
பசுபிக் பிராந்தியத்திலுள்ள பின் தங்கிய தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்று காணாமல் போன நபரொருவர் அவரது வழிகாட்டியாக செயற்பட்ட ஹென்றி ஹெய்ட்டி என்ற இளைஞனால் கொலை செய்யப்பட்டு சமைத்துண்ணப்பட்டுள்ளமை தொடர்பான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகைச் சுற்றிய சுற்றுப் பயணத்தில் ஈடுபட்ட ஜேர்மனிய மாலுமியான ஸ்டீபன் ரமின் (40 வயது) பசுபிக் பிராந்தியத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த போது காணாமல் போனார்.
இந்நிலையில் குறிப்பிட்ட தீவில் சமையல் செய்வதற்காக தீ வளர்க்க பயன்படுத்தப்பட்ட இடத்தைச் சுற்றி 35 அடி தூரம்வரை துண்டாக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் வீசப்பட்டிருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து பெறப்பட்ட பல்லொன்று ஸ்டீபன் ரமினின் பல் தொடர்பான பதிவுகளுடன் பொருந்துவதாக அமைந்தது.இந்நிலையில் அங்கிருந்து கருகிய நிலையில் மீட்கப்பட்ட எலும்புகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த மரபணு பரிசோதனைகள் இன்றும் ஒரு வாரத்தில் பூர்த்தியடையவுள்ளன. ஸ்டீபனும் அவரது காதலி ஹெய்க் டோர்ஸ்ச்சும் (37 வயது) தமது சிறிய கப்பலில் உலகைச் சுற்றி பயணமொன்றை மேற்கொண்டுள்ளனர். இதன்போது கடந்த மாதம் மேற்படி தீவுக்கு அப்பால் தனது சிறிய ரக கப்பலை நங்கூரமிட்டிருந்தனர்.
இதன்போது ஸ்டீபன் தனது வழிகாட்டியான ஹென்றி ஹெய்ட்டியுடன் அத்தீவுக்கு வேட்டையாடச் சென்றார். எனினும் அவர் திரும்பி வரவில்லை.இந்நிலையில் திரும்பி வந்த ஹென்றி ஹெய்டி ஸ்டீபன் காயமடைந்துள்ளதாக தெரிவித்து அவரது காதலியான ஹெய்க்கை நுகுஹிவா தீவிலுள்ள காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் செல்ல முயன்றான். ஆனால் ஹெய்க் அவருடன் காட்டுக்குள் செல்ல மறுக்கவே ஹென்றி அவரை மரத்தோடு கட்டி வைத்து துன்புறுத்தியுள்ளார்.
எனினும் ஒருவாறு ஹென்றியிடமிருந்து தப்பிய ஹெய்க் தனது நிலை குறித்து பிராந்திய பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது ஸ்டீபனின் சடல எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இந்நிலையில் பிரான்ஸ் விசேட படையினர் ஹென்றியை தேடிக் கண்டு பிடிக்கும் முயற்சியில் திங்கட்கிழமை இரவு ஈடுபட்டனர்.