உடல் பருமனுக்கு காரணமான மரபணுவை முதன் முதலாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இந்த புதிய ஆய்வின் மூலம் உடல் பருமன் தொடர்புடைய இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு தீர்வு காண முடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் கொழுப்பு நிலைக்கு கே.எல்.எப் 14 என்ற மரபணு காரணமாக உள்ளது என்பதை விஞ்ஞானிகள் ஏற்கனவே அடையாளம் கண்டனர். ஆனால் அந்த மரபணுவின் பங்கு என்ன என்பது அறியப்படவில்லை.
ஆராய்ச்சியாளர்கள் பிரிட்டனைச் சேர்ந்த 800 பெண்கள் பிரிட்டிஷ் இரட்டையர்களின் கொழுப்பு மாதிரிகளில் 20 ஆயிரம் ஜீன்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது கே.எல்.எப் 14 ஜீன் மற்றும் கொழுப்பு திசுவில் உள்ள ஜீன்கள் ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு இருப்பது தெரியவந்தது.
ஐஸ்லாந்தைச் சேர்ந்த மக்களிடமும் எடுக்கப்பட்ட 600 கொழுப்பு மாதிரிச் சோதனையிலும் இது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த புதிய ஆய்வு விவரம் நேச்சர் ஜெனிடிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த மரபணு வளர்சிதை மாற்ற நோய்களான உடல் பருமன், இதய நோய்கள், நீரிழிவு நோய் ஆகிய நோய்களுக்கு காரணமாக இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆய்வினை மேற்கொண்ட லண்டன் கிங்ஸ் பல்கலைகழக ஆய்வாளர் டிம் ஸ்பெக்டர் கூறுகையில்,"ஜீன்களில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் மற்ற மரபணுக்களில் வளர்சிதை பாதிப்பு ஏற்படுத்துவதை ஆய்வு எடுத்துக்காட்டி உள்ளது" என்றார்.