர்ந்துள்ள கதிர்வீச்சு கலந்த தண்ணீரைப் பாதுகாப்பாக வெளியேற்ற ராட்சத தெப்பம் பயன்படுத்தப்பட உள்ளது.ஜப்பானில் மார்ச் 11ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியால் வடகிழக்குப் பகுதியிலுள்ள புகுஷிமா அணு உலை முற்றிலும் சேதம் அடைந்தது. அங்கிருந்த மூலக்கூறுகள் உருகத் தொடங்கின. கதிர்வீச்சுப் பரவியதால் 20 கி.மீ சுற்றளவுக்கு மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அணு உலைகளில் இருந்த பாதுகாப்புத் திட்டங்கள் முழுவதும் சேதமடைந்ததால் மூலக்கூறுகளில் வெப்பம் கடுமையாக உயர்ந்தது. இது வெடித்துச் சிதறி பேரழிவு ஏற்படும் அபாயம் எழுந்தது.
வெப்பத்தைத் தணிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஹெலிகாப்டர் மூலம் கடல் நீரை அணு உலைகள் மீது இரைத்தனர். இரண்டு மாதங்களாக நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இதனால் அங்கு ஏராளமாக கதிர்வீச்சுள்ள நீர் சேர்ந்துள்ளது. 90 ஆயிரம் டன் அளவு கதிர்வீச்சு கலந்துள்ள நீர் இங்கு உள்ளது.அதைப் பாதுகாப்பான நீராக மாற்றவும், அதை வெளியேற்றவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் ஷிசுவோகா நகராட்சி புகுஷிமா அணுமின் நிலையத் துறைமுகத்துக்கு ஒரு ராட்சத தெப்பத்தை அனுப்பியுள்ளது. இது 136 மீற்றர் நீளமும், 46 மீற்றர் அகலமும், 3 மீற்றர் உயரமும் உடையது. இதில் 10 ஆயிரம் டன் நீர் கொள்ளளவு உள்ளது.இதன் மூலம் சிறிது சிறிதாக கதிர்வீச்சு பரவிய நீரைப் பாதுகாப்பாக வெளியேற்ற புகுஷிமா அணுமின் நிலையத்துக்கு நன்கொடையாக ஷிசுவோகா நகராட்சி வழங்கியுள்ளது.
பின்லேடன் மீதான தாக்குதலை போன்று மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தப்படும்: ஒபாமா உறுதி.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகே உள்ள அபோதாபாத் நகரில் மே மாதம் 2ஆம் திகதி அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படைகள் சுட்டுக் கொன்றனர்.பாகிஸ்தான் மண்ணில் இன்னொரு தீவிரவாதத் தலைவரை கண்டறிந்தால் அதே போன்ற தாக்குதலை அமெரிக்கா நடத்தும் என ஜனாதிதி ஒபாமா திட்டவட்டாக தெரிவித்தார்.தங்கள் மண்ணில் அத்துமீறிய அமெரிக்கா பின்லேடனை கொன்ற விவகாரம் பாகிஸ்தானுக்கு எரிச்சலை தந்துள்ளது. இதனால் இருநாடுகள் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நிர்வாகத்தை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரத்தில் பின்லேடனை போன்ற இன்னொரு தீவிரவாதி பதுங்கி இருந்தால் மீண்டும் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயங்காது என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எச்சரித்துள்ளார். ஒபாமா பி.பி.சி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.
ஐரோப்பிய பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் அவர் இவ்வாறு அதிரடியாக தெரிவித்தார். அமெரிக்காவை பாதுகாக்க வேண்டியது எங்களது கடமை. பாகிஸ்தான் இறையாண்மையை நாங்கள் மதிக்கிறோம்.அதே நேரத்தில்  எங்களது மக்கள் மீதோ அல்லது எங்களது கூட்டணி நாட்டின் மக்கள் மீதோ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதை நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது என ஒபாமா கூறினார்.
அமெரிக்காவின் அத்துமீறல் நடவடிக்கையை பாகிஸ்தான் தலைவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலும் அமெரிக்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதுபோன்ற தாக்குதல் தொடர்ந்தால் இருநாடுகள் இடையே உள்ள உறவில் விபரீத விளைவு ஏற்படும் என பாகிஸ்தான் நாடாளுமன்றம் எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் இந்த எச்சரிக்கையை விடுத்த போதும் அமெரிக்கா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
மலேசியாவில் நிலச்சரிவு: 15 அனாதை குழந்தைகள் பலி.
மலேசியாவில் உள்ள மத்திய செலாங்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று திடீரென 2 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் அங்கிருந்த அனாதை இல்லம் மண்ணுக்குள் புதைந்தது.தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இருந்தும் அனாதை இல்லத்தில் தங்கியிருந்த 15 மாணவர்கள் மற்றும் அந்த இல்லத்தின் நிர்வாகி ஒருவரும் உயிரிழந்தனர்.
இவர்கள் தவிர 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே பெய்த மழை காரணமாக பூமிக்குள் இருந்த ஈரத்தினால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஈராக்கில் பணியை முடித்து பிரிட்டன் வீரர்கள் நாடு திரும்பவுள்ளனர்.
ஈராக்கில் பிரிட்டன் ராணுவ ஓபரேஷன் முடிவடைந்தது. றோயல் கடற்படை வீரர்கள் ஈராக்கிய கடற்படை வீரர்களுக்கு அளித்த பயிற்சியை நிறைவு செய்து கொண்டனர்.
கடந்த 2003ஆம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படை தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன் கொல்லப்பட்டார். சதாம் ஹுசைன் உலகை அச்சுறுத்தும் பயங்கர ஆயுதங்களை வைத்து இருந்தார் என இந்த படையெடுப்பு நடைபெற்றது.அவரது மரணத்திற்கு பின்னர் ஈராக்கில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன. இதனால் உள்நாட்டு பாதுகாப்பு பணியை ஸ்திரப்படுத்த வேண்டிய நிலையில் பிரிட்டன் கடற்படையினர் மற்றும் இதர வீரர்கள் முகாமிட்டனர்.
அவர்கள் ஈராக் வீரர்களுக்கு தீவிர பாதுகாப்பு பயிற்சியை அளித்தனர். பிரிட்டன் கடற்படை வீரர்கள் அளித்த பயிற்சி டெலிக் என அழைக்கப்பட்டது. இந்த டெலிக் பயிற்சியை பிரிட்டன் கடற்படை வீரர்கள் இன்னும் சில மணிநேரங்களில் முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார்கள்.
பிரிட்டனின் பெரும்பாலான வீரர்கள் திரும்பினாலும் ஒரு சில வீரர்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்தின் பிரிட்டன் தூதரகத்தில் இருப்பார்கள். ஈராக் போரின் போது அதிகபட்சமாக 46 ஆயிரம் பிரிட்டன் வீரர்கள் முகாமிட்டு இருந்தனர்.2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரிட்டனின் அதிகப்பட்ச வீரர்கள் நாடு திரும்பினார்கள். பாஸ்ரா பிரிட்டனின் முக்கிய முகாமாக இருந்தது. இந்த முகாமில் இருந்து அதிக அளவு வீரர்கள் திரும்பினார்கள்.
ஈராக் போரின் போது 2003ஆம் ஆண்டில் இருந்து 179 பிரிட்டிஷ் வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் லியாம் பொக்ஸ் அஞ்சலி செலுத்தினார். ஈராக்கின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பாடுபட்டு உயிர் நீத்த அந்த பிரிட்டன் வீரர்களின் சேவையை புகழ்ந்துரைத்தார். ஈராக்கின் 1800 வீரர்களுக்கு பிரிட்டன் கடற்படையினர் பயிற்சி அளித்தனர்.
ஐஸ்லாந்தில் பயங்கர எரிமலை வெடிப்பு.
ஐஸ்லாந்து பனிப்பாறைப் பகுதியில் உள்ள கிரிம்ஸ்வோடன் எரிமலை சனிக்கிழமை வெடித்தது. அதிலிருந்து புகை தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.எரிமலை வெடித்த போது அந்த வழியாக ஒரு விமானம் சென்றது. அந்த விமானம் பத்திரமாக சேர்ந்ததா என்றும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த தகவலை ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மைய அலுவலக அதிகாரி ஹார்ல்டர் எரிக்சன் தெரிவித்தார்.
கிரிம்ஸ்வோடன் எரிமலையில் ஜி.எம்.டி நேரம் இரவு 7 மணிக்கு புகை வெளி வரத் துவங்கியது. 4 மணி நேரத்தில் இந்த புகை 11 கிலோ மீற்றர் அளவில் அதாவது 6.8 மைல் அளவிற்கு பரவியது.
மற்றொரு வானிலை ஆய்வு மைய அதிகாரி பிரிட்ஜான் மாக்னுசன் கூறுகையில்,"2 மணி நேரத்தில் 20 கிலோ மீற்றர் தூரத்திற்கு கரும்புகை பரவியது" என தெரிவித்தார்.எரிமலை வெடிப்பால் சாம்பல் நிறப்புகை சுற்றுப்பகுதியில் கடுமையாக பரவியது. இதனால் அருகாமையில் உள்ள இடங்கள் தெரியவில்லை. எரிமலை வெடிப்பால் அந்த வான் பகுதியில் சிறிது நேரம் விமானங்கள் பறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. சாலைப்போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
ஐஸ்லாந்தில் மிக தீவிரமான எரிமலை வெடிப்பு உள்ள பகுதி கிரிம்ஸ்வோடன் ஆகும். கடந்த 1922ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை 9 முறை இங்கு எரிமலை வெடித்துள்ளது.வடக்கு அட்லாண்டிக் தீவு தேசமான வாட்னஜோகுல் பனிப்பகுதிக்கு தாழ்வாக இப்பகுதி அமைந்துள்ளது. ஐஸ்லாந்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எஜா போல் பகுதியில் எரிமலை வெடித்தது குறிப்பிடத்தக்கது.
காபூல் ராணுவ மருத்துவமனையில் மனித வெடிகுண்டுத் தாக்குதல்: 6 பேர் பலி.
மருத்துவமனையில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் பயிற்சி மருத்துவர்கள் 6 பேர் இறந்தனர். 23 பேர் காயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்க ஆதரவுடன் நடந்து வரும் அதிபர் கர்சாய் அரசுக்கு எதிராக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க அமெரிக்க ராணுமும், ஆப்கானிஸ்தான் அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.இந்த நிலையில் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனைக்குள் சனிக்கிழமை காலை மனித வெடிகுண்டு தீவிரவாதி ஒருவர் புகுந்தார். திடீரென்று அவர் உடலில் கட்டி இருந்த குண்டை வெடிக்கச் செய்தார்.
குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் பயிற்சி மருத்துவர்கள் 6 பேர் உடல் சிதறி இறந்தனர். மேலும் பயிற்சி மருத்துவர்கள், நோயாளிகள் உள்பட 23 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. மருத்துவமனையில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் பயிற்சி மருத்துவர்கள் 6 பேர் இறந்தனர். 23 பேர் காயம் அடைந்தனர்.
ஜேர்மன் உள்நாட்டு பாதுகாப்பில் ராணுவம்: ஆளும் அரசின் கூட்டணி கட்சி கடும் எதிர்ப்பு.
ஜேர்மனியின் உள்நாட்டுப் பாதுகாப்பில் ராணுவத்தை பயன்படுத்துவது குறித்த கருத்துருவை ஜேர்மனி உள்துறை அமைச்சர் அளித்தார்.உள்நாட்டில் தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கு ராணுவத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என ப்ரீடெமாக்ரடிக் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்த கட்சி ஆளும் ஜேர்மனி அரசின் இளைய கூட்டாளி கட்சியாகும். எப்.டி.பி கட்சியின் துணைத்தலைவரான செலா பில்ட்ஸ் கூறுகையில்,"ஜேர்மனி உள்நாட்டுப் பாதுகாப்பில் தீவிரவாதத்தை எதிர்த்து போரிட ராணுவத்தை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. எப்.டி.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்நாட்டு பாதுகாப்பு அடிப்படையில் மாற்றம் வருவதை விரும்ப மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
கன்சர்வேடிவ் கிறிஸ்டியன் சோசியல் யூனியன் கட்சியை சேர்ந்தவரும் உள்துறை அமைச்சருமான ஹான்ஸ் பீட்டர் பிரடெரிக் முன்னர் கூறுகையில்,"உள்நாட்டு தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு போதுமானதாக இல்லை. இந்த நிலையில் ராணுவத்தை பயன்படுத்த விரும்புகிறோம்" என்று நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.இந்த கருத்துக்கு தற்போது எப்.டி.பி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எப்.டி.பி கட்சியின் எதிர்ப்பு உள்துறை அமைச்சர் ஹான்ஸ் பீட்டருக்கு பெரும் அதிர்ச்சியை தராது. ஏனெனில் உள்நாட்டு பாதுகாப்பு மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த முனையவில்லை என அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அடுத்த ஐ.எப்.எம் தலைவராக பிரான்ஸ் நிதி அமைச்சர்: ஐரோப்பிய நாடுகள் முழு ஆதரவு.
சர்வதேச நிதிய அமைப்பின் தலைவராக இருந்த டொமினக் ஸ்டிராஸ்கான் நியூயார்க் ஹோட்டல் பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.பாலியல் வழக்கில் சிக்கி உள்ள ஸ்டிராஸ்கான் ஐ.எம்.எப் தலைமை பதவியில் இருந்து விலகியுள்ளார். அடுத்த ஆண்டு பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புள்ள கான் சோசியலிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.
அவர் மீது திட்டமிட்டு பழி சுமத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் மக்கள் கருதுகிறார்கள். இந்த நிலையில் ஐ.எம்.எப் அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்பதற்கு பிரான்ஸ் பெண் நிதித்துறை அமைச்சர் கிறிஸ்டியானே லாகர்டே முயற்சி மேற்கொண்டுள்ளார்.
அவர் சர்வதேச நிதியத்தின் தலைவராக பொறுப்பேற்பதற்கு ஐரோப்பிய நாடுகள் பெரும் ஆதரவை தெரிவித்து வருகின்றன. இத்தாலி, ஜேர்மனி ஆகிய நாடுகளை தொடர்ந்து பிரிட்டனின் ஜார்ஜ் ஓஸ்போர்னும், பிரான்ஸ் நிதி அமைச்சர் கிறிஸ்டியானேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் இருந்த போது மிக திறம்பட செயல்பட்டு பிரான்ஸ் பொருளாதாரத்தை மீட்டவர் கிறிஸ்டியானே ஆவார். ஐ.எம்.எப் அமைப்பின் தலைமை பதவியை பெண் அமைச்சர் பெறுவதை ஐரோப்பிய நாடுகள் பெரிதும் வரவேற்றுள்ளன.
கிறிஸ்டியானே 55 வயது தலைவர் ஆவார். அவர் ஜி20 நிதித்துறை அமைச்சர் மாநாட்டிற்கு தலைமை வகித்த திறனை ஜார்ஜ் ஓஸ்போர்ன் வெகுவாக பாராட்டியுள்ளார். ஐ.எம்.எப் அமைப்பின் 60 ஆண்டு சரித்திரத்தில் முதன் முறையாக பெண் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதில் ஐரோப்பிய நாடுகள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளன.ஐ.எம்.எப்.பின் புதிய தலைவராக யார் வர வேண்டும் என்பது குறித்து அமெரிக்கா இன்னும் தனது ஆதரவை தெரிவிக்கவில்லை. அமெரிக்காவின் ஆதரவு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
வீட்டில் கண்டெடுக்கப்பட்ட நாற்பாதிரம் டொலர்: உரிமையாளரிடம் பணம் ஒப்படைப்பு.
அமெரிக்காவில் தாங்கள் விலைக்கு வாங்கிய வீட்டில் இருந்த 20 லட்ச ரூபாயை அந்த வீட்டின் பழைய உரிமையாளரிடம் திருப்பிக் கொடுத்துள்ளது ஒரு குடும்பம்.அமெரிக்காவின் உட்டா மாகாண தலைநகர் சால்ட் லேக் சிட்டியின் புறநகர் பகுதி தான் பவுன்டிபுல். இங்கு பெரின் என்பவர் சமீபத்தில் வீடு ஒன்றை விலைக்கு வாங்கினார்.
பெரின் சால்ட் லேக் சிட்டி நகரில் வெளியாகும் "டெசர்ட் நியூஸ்" பத்திரிகையில் ஓவியக் கலைஞராக பணியாற்றுகிறார். தங்கள் குடும்பத்துக்கென்று கடைசியில் ஒரு வீடு சொந்தமாகக் கிடைத்து விட்டது என்ற சந்தோஷத்தில் குடிபுகுவதற்கு முன் ஒருநாள் வீட்டைச் சுற்றிப் பார்க்கச் சென்றார். அப்போது மாடிக்கும் போனார்.
அங்கு சுவரின் ஒரு பகுதியில் துணி ஒன்று வெளியில் நீட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார். ஏணி ஒன்றில் ஏறி துணி இருந்த இடத்தை நெருங்கியவருக்கு அங்கு சுவற்றில் ஒரு சிறு கதவு தெரிந்தது.
ஆர்வத்தில் அந்த கதவைத் திறந்தவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். உள்ளே ஒரு இரும்புப் பெட்டி இருந்தது. அதை வெளியில் எடுத்தார். அடுத்தடுத்து ஆறு பெட்டிகள் இருந்தன. ஒரு பெட்டியைத் திறந்த போது அதில் கத்தை கத்தையாக பணம் இருந்தது.அதிர்ச்சியில் இருந்து மீண்ட பெரின் அவற்றை தன் காரின் பின்பகுதியில் வைத்துக் கொண்டு தன் பழைய வீட்டுக்குச் சென்றார். அங்கு அவர், அவர் மனைவி மற்றும் குழந்தைகள் என அனைவரும் சேர்ந்து அந்தப் பெட்டிகளில் இருந்த பணத்தை எண்ணினர்.
நாற்பதாயிரம் டொலர் அளவு தான் அவர்களால் எண்ண முடிந்தது. ஆனால் மேற்கொண்டு மேசையில் வேறு பணம் கொட்டிக் கிடந்தது. மொத்த பணத்தையும் வீட்டு சொந்தக்காரரிடம் ஒப்படைத்த பின் அவர் அளித்த பேட்டியில்,"இந்தப் பணம் நான் வாங்கிய வீட்டின் உரிமையாளர் சேர்த்தது. அவர் தன் வாழ்நாளில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்தது, எனக்கல்ல என்பதை நான் உணர்ந்தேன். என் குழந்தைகளுக்கு ஒரு நல்ல பாடம் சொல்லிக் கொடுக்கவும், நான் நேர்மையாக நடக்கவும், இதை விட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்று மட்டும் தெரிந்து கொண்டேன்" என்று கூறினார்.
குழந்தைகள் மருந்துப் பொருட்களுக்கு சீனாவில் தடை.
குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் நிம்சுலைட் வகை மருந்தை பயன்படுத்த சீனா தடை விதித்துள்ளது.12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதனை பயன்படுத்துவதால் சிறுநீரகம் பாதிப்பு மற்றும் கல்லீரல் போன்றவை பாதிக்கப்படுவதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
நிம்சுலைட் எனப்படும் வலி நிவாரண மருந்து இத்தாலியில் கடந்த 1985ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த மருந்தை பயன்படுத்தி வருகின்றன.சீனா சந்தைக்குள் கடந்த 1997ம் ஆண்டு இம் மருந்து நிறுவனம் நுழைந்தது. இம்மருந்தை குழந்தைகளுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் வாந்தி, வயிற்று வலி, இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைபாடு, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளதாக சீன நாட்டின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு தெரிவித்துள்ளது.
கனடாவில் பாரிய காட்டுத் தீ: 450 கட்டிடங்கள் எரிந்து நாசம்.
அல்பெர்டாவில் உள்ள ஸ்லேவ் லேக் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 450 கட்டிடங்கள் எரிந்து நாசமாயின. கடுமையான காற்று காரணமாக தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.நகரில் மூன்றில் ஒரு பகுதி கட்டிடங்கள் தீயில் சேதம் அடைந்தன. தீ கடுமையாக பரவியதை தொடர்ந்து வார இறுதியில் 7 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
தங்கள் சொந்த பொருட்களை எடுப்பதற்கும் அங்குள்ளவர்களுக்கு அனுமதி தரப்படவில்லை. தீ வேகம் மோசமாக இருந்ததால் உயிரிழப்பு ஏற்படும் என்பதால் யாரும் குறிப்பிட்ட பகுதிகளில் அனுமதிக்கப்படவில்லை. தீ விபத்து நடந்த வீடுகளில் சமையல் எரிவாயு கசிவு உள்ளதா என்றும், இதர அபாய பொருட்கள் உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தங்குமிடம் இல்லாத பட்சத்தில் உதவி அளிப்பதாக அல்பெர்டா அரச நிர்வாகம் தெரிவித்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவின நிதியையும் ஓகஸ்ட் மாதம் இறுதி வரை அளிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
இதன் படி பெரியவர்களுக்கு தலா 1250 டொலரும், சிறியவர்களுக்கு 500 டொலரும் அளிக்கப்படுகிறது. தீ பகுதியில் இருந்து வெளியேறிய மக்கள் தங்களது கடனட்டை மூலம் நிதி உதவியை பெறுகிறார்கள். சனிக்கிழமை மக்கள் பல்வேறு அவசர நிலை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.
எட்மாண்டன் கிராண்ட் மாக் எவான் பல்கலைகழகம் மாணவர் குடியிருப்பை தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கி உள்ளது. ஸ்லேவ் லேக் பகுதியில் பல வீடுகள் எரிந்து தரைமட்டமானதால் அவர்களது நிலைமை கேள்விக் குறியாக உள்ளது. காட்டுத் தீ குறித்து வெளியே உரிய எச்சரிக்கை இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.
மக்களின் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த கதை.
ஜப்பானில் சமீபத்திய சுனாமியில் பாதிக்கப்பட்டு தங்கள் உறவினர்கள், வீடு மற்றும் வசிப்பிடம் என அனைத்தையும் இழந்த குடும்பங்கள் ஒன்று கூடி நிற்க ஒருவர் மட்டும் அவர்களுக்கு கதை சொல்கிறார்.கதை சொல்பவர் உட்பட அனைவரும் சிரிப்பது போல் சிரிக்கின்றனர். சிரித்தாலும் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.
"ஒருகாலத்தில் குடிப்பதை மட்டுமே விரும்பிய சாமுராய் ஒருவன் இருந்தான்" எனப் பல நூறாண்டுகள் பழமை வாய்ந்த நகைச்சுவைக் கதை துவங்குகிறது. பொதுவாக இந்த கதை சொல்லப்படும் போது மக்களிடையே நகைச்சுவை துள்ளிடும். ஆனால் தற்போது வெகு சிலரே சிரிக்கின்றனர்.கடந்த மார்ச் 11ல் ஏற்பட்ட சுனாமி மற்றும் நிலநடுக்கம் இரண்டிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வசிக்கும் முகாமில் தான் இந்த நிலை. இசினோசெகி பகுதியில் உள்ள முன்னாள் துவக்கப்பள்ளி தான் தற்போதைய முகாம்.
வகுப்பறைகள் காய்கறிகள், அரிசி மற்றும் மாவுப்பொருட்களை சேமித்து வைக்கப்பயன்படுகின்றன. பெரிய பெரிய ஸ்டவ் அடுப்புகள் அமைக்கப்பட்டு உணவு சமைக்கப்படுகிறது. பொதுவான கழிவறைகள் மற்றும் சலவை இயந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.இரண்டு மாதங்களுக்குப் பின் இவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் தற்போது நிலையாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவர்களின் முகத்தில் பழைய மலர்ச்சியை கொண்டுவர சான்யெடி கொயாருகு(47) என்பவர் முயற்சித்து வருகிறார்.
பழமையான ஜப்பான் கதை சொல்லியான இவர் மற்றும் கூட்டங்களில் நடிப்புடன் கதை சொல்லும் வித்தை கற்றவர். டோக்கியோ மற்றும் தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்.இசினோசெகி பகுதியில் உள்ள முகாமில் உள்ள மக்கள் தங்கள் சோகத்தை மறப்பதற்காக கதை சொல்லி வருகிறார். வலிகளாலும், துக்கங்களாலும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மரபு கொண்ட ஜப்பான் மக்கள் இதுவரையிலும் அவற்றை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டதில்லை.
இதுகுறித்து கொயாருகு கூறியதாவது: வடகிழக்குப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் அனைத்திலும் கதை சொல்லி வருகிறேன். எனது இயற்பெயர் டகாயெகி கதோ. கொயாருகு என்பது மேடைப் பெயர். ஒரே நேரத்தில் பல்வேறு கதாபாத்திரங்களையும் நடித்துக் காட்ட வேண்டியுள்ளதால் உடனுக்குடன் முக உணர்ச்சிகளையும், பாவனைகளையும் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் மக்களுக்கு போரடித்து விடும். கதாபாத்திரங்களுக்கு ஏற்ப குரலையும் மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். மனிதன் எதை வேண்டுமானாலும் இழக்கலாம். நகைச்சுவை உணர்வை இழந்துவிடக் கூடாது. அதுதான் விலங்குகளிடம் இருந்து நம்மை வேறுபடுத்தக் கூடியது.முகாம் பெரியவர் ஒருவர் கூறுகையில்,"இது உண்மையில் நல்ல முயற்சி. தனிநபர் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கான மனநிலையை அவர் தனது கதைகளின் வழியே நடித்துக் காட்டுகிறார். உங்கள் நடவடிக்கைகளில் நீங்களே சிரிக்க ஆரம்பித்தால் தான் மக்களை சிரிக்க வைக்க முடியும்" என்றார்.
ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலுக்கான நாடுகள் தெரிவு.
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு உலக நாடுகளில் இருந்து 14 நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.கடந்த 2006ல் உருவாக்கப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் 47 உறுப்பு நாடுகளைக் கொண்டது. இதில் 13 ஆப்ரிக்காவுக்கும், 13 ஆசியாவுக்கும், ஆறு கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும், எட்டு லத்தீன் அமெரிக்காவுக்கும், ஏழு மேற்கு ஐரோப்பா மற்றும் ஏனைய நாடுகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆசியாவுக்கான நான்கு இடங்கள் உள்ளிட்ட 14 இடங்களுக்கான நாடுகள் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆசியா பிரிவில் இந்தியா 181 ஓட்டுகளும், இந்தோனேசியா 184 ஓட்டுகளும், பிலிப்பைன்ஸ் 183 ஓட்டுகளும், குவைத் 166 ஓட்டுகளையும் பெற்றன.இவைத் தவிர புர்கினோ பாசோ, போட்ஸ்வானா, பெனின், செக் குடியரசு, ருமேனியா, சிலி, கோஸ்டா ரிக்கா, பெரு, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்நாடுகள் அனைத்தும் இக்கவுன்சிலில் ஜூன் 19ம் திகதி முதல் தங்கள் பணிகளைத் துவக்கும். கடந்த இருமாதங்களாக நடக்கும் மக்கள் எழுச்சி காரணமாக சிரியா அரசின் வன்முறை ஏவல் உலக நாடுகளின் கண்டனத்துக்கு ஆளானது. அதனால் இக்கவுன்சிலில் இருந்த சிரியாவுக்குரிய இடம் குவைத்துக்கு தரப்பட்டது.

கால,நேரம் தேவையில்லை! அமேசன் ஆதிவாசிகளின் வியத்தகு வாழ்க்கை முறை.

விஞ்ஞான விந்தைகள் நிறைந்து காணப்படும் இன்றைய உலகில் நேரம் காலம் எதுவும் தெரியாமல், வருடம் மாதம் என்ற வார்த்தைகளே தெரியாமல், தங்களின் வயதை கூட எவரும் அறியாமல் ஒரு சமூகம் வாழ்ந்து வருகின்றது.

அமேஸன் பழங்குடிக் கோத்திரம் ஒன்று தான் இன்று இப்படி வாழ்ந்து வருகின்றது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இவர்கள் பிறேஸிலின் அமொன்டவா கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் நேரம், வாரம், மாதம் அல்லது வருடம் என்ற வார்த்தைகளே பாவனையில் இல்லை.

உலகளாவிய ரீதியில் மனித குலத்துக்கு நேரம் என்பது மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகின்றது. ஆனால் அது தேவையே அற்றது என்பது நாகரிக உலகில் முதற்தடவையாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றார் போஸ்ட்மவுத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கிறிஸ் சின்ஹா. நாங்கள் நேரத்தை மிகவும் முக்கியமானதாக எடுத்துக் கொள்கிறோம். எமது வாழ்வு முறையில் அது மிகவும் ஆழமாக ஊடுருவியுள்ள ஒரு விடயமாகிவிட்டது. 

ஆனால் அவர்களுக்கு நேரம் என்ற ஒன்றே கிடையாது என்று இந்த அமொன்டவா கோத்திரத்தைக் கண்டுபிடித்துள்ள கிறிஸ் சின்ஹா குறிப்பிட்டுள்ளார். இவரும் இவரின் ஆய்வுக் குழுவைச் சேர்ந்த இன்னும் இரண்டு ஆய்வாளர்களும் இந்தக் கோத்திர மக்களோடு எட்டு வாரங்களைக் கழித்துள்ளனர். அடுத்தவாரம், கடந்த வருடம் போன்ற வார்த்தைகள் இவர்களின் எண்ணக்கருவில் கிடையாது. 
இவர்களின் பரிபாஷையில் கூட அந்த அர்த்தத்தில் வார்த்தைகள் இல்லை. இவர்களுக்கு பகல் தெரியும், இரவு தெரியும், கோடை காலம், மழை காலம் என்பன தெரியும். 
இந்த சமூகத்தில் யாருக்கும் வயது என்ற ஒன்று கூட இல்லை. மாறாக வாழ்வில் அவர்கள் அடையும் கட்டங்களுக்கு ஏற்பவும், சமூகத்தில் அவர்களுக்குள்ள நிலைமைக்கு ஏற்பவும் பெயர்கள் மாறிக் கொண்டே செல்கின்றன. உதாரணமாக ஒரு சிறு பிள்ளை, அந்தக் குடும்பத்தில் புதிதாக ஒரு குழந்தை பிறந்து விட்டால், தனது பெயரை புதிதாகப் பிறந்த குழந்தைக்குக் கொடுத்துவிட்டு வேறு ஒரு பெயரை வைத்துக் கொள்கின்றது. இப்படியே பெயர்கள் மாறிமாறிச் செல்கின்றன. 

பிறேஸிலின் எல்லைப் பகுதியில் பொலிவியாக் குடியரசுக்கு அருகில் அமைந்துள்ள ரொன்டோனியா என்ற இடத்திலேயே இந்த அமொன்டவா கோத்திரம் வசிக்கின்றது.1986ல் இவர்களின் இருப்புப் பற்றி உலகுக்கு முதற் தடவையாகத் தெரிய வந்தது. ஆனால் அவர்கள் அதன் பிறகும் தங்களது பழைய வாழ்வு முறையில் இருந்து விடுபடாமல் அப்படியே வாழ்ந்து வருகின்றனர். 

இவர்கள் நம்மைப் போல் காலத்தோடும் நேரத்தொடும் எதற்காகவும் போராடுவதில்லை. அந்த வகையில் அவர்கள் பூரண சிதந்திரத்துடன் வாழுகின்றனர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வேட்டையாடுதல், மீன் பிடித்தல், பயிர்ச்செய்கையில் ஈடுபடல் இவைதான் இவர்களின் வாழ்வின் பிரதான அம்சங்கள். இப்போது முதற் தடவையாக அவர்களின் வாழ்வில் ஒரு முன்னேற்றம் தென்பட ஆரம்பித்துள்ளது. போர்த்துக்கேய மொழியை அவர்கள் கற்க ஆரம்பித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF