Saturday, May 28, 2011

இன்றைய செய்திகள்.

பொஸ்னியாவில் இனப்படுகொலைகளை மேற்கொண்ட முன்னாள் இராணுவ தளபதி கைது : அச்சத்தில் மஹிந்த.

பொஸ்னியாவில் நடத்தப்பட்ட பாரிய இனப்படுகொலை தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி ரட்கோ ம்லேடிக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையின் அரசியல் தலைவர்களிடம் ஒருவித அச்சம் பரவி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.பொஸ்னியாவில் 16 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இனப்படுகொலைகளில் 7500க்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பில் சர்வதேச யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான தீர்ப்பாயத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.எனினும் இதனுடன் நேரடியாக தொடர்பு கொண்டிருந்த ரட்கோ ம்லேடிக் நேற்று சேர்பிலாயில் வைத்து கைது செய்யப்பட்டார்.அவர் விரைவில் ஹேக்கில் உள்ள சர்வதேச யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான தீர்ப்பாயத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அவரது கைது இலங்கையில் யுத்தக்குற்றங்கள் தொடர்பிலான தீர்ப்பாயத்தின் நடவடிக்கைகள் மற்றும், அது சார்ந்த விசாரணைகள் குறித்த அச்சத்தை அரசியல் தலைவர்கள் மத்தியில் பரப்பியுள்ளது.இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்பில், ராஜபக்ஷ குடும்பத்தினரும், அவர்களுடன் இணைந்த பாதுகாப்பு தரப்பினரும் இவ்வாறு கைது செய்யப்படலாம் என்ற அச்சமே தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இணையத்தளம் ஊடாக வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைக்கு ஜனாதிபதி அங்கீகாரம்.
இணையத்தளம் ஊடாக வெளிநாட்டவர்களுக்கு இலங்கைக்கான வீசா வழங்கும் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுமதியளித்துள்ளார்.வெளிநாட்டுப் பிரஜைகள் இணையத்தின் ஊடாக நேரடியாக வீசா பெற்றுக் கொள்ளும் யோசனைத் திட்டமொன்றை குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் கடந்த ஜனவரி தொடக்கமே குடிவரவுத் திணைக்களம் முன் வைத்திருந்தது. ஆயினும் அதற்கான அனுமதி தற்போதுதான் கிடைக்கப் பெற்றுள்ளது.  
அதன் பிரகாரம் இனிவரும் காலங்களில் இலங்கைக்கு விஜயம் செய்யும் மற்றும் இலங்கையின் ஊடாக பயணங்களை மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பிரஜைகள் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் இணைய தளத்தின் ஊடாக அதற்கான வீசாக்களைப் பெற்றுக்கொள்ள முடியும். 
இணைய வசதி அற்றவர்கள் வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பயண முகவர்களின் ஊடாக வழமையான நடைமுறைகளின் பிரகாரம் தமக்கான விசாவினைப்  பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இணையமூடான வீசா சேவையை வழங்கும் மென்பொருள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை மொரட்டுவைப் பல்கலைக்கழகம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள்வெளியாகியுள்ளன.
கேகாலை மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் ஐந்து பேர் பலி.
சீரற்ற காலநிலையினால் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.நாட்டின் பல பகுதிகளிலும் கடுமையான மழை பெய்து வருவதாகவும், வெள்ள மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.
வெள்ளம் காரணமாக இதுவரையில் 1300பேர் இருப்பிடங்களை இழந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.மண்சரிவு காரணமாக கேகாலை மாவட்டத்தில் நான்கு பேரும், களுத்துறை மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.நாட்டின் பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சீரற்ற காலநிலை தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிபந்தனையின்றி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் : சஜித் பிரேமதாச.
நிபந்தனையின்றி முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.சஜித் பிரேமதாச உள்ளிட்ட பிரதிநிதிகள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று சரத் பொன்சேகாவை சந்தித்துள்ளனர்.
சரத் பொன்சேகாவை நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் இணைத்துக் கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, உண்மையான போர் வீரரை சிறையில் அடைத்து போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றமை நகைப்புக்குரியது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பில் திருத்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் மட்டும் மனித உரிமைகளை பாதுகாக்க முடியாது : ஜனாதிபதி.
அரசியல் அமைப்பில் திருத்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் மட்டும் மனித உரிமைகளைப் பாதுகாக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.போர் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.நாட்டு மக்கள் அச்சமின்றி, சுதந்திரமாக வாழக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவதே பிரதானமாது என அவர் தெரிவித்துள்ளார்.
ரி56 துப்பாக்கிகளையும், சயனைட் குப்பிகளையும் ஏந்திய சிறுவர்கள் இன்று வெள்ளை உடையணிந்து பாடசாலை செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.தமிழ், சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.சில வெளிநாட்டு சக்திகள் தொடர்ந்தும் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகவும் இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக்கட்டப் போரில் அரசாங்கம் செக்கன் ஒன்றுக்கு நான்காயிரம் வீதம் செலவிட்டுள்ளது: பிரதியமைச்சர் லக்ஷமண் யாப்பா.
விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஒவ்வொரு செக்கனுக்கும் அரசாங்கம் நான்காயிரம் வீதம் செலவிட்டதாக பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவிக்கின்றார்.நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டின் போது கருத்து வெளியிடுகையிலேயே பிரதி அமைச்சர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவுற்று நாட்டில் சமாதானம் நிலவும் தற்போதைய சூழலில் யுத்தத்திற்காக செலவிடப்பட்ட நிதியை தற்போது வடக்கு,கிழக்குப் பிரதேசங்கள் மற்றும் ஏனைய பிரதேசங்கள் உள்ளிட்ட நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு அரசாங்கம்  பயன்படுத்தி வருகின்றது.அதன் காரணமாக நாட்டின் அபிவிருத்திக்கான யுகத்தை மலரச் செய்திருப்பதன் காரணமாக யுத்தவெற்றியின் இரண்டாம் வருட நினைவுதின வைபவங்களை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடுவதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 
ஒசாமா பற்றிய தகவல்கள் எதுவும் பாகிஸ்தானுக்கு தெரியாது: ஹிலாரி கிளிண்டன்.
ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டப் பிறகு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு வந்துள்ளார்.பாகிஸ்தானில் பத்திரிகையாளர்‌களிடம் பேசிய ஹிலாரி கூறியதாவது: பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ஒசாமா பதுங்கியிருந்தது பாகிஸ்தானுக்‌கு தெரியாது என்றார்.
அமெரிக்கப் படைகள் நடத்திய அபோதாபாத் ஓபரேஷனுக்குப் பிறகு யு.எஸ் செனட் உறுப்பினர்கள் பலர் பாகிஸ்தான் மீது சரமாரி குற்றம்சாட்டினர்.அப்போது எல்லாம் அமைதியாகவே இருந்த வந்த அமெரிக்கா தற்போது பாகிஸ்தானுக்கு ஏதும் தெரியாது என்று கூறியுள்ளது.மேலும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில், தடுப்பதில் பாகிஸ்தானும், அமெரிக்காவும் ஒரே கொள்கையுடன் இயங்குவதாகவும் ஹிலாரி தெரிவித்தார்.
புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியல்: கனடாவுக்கு மூன்றாம் இடம்.
புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கு உலகின் தலை சிறந்த நாடுகள் வரிசையில் கனடா மூன்றாவது இடத்தில் உள்ளது.இது சம்பந்தமாக அண்மையில் நடத்தப்பட்ட மதிப்பீடொன்றின் மூலம் கனடாவில் வர்த்தக முயற்சிகளுக்கான சிறந்த சூழல் காணப்படுவதாகவும் புதிய வர்த்தக முயற்சிகள் எதிர்நோக்கும் ஆபத்துக்கள் கனடாவில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன என்றும் தெரியவந்துள்ளது.
இந்த வரிசையில் முதல் இரண்டு இடங்களிலும் அமெரிக்காவும், இந்தோனேஷியாவும் உள்ளன. பி.பி.சி.யின் உலக சேவைக்காக மாரிலாந்து பல்கலைக்கழக சர்வதேசக் கொள்கைகள் பிரிவு குளோப் ஸ்கேன் உடன் இணைந்து இந்த மதிப்பீட்டை நடத்தியுள்ளது.
உலகம் முழுவதும் 24 நாடுகளில் இது சம்பந்தமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 24000 பேரிடம் இது சம்பந்தமாக தொடராகப் பல கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றுக்கான பதில்களைத் தொகுத்தே இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.கனேடிய மக்கள் புதிய தொழில் முயற்சிகளை எப்போதும் சாதகமாகவே நோக்குகின்றனர். கனடாவில் புதிய தொழில் முயற்சிகள் தொடங்கப்படுவதற்கு சாதகமாக 74 வீதமானவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதேபோல் புதிய கண்டுபிடிப்புக்களுக்கும், ஆக்கபூர்வ சிந்தனைகளுக்கும் கனடாவில் அமோக வரவேற்பு உள்ளதாக 72 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.புதிய எண்ணங்கள் உள்ளவர்கள் அதைச் செயற்படுத்திப் பார்க்கச் சிறந்த இடம் கனடா என்றும், கனடாவில் புதிய தொழில் முயற்சிகளைத் தொடங்குகின்றவர்கள் அவற்றை அபிவிருத்தி செய்வதில் எதிர்நோக்கும் தடைகள் மிகவும் குறைவானது என்றும் சுமார் 66 வீதமானவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் புதிய வர்த்தகம் ஒன்றைத் தொடங்குவது எவ்வளவு கஷ்டமானது என்பதில் கனேடியர்கள் வித்தியாசமான கருத்தைக் கொண்டுள்ளனர். அது மிகவும் கஷ்டமானது என்று 55 வீதமான கனேடியர்கள் கருதுகின்றனர்.44 வீதமானவர்கள் இந்தக் கருத்தை ஏற்க மறுக்கின்றனர். மேலும் கனடாவில் சொந்தமாகத் தொழில் முயற்சிகளைத் தொடங்கும் எண்ணம் 53 வீதமானவர்களிடம் காணப்படுகின்றது.
லிபியாவில் பிரிட்டன் ஹெலிகாப்டர்கள்: பிரதமர் ஒப்புதல்.
லிபியாவில் மக்களை கொன்று குவிக்கும் கடாபி ஆட்சியை அகற்றுவதற்காக நேட்டோ படைகள் அங்கு முகாமிட்டுள்ளன.இந்த நேட்டோ படைகள் தாக்குதலில் பிரிட்டன் படையும் இடம் பெற்றுள்ளது. லிபியாவில் போராட்டக்காரர்களை ஒடுக்குவதாக கூறிக்கொண்டு லிபிய ராணுவம் அப்பாவி மக்களையும் கொல்கிறது.
எனவே லிபிய ராணுவத்திற்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த 4 அபேச்சே ஹெலிகாப்டர்களை பயன்படுத்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் ஒப்புதல் அளித்துள்ளார். அபேச்சே என்பதற்கு எதிரி1 என்ற அர்த்தமாகும். இந்த அதி நவீன ஹெலிகாப்டர்கள் எதிரிகளை இலக்கு தவறாமல் தாக்க கூடிய வல்லமை பெற்றதாகும்.
நேட்டோ படைகள் லிபிய தலைநகர் திரிபோலியை தாக்க துவங்கி உள்ளன. சில நாட்கள் முன்பாக கடாபி வீடு அருகிலும் குண்டுகள் வீசப்பட்டன.அயல்துருப்புகள் தாக்குதலில் இருந்து தப்பிக்க கடாபி மருத்துவமனையில் பாதுகாப்பாக பதுங்கி உள்ளார் என உளவுத்துறையினர் கூறுகிறார்கள். மருத்துவமனை, பள்ளிக்கட்டிடம், பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் நேட்டோ படைகள் தாக்குவது இல்லை. இதனால் கடாபி இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளார் என கூறப்படுகிறது.
அபேச்சே ஹெலிகாப்டர்களின் விமான ஓட்டிகளும் தற்போது மத்திய கிழக்குப் பகுதியில் பயிற்சியில் உள்ளனர். பிரிட்டன் அமைச்சரவை அபேச்சே ஹெலிகாப்டர் தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்து விட்டது.பிரிட்டன் ராணுவ தளபதிகள் இது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என அரசு செய்தித் தொடர்பாளர் கூறினார். லிபியாவில் பிரெஞ்சு ஹெலிகாப்டர்களை பயன்படுத்தப் போவதாக பிரான்ஸ் ஏற்கனவே அறிவித்து உள்ளது.
ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தானுக்கு திடீர் பயணம்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தானுக்கு திடீர் வருகை மேற்கொண்டார். இரு நாடுகள் இடையே நிலவும் கசப்பு உணர்வை தணிப்பதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டார்.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு 30 மைல் தொலைவில் உள்ள அபோதாபாத் நகரில் அல்கொய்தா தீவிரவாதத் தலைவர் பின்லேடன் கொல்லப்பட்டார். இந்த மே மாதம் 2ஆம் திகதி அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவிற்கும் சமூக உறவில் விரிசல் ஏற்பட்டது.
பாகிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க வீரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் அரசு அறிவுறுத்தி உள்ளது. அமெரிக்காவின் அத்து மீறல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலும் எம்.பி.க்கள் எச்சரித்தனர்.இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்தறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தானுக்கு அவசர பயணத்தை மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்று தமது துருப்புகளை பாகிஸ்தானில் இருந்து குறைப்பதாக தெரிவித்து உள்ளது.
பென்டகன் அறிவிப்பு வெளியான மறுநாளே ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தானுக்கு அவசரப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். உலக நாடுகளை அச்சுறுத்திய பின்லேடன் அபோதாபாத் நகரில் பதுங்கி இருந்த விவரம் பாகிஸ்தானில் சில முக்கிய நபர்களுக்கு தெரியும் என அமெரிக்கா தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதி அஸ்பக் கயானி ஆகியோரை சந்திக்க ஹிலாரி பாகிஸ்தான் வந்துள்ளார். அவருடன் அமெரிக்காவின் கூட்டுப்படை தலைவர் அட்மிரல் மைக் முலனும் வந்துள்ளார்.அபோதாபாத் நகரில் பின்லேடன் இருந்த இடத்தை அமெரிக்காவின் சி.ஐ.ஏ ஆய்வு செய்ய பாகிஸ்தான் அனுமதிக்கும் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
8 ஆயிரம் பேரை கொன்று குவித்த அதிபர்: செர்பியாவில் கைது.
ஐரோப்பியாவில் உள்ள போஸ்னியா நாட்டை சேர்ந்த முன்னாள் அதிபர் ராட்கோ மிலாடிக். இவர் இரண்டாம் உலக போருக்கு பிறகு போஸ்னியாவில் பொதுமக்கள் மீது பல குற்றங்களை இழைத்து கொடுமைப்படுத்தினார்.
இதனால் அவருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். கடந்த 1992 முதல் 1995ம் ஆண்டு வரை சுமார் 8 ஆயிரம் முஸ்லிம்களை கொன்று குவித்தார். எனவே இவர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா. சபை குற்றம் சாட்டியது.இவர் போர்க்குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். கடந்த 16 ஆண்டுகளாக பல நாடுகளில் தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில் அவர் செர்பியாவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. எனவே அவரை கைது செய்ய வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வந்தன. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.இத்தகவலை செர்பியா அதிபர் போரிஸ் தாடிக் நேற்று அறிவித்தார். செர்பியாவின் பாதுகாப்பு உளவு நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கைது செய்யப்பட்ட இவர் செர்பியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
ஐரோப்பாவிற்கு 2 ஆயிரம் பேரை கடத்திய 11 பேர் கைது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2 ஆயிரம் நபர்களை ஐரோப்பா ஒன்றியத்திற்குள் கள்ளத்தனமாக கொண்டு வந்த 11 ஜேர்மனி மற்றும் துருக்கியர்களை பொலிசார் கைது செய்தனர்.புலம் பெயர்ந்து வந்தவர்கள் இத்தாலிக்குள் ஊடுருவி ஐரோப்பா நாடுகளுக்கு சென்றனர். இப்படி புலம் பெயர்ந்து வந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
பொலிசார் ஆள்கடத்தலுக்கு உதவிய 11 ஜேர்மனி மற்றும் துருக்கியர்களை நார்த் ரினே-வெஸ்ட் பலியா மற்றும் பாடன்-வுட்டம்பெர்க் மாநிலத்தில் கைது செய்தனர். ஆள் கடத்தல் தொடர்பாக துருக்கி நிர்வாகம் இஸ்தான்புல் பகுதியில் பெப்பிரவரி மாதம் 33 பேரை கைது செய்தது.
ஆள் கடத்தலுக்கு இஸ்தான்புல் பகுதியை முக்கிய தளமாக பயன்படுத்தி உள்ளனர். அவர்கள் ஆள்கடத்தலுக்கு டிரக்குளை பயன்படுத்தினார்கள். இந்த டிரக்குகளில் 113 பேர் பதுங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.ஆள் கடத்தல் நடிவடிக்கை மூலம் இடம் பெயர்ந்தவர்கள் முதலில் ஏதென்ஸ் நகருக்கு வந்தார்கள். பின்னர் அவர்கள் இத்தாலிக்கு வந்தனர். அங்கிருந்து ஐரோப்பா நாடுகளுக்கு பிரிந்து சென்றார்கள்.
புலம் பெயர்ந்து வந்தவர்களின் உடல்நிலை மோசமாக உள்ளது. அவர்கள் மூடி அழைத்து வரப்பட்டதால் வெப்பநிலை அதிகரிப்பால் அவர்களது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.செனகன் பகுதி வழியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் 23 நாடுகளுக்கு செல்ல முடியும். இந்த வழியாக ஆள்கடத்தலில் வந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஊடுருவ முயன்றனர்.
எகிப்தில் தண்டனைக்குள்ளாகும் மாணவர்கள்: காணொளி வெளியானதால் பரபரப்பு.
 எகிப்திய கல்வி நிலையமொன்றில் ஆசிரியரொருவர் அங்கு கல்வி பயிலும் சிறார்களை மோசமாக தண்டிக்கும் காணொளியொன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்டி எல்-ஷார் என்ற அவ்வாசிரியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அக் கல்வி நிலையமும் மூடப்பட்டுள்ளது. தண்டனைக்குள்ளாகும் அனைத்து சிறார்களும் 10 வயதிற்கு குறைவானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


ஏமன் ஆயுதக் கிடங்கில் வெடிவிபத்து: 28 பேர் பலி.
ஏமனில் ஆயுத கிடங்கில் வியாழக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் 28 பேர் பலியானதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.எனினும் குடியிருப்புப் பகுதியில் அதிபர் அலி அப்துல்லா சலேவின் படைகள் குண்டு மழை பொழிந்ததில் தான் 28 பேர் இறந்ததாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.
ஏமனில் மிகப் பெரிய பழங்குடி குழுவான ஹஷீத் குழுவின் தலைவர் ஷேக் சதக் அல் அமர் என்பவரின் வீட்டை அரசுப் படைகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டன. அதைத் தொடர்ந்து 4 நாள்களாக அரசுப் படையினருடன் பழங்குடிப் படையினர் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறைந்தபட்சம் 9 அமைச்சக அலுவலகங்களை பழங்குடியினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஏமன் தலைநகர் சனாவில் உள்ள அல் அமர் வீட்டின் மீது அரசுப் படைகள் தாக்குதல் தொடுத்து வருகின்றன.கடந்த 4 நாள்களில் மட்டும் மொத்தம் 109 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஷேக் சதக் அல் அமருக்கு எதிராக அரசு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 24 பேர் பலி.
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியான ஹாங்கு என்ற இடத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் பொலிசார் உள்பட 24 பேர் இறந்தனர்.இரு குழந்தைகள் உள்பட 12க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். நீதிமன்றம் உள்பட ஏராளமான அரசுத்துறை அலுவலகங்கள், மார்க்கெட் அமைந்துள்ள பாதுகாப்பு மிக்க இப்பகுதிக்கு மாலை 6.15 மணியளவில் வாகனம் ஒன்றில் சக்திவாய்ந்த வெடிப்பொருட்களை ஏற்றி வந்த மர்ம நபர் அதை வெடிக்கச் செய்ததில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டது.
காயமடைந்த 12 பேரில் ஆறு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று மாவட்ட முதன்மை நிர்வாக அதிகாரி முகமத் சித்திக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.மாவட்ட காவல்துறை, நிர்வாக அலுவலகங்கள் இந்த குண்டு வெடிப்பில் தரைமட்டமாகின. மார்க்கெட் மற்றும் அரசு அலுவலகப் பகுதியிலும், அருகே உள்ள பஸ் நிறுத்தத்திலும் காத்திருந்த ஏராளமான பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அனைத்து மருத்துவமனைகளிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எந்த தீவிரவாத அமைப்பும் இந்த தாக்குதலுக்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை.கடந்த மே 2ம் திகதி பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அங்கு ஆங்காங்கே பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
படைவீரர்களுக்கு சிறப்பு விருந்தளித்த தலைவர்கள்.
பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கமரூனும், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் இணைந்து அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படை வீரர்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்தனர்.
அமெரிக்க ஜனாதிபதியின் பிரிட்டிஷ் விஜயத்தின் ஒரு அங்கமாக, பிரிட்டிஷ் பிரதம மந்திரியின் டோனிங் ஸ்ட்ரீட் இல்லத்தின் ரோஸ் கார்டனில் இந்த வைபவம் இடம்பெற்றது.இந்த மதிய நேர விருந்து வைபவத்தில் இரு தலைவர்களினதும் மனைவிமாரும் கலந்து சிறப்பித்தனர். 150 விருந்தாளிகள் கலந்து கொண்ட இந்த வைபவத்தில் இரு தலைவர்களும் மிகச் சாதாரணமாக உடையணிந்து உணவுகளைப் பரிமாறி மிகவும் எளிமையாக நடந்து கொண்டனர்.
இவர்களின் மனைவி மாரான மிச்சல் ஒபாமா மற்றும் சமன்தா கமருன் ஆகியோரும் தமது கணவன்மாருக்கு இந்த விருந்தில் மிகவும் உதவியாக இருந்தனர். ஒபாமா தனது பிரிட்டிஷ் விஜயத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலும் உரை நிகழ்த்தினார்.
அமெரிக்காவும் பிரிட்டனும் உலகின் மிகப் பழைய கூட்டாளிகள். உலகில் மனித குலத்தின் கௌரவத்துக்கு அமெரிக்க பிரிட்டிஷ் தலைமைத்துவம் அவசியமாகின்றது என்று ஒபாமா இந்த உரையில் கூறினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட சாராபாலின் ஆர்வம்.
அமெரிக்க குடியரசு கட்சி சார்பில் அடுத்த அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளராக களமிறங்குவது குறித்து சாராபாலின் தீவிரமாக அவரது சகாக்களுடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரிசோனா மாகாணத்தில் இருக்கும் அவரது வீட்டில் சாராபாலின் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் இது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிகிறது.கடந்த தேர்தலின் போது சாரா பாலின் குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளாராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF