நாட்டில் வலுவான எதிர்க்கட்சி இல்லாதது வருத்தம் என்கிறார் ஜனாதிபதி.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
நாட்டில் வலுவான ஓர் எதிர்க்கட்சி இல்லாமை வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த வலுவான ஓர் எதிர்க்கட்சி அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் சஞ்சீவ கவிரட்னவை சந்தித்த போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
17 ஆண்டுகளாக எதிர்க்கட்சியில் இருந்த அனுபவத்துடன் தற்போது தாம் நாட்டை ஆட்சி செய்து வருவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி வலுவான ஓர் எதிர்க்கட்சியொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் நேட்டோ வாகனங்களின் மீது அதிரடி தாக்குதல்.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோப்படை வாகனங்களுக்கு பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் லொறிகள் கொண்டு செல்லப்படுகின்றன.அதுபோன்று பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லொறிகள் பாகிஸ்தான் எல்லையில் உள்ள லாண்டி கோடல் நகரம் அருகேயுள்ள தோரிகம் என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் அந்த லாரிகள் மீது இன்று வெடிகுண்டுகளை வீசி தாக்கினர். இதனால் லொறிகள் வெடித்து சிதறி தீப்பிடித்தன. இதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகை மூட்டமாக காணப்பட்டது.
தீவிரவாதிகள் நடத்திய இத்தாக்குதலில் 10 டேங்கர் லொறிகள் எரிந்து நாசமாயின. மேலும் 16 பேர் உயிர் இழந்தனர். அவர்கள் 8 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதில் 10 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவின் உதவியை ஏற்றுக்கொள்ளாத பாகிஸ்தான்.
தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைப்பு அளித்து வந்ததற்காக பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா அதிகளவில் நிதியுதவி செய்து வந்தது.பாகிஸ்தானில் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டு மக்களுக்கு கோபத்தை அதிகரித்துள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் கழிவு பொருள் மேலாண்மை ஆகியவற்றில் உதவுவதற்காக அமெரிக்காவுடன் செய்யப்பட்டிருந்த 6 புரிந்துணைர்வு ஒப்பந்தத்தை பஞ்சாப் மாநில அரசு நேற்று ரத்து செய்தது.இது அபோதாபாத் சம்பவத்துக்கு காட்டப்படும் எதிர்ப்பு என பஞ்சாப் மாநில சட்ட அமைச்சர் ராணா சனுல்லா கூறியுள்ளார்.
உலக பொருளாதாரத்தை சீர்குலைக்கும் ஒசாமாவின் திட்டம் அம்பலம்.
உலகை அச்சுறுத்தி வந்த அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த 2ந் திகதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.அப்போது அவர் தங்கியிருந்த வீட்டில் அமெரிக்கா உளவுத்துறை நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கின. அதில் பின்லேடன் தீட்டி இருந்த சதி திட்டம் பற்றிய பல அதிர்ச்சிகள் இருந்தன.
அதில் இந்திய பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் அட்லாண்டிக்கடல் பகுதியில் செல்லும் எண்ணை கப்பல்களை கடத்தி அவற்றை தகர்க்க அல்கொய்தா திட்டமிட்டிருந்தது. அதற்கான மிகப்பெரிய சதி திட்டத்தை பின்லேடன் தயாரித்து இருந்தார்.
இதை கடந்த ஆண்டு கோடை காலத்தில் செயல்படுத்த திட்டமிட்டிருந்தார். இதன் மூலம் உலகம் முழுவதும் கச்சா எண்ணை விலை தாறுமாறாக உயரும். இதனால் உலக பொருளாதாரம் சீரழிந்து பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என பின்லேடன் கருதினார்.
ஆனால் கப்பல்களை தகர்க்கும் கடல் பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்வதால் பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என கருதி அதற்கு மறுத்து விட்டார். அல்கொய்தா தீவிரவாதிகள் மறுத்து விட்டனர். அதனால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. இவ்வாறு அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளதாக அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் மர்ம கும்பல் ஒன்று மக்கள் மீது தாக்குதல்: 30 பேர் பலி.
சிரியாவில் அதிபர் பாஷார் அல் ஆசாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே போராட்டக்காரர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.அதில் இதுவரை 850 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா அதிபர் பாஷார் அல் ஆசாத் பதவி விலகி ஜனநாயகத்தை மலர செய்ய வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இதை தவிர வேறு வழியில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமையான நேற்று தொழுகை முடிந்தபின் பொதுமக்கள் சிரியாவில் உள்ள பல நகரங்களில் அமைதியான முறையில் பேரணியும், போராட்டங்களும் நடத்தினர்.
அப்போது துப்பாக்கிகளை ஏந்திய மர்ம கும்பல் ஹோம்ஸ், பால்மைரா, டமாஸ்கஸ், டாரா உள்ளிட்ட பல நகரங்களில் புகுந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.அதில் சுமார் 30 பேர் பலியாகினர். அவர்களில் பொலிசாரும் அடங்குவர். இதற்கிடையே மர்ம கும்பல் என்ற போர்வையில் சிரியா ராணுவம் தான் தாக்குதல் நடத்தியது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சிறைத் தண்டனை.
பிரிட்டனின் தொழில்கட்சியைச் சேர்நத முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எலியட் மோலிக்கு 16 மாத கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.2004-2007க்கு இடைப்பட்ட காலப் பகுதியில் நாடாளுமன்ற நிதியில் 30 ஆயிரம் பவுண்களை மோசடி புரிந்த குற்றத்துக்காகவே இவருக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான குற்றத்துக்காக பிரிட்டனில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முதலாவது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். லண்டன் சவுத்வோர்க் நீதிமன்றம் இவருக்கு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.தொழில்கட்சி ஆட்சியில் தொழில் அமைச்சராக இருந்த இவர் தன்மீதான மோசடிக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளார். இவர் தொழில் கட்சியிலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்டவர் என்று அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
அமெரிக்க கிறீன் கார்ட் முறையில் குழப்பம்: முடிவுகள் மீண்டும் பரிசீலனை.
அமெரிக்காவில் குடிபெயரும் எதிர்ப்பார்ப்புடன் 2012ம் ஆண்டுக்கான குலுக்கல் முறையிலான கிறீன் கார்ட் விசாவிற்காக விண்ணப்பித்திருந்தோரில் பலர் விண்ணப்பதாரிகள் தெரிவில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பில் விசனம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் சட்ட ரீதியாக குடிபெயர்வதற்காக கிறீன் கார்ட் விசா வருடந்தோறும் குலுக்கல் முறையில் சுமார் 50,000 முதல் 55,000 பேருக்கு வழங்கப்பட்டு வருகின்றனது. இந்நடைமுறையானது அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.குறைந்த அளவில் அமெரிக்காவிற்கான குடியேற்ற எண்ணிக்கையைக் கொண்டே நாடுகளுக்கே வருடாந்தம் இது வழங்கப்பட்டு வருகின்றது. இதற்காக இலட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுமார் 22,000 பேர் கிறீன் கார்ட் விசாவை வென்றிருப்பதாகவும் அவர்களின் பெயர்களும் வெளிடப்பட்டது.எனினும் கணணிகளில் ஏற்பட்ட கோளாறினால் பிழையாக இத்தெரிவு மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் அவ்வறிவிப்பானது செல்லுபடியாகாதெனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் பின்னர் தெரிவித்திருந்தது.
இது தொடர்பான தகவலானது அவர்களது உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இச்செய்தியானது விண்ணப்பதாரிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்ததுடன் கடும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள விசா சேவைகளுக்கான துணை உதவி செயலாளர் டேவிட் டொனெயு கணணி நிரலாக்கத்தில் ஏற்பட்ட பிழை(programming error) காரணமாக இத்தவறு நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்களை ஏற்க ஆரம்பித்த நாளான ஒக்டோபர் 2010 முதல் கடைசி தினமான நவம்பர் 3 வரை 14.7 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைக்கப்பட்ட போதிலும் முதல் 2 நாட்கள் பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்தே 90% வீதமானோர் தவறுதலாக தெரிவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
எனவே இதன்காரணமாக அனைவருக்கும் பாரபட்சமற்றவைகையில் நடந்துகொள்வதற்காக மறுபடியும் தெரிவுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதன் முடிவுகள் எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி 2011 ஆம் ஆண்டு வெளியிடப்படுமெனவும் அவர் தெரிவிக்கின்றார்.
மேலும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள தகவல் தொழிநுட்ப வலையமைப்பானது எவ்வித இணையத் தாக்குதலுக்கும் (Hacking) உள்ளாகவில்லையெனவும், தரவுகள் எதுவும் திருடப்படவில்லையெனவும் அவர் உறுதியளித்துள்ளார்.கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற வரும் இக்குலுக்கல் நடைமுறையானது முதல் முறையாகவே இத்தகைய ஓர் தவறினை இழைத்துள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மிகவும் எளிமையான முறையில் நடக்கவுள்ள மன்னரின் திருமணம்.
பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடந்து முடிந்தது. ஜூலையில் மொனாகோ இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் திருமணம் நடக்கவுள்ளது.இந்நிலையில் இந்தாண்டில் மிகவும் எளிமையான முறையில் தனது திருமணத்தினை நடத்தவுள்ளார் பூட்டான் நாட்டு மன்னர். வரும் அக்டோபர் மாதம் கல்லூரி மாணவி ஒருவரை கரம் பிடிக்கிறார்.
இவரது திருமணம் சாதராண குடும்பத்தில் நடப்பது போன்று மிகவும் எளிமையான முறையில் நடக்கவுள்ளதாக பூட்டான் அரண்மணை வட்டாரம் கூறியுள்ளது. பூட்டான் மன்னராக இருப்பவர் ஜிக்மி கெய்சர்நெம்ஜியால் வாங்சூக்(31).இவர் கடந்த 2008ம் ஆண்டு பூட்டான் நாட்டின் மன்னராக தனது தந்தை ஜிக்மிசெங்கியீ முடிதுறந்ததையடுத்து பொறுப்பேற்றார். இந்நிலையில் பூட்டான் பாராளுமன்ற கூட்டம் திம்புவில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசுகையில் மன்னர் ஜிக்மி கெய்சர்நெம்ஜியால் பேசியதாவது: என் மனதை கவர்ந்த ஜெட்சன்பெய்மா என்ற மாணவியை நான் திருமணம் செய்யவுள்ளேன். எனக்கு வரப்போகும் மனைவி படித்த பெண்ணாக இருக்க வேண்டும். அந்த வகையில் நான் எதிர்பார்த்த அனைத்து தகுதிகளையும் கொண்ட பெண்ணாக ஜெட்சன்பீமாவிடம் உள்ளார்.
வரும் அக்டோபர் மாதம் எங்கள் திருமணம் மிகவும் எளிய முறையில் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறிதுடன் தனது வருங்கால மனைவி ஜெட்சன்பீமாவுடன் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படத்தினையும் காண்பித்தார் மன்னர் ஜிக்மி கெய்சர்நெம்ஜியால்.இது குறித்து பூட்டான் பிரதமர் ஜிக்மி தைன்லி கூறுகையில்,"மன்னரின் திருமணத்தை நாடோ ஆவலோடு எதிர்பாக்கிறது" என்றார். இந்த திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெறவிருப்பதாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெக்சிகோ சிறையில் தீ விபத்து: 14 கைதிகள் உடல் கருகி பலி.
மெக்சிகோ சிறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 14 கைதிகள் உடல் கருகி பலியாயினர். மெக்சிகோ வடகிழக்கு மாகணமான நெளவோலியன் பகுதியில் உள்ள அபோடாகா மாநகராட்சியில் மத்திய சிறைச்சாலை ஒன்று உள்ளது.நேற்று இரவு இந்த சிறையிலிருந்து திடீரென தீ்ப்பற்றியது. இதனால் சிறையில் உள்ள கைதிகளுக்கு எச்சரிக்கை விட்பட்டது.
பின்னர் தீ மளமளவென பரவியதில் கைதிகள் 14 பேர் உடல் கருகி பலியாயினர். சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் வந்து மீட்புப்பணிகளை கவனித்தனர்.மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
துருக்கியில் நிலநடுக்கம்: 3 பேர் பலி.
துருக்கியில் வியாழக்கிழமை இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.மேற்கு துருக்கியில் உள்ள சிமாவ் நகரை மையமாகக் கொண்டு வியாழக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.9 அலகாகப் பதிவானது.
உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 11.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சிமாவ் நகரம் மற்றும் அருகில் உள்ள இனெகல் நகரத்திலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து துருக்கி சுற்றுச் சூழல் அமைச்சர் வெய்சல் எரோகலு செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சிமாவ் நகரத்தின் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். அடுக்கு மாடிகளில் குடியிருந்தோர் பதற்றத்தில் ஜன்னல் வழியாக குதித்துள்ளனர். அவ்வாறு குதித்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.
இனெகல் நகரில் நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இனெகல் நகரிலும் மாடி வீடுகளில் இருந்து ஜன்னல் வழியாக பலர் கீழே குதித்ததாகவும், இதில் 79 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
இவர்களில் ஒருவரது நிலை மட்டும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மற்றவர்கள் அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தால் சிமாவ் நகரில் உள்ள ஒரு மசூதி உள்பட பல கட்டடங்கள் சேதம் அடைந்தததாக அதிகாரிகள் மேலும் கூறினர்.இந்நிலையில் அடுத்த சில நாள்களில் இதே போன்று மேலும் சில நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என இஸ்தான்புல் நகரில் உள்ள புவியியல் ஆய்வகம் அறிவித்துள்ளது.
பயங்கரவாதியை கைது செய்ய உதவிய சவுதி அரேபியா: விக்கிலீக்ஸ் அதிர்ச்சித் தகவல்.
மும்பை தாக்குதல் சதியில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கைது செய்த 7 பேரில் ஒருவரைப் பற்றிய விவரங்களை சவூதி அரேபியா தான் அளித்தது. இந்த தகவலை வெள்ளிக்கிழமை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.
பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் தனது வாஷிங்டன் அலுவலகத்துக்கு அனுப்பிய செய்தியில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தூதரக ரகசிய செய்தியை இப்போது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.2008ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் தொடர்புள்ளதாக சந்தேகத்தின் பேரில் பாகிஸ்தான் புலனாய்வுத் துறை 7 பேரைக் கைது செய்தது.
அதில் ஒருவர் ஜமீல் அகமது. சர்வதேச காவல் படையான இண்டர்போல் ஒரு துப்பு கொடுத்திருந்தது. இந்த விவரத்தை சவூதி அரசு பாகிஸ்தானுக்கு அளித்தது. இந்த தகவலின் அடிப்படையில்தான் பாகிஸ்தான் புலனாய்வுத் துறை ஜமீல் அகமதைக் கைது செய்ய முடிந்தது.மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன்பு ஜமீல் அகமது, இவருடன் கைது செய்யப்பட்ட மற்றொருவரான ஷாஹித் ஜமீல் ரியாஸுக்கு சவூதி அரேபியாவிலிருந்து பணம் அனுப்பினார்.
2008 நவம்பர் 26ம் திகதி தாக்குதல் நடந்த பின்பு அது தொடர்பாக பாகிஸ்தானில் பலர் கைது செய்யப்பட்டனர். இதில் ஆறாவதாக கைதானவர் ஜமீல் அகமது. பாகிஸ்தானின் மத்திய புலனாய்வுத் துறையால் இவர் தேடப்பட்டு வந்தார். தலைமறைவாக உள்ளவர் என்று இவர் பெயர் காவல் துறை ஆவணங்களில் இருந்து வந்தது.இண்டர்போல் தந்த தகவலின் அடிப்படையில் ஜமீல் அகமது மற்றும் ஷாஹித் ஜமீல் ரியாஸ் ஆகியோரது தொலைபேசி எண்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஜமீல் அகமது அவருடைய வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டார்.
மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் விசாரணை இப்போது பாகிஸ்தானில் நடந்து வருகிறது. மும்பை தாக்குதல் சதியைத் திட்டமிட்டு அதை நடத்தி முடிக்க பணம் வழங்கியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இதில் ஒருவர் லஷ்கர்-இ-தொய்பாவின் கமாண்டர் ஸக்கியூர் ரஹ்மான் லக்வி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மீது நடைபெறும் வழக்கில் பயன்படுத்த இந்தியாவில் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் அளித்த வாக்குமூலத்தை பாகிஸ்தான் அதிகாரிகள் கேட்டுள்ளனர். அது ஒரு சாட்சியமாக இவ்வழக்கில் பயன்படுத்தப்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.
அதைத் தவிர லஷ்கரின் முக்கிய தலைவர்களான ஸக்கியூர் ரஹ்மான் லக்வி மற்றும் அபு அல் காமா ஆகியோரின் தொலைபேசி உரையாடல்களின் பதிவு பாகிஸ்தான் காவல்துறை வசம் உள்ளது.இந்த தகவல்கள் யாவும் அமெரிக்க தூதரக அதிகாரி வாஷிங்டனுக்கு அனுப்பிய செய்தியில் உள்ளது. இவற்றை விக்கிலீக்ஸ் இப்போது பகிரங்கமாக்கியுள்ளது.
எங்கள் நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுகிறது அமெரிக்கா: சிரியா குற்றச்சாட்டு.
தங்கள் நாட்டு உள் விவகாரங்களில் அமெரிக்கா தேவையில்லாமல் தலையிட்டு வருவதாக சிரியா குற்றம் சாட்டியுள்ளது.முன்னதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வியாழக்கிழமை கூறுகையில்,"சிரிய அதிபர் பஷார் அஸ்ஸாத் ஜனநாயக வழியில் நாட்டை வழி நடத்த வேண்டும். அவ்வாறு செயல்படாவிட்டால் பதவி விலக வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இது தங்களது நாட்டின் உள் விவகாரத்தில் அப்பட்டமாகத் தலையிடும் செயல் என்றும், கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களை மேலும் தூண்டிவிடும் செயல் என்றும் சிரிய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் வெளிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒபாமாவின் இந்தப் பேச்சு சிரியா போன்ற பல நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டும் என்ற அமெரிக்காவின் மனநிலையையே காட்டுகிறது என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
ஸ்ட்ராஸ்கானுக்கு விதிக்கப்பட்ட கடுமையான விதிமுறைகள்.
சர்வதேச நிதியமைப்பின் முன்னாள் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்கானுக்கு எலக்ட்ரானிக் டேக், வீட்டுக் காவல் உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் வழக்கில் சிக்கி நியூயார்க்கின் ரைக்கர்ஸ் தீவில் சிறை வைக்கப்பட்ட கான் நேற்று மீண்டும் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரசுத் தரப்பு வக்கீல்கள் அமெரிக்க நீதி எல்லையைக் கடந்து இந்த உலகின் வேறு பகுதிகளில் அவர் வசதிகளுடன் வாழ வாய்ப்பிருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டனர்.
ஆனால் கான் வக்கீல்கள் கான் ஓர் உயர்ந்த பதவியில் இருந்தவர். அதனால் அவர் நியூயார்க்கை விட்டு எங்கும் செல்ல மாட்டார் என்று உறுதியளித்தனர். அதன் பேரில் நீதிபதி கானுக்கு ஜாமீன் வழங்கினார்.ஜாமீன் தொகையாக 450 லட்ச ரூபாயும், பத்திரக் காப்புத் தொகையாக 2250 கோடி ரூபாயும் செலுத்த வேண்டும். நியூயார்க்கில் ஒரு வீட்டில் 24 மணி நேரக் காவலுடன் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்படுவார். அவரது பயண ஆவணங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கானின் நடமாட்டத்தைக் கவனிக்கும் வகையில் அவரது காலில் "எலக்ட்ரானிக் டேக்" கட்டி விடப்படும். அதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர் எங்கிருந்தாலும், அதன் மூலம் அவர் இருக்கும் இடம் மற்றும் நடமாட்டத்தை அறியலாம். ஆயுதம் தாங்கிய ஒரு பாதுகாப்பு வீரர் எப்போதும் அவருடன் இருப்பார் ஆகிய கடுமையான நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளன.