Tuesday, May 10, 2011

இன்றைய செய்திகள்.

பான் கீ மூனைக் கொல்வதற்கு இருபத்தி ஐந்து தற்கொலைக் குண்டுதாரிகள் களனியில்: அமைச்சர் மோ்வின் சில்வா.

பான் கீ மூன் அல்லது வேறு யாரேனும் சர்வதேச சக்திகள் இலங்கையில் தலையிட முயன்றால் அவர்களைக் கொலை செய்ய இருபத்தி ஐந்து தற்கொலைக் குண்டுதாரிகள் களனியில் தயாராக இருப்பதாக அமைச்சர் மோ்வின் சில்வா எச்சரித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இரத்தக் கையொப்பங்களைச் சேகரிக்கும் நிகழ்வொன்றை இன்று கண்டியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மோ்வின் சில்வா  மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கு நான் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் தலையிட முற்படாதீர்கள். அவ்வாறு தலையிட முற்பட்டால் அது எந்த சர்வதேச விசாரணைக்குழுவாக இருந்தாலும் அவர்களைப் படுகொலை செய்ய இருபத்தி ஐந்து தற்கொலைக்குண்டுதாரிகள் தற்போதைக்குக் களனியில் தயாராக இருக்கின்றனர்.
நிபுணர்குழுவின் தலைவர் தருஸ்மான் தாயொருவரின் வயிற்றில் இருந்து பிறந்தவராக இருக்க முடியாது. அவர் நிச்சயமாக விலங்கொன்றின் வயிற்றில் இருந்து பிறந்தவராகத் தான் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் மோ்வின் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு – தூத்துக்குடிக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பம்.

கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும்  இடையிலான பயணிகள் கப்பல்சேவை இன்று ஆரம்பமாகவுள்ளதாக  துறைமுகங்கள், விமானசேவைகள் அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. தூத்துக்குடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 500 பயணிகளுடன் இன்று கொழும்பு நோக்கிப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும்  இடையிலான பயணிகள் கப்பல்சேவை தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள்  மே மாதம் 2 ஆம் திகதி  தொடக்கம் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வந்ததைத் தொடர்ந்து  பயணிகள் பலரும் கப்பலில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.இதன் முதற்கட்டமாக வாரத்தில் மூன்று கப்பல் சேவைகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும்  இடையிலான 152 கடல் மைல் தூரத்தை இந்தப் பயணிகள் கப்பல் சுமார் 10 - 12 மணி நேரத்தில் கடக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்துலக சமூகத்துடன் இலங்கை ஒத்துழைக்க வேண்டும்! பிரான்ஸ்.

ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கைக்கு அனைத்துலக சமூகத்துடன் இலங்கை இணைந்து செயற்பட வேண்டும் என்று பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அமைத்த நிபுணர்குழுவின் பரிந்துரைகளுக்கு பிரான்ஸ் பூரண ஆதரவை வழங்கும்.

நிபுணர்குழுவின் அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறியமை தொடர்பாக சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு தெரிவித்ததைப் போல் அனைத்துலக சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம் என்று பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை இலங்கை அரசாங்கம் அமைத்துள்ளது. இந்த ஆணைக்குழுவும், ஐ.நா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவும் முக்கியமானவை. எனவே இலங்கை அரசாங்கம் இன நல்லிணக்கம் ஏற்பட முயற்சிக்க வேண்டும் என்று பிரான்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை தனக்குரிய கடப்பாடுகளை மறந்துவிடவில்லை! ரவூப் ஹக்கீம்

இலங்கை மனிதாபிமான விடயங்களை மதிக்கவும் நிறைவேற்றவும் தனக்குள்ள கடப்பாட்டை மறந்துவிடவில்லை என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஆட்கடத்தல் மற்றும் இலாப நோக்கிலான மனித கடத்தல் தொடர்பான பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

ஹில்டன் ஹோட்டலில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கதி குளுமன், மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் சுஹதா கல்மத் ஆகியோர் கலந்து கொண்டனர். இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை ஆராய வேண்டுமெனக்கோரும் ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட நிபுணர்குழு அறிக்கையை எதிர்த்த போதும், மனிதாபிமான விடயங்களை மதிக்கவும் நிறைவேற்றவும் தனக்குள்ள கடப்பாட்டை மறந்துவிடவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார். 

ஒவ்வொரு நாடும் தம் உள்நாட்டு பிரச்சினையில் தாம் கைக்கொண்ட வழிமுறைகளை மீள்பார்வைக்கு உட்படுத்தி சுயவிமர்சனம் செய்யவேண்டும் என்பதில் எமக்கு உடன்பாடு. எனினும் குற்றம் சுமத்தும் போது பாரபட்சம் காட்டக்கூடாது. சுயவிமர்சனம் எம்மைப் போன்ற சிறிய நாடுகளுக்கு மட்டுமன்றி வல்லரசு நாடுகளுக்கும் பொருந்தும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். இலங்கையில் ஆட்கடத்தல் மற்றும் இலாப நோக்கிலான மனித கடத்தல் தொடர்பான பயிற்சிப்பட்டறை தொடர்ந்து மே மாதம் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

யாழ் முஸ்லீம்களின் வாக்குரிமை அகற்றப்பட்டது!

யாழ் மாவட்டத்தில் வாக்களிக்கத் தகுதியானவர்களின் எண்ணிக்கை 430, 000 ஆக குறைந்துள்ளதாக சிறீலங்கா தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 90 வீதமான யாழ் குடா நாட்டு முஸ்லீம் சமூகத்தினரின் வாக்குரிமைகள் யாழ் குடா நாட்டில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்களைத் தொடர்ந்தே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 


முன்னர் 815, 000 வாக்களர்களை கொண்டிருந்த யாழ் மாவட்டத்தில் தற்போது 430, 000 வாக்காளர்களே உள்ளதாக தேர்தல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இவர்களில் 90 வீதமான முஸ்லிம்கள் யாழ்பாணத்தில் இருந்து புலிகளால் வெளியேற்றபட்டவர்கள் ஆவர். வாக்காளர் பதிவில் புதிதாக 90, 000 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பலர் இராணுவத்தினர் மற்றும் இராணுவத்தினரின் குடும்பஸ்தர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
பயங்கரவாதத்தை தோற்கடித்த இலங்கையின் அனுபவங்கள்! பகிர்ந்து கொள்ள ஐம்பத்தி ஐந்து நாடுகளுக்கு அழைப்பு.

பயங்கரவாதத்தைத் தோற்கடித்த இலங்கையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஐம்பத்தி ஐந்து நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் அனுபவங்களைக் கொண்டு "பயங்கரவாதத்தைத் தோற்கடித்த இலங்கையின் அனுபவங்கள்" எனும் தலைப்பிலான கருத்தரங்கொன்றை இராணுவம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்போது விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்திற்குத் தலைமைதாங்கிய முப்படை அதிகாரிகளும் தங்கள் அனுபவங்களைச் சர்வதேச நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளனர். நாட்டில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின் முப்படை அதிகாரிகள் நடாத்தும் முதலாவது கருத்தரங்கு அதுவாகும் என்று இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இம்மாதம் 31ம் திகதி தொடக்கம் ஜுன் மாதம் இரண்டாம் திகதி வரை நடைபெறவுள்ள பிரஸ்தாப கருத்தரங்கில் பங்கு கொள்ளுமாறு ஐம்பத்தி நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவல அறிவிக்கின்றார்.கருத்தரங்கில் கலந்து கொள்வது தொடர்பில் தற்போதைக்கு முப்பத்தியொரு நாடுகளின் இராணுவ  அதிகாரிகள் தங்கள் வருகையை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக சில தரப்பினர் போலியான தகவல்களை முன்வைக்கின்றனர்: ஜனாதிபதி
விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக சிலர் போலியான தகவல்களை முன்வைப்பதாக  ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.அத்துடன் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொது மக்கள் கொல்லப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  அலரி மாளிகையில் இன்று காலை நடைபெற்ற இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவன பிரதானிகளுடனான சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் அப்பாவி பொதுமக்கள் மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து மக்களை மீட்டெடுக்கும் நோக்கில் படையினர் மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளையே மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மனித உரிமை மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தொடர்பில் இலங்கை இராணுவப் படையினருக்கு போதியளவு விளக்கம் வழங்கப்பட்டுள்ளதுடன் ஒழுக்கமான முறையில் படையினர் யுத்தத்தை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையின் இராணுவத்தினர் மனிதாபிமான சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே யுத்தத்தை மேற்கொண்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக சில தரப்பினர் போலியான தகவல்களை வழங்கி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.இதற்கிடையே உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பதவிக் காலத்தை மேலும் ஆறு மாத காலத்திற்கு நீடிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இந்த மாதம் 15ம் திகதி முடிவடையவிருந்தது.  எனினும் பாரியளவு சாட்சியங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் அவற்றை ஆய்வு செய்து அறிக்கை தயாரிப்பதற்கு சில காலம் தேவைப்படுவதாகவும் ஆணைக்குழு கோரிக்கை விடுத்திருந்தது.பதவிக் காலத்தை நீடிக்குமாறு ஆணைக்குழு ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரியிருந்ததாக ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஸ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐ நா அறிக்கை குறித்து ஜனாதிபதி மீண்டும் விமர்சனம்.
இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மூத்த செய்தியாளர்களுடனான சிற்றுண்டி சந்திப்பை மேற்கொண்ட சமயத்தில் ஐ.நாவின் அறிக்கையை விமர்சித்தார். மே 1 ஆம் தேதி நடைபெற்ற பேரணியிலும் இந்த அறிக்கையை ஜனாதிபதி விமர்சித்திருந்தார்.இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா வின் பொதுச் செயலருக்கு ஆலோசனை கூற அமைக்கப்பட்ட நிபுணர் குழு தனது அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.போரின் போது அரச படையினரும் - புலிகளும் மனித உரிமை மீறல்களைப் புரிந்ததாக ஐ.நா அறிக்கை தெரிவித்திருந்தது.
ஆனால், விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பால் மனித கேடயமாக பிடித்து வைக்கப்பட்டிருந்த பொது மக்களை பாதுகாப்பு படையினர் மீட்டதாகவும் அதனால்தான் இந்த படை நடவடிக்கை மனித நேய நடவடிக்கையாக கூறப்படுகிறது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.தம் வசமிருந்த பகுதியிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற 600 பொதுமக்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் கூறியதை ஐ.நா நிபுணர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
உண்மை நிலவரங்களை நட்பு நாடுகளுக்கு தெரியப்படுத்துவோம் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். ஒரு பொதுமகன் கூட மோதல்களில் கொல்லப்படக் கூடாது என்பதற்காக படையினருக்கு மனித உரிமைகள் குறி்த்து பாடம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஐ.நாவின் அறிக்கையில் இலங்கை அரசு மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக வழமை போல இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் கருத்துக்களை தெரிவிக்காத நிலையில் - பிற நாடுகளின் ஆதரவை கோரிப் பெற வேணடிய நிலையில இலங்கை அரசு தற்போது இருப்பதாக நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதே நேரம் மனித நேய நடவடிக்கை என்று தனது போர் நடவடிக்கைகளை இலங்கை அரசு வர்ணித்துக் கொண்டாலும் -- போர் தொடர்பான செய்திகளை தடை செய்ய அது தன்னால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.போர் பகுதிக்கு செல்ல செய்தியாளர்களுக்கு இலங்கை அரசு தடைவிதித்தது. அங்கிருந்த சர்வதேச மற்றும் உள்ளூர் மனிதநேயப் பணியாளர்களையும் அப் பகுதியில் இருந்து வெளியேற்றியது. இச் செயல்களும் வெகுவாக சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் பின்லேடனின் மனைவிகள்.
அல்கொய்தா தலைவர் பின்லேடனுக்கு 3 மனைவிகள் உள்ளனர். அவர்கள் மூலம் பின்லேடனுக்கு 11 குழந்தைகள் பிறந்தனர்.அமெரிக்க ராணுவம் கடந்த 2ந் திகதி அபோதாபாத் நகரில் அதிரடி தாக்குதல் நடத்திய போது பின்லேடனுடன் 3 மனைவிகள், 11 மகன்கள், மகள்கள் உடன் இருந்தனர்.
பின்லேடன் சுட்டுக் கொல்லப்படும் முன்பு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவரது ஒரு மகன், ஒரு மகள் அமெரிக்க வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்லேடனின் மனைவிகளில் இளம் மனைவி ஒருவர் மட்டும் பின்லேடனை காப்பாற்ற ஓடினார். அவரது காலில் ராணுவ வீரர்கள் சுட்டனர். இதனால் அவர் மயங்கி விழுந்து விட்டார்.பெண்கள், சிறுவர், சிறுமிகள் மீது துப்பாக்கியால் சுடுவதைத் தவிர்த்த அமெரிக்க ராணுவத்தினர் அவர்கள் அனைவரையும் விசாரணைக்காக தங்களுடன் ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல திட்டமிட்டனர்.ஆனால் எதிர்பாராதவிதமாக ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் அவர்களது திட்டம் தோல்வியில் முடிந்தது. எனவே அவர்கள் பின்லேடன் உடலையும் அவரது மகன் உடலையும் மட்டும் எடுத்துச் சென்றனர்.
பின்லேடன் பயன்படுத்திய பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் பின்லேடனின் மனைவிகளையும் மகன், மகள்களையும் விட்டுச் சென்று விட்டனர்.அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி சென்ற பிறகே அந்த பங்களாவுக்கு பாகிஸ்தான் ராணுவம் சென்றது. அங்கு இருந்த பின்லேடனின் 3 மனைவிகள் மற்றும் குழந்தைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தற்போது அவர்கள் ராணுவ முகாம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் கமாண்டோ வீரர்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளனர். பின்லேடன் மனைவிகளிடம் விசாரணை நடத்த விரும்புவதால் அவர்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.ஆனால் பின்லேடன் உறவினர்கள் யாரையும் ஒப்படைக்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பின்லாடன் மரணத்தை ஏற்ற அல்கய்தா அடுத்த தலைவரைத் தெரியும் பணியில்!
தமது தலைவர் பின்லாடனின் மரணத்தை ஏற்றுக் கொண்ட அல்கய்தா அமெரிக்கர்களின் ஆனந்தம் துண்பமாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் அறிவித்துள்ளது. அத்தோடு தமது அமைப்பை உறுதியோடு கொண்டு செல்ல அடுத்த தலைவரைத் தெரிவுசெய்யும் பணியில் இறங்கியுள்ளது.அல்கய்தாவின் அடுத்த தலைவராக எகிப்தியரான டாக்டர் ஐமான் அல்ஸவாரியே நியமிக்கப்படலாம் என்றே பல ஊடகங்களும் ஹேஸ்யம் வெளியிடுள்ளன. டாக்டர் ஐமான் அல்ஸவாரி உலகில் தேடப்படும் 10 மிக முக்கியமான நபர்களில் ஒருவர் என்பதும் அவரைக் கைது செய்யக்கூடிய தகவல்களைக் கொடுப்பவர்களுக்கு 25 மில்லியன் டொலர்கள் தருவதாக அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ளது.
அரபு மற்றும் பிரெஞ்சு மொழியில் அதீத புலமையுள்ள டாக்டர் ஜமான் அல்ஸவாரியிடம் அல்கய்தா இயக்கத்திற்கு இளைய தலைமுறை முஸ்லீம்களைக் கவர்ந்திழுக்கும் ஈர்ப்புத் திறன் ஒசாமா அளவிற்கு இல்லையென்ற கருத்தும் பலமாக முன்வைக்கப்படுகிறது.
எனினும் ஒசாமாவிற்கு அடுத்த இலக்காக அமெரிக்க மேற்கத்தைய புலனாய்வுத்துறைகள், படைகளால் தேடப்படும் டாக்டர் ஜமான் அல்ஸவாரி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு சிலகாலங்களிற்கு தலைமறைவாகவோ அல்லது மிகவும் குறைந்தளவிலோயே செயற்படுவார் என்றும் மற்றைய அல்கய்தா தலைவர்கள் முன்னணிக்கு நகர்த்தப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
அமெரிக்காவில் பிறந்த இஸ்லாமிய மதபோதகரான அன்வார் அவ்லாகி கூட இப்படி முன்னணிக்கு வரலாம் எனக் கருதப்படுகிறது. இவரைக் குறிவைத்து அமெரிக்க ஆளில்லாத விமானம் கடந்தவாரம் யெமான் நாட்டில் கடந்த வாரம் தாக்குதலை மேற்கொண்டது. அந்தத் தாக்குதலில் அவர் மயிரிழையில் தப்பிக் கொண்டார். இவர் ஆங்கிலத்திலும் அரபிலும் பேசவல்லவர் என்பதும் இவரது அரபு மொழிநடை மற்றவர்களைக் கவரும் ஒன்று எனவும் கூறப்படுகிறது.இதுபோன்றே அனாஸ் அல்லிபி என்ற லிபியரும், இல்யாஸ் காஸ்மீரி என்ற பாகிஸ்தானியரும் கூட பின்லாடனின் இடத்தை நிரப்பக்கூடியவர்களாக கருதப்படுகிறார்கள்.
இதேவேளை அல்கய்தாவின் ஈராக்கிய முன்னணி டாக்டர் ஜமான் அல்ஸவாரி அல்கய்தாவிற்குத் தலைமை தாங்க தங்களின் ஆதரவினைத் தருவதாகக் கூறியுள்ளது. கடந்த காலங்களில் பின்லாடனும், ஜமான் அல்ஸவாரியும் ஈராக்கிய அல்கய்தா முன்னணி செய்ரி முஸ்லீம் பிரிவினரைத் தாக்குவதைத் கண்டிந்திருந்தனர். ஈராக்கிய அல்கய்தா சன்னி முஸ்லீம்;களிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தே இவ்வாறு செய்து வந்தது.இவ்வாறு தங்களது தலைமையை இழந்ததை ஏற்று அடுத்த கட்ட நடவடிக்கைக்காக முன்னேறிச் செல்வது அந்த அமைப்பு அழிவதைத் தடுத்து நிறுத்தும் என்றும் அதன் ஆதரவாளர்களை நிலைகுலையாமல் பார்க்கும் எனவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கியூபா மக்கள் வெளிநாடு செல்ல அரசு ஆலோசனை அனுமதி.
கியூபா மக்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளாக செல்ல, அனுமதிப்பது குறித்து, கியூபா அரசு ஆலோசனை செய்து வருகிறது.கடந்த 50 ஆண்டுகளாக, கியூபா மக்கள் தங்கள் சொந்த மண்ணில் இருந்து இதரநாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளாக சென்றுவர முடியவில்லை. கியூபாவில் கொம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெறுகிறது.
அங்கு 313 சீரமைப்பு மாற்றம் கொண்டு வர ஆலோசிக்கப்படுகிறது. இந்த சீரமைப்பு மாற்றங்களில் ஒன்றாக தங்கள் நாட்டுமக்கள், அயல்நாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளாக சென்றுவரவும் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.தற்போதைய சூழ்நிலையில் அயல் நாடுகளுக்கு செல்ல விரும்பும் கியூபா மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான வேண்டுகோள் மனுவை சமர்ப்பிக்க வேண்டும். இந்த வேண்டுகோள் மணு அரசால் நிராகரிக்கப்படும் நிலை உள்ளது.
1959ம் ஆண்டு கொம்யூனிஸ்ட் புரட்சி கியூபாவில் ஏற்பட்ட பின்னர், கியூபா அரசில் உயர் அதிகாரத்தில் உள்ளவர்களே அயல்நாடுகள் சென்று வர அனுமதிக்கப்படுகின்றன. கியூபா நாட்டு மக்களுக்காக வீடுகள் வாங்குவது மற்றும் விற்பது திட்டத்தையும் செயல்படுத்த அரசு ஆலாசித்துள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில், கியூபா மக்கள் சுய வேலை வாய்ப்பு நபராக உருவெடுக்க அரசு உரிமம் அளிக்கத் துவங்கியது.
2008ம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோவிடம் இருந்து, ஜனாதிபதி பொறுப்பேற்ற அவரது இளைய சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ புதிய கொள்கை மாற்றங்களை அறிவித்துள்ளார். ஹவானாவில் நபர் மாநாட்டில் பிடல் காஸ்ட்ரோ தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ கொள்கைகளுக்கு ஒப்புதல் அளித்தார்.
ஜோ்மனி முன்னாள் அமைச்சர் பிஎச்டி பெற திட்டமிட்டு மோசடி.
ஜோ்மனியின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் பி. எச் டி மருத்துவர் பட்டம் திட்டமிட்டே சில ஆய்வுகளை திருடினார் என்பது தெரிய வந்துள்ளது.ஆய்வுகளை திருடி புதிய அறிக்கைபோல் குட்டன்பொ்க் சமர்ப்பித்த விவகாசம் குறித்து பேருத் பல்கலைக்கழகம் விசாரணை நடத்தியது. இது குறித்து அந்தப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் முன்னாள் அமைச்சர் குட்டன்பொ்க் கல்வி விதிமுறைகளை மிக கடுமையாக மீறி உள்ளார்.
அவர் திட்டமிட்டே மோசடி செய்துள்ளார் என தெரிவித்துள்ளது. மருத்துவர் பட்டம் பெற மோசடி ஆய்வு அறிக்கை தயாரித்ததால் குட்டன்பொ்க் பதவி இழக்கும் நிலையும் ஏற்பட்டது. ஜோ்மனி அரசியலில் பிரபலமான அரசியல் தலைவராக வலம் வந்தவர்.எதிர்காலத்தில் ஜோ்மனி அதிபராகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளவர் என கருதப்பட்ட நிலையில், ஆய்வு அறிக்கை மோசடி அவரை அரசியலில் வீழ்ச்சி அடைய செய்துள்ளது. குட்டன்பொ்க் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருந்த நிலையில், அவரை தேர்தல் பிரகாரத்திற்கு அதிபர், ஏங்கலா மார்கெல் அழைக்கவில்லை.
இதனால் அவர் ஏங்கலா மார்கெலின் கிறிஸ்டியன் டெமாக்ரேட் கூட்டலில் எதிர்பாராதத் தோல்விகளைச் சந்தித்தது. குட்டன்பொ்க் பிரசாரத்தில் இல்லாததால் மாநிலத் தேர்தலில், தமது கூட்டணி தோல்வி அடைந்ததை ஏங்கலா மார்கெல்லும் உணர்ந்துள்ளார். பேருத் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை குட்டன்பொ்க்கின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக உள்ளது.
லிபியாவில் படகு மூழ்கியது: பல நூறுபேர் மரணம்.
லிபியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் உயிர் பிழைக்க படகில், தப்பிய பல நூறு பேர் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.லிபியாவில் கர்னல் கடாபிக்கு எதிராக பிப்ரவரி 15 ஆம் திகதி முதல் புரடசிப் போராட்டம் நடந்திருக்கிறது. லிபியா ராணுவத் தாக்குதலில் பல ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், உயிர் பிழைக்க 600 அகதிகள் படகில் ஏறி, ஐரோப்பாவை அடைய முயற்சித்தனர். இந்தப் படகு திடீரென கடலில் மூழ்கியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான புலம் பெயர்ந்தோர் தண்ணீரில் தத்தளித்தனர்.அவர்கள் உயிர் பிழைக்க முடியாமல் மூழ்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. படகில் இருந்தவர்கள் ராணுவ ஹெலிகொப்டர் மற்றும் நேட்டோ கப்பல் அடையாளம் கண்டபோதும், படகில் இருந்த 72 பேரில் 61 பேர் தண்ணீர் தாகம் மற்றும் உணவு இல்லாததால் இறந்தனர் என கார்டியன் நாளிதழ் கூறுகிறது.
லிபியாவில் இருந்து உயிர் பிழைக்க படகில் தப்பிய மக்கள் இத்தாலியின் லாம்பெடுகா தீவுக்கு வந்தபோது விபத்தில் சிக்கினர். லிபியா தலைநகர் திரிபோலியில் இருந்து புலம் பெயர்ந்து வந்த மக்கள் படகில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. திரிபோலியர் மார்ச் 25 ஆம் திகதி புறப்பட்ட சிறியப்படகு, எரிபொருள் இல்லாமல் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்லேடன் பதுங்கி இருந்தது எப்படி: பாகிஸ்தான் விசாரணை துவக்கியது.
பலத்த பாதுகாப்பு உள்ள அபோதாபாத் நகர் பகுதியில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்தது எப்படி என்பதை கண்டறிய பாகிஸ்தான் அரசு விசாரணையைத் துவக்கியது. இந்த விசாரணை அறிவிப்பை பாகிஸ்தான் பிரதமர் யூசப் ரசாகிலானி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் இந்த மே மாதம் 2 ஆம் திகதி, அபோதாபாத் நகரில், அமெரிக்கா சிறப்பு கொமாண்டோக்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் ராணுவ முகாமுக்கு அருகாமையிலேயே பின்லேடன் பதுங்கி இருந்தது அமெரிக்காவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.
தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் தொடர்பு உள்ளது என்றும், பாகிஸ்தான் பாதுகாப்புப் பிரிவு திறமையற்று உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகள் பாகிஸ்தான் பிரதமர் யூசப் ரசா கிலானி முற்றிலும் நிராகரித்தார். இந்த புகார்கள் அர்த்தமற்றது என்றும் இவர் கூறினார்.
பின்லேடனுடன் தொடர்புடைய, தீவிரவாத வலைப்பின்னல் குறித்து விசாரணை நடத்துமாறு பாகிஸ்தான் அரசை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வலியுறுத்தினார். பின்லேடன் நடமாட்டக் குறித்து, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு ஏற்கனவே தெரியுமா என்பது குறித்தும் அமெரிக்கா ஆய்வு செய்கிறது.
பின்லேடன் பதுங்குமிடம் குறித்து பாகிஸ்தானுக்கு தெரியாதது குறித்து லெப்டினட் ஜெனரல் ஜாவித் இக்பால் தலைமையில் விசாரணை நடைபெறும் என நாடாளுமன்றத்தில் கிலானி தெரிவித்தார்.பின்லேடன் அபோதாபாத் நகரில் இருந்தது குறித்து முழு விடயங்களையும் பெறுவோம் என கிலானி நம்பிக்கை தெரிவித்தார்.
தேசிய சுகாதாரச் சேவையில் மாற்றம்: தொழிலாளர் கட்சி கடும் எதிர்ப்பு.
தேசிய சுகாதாரச் சேவையில் பிரித்தானியா அரசு மாற்றம் கொண்டு வர முயற்சிப்பதை தொடர்ந்து அரசின் சீரமைப்பு திட்டத்திற்கு தொழிலாளர் கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.தேசிய சுகாதார சேவை திட்டத்தில் கொண்டு வரும் மாற்றம் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், நியாயமற்றதாகவும் உள்ளது என தொழிலாளர் கட்சியினர் கூறினர். லிபரல் டெமாக்ரேட் எம்பிக்கள் விமர்சனத்தை தொடர்ந்து குறிப்பிடத்தக்க மாற்றம் கொண்டு வருவதாக அமைச்சர்கள் உறுதியளித்தனர்.சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு மசோதா மூலம், தேசிய சுகாதாரச் சேவை பட்ஜெட்டுகளை ஜிபிக்கள் அதிகம் கட்டுபடுத்தும் வாய்ப்பு உள்ளது. இந்த மசோதா மூலம் தனியார் துறை பொது சுகாதாரத்துறையில் முக்கியப் பங்கு வகிக்கும்.
தொழிலாளர் கட்சியினரின் தீர்மானம் 284-231 என்ற வாக்கெடுப்பு நிலையில், தோற்கடிக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பில், அரசுக்கு 53 வாக்குகள் பெரும்பான்மை கிடைத்தது. அரசு சுகாதாரத் திட்டம் குறித்து, லிபரல் டெமாக்ரேட் எம்பிக்கள் கேள்வி எமுப்பியபோதும் எதிர்கட்சியினருக்கு இவர்கள் 20 பேர் வாக்களிக்கவில்லை. ஒருவர் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.சீரமைப்பு நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்பட்ட பின்னர், தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதியளித்தனர் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இந்த மசோதா பற்றிய விவாதம் நடந்தது.
திங்கட்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது ஜான் ஹீலே அரசிடம் வாதிடுகையில் தற்போதைய திட்டத்தை கைவிட வேண்டும். அவை பாதிப்பை ஏற்படுத்தும் நியாயமற்ற விடயமாகவும் உள்ளது என்றார்.அரசின் சீரமைப்பு நடவடிக்கை மருத்துவமனை நிர்வாகத்தை குறுகச் செய்துவிடும் என்றார். அவரது வாதத்திற்கு ஆதரவாக தொழிலாளர் எம்பிக்களும் சேர்ந்து கொண்டனர். தேசிய சுகாதாரச் சேவை திட்டத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது ஜீன்மாதம் மத்தியில் முடிவு எடுக்கப்படும்.
ஒசாமா பின் லேடனின் 3 மனைவிகளிடம் விசாரணை நடத்த அமெரிக்காவிற்கு அனுமதி.
பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் 3 மனைவிகளிடம் விசாரணை நடத்த அமெரிக்காவுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.இத்தகவலை அமெரிக்கவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பின் லேடனின் 3 மனைவிகள், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் உட்பட 16 பேர் தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு முதலில் பாகிஸ்தான் மறுப்புத் தெரிவித்திருந்தது.
தற்போதைய நிலையில், ஒசாமா விவகாரத்தால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது மனைவிகளிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதி வழங்குவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
எண்டவர் விண்கலம் மே 16 விண்ணில் ஏவப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி ஓடம் எண்டவர் மே 16-ம் திகதி விண்ணில் செலுத்த நாசா திட்டமிட்டுள்ளதாக நாசா விண்கலத்திட்ட மேலாளர் மைக் மோசஸ் இதைத் தெரிவித்தார்.முன்னதாக, இந்த விண்கலம் ஏப்ரல் 29-ம் திகதி விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது. எனினும் சூடாக்கும் கருவியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக விண்ணில் செலுத்துவது ஒத்திவைக்கப்பட்டது.
தொழில்நுட்ப வல்லுநர்கள் எண்டவர் விண்கலத்தின் மின் அமைப்பை மீண்டும் பரிசோதித்துப் பார்த்தனர். பழுதடைந்திருந்த மின்பெட்டி கடந்த வாரம் மாற்றப்பட்டது. மேலும் புதிதாக வயர்கள் இணைக்கப்பட்டு மீண்டும் பரிசோதிக்கப்பட்டது.இப்போது அந்த சூடாக்கி முறையாக வேலைசெய்வதை தொடர்ந்து மே 16-ம் திகதி எண்டவர் விண்கலத்தை விண்ணில் ஏவ முடிவுசெய்யப்பட்டுள்ளதாக நாசா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் மீதான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும்: கிலானி
பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.இந்த கொலையை ‌தொடர்ந்து பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பின்லேடன் மரணம் குறித்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் யூசுப் ரசா கிலானி உரையாற்றினார்.
அவர் தனது பேச்சில் நாம் நமது நாட்டின் பெருமை மற்றும் கெளரவத்தை உறுதிப்படுத்த வேண்டும். தோல்வியடைந்த கொள்கைகளுக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்க முடியாது.அல்கொய்தா அமைப்பையோ, பின்லேடனை‌யோ நாங்கள் பாகிஸ்தானுக்கு அழைக்கவில்லை. பின்லேடனை நாங்கள் ஆதரிக்கவில்லை. அல்கொய்தா அமைப்பை ஒடுக்க ஐ.எஸ்.ஐ அமைப்பு முயற்சி செய்தது. ஐ.எஸ்.ஐ மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் போலியானவை.
பாகிஸ்தானின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பாக வெளிவரும் கட்டுக்கதைகள் அனைத்தும் தவிர்க்க வேண்டும். பின்லேடன் கொல்லப்பட்டதன் மூலம் நீதி நி‌லைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த வெற்றியை கொண்டாட பாகிஸ்தானுக்கு ஆவல் இல்லை.
பின்லேடனை கண்டு பிடிக்க முடியாதது சர்வதேச நாடுகளின் உளவுத்துறைகளுக்கு ஏற்பட்ட தோல்வி. பாகிஸ்தான் மீது நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடுக்கப்படும் தாக்கதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். அமெரிக்காவுடனான உறவு பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை அடிப்படையில் உள்ளது.பாகிஸ்தானுக்கு தெரியாமலே பின்லேடன் மீது அமெரிக்க தன்னி‌ச்சையாக நடவடிக்கை எடுத்தது. இந்த தன்னிச்சையான நடவடிக்கையால் பாகிஸ்தானுக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது.
ஒசாமாவை கொலை செய்ய உதவிய இங்கிலாந்து வீரர்கள்: அமெரிக்கா பாராட்டி விருது.
பாகிஸ்தானின் அபோதாபாத் பகுதியில் வசித்த பின்லேடன் மீது தாக்குதல் நடத்தியது அமெரிக்கப்படை என கூறப்பட்டது.ஆனால் பின்லேடனை பிடிக்கும் அல்லது சுட்டுக் கொல்லும் ஓபரேஷன் ஜெரோனிமா திட்டத்துக்கு இங்கிலாந்து ராணுவத்தில் கப்டன் மற்றும் மேஜர் போன்ற உயரிய பதவிகளில் பணியாற்றும் இரு அதிகாரிகள் முக்கிய பங்காற்றியுள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
பின்லேடன் மாளிகை போலவே மாதிரி வீட்டை ஆப்கானிஸ்தானில் உருவாக்கி தாக்குதல் ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. அதன் பின்பே அமெரிக்க வீரர்கள் பாகிஸ்தானில் நுழைந்து பின்லேடனை வெற்றிகரமாக சுட்டுக் கொன்றனர்.ஓபரேஷன் ஜெரோனிமா திட்டத்துக்கு உதவிய இங்கிலாந்து ராணுவ அதிகாரிகள் இருவருக்கும் அமெரிக்க ராணுவம் விருது அளிக்க உள்ளது.
அமெரிக்காவின் அடுத்த இலக்கு: ஜவாஹிரி.
அல்கொய்தா தலைவர் பின்லேடனைக் கொன்றதைத் தொடர்ந்து அவருக்கு அடுத்த நிலையில் இருந்த அல் ஜவாஹிரியை அமெரிக்கா இப்போது தேடி வருகிறது.எனினும் அவருக்கு குறிவைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பாகிஸ்தானிடம் இதுவரை தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.
அல் ஜவாஹிரியை அடுத்து குறிவைக்க தீர்மானித்தால் பாகிஸ்தானுக்கு அதுகுறித்து தெரிவிக்கப்படுமா என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டோம் டோமிலனிடம் கேட்டதற்கு அது அந்த நடவடிக்கையின் விவரத்தைப் பொறுத்தது என்றார்.
அபோதாபாதில் பின்லேடனின் மறைவிடத்தில் தாக்குதல் நடத்தப்போவது குறித்து பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்க முன்னதாக தகவல் தெரிவிக்கவில்லை. இது உண்மையில் நம்பிக்கை உள்ளதா இல்லையா என்ற விவகாரம் அல்ல. ரகசிய நடவடிக்கை என்பதால் அதன் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரம் என டோமிலன் குறிப்பிட்டார்.எகிப்திய டொக்டரான அல் ஜவாஹிரி அல்கொய்தாவின் புதிய தலைவராக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்த டோமிலன் அவர் அமெரிக்காவின் தேடப்படுவோர் பட்டியலில் இடம்பெறுவார் என்றார்.
பின்லேடனுக்கு அடுத்ததாக உலகில் நாங்கள் தேடி வரும் பயங்கரவாதிகள் பட்டியலில் அல் ஜவாஹிரி முதலிடத்தைப் பிடிப்பார் என டோமிலன் தெரிவித்தார். பின்லேடன் கொல்லப்பட்டது கடந்த 10 ஆண்டுகளாக அல்கொய்தாவுக்கு எதிராக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் மிகப்பெரும் சாதனை என அவர் குறிப்பிட்டார்.பின்லேடன் சரணடையத் தயாராவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததாலேயே தாக்குதல் நடத்தப்பட்டது என அவரைக் கொன்றதை நியாயப்படுத்திப் பேசினார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF