Wednesday, October 5, 2011

இன்றைய செய்திகள்.

உள்நாட்டில் போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்: அமைச்சர் சம்பிக்க.

பயங்கரவாதிகளுக்கும் பிரிவினைவாதத்திற்கும் துணைபோனவர்களுக்கு எதிராகவே உள்நாட்டில் விரைவில் போர்குற்ற விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கான சட்ட அங்கீகாரம் அரசியலமைப்பின் 157 ஆவது பிரிவில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசிற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் எந்தவொரு தரப்பையும் சட்டத்திலிருந்து தப்பிப்பதற்கு இடமளிக்கக் கூடாது. இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் சூழ்ச்சிகளின் பின்னணியில் உள்நாட்டில் சுதந்திரமாக உலாவும் பிரிவினைவாத சக்திகளே இருக்கிறன.
அரசிற்கும், பாதுகாப்புத் தரப்புகளுக்கும் நாட்டின் இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்நாட்டிற்குள் இருந்து கொண்டு பலர் செயற்படுகின்றனர். ஐ.நா. உள்ளிட்ட சர்வதேசத்தின் இலங்கைக்கு எதிரான சதிகளுக்கு இவர்கள் தகவல்களை கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக ஐ.நா.வின் நிபுணர்குழு அறிக்கைக்கு மிகவும் போலியான தகவல்களை நாட்டிற்கு எதிரான வகையில் உள்நாட்டிலிருந்தே வழங்கியுள்ளனர். இவ்வாறான தேசத்துரோக செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். பயங்கரவாதத்திற்கு பிரிவினைவாதத்திற்கு துணை சென்றவர்களையும் தொடர்ந்து துணை செல்பவர்களையும் விசேட நீதிமன்றில் போர்க்குற்றங்களின் அடிப்படையில் விசாரணை செய்ய வேண்டும்.
இலங்கை அரசியலமைப்பின் 157 வது பிரிவில் பிரிவினைவாதத்திற்கு எதிரான சட்ட விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.  இவற்றை பயன்படுத்தி உள்நாட்டில் செயற்படும் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். பயங்கரவாதத்தில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையில் தற்போது அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
இதனை சீர்குலைத்து நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துவதே சதிக்காரர்களின் திட்டமாகும்.  இதற்கு ஏதுவான பொறிமுறைகளே தற்போது சர்வதேசத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே சவால்களை இனங்கண்டு நாட்டில் பிவினைவாத கொள்கைகளுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.
எண்ணெய்வளம் கண்டுபிடிப்பதைத் தடுக்கவே நோர்வே விடுதலைப் புலிகளை ஆதரித்தது -அமைச்சர் சுசில்.
எண்ணெய் வளத்தையும், வாயு வளத்தையும் கண்டுபிடிப்பதை தடுத்து நிறுத்துவதே நோர்வேயின் நோக்கம் என்று அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த குற்றம் சாட்டியுள்ளார்.
எண்ணெய் வளத்தையும், வாயு வளத்தையும் கண்டுபிடிப்பதை தடுத்து நிறுத்தவே நோர்வே, புலிகளுக்கு ஆதரவளித்து அவர்களைக் காப்பாற்றி வந்ததாக பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த குற்றம்சாட்டியுள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டு வந்திராது போனால், மன்னார் பக்கம் யாரும் சென்றிருக்கவே முடியாது.
மன்னார் படுக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிவாயுவை இன்னும் மூன்று வருடங்களில் மின்உற்பத்திக்கும், போக்குவரத்துக்கும் பயன்படுத்தியிருக்க முடியும். முதலாவது எண்ணெய் கிணறு மூலம் ஹைட்ரோ கார்பன் என்ற வாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாகப் பயன்படுத்த முடியாது.
இந்த வாயுவை கடல் மட்டத்துக்கு மேல் கொண்டு வந்தால் மின்உற்பத்திக்காக பயன்படுத்த முடியும். அதன் மூலம் மிகக்குறைந்த செலவுடன் மின்உற்பத்தி செய்ய முடியும். கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிவாயு சமையலுக்காகப் பயன்படுத்தப்படும் திரவ எரிவாயு அல்ல.  இந்த இயற்கை எரிவாயுவை திரவநிலைக்குக் கொண்டுவர வேண்டும். இந்த திரவ எரிவாயுவைக் கொண்டே ஜப்பான், கொரியா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது மின்உற்பத்தித் தேவையில் 30 வீதத்தை பூர்த்தி செய்து கொள்கின்றன.
கடல் மேல்மட்டத்தில் இருந்து சுமார் 1354 மீற்றர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவை ஓரிரண்டு நாட்களில் மேலே கொண்டு வந்துவிட முடியாது. கடல் மட்டத்தில் தளம் அமைத்து எரிவாயுவை திரவநிலைக்கு மாற்ற வேண்டும்.
இதற்காக வெளிநாட்டில் இருந்து தொழில்நுட்பத்தைப் பெற வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.
15 பேர் அடங்கிய இந்திய இராணுவக்குழு இலங்கைக்கு விஜயம்.
இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் 15 பேர் அடங்கிய குழு ஒன்று இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.கொழும்பு சென்ற மேஜர் ஜெனரல் பி.கே கொஸ்வாமியின் தலைமையிலான இக்குழு இன்று கடற்படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்திருந்தது.
இந்திய, நேபாள, அமெரிக்க, வியட்னாமிய படை அதிகாரிகள் 15 பேர் இந்தக் குழுவில் இடம்பெறுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.7 பிரிகேடியர்கள், விமானப்படைத் தளபதி ஒருவர், ஒரு தளபதி, ஒரு பிரிகேடியர் ஜெனரல், ஒரு கெப்டன், ஒரு கொலனல், இரண்டு சிவில் அதிகாரிகள் அடங்கிய குழு ஒக்டோபர் 1ம் திகதி தொடக்கம் 7ம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில் தங்கியிருக்கும் என்று கூறப்படுகின்றது. 
இதற்கிடையே இந்தக் குழுவுக்குத் தலைமையேற்று வந்துள்ள மேஜர் ஜெனரல் பி.கே.கோஸ்வாமி நேற்று சிறிலங்கா இராணுவத் தளபதியையும், கடற்படைத் தளபதியையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதோடு, சிறிலங்காவின் இராணுவத் தலைமையகத்திலும், கடற்படைத் தலைமையகத்திலும் இந்தக் குழுவினருக்கு சிறிலங்காப் படைகளின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இலங்கையின் பல்வேறு இடங்களுக்கும் சென்று பாதுகாப்புத் தொடர்பான கட்டமைப்புக்களையும் செயற்பாடுகளையும் இக்குழுவினர் பார்வையிடவுள்ளனர்.
புகலிடம் கோரும் சீன நாட்டவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு!
இலங்கையில் புகலிடம் கோரிய சீன நாட்டவரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த சீனப் பிரஜை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தில் தன்னை பதிவு செய்து கொண்டுள்ளார். பான் ஜூன் என்ற சீனப் பிரஜையே இவ்வாறு புகலிடம் கோரியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தில் பதிவு செய்து கொண்டுள்ள காரணத்தினால் வீசா காலாவதியானாலும் குறித்த சீனப் பிரஜை இலங்கையில் தங்கியிருக்க முடியும் என அவரின் சார்பில் ஆஜரான பூபாலசிங்கம் மற்றும் செரின் அகிலன் ஆகிய சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.குறித்த புகலிடக் கோரிக்கையாளரை பிணையில் விடுதலை செய்ய முடியாது என நீதவான் லங்கா ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
தைவான் நாட்டில் சரக்கு கப்பல் மூழ்கியது: 6 பேர் பலி.
பனாமா நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் புயலில் சிக்கி இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியதில் 6 பேர் பலியாகினர். மேலும் 4 பேரை காணவில்லை.பனாமா நாட்டை சேர்ந்த ஜூவய் சிங் என்ற சரக்கு கப்பல் 21 கப்பல் பணியாளர்களுடன் சென்றது.தைவான் நாட்டிலுள்ள கீலூங் துறைமுகத்தில் இருந்து 11,500 டன் சரக்குகளுடன் கடலில் சென்றது. அடுத்த 90வது நிமிடத்தில் கடலில் வீசிய புயலில் சிக்கி கப்பல் அப்பகுதியில் இருந்த பாறையில் மோதி 2 துண்டாக பிளந்து கடலில் மூழ்கியது.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும், ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் பலியாகினர். 11 பேர் காப்பற்றப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. மேலும் காணாமல் போன 4 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். இதில் 3 கப்பல் பணியாளர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்.
இந்த கப்பலில் ஏற்றப்பட்டிருந்த 315.5 டன் கச்ச எண்ணெய் கடலில் கலந்துள்ளதால் மீட்புப் பணிகளில் துரிதமாக செயல்பட முடியவில்லை.மேலும் கடல்நீர் கடுமையாக மாசுப்பட்டுள்ளது. கடலில் எண்ணெய் பரவலை தடுக்க எண்ணெய் உள்வாங்கி அட்டைகள்(அப்சர்வன்ட் சீட்) ஆங்காங்கே மிதக்க விடப்பட்டுள்ளன. மேலும் எண்ணெய் கசிவை கண்டுபிடிக்க ரேடார் மூலம் கண்டுபிடிப்பு கருவியை பயன்படுத்தி வருகின்றனர்.
இங்கிலாந்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஆங்கிலத் தேர்வு: அரசு முடிவு.
இங்கிலாந்து நாட்டில் பணிபுரிந்து வரும் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த டாக்டர்களுக்கு அவர்களின் ஆங்கில அறிவை பரிசோதிக்கும் வகையில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.இந்த தேர்வு வரும் காலங்களில் கட்டாயமாக்கப்படுவதாக அந்நாட்டின் நேஷனல் ஹெல்த் சர்வீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டில் ஆண்டு தோறும் ‌வெளிநாடுகளை சேர்ந்த சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மருத்துவபயிற்சி மற்றும் மருத்துவதுறையில் சேவை செய்து வருகின்றனர்.இவர்கள் அனைவருக்கும் அந்நாட்டு மக்களுடன் எளிதாக தொடர்பு ‌‌கொள்ள முடியாத நிலை இருந்து வந்தது. மேலும் இச்சட்டம் நடைமுறையில் இருந்தாலும் அவற்றை யாரும் முறைப்படி கடைபிடிக்கப்படாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் மக்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் ஆங்கிலமொழி அறிவு குறித்த ‌தேர்வு நடத்தப்படும் எனவும், மக்களுடன் எளிதாக பேசும் அளவிற்கு பேச்சுத்திறனில் பயிற்சி அளிக்கப்படும் எனவும் இந்த பயிற்சிகள் வரும் ஆண்டுகளில் கட்டாயமாக்கப்படும் என அந்நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் ஆண்ட்ரூ லான்ஸ்லே தெரிவித்துள்ளார்.
தலாய் லாமாவுக்கு விசா மறுப்பு: தென் ஆப்ரிக்காவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது.
திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமாவுக்கு தென் ஆப்ரிக்கா விசா மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து தென் ஆப்ரிக்க அரசுக்கு எதிர்ப்பு வலுக்கிறது.திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமா. பல லட்சம் திபெத்தியர்களின் கடவுளாக போற்றப்படுபவர். இன்று வரை திபெத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடி வருகிறார்.இவரது இந்த அரிய பணிகளை பாராட்டி மகாத்மா காந்தி பெயரிலான சர்வதேச விருதை வழங்க தென் ஆப்ரிக்காவிலுள்ள ஒரு அமைப்பு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதை ஏற்று அவர் தென் ஆப்ரிக்கா செல்வதாக இருந்தார். இதையடுத்து தென் ஆப்ரிக்காவில் 9 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விசா கேட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லியில் உள்ள தென் ஆப்ரிக்க தூதரகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.இந்நிலையில் தலாய் லாமா தென் ஆப்ரிக்கா வந்து விருதை பெற்றுச்சென்றால் சீனாவின் கோபத்திற்கு ஆளாவோம் என்று அஞ்சிய அந்நாட்டு அரசு தலாய் லாமாவுக்கு விசா அளிக்க மறுத்து விட்டது.
தென் ஆப்ரிக்க அரசின் இந்த செயல் அங்கு பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இதுகுறித்து தென் ஆப்ரிக்க ஆர்ச் பிஷப் டெஸ்மண்ட் டுடு கூறுகையில், தென் ஆப்ரிக்க அரசு ஒரு இனத்தை ஒதுக்கும் செயலை விட மோசமான செயலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.தென் ஆப்ரிக்க வரலாற்றில் இது ஒரு கறுப்பு நாள் என வர்ணித்துள்ள டுடு, இதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
விசா மறுக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தலாய் லாமா தனக்கு விசா அளிப்பதில் தென் ஆப்ரிக்க அரசுக்கு சில வசதிக்குறைவு இருப்பதாக பெருந்தன்மையுடன் கூறியதோடு தனது தென் ஆப்ரிக்க பயணத்தையும் ரத்து செய்தார்.இனவெறியுடன் நடந்து கொள்வதற்காக கூறி தென் ஆப்ரிக்கா உலகின் மற்ற நாடுகளால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் 1992ம் ஆண்டு நடந்த தேர்தலில் கறுப்பர் இனத்தலைவர் நெல்சன் மண்டேலா தென் ஆப்ரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு இனவெறி ஒழிக்கப்பட்டது.
இனவெறியால் பாதிக்கப்பட்ட ஒரு நாடு, தானும் ஒரு இனத்தை ஒதுக்குவதும், தென் ஆப்ரிக்காவில் இனவெறி ஒழிய பாடுபட்ட நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தைப்பெறுகிறது.இந்தியாவின் தேசத்தந்தையான காந்தி பெயரில் வழங்கப்படவுள்ள விருதைப்பெற வந்த தலைவர் ஒருவருக்கு இந்தியாவின் போட்டி நாடாக கருதப்படும் சீனாவின் எதிர்ப்பை சம்பாதிக்க விரும்பாமல் தென் ஆப்ரிக்கா விசா மறுத்திருப்பதும் உலக பார்வையில் ஒரு புதிய கோணத்தில் பார்க்கப்படுகிறது.
உயர்ந்து வரும் கடல்மட்டத்தால் ஆபத்து: பான் கி மூன் எச்சரிக்கை.
கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் வரும் ஆண்டுகளில் கொல்கத்தா முதல் மியாமி வரையிலான கடலுக்கு அருகிலுள்ள பகுதிகள் பெரும் ஆபத்துக்கு உள்ளாக நேரிடும் என்று பான் கி மூன் எச்சரித்துள்ளார்.பருவகால மாற்றங்களால் உருவாகியிருக்கும் இந்த ஆபத்தை எதிர்கொள்ள சம்பந்தப்பட்ட நாடுகள் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் தனது செய்தியொன்றில் கேட்டுக்கொண்டார்.
பான் கி மூன் தனது செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது: கடல் மட்டத்திலிருந்து 1 மீட்டர் இடைவெளியில் உலகம் முழுவதும் 6 கோடி பேர் வசிக்கின்றனர். இந்த நூற்றாண்டின் முடிவில் இந்த மக்கள்தொகை 13 கோடியாக உயரும்.இந்நிலையில் கடல் மட்ட உயர்வு என்பது அவசரமாகக் கவனிக்க வேண்டியதாகிறது. கடலுக்கு அருகில் இருக்கும் முக்கிய நகரங்களான கெய்ரோ, நியூயார்க், கராச்சி, கொல்கத்தா, பெலம், நியூ ஆர்லியன்ஸ், ஷாங்காய், டோக்கியோ, லாகோஸ், மியாமி, ஆம்ஸ்டர்டாம் ஆகியன புயல் காற்றுக்கு அடிக்கடி ஆளாக வேண்டியிருக்கும்.
நகர்மயமாதலுக்கும் பருவகால மாற்றத்துக்கும் இடையே உள்ள தொடர்பு உண்மைதான். 2050க்குள் உலக மக்கள்தொகை 1999ம் ஆண்டு இருந்ததைவிட 50 சதவீதம் அதிகரித்திருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
2050ம் ஆண்டுவாக்கில் சுமார் 20 கோடி பேர் பருவகால மாற்றம் தொடர்பான காரணங்களால் தங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்கள்.எந்த நகரங்கள் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளனவோ அவைதாம் பருவகால மாற்ற ஆபத்திலிருந்து விடுபடுவதற்கான வழிகளைக் காண வேண்டும். காற்று, சூரிய ஒளி, பசுமை வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு சர்வதேச ஆதரவும் உள்நாட்டு ஆதரவும் அவசியம்.
மகாத்மா காந்தியின் கொள்கைகள் தவறானது: இங்கிலாந்து தலைவர் பேச்சு.
காந்தியின் கூற்று தவறானது என இங்கிலாந்தி்ன் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் என்பவர் தெரிவி்த்துள்ளது ‌பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட போரிஸ் ஜான்சன் என்பவர் பேசுகையில் இந்தியாவை சேர்ந்த மகாத்மாகாந்தியின் கூற்றான கிராமங்களில் தான் ஒரு நாடு வாழ்கிறது என்ற கூற்று முற்றிலும் தவறானது.
தற்போதைய சூழ்நிலையில் மக்கள் பெரும்பாலானோர் நகரங்களில் வசித்து வருகின்றனர். அவர்கள் கிராமங்களின் நினைவுகளை நினைத்து பார்ப்பதோடு சரி. மற்ற நேரங்களில் நகரங்களில் சம்பாதிப்பதையே குறிக்கோளாக உள்ளனர்.காந்தியின் கருத்துக்கள் அவரி்ன் காலத்திற்கு பொருந்தியதாக இருந்தாலும் தற்போது அது சாத்தியத்திற்கு இடமில்லை என பேசினார். காந்தியி்ன் கருத்து குறித்து போரிஸ் ஜான்சன் ‌பேசிய இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோமாலியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 70 பேர் பலி.
சோமாலியா தலைநகர் மொகாடிஷூவில் நடைபெற்ற கார் ‌வெடிகுண்டு தாக்கு‌தலில் 70க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
இது குறித்து ஆப்பரி்க்க யூனியனை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சோமாலியாவில் இயங்கி வரும் அல்கொய்தா ஆதரவு பெற்ற தீவிரவாதிகளே இத்தகைய சதிச்‌செயலை செய்திருக்க கூடும் எனவும், தலைநகர் அருகே உள்ள அரசு கட்டடத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது என்றும் கடந்த 2007ம் ஆண்டிற்கு பின்னர் நடைபெற்ற கொடூர தாக்குதல் இது என்றும் தெரிவித்தார்.
மேலும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும், காயமடைந்தவர்களின் விபரம் உடனடியாக தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கிரீஸ் நாட்டுக்கு வழங்க வேண்டிய கடன் நவம்பர் மாதம் வரை தள்ளிவைப்பு.
கிரீஸ் நாட்டுக்கு வழங்க வேண்டிய கடன் தவணை நவம்பர் மாதம் வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.அதேநேரம் நவம்பர் மாத மத்தி வரை ஓய்வூதியம், சம்பளம் உள்ளிட்டவற்றை வழங்க முடியும் என அந்நாட்டு நிதியமைச்சர் பல்டி அடித்துள்ளார்.கிரீஸ் நாட்டிற்கான இரண்டாவது கடன் தவணையான 109 பில்லியன் யூரோவில் இருந்து 8 பில்லியன் யூரோ பணத்தை செப்டம்பர் மாதம் வழங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் சர்வதேச நிதியமைப்பு(ஐ.எம்.எப்), ஐரோப்பிய யூனியன்(இ.யு) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி(இ.சி.பி) ஆகிய மூன்று அமைப்புகளும், தங்கள் பிரதிநிதிகள் கிரீசுக்குச் சென்று ஏற்கனவே கடன் வாங்குவதற்காக விதிக்கப்பட்டிருந்த சிக்கன நடவடிக்கைகளையும் இலக்குகளையும் அந்நாடு சரியாக நிறைவேற்றியிருக்கிறதா என்று பார்த்த பின் தான் 8 பில்லியன் யூரோவை வழங்க முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தன.
அதனால் இம்மாதம் முதல் வாரத்தில் கிரீஸ் கடன் தவணையைப் பெற்று விடும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஒரு வாரத்திற்கு முன் ஏதென்ஸ் வந்த மூன்று அமைப்புகளின் தணிக்கையாளர்கள் தற்போதும் அந்நகரில் இருந்து கிரீசின் சிக்கன நடவடிக்கைகளைப் பரிசோதித்து வருகின்றனர்.
இந்நிலையில் கிரீசுக்கு வழங்க வேண்டிய 8 பில்லியன் யூரோ குறித்து லக்சம்பர்க் நாட்டில் நேற்று முன்தினம் நடந்த ஐரோப்பிய யூனியன் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.அதில் நவம்பர் மாதம் அத்தொகையை வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் நேற்று முன்தினம் கிரீஸ் அரசு 2012ம் ஆண்டுக்கான சிக்கன பட்ஜெட்டை வெளியிட்டது. அந்நாட்டு பார்லிமென்ட்டில் இது ஒரு மனதாக ஏற்கப்பட்டது.
இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் நிதியமைச்சர்களின் முடிவு குறித்துப் பேசிய கிரீஸ் நிதியமைச்சர் இவாஞ்சலோஸ் வெனிசுலோஸ்,"நவம்பர் மாத மத்தி வரை கிரீஸ் அரசிடம் நிதி கையிருப்பு உள்ளது. அதனால் ஓய்வூதியம், அரசு ஊழியர்களுக்கான சம்பளம், கடன் பத்திரங்களுக்கான வட்டி ஆகியவற்றை அரசால் வழங்க முடியும்” என்று பல்டி அடித்தார்.
கடந்த மாதம் கிரீஸ் அரசிடம் அக்டோபர் 15ம் திகதி வரை தான் பணம் கையிருப்பு இருக்கும் என அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரீசுக்கு வழங்கிய கடன் தொகைக்கு ஈடாக 800 பில்லியன் யூரோ கடன் பத்திரங்கள் பின்லாந்துக்கு அளிக்கப்படும் எனவும் வெனிசுலோஸ் கூறினார்.
பிரபஞ்சம் குறித்த கண்டுபிடிப்பு: இயற்பியல் துறையில் மூவருக்கு நோபல் பரிசு.
பிரபஞ்சம் மிக வேகமாக விரிவடைந்து கொண்டே வருவதைக் கண்டுபிடித்ததற்காக இந்தாண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று இயற்பியலுக்கான இந்தாண்டு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி அமெரிக்கரான சால் பெர்ல்முட்டர்(52), அமெரிக்க ஆஸ்திரேலியரான ப்ரியான் ஷ்மிட்(44) மற்றும் அமெரிக்கரான ஆடம் ரீஸ்(42) ஆகிய மூவரும் இந்தாண்டுக்கான நோபல் பரிசைப் பெறுகின்றனர்.
கடந்த 1990ல் பிரபஞ்சம் குறித்த ஆய்வில் ஒரு குழுவில் பெர்ல்முட்டர் மற்றும் ஷ்மிட்டும் மற்றொரு குழுவில் ரீசும் பணியாற்றினர். இந்த ஆய்வில் சூப்பர் நோவாக்களில் இருந்து வெளிவந்த ஒளி எதிர்பார்த்த கால அளவை விட மிக தாமதமாகவே பூமியை வந்தடைந்தது கண்டறியப்பட்டது. இதன் மூலம் இந்தப் பிரபஞ்சம் மிக வேகமாக விரிவடைந்து வருவதை மூவரும் கண்டுபிடித்தனர்.
பரிசு அறிவிப்பு குறித்துப் பேசிய ஷ்மிட்,"நான் அவுஸ்திரேலியாவின் கேன்பெரா நகரில் என் குடும்பத்துடன் காலை உணவு அருந்த உட்காரும் போது நோபல் பரிசு எனக்குக் கிடைத்துள்ளதாக சுவீடனில் இருந்து தகவல் வந்தது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு பெறுமாறு அரசாங்கம் கனடா மக்களுக்கு அறிவுரை.
சைபர் தாக்குதல் பிரச்சனையானது இன்று முழு கனடாவையும் ஆட்டிப் படைக்கின்றது.இதன் காரணமாக கனடா அரசானது தங்கள் நாட்டு மக்களிடையே சைபர் பிரச்னை தொடர்பான பிரசார பணிகளை முன்னெடுத்து செல்கிறது.
அரசாங்கமானது மக்கள் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது தொடர்பாக விசேஷட கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.மக்கள் பாதுகாப்பு தொடர்பான பிரதி அமைச்சர் விக் டவர், சைபர் தாக்குதலில் இருந்து தங்களுடைய மின்னஞ்சல்களையும், கடவுச்சொற்களையும் பாதுகாக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.தொழில் நிறுவனங்கள் இது தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
http://getcybersafe.ca/ என்ற இணையதளமுகவரிக்கு செல்வதன் மூலமாக உங்கள் கணணிகளையும் சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம்.
இரட்டை வேடம் போடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்: பாகிஸ்தானை எச்சரிக்கும் ரோமினி.
ஆப்கன் தீவிரவாதிகளை ஊக்குவித்துக் கொண்டு அமெரிக்காவுடனான நல்லுறவில் அக்கறை கொள்ளுவது போல் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ரோமினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு இல்லை எனில் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர் மிட்டி ரோமினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.2012 நவம்பரில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பராக் ஒபாமாவை எதிர்த்து போட்டியிடுகிறார் மிட்டி ரோமினி.மாசாசுசேசூட் மாகாண முன்னாள் கவர்னரான ரோமினி நியூ ஹாம்பிசைர் என்னுமிடத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தினிடையே இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், பாகிஸ்தான் தனது எல்லையில் ஆப்கன் தீவிரவாதிகளை ஊக்குவித்து வருகிறது. ஒன்று அவர்கள் தலிபான்களுடன் இருக்க வேண்டும் அல்லது எங்களுடன் வரவேண்டும். எங்களுடன் வந்தால் நல்லதே நடக்கும். தலிபான்களுடன் சென்றால் எதிர்காலத்தில் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். பாகிஸ்தானின் இரட்டை வேடத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.
மிட்டி ரோமினி ஏற்கனவே 2007ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். அமெரிக்காவில் நிலவும் நிதிநெருக்கடியால் பொருளாதாரம் வேறு சரிவடைந்துள்ளது.அதனால் அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்துள்ள நிலையில் ரோமினி இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது அந்நாட்டு அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது.
மரணம் அடைந்தவருக்கு நோபல் பரிசு வழங்குவதில் சிக்கல்.
மருத்துவ துறைக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3 விஞ்ஞானிகளில் ஒருவர் இறந்ததால் பரிசு வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.சுவீடன் நாட்டில் வசித்த தொழிலதிபர் ஆல்பிரட் நோபல் டைனமைட்டை கண்டுபிடித்தார். இது அறிவியல் உலகில் மிகப்பெரும் மாற்றத்துக்கு வழிவகுத்தது.அவரது நினைவாக ஆண்டுதோறும் பல துறைகளில் உள்ள சிறந்த நிபுணர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அமைதிக்கான முதல் பரிசு கடந்த 1901ம் ஆண்டு வழங்கப்பட்டது.
மருத்துவ துறைக்கான நோபல் பரிசு கடந்த ஆண்டு டெஸ்ட் டியூப் முறையில் குழந்தை பெறும் முறையை உருவாக்கிய இங்கிலாந்து விஞ்ஞானி ராபர்ட் எட்வர்டுக்கு வழங்கப்பட்டது.இந்த ஆண்டு மருத்துவ துறைக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவை சேர்ந்த புரூஸ் பெட்லர்(55) பிரான்சை சேர்ந்த ஜூல்ஸ் ஹாப்மேன்(70) கனடாவில் பிறந்து அமெரிக்காவில் வசித்த ரால்ப் ஸ்டீன்மென்(68) ஆகிய 3 விஞ்ஞானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆஸ்துமா, மூட்டுவலி, புற்றுநோய், உடல் எரிச்சல் ஆகியவற்றை தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் புதிய முறையை கண்டுபிடித்ததற்காக இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று நோபல் பரிசு கமிட்டி நேற்று அறிவித்தது.இயற்பியல், ரசாயனம், இலக்கியம் மற்ற துறைகளுக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் விவரங்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட உள்ளன. அமைதிக்கான பரிசு வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.
இதற்கிடையில் நியூயார்க்கில் உள்ள ராக்பெல்லர் பல்கலைக்கழக தொற்றுநோய், எதிர்ப்பு சக்தி ஆராய்ச்சி பிரிவு தலைவராக பணியாற்றிய விஞ்ஞானி ரால்ப் ஸ்டீன்மென் கடந்த 30ம் தேதி கணைய புற்றுநோயால் இறந்துவிட்டார் என்று பல்கலைக்கழகம் தெரிவித்தது.
இது நோபல் பரிசு கமிட்டிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கும் நடைமுறை இல்லை. எனவே ரால்ப் ஸ்டீன்மென்னுக்கு பரிசு வழங்கலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து கமிட்டி செயலர் கோரன் ஹான்சன் கூறுகையில்,“இறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்குவதில்லை. எனினும் விஞ்ஞானி ரால்ப் இறந்ததால் அந்த பரிசுக்கு புதிதாக வேறு யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை. ரால்ப் தேர்வில் கமிட்டி உறுதியாக உள்ளது. எனினும் இறந்தவர்களுக்கு நோபல் பரிசு எப்படி வழங்குவது என்பது குறித்து கமிட்டி விதிமுறைகளை ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.
ஆல்பிரட் நோபல் பிறந்த தினமான டிசம்பர் 10ம் திகதி நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. மருத்துவத்துக்கான நோபல் பரிசு தங்க மெடல், ரூ.7.5 கோடி அடங்கியது. இந்த தொகையை விஞ்ஞானிகள் 3 பேரும் பகிர்ந்து கொள்வார்கள்.
வங்கதேச சுதந்திர போராட்டத்தில் வன்முறை: எதிர்க்கட்சி தலைவர் மீது குற்றச்சாட்டு.
வங்காளதேசத்தில் கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சுதந்திர போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டம் 9 மாதம் நடந்தது. அப்போது கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் மதமாற்றம் போன்ற சம்பவங்கள் நடந்தன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
சுதந்திர போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக 71 பேர் மீது நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
அவர்களில் எதிர்க்கட்சியான ஜமாத்- இ-இஸ்லாமியின் தலைவர் தெலாவர் உசேன் சையத்(71) என்பவரும் ஒருவர். இவர் மீது கொலை, கொள்ளை, கற்பழிப்பு, இந்துக்களை மதமாற்றம் செய்தல் உள்ளிட்ட 20 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சையத் மறுத்தார். தான் குற்றம் எதுவும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு தூக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக வக்கீல் ஒருவர் தெரிவித்தார்.
ஆப்கனில் மீண்டும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஆரம்பம்.
ஆப்கானிஸ்தானில் பெண்களில் உரிமைகள் மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.கடந்த 10 வருடங்களில் பெண்களின் சுதந்திரத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் தற்போது ஆபத்திலுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
சர்வதேசத் துருப்புக்களின் பின்வாங்கல் மற்றும் தலிபானுடனான அரசியல் ஒப்பந்தம் என்பன ஆப்கானிஸ்தான் பெண்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.தலிபான்களது செயற்பாடுகள் அடக்கப்பட்டிருந்த கடந்த 10 வருடங்களில் 2.7 மில்லியன் பாடசாலை செல்லும் பெண்பிள்ளைகள் கல்வியில் முன்னேறியதாக கணிப்பீடுகள் வெளியிடப்பட்டுள்ளது.அரசியல் ரீதியில் பார்த்தால் நாட்டின் பாராளுமன்றத்தில் 28 வீதம் பெண்கள் நுழைந்திருந்தனர். எனினும் அங்கு அதிகரித்துவரும் வன்முறைகளால் பெருமளவில் பாதிக்கப்படுவது பெண்களே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ளவர்களில் 87 சதவீதப் பெண்களும் உடல்ரீதியாகவும் மனோரீதியாகவும் அல்லது பலவந்தப்படுத்தப்பட்ட திருமண ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.2009 இல் கமீட் கர்சாய் ஆட்சியில் சியா குடும்பத்தினரின் சட்டத்தைக் கைச்சாத்திட்டதற்காக சர்வதேச விசாரணையை எதிர்கொண்டிருந்தார். இதில் சட்டரீதியான கற்பழிப்புகளும் உள்ளடங்கியிருந்தன என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்தன.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கர்சாய் தான் அந்தச் சட்டத்தினைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்றும் அதனை மாற்றியமைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.பெண்களின் பாடசாலைகள் தாக்கப்படுவது பெண்கள் அமைப்புக்கள் தலிபான் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் தடைசெய்யப்பட்டிருப்பது என்பன மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை அச்சத்திற்கு மூள்கடித்துள்ளது.
ஆப்கன் பெண்களுக்கு அமைதியே தேவை என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தலிபான்களுடன் மேற்கொள்ளும் ஒப்பந்தத்தால் பெண்கள் மீண்டும் தமது வீடுகளுக்குள் அடைக்கப்படக்கூடிய நிலை அவர்களுக்குத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள் மீது தாக்குதல்: 13 பேர் பலி.
தென்மேற்கு பாகிஸ்தானில் ஷியா முஸ்லீம் பிரிவினர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியானார்கள்.அல்கொய்தா மற்றும் தலிபான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்துள்ள சன்னி முஸ்லிம் பிரிவினர் சிறுபான்மையினராக உள்ள ஷியாக்கள் மீது சமீப காலமாக துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இன்று மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் குவெட்டாவின் புறநகரில் ஒரு காய்கறி மார்க்கெட்டில் பணிபுரிவதற்காக ஷியா பிரிவு முஸ்லீம்கள் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தை தடுத்து நிறுத்தி துப்பாக்கியால் சுட்டனர்.இதில் 12 ஷியா பிரிவு முஸ்லிம்களும், 1 சன்னி முஸ்லிமும் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜேர்மன் பண்ணையில் பயங்கர தீ விபத்து: 500 விலங்குகள் உயிரிழந்தன.
திங்கட்கிழமை அதிகாலை பவேரியன் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 500 விலங்குகள் உயிரிழந்ததாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த தீ விபத்தில் 400 பன்றிகள் முதல் 80 மாடுகள் வரை இறந்ததாக தெரிகிறது. இருந்தாலும் இந்த உயிரினங்களை காப்பாற்ற அதிகாரிகள் பெரிதும் போராடினர்.
இந்த தீ விபத்து குறித்து விசாரணையை பொலிசார் தொடங்கியுள்ளனர். விபத்தின் போது சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். இதனால் பல மில்லியன் யூரோக்கள் சேதமடைந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் கூரையில் இருந்த சோலார் கூரையின் மூலம் தீ விபத்தானது மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF