Saturday, May 28, 2011

இன்றைய செய்திகள்.

உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி.

சர்வதேச அளவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், "உங்களைக் ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம்," இலங்கைப் படையினரிடம் அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே நேற்று உறுதியளித்தார்.விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி, காலிமுகத் திடலில் தமது நாட்டின் படையினர் முன்பு இலங்கை அதிபர் ராஜபக்ஷே நேற்று தனது உரையில் கூறியது:
"பழைய காயங்களைப் பெரிதாக்கி, மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சித்து வருகின்றன. அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. அரசுடன் இணைந்து நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அரசியல் கட்சிகள் முன்வர வேண்டுமே தவிர, அரசுக்கு எதிரான சதி நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாடு தற்போது ஒன்றுபடுத்தப்பட்டு, அனைத்து இன மக்களும் சமமாக வாழ வழிவகுத்ததற்காக இந்த யுத்த வெற்றி விழா கொண்டாடப்படுகிறது. போரில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு, இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அரசியல் அமைப்புக்குள் மனித உரிமைகளை உள்ளடக்கி, சர்வதேசத்திடம் சமர்பிப்பதன் மூலம் நாட்டின் மனித உரிமையை பாதுகாக்க முடியாது. மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதன் மூலமே மனித உரிமைகளை பாதுகாக்க முடியும்.வெளிநாடுகளில் வாழும் பழைய பயங்கரவாதிகள் மீண்டும் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுச் செல்லும் அவர்கள், அந்நாடுகளிலுள்ள ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது அனைவரும் அறிந்த உண்மையே.அதேநேரத்தில், உண்மையின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதன் மூலமே ஒரு நாட்டில் குழப்பம் ஏற்படுத்தப்படுகிறது. அந்த நிலைமையே எமது நாட்டிலும் தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதனாலேயே போரை முடிவுக்கு கொண்டுவந்த எமது போர் வீரர்களுக்கு எதிராக தற்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஒரு கையில் துப்பாக்கியும் மறு கையில் மனிதாபிமானத்தையும் வைத்துக்கொண்டே எமது படையினர் யுத்த களத்தில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாதி, மதம் என்பவற்றைப் பார்க்கவில்லை.ஆனால், எமது படையினருக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது மிகவும் தவறு.படையினரே... யுத்த காலத்தில் நாம் உங்களுடன் இருந்தோம். எமது இதயங்களில் நீங்கள் குடிகொண்டிருக்கின்றீர்கள். இந்நிலையில், உங்களை நாம் ஒருபோதும் காட்டிக் கொடுக்கப்போவதில்லை.
எமது உள்நாட்டு பிரச்னைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் எமது மக்கள் எமக்கு உதவுவர். அதில், வெளிநாட்டினர் தலையீட்டுக்கு ஒருபோதும் இடமில்லை.சர்வதேச நாடுகளைப் போன்று நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை மீறும் சம்பவங்கள் இங்கு இல்லை. வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பிரதேச மக்களும் யுத்திமின்றி, நாட்டில் சுதந்திரக் காற்றை சுவாசித்து, இயல்பு வாழ்க்கையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்," என்றார் ராஜபக்ஷே.
ராஜீவ் காந்தியின் படுகொலை குறித்த குமரன் பத்மநாதனின் கருத்துக்களுக்குத் தற்போதைக்குப் பதிலளிக்கப் போவதில்லை: இந்தியா
ராஜீவ் காந்தியின் படுகொலைச் சம்பவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருப்பதாக ஏற்றுக் கொண்டு குமரன் பத்மநாதன் அண்மையில் அளித்திருந்த பேட்டி குறித்து தற்போதைக்கு கருத்துக்கள் எதனையும் வெளியிடுவதில்லை என்று இந்தியா அறிவித்துள்ளது.ஆயினும் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைச் சம்பவம் குறித்து இந்திய ஊடகங்களுக்கு விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் மௌனம் சாதிப்பது அவதானிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் நேரடித் தொடர்பிருந்ததாக குமரன் பத்மநாதன் அண்மையில் இந்திய ஊடகமொன்றுக்கு  கருத்து வெளியிட்டிருந்ததன் மூலம் ராஜீவ் காந்தியின்  படுகொலைச் சம்பவத்தில் விடுதலைப் புலிகளின் பங்களிப்பு முதன் முறையாக அதன் முக்கிய உறுப்பினர் ஒருவரால் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.  
அவ்வாறான பின்புலத்தில் குமரன் பத்மநாதனின் கருத்துக்கள் தொடர்பில் இந்திய அதிகாரிகள் தற்போதைக்கு எவ்வித பதிலையும் அளிக்கப் போவதில்லை இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.  அதுமட்டுமன்றி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நாடு கடத்துமாறு இந்தியா கடைசிவரை கோரி வந்திருந்தபோதிலும், அந்த அமைப்பின் முக்கியஸ்தராக இருந்து  மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டது முதல் குமரன் பத்மநாதனை இந்தியாவில் வைத்து விசாரணைக்குட்படுத்தும் நோக்கில் நாடு கடத்துமாறு இதுவரை கோரிக்கை எதனையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட பௌத்த பிக்கு கைது.
போதைப் பொருள் கட்டத்தலில் ஈடுபட்ட பௌத்த பிக்கு ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.காவி உடையில் இந்த போதைப் பொருள் பக்கட்டுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் குறித்த பௌத்த பிக்கு கைது செய்யப்பட்டதாகவும், மஹரகம காவல்துறையினர் நடத்திய தேடுதலின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த பௌத்த பிக்கு கொழும்பிற்கு அருகாமையில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேச போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரிடம் தாம் இந்தப் போதைப் பொருள் பக்கட்டுகளை கொள்வனவு செய்ததாக குறித்த பௌத்த பிக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பள விபரங்களை வெளியிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர்!

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் 2010 ஆம் ஆண்டுக்கான கொடுப்பனவு விவரங்களை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். 

2010 ஆம் ஆண்டில் 126 விளையாட்டு வீரர்களுடன் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இதில் மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, முத்தையா முரளிதரன், திலான் சமரவீர, டி.எம்.தில்ஷான், லசித் மாலிங்க ஆகியோருக்கு வருடாந்தக் கொடுப்பனவு 1,20,750 அமெரிக்க டொலர்களாகும். 

நுவான் குலசேகர, சமிந்த வாஸ் ஆகியோருக்கு தலா 71,500 டொலர்கள், ஏன்ஜலோ மத்தியூஸுக்கு 66,150 டொலர்கள், பிரசன்ன ஜயவர்தன, அஜந்த மென்டிஸ்,சாமர கபுகெதர, திலான் துஷார, திலின கண்டம்பி, உபுல் தரங்க, ரங்கன ஹேரத் ஆகியோருக்கு தலா 49,163 டொலர்கள். 

பர்வேஸ் மஹ்ரூப் மற்றும் மலிக்ன வர்ணபுர ஆகியோருக்கு தலா 47250 டொலர்கள், மற்றும் சனத் ஜயசூரியவுக்கு 44000 டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக தில்ஹார பெர்ணாண்டோ, சானக வலகெதர, தரங்க ரோஹணவிதான ஆகியோருக்கு தலா 33075 டொலர்கள், ஜெஹான் முபாரக்கிற்கு 31500 டொலர்கள், அசேல உடவத்த, மலிங்க பண்டார, சாமர சில்வா, தம்மிக பிரசாத், கவுஷால் சில்வா, புஷ்பகுமார ஆகியோருக்கு தலா 21000 டொலர்களும், 

மைக்கல் வெண்டர்ட், ஜிஹான் ரூபசிங்க, ஆகியோருக்கு முறையே 13125 மற்றும் 15750 டொலர்களும், சஞ்சீவ வீரக்கோன், இசுறு உதான, சமிந்த விதான பத்திரன, திணேஷ் தர்ஷனபிரிய, மிலிந்த சிறிவர்தன ஆகியோருக்கு தலா 10, 500 டொலர்களும் வழங்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் அண்மையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் வகையிலேயே அமைச்சர் இந்த விவரங்களைத் தாக்கல் செய்தார்.


லாகூரைத் தகர்க்க தீவிரவாதிகள் தீட்டிய திட்டம் அம்பலம்.
பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த ஞாயிற்றுக்கிழமை கராச்சியில் மெக்ரானில் உள்ள கப்பற்படை விமான தளத்தில் புகுந்து தலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். அதில் 10 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
அதி நவீன போர் விமானங்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டன. ஒரு நீர்மூழ்கி போர்க்கப்பலும் சேதம் அடைந்தது. இது தொடர்பாக தீவிரவாதிகள் சிலரை பாகிஸ்தான் பொலிசார் கைது செய்துள்ளனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில் கராச்சி கப்பற்படை விமான தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் போன்று பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூரில் அதிரடி தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலை இன்னும் சில நாட்களில் நடத்த தீவிரவாதிகள் முடிவு செய்துள்ளனர். எனவே இதுகுறித்து ஆய்வு செய்ய உயர் பொலிஸ் அதிகாரிகளின் கூட்டம் இன்று நடந்தது. அப்போது லாகூரில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி லாகூர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரோடுகள் மற்றும் தெருக்களில் பொலிசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடாபிக்கு உதவி புரிய முன்வந்துள்ள ரஷ்யா.
லிபிய அதிபர் கடாபிக்கு உதவி செய்ய ரஷ்யா முன் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.லிபியாவில் பதவி விலகி வெளிநாட்டில் அடைக்கலம் புகுவதற்கு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ரஷ்ய வெளியுறவு துறை துணை அமைச்சர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கடாபிக்கு எதிராக நாடே ஒன்று திரண்டுள்ள நிலையில் அவர் பதவி விலக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்.இந்தச் சூழ்நிலையில் கடாபி பதவி விலக அவருக்கு உதவுவது அவசியம் என ரஷ்ய அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலை பாகிஸ்தானிடம் அளித்த அமெரிக்கா.
உலகில் சதித்திட்டம் தீட்டி செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் 5 பேர் கொண்ட பெயர் பட்டியலை அமெரிக்கா பாகிஸ்தானிடம் கொடுத்தது.இந்த நபர்களின் முழுவிவரமும், இவர்களை கைது செய்ய பாகிஸ்தான் அரசு முழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒசாமா பாகிஸ்தானில் பதுங்கியிருந்த போது அமெரிக்க படையினரால் வேட்டையாடப்பட்டார். இதில் இருந்து அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் மீது சந்தேகம் வலுத்தது.காரணம் உள்ளூர் ஆதரவு இல்லாமல் ஒசாமா எப்படி இங்கு வாழ்க்கை நடத்தியிருக்க முடியும் என்று அமெரிக்கா கேட்கிறது. இந்நிலையில் அமெரிக்கா வெளியுறவு துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தான் சென்றார். அங்குள்ள பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் சந்தித்து பேசினார்.
அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் 5 பேர் கொண்ட பட்டியலை கொடுத்தார். இதில் அடங்கியிருப்பதில் முக்கியஸ்தர்கள் விவரம் வருமாறு: அல்கொய்தாவின் முக்கியப்புள்ளியும், ஒசாமாவின் வலதுகரமாக இருந்தவருமான அயுமான் அல்ஜவாரி, தலிபான் இயக்க தலைவர் முல்லா ஒமர், சிராஜ் ஹக்கானி(ஹக்கானி அமைப்பின் ஓபரேஷனல் கமாண்டர்), இலியாஸ் காஷ்மீரி(மும்பை தாக்குதலில் உள்ள ஒரு சதிகாரர்), ஆதித்யா அப்தல் ரஹ்மான்(லிபியா நாட்டில் அல்கொய்தாவை செயல்படுத்துபவர்).
இந்த பயங்கரவாதிகள் குறித்த முழுவிவரம் உடனடியாக தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் விவரமோ, கைது செய்யவோ மறுக்கும் பட்சத்தில் அமெரிக்கா ஒசாமா பின்லேடனை வேட்டையாடியது போல் மீண்டும் பல முறை இறங்கிட முயற்சிக்கும் என பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டான் பத்திரிகை கூறியுள்ளது.
தாக்குதலுக்கு பயந்து கடாபி மருத்துவமனையில் பதுங்கல்.
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக நடத்தி வரும் மக்கள் போராட்டத்தை ஒடுக்க அங்கு ராணுவம் பயன்படுத்தப்படுகிறது.இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் படைக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவம் களமிறங்கியுள்ளது.
கடாபியின் ராணுவ நிலைகள் மீது குண்டு வீசி நேட்டோ படைகள் தாக்கி வருகிறது. இதுவரை 2600 குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இவை தவிர அதிபர் கடாபியின் மாளிகை மீது சக்தி வாய்ந்த 28 குண்டுகள் போடப்பட்டுள்ளன. அதில் அவரது இளைய மகனும், 3 பேரக் குழந்தைகளும் பலியாகினர்.
மேலும் அவரது மாளிகையும், அலுவலகமும் இடிந்து சேதம் அடைந்துள்ளன. இருந்தும் கடாபி பணிய மறுக்கிறார். பதவி விலக முடியாது என கூறி வருகிறார். எனவே அவரை நேட்டோ படைகள் குறிவைத்துள்ளன. இதனால் மரண பயத்தில் உள்ள அவர் தான் உயிர் பிழைக்க புதிய யுக்தியை கையாண்டு வருகிறார்.
இரவு நேரங்களில் தனது மாளிகையில் தங்காமல் தினமும் ஒரு மருத்துவமனையில் பதுங்குகிறார். ஏனெனில் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் மருத்துவமனையில் குண்டு வீசக்கூடாது என சர்வதேச போர் விதி உள்ளது.இதனால் அங்கு நேட்டோ படைகள் குண்டு வீசாது என அவர் நம்புகிறார். இந்த தகவலை இங்கிலாந்தின் உளவுப்பிரிவான எம்.16 நிறுவனம் பிரதமர் டேவிட் கமரூனிடம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி லண்டனில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையில் வெளியிட்டுள்ளது.
ஜேர்மனியில் 7 பழைய அணு உலைகள் நிரந்தரமாக மூடப்படுகின்றன.
ஜேர்மனியின் மிக பழையான 7 அணு உலைகள் நிரந்தரமாக மூடப்படுகின்றன. சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் மேற்கொண்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஜப்பானின் புகுஷிமா நிர்வாகப் பகுதியில் இந்த ஆண்டு மார்ச் மாதம் 11ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நாட்டின் முதன்மை அணு மின் நிலையம் வெகுவாக பாதிக்கப்பட்டது.அதில் உள்ள அணு உலைகளில் இருந்தும் கதிர்வீச்சு பரவியது. இதனால் பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டனர். புகுஷிமா நிகழ்வை தொடர்ந்து ஜேர்மனியில் நீண்ட காலம் செயல்பாட்டில் உள்ள பழமையான அணு உலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
வெள்ளிக்கிழமை பெடரல் அமைச்சர் மாநில அமைச்சர்களுடன் மேற்கொண்ட முடிவைத் தொடர்ந்து அவை நிரந்தரமாக மூடப்படுகின்றன. ஜேர்மனியின் அணு உலை திட்டம் குறித்து வருகிற ஜூன் மாதம் அதிபர் ஏங்கலா மார்கெல் முடிவு எடுக்கிறார். இந்த நிலையில் பழைய 7 அணு உலைகள் நிரந்தரமாக மூடப்படும் ஒப்பந்தம் வந்துள்ளது.ஜேர்மனியில் 17 அணுமின் நிலைய உலைகள் உள்ளன. 2022ஆம் ஆண்டு அணு மின்சாரம் முற்றிலுமாக நிறுத்தப்படும் என ஏங்கலா மார்கெல் தெரிவித்தார். 2017ம் ஆண்டிற்குள் அனைத்து அணு மின் நிலையங்களும் மூடப்பட்டால் மின்சார விலை 0.6 – 0.8 சதவீதம் அதிகரிக்கும்.இதனால் ஜேர்மனி பொருளாதார வளர்ச்சி பாதிக்காது என பிராங்க் பர்டர் ரண்டஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
விவாகரத்து கோரிய மனைவிக்கு ரூ.900 கோடி நஷ்டஈடு வழங்கிய அர்னால்டு.
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்நேசர்(65). இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாண கவர்னராகவும் பணியாற்றினர். இவரது மனைவி மரியாஷ்ரிவர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் அர்னால்டு தனது வீட்டில் பணிபுரிந்த ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பின் மூலம் குழந்தை பெற்றார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இச்சம்பவம் அவரது மனைவி மரியாஷ்ரிவருக்கு சமீபத்தில் தெரிய வந்துது.
அதை தொடர்ந்து அர்னால்டை பிரிய அவர் முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து அவர் தனது கணவர் அர்னால்டு மீது நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நடந்த பேச்சு வார்த்தையின்படி தனது மனைவி மரியா ஷ்ரிவருக்கு ரூ.900 கோடி நஷ்டஈடு அர்னால்டு வழங்கினார்.கலிபோர்னியாவில் ரூ.1800 கோடிக்கு அர்னால்டின் சொத்துகள் உள்ளன. அவற்றில் பாதி அளவான ரூ.900 கோடி சொத்துக்களையும் மரியாஷ்ரிவருக்கு வழங்கவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். எனவே அவர்களின் 25 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இருவரும் அடுத்த மாதம் முதல் பிரிந்து வாழ்கின்றனர்.
கடந்த 2007ம் ஆண்டில் கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டன் விவாகரத்து செய்த தனது மனைவி ஜுவானிட்டுக்கு ரூ.6 கோடியே 50 லட்சம் நஷ்டஈடு வழங்கியது தான். அதிகபட்ச தொகையாக இருந்தது. தற்போது அர்னால்டு தனது மனைவிக்கு ரூ.900 கோடி நஷ்டஈடு வழங்கி மைக்கேல் ஜோர்டனை மிஞ்சி விட்டார்.
பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி அளிக்க பிரான்ஸ் மறுப்பு.
மும்பை தாக்குதலில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பிரான்ஸ் ஆயுத உதவி அளிக்க மறுத்து விட்டது.இதுகுறித்து பிரான்ஸ் பாதுகாப்பு துறை மந்திரி ஜெரால்டு லாங்கட் கூறியதாவது: ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதற்கு பாகிஸ்தான் அரசு விளக்கம் அளிக்க வேண்டும். பாகிஸ்தான் அரசு போதுமான விளக்கம் அளிக்கும் வரையில் ராணுவ தளவாடங்கள் விற்பனை செய்வது நிறுத்தி வைக்கப்படும்.இந்த பிரச்சினை குறித்து சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பாகிஸ்தான் பிரதமர் கிலானியுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்பட்டது.
மும்பை தாக்குதலில் ஐ.எஸ்.ஐ அமைப்புக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தீவிரவாதம் என்ற ஆயுதத்தை எந்த அமைப்போ, அரசோ கையில் எடுத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது.தீவிரவாதத்தை எதிர்த்து போராட பாகிஸ்தானுக்கு பிரான்ஸ் மின்னணு எந்திரங்களை மட்டுமே வழங்கி வருகிறது. பாகிஸ்தானின் ராணுவ தளவாடங்கள் உதவி பெறுவதற்கான வேண்டுகோளை நாங்கள் நிராகரித்து விட்டோம்.
கடலில் மூழ்கிய ஏர்பிரான்ஸ் விமானத்தின் கடைசி நிமிட விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை.
அட்லாண்டிக் கடலில் மூழ்கிய ஏர்பிரான்ஸ் விமானத்தின் கடைசி 3 நிமிட விவரங்கள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2009ஆம் ஆண்டு பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் இருந்து பாரிஸ் தலைநகர் பாரிசுக்கு ஏர்பிரான்ஸ் விமானம் வந்தது. 228 நபர்களுடன் வந்த இந்த விமானம் மோசமான வானிலை காரணமாக கட்டுப்பாட்டை இழந்து அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைத்து நபர்களும் உயிரிழந்தார்கள். இந்த விபத்தில் இறந்தவர்களை மீட்பதற்காக 4 முறை தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த தேடுதலில் விமானம் கடலில் மூழ்கிய கடைசி 3 நிமிட வேக விவரங்கள் மாயமாகி உள்ளன.பிரான்ஸ் வெளியிட்ட வெள்ளிக்கிழமை அறிக்கையில் புதிதாக ஒன்றும் இல்லை என பாதிக்கப்பட்ட பிரேசில் குடும்பத்தினர் தெரிவித்தனர். ஏர்பிரான்ஸ் விமானம் 38 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது நிலை குலைந்து கடலில் மூழ்கியுள்ளது.
அந்த விமானம் மூன்றறை நிமிடம் கீழே சரிந்து கடலில் விழுந்தது. விமானம் விழுந்த போது விமான கப்டன் இல்லை. அவர் ஓய்வு எடுக்க சென்றார். எனவே 2 இணை விமான ஓட்டிகள் மட்டுமே விமானத்தை இயக்கிய போது விபத்து ஏற்பட்டுள்ளது.அந்த இணை விமான ஓட்டிகள் விமானத்தை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலையில் மோசமான விபத்து ஏற்பட்டது.
தலிபான்கள் குறித்து இன்டர்போல் எச்சரிக்கை.
தலிபான் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் குறித்து இன்டர்போல் பொலிசார் சர்வதேச எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த ஏப்ரல் 24ம் திகதியன்று ஆப்கன் சிறையில் இருந்து 417 தலிபான் பயங்கரவாதிகள் தப்பிச் சென்றனர்.
தப்பிச் சென்ற பயங்கரவாதிகள் வெளிநாடுகளுக்கு தப்பலாம் என்றும், நாச வேலையில் ஈடுபடலாம் என்றும் இன்டர்போல் ஆரஞ்சு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இன்டர்போலின் 188 உறுப்பு நாடுகளுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தப்பிய பயங்கரவாதிகள் பற்றி இந்த நாடுகள் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் என தெரிகிறது.
பின்லேடன் கொல்லப்பட்ட இடத்தை ஆராய அமெரிக்கா முடிவு.
ஒசாமா கொல்லப்பட்ட இடத்தில் வேறு ஏதாவது முக்கிய தடயங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிவதற்காக அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் விரைவில் பாகிஸ்தான் செல்லவுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது: பாகிஸ்தானின் அபோதாபாத் என்ற இடத்தில் ரகசியமாக தங்கியிருந்த அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் சமீபத்தில் அமெரிக்க கமாண்டோ படையினரால் கொல்லப்பட்டார்.
தாக்குதல் நடத்திய கமாண்டோ படையினர் அந்த வீட்டிலிருந்த சில சீ.டி.க்கள், கணணி ஆகியவற்றை மட்டுமே தங்களுடன் எடுத்துச் சென்றனர். கமாண்டோ படையினர் 40 நிமிடங்கள் மட்டுமே அங்கிருந்ததால் முழுமையாக சோதனை நடத்த முடியவில்லை.
ஒசாமா கொல்லப்பட்ட இடத்தில் மேலும் சில முக்கிய தடயங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அமெரிக்க உளவுத் துறைக்கு எழுந்துள்ளது. சுவர்களுக்குள் ரகசிய கண்காணிப்பு கமெரா மற்றும் முக்கிய ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
எனவே அந்த இடத்தில் மேலும் தீவிரமாக சோதனை நடத்த அமெரிக்க உளவுப் படை திட்டமிட்டுள்ளது. இதற்காக அமெரிக்க உளவுப் படையில் உள்ள தடயவியல் நிபுணர்கள் இன்னும் சில நாட்களில் அபோதாபாத் செல்லவுள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF