Monday, October 10, 2011

இன்றைய செய்திகள்.

முல்லேரியா துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் அதிகரிப்பு.

கடந்த தேர்தல் தினத்தன்று முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
அரசாங்கத்தின் இரண்டு ஆலோசகர்கள் துப்பாக்கிகளை பயன்படுத்தியது எவ்வாறு என்ற கேள்வி இந்த சம்பவத்தின் பின்னர் எழுந்துள்ளது என்று ஐக்கிய தேசியக்கட்சி குறிப்பிட்டுள்ளது.சம்பவத்தில் கொல்லப்பட்ட பாரத லச்மன் பிரேமசந்திர ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகராக செயற்பட்டார்.
கொலைக்கு பொறுப்பு என்று கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்புக்குழு உறுப்பினராக செயற்படுகிறார்.அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகனாக நாமல் ராஜபக்சவின் நண்பரும் ஆவார்.இந்தநிலையில் அரசாங்கம் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அதேநேரம் பாரத லச்மன் பிரேமசந்திரவின் கொலைக்கு பொறுப்பாளி என சந்தேகிக்கும் துமிந்த சில்வாவுக்கு எதிராக இதுவரை கைது ஆணை எதனையும் இலங்கையின் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.இந்த சம்பவம் இலங்கையில் அரசியல் வன்முறைகள் இடம்பெறுவதை தெளிவாக சுட்டிக்காட்டுவதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது. 
பாதாள உலகக் குழுவுடன் சேர்ந்தோர் அரசியலுக்கு வந்தால் இவ்வாறான கொடூர சம்பவங்கள் அரங்கேறும்! அமைச்சர் டியூ.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் அரசியலுக்கு வந்தால், நாட்டில் இவ்வாறான கொடூரச் சம்பவங்களே அரங்கேறும் என சிரேஷ்ட அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்தார்.
முல்லேரியா பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் ஜனாதிபதியின் ஆலோசகரும், தொழிற் சங்கப் பணிப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட மூவர் பலியாகினர்.இந்தச் சம்பவத்தில் கொழும்பு மாவட்ட ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரனின் ஆதரவாளர்களுக்கும், துமிந்த சில்வாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலினாலேயே இந்தக் கொடூரச் சம்பவம் அரங்கேறியது.இந்தச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் டியூ. குணசேகரவிடம் கருத்துக் கேட்டபோதே, பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் அரசியலுக்கு வந்தால் நாட்டில் இவ்வாறான சம்பவங்கள்தான் நடைபெறும் எனக் கூறினார்.
ஜனாதிபதி மீது பல்லின மக்களும் கொண்டுள்ள நம்பிக்கை இந்தத் தேர்தலில் புலனாகியுள்ளது : எஸ்.பி. திஸாநாயக்க.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது பல்லின மக்களும் கொண்டுள்ள நம்பிக்கை இந்தத் தேர்தலில் புலனாகியுள்ளது என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழ், முஸ்லிம், பேர்கர் உள்ளிட்ட ஏனைய இனங்களும் ஜனாதிபதி மீது நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.நகர மக்களுக்காக அரசாங்கம் முன்வைத்த யோசனைத் திட்டத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி.யும் சுமத்தி வந்த குற்றச்சாட்டுக்களுக்கு மக்கள் பதிலளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் கட்சி ஈட்டியுள்ள அமோக வெற்றி குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஆளுங்கட்சியின் தோல்வி குறித்து அமைச்சர்கள் மகிழ்ச்சி.
கொழும்பில் ஆளுங்கட்சியின் தோல்வி குறித்து ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கொழும்பில் ஆளுங்கட்சி வெற்றிபெறும் பட்சத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பிரதமர் பதவியில் நியமிக்கப்படுவார் என்று ஜனாதிபதி வாக்களித்திருந்தார்.அத்துடன் கொழும்பின் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் பாதுகாப்புச் செயலாளரின் பொறுப்பிலேயே விடப்பட்டிருந்தது.
அவ்வாறான நிலையில் கொழும்பில் ஆளுங்கட்சி பெற்ற தோல்வியானது கோத்தாபயவின் பிரதமர் கனவைக் கலைத்துள்ளதாக மகிழ்ச்சியடைந்துள்ள அமைச்சர்கள், இனி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ராஜபக்ச குடும்பத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றவாறாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இலங்கையில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும்: பிரிட்டன் வலியுறுத்து.
நல்லாட்சியை ஏற்படுத்துவதில் அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென மீண்டும் பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.எதிர்வரும; 2013ம் ஆண்டில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு இலங்கையின் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது. இதனால் மனித உரிமை விவகாரங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென பிரிட்டன் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள், நல்லாட்சி மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என பிரிட்டனின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுநலவாய நாடுகள் மாநாட்டினை ஒழுங்கு செய்துள்ள நாடு என்ற ரீதியில் இலங்கை அமைப்பின் முதன்மை கொள்கைகளை நிலைநாட்ட கடமைப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.அந்த வகையில் மேற்கண்ட விடயங்களில் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஏதேனும் மாற்றங்களை எதிர்பார்ப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் குற்றச்சாட்டுகள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் பிரிட்டன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நியூசிலாந்து கடல் பகுதியில் கச்சா எண்ணெய் கசிவு: கடல் உயிரினங்களுக்கு ஆபத்து.
நியூசிலாந்து கடல் பகுதியில் தரைதட்டிய கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பலை மீட்கும் பணி தொடங்கி உள்ளது.கிரிஸ் நாட்டைச் சேர்ந்த கோஸ்டமேர் இன்க் நிறுவனத்துக்கு சொந்தமான எம்வி ரீனா என்ற கப்பல் 1700 டன் கச்சா எண்ணெயை ஏற்றிக் கொண்டு லைபீரியாவுக்கு சென்றது.
இந்த கப்பல் மோசமான வானிலை காரணமாக கடந்த புதனன்று நியூசிலாந்தின் டவுரங்கா துறைமுகத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவில் உள்ள ஆஸ்ட்ரோலேப் ரீப் என்ற பகுதியில் தரையில் மோதியது.
இதையடுத்து கன்டெய்னர்களிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 20 முதல் 30 டன் கச்சா எண்ணெய் கடலில் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.ஒருவேளை அனைத்து கன்டெய்னர்களும் உடைந்து 1700 டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும்.
குறிப்பாக இப்பகுதி திமிங்கலம், டால்பின்கள், நீர் நாய்கள், பெங்குவின் மற்றும் பல்வேறு பறவைகளின் இருப்பிடமாக விளங்குவதால் இவற்றுக்கு பேராபத்து ஏற்படும் என அஞ்சப்படுகிறது.இந்நிலையில் தரைதட்டி உள்ள கப்பலில் உள்ள கச்சா எண்ணெயை கடலில் சிந்தாமல் மீட்பதற்கான பணியில் கடற்படையைச் சேர்ந்த 4 கப்பல்கள் மற்றும் 2 படகுகள் முழு வீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
“கச்சா எண்ணெய் கடலில் சிந்தாமல் தடுப்பதற்கான பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. நியூசிலாந்து கடல் பகுதியில் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதை குறைப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதாவது கச்சா எண்ணெயை கடலில் சிந்த விடாமல் வேறு கப்பலுக்கு மாற்றப்படும்” என கப்பலுக்கு சொந்தமான கோஸ்டோமேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் கசிவு காரணமாக பெங்குவின் மற்றும் கடல் பறவைகள் சில பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சில பலியானதாகவும் நியூசிலாந்து வனவிலங்கு சுகாதார மைய தலைவர் பிரெக் கார்ட்ரில் தெரிவித்துள்ளார். மேலும் கடல் உணவுகளை உண்ண வேண்டாம் என்றும் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்ராரியாவில் அதிகரிக்கும் சாலை விபத்துக்கள்.
மேற்கு ரொரன்ரோவிற்குச் செல்லும் Queen Elizabeth Way முதன்மை வீதியில் இரண்டாவது தடவையாக விபத்து ஏற்பட்டுள்ளது.இவ்விபத்தினால் பல மணித்தியாலங்கள் அவ்வீதி போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.சாரதி உடனடியாகவே உயிரிழந்ததாகவும் அவர் பயணித்த கார் வானில் பறந்து பல கார்களை மோதியபடி கீழே விழுந்ததாகவும் சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.
இது இவ்வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாரிய விபத்து இதுவாகுமெனக் காவற்றுறையினர் கூறினர்.
எகிப்தில் திடீர் கலவரம்: 19 பேர் பலி.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் திடீரென ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 19 பேர் வரை கொல்லப்பட்டனர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் குறிப்பிட்ட இனமக்கள் வழிபாடு நடத்தி கொண்டிருந்தனர். அப்போது வாகனம் ஒன்றில் வந்தநபர்கள் வழிபாடு நடத்தி கொண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலில் சுமார் 19 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து நகர் முழுவதும் கலவரம் பரவியது. இச்சம்பவத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இறந்து போனதாகப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சீன அதிபர்.
சீனாவின் முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின்(85) இறந்து போனதாகப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் நேற்று அவர் ஆளும் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
சீனாவில் 1989ல் நிகழ்ந்த தியானன்மென் சதுக்கப் போராட்டத்திற்குப் பின் 1993 முதல் பத்தாண்டுகளுக்கு அதிபராக இருந்தவர் ஜியாங் ஜெமின்.

மார்க்சிசக் கொள்கைகளை வலுப்படுத்தும் விதமாக இவர் எழுதிய மூன்று பிரதிநிதிகள் என்ற கொள்கைகள் மத்திய மற்றும் மாகாண அரசியல் சாசனங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.
சீனாவில் மூத்த தலைவர்களின் உடல் நிலை பற்றிய விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் ஜெமின் இறந்து போனதாக ஹாங்காங் வானொலி நிலையம், கடந்த ஜூலை மாதம் அறிவித்தது.அதைப் பொய்யாக்கும் விதத்தில் சீனாவில் மன்னராட்சி தூக்கி எறியப்பட்ட 100 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த ஆளும் கட்சிக் கூட்டத்தில் நேற்று அவர் கலந்து கொண்டார்.
இன்று சர்வதேச மரண தண்டனை எதிர்ப்பு தினம்.
குற்றம் புரிந்தவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளில் மிக கொடுமையான தண்டனை மரண தண்டனையாகும்.
பெரும்பாலான நாடுகளில் மரண தண்டனை இல்லை. தற்போது மரண தண்டனையைக் கொண்டுள்ள நாடுகளும் அதைக் கைவிட வேண்டும் என்ற நோக்கத்தில் “மரண தண்டனை எதிர்ப்பு நாள்” ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ல் கடைபிடிக்கப்படுகிறது.
2002 மே 13ல் ரோமில் கூடிய என்.ஜி.ஓ.க்கள் கூட்டத்தில் மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின் 2003 அக்டோபர் 10 மரண தண்டனை எதிர்ப்பு நாளாக அறிவிக்கப்பட்டது. செய்யாத குற்றம், மொழி புரியாததால் அடைந்த தண்டனை, ஆராயப்படாத நீதி, மூளை வளர்ச்சி இல்லாதவர் செய்த குற்றம், சிறுவயதில் செய்த குற்றம் ஆகியவை காரணமாக உலகில் ஐந்து பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
நீதி இல்லாமல் அநீதியான முறையில் 5 பேர் மரண தண்டனை பெற்றுள்ளனர். இனி இதுபோல் நடக்காமல் இருக்க மரண தண்டனை முறையை உலக நாடுகள் அனைத்தும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் மரண தண்டனை எதிர்ப்புக் குழுவினர்.
இந்தியா, சீனா, அமெரிக்கா இணைந்து செயல்பட வேண்டும்: ஹிலாரி கிளிண்டன்.
இந்தியா, சீனா, அமெரிக்கா இடையே வலுவான, அமைப்புரீதியான உறவு தேவை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார்.
இந்திய, அமெரிக்க நாடுகளுக்கிடையேயான உறவுகள், உலக விவகாரங்களில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவு குறித்து செய்தியாளர்கள் சனிக்கிழமை கிளிண்ட்டனிடம் கேள்வியெழுப்பினர்.
அப்போது மேற்கண்ட கருத்தை அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே வலுவான, அமைப்புரீதியான நல்லுறவு நிலவ வேண்டும்.
அதன் மூலம் 21-ம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத பிரச்னைகள் தீர்க்கப்படவேண்டும். இந்தியாவின் தலைமையில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளோடு ஆசிய-பசிபிக் நாடுகளின் எதிர்காலமும் அமைதியான முறையில் வடிவமைக்கப்படவேண்டும்.
இதற்காக இந்தியா கிழக்கு நாடுகளில் மட்டும் கவனம் செலுத்தாது அந்நாடுகளின் துணையுடன் உலகின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்.
இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் வலுவான உறவை மேற்கொள்ளும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபடும். இத்தகைய கூட்டுத் தலைமையை எட்டுவது என்பது எளிதானதல்ல.
இந்த 3 நாடுகளிடையேயும் பல்வேறு பிரச்னைகளில் ஒருமித்தக் கருத்து கிடையாது. இருந்தாலும் சில பொதுவான பிரச்னைகளில் குறிப்பிடத்தக்க ஒத்தக் கருத்துகளை இம்மூன்று நாடுகளும் கொண்டிருக்கின்றன.
அதனடிப்படையில் இந்த நூற்றாண்டின் தீவிரமான சில பிரச்னைகளில், முடிவுகளை எட்டும் நோக்கில் இந்நாடுகள் கூட்டாக தங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மற்ற நாடுகளுடனான இந்தியாவின் உறவு இந்தப் பிராந்தியத்துக்கே உதாரணமாக திகழ்கிறது. ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் இந்தியா ரூ.98 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது.
பிராந்திய பாதுகாப்பு, வளர்ச்சி, புதுப்பிக்கவல்ல எரிசக்தி ஆகிய விஷயங்களில் இந்தியாவும், அமெரிக்காவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்க அரசினால் ஊக்குவிக்கப்படுகிறது.
அதேபோல் இந்திய நிறுவனங்களும் அமெரிக்காவில் முதலீடு செய்யப்படுவதை வரவேற்கிறோம். அடுத்த வாரம் நடைபெறவுள்ள இந்திய- அமெரிக்க உயர்கல்வி குறித்தக் கருத்தரங்கில் இரு நாடுகளுக்கிடையேயான கலாச்சார உறவுகள் பரிமாறப்படும்.
அதோடு மட்டுமல்லாமல் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் இரு நாடுகளின் நிலைபாடுகள் குறித்த கருத்துகளும் பரிமாறிக் கொள்ளப்படும். இதன் மூலம் புதிய தளங்களிலும் கூட்டுறவு ஏற்பட வாய்ப்புண்டு.
இந்தியாவிலிருந்து மாணவர்களும், ஆசிரியர்களும் அமெரிக்காவுக்கு அதிகளவு வரவேண்டும், அதேபோன்று அமெரிக்க மாணவர்களும், ஆசிரியர்களும் இந்தியா செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம்.
பாகிஸ்தானுடன் ஆழமான, நீடித்த உறவு நிலவ வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புகிறது. இருப்பினும் சில நேரங்களில் சிக்கலான, சவாலான சூழ்நிலைகள் இரு நாடுகளுக்கிடையேயும் ஏற்பட்டு விடுகிறது.
ஆயினும் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இணைந்து போரிடவேண்டும் என்ற சிக்கலான தேவையை இருநாடுகளும் உணர்ந்திருக்கின்றன. அதனடிப்படையிலேயே அல்கொய்தாவை அழிப்பதற்காக நாங்கள் போராடி வருகிறோம் என்றார்.
பாகிஸ்தானில் பள்ளி மாணவியர்களை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல்.
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றில் முகமூடி அணிந்த 60 மர்ம நபர்கள் புகுந்து மாணவியர் மற்றும் ஆசிரியைகளை இரும்புக் கம்பியால் அடித்து நொறுக்கியுள்ளனர்.
ராவல்பிண்டி நகரில் எம்.சி.மாடல் பெண்கள் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதில் 400 மாணவியர் படிக்கின்றனர். 30க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். இதன் அருகில் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி உள்ளது.
கடந்த 8ம் திகதி முகமூடி அணிந்த 60க்கும் மேற்பட்டோர் கைகளில் இரும்புக் கம்பிகளுடன் பெண்கள் பள்ளிக்குள் நுழைந்தனர். மாணவியரும், ஆசிரியைகளும் ஆடம்பரமாக பொருத்தமில்லாத உடையணிந்து வருவதாக குற்றம்சாட்டிய அவர்கள் அனைவரையும் இரும்புக் கம்பிகளால் அடித்து நொறுக்கினர்.
பின் அடக்க ஒடுக்கமாக ஆடை அணிந்து வர வேண்டும். அனைவரும் தலையில் அணியும் ஹிஜாப் அணிய வேண்டும் என மிரட்டியுள்ளனர்.
இச்சம்பவம் அருகில் உள்ள ஆண்கள் பள்ளியில் இயங்கி வரும் எம்.சி பள்ளிகள் நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டது. எனினும் தாக்கியவர்கள் சிறிது நேரத்தில் தப்பி ஓடிவிட்டனர்.
இச்சம்பவத்தை அடுத்து நகரில் மக்கள் மத்தியில் பீதி பரவியது. இதனால் நேற்று முன்தினம் பள்ளிக்கு வெறும் 40 மாணவியரே வந்திருந்தனர். பல பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
அனைத்துப் பள்ளி நிர்வாகங்களும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எம்.சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் தங்களால் மாணவியரைக் காக்க இயலாத போது இச்சம்பவங்களை எப்படித் தடுக்க முடியும் என ஆசிரியைகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பொலிசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
தலாய்லாமாவுக்கு விசா அளிக்காதது ஏன்: தென்னாப்ரிக்காவின் வேடம் அம்பலம்.
திபெத்திய புத்தமதத் தலைவர் தலாய்லாமாவுக்கு தென்னாப்ரிக்க அரசு விசா அளிக்க மறுத்ததற்கு சீனாவுடனான உறவு பாதிக்கப்படும் என்பதுதான் காரணம் என தற்பொழுது தெரியவந்துள்ளது.
தென்னாப்ரிக்க ஆர்ச் பிஷப்பும், நோபல் பரிசு பெற்றவருமான டெஸ்மாண்டு டுட்டுவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக தலாய்லாமாவுக்கு டுட்டு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் தென்னாப்ரிக்க அரசு இறுதி வரை லாமாவுக்கு விசா அளிக்கவில்லை. அதற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் சீனா நெருக்கடியால் விசா அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்தது.
இதனால் தலாய்லாமா தனது தென்னாப்ரிக்க பயணத்தை ரத்து செய்தார். அவருக்கு ஆதரவாக தென்னாப்ரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. டுட்டுவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது இந்தியாவின் தர்மசாலாவில் இருந்து வீடியோபோன் மூலம்  தலாய்லாமா பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: சீன அதிகாரிகள் என்னை பேயாகக் கருதுகின்றனர். சிலர் பேசும் உண்மை சீனாவுக்கு அசவுகரியமாக இருக்கிறது. இதுபோன்ற ஏமாற்று வேலைகள் எல்லாம் சீன கம்யூனிசத்தின் ஒரு பகுதி என்று சீனா மீது கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் தென்னாப்ரிக்காவில் இருந்து வெளிவரும் “சிட்டி பிரஸ்” வாரப் பத்திரிகை அரசின் வெளியுறவு அமைச்சக ஆவணம் ஒன்றை கைப்பற்றியுள்ளது.
அந்த ஆவணத்தில் கூறியிருப்பதாவது: சீனா, தென்னாப்ரிக்காவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளி. திபெத் விடுதலையை நிராகரித்து ஒரே சீனா என்ற கொள்கையை ஏற்றுக் கொள்வதின் அடிப்படையில் தான் இரு தரப்பு உறவும் உள்ளது.
திபெத் விடுதலை சீன இறையாண்மைக்குச் சவால். அதனால் சீனாவின் இறையாண்மை காக்கப்பட வேண்டும் என்பதை தென்னாப்ரிக்கா அங்கீகரிக்கிறது. இவ்வாறு அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணத்தை வெளியிட்டுள்ள சிட்டி பிரஸ் சீனாவின் நெருக்கடியால் தான் தென்னாப்ரிக்கா தலாய்லாமாவுக்கு விசா அளிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளது.
நத்தை வேகத்தில் நகரும் வேலையற்றோர் வீத குறைப்பு.
அமெரிக்கப் பொருளாதாரத்தினால் செப்டெம்பர் மாதத்தில் எதிர்வு கூறப்பட்டதை விட 103,000 வேலைகள் இணைக்கப்பட்டுள்ளன.
9.1 வீதமாக வேலையற்ற வீதம் நிறுத்தப்பட்டுள்ளது என தொழில் திணைக்களத்தினால் இறுதியாக வெளியிடப்பட்ட தரவில் கூறப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட வேலையாட்கள் மீண்டும் தமது வேலைக்குத் திரும்பியதால் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் ஆகஸ்ட் மற்றும் ஜுலை மாதங்களில் வேலைவாய்ப்புக்கள் அதிகரித்தே காணப்படுகின்றன.
கடந்த மாதம் ஜனாதிபதி பராக் ஒபாமா வேலைகளை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு 450 பில்லியன் டொலர் திட்டங்களை வெளிப்படுத்தியிருந்தார்.
புதிய வேலைகள் சேர்க்கப்பட்டாலும் வேலையற்ற தன்மை தொடர்ந்தும் அதிகளவில் இருக்கத்தான் செய்கின்றது.
ஆகஸ்ட் மாதம் வேலைப் புறக்கணிப்பில் ஈடுபட்ட வெரிசன் தொலைத்தொடர்புத் தொழிலாளர்கள் 45,000 பேர் மீண்டும் வேலைக்குச் சென்றதனாலேயே இந்த வேலைவாய்ப்புத் தொகை அதிகரித்துள்ளது.
வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதென்பது வெளிவாரியாகக் கூறப்பட்டாலும் அது இன்னும் மந்த கதியிலேயே உள்ளதெனலாம்.
வர்த்தக சேவைகளிலும் சுகாதார நிறுவனங்களிலும் புதிய வேலைகள் கிடைக்கின்றன என்பதுடன் கட்டட உருவாக்கமும் பெப்ரவரியில் முதன்முறையாக எழுந்துள்ளதெனலாம்.
எனினும் கடைகளில் இன்னும் வேலைகள் வெட்டப்படுகின்றன. இதில் 34000 வேலைகள் இழக்கப்பட்டுள்ளன. கடந்த மாதத்தைவிடவும் இது குறைவாகக் காணப்படுகின்றதென்பது உண்மைதான்.
இது நல்ல செய்தியல்ல எனினும் மிகவும் நத்தை வேகமிக்கதென்றே இதைக் கூறலாம். வேலை அறிக்கைகள் பயமுறுத்தியதைவிடவும் குறைவாக இருந்தாலும் பொருளாதாரம் இன்னும் உயரவில்லையென்றார் அமெரிக்க முதன்மைப் பொருளாதார நிபுணர்.
திரு.ஒபாமாவின் வேலைத்திட்டத்தில் கட்டட அமைப்புத் திட்டங்கள், பாடசாலைகள் மற்றும் சேவைகள் என்பனவற்றிற்கு நிதியளிக்கும் அதேவேளை தொழிலாளிகளுக்கும் சிறிய வர்த்தகத்தினருக்கும் வரிவெட்டலை மேற்கொள்ளும் முறை காணப்பட்டது.
பணக்கார மக்களிற்கு மட்டுமே வரியறவிடல் முறையை முன்வைத்த திட்டம் குடியரசுக் கட்சியால் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து திரு. ஒபாமா காங்கிரசில் நிதி ஒதுக்கீட்டைப் பெறப் பெரும் போராட்டத்தை மேற்கொள்கின்றார்.
இந்தியா, இங்கிலாந்து கடற்படைகள் இணைந்து கூட்டுபயிற்சி.
இந்தியா, இங்கிலாந்து கடற்படைகளின் வருடாந்திர கூட்டுப் பயிற்சி இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.
கொங்கண் என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டுப் பயிற்சியில் அணு விசையில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களும் இடம் பெறுகின்றன.
இந்தியாவில் ஐ.என்.எஸ்.ஷங்குஷ் மற்றும் இங்கிலாந்தின் டிரபால்கர் வகை நீர்மூழ்கி கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவிடம் இருந்து நெர்பா கே. 152 என்ற அணுவிசை நீர்மூழ்கி கப்பலை பெறவுள்ள நிலையில் அணுவிசை நீர்மூழ்கி கப்பல்களை கையாள்வதற்கான தனித்த பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது இதுவே முதல் முறையாகும்.
இந்தியா, வங்கதேசம் இடையே முதல் முறையாக ராணுவ கூட்டு பயிற்சி நடைபெறவுள்ளது. வங்கதேசத்தில் சில்ஹெட் பகுதியில் நடைபெறவுள்ள இந்த கூட்டு பயிற்சிக்கு ஆபரேசன் சம்ப்ரிதி என்று பெயரிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ஆளில்லா விமானங்களை வைரஸ் தாக்கியது.
அமெரிக்கா ஆளில்லாமல் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் சிறிய விமானங்களை தயாரித்துள்ளது. இவை முற்றிலும் கணணி மயமாக்கப்பட்டுள்ளது.
இந்த விமானங்கள் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஏமனில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் மீது ஏவுகணைகள் வீசி அழிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆளில்லா விமானங்களை இயக்கும் கணணியில் வைரஸ் கிருமிகள் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கணணி மையம் அமெரிக்காவின் நிவேடாவில் உள்ள கிரீச் விமான படை தளத்தில் உள்ளது. இந்த தகவல் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் “லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்” பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலால் ஆளில்லா விமானங்கள் இயங்குவதில் எந்த தடையும் ஏற்படாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் வைரஸ் கிருமிகள் எங்கிருந்து பரப்பப்பட்டன என தெரியவில்லை. அவை தற்செயலாக நடந்த நிகழ்வா? அல்லது வானிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டதா? எனவும் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF