Tuesday, May 17, 2011

இன்றைய செய்திகள்.


காலியில் கறுப்பு நிறமாக மாறிய கடல் நீர்! காரணம் ஜப்பான் அணுக் கழிவுகளா?

காலியின் களுவெல்ல பிரதேசத்தில் கடல் நீர் கறுப்பு நிறமாக மாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடல் நீரின் நிறமாற்றத்திற்கு காரணம், ஜப்பான் அணுக்கழிவுகள் கடலில் கொட்டப்பட்டதன் தாக்கமாக இருக்கலாம் என்ற அச்சம் தெரிவிக்கப்படுகிறது. 

கறுப்பு நிறமான கடல் நீருடன் எண்ணெய்த் தன்மையான ஒரு வகைப் படிவும் நீரில் அடித்து வரப்பட்டு கரையொதுங்கும் காரணத்தால் களுவெல்ல பிரதேசக் கடற்கரையோரம் மாசடைந்து காணப்படுகின்றது. 
சமுத்திரவியல் மாசுகட்டுப்பாட்டுத் திணைக்கள அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், கடல் நீரின் கறுமைக்கும் அதனோடு சோ்ந்து கரையொதுங்கும் கழிவுகளுக்கும் எண்ணெய் அல்லது ஏதாவது இரசாயனம் காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர். 

காலி, களுவெல்லை பிரதேசத்தின் கடற்பரப்பில் சுமார் ஒரு ஏக்கர் வரையான பரப்பளவில் நீரானது கறுப்பு நிறமாக மாற்றமடைந்து மாசடைந்து காணப்படுகிறது.

பெளத்த அறநெறிகளூடாக சவால்களை சமாளிப்போம்! ஜனாதிபதி

நம் எதிரே வருகின்ற அனைத்து சவால்களின் போதும் புத்த பெருமானின் அறநெறி களினால் போதிக்கப்பட்ட முன்மாதிரிகளை உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விடுத்துள்ள வெசாக் தின வாழ்த்துச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

பூரண அரச அனுசரணையுடன் 2600ஆவது புத்த ஜயந்தி வெசாக் மகோற்சவத்தை பக்திபூர்வமாக கொண்டாடுகின்றோம்.புத்த போதனை இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளாக அனைத்து மக்கள் சமுதாயத்துக்கும் சரியான பாதையைக் காட்டியுள்ளது. உலக வாழ் மக்கள் அனைவரும் அதன் மூலம் எல்லையில்லாத மன நிம்மதியைப் பெற்றிருந்தனர். 

அந்த உயரிய தர்மத்தை ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக பாதுகாத்துக் கொண்டதன் காரணமாகவும் அத் தர்மத்தின் பிரகாரம் வாழ்க்கை முறையை நெறிப்படுத்திக் கொண்டதன் காரணமாகவும் எமது தாயகம் உலகத்தின் கெளரவத்திற்கும் மகத்துவத்திற்கும் பாத்திரமாகின்றது.நாட்டிற்கு கெளரவமான சமாதானத்தை ஏற்படுத்திய போதும் தாய் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்கின்ற போதும், புத்த பெருமானார் காட்டித் தந்த நால்வகை பாதகங்கள் அற்ற பாதையையும், தர்மத்தை முதன்மையாகக்கொண்ட அரச கொள்கையையும் நாம் பின்பற்றினோம்.

“அக்கொதென் ஜினோ கொதங் - அசாதுங் சாதுனா ஜினே
ஜினே கதரியங் தானேன - சச்சேன அலிக்கவாதினங்”

குரோதத்தை அன்பினால் வெற்றிகொள்ள வேண்டும். தீமையை நன்மையால் வெற்றிகொள்ள வேண்டும், உலோபியை வள்ளல் தன்மையாலும், பொய் சொல்பவனை சத்தியத்தாலும் வெற்றி கொள்ள வேண்டும் என புத்த பெருமானாரின் போதனையில் குறிப்பிடப்படுகின்றது. 

நம் எதிரே வருகின்ற அனைத்து சவால்களின் போதும் மேற்கூறப்பட்ட உயரிய அறநெறியினால் போதிக்கப்பட்ட முன் மாதிரியை உலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டும்.ஆசையின் காரணமாக உலகத்தில் தோன்றிய அனைத்து முரண்பாடுகளும் தீர்க்கப்பட்டு நல்வழியில் கருணையைப் பரப்புகின்ற பாதையை நாம் திறந்து வைக்க வேண்டும். அமைதியான உலகத்தை உருவாக்குவதற்கு அறநெறி வழியை நாம் காட்ட வேண்டும்.

நமது புத்த பெருமானின் இறுதிப் போதனையின் பிரகாரம் அவர் கொள்கைகளைப் பூஜிப்பதற்கு முதலிடம் கொடுத்து தாமதமின்றி நன்மைகளையும் அறத்தையும் சேகரித்து புத்த ஜயந்தி வெசாக் மங்கள உற்சவத்தை அர்த்தமுள்ளதாக்கி புத்த பெருமானை சரணம் அடைய உறுதி பூணுவோமாக என்று ஜனாதிபதியின் வெசக்தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது
ஜனாதிபதி மஹிந்தவின் நேரடிப் பணிப்புரையில் தான் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டார்: மனைவி சொனாலி.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நேரடிப் பணிப்புரையிலேயே லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதாக லசந்தவின் மனைவி சொனாலி விக்கிரமதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தலையில் கட்டிவிட்டு அவரை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதுடன், தானும் தப்பித்துக் கொள்ளும் முயற்சிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அரசாங்கமும் முன்னெடுத்து வருகின்றனர்.
அதற்கான சாட்சியங்களை உருவாக்கும் பணிகள் தற்போதைக்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக லசந்தவின் கொலையில் சரத் பொன்சேகாவுக்கு தொடர்பிருப்பதாக பிரித்தானியத் தூதரக அதிகாரிகள் தன்னிடம் கருத்துத் தெரிவித்ததாக அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அதற்கடுத்ததாக லசந்த விக்கிரமதுங்க படுகொலை, கீத் நொயர், நாமல் பெரேரா, உபாலி தென்னக்கோன் ஆகிய ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் என்பவற்றில் சரத் பொன்சேகாவுக்குத் தொடர்பிருப்பதாக அண்மையில் சண்டே லீடர் ஆசிரியர் பிரெட்ரிகா ஜேன்ஸ் பத்தியொன்றை எழுதியிருந்தார்.
லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைச் சம்பவம் மற்றும் ஏனைய ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய இராணுவச் சிப்பாய்கள் சரத் பொன்சேகாவின் நெருங்கிய ஆதரவைப் பெற்ற சிப்பாய்கள் என்று தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.ஆயினும் அதனை வன்மையாக மறுத்துள்ள லசந்த விக்கிரமதுங்கவின் மனைவி சொனாலி விக்கிரமதுங்க, தனது கணவன் லசந்தவின் படுகொலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அது தவிர சரத் பொன்சேகாவுக்கு அதில் தொடர்பிருப்பது குறித்து தனக்குத் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பிரெட்ரிக்கா ஜேன்ஸ், தற்போதைய நிலையில் அரசாங்கத்தின் ஊதுகுழலாக மாறியுள்ளதுடன் அவரது சேவையைக் கௌரவிக்குமுகமாக அவருக்கு அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாமற் போனதற்கான காரணத்தை ஆராய விசேட குழு.
விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாமற்போனதற்கான காரணங்களை ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
அவர்களில் பலர் வருடக்கணக்கில் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அதன் காரணமாக பலரது பிள்ளைகள் மற்றும் குடும்பங்கள் என்பன கடும் நிர்க்கதியான நிலையை எதிர்கொண்டுள்ளன.
அதன் காரணமாகவே அவ்வாறு வழக்குத் தொடரப்படுவதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்ப்பதற்காக விசேட குழுக்கள் சில நியமிக்கப்பட்டிருக்கின்றன என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று வவுனியாவில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பேராளர் மகாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போது குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் அவ்வாறு வழக்குத் தொடரும் நடவடிக்கைகள் தாமதமடைந்ததற்கு ஒட்டுமொத்தமாக அரசாங்கத்தை மட்டும் குறை சொல்வதில் பயனில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக் கொடி விவகார வழக்கை வாபஸ்பெறுவது குறித்து அரசாங்கம் தீவிர ஆலோசனை.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வெள்ளைக்கொடி விவகார வழக்கை வாபஸ் பெறுவது குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருகின்றது.வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களைச் சுட்டுக் கொல்லுமாறு பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டதாக சரத் பொன்சேகா தெரிவித்தார் என்ற சண்டே லீடர் பத்திரிகையின்  செய்தியின் அடிப்படையில் சட்டமா அதிபரினால் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆயினும் தற்போதைய நிலையில் வழக்கின்  போக்கு பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ஜனாதிபதிக்கு பாதகமான முறையில் நகர்ந்து கொண்டிருப்பதன் காரணமாக வழக்கை வாபஸ் பெறுவது குறித்து அரசாங்கம் தீவிரமான கலந்தாலோசனைகளை மேற்கொண்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராகத் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை உண்மைப்படுத்தும்  வண்ணமாக சரத் பொன்சேகாவின் சாட்சியமும் அமைந்து விடலாம் என்றும் அரசாங்க உயர்மட்டத்தில் பாரிய அச்சமொன்று முளைவிட்டுள்ளது.அது குறித்து கடும் அச்சத்தில் இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ  வை அலரி மாளிகைக்கு வரவழைத்து அது தொடர்பில் கலந்தாலோசித்துள்ளார்.
அத்துடன் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடனும்  விஜயதாச ராஜபக்ஷ எம்.பி. க்கு சந்திப்பொன்றையும் ஏற்பாடு செய்துள்ளார். அதன்போது வழக்கை வாபஸ் பெறுவதாயின் அதற்குப் பகரமாக சரத் பொன்சேகா தனது நிபந்தனைகள் சிலவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோத்தாபய ராஜபக்ஷ நிபந்தனை விதித்துள்ளார்.ஆயினும் அவரது நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள சரத் பொன்சேகா தயாராக இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
சரத் பொன்சேகாவிற்கு ஓய்வு அவசியம் மருத்துவர்கள் - போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக பதிலளிக்கக் கூடிய ஒரே நபர் சரத் பொன்சேகாவே. ஐ.தே.க.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு ஓய்வு அவசியம் எனமருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றஉறுப்பினர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் சரத் பொன்சேகா ஓய்வில் இருக்க வேண்டுமெனவலியுறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 


தற்கொலை குண்டுத் தாக்குதலினால் சுவாசப்பைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்இதனால் புழுதியற்ற தூய்மையான சிறைச்சாலை அறையொன்று சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்படவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக சரத் பொன்சேகா உடல் நிலைபாதிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.மருத்துவர்களின் அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்து சலுகைகளைப்பெற்றுக் கொள்ள உத்தேசித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக பதிலளிக்கக் கூடிய ஒரே நபர்சரத் பொன்சேகாவே – ஐ.தே.க


போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக பதிலளிக்கக் கூடிய ஒரே நபர்முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றஉறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்லா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக சரத்பொன்சேகாவினால் பதிலளிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு தலைமை தாங்கியவர்என்ற ரீதியில் பொறுப்புணர்ச்சியுடன் உண்மைகளை எடுத்துக் கூறக்கூடிய ஆற்றல் சரத்பொன்சேகாவிடம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.


சரத் பொன்சேகா ஓர் அரசியல் கைதியாகவே சர்வதேச சமூகத்தினால்நோக்கப்படுகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ஷ அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலோசனை உதாசீனம்செய்வது முட்டாள்தனமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் உணர்வுகளை தூண்டக் கூடிய வகையில் செயற்படாது யதார்த்தமாகஇந்தப் பிரச்சினைக்கு முகம்கொடுக்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அவர்வலியுறுத்தியுள்ளார்.

ஊழல் சொத்துக்களை மீளக் கையளித்தார் ஹோஸ்னி முபாரக்கின் மனைவி!

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட, எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் மனைவி சுசேன் முபாரக் தனது சொத்துக்களை மீளக் கையளித்துள்ளார்.எகிப்திய தலைநகர் கெய்ரோவில் உள்ள villa ஒன்று உட்பட சுமார், 3.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான சொத்துக்களை, அவரது இரண்டு வங்கிகணக்கு மூலம், நீதிமன்றில் அவர் சமர்ப்பித்தார்.

இதையடுத்து, அவரை 15 நாடுகளுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு ஊழல் தடுப்பு சட்டக்குழுவினர் உத்தரவிட்டுள்ளனர். சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எகிப்தின் அதிபராக இருந்த ஹோஸ்னி முபார்க, கடந்த பெப்ரவரி 11ம் திகதி பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டதிலிருந்து, தனது மனைவி, இரு பிள்ளைகளுடன் ஊழல் குற்றச்சாட்டு பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருடைய குடும்ப சொத்துக்கள் முடக்கப்படும் வரை வேறெந்த நாடுகளுக்கு செல்லவும் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷார்ம் எல் ஷேய்க்கில் உள்ள ரெட் சீ விருந்தினர் மாளிகை உட்பட அவருடைய மொத்த சொத்துக்கள்,சுமார் 36 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியாக இருக்கலாம் என கணிப்பிடப்பட்டுள்ளது. 

சவுதி அரேபிய தூதரக அதிகாரி பாகிஸ்தனில் சுட்டுக் கொலை!

பாகிஸ்தான் கராச்சி நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் முன்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் கராச்சியில் இன்று சவுதி அரேபிய தூதரக அதிகாரி ஹசன் அல்கதானி அடையாளம் தெரியாத மர்ம மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்து இந்த தாக்குதலை நடத்தினார்கள். 


இஸ்லாமாபாத்தில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டதை உறுதி செய்தது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இது வரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தானில் உள்ள சவுதி அரேபிய தூதரக அதிகாரிகளுக்கு சரியான பாதுகாப்பை அளிக்குமாறு சவுதி அரேபிய வெளியுறவு இணை மந்திரி பாகிஸ்தான் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
பின்லேடனுக்கு உதவிய சகோதரர்கள் கைது.
பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பின்லேடன் அமெரிக்க ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.அவருடன் அந்த வீட்டின் உரிமையாளர்கள் அர்சத்கான், தாரிக்கான் ஆகியோரும் உயிரிழந்தனர். பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து அவருடன் தொடர்பு வைத்திருந்தவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்து வருகிறது.
இந்நிலையில் சைபர்- பக்துன்சவா மாகாணத்தின் ஷாங்லா மாவட்டத்தில் மார்டஸ் அருகே உள்ள கோட் காய் என்ற கிராமத்தை சேர்ந்த அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது பெயர் ஷியா உல்ஹக்(24), மற்றும் ரசூல்ஹசன்(22).
இவர்கள் வீட்டின் உரிமையாளர்கள் அர்ஷத்கான், தாரிக்கான் ஆகியோர் மூலம் பின்லேடனுக்கு உதவி வந்தனர். இவர்கள் 2 பேரும் பல ஆண்டுகளாக குவைத்தில் தங்கியிருந்தனர். சமீபத்தில் தான் இவர்கள் பாகிஸ்தான் வந்தனர்.
சீன முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத பயிற்சி: விக்கிலீக்ஸ் அதிர்ச்சித் தகவல்.
எந்த சூழலிலும் நண்பர்களாக இருப்போம் என்று வாக்குறுதி அளித்த சீனாவுக்கு எதிராக அந்நாட்டு உய்குர் முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் தனது மண்ணில் பயங்கரவாத பயிற்சி அளித்துள்ளது.சீனாவின் மிகப் பெரிய மேற்கு மாகாணமான ஷிங்ஜியாங், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவை பாகிஸ்தான் நாடுகளின் எல்லையை தொட்டுக் கொண்டிருக்கும்.
இம்மாகாணத்தில் முஸ்லிம்களின் பெரும்பான்மையைக் குறைக்கும் நோக்கத்தில் சீன அரசு "ஹான்" இனத்துச் சீனர்களை அதிகளவில் ஷிங்ஜியாங்கில் குடியேற்றியது. இதனால் இரு இனங்களுக்கும் இடையில் அடிக்கடி கலவரம் நடக்கும் சமயத்தில் கலவரம் மோதலாகக் கூடமாறிவிடும்.
இந்நிலையில் சமீபத்தில் விக்கிலீக்ஸ் இணையதளம் கியூபாவில் செயல்பட்டு வரும் அமெரிக்காவின் கொடும் சிறைச்சாலையான "குவான்டனாமோ" பற்றிய 700க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை வெளியிட்டது. அதில் சீனாவுக்கு எதிராக ஷிங்ஜியாங் பகுதி பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றது தெரியவந்துள்ளது.ஷிங்ஜியாங்கை சீன அரசிடம் இருந்து பிரித்து கிழக்கு துருக்கிஸ் தான் என்ற பெயரில் தனி நாடாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், "கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம்" என்ற இயக்கம் செயல்பட்டு வருகிறது.
சீன, அமெரிக்க அரசுகளாலும், ஐ.நா.வாலும் இந்த இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கும் இவ்வியக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பலர் பாகிஸ்தான்-ஆப்கன் எல்லை வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதப் பயிற்சி பெற்றுள்ளனர்.
குவான்டனாமோ சிறையில் உள்ள உய்குர் இனத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளில் 22 பேரின் ரகசிய ஆவணங்கள் விக்கிலீக்சால் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அவர்களில் பெரும்பான்மையோர் பாகிஸ்தானில் பிடிபட்டவர்கள். பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சிகள் பெற்றதாக இவர்களின் சிறை விவரப் பட்டியல்கள் தெரிவிக்கின்றன.சீன அரசுக்கு எதிராக சீன குடிமக்களில் ஒருசாராரைத் தூண்டிவிடுதலும், அவர்களுக்கான பயங்கரவாதப் பயிற்சிகள் கொடுக்கப்படுதலும் பாகிஸ்தான் மண்ணில் தான் நடக்கிறது என்பது தான் தற்போது சீனாவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.
கடாபி வீடு அருகே அடுத்தடுத்து குண்டு மழை.
நேட்டோ படைகள் வான்வழித் தாக்குதலை நிறுத்தினால் போர் நிறுத்தம் மேற்கொள்ள தயாராக உள்ளதாக கடாபி தெரிவித்து உள்ளார்.போர் நிறுத்தத்தை அறிவிக்க கடாபி தயாரானாலும் அவரை கைது செய்வதற்கான வாரண்டை பெற சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் தலைமை விசாரணையாளர் விண்ணப்பித்துள்ளார்.
லிபிய தலைநகர் திரிபோலியில் கடாபி வீடு அருகே உள்ள அல் அசிசியா பகுதியில் செவ்வாய்க்கிழமை 2 குண்டு வெடிப்புகள் ஏற்பட்டன. இந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து வெள்ளை நிற புகை அந்த பகுதியில் பரவியது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கும், 11.30 மணிக்கும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தது.
திரிபோலிக்கு புறநகர் பகுதியிலும் நேட்டோ படைகள் தங்களது தாக்குதலை துவக்கின. இந்த தாக்குதலில் லிபிய ராணுவத்தின் ரேடார் மையங்கள் அழிக்கப்பட்டன.ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொல்வதற்கு காரணமாக உள்ள கடாபி, அவரது மகன் செய்ப் அல் இஸ்லம், புலனாய்வுத் துறை தலைவர் அப்துல்லா செனுசி ஆகியோரை மனித இனத்திற்கு எதிரான குற்ற நிகழ்வுகளுக்காக கைது செய்ய வாரண்ட கோருகிறோம் என விசாரணயாளர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் அத்து மீறி தாக்குதல் நடத்திய நேட்டோ படைகள்.
பாகிஸ்தானின் வடக்கு வாஜிரிஸ்தானில் நேட்டோ ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தாக்குதல் நடத்தியதில் 2 வீரர்கள் காயமடைந்தனர் என அந்நாட்டின் உளவுப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.இது பாகிஸ்தானுக்கும், மேற்கு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இன்று காலை இந்த சம்பவம் நடந்ததாக பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும் தனது பெயரை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
தத்தா ஹெல் பகுதியில் எல்லையில் உள்ள பாகிஸ்தான் சோதனைச்சாவடி மீது நேட்டோ ஹெலிகாப்டர் தாக்குதல் நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.தாக்குதல் நடந்த இடத்தை நோக்கி வடக்கு வாஜிரிஸ்தானின் முக்கிய நகரான மிரன்ஷாவில் இருந்து ஏராளமான பாகிஸ்தான் ஹெலிகாப்டர்கள் புறப்பட்டுச் சென்றதாக மற்றொரு உளவுத்துறை அதிகாரி தெரிவித்தார். இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இதுபோன்ற சம்பவம் நடந்ததாக கூட்டுப் படையினருக்கு தகவல் வரவில்லை எனினும் விசாரித்து வருகிறோம் என ஆப்கானிஸ்தானில் உள்ள மேற்கத்திய படைகளின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.கிழக்கு ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்துவதற்கு வடக்கு வாஜிரிஸ்தானையே பயங்கரவாதிகள் களமாக பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்கா கடந்த ஆண்டு இந்த பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
100 ஆண்டுகளுக்கு பின்னர் அயர்லாந்தில் பிரிட்டன் அரசக் குடும்பம்.
பிரிட்டன் ராணி வரலாற்று சிறப்பு மிக்க அயர்லாந்து பயணத்தை மேற்கொள்கிறார். கடந்த 100 ஆண்டுகளில் பிரிட்டிஷ் அரச குடும்பம் மேற்கொள்ளும் முதல் அயர்லாந்து பயணம் இதுவாகும்.ராணியாருடன் எடின்பர்க் டியூக்கும் செல்கிறார். அவர்கள் டப்ளினை அடைகிறார்கள். ஐரிஷ் கடலின் இருபகுதி அரசியல் தலைவர்களும் ராணியின் 4 நாள் நிகழ்ச்சி நினைவு கூரத்தக்கது என்றனர். பிரிட்டன் அரசக் குடும்பத்தினருக்காக 262 லட்சம் பவுண்ட் மதிப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தரை கடல் மற்றும் வான்வழிகளில் பாதுகாப்பு ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரிட்டன் அரசக் குடும்பத்தினர் வருகையை கண்டித்தும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு கோஷம் எழுப்பி உள்ளனர். ராணியின் வருகையால் அயர்லாந்து-பிரிட்டன் உறவு மேலும் மேம்படும் என இருநாடுகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் ராணி பயணத்தில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் புதன்கிழமை இணைந்து கொள்கிறார். பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம்ஹாக்கும் அரசக் குடும்பத்துடன் செல்கிறார்.அயர்லாந்து ஜனாதிபதி மேரி மெக்லீஸ் அளித்த பேட்டியில்,"அயர்லாந்து வரலாற்று நிகழ்வில் பிரிட்டன் ராணியின் பயணம் மிகச்சிறந்த நிகழ்வு ஆகும். அவரது வருகையால் இருநாடுகள் இடையே மிகச்சிறந்த செய்தியை அளிப்பதாக இருக்கும்" என்றார்.
சீனாவில் மிகப்பெரிய தங்க நாணயம் ஏலம்.
சீனாவின் மிகப்பெரிய தங்க நாணயம் ஏலம் விடப்பட்டது. இது 1.18 மில்லியன் டொலர் அளவுக்கு ஏலம் போனது.சீனாவின் சீன கார்டி‌யன் ஏலம் எனும் நிறுவனம் அந்நாட்டு அரசினால் கடந்த 2000ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய தங்கநாணயத்தை விலைக்கு வாங்கியது.
இந்த நாணயம் சுமார் 10 கிலோ எடை கொண்டது. 99.9 சதவீதம் தூய தங்கத்தினால் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இந்நாணயம் நேற்று ஏலம் விடப்பட்டது. 22 ரவுண்டுகளுக்கு பின் 1.18 மில்லியன் டொலர் ஏலம் போனது. இதன் உண்மையான மதிப்பு 30 ஆயிரம் யுவான் ஆகும்.
ஜேர்மனியில் நடைபெற்ற மோசமான பேருந்து விபத்து.
விடுமுறை தினத்தில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று குரோஷியாவுக்கு சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் காயம் அடைந்தனர். இந்த பேருந்து ஸ்லோவேனியன் சாலையில் திங்கட்கிழமை விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான பேருந்தில் மொத்தம் 36 குழந்தைகள் இருந்தனர். இவர்கள் 14 மற்றும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். இதைத் தவிர 5 பெரியவர்களும் பேருந்தில் இருந்தனர். லுப்லன்ஜாவுக்கு வடக்கே 30 கிலோ மீற்றர் தொலைவில் கிரன்ஜ்பகுதிக்கு அருகே வண்டி விபத்துக்குள்ளானது என்று ஸ்லோவேனியா ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பவேரியாவின் பாம்பெரிக் கவுண்டியில் இருந்து குரோஷியாவின் கிரக் தீவிற்கு 2 பேருந்துகளில் பள்ளிக் குழந்தைகள் பயணித்த போது ஒரு பேருந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.
இருப்பினும் இந்த விபத்திற்கு இதர வாகனங்களும் காரணமாக இருந்துள்ளன. விபத்து நடக்கும் போது பெரும்பாலான குழந்தைகள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால் அவர்கள்
பாதுகாப்பு பெல்ட்டுகளை அணியவில்லை என்று ஒரு ஸ்லோவேனிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து: 4 வீரர்கள் காயம்.
தெற்கு ஆப்கானிஸ்தானில் மோசமான வானிலையில் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 4 கனேடிய வீரர்கள் காயம் அடைந்தனர்.திங்கட்கிழமை 25 வீரர்கள், 5 ஊழியர்கள் மற்றும் ஒரு கனேடிய நிருபருடன் பயணித்த இடுசினூக் ஹெலிகாப்டர் பஞ்ச்வாலி மாவட்டத்தில் தண்ணீர் இல்லாத ஆற்றுப் படுகையில் தரை இறங்க முயன்றது.
இதில் ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்பு இல்லை. இருப்பினும் 4 வீரர்கள் காயம் அடைந்தனர். இதில் ஒருவருக்கு தீவிரக் காயம் ஏற்பட்டுள்ளது. இருட்டான விடுதியில் பைலட் தவறான கணிப்பின் காரணமாக தரை இறக்க முயன்ற போது ஹெலிகாப்டர் நொறுங்கியது.
ஹெலிகாப்டர் பாகங்கள் நொறுங்கியதும் எரிபொருள் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இதனால் இருக்கையில் இருந்தவர்கள் தப்பி பிழைக்க நெரிசலில் மோதிக் கொண்டனர்.விபத்து குறித்து குண்டு வீசும் நிபுணர் நிக் குர்டன் கூறுகையில்,"ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியதும் எரிவாயு கசிவு வாடை ஏற்பட்டது. இதனால் தீ பிடிக்கலாம் என்ற அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஹெலிகாப்டரில் தப்பிக்க நினைத்தேன்" என்றார்.
விபத்து இடத்திலேயே காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதர வீரர்களுடன் வந்த இரண்டாவது ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரை இறங்கியது. அவர்களது பயணம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த வீரர்கள் இன்னொரு வாகனம் மூலம் தங்கள் ராணுவ முகாம்களுக்கு சென்றனர்.
அணு ஆயுதங்களை தயாரிக்கும் திட்டத்தை தீவிரப்படுத்தியது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் பணியை மிகத் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.இதன் மூலம் புளூட்டோனியம் உற்பத்தியை அதிகரித்துள்ளது. இதற்காக நான்காவது அணு உலையை அமைத்து வருவதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வர்த்தக ரீதியிலான செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை "நியூஸ்வீக்" இதழ் வெளியிட்டுள்ளது. இஸ்லாமாபாத்திலிருந்து 140 கி.மீ தொலைவில் அமைந்துள்ள குஷாப் அணு மின் நிலையத்தில் நான்காவது அணு உலை கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த அணு உலை 2013ல் உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நான்காவது அணு உலையை அந்நாடு தன்னகத்தே கொண்டிருக்கும். இதன் மூலம் புளூட்டோனியம் உற்பத்தியை அதிகரித்துக் கொள்ளவும், அதைக் கொண்டு அணு ஆயுதத் திட்டத்தை அதிகரிக்கவும் அந்நாடு திட்டமிட்டுள்ளதாக அந்த இதழுக்கு பேட்டியளித்த நிபுணர்கள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான விரிசல் அதிகரித்துள்ள நிலையில் புளூட்டோனியம் தயாரிப்பை அதிகரிக்கும் பாகிஸ்தானின் திட்டம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை கருத்து எதையும் வெளியிடவில்லை. இருப்பினும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இது குறித்து கூறியதாவது: பாகிஸ்தான் ஏற்கெனவே 100க்கும் மேற்பட்ட அணுகுண்டுகளை தயாரித்து வைத்துள்ளது. ஆண்டுக்கு 8 முதல் 20 குண்டுகள் வரை அந்நாடு தயாரித்து வைத்துள்ளது.எனவே அந்நாடு அணுகுண்டுகளை அதிகரித்துக் கொள்வது என்ற முடிவு இப்போது எடுத்ததல்ல. பல ஆண்டுகாலமாக அணுகுண்டுகளை அந்நாடு தொடர்ந்து தயாரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானிடம் உள்ள அணுகுண்டுகளின் எண்ணிக்கை அதிகம். ஆனால் இதைப்பற்றி அந்நாடோ, அமெரிக்காவோ எவ்வித கவலையும் வெளியிடவில்லை என்று சர்வதேச அறிவியல் மற்றும் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த பால் பிரானன் தெரிவித்தார். பாகிஸ்தானைப் பொருத்தமட்டில் இந்த விடயத்தில் ஒரு குழப்பமான சூழலே நிலவுகிறது.இந்தியாவிலிருந்து அச்சுறுத்தல் என்று கூறி அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5,000 கோடி டொலர்களை செலவிட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரம் வெறுமனே இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான விவகாரம் என்று அமெரிக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாம்நுன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவும், ரஷியாவும் தங்களிடையிலான பனிப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து கடந்த காலங்களில் அணு ஆயுதங்களால் ஏற்படும் பேரழிவை உணர்ந்துள்ளன. இதைப்போல இந்தியா, பாகிஸ்தான் இடையே இப்போது மிகவும் பயங்கரமான காலகட்டம் நிலவுகிறது. அதிலிருந்து இரண்டும் கற்று உணர வேண்டும். அதற்காக அனைவரும் பாதிக்கப்படுவது ஏற்க முடியாதது என்று சாம்நுன் தெரிவித்தார்.
இப்போது உலகம் முழுவதுமான பார்வை மாறியுள்ளது. இந்த புவியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. அந்த வகையில் அணு ஆயுதங்கள் மிகவும் ஆபத்தானவை என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.அணுகுண்டுக்கான மூலப்பொருள் அல்லது அணுகுண்டுகளை தயாரித்து வைப்பது என்பது மிகவும் ஆபத்தான விடயம். மேலும் யுரேனிய சுரங்கம் அந்நாட்டில் உள்ளது. அதை செறிவூட்டும் நுட்பத்தை அந்நாட்டு விஞ்ஞானி ஏ.கியூ. கான் அளித்துள்ளார்.
ஜிகாதி குழுக்கள், லஷ்கர்-இ-தொய்பா குழுக்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் அடைக்கலம் அளித்திருப்பது கவலையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. அடுத்த 30 ஆண்டுகளில் பாகிஸ்தானின் அணு ஆயுத வளர்ச்சி எவ்விதம் இருக்கும் என்பதை ஆய்வு செய்து பார்த்த போது அது கவலையளிப்பதாகவும், மிகப்பெரிய அழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதையும் கணிக்க முடிவதாக சர்வதேச அளவில் உத்திகள் வகுக்கும் மையத்தின் இயக்குநர் ஷரோன் ஸ்குவாசோனி தெரிவித்துள்ளார்.
தூதரக அதிகாரி சுட்டுக் கொலை: தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பு.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் சவுதி அரேபிய தூதரகத்தின் வெளிப்புறத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அத்தூதரக அதிகாரி ஒருவர் பலியானார்.இச்சம்பவத்துக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பழிக்குப் பழி வாங்குவதற்காக பாகிஸ்தான், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்படும் என்று தலிபான்கள் அறிவித்திருந்தனர்.
அதன்படி முதலில் பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 80 பேர் பலியாயினர். தொடர்ந்து கராச்சியில் உள்ள சவுதி அரேபிய தூதரக அலுவலகத்தின் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் யாரும் பலியாகவில்லை.
இந்நிலையில் நேற்று சவுதி அரேபிய தூதரக அதிகாரி ஒருவர் தனது காரில் அலுவலகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். அலுவலகத்திற்குள் நுழைய இன்னும் 200 அடிகளே இருந்த நிலையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் அவரது காரை நோக்கிச் சுட்டனர்.அதில் ஒரு குண்டு அதிகாரியின் தலையில் பாய்ந்து அவரது உயிரைக் குடித்தது. "இச்சம்பவத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. எனினும் வரவேற்கிறோம்" என்று முதலில் அறிக்கை விட்ட தலிபான்கள் பின்னர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்," பாகிஸ்தான் மற்றும் சவுதி இரண்டும் அமெரிக்காவின் அடிமைகள். இத்தாக்குதல் சரியாக நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளனர்.இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கான சவுதி தூதர் அப்துல் அஜிஸ் அல் காதிர் மற்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானும் சவுதியும் நீண்ட நாள் நண்பர்கள். சவுதி அமெரிக்காவின் நட்பு நாடு.
ஒசாமா கொல்லப்பட்ட பின் சவுதியிடம் இருந்து அனைத்து விதமான ஆதரவுகளையும் பாகிஸ்தான் கோரியுள்ளது. சவுதியும் அதற்குச் சம்மதித்துள்ளது. பாகிஸ்தான் உடனான சவுதியின் கொள்கை இப்போது சவுதியை திருப்பி அடித்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.பாகிஸ்தானில் உள்ள சில மதவாத அமைப்புகளுக்கு சவுதி நிதியுதவி அளித்து வந்தது. அதிலிருந்து பயங்கரவாதிகள் உருவாயினர். இப்போது அது சவுதியையே திருப்பித் தாக்குகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
லண்டன் போய்ஸ் என்ற பெயரில் செயற்படும் புதிய பயங்கரவாத பிரிவு.
பிரிட்டனில் "லண்டன் போய்ஸ்" என்ற பெயரில் ஒரு பயங்கரவாதப் பிரிவு செயற்படுகின்றது. நேற்று தான் இது குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.பின்லேடன் கொல்லப்பட்டமைக்கு இந்தக் குழு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று அஞ்சப்படுகின்றது. இந்த நான்கு பேர்களும் சோமாலியாவின் மொகதிஸுவில் ஒரு முகாமில் சிரேஷ்ட அல்கொய்தா வெடி குண்டு நிபுணர் ஒருவரால் பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் 2007ல் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் இவர்கள் அப்பாவிகள் எனக் கருதி பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு தலா 50 அயிரம் பவுண்ட் செலவில் இவர்களை அங்கிருந்து காப்பாற்றியது.
லண்டன் மெட்ரோபொலிடன் பொலிஸாரும் இவர்களை விசாரித்த பின் குற்றங்கள் எதுவும் இல்லையென்று விடுவித்தனர். ஆனால் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களின் பிறகே இவர்கள் பற்றிய புதிய விவரங்கள் வெளியாகியுள்ளன. இது பற்றி வெளியுறவு அமைச்சு தகவல்கள் எதையும் தெரிவிக்கவில்லை.
தனது கடைசி பயணத்தை வெற்றிகரமாக தொடங்கிய எண்டவர் விண்கலம்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து எண்டவர் விண்கலம் திங்கள்கிழமை புறப்பட்டது.ஆறு விண்வெளி வீரர்களுடன் எண்டவர் விண்கலம் விண்வெளியிலுள்ள சர்வதேச ஆய்வு மையத்துக்குத் தேவையான 2 பில்லியன் டொலர் மதிப்பிலானப் பொருட்களை எடுத்து செல்கிறது.
16 நாட்களுக்கு பிறகு அது பூமிக்கு திரும்பும். 25 முறை விண்ணுக்குச் சென்று திரும்பியுள்ள எண்டவருக்கு இதுவே கடைசி பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணத்திற்கு பிறகு அதற்கு ஓய்வு கொடுக்க நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது.இது எண்டவர் விண்கலத்தின் கடைசி பயணம் என்பதால் அது விண்ணுக்கு செலுத்தப்படுவதை காண கென்னடி விண்வெளி மையத்துக்கு 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வந்திருந்தனர். கடந்த மாதம் எண்டவர் விண்கலத்தை செலுத்த முயன்ற போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF