Thursday, May 5, 2011

இன்றைய செய்திகள்.

இலங்கை கிரிக்கட் ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்! சுழற்பந்து முரளிதரன்.

இலங்கை வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி வரும் திலகரத்ன அதை நிரூபிக்க வேண்டும்.இல்லையென்றால் தொடர்ந்து குறை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று இலங்கையின் சுழற்பந்து ஜாம்பவான் முரளிதரன் கூறியுள்ளார்.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கொச்சி அணிக்காக விளையாடி வரும் முரளிதரன் இது குறித்து மேலும் கூறியதாவது,
திலகரத்ன ஏன் இவ்வாறு குற்றம்சாட்டி வருகிறார் என்பது எனக்குத் தெரியாது. அவர் கூறுவதுபோல் யாராவது சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தால் அது தொடர்பான ஆதாரங்களை அளிக்க வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் ஐ.சி.சி.ஊழல் தடுப்புப் பிரிவிடம் நான் தெரிவித்திருப்பேன். அதுதான் விதிமுறையை வகுத்துள்ளது. அனைத்து வீரர்களும் அதைத்தான் கடைப்பிடித்து வருகின்றனர் என்றார்.
திலகரத்னவின் இந்தக் குற்றச்சாட்டால் இலங்கை கிரிக்கெட் சபையின் புகழுக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டபோது அதை மறுத்த முரளிதரன், திலகரத்ன கூறி வரும் குற்றச்சாட்டுக்கு அவர்தான் பதிலளிக்க வேண்டும். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. குற்றச்சாட்டு இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றார்.திலகரத்னவின் இந்தக் குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
உயிருடன் பிடித்த பின்னரே பின்லேடனை சுட்டுக்கொன்றனர் ஒசாமாவின் மகள் தெரிவிப்பு.
பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் அல் கைதா அமைப்பின்  தலைவர் ஒசாமா பின்லேடனை உயிருடன் பிடித்த பின்னரே அமெரிக்க படையினர் அவரை சுட்டுக்கொன்றதாக ஒசாமாவின் 12 வயதான மகள் கூறியுள்ளார்.தனது தந்தை சுட்டுக்கொல்லப்பட்டதையும் அதன் பின்னர் அவரின் உடல் ஹெலிகொப்டருக்கு இழுத்துச் செல்லப்பட்டதையும் 12 வயதான அந்த மகள் பார்த்ததாக பாகிஸ்தானின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி அரேபிய செய்தி கட்டமைப்பான அல் அரேபியா நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.
ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த கட்டிடத் தொகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் மீதோ அவர்களின் ஹெலிகொப்டர்கள் மீதோ ஒரு துப்பாக்கிச் சன்னங்கள் கூட பாய்ந்திருக்கவில்லை. தொழில்நுட்ப கோளாறினாலேயே அவர்களின் ஒரு ஹெலிகொப்டர் விழுந்து மோதியுள்ளது என்று பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மோதல் நடந்ததாக அமெரிக்கா தெரிவித்திருக்கும் விடயங்களை அவர் நிராகரித்திருப்பதாக பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிகை நேற்று தெரிவித்துள்ளது.
உயிர் தப்பிய பின்லேடனின் ஆறு பிள்ளைகள் மற்றும் மனைவிமாரில் ஒருவர் உட்பட அவரின் உறவினர்கள் ராவல்பிண்டியிலுள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அரபு செய்திச் சேவை தெரிவித்துள்ளது. அமால் அல் சாடா (27 வயது) என்ற பின்லேடனின் இளைய மனைவியின் காலின் மீது துப்பாக்கிச் சன்னம் பாய்ந்துள்ளது. ஆனால், அவர் தப்பிவிட்டார். முன்னர் பின்லேடன் ஏக்.கே. 47 துப்பாக்கியை வைத்திருந்ததகவும் தனது மனைவியை மனிதக் கேடயமாக வைத்திருந்த போது சுடப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியிருந்தனர்.
ஆனால், பின்னர் பின்லேடன் நிராயுதபாணியாக இருந்தார் என வெள்ளைமாளிகை செவ்வாய் இரவு கூறியிருந்தது. இந்த இருவேறுபட்ட கருத்துகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாகக் காணப்படுகின்றன. தனது மனைவியை யேமன் வீட்டிற்கு பின்லேடன் பாதுகாப்புக்காக அனுப்பி வைத்த போதும் அப்பெண் திரும்பி வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 2005 லிருந்து அபோட்டாபாத்திலுள்ள மாளிகையில் தான் பின்லேடனுடன் வாழ்ந்துவருவதை அப்பெண் பாகிஸ்தான் விசாரணையாளர்களுக்குக் கூறியிருந்தார்.
பின்லேடன் வீட்டில் கைப்பற்றிய ஆவணங்களை ஆராய்கிறது அமெரிக்கா.
பின்லேடன் தங்கியிருந்த வீட்டில் கணணி, ஹார்ட் டிஸ்க்குகள், பென் டிரைவ், டிவிடிகள், ஓடியோ சாதனம், செல்போன்களை அமெரிக்க படையினர் கைப்பற்றியுள்ளனர்.இவற்றை ஆராயும் பணியில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி புதுப்புது தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.
பின்லேடன் வீட்டில் போன் வசதி, இன்டர்நெட் வசதி இல்லை என முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து 5 கணணிகள், 10 ஹார்டு டிஸ்க்குகள், 100க்கும் அதிகமான டிவிடிகள் இருந்தன.
மேலும் 5 செல்போன்கள், ஓடியோ, வீடியோ சாதனங்கள், ஏ.கே 47 உள்பட 5 துப்பாக்கிகள், 500 யூரோ, போன் டைரி, கோப்புகள் ஆகியவற்றை அமெரிக்க கமாண்டோக்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.இவற்றை அமெரிக்க அதிகாரிகள் ஆராய உள்ளனர். இதன் மூலம் பின்லேடனுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய விவரம் தெரியவரும்.
பின்லேடன் மனைவியை அமெரிக்காவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு.
பாகிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லேடனை அமெரிக்க ராணுவத்தின் கமாண்டோ படையினர் கடந்த திங்களன்று சுட்டுக் கொன்றனர். பின்லேடன் பதுங்கி இருந்த வீட்டில் மனைவி, பிள்ளைகள் என குடும்பமே வசித்து வந்தது. சண்டையில் பின்லேடன், மகன் காலித், ஒரு பெண், உதவியாளர் இருவர் என 5 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், பின்லேடனின் 5-வது மனைவி அமய் உயிருடன் பிடிபட்ட தகவல் வெளியாகி உள்ளது. பின்லேடன் கொல்லப்பட்ட சமயத்தில் அமய் மீது குண்டுகள் பாய்ந்து காயமடைந்ததாக கூறப்படுகிறது. பின்லேடனின் மனைவி அமய் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாகிஸ்தான் ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கின்றனர்.

ராவல் பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அமய் சிகிச்சை பெற்று வருகிறார். ராவல்பிண்டி ஆஸ்பத்திரியில் இருக்கும் அவரிடம் பின்லேடன் மற்றும் அல்கொய்தா இயக்கத்தினர் பற்றிய தகவல்களை பெறுவதற்காக விசாரணை நடத்த அமெரிக்கா விரும்புகிறது. அதனால், அமெரிக்காவிடம் அமயை ஒப்படைக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. அந்த கோரிக்கையை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
ஒசாமா தாக்கப்பட்ட நேரத்தில் ஒபாமாவின் அறையில் இருந்த ரகசிய உளவாளி.
அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடன் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்தவாரு நேரடியாகப் பார்வையிட்டுள்ளார்.இந்தத் தாக்குதல் இடம்பெறும் காட்சிகளை வெள்ளை மாளிகையின் "சிடுவேஷன்" அறையில் இருந்து ஜனாதிபதி ஒபாமா, உப ஜனாதிபதி, ராஜாங்கச் செயலாளர் உட்பட இன்னும் சில முக்கிய பிரமுகர்களும் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.
இதில் ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் தவிர இன்னும் ஒரு பெண் படத்தின் பின்னால் காணப்படுகின்றார். கருமையான கூந்தலுடன் காணப்படும் இந்தப் பெண் யார்? என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.அமெரிக்காவின் உயர்மட்ட முக்கியப் பிரமுகர்கள் கூடும் அந்த அறைக்குள் அவர் எப்படி வந்தார்? ஹிலாரியைத் தவிர அங்கிருந்த ஒரே பெண் அவர் தான். இவர் 40 வயதுக்கும் குறைவானவர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அந்தப் படத்தில் இவரின் பெயர் ஓட்ரி டொமஸன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இவர் யார்? ஏன் அங்கு வந்தார்? என விளக்கமளிக்க முடியாமல் உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர் ஒரு உயர் மட்ட உளவாளியாக இருக்கலாம் என்று சில புலனாய்வு நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இவ்வாறு அந்தப் பெண் படத்தில் தோன்றி தனது முகத்தைக் காட்டியுள்ளதால் அவர் இப்போது ஆபத்தை எதிர்நோக்கியுள்ளார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பிரிட்டனில் அதிகரித்து வரும் பேஸ்புக் குற்றங்கள்.
பிரிட்டனில் பேஸ்புக்கைப் பாவித்து இடம்பெறும் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.பாலியல், மிரட்டல், கொள்ளை, கொலை என எல்லா வகையான குற்றச் செயல்களும் பேஸ்புக் வழியாக இடம்பெறுவதாக பொலிஸார் கூறுகின்றனர்.பேஸ்புக் பல குடும்பப் பிரச்சினைகளுக்கும், வாழ்க்கைப் பங்காளிகளுக்கிடையில் கருத்து மோதல்களுக்கும் கூட காரணமாகியுள்ளது. அதே போல் அது பல பிரச்சினைகளைத் தீர்த்தும் வைத்துள்ளது.
இந்த சமூக இணையத்தளத்தைப் பயன்படுத்தி சில குற்றவாளிகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். சிலர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களையும் பேஸ்புக் வழியாகக் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.எவ்வாறாயினும் கடந்தாண்டில் பேஸ்புக் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாகவே மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. சென்ற ஆண்டில் இடம்பெற்ற குற்றச்செயல்களில் 6200 குற்றச் செயல்கள் பேஸ்புக் வழியாக இடம்பெற்றவை.
ஒரு மணிநேரத்துக்கு ஒன்று என்ற ரீதியில் பேஸ்புக் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதுபோல் இன்னும் பல சம்பவங்களும் பேஸ்புக் வழியாக இடம்பெற்றுள்ளன. பிரிட்டனின் பல பாகங்களிலும் பேஸ்புக் வழியான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துள்ளமை பதிவாகியுள்ளது. சமூக இணையத்தளங்கள் அளவுக்கு அதிகமான வெளிப்படைத் தன்மை கொண்டிருப்பதே இதற்கு முக்கிய காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவு: சல்மான் பஷீர்.
தங்கள் மண்ணில் எந்த நாடாவது தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் ராணுவத்திடமிருந்து மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அந்நாட்டின் வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீர் எச்சரிக்கை விடுத்தார்.தவறாக கணக்கு போட்டால் பேரழிவு ஏற்படும். தன்னை பாதுகாத்துக் கொள்ள போதுமான தகுதி பாகிஸ்தானிடம் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை என பஷீர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் அபோதாபாதில் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொன்றன. இது பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு தெரியாமல் நடந்ததாகக் கூறப்படுகிறது. அந்த சம்பவம் நடந்து 3 தினங்களுக்குப் பின் சல்மான் பஷீர் இதுகுறித்து பேசினார்.உளவு நிறுவனமோ, அரசு அமைப்புக்குள் உள்ள சக்திகளோ அல்கய்தாவுடன் சேர்ந்து செயல்பட்டது என்று சொல்வது சுலபம். இது தவறான கருத்து. தவறான குற்றச்சாட்டு. இதை எந்த நிலையிலும் உறுதிப்படுத்த முடியாது என பஷீர் தெரிவித்தார்.
உலக மக்கள் தொகை 700 கோடியை நெருங்குகிறது: ஐ.நா. தகவல்.
இந்த ஆண்டு அக்டோபர் 31 ம் திகதியன்று உலக மக்கள் தொகை 700 கோடியாக இருக்கும் என்று தற்போது வெளியாகியுள்ள ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது கி.பி. 2099 ம் ஆண்டுக்குள் 10 பில்லியனாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்தது.
21 ம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேயே உலக மக்கள் தொகை முந்தைய கணிப்பான 9.15 பில்லியனைத் தாண்டி 9.31 பில்லியனாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹானியா ஜோல்ட்னிக் தலைமையில் அமைக்கப்பட்ட ஐநா குழுவின் கணிப்புப்படியே உலக மக்கள் தொகை 7 பில்லியனாக அக்டோபர் 31 அன்று இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதைத் தெரிவிக்கும் விதமாக ஐநா அமைப்பான யூ.என்.எப்.பி.ஏ. சார்பில் ஏழுநாள் எண்ணிக்கையை அக்டோபர் 24 ம் திகதி தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலக மக்கள் தொகை கடந்த 1998 ம் ஆண்டு 6 பில்லியனைத் தொட்டது. அதே வருடம் ஜூலையில் 6.89 பில்லியனாக உயர்ந்தது. கி.பி 2100 ல் சீன மக்கள் தொகை தற்போதைய அளவான 1.34 ல் இருந்து 1 பில்லியனாக குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் சக்தி வாய்ந்த கார் குண்டு வெடிப்பு: 16 பேர் உயிரிழப்பு.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஒரு உணவு விடுதியில் இருந்த தொலைக்காட்சியில் இளைஞர்கள் சிலர் நேற்று கால்பந்து போட்டியை ரசித்து பார்த்து கொண்டிருந்தனர்.அப்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் ஒரே புகை மூட்டமானது. இச்சம்பவத்தில் உணவகம் இடிந்து தரை மட்டமானது. 
உணவகத்தின் இடிபாடுகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். மேலும் 37 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
பாகிஸ்தானில் அபோதாபாத்தில் பதுங்கி இருந்த பின்லேடன் அமெரிக்க கொமண்டோ படையினரால் கடந்த 2 ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்கய்தா தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தெரிகிறது. பின்லேடன் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஈராக்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதையும் மீறி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடக்கிறது.
ஒசாமா பற்றி பாகிஸ்தான் உளவு நிறுவனம் தகவல் அறியாதது அதிர்ச்சி: முஷரப்.
ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கி இருந்தது குறித்து தகவல் அறியாதது பாகிஸ்தான் உளவுத்துறையின் குறைபாட்டை காட்டுகிறது.பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் தெரிவித்துள்ளது, முஷரப்பின் இந்த அறிக்கை அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் ஒசாமா கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு முஷரப் பேட்டி அளித்தார். அதில், பாகிஸ்தானுக்கு அருகில் ஒசாமா இத்தனை காலம் பதுங்கி இருந்தது எனக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. இதுவரை எவ்வித தகவலும் அறியாமல் இருந்தது எனக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கிறது. இது ஐ.எஸ்.ஐ.யின் குறைபாட்டை காட்டுகிறது.
ஒசாமாவிற்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்திருப்பதாகவும், ஐ.எஸ்.ஐ. ஒசாமாவிற்கு உதவியதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது முற்றிலும் தவறானது. இதற்கு முன் பாகிஸ்தானில் பலமுறை அல்கய்தா அமைப்பிற்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அதுவும் பாகிஸ்தான் உளவுத்துறையினராலேயே நடத்தப்பட்டுள்ளது.தாலிபன்கள் மற்றும் அல்கய்தா அமைப்பிற்கு எதிராக போராட அமெரிக்காவிற்கு ஆதரவு அளிக்க பாகிஸ்தான் ஒரு போதும் தவறியதில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் எப்போதும் போராட்டம் நடத்தும் என்று முஷரப் தெரிவித்துள்ளார்.
இரட்டை கோபுர நினைவிடத்தில் ஒபாமா இன்று அஞ்சலி.
பின்லேடன் கொல்லப்பட்டதால் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் அந்நாட்டு மக்களும் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நியூயார்க் நகரின் இரட்டைக் கோபுர வர்த்தக மையம் பின்லேடன் தூண்டுதலால் தீவிரவாதிகளின் விமானம் மோதி நொறுங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர்.
அந்த சோக நிகழ்வின் நினைவாக "கிரவுண்ட் ஜீரோ" எனப்படும் நினைவிடம் நியூயார்க்கில் உள்ளது. இன்று அங்கு நடைபெறும் மலர் அஞ்சலி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். பலியானோர் குடும்பத்தினரை சந்திக்கிறார்.
தனது குழந்தையை கொலை செய்து பேஸ்புக்கில் தகவலை வெளியிட்ட கொடூர தந்தை.
அவுஸ்திரேலியாவில் தந்தை ஒருவர் தனது 2 வயது மகளை கொலை செய்து விட்டு அத்தகவலை பேஸ்புக்கில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் தனது மகளை கொலை செய்த தகவலை அவர் தனது முன்னாள் மனைவிக்கு பேஸ்புக் மூலம் அனுப்பி உள்ளார்.
ரம்ஜான் ரம்ஜி அகர் என்ற அந்த 24 வயது தந்தை மெல்பேர்ண் நீதிமன்றத்தில் இத்தகவலை வாக்கு மூலமாக அளித்துள்ளார். ரம்ஜியும் அவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு யாஸ்மினா என்ற 2 வயது குழந்தை உள்ளது. மனைவி மீது உள்ள ஆத்திரத்தில் குழந்தையை கடத்தி சென்றுள்ளார் ரம்ஜி. குழந்தையை திருப்பி தரும்படி அவருக்கு பல முறை அவரது மனைவி போன் செய்துள்ளார்.பொலிசிற்கு போவதற்கு முன் குழந்தையை கொடுக்கும்படி அவர் எச்சரித்துள்ளார். அதற்கு அவர் குழந்தையை கொன்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த குழந்தையின் உடலையும் படம் பிடித்து அதனை பேஸ்புக்கில் பதிவு செய்த இவர், அத்தகவலை தனது மனைவிக்கு தகவலாகவும் அனுப்பி உள்ளார். இந்த கொடூர தந்தைக்கு ஜாமீன் வழங்க மெல்பேர்ண் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஒசாமாவின் படங்களை வெளியிட முடியாது: ஒபாமா அறிவுப்பு.
பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் படங்களை வெளியிடப்போவது இல்லை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முடிவு செய்துள்ளார்.பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் பின்லேடன் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடுமையான குண்டு காயங்களுடன் இறந்த பின்லேடன் படம் மட்டும் வெளியானது.
பின்லேடன் இறக்கவில்லை. அவர் உயிருடன் தான் இருக்கிறார் என சில சதித் தகவல்கள் வெளியாகின. உலக நாடுகளை குழப்பும் வகையில் வெளியான இத்தகவல்களுக்கு பதிலடி தரும் வகையில் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட முழு விவர படங்களை வெளியிடுவது குறித்து அமெரிக்க அதிகாரிகள் விவாதித்தனர்.ஆனால் பின்லேடன் படங்களை வெளியிட்டால் பதட்ட நிலை ஏற்படும். எனவே படங்களை வெளியிட வேண்டாம் என ஒபாமா கூறியுள்ளார்.கடந்த 10 ஆண்டுகளாக பின்லேடனை பிடிக்க அமெரிக்கா பல லட்சம் கோடி செலவு செய்துள்ளது.
இன்று பணிக்கு திரும்பிய ஜப்பான் அணு உலை ஊழியர்கள்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பான் புகுஷிமா அணு உலை கட்டிடத்திற்கு 3 மாதங்களுக்கு பின்னர் தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர்.ஜப்பானின் வடக்குப் பகுதியான புகுஷிமாவில் கடந்த மார்ச் மாதம் 11ம் திகதி 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஜப்பானின் முதன்மை அணு மின் நிலையம் பழுதடைந்து அணு உலையில் இருந்து கதிர் வீச்சு பரவியது.
அணு உலையை குளிர்விக்கும் குழாய் பகுதி செயல் இழந்ததால் ஹைட்ரஜன் வெடிப்பு ஏற்பட்டு கதிர்வீச்சு பரவியது. கதிர்வீச்சு பரவல் காரணமாக புகுஷிமா மற்றும் தலைநகர் டோக்கியோவிலும் அபாயம் ஏற்பட்டது.
குடிக்கும் தண்ணீரிலும், பால், காய்கறிகளிலும் காணப்பட்டது. இதனால் ஜப்பானிய மக்கள் கடந்த 3 மாதமாக அச்சத்தின் பிடியில் இருந்தனர். இந்த நிலையில் புகுஷிமா அணு மின் நிலையம் சீரடைந்துள்ளது.இந்த அணு உலையின் கட்டிடம் ஒன்றில் 12 தொழிலாளர்கள் பணிக்கு வந்ததாக அணு மின் நிலையத்தை நிர்வகிக்கும் டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனம் இன்று காலை தெரிவித்தது.
இந்நிறுவன செய்தித் தொடர்பாளர் ஜீனிசி மாட் சுமோட்டோ கூறுகையில்,"பணியாளர்கள் ஒவ்வொருவராக குறுகிய கால அவகாசத்தில் பணியாற்ற வந்துள்ளனர்" என்றார். இந்த ஆண்டு இறுதிக்குள் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் என டெப்போ நிறுவனம் கூறியுள்ளது.அணு உலையில் தற்போது கதிர்வீச்சு இல்லை. இதனை ரோபோ மூலம் பிடிக்கப்பட்ட படம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. கடந்த மார்ச் 11ம் திகதி நிலநடுக்கத்தில் 14 ஆயிரம் பேர் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டது. 13 ஆயிரம் பேர் மாயமாகி இருந்தனர்.
குண்டுவீச்சில் கடாபி இறந்திருக்கலாம்: புதிய சர்ச்சை.
லிபியா தலைநகர் திரிபோலியில் அந்நாட்டு அதிபர் கடாபியின் மாளிகை மீது அமெரிக்க கூட்டு படைகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தின.அதில் அவரது மகன் சயீப் அலி அராப் மற்றும் 3 பேரன்கள் கொல்லப்பட்டனர். கடாபியும், அவரது மனைவியும் உயிர் தப்பியதாக கூறப்பட்டது. ஆனால் மகன் இறுதிச்சடங்கில் அவர் கலந்து கொள்ளவில்லை. தனது ஆதரவாளர்களையும் அதன் பிறகு அவர் சந்திக்கவில்லை.
எனவே அவரும் குண்டு வீச்சில் பலியாகி இருக்கலாம் என்ற கருத்து நிலவியது. இது குறித்து அமெரிக்க உளவுத் துறையின் இயக்குனர் லியோ பெனேட்டா அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.
அதில் கூறியதாவது: அப்போது அமெரிக்க கூட்டு படைகள் நடத்திய குண்டுவீச்சில் கடாபி பலியாகவில்லை. அவர் உயிருடன் தான் இருக்கிறார். இதை எங்களது உளவுத்துறையின் தெளிவான அறிக்கை தெரிவிக்கிறது என்றார்.இது குறித்து லிபியாவின் வெளியுறவுத்துறை துணை மந்திரி காலெத் காயிம் கூறுகையில்,"மலைவாழ் இனமக்களின் தலைவர்களை கடந்த 3ந் திகதி கடாபி சந்தித்து பேசினார். தனது ஆதரவாளர்களை அடிக்கடி சந்திக்கிறார்" என்றார்.
பயங்கர துப்பாக்கி வைத்திருந்த 11 வயது சிறுவன் கைது.
பயங்கர துப்பாக்கி வைத்திருந்த 11 வயது சிறுவன் உள்பட 1180 பேரை லண்டன் மெட்ரோ பொலிசார் கைது செய்தனர்.இதற்கு முன்னர் மிக இளவயதில் சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்த நபருக்கு 13 வயது ஆகும். கடந்த ஆண்டு 10 வயது முதல் 15 வயது வரை உட்பட்ட சிறுவர்கள் 70 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும் இதில் 2 சதவீதத்தினர் மட்டுமே காவலில் வைக்கப்பட்டனர். பாலின வன்முறை, போதை மருந்து குற்றச்சாட்டுகள், கொள்ளை, வன்முறையில் ஈடுபடுதல் போன்ற குற்ற நிகழ்வுகளுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.கனாபின் போன்ற போதை வைத்திருந்த குற்றத்திற்காக 11 வயது சிறுமியும் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட நபர்களில் 38 ஆயிரத்து 388 நபருக்கு பொலிசார் எச்சரிக்கை தரப்பட்டது.
1256 சிறுவர்கள் காவலில் வைக்கப்பட்டனர். சிறுவர்கள் வன்முறை குறித்து டோரி கட்சி எம்.பி பிலிப் டேவிஸ் கூறுகையில்,"ஒவ்வொருவரும் இளம் தலைமுறைக்கு இரண்டாவது வாய்ப்பு தர வேண்டும் என்கிறார்கள். ஆனால் நாங்கள் தீவிர குற்றம் குறித்து பேசுகிறோம். வன்முறை நடத்தைகளை சகித்துக் கொள்ள முடியாது" என்றார்.
கடாபியை கொல்வது எங்கள் நோக்கமல்ல: பிரான்ஸ்.
லிபிய அதிபர் கடாபியையோ அவரது குடும்பத்தினரையோ கொல்வது எங்கள் நோக்கம் அல்ல என்று பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் அலைன் ஜீபே தெரிவித்தார்.லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தும் கடாபிக்கு எதிராக பெப்பிரவரி மாதம் 15ம் திகதி போராட்டம் வெடித்தது.
இந்தப் புரட்சி போராட்டத்தை ஒடுக்க துருப்புகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்படுகின்றனர். அப்பாவி மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா, கனடா படைகள் லிபியாவில் முகாமிட்டுள்ளன.லிபிய ராணுவத்திற்கு எதிராக கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் கடாபியின் மகன் செய்ப் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட விவகாரம் கூடுதல் பாதிப்பாக உள்ளது என பிரான்ஸ் தெரிவித்தது. லிபியாவில் கடாபி ராணுவ இலக்குகளை கடந்த 2 மாதமாக கூட்டுப்படைகள் தாக்கி வருகின்றது.
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை தொடர்ந்து பிரான்சுக்கு எந்த விதத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் அலைன் ஜீபே கூறுகையில்,"பின்லேடனை ஒழிப்பதற்காக பிரான்ஸ் வீரர்கள் ஆப்கானிஸ்தான் செல்லவில்லை. ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவே பிரான்ஸ் வீரர்கள் அங்கு உள்ளனர்" என்றார்.லிபியாவில் போராட்டக்காரர்களின் தேசிய மாற்றக் கவுன்சிலுக்கு உதவி செய்யும் வகையில் கூட்டுப்படைகள் லிபிய ராணுவத்தின் ஸ்திரத்தன்மையை சீர் குலைக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானுக்கு உதவிகள் தொடரக்கூடாது: அமெரிக்க எம்.பிக்கள் வலியுறுத்தல்.
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளிக்கும் உதவிகளை தடை செய்யும் புதிய சட்டத்தைக் கொண்டுவர அமெரிக்க எம்.பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பில்லியன் டொலர் கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்தும் கூட ஒசாமா தங்களிடம் தான் இருக்கிறார் என்று பாகிஸ்தான் சொல்லாத காரணத்தால் அதற்கான நிதியுதவியைத் தடை செய்யும் வகையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் "பாகிஸ்தான் நிதியுதவி பொறுப்புச் சட்டம்" என்ற பெயரில் புதிய சட்டத்தைக் கொண்டு வர அமெரிக்க எம்.பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க எம்.பிக்கள் சிலர் கூறியதாவது: ஒசாமா பற்றி தகவல் தராததற்கு பாகிஸ்தான் ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் இருந்து 3,000 அடி தூரத்தில் ஒசாமா தங்கியிருந்தார் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
பாகிஸ்தான் அரசு அதிகாரி ஒருவருக்குக் கூட இது தெரிந்திருக்கவில்லை. இதை எப்படி நாங்கள் நம்ப முடியும்? அமெரிக்க அரசுக்கு இதுவரை தகவல் அளித்து வந்த ஐ.எஸ்.ஐ மீதும் சந்தேகங்கள் வருகின்றன.ஒசாமாவின் கொலைக்குப் பின் அமெரிக்கா-பாகிஸ்தான் உறவில் மாற்றம் வரும். மேலும் இது பற்றிய கேள்விகள், உறவு மறுபரிசீலனை போன்றவற்றை தவிர்த்து விட்டு மீண்டும் அமெரிக்காவிடம் இருந்து 300 கோடி டொலர் நிதியுதவியை பாகிஸ்தான் எப்படி எதிர்பார்க்க முடியும்? இவ்வாறு எம்.பிக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் இவ்விவகாரம் குறித்து கூறியதாவது: ஒசாமா கொலையில் பாகிஸ்தான் பங்கு குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையிலும், அந்நாட்டுக்கான நிதியுதவி தொடரும்.இருதரப்பின் நீண்ட கால நன்மை கருதியும், அமெரிக்காவின் பாதுகாப்பு நலன் கருதியும் நிதியுதவி தொடர்ந்து அளிக்கப்படும். ஒவ்வொரு பிரச்னையிலும் பாகிஸ்தான் எப்படி செயல்படுகிறது என்று அமெரிக்கா கண்காணிக்காது. ஆனால் பாகிஸ்தான் உடனான ஒத்துழைப்பு தொடரும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அல்கொய்தாவின் இடத்தை லஷ்கர் இ தொய்பா நிரப்பும்.
பின்லேடன் மறைவுக்குப் பிறகு அல்கொய்தா இடத்தை பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா இயக்கம் பிடித்து விடும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை நிபுணர் எச்சரிக்கிறார்.அமெரிக்க வெளியுறவுத்துறையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக்குழு கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டீபன் டான்கெல் என்பவர் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.
மும்பையில் நடைபெற்ற படு பாதகமான தாக்குதல்களை லஷ்கர்-இ-தொய்பா இயக்கம் தான் செய்தது என்று ஆதாரங்களை அளித்த பிறகும் பாகிஸ்தான் அரசு அதை நிர்மூலமாக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
உலகின் பிற நாடுகளில் பயங்கரவாதச் சம்பவங்களில் ஈடுபடும் அந்த அமைப்பு பாகிஸ்தானில் சாத்வீகமான மதம் சார்ந்த இயக்கம் போல நடந்து கொள்கிறது. எனவே பாகிஸ்தான் அரசு அதை ஒடுக்க நினைப்பதில்லை.அல்கொய்தாவின் வலு ஒடுங்கும் வேளையில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட லஷ்கர் இ தொய்பா கட்டாயம் முன்வரும். அந்த இயக்கத்தின் முதல் நோக்கம் இந்தியாவிலிருந்து காஷ்மீரத்தை முழுதாகப் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது.
இந்தியப் பகுதி காஷ்மீரத்தில் உள்ள பிரிவினைவாதிகள் அவரை ஆதரித்தாலும் பெரும்பான்மை மக்கள் ஆதரிக்கவில்லை. அத்துடன் அதன் விஷம வேலைகளை முளையிலேயே கிள்ளி எறிய இந்திய ராணுவம் விழிப்புடன் இருப்பதால் அதன் முயற்சிகளுக்குப் பலன் இல்லை. எனவே அவ்வப்போது சிறு சிறு சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் அது ஆயுதம் எடுத்துப் போர் செய்கிறது. அவ்வப்போது நாச வேலைகளிலும் ஈடுபடுகிறது. இனி ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் கூட தாக்குதலை நடத்த முற்படும். எனவே இந்த இயக்கத்தவர்களை அடையாளம் கண்டு அவர்களைத் தண்டிக்கும் பொறுப்பை அனைவரும் ஏற்க வேண்டும்.சர்வதேச அளவில் செயல்பட நினைத்தாலும் பிராந்திய உணர்வு காரணமாக, சர்வதேச பயங்கரவாத இயக்கமாகச் செயல்பட நாள் பிடிக்கும். அதற்குள் அதன் கட்டமைப்பை பாகிஸ்தான் ராணுவம் தாக்கித் தகர்க்க வேண்டும்.
பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் மீதோ அமெரிக்கத் தூதரகம் மீதோ யாராவது கை வைத்தால் அதற்கான பலனை பாகிஸ்தான் அனுபவித்தே தீர வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவத்தையும் உளவு அமைப்பையும்(ஐ.எஸ்.ஐ.) கடுமையாக எச்சரிக்க வேண்டும்.லஷ்கரின் கட்டமைப்பு குறித்தும், அதன் எதிர்கால திட்டங்கள் குறித்தும் பாகிஸ்தான் உளவு அமைப்பு தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எகிப்தில் மீண்டும் கலவரம்: 12 பேர் படுகாயம்.
எகிப்து நாட்டில் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் கலவரம் வெடித்தது. இச்சம்பவத்தில் 12 பேர் வரை காயமடைந்தனர்.எகிப்து நாட்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபராக பதவி வகித்து வந்தவர் ஹோசினி முபாரக். இவர் மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளால் கடந்த பெப்பிரவரி மாதம் 11ம் திகதி கலவரம் மூண்டது.
பின்னர் பதவி விலகிய அதிபர் தற்போது உடல் நலக்குறைவால் செங்கடல் பகுதியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அதிபர் முபாரக்கின் 83வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.அதிபரின் ஆதரவாளர்கள் கொண்டாடிய பிறந்தநாளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருதரப்பினருக்கும் இடையே கலவரம் மூண்டது. இச்சம்பவத்தில் 12 பேர் வரை காயமடைந்தனர்.
உலகின் இரண்டாவது பயங்கர தீவிரவாதி: தாவூத் இப்ராகிம்.
உலக நாடுகளால் தேடப்படும் பயங்கர குற்றவாளிகளில் இரண்டாவது இடத்தை மும்பை தொடர் குண்டு வெடிப்புக்குக் காரணமான தாவூத் இப்ராகிம் பிடித்துள்ளார் என கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.அமெரிக்கா உட்பட உலக நாடுகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த ஒசாமா பின்லேடன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார்.
இதையடுத்து தற்போது உலக நாடுகளால் தேடப்படும் பயங்கர குற்றவாளிகளின் பட்டியலில் முதல் இடத்தை மெக்சிகோவைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் எல்சாபோவும், இரண்டாமிடத்தை மும்பை தொடர்குண்டு வெடிப்புக்கு காரணமான தாவூத் இப்ராகிமும் பிடித்துள்ளனர்.
இந்திய அரசால் தேடப்படும் பயங்கர குற்றவாளியான தாவூத் இப்ராகிம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர். இதில் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் கூலிக்கு கொலை செய்வது உட்பட பல வகையான குற்றங்கள் அடங்கும்.
பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இந்த குற்றங்களை செய்துள்ளார். சர்வதேச பொலிசாரால்(இன்டர்போல்) தேடப்படும் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறு கார்டியன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
ஒசாமா பின்லேடன் மரணம்: அஞ்சலி கூட்டத்திற்கு வர ஜார்ஜ் புஷ் மறுப்பு.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நியூயார்க் வர்த்தக மையம் அமைந்திருந்த இடத்தில் நடக்கும் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போதைய அதிபர் பாரக் ஒபாமாவின் அழைப்பை நிராகரித்துள்ளதோடு அமெரிக்க ராணுவம் மர்றும் உளவுத்துறையின் செயலைப் பாராட்டியுள்ளார்.
பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நியூயார்க் வர்த்தக மைய கிரவ்ன்ட் "0" வில் 9/11 தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் சிலருடன் சேர்ந்து நாளை நடக்கும் இரங்கல் நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதுகுறித்து முன்னாள் அதிபர் அலுவலக செய்தித் தொடர்பாளர் டேவிட் செர்சர் கூறுகையில்,"ஒபாமாவின் அழைப்புக்கு முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் நன்றி தெரிவித்துள்ளார். எனினும் அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஆரவாரமில்லாத அமைதி வாழ்க்கையை விரும்புவதால் கிரவ்ண்ட் "0" இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார்" என்று தெரிவித்துள்ளார்.எனினும் தான் கலந்து கொள்ளாவிட்டாலும் அமெரிக்கர்களுடன் இணைந்து அதைக் கொண்டாடும்படி வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அணுரசாயன குண்டுகள் வீசி தாக்குதல் நடத்த திட்டம்: இன்டர்போல் உலகநாடுகளுக்கு எச்சரிக்கை.
அமெரிக்க இராணுவ நடவடிக்கையால் பின்லேடன் ‌கொல்லப்பட்டதை தொடர்ந்து உலகம் முழுவதும் உஷார்ப்படுத்தும்படி சர்வதேச பொலிஸ் ஏஜென்சியான இன்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது.உலகநாடுகளில் உள்ள தூதரகங்கள், முக்கிய வர்த்தக நகரங்களில் பாதுகாப்பினை பலப்படுத்தும்படியும் கூறியுள்ளது.
இது குறித்து இன்டர்போல் அமைப்பின் பொதுச்செயலாளர் ‌ரொனால்டு நோபல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பின்லேடன் கொல்லப்பட்ட போதிலும் அவரது தலைமையிலான அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தக்கூடும்.ஏற்கனவே பின்லேடனை பிடிக்க முற்பட்டால்ஐரோப்ப முழுவதும் அணுரசாயண குண்டு வீசப்படும் என அல்கொய்தா அமைப்பின் சீனியர் தலைவர் எச்சரித்திருந்ததும், அச்செய்தியை விக்கிலீக்ஸ் வெளியிட்டதும் மேற்‌கோள்காட்டப்பட்டது.
எனவே அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் உள்ள தூதரகங்கள், வர்‌த்தக நகரங்கள், அணு உலைகள் ஆகியவற்றிற்கு பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
உலக நாடுகளிடம் உதவி கேட்கும் பாகிஸ்தான்.
பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் உலக நாடுகளின் உதவி தங்களுக்கு தேவைப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி தெரிவித்துள்ளார்.அரசு முறைப் பயணமாக பாரீஸ் சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது: பாகிஸ்தானில் உட்புகுந்து ஒசாமாவை அமெரிக்க படைகள் கொல்லப்பட்டதை தாங்களும் வர‌வேற்பதாகவும், ஏனெனில் பயங்கரவாதத்தை தனியொரு எந்த நாடும் வேரறுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
நேற்று பாகிஸ்தான் அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அமெரிக்கப்படைகள் பாகிஸ்தானில் புகுந்து ஒசாமவை கொன்றதன் மூலம் நாட்டின் இறையாண்மையை மீறிவிட்டதாக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.ஒசாமா மீதான தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF