பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. எவ்வளவு விலை உயர்ந்தாலும் குறையாமல் நடக்கிறது விற்பனை.அதே நேரம் "பயன்பாட்டை குறையுங்கள் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது" என்கிறார்கள் ஆர்வலர்கள். மாற்று எரிபொருள் குறித்த ஆய்வும் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் விலங்குகளின் கொழுப்பில் இருந்து சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான விமான எரிபொருளை தயாரித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள நாசா ட்ரைடன் விமான ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2 மாதங்களாக இதுதொடர்பாக தீவிர ஆய்வு நடத்தியது. கோழி மற்றும் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட பயோ எரிபொருளை விமானத்தில் பயன்படுத்தி சோதனை நடத்தியது.முதல் கட்ட சோதனையில் எரிபொருளின் தரம், இயந்திரங்களின் செயல்திறன், பாதுகாப்பு ஆகியவை உறுதிப்படுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக எரிபொருளில் உள்ள நச்சுத்தன்மை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
நைட்ரஜன் மற்றும் ஹைட்ரோ கார்பன் சுற்றுச்சூழலில் மாசுபாட்டை ஏற்படுத்தும் என்பதால் எரிபொருளில் இதன் அளவு குறித்த கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த அளவு அதிகரிக்கும் போது எரிபொருள் பயன்பாட்டு அங்கீகாரம் நிராகரிக்கப்படும்.இந்த ரசாயனங்கள் காற்றில் கலந்தால் மனிதர்களுக்கு சுவாசக் கோளாறு, இதய பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக விமானங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுபாடு உடனடி பாதிப்புகளை ஏற்படுத்தும். இதை தவிர்க்க ஆரம்ப கட்டத்திலேயே எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்த பரிசோதனையிலும் கோழி எரிபொருள் வெற்றி பெற்றுள்ளது. இறுதிக்கட்டமாக நிறம், தரப் பரிசோதனைக்கு எரிபொருள் உட்படுத்தப்பட்டது. இதில் 90 சதவீதம் கார்பன் மாசுபாடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சல்பேட், ஆர்கானிக் ஏரோசால், உள்ளிட்ட ஜெட் எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை திருப்திகரமாக பூர்த்தி செய்து உள்ளது. இறுதிகட்ட ஒப்புதலுக்கு பிறகு விரைவில் கோழி எரிபொருள் அறிமுகப்படுத்தப்படுகிறது.