புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நாட்டை இந்தியாவிடம் காட்டி கொடுத்த பிரிஸ் : தேசிய பிக்குகள் முன்னணி.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நாட்டை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவிடம் காட்டிக் கொடுத்துள்ளதாக தேசிய பிக்குகள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.அமைச்சர் பீரிஸ் இந்தியாவுடன் ஒப்பந்தமொன்றை செய்து கொண்டுள்ளதாகவும் இதனால் நாட்டின் இறைமைக்கு குந்தகம் ஏற்பட்டுளளாகவும் தேசிய பிக்குகள் முன்னணியின் ஆலோசகர் அத்தன்கனே ரத்னபால தேரர் தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு பதிலாக சிலர் போர் வெற்றியை திசை திருப்ப முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா ஆகியோர் அண்மையில் கைச்சாத்திட்ட உடன்படிக்கை நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் அபிலாஷைகள் வேறும் வழிகளில் பூர்த்தி செய்வதற்கு சிலர் முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவூடன் இணைந்து செயற்படுவதில் தவறில்லை என்ற போதிலும் அடிமையாகிச் செயற்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியள்ளார்.13ம் திருத்தச் சட்ட மூலத்தை அமுல்படுத்தல், அவசரகாலச் சட்டத்தை நீக்குதல், மனித உரிமை மீறல் விசாரணை என பல்வேறு வழிகளில் இந்தியா, இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அழுத்தம் : காங்கேசன்துறை வரையான புகையிரத பணிகளை விரைவில் பூர்த்தி செய்ய நடவடிக்கை.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வரையிலான புகையிரத சேவைகளுக்கான பணிகள் அனைத்தும் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்யப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பான நடவடிக்கைகளை அரசாங்கம் முனைப்புடன் மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு இந்திய மத்திய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.அண்மையில் இது தொடபிலும், எனைய அரசியல் தீர்வுகள் தொடர்பிலும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதியை வலியுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.இதனை அடுத்தே அந்த பணிகளை விரைவாக மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸாரின் நடவடிக்கைக்கு விமல் வீரவன்ச எதிர்ப்பு.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய பணியாளர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதல்களுக்கு அமைச்சர் விமல் வீரவன்ச எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.பொலிஸாரின் நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியவை என அவர் தெரிவித்துள்ளார்.பொலிஸாருக்கு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தும் அதிகாரம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு செயற்பட்டால் நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியாக போராட்டங்களை நடத்த முடியாத நிலை உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.பொலிஸார் நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.இந்த நடவடிக்கையுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
தெளிவான அரசியல் தலைமைத்துவமே பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உதவியது: கோத்தாபய ராஜபக்ஷ.
இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தெளிவான அரசியல் தலைமைத்துவமே முழுமுதற்காரணியாக அமைந்திருந்ததாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ வலியுறுத்துகின்றார்.பயங்கரவாத ஒழிப்பிற்கு எப்போதும் பிரதான காரணியாக அமைவது அரசியல் தலைமைத்துவம்; ஜனாதிபதியிடம் காணப்பட்ட தெளிவான இலக்கும் செயற்திட்டமுமே நாட்டை பயங்கரவாத்தில் இருந்து முழுமையாக காப்பாற்றியது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் ஆரம்பமான விடுதலைப்புலிகளுடனான யுத்த வெற்றியின் அனுபவங்கள் குறித்த சர்வதேச கருத்தரங்கில் வரவேற்புரை நிகழ்த்திய போதே பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.பல வருட காலமாக தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிக்க பல இராணுவ முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதிலும், மேற்கொள்ளப்பட்ட எந்வொரு முயற்ச்சியும் இறுதியாக பெறப்பட்ட வெற்றியைப் போல் அமையவில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திட்டமிடப்பட்ட தெளிவான இலக்கு மற்றும் செயற்திட்டம் மூலம் 2006 இல் ஆரம்பிக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையே நாட்டை பயங்கரவாத்தில் இருந்து காப்பாற்றியது. அதற்கு முன்னைய நான்கு ஜனாதிபதிகள் உட்பட பல அரசியல் கட்சிகளின் அரசாங்கங்கள் இது தொடர்பாக பல கருத்துக்களை வெளியிட்டு போராடியதே தவிர வெற்றி கிட்டவில்லை.இதைத்தவிர பல வருட காலமாக இராணுவ நடவடிக்கை, சமாதான பேச்சுவார்த்தை மற்றும் சர்வதேச மத்தியஸ்தம் மூலமான பல்தரப்பு முயற்சிகள் என பல்வகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இவற்றில் எதுவும் பயனளிக்கவில்லை.
எமது மனிதாபிமான நடவடிக்கையின் போது இந்தியா மட்டுமே இராணுவ ரீதியாக செல்வாக்குச் செலுத்தும் வல்லமையைக் கொண்டிருந்தது. அதன் காரணமாக எமக்குள்ளும் ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் அப்படியான ஒரு கட்டம் ஏற்படவில்லை. எமது நடவடிக்கைகளுக்கு இந்தியா தாராள உதவியை வழங்கியிருந்தது.உலகின் ஏனைய நாடுகள் எமது இராணுவ நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட முயன்ற போதிலும் அதற்கான செல்வாக்குச் செலுத்தும் அளவுக்கு அவற்றுக்கு எம்மில் ஆதிக்கம் இருக்கவில்லை. அதன் காரணமாக அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.
தற்போது உலகில் உள்ள பல நாடுகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத்தால் பல பிரச்சனைகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் முகம்கொடுத்து வருகின்றன. பயங்கரவாத்தை தோற்கடித்தலில் பயன்படுத்திய உத்திகள், மனிதாபிமான உதவிகளை வழங்குதல், அரசியல் நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச காரணிகள் போன்றவற்றில் இலங்கை கற்றுக்கொண்ட பாடங்கள் தொடர்பாக ஏனையவர்களுடன் பகிர்வது மிகவும் முக்கியமானது, என நாம் நம்புகின்றோம்.இப் பாடங்கள், சர்வதேச சமூகத்தை சேர்ந்த எமது நண்பர்கள் மற்றும் நேசநாடுகளுக்கு, சர்வதேச பயங்கரவாத்தை தோற்கடிக்க பெருதவியாக அமையும் என முழுமையாக நம்புவதாகவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தனது உரையின் போது மேலும் தெரிவித்தார்.
குமரன் பத்மநாதன் ராஜீவ் காந்தி குடும்பத்தினரிடம் மட்டுமன்றி இலங்கை மக்களிடமும் பகிரங்க மன்னிப்புக்கோர வேண்டும்: ரவி கருணாநாயக்க.
விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் ராஜீவ் காந்தி குடும்பத்தினரிடம் மட்டுமன்றி இலங்கை மக்களிடமும் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டுமென ஐ.தே.க. தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி வலிறுயுத்தியுள்ளது.அண்மையில் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போது ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பில் காந்தி குடும்பத்தாரிடம் குமரன் பத்மநாதன் மன்னிப்பு கோரியிருந்தார். அதனையடுத்தே விடுதலைப் புலிகள் இழைத்த குற்றச்செயல்கள் தொடர்பில் இலங்கை மக்களிடம் ஏன் மன்னிப்பு கோர முடியாது என ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
விடுதலைப் புலிகள் பொதுமக்களுக்கு ஏற்படுத்திய அழிவுகள் தொடர்பில் இலங்கையின் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடம் குமரன் பத்மநாதன் மன்னிப்பு கோர வேண்டும். அத்துடன் 1990ம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் திகதி 600 காவல்துறை உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலும் குமரன் பத்மநாதன் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமெனவும் அவர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.
அதே நேரம் காலம் தாழ்த்தியேனும் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பில் குமரன் பத்மநாதன் இந்தியாவிடம் மன்னிப்பு கோரியமை வரவேற்கத்தக்கது எனவும் ரவி கருணாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.குமரன் பத்மநாதன் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமக்குமாறு சபாநாயகரிடம் ஐக்கிய தேசியக் கட்சி சில வாரங்களுக்கு முன் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈராக்கில் 30 ற்கும் அதிகமான இலங்கையர் படுகொலை.
ஈராக்கில் பணிபுரியும் இலங்கையர் 30 பேருக்கும் அதிகமானோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஈராக், ஏர்பில் விமான நிலையத்தில் (Erbil Airport) பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் ஈராக்கில் இலங்கையர் வெளியில் நடமாடுவது அச்சத்திற்குள்ளாகி இருப்பதோடு, எவரும் தமது பணிபுரியும் இடங்களில் இருந்து வெளியேறாது பதற்றத்திற்குள்ளாகியுள்ளனர்.
ஈராக் அரசு, இலங்கையில் இருந்து எவரும் ஈராக் வருவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. இலங்கைக்கான டிஎசெல் பணமாற்று சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பதற்ற நிலை காரணமாக ஏர்பில் விமான நிலையத்தில் பணிபுரியும் இலங்கைத் தமிழர்களை, அவர்களது பணியகம் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு தங்குமிடங்களை மாற்றுக்கொண்டிருப்பதாக, ஏர்பில் விமான நிலையப் பணியாளர்கள் அறிவிக்கின்றனர்.வெளியில் இருப்பதும் ஆபத்தானது என கருதுவதால் இலங்கைக்கே வெளியேற உத்தேசித்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளரினால் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்: சரத் பொன்சேகா.
தனக்கும் தன் குடும்பத்தினரதும் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியும், பாதுகாப்பு செயலாளரும் பொறுப்பேற்க வேண்டுமென சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று நடைபெற்ற வெள்ளைக்கொடி விவகாரம் குறித்த தொடர்ச்சியான வழக்கில் சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
உலக தீவிரவாத அமைப்பினரான தமிழீழ விடுதலைப் புலி அமைப்பினரை மூன்று வருடத்துக்குள் ஒழித்துக்கட்டுவேன் என நான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினேன். இதற்கு எனக்கு ஒத்துழைத்த அனைத்து இராணுவத்தினருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.அத்துடன் யுத்தத்தின் போது உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் சிறந்த இராணுவ தளபதியாக நான் வர்ணிக்கப்பட்டேன். ஆனால் எனது ஓய்வூதியம் உட்பட அனைத்தும் சதித்திட்டங்களின் மூலம் நீக்கப்பட்டு தற்போது ஒரு சிறைக் கைதியாக நிற்கின்றேன்.
இந்த துரதிஷ்டமான நேரத்தில் என் நாட்டு மக்களுக்கு நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் எனக்காக கஷ்டப்பட்ட சட்டத்தரணிகள், உற்றார் உறவினர், நாட்டு மக்கள், ஆதரவாளர்கள் மற்றும் சாட்சியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவிக்கின்றேன்.தற்போது எனது வாழ்வுக்கு மரண அச்சுறுத்தல்கள் உள்ளதாக நம்பத்தகு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை எனது குடும்பத்தாருக்கு உயிரச்சுறுத்தல் ஏற்படுத்தும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
உதாரணமாக சிவனொளிபாத மலைக்கு வழிபாடுகளுக்காக என குடும்பத்தார் சென்ற போது பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட அதிகாரிகளிடம் பாதுகாப்பு வழங்குவதற்கான எதுவித ஆயுதங்களும் இருக்கவில்லை.இதன்மூலம் அரசு எனது குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிப்பதாக போலியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதனடிப்படையில் எனது முழுக்குடும்பத்திற்குமே மரண அச்சுறுத்தல் உண்டு.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எனது மகளின் கணவர் கைது செய்யப்பட்டு அவரை கொலை செய்யதிட்டமிருந்ததாக எனக்கு அறியக்கிடைத்தது. இதனாலேயே அவர் தனது உயிரை பாதுகாத்துக் கொள்ள தலைமறைவாக வேண்டிய சந்தர்ப்பமும் ஏற்பட்டது.நான் மூன்று தடவைகள் மரணவாசலுக்கு சென்று மீண்டு வந்துள்ளேன்.
எனது குடும்பத்துக்கும் எனது உயிருக்கும் ஆபத்து ஏற்படுமானால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியும், பாதுகாப்பு செயலாளரும் மற்றும் என்னை கைது செய்ய உடந்தையாக இருந்த அனைவருமே பொறுப்பேற்க வேண்டும்.அவ்வாறான பின்புலத்தில் நாட்டின் நீதிக்கட்டமைப்பு மீது நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். என் தொடர்பிலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இந்த நீதிமன்றில் எனக்கு வழங்கப்படவுள்ள தீர்ப்பு வரலாற்றில் முக்கிய இடம்பெறும் எனக்கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றும் அவர் தன் சாட்சியத்தின் போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் வெள்ளைக் கொடி விவகார வழக்கானது நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முஷாரப்பிற்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்ப பெற்றது அமெரிக்க நிர்வாகம்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு மற்றும் அந்தஸ்தை அமெரிக்க நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு அவருக்கு போதுமான பாதுகாப்பை முஷாரப் அரசு வழங்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபை விசாரணைக் குழு ஒன்று குற்றம்சாட்டியதையடுத்து அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எனினும் அல்கொய்தா தலைவர் பின்லேடன் கொல்லப்பட்டதையடுத்து முஷாரபின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் உள்ளதால் பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை அவருக்கான பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளன.
அமெரிக்காவில் முஷாரப் சாதாரண குடிமகனைப் போன்று நடத்தப்படுவார். விமானநிலையங்களில் குடியேற்ற கருமபீடத்தில் அவர் வரிசையில் நிற்க வேண்டும். அவரிடம் உடல் முழுவதும் சோதனை நடத்தப்படும் என வாஷிங்டனில் உள்ள தூதரக வட்டாரங்களை மேற்கோள்காட்டி தனியார் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த காலத்தில் அமெரிக்க விமானநிலையங்களில் முஷாரப் வந்திறங்கிய பின்னர் குடியேற்ற நடைமுறைகள் விரைவாக இருக்கும். அவர் வரிசையில் காத்திருப்பதற்கு பதிலாக அமெரிக்க ஊழியரே முஷாரபுக்காக அந்த பணியைச் செய்வர். இப்போது அது நிறுத்தப்பட்டுவிட்டது என வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.அமெரிக்காவில் இருந்து புறப்படும் போது அவர் வரிசையில் நிற்க வேண்டும். காலணிகள், இடுப்பு பெல்ட்டை கழற்ற வேண்டும். கைகளை மேலே தூக்கியவாறு முழு உடல்பரிசோதனைக்கு உட்பட வேண்டும். அதன்பின்னரே அவர் புறப்படுவதற்கு அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பிரிட்டனும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் அவருக்கான பாதுகாப்பை அதிகரித்துள்ளன.
ஜேர்மனியில் வெள்ளரிக்காய் மூலம் புதுவித நோய் பரவி 12 பேர் பலி.
ஜேர்மனியில் தற்போது வெள்ளரிக்காய் மூலம் புதுவிதமான நோய் பரவி வருகிறது.தொடக்கத்தில் இந்த நோய் பாதிக்கப்பட்டவருக்கு ரத்தத்துடன் வயிற்றோட்டம் ஏற்படும். பின்னர் நோய் தாக்கியவர் உயிரிழக்கும் அபாயம் உண்டாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்பெயின் நாட்டில் இருந்து ஜேர்மனிக்கு வெள்ளரிக்காய்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதில் தாக்கிய பேக்டீரியாக்கள் மூலம் இந்நோய் பரவியதாக நோய் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டில் இளவரசர் சார்லஸ் புதிய மனைவி கமீலாவுடன் அமெரிக்காவுக்கு தனி வாடகை விமானத்தில் சென்றார். அப்போது அவரது பயணத்திற்கு மக்கள் பணம் 3 லட்சம் பவுண்ட் செலவழிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் இளவரசர் ஆண்ட்ரூ தனி ஜெட் பயன்படுத்திய வகையில் 1 லட்சம் பவுண்ட் செலவானது. இளவரசர் வில்லியமும் கதேவும் கனடாவில் 9 நாட்கள் பயணிக்கிறார்கள். கனடா பயணத்தை முடித்துக்கொண்டு இத்தம்பதி லாஸ் ஏஞ்சல்ஸ் செல்கின்றனர்.
வெள்ளரிக்காயை தாக்கிய என்டிரோகீமோ காகிக் இ.கோலி என்ற பேக்டீரியா மூலம் இந்த நோய் பரவி வருவதாக ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. இந்த நோய்க்கு ஜேர்மனியில் இது வரை 12 பேர் பலியாகி உள்ளனர். 1200 பேர் நோய் தாக்கிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் கீரை வகைகளை சமைக்காமல் பச்சையாக சாப்பிட வேண்டாம் என பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். எனவே அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நோய் தாக்குதல் காரணமாக ஜேர்மனியில் இருந்து வெளிநாடுகளுக்கு பச்சைக் காய்கறி ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்வதை ரஷ்யா தடை செய்துள்ளது.
போர்க்குற்ற விசாரணையில் உள்ள முன்னால் ஜெனரல் மிலாடிக் மிகவும் பலவீனம்.
செர்பியா போர்க்குற்ற நபராக கருதப்படும் ராட்கோ பலவீனமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.தனது உடலநலக் குறைவால் போர்க்குற்ற விசாரணையில் எதிர்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். போஸ்னியா முஸ்லீம்களை இனப்படுகொலை செய்தது தொடர்பாக மிலாடிக் மீது 16 ஆண்டுகள் விசாரணை நடந்தது.
இந்த நிலையில் மிலாடிக் ராட்கோ கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவர் மிகவும் பலவீனத்துடன் உள்ளார். 69 வயது முன்னாள் ஜெனரலின் உடல் நிலையை பரிசோதனை செய்ய டொக்டர்கள் தேவை என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ராட்கோ மிலாடிக் பதுங்கி இருந்த போது அவருக்கு இருமுறை மாரடைப்பு ஏற்பட்டது என வழக்கறிஞர் மிலோஸ் சாஜிக் தெரிவித்தார்.
1995 ம் ஆண்டு போஸ்னியாவின் ஸ்ரெப்னிகா நகரில் 8 ஆயிரம் முஸ்லீம்களை ஒட்டு மொத்தமாக ராட்கோ கொன்றார் என்ற குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது. இதற்காக சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்ற விசாரணையில் அவர் ஹொலந்தில் உள்ள ஹாக் நகரில் ஆஜராக வேண்டும் என விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.
ராட்கோ, செர்பியாவை விட்டு வெளியேற்றப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என அவர்கள் தெரிவித்தனர். பெல்கிரேடு நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை ராட்கோ மிலாடிக் சர்வதேச குற்ற விசாரணைக்கு அனுப்பலாம் என தீர்ப்பு அளித்தது. இந்த நிலையில் ராட்கோ மிலாடிக் கைதை கண்டித்து செர்பிய வீதிகளில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இதில் 100 பேரை பொலிசார் கைது செய்தனர். போராட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் நடந்த மோதலில் 16 பேர் காயம் அடைந்தனர்.
லிபியா ராணுவத்தில் இருந்து 5 ஜெனரல்கள் விலகல்: அதிபர் கடாபிக்கு நெருக்கடி முற்றுகிறது.
லிபியாவில் கடந்த பிப்ரவரி மாதம் 15 ம் திகதி முதல் கர்னல் கடாபி ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.இந்த போராட்டத்தின் உச்ச கட்டமாக தற்பொது நேட்டோ படைகள் தங்களது வான் வழி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன. இந்த தாக்குதலில் தலைநகர் திரபோலியில் பல ராணுவ தளங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. சர்வதேசப் படைகளின் தாக்குதல் கடுமையாகி உள்ளதால் 5 ஜெனரல்கள் 2 கர்னல்கள் மற்றும் ஒரு மேஜேர் கடாபியையை விட்டு விலகி உள்ளனர். இதனால் கடாபிக்கு நெருக்கடி முற்றுகிறது.லிபியாவை விட்டு வெளியேறிய இந்த ராணுவ தலைவர்கள் இத்தாலி தலைநகர் ரோமில் செய்தியாளர்களை சந்தித்தார்கள். லிபியா ராணுவம் அப்பாவி பொது மக்களை கொல்வதை கண்டித்து விலகி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
கடாபியின் ராணுவ வலிமை தற்போது 80 சதவீதமாக குறைந்துள்ளது. லிபியாவின் ராணுவத்தில் தற்போது 10 ஜெனரல்கள் மட்டுமே உள்ளனர் என விலகி வந்த தலைவர்களில் ஒருவரான ஜெனரல் மெலுத் மசூத் ஸால்சா தெரிவித்தார். லிபியாவில் தற்போது கடாபி படைகள் போராட்டக்காரர்ளை எதிர்த்து மிஸ்ரட்டா, பெங்காசி மற்றும் அஜ்டபியா பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.
போராட்டக்காரர்களுக்கு மேற்கத்திய படைகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. லிபியாவில் பிரிட்டனின் றொயல் விமானப்படை விமானங்கள் 2 ஆயிரம் பதுங்கு குழி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்போவதாக பாதுகாப்பு துறை அமைச்சர் லியாம் பாக்ஸ் தெரிவித்தார்.நேட்டோ பொதுச்செயலாளர் ஆண்டர்ஸ் போக் ராமுசன் கூறுகையில், கடாபியின் ஆட்சி முடிவை நெருங்கி வருகிறது என்றார். லிபியாவில் நிலவும் போரை முடிவுக்கு கொண்டுவர தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜாகப் சுமா தற்போது லிபியா வந்துள்ளார்.
2030 ம் ஆண்டில் உணவு பொருட்கள் விலை இரு மடங்கு அதிகரிக்கும்: ஆக்ஸ்பாம் சர்வதேச அமைப்பு எச்சரிக்கை.
உலக உணவு பொருட்கள் திட்டத்தில் தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இன்னும் 20 ஆண்டுகளில் உணவுப்பொருள் விலை 2 மடங்கு அதிகரிக்கும் என ஆக்ஸ்பாம் அமைப்பு எச்சரித்துள்ளது.ஆக்ஸ்பாம் என்பது சர்வதேச கூட்டமைப்பு ஆகும். இந்த கூட்டமைப்பில் 14 அமைப்புகள் உள்ளன. இந்த கூட்டமைப்பு 98 நாடுகளில் வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 2030 ம் ஆண்டு கால கட்டத்தில் முக்கிய பயிர்களின் விலை உயர்வு 120 சதவீதம் முதல் 180 சதவீதம் வரை அதிகரித்து இருக்கும். உணவுப்பொருட்கள் விலை உயர்வுக்கு 50 சதவீத காரணமாக பருவநிலை மாற்றமே முக்கிய பங்கு வகிக்கும். சிறந்த எதிர்காலம் என்ற தலைப்பிலான அறிக்கையில் ஆக்ஸ்பாம் இதனை தெரிவித்துள்ளது.
உணவுப்பொருள் முறை சரி செய்யப்பட வேண்டும். எதிர் வரும் பருவ நிலை மாற்றங்களை எதிர் கொள்ளவதற்கு உலக தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய நிலம், தண்ணீர் மற்றம் சக்தி இல்லாத நிலையில் உணவுப்பொருட்கள் விலை 2 முதல் இரண்டரை மடங்கு அதிகரித்து பொது மக்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.கௌதமாலாவில் 8 லட்சத்து 65 ஆயிரம் மக்கள் போதிய உணவு பாதுகாப்பு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்கள் அயல் நாடுகளில் உள் உணவு இறக்குமதியையே சார்ந்துள்ளனர். பிரிட்டன் மக்களை ஒப்பிடுகையில் இந்தியாவில் உள்ள மக்கள் தங்கள் வருவாயில் இரு மடங்கு தங்கள் உணவுப்பொருட்களுக்கு செலவழிக்கிறார்கள்.
அஜர்பைஜானில் கடந்த ஆண்டு கோதுமை உற்பத்தி 33 சதவீதம் குறைந்தது. மோசமான வானிலை காரணமாக அங்கு கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் அந்த நாடு ரஷ்யா, கஜகஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது. 2009 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் காணப்பட்ட விலையை காட்டிலும், 2010 ம் ஆண்டு டிசம்பர் மாதம் உணவுப்பொருள் விலை அங்கு 20 சதவீதம் அதிகரித்து காணப்பட்டது.
உணவுபொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் உலகில் பல லட்சம் மக்கள் பட்டினியில் பரிதவிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என உலக வங்கி எச்சரித்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்போது 80 லட்சம் மக்கள் உணவுப்பொருள் பற்றாக்குறையால் பெரிதும் அவதிப்படுகிறார்கள். வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் உணவு பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டை காட்டிலும் தற்பொது 36 சதவீதம் உணவுப்பொருள் விலை அதிகரித்துள்ளது.
இளவரசர் வில்லியம் - கதே மிடில்டன் எளிமை: சாதாரண விமானத்தில் பயணம்.
இங்கிலாந்து அரச குடும்பத்தினர் வெளி நாடுகளுக்கு செல்லும் போது பிரத்யேக விமானத்தில் பயணிப்பது உண்டு. இதற்கு விதிவிலக்காக இளவரசர் வில்லியம்ஸ் - கதே தம்பதி உள்ளனர்.அவர்கள் தனி விமானத்தில் பயணித்து பொது மக்கள் பணத்தை வீணடிக்க விரும்பவில்லை. அடுத்த மாதம் அவர்கள் வடக்கு அமெரிக்காவுக்கு செல்கிறார்கள். அப்பொழுது சாதாரண பயணிகள் விமானத்திலேயே செல்ல முடிவு செய்துள்ளனர்.
இளவரசரின் எளிமை பிரிட்டன் மக்களை மிகவம் கவர்ந்துள்ளது. சாதாரண பயணிகள் விமானத்தில் செல்வதால் பிரிட்டன் அரசின் 200 ஆயிரம் பவுண்டுகள் சேமிக்கப்படுகிறது. இளவரசி கதே தனக்கு என்று பிரத்யேக முடி அலங்கார நிபுணர் தேவை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அதே போன்று பெண் உதவியாளரும் தேவை இல்லை என கூறியுள்ளார்.
அந்த அரச தம்பதி வட அமெரிக்க பயணத்தின் போது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்திலேயே செல்கிறார்கள். கனடாவுக்கு இந்த தம்பதியினர் 2 வார பயணம் செல்கிறார்கள்.. இந்த பயணத்தின் போது அவர்கள் சாதாரண பயணிகள் விமானத்தை பயன்படுத்துவதால் பிரிட்டனுக்கு பெரும் செலவு தவிர்க்கப்படுகிறது. வில்லியம்ஸ் எளிமையை விரும்புகிறார். பொது மக்கள் பணத்தை வீணடிக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளார் என அவரது தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
ஜேர்மனியில் 2022 ஆம் ஆண்டு அனைத்து அணு உலைகளும் மூடப்படும்.
ஜேர்மனியில் இன்னும் 11 ஆண்டுகளில் அனைத்து அணு உலைகளும் மூடப்படுகினறன.அரசின் புதிய முடிவுப்படி அனைத்து அணு உலைகளும் 2002 ஆம் ஆண்டில் செயல் இழந்து விடும். ஜப்பானில் உள்ள புகுஷிமாவில் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி ஏற்பபட்ட நில நடுக்கம் காரணமாக முதன்மை அணு மின் நிலையம் பாதிக்கப்பட்டது. அந்த அணு மின்நிலையத்தில் ஹைட்ரஜன் வெடிப்பு ஏற்பட்டதால் கதிர்வீச்சும் பரவியது. இதன் காரணமாக பல மாதங்கள் ஜப்பான் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளளார்கள்.
ஜப்பான் அணு துயரம் உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ஜேர்மனியிலும் அணு மின்சார திட்;டத்திற்கு அரசியல் தலைவர்கள் பொது மக்கள் இடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து அணு மின் நிலையங்களும் வருகிற 2022 ஆம் ஆண்டு மூடப்பட்டு விடும் என ஏங்கலா மார்கெல் அரசு திங்கட் கிழமை அறிவித்தது.
இந்த அறிவிப்பை பெடரல் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நோபர்ட் ராட்கென் அறிவித்தார். அதிபர் ஏங்கலா மார்கெலின் கிறிஸ்டியன் டெமாக்கரேட்ஸ் (சிடியு) கட்சியும், இளைய கூட்டணி கட்சிகளும் 12 மணி நேரம் நடத்திய மரத்தன் கூட்டத்திற்கு பின்னர் ஜேர்மனியின் அனைத்து அணு மின் நிலையங்களையும் 11 ஆண்டுகளில் மூட முடிவு செய்யப்பட்டது.
கடந்த அக்டோபர் மாதம் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் அணு மின் நிலையங்களை மூடுவதற்கு 2036 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் எடுத்துக்கொள்ள ஆதரவு தெரிவிக்கப்பட்டது. ஜப்பான் அணு மின் நிலைய துயரத்திற்கு பின்னர் இந்த அணு மின் நிலையங்களை விரைவில் மூட ஜேர்மனி முடிவு எடுத்துள்ளது. ஜேர்மனியில் உள்ள அணு மின் நிலையங்களை வருகிற 2015 ஆம் ஆண்டிலேயே மூட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
லிபியாவில் நேட்டோ படைகள் குண்டு வீச்சு: பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசி மீது வழக்கு.
லிபியாவில் சர்வதேச படைகளான நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. இந்த கூட்டுப்படையில் பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் படைகள் உள்ளன.இந்த துருப்புகளில் அதி தீவிர தாக்கதலை நடத்த பிரிட்டனும் பிரான்சும் முயற்சி எடுத்;துள்ளன. லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி செய்து வரும் கர்னல் கடாபியை பதவியில் இருந்து தூக்கி எறியவும் புதிய ஜனநாயக ஆட்சியை மலர செய்யவும் நேட்டோ படைகள் தலைநகர் திரிபோலியில் கடாபி வீடு அருகே விமானங்கள் மூலமாக தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
பிரிட்டன் அபேச்ச என்ற அதி நவீன ஹெலிகொப்டர்களை பயன்படுத்த ராணுவத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸ் றொயல் டைகர்ஸ் என்ற சீறி பாயும் ஹெலிகொப்டர்களை தாக்குதலுக்கு பயன்படுத்துகிறது. ஆதி நவின ஆயுதங்கள் லிபியா போரில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் போர் குற்ற நிகழ்வுகள் நடக்கின்றன என்று நேட்டோ படைகள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பில் இரு பிரான்ஸ் வழக்கறிஞர்கள் பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி மீது வழக்கு தொடருகிறார்கள்.
ஜாக்குஸ் வெர்ஜஸ் மற்றும் ரொலண்ட் டுமாஸ் ஆகிய வழக்கறிஞர்கள் சர்கோசி மீது வழக்கினை தொடர இருக்கிறார்கள். இதனை லிபியா நீதித்துறை அதிகாரி இப்ராகிம் போக்சம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வெர்ஜஸ் 2 நாள் பயணமாக லிபியா வந்தார். அவர் கூறுகையில், பிரான்ஸ் அரசு வன்முறை கிரிமினல்களாலும், கொலைகாரர்களாலும் வழி நடத்தப்படுகிறது என்றார்.
வெர்ஜஸ் நாஜி போர் கிரிமினல் கிளாஜ் பார்பி மற்றும கார்லோசுக்காக ஆஜரானவர் ஆவார். முன்னாள் சமூகத்துறை அமைச்சரான டூமாஸ் கூறுகையில், இறையாண்மை நாடான லிபியா மீது நேட்டோ படைகள் கொடூரத் தாக்குதலை நடத்துகிறது என்றார். லிபியா தலைவர் கடாபிக்கு ஆதரவாக தாம் ஆஜராக தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி லிபியாவில் ராணுவத் தாக்குலை சர்கோசி துவக்கினார். பெங்காசியில் போராட்டக்காரர்களை லிபிய ராணுவத்தினர் தாக்க முயன்ற போது சர்கோசி இந்த தாக்கதலை துவக்கினார்.
கனடா பிரதமர் ஹார்ப்பர் ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணம்.
கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் திங்கட்கழமை ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார்.அவர் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள கனேடிய வீரர்களை பார்த்தார். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலை முறியடித்து அங்கு அமைதியை ஏற்படுத்த நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. இந்த கூட்டுப்படையில் அமெரிக்கா, ஜேர்மனி, கனடா வீரர்கள் உள்ளனர்.
கனடா வீரர்கள் விரைவில் ஆப்கானிஸ்தான் பயணத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்புகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் ஹார்ப்பர் ஆப்கானிஸ்தான் வந்துள்ளார். ஹார்ப்பர் காந்தகாரில் உள்ள பன்னாட்டு படைகள் முகாமில் இருந்து நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஸ்பெர்வான் கர் முகாமுக்கு ஹெலிகொப்டரில் சென்றார். அப்போது ஜெனரல் டீன் மில்னர் பிரதமரிடம் கூறுகையில் அந்த பகுதியல் இருந்து காந்தகாருக்கு அமைக்கப்பட்ட புதிய சாலை விவரத்தை தெரிவித்தார்.தலிபான்கள் ஆதிக்க இடமாக திகழ்ந்த டாரனக் பண்ணை பகுதியில் ஹார்ப்பர் பயணம் செய்தார். தற்போது அந்த இடத்தில் அமைதி ஏற்பட்டு கோதுமை மற்றும் பார்லி பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
கடந்த 2002 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் கனடாவின் 4 வீரரர்கள் இங்கு கொல்லப்பட்டனர். அந்த நாட்டில் கனடா பாதுகாப்பு படைக்கு ஏற்பட்ட முதல் உயிரிழப்பு நிகழ்வு அதுவாகும். ஆப்கானிஸ்தானின் இந்த பிராந்தியத்தில் சீரமைப்பு மேற்கொள்ள 40 லட்சம் டொலர் உதவியை அளிக்க கனடா உறுதி மேற்கொண்டுள்ளது.வருகிற ஜூலை மாதம் ஆப்கானிஸ்தானில் கனடா படை துருப்பு பயணம் முடிவடைகிறது. இருப்பினும் 950 வீரர்ள் பயிற்சி பணியில் ஈடுபட ஆப்கானிஸ்தானில் இருப்பார்கள்.
ஒசாமாவின் மறைவிடத்தை காட்டிக் கொடுத்த தலிபான்கள்.
ஒசாமா பின்லேடனை தலிபான் இயக்கத்தை சேர்ந்த ஒருவரே காட்டி கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் தங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க படை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுட்டு கொன்றது. ஒசாமா பின்லேடன், அபு அஹமத் அல் குவைடி என்பவர் தொலைபேசியை ஒட்டு கேட்டதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது பின்லேடனை அவரது நெருங்கிய கூட்டாளி முல்லா அப்துல் பாரடர் என்பவர் காட்டி கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலிபான் இயக்க தலைவர் முல்லா ஒமரின் நெருங்கிய உறவினரான முல்லா அப்துல் பாரடர் கடந்த வருடம் கராச்சியில் கைது செய்யப்பட்டார்.
அவர் சிறையிலிருந்து விடுதலையாகும் முன்பு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பின்லேடன் குறித்து முல்லா அப்துல் பாரடர் தகவல் கூறியிருக்கக்கூடும் எனவும், ஒசாமா பிடிபட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ ஆப்கனிலிருந்து படைகளை வாபஸ் பெற்றுக்கொள்வதாக பாரடரிடம் அமெரிக்க கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.முல்லா ஒமர் மற்றும் பின்லேடனுடன் மிகவும் நெருக்கமாயிருந்தவர் முல்லா அப்துல் பாரடர் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கூறுகையில்,"பின்லேடனுக்கும், அவரது நெருங்கிய கூட்டாளிகளில் ஒரு சிலருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது" என்றனர்.
சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்த ஒபாமா.
அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தின் ஜோப்லின் நகரை சில நாட்களுக்கு முன்பு கடும் சூறாவளி தாக்கியது. இதில் நகரமே சின்னாபின்னமானது.கடும் புயலில் கட்டிடங்கள், மரங்கள் பெயர்ந்து விழுந்ததால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. புயலின் கோரப் பிடியில் சிக்கி 140 பேர் இறந்தனர். 900 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் பலரை காணவில்லை. அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் 6 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற ஒபாமா நேற்று முன்தினம் நாடு திரும்பினார். சூறாவளி பாதித்த ஜோப்லின் நகருக்கு நேற்று சென்ற ஒபாமா அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
"இது உங்களுக்கு ஏற்பட்ட துன்பமல்ல. நாட்டுக்கே ஏற்பட்ட துன்பம்" என்று கூறிய ஒபாமா பல இடங்களுக்கு நடந்தே சென்று மக்களை சந்தித்தார்.