Sunday, October 16, 2011

இன்றைய செய்திகள்.

வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல அமெரிக்காவின் உதவியை நாடிய சரத் பொன்சேகா : வீக்கிலீக்ஸ்.

தான் உள்ளிட்ட தமது குடும்பத்தினர் வெளிநாடு செல்லும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறு சரத் பொன்சேக்கா அமெரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல்கள் வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று இரண்டு தினங்கள் செல்லும் முன்னர், தான் உள்ளிட்ட தமது குடும்பத்தினர் வெளிநாடு செல்லும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு முன்னாள் இராணுவ தளபதியும், எதிர்க்கட்சியின் பொது வேட்பாளருமான சரத் பொன்சேக்கா அமெரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல்கள் வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், வோஷிங்டனில் உள்ள ராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பி கேபிள் தகவல்களை அடிப்படையாக கொண்டு, அந்த இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூர் நோக்கி செல்லவே சரத் பொன்சேக்கா கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் இலங்கை படையினர் அவர் தங்கியிருந்த விடுதியை சுற்றிவளைத்திருந்ததுடன், அவர் போய் வரும் இடங்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வந்தன. இதன் பின்னர், சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவர் கைதுசெய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக மேலும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பாரத்த படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை இந்தியாவிற்கு அனுப்பிய வைத்த ஆளும் கட்சி அரசில்வாதி.

பாரத்த லக்ஸ்மன் பிரேமசந்திர படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்த சம்பவத்தின் பின்னணியில் ஆளும் கட்சி அரசியல்வாதி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.சந்தேக நபர்கள் இருவரும் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் முக்கிய நாடாளுமன்ற உறப்பினர் ஒருவரே இந்த நபர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற தினமன்று இரவே குறித்த இருவரும் முஸ்லிம் பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவருடன் இணைந்து சென்னைக்கு சென்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.சந்தேக நபர்களுக்கு குறித்த அரசியல்வாதி விமான டிக்கட்டுகளை வழங்கியுள்ளார்.
இலங்கையர்கள் அனைவரும் இலத்திரனியல் பதிவுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர் : பாதுகாப்பு அமைச்சு.

இலங்கையர்கள் அனைவரினதும் விபரங்களை உள்ளடக்கிய தேசிய இலத்திரனியல் பதிவு ஒன்றை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு மேற்கொள்ளவுள்ளது.
இதற்காக 14.5 பில்லியன் ரூபாய்கள் செலவி;டப்படவுள்ளன.
இலங்கையில் நடைமுறையில் உள்ள தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக அனைத்து இலங்கையர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இலத்திரனியல் அடையாள அட்டை தொடர்பான தகவல் கடந்த ஜூலை மாதத்தில் அரசாங்கம் அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தது.நாட்டின் எதிர்கால பாதுகாப்பு கருதி இந்த திட்டம் அமுல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இலங்கையர் ஒருவர் தொடர்பில் சில நிமிடங்களுக்குள் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கையில் நடைமுறையில் உள்ளது ராஜபக்சவின் சட்டமா? விரைவில் இது உறுதியாகும்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொல்லப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.எனினும் அரசாங்கம் இதுவரை அவரை குற்றச்சாட்டுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை தவிர்த்தே வருகிறது.
இந்தநிலையில் கொலன்னாவ முல்லேரியாவில் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உட்பட்ட நால்வர் கொல்லப்பட்ட  சம்பவத்தில் இருந்து துமிந்த சில்வா, தப்பித்தால், அது இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டத்துக்கு பதிலாக ராஜபக்சவின் சட்டமே உள்ளது என்பதை உறுதிப்படுத்தும்.
இந்த கருத்தை ட்ரான்ஸ்கரன்ட் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
குறித்த கொலை சம்பவங்களின் போது துமிந்த சில்வாவே முதலில் பாரத லக்ஸ்மனை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தார் என்றும், அதன் பின்னர் தமது பாதுகாவலர்களை லக்ஸ்மன் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யுமாறு துமிந்த சில்வா உத்தரவிட்டதாகவும் பாரத லக்ஸ்மனின் வாகன சாரதி சாட்சியமளித்திருந்தார்.அத்துடன் பாரத லக்ஸ்மனுக்கு துமிந்த சில்வா ஏற்கனவே உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக வெல்லம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தநிலையில் துமிந்த சில்வா, குறித்த கொலை சம்பவத்தில் சந்தேகநபர் இல்லை என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் உலுகல்ல தெரிவித்துள்ளார்.
எனவே துமிந்த சில்வாவை இந்தக்கொலை குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க வைக்கவே அரசாங்கம் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிக்கின்றன.இலங்கையின் பாதுகாப்பு கண்காணிப்புக்குழு நாடாளுமன்ற உறுப்பினராக துமிந்த சில்வா செயற்பட்டு வருகிறார்.எனவே துமி;ந்த சில்வா தப்பிக்க வைக்கப்பட்டால் இலங்கையில் தற்போது நடைமுறையில் இருப்பது ராஜபக்சவின் சட்டமே என்பது உறுதியாகிவிடும் என்று ட்ரான்ஸ்கரன்ட் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
கார் வெடிகுண்டு தாக்குதல்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அமைச்சர்.
தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் அமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினார்.பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாண சேவை மற்றும் பொது நிர்வாகத் துறை அமைச்சர் சனாவுல்லா ஜெஹ்ரி.இவர் கடந்த வெள்ளிக்கிழமை சுராப் மற்றும் கிதார் பகுதியில் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று விட்டு அன்ஜிரா என்ற இடத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தீவிரவாதிகள் திடீரென அவர் கார் மீது வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக அமைச்சர் உயிர்த் தப்பினார். அவர் சென்ற காரும் சேதம் அடையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தானில் தடை செய்யப்பட்ட பலுச் விடுதலை முன்னணி தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலுக்கு பலுசிஸ்தான் முதல்வர் நவாப் முகமது அஸ்லாம் ரெய்சானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,“தீவிரவாதிகளுக்கு அரசு அடிபணியாது. இதில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுப்போம்” என்று கூறியுள்ளார்.
பிளாக்பெரி சேவைகள் பாதிக்கப்பட்ட நாட்களில் கட்டணம் ரத்து செய்யப்படும்: ரிம் நிறுவனம்.
கனடாவின் ரிசர்ஜ் இன் மோஷன்(ரிம்) நிறுவனத்தின் பல்வேறு பயன்கள் கொண்ட பிளாக்பெரி கைத்தொலைபேசிக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.இந்நிலையில் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, கனடா உள்ளிட்ட நாடுகளில் பிளாக்பெரி மூலம் பரிமாறப்படும் மெசேஜ், மின்னஞ்சல்களில் தகவல்களில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.
கடந்த 3 நாட்களாக தகவல் பரிமாற்ற சேவைகளில் நிலவிய பிரச்னை சரிசெய்யப்பட்டது. பிளாக்பெரியில் மின்னஞ்சல் உள்ளிட்ட ஓன்லைன் சேவைகள் பரிமாற்றத்தில் ஏற்படும் பிரச்னையை குறைக்கவும், விரைவில் அனைத்து நாடுகளிலும் சீரான சேவைகளை வழங்க தங்கள் நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.கடந்த 3 நாட்களாக பிளாக்பெரி சேவைகள் பாதித்ததால் பிடிக்கப்படும் அனைத்து கட்டணங்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று ரிம் நிறுவனத்தின் தலைமை தகவல் அதிகாரி ராபின் பியன்பெய்ட் தெரிவித்தார்.
ஸ்காட்லாந்தை தனி நாடாக பிரிக்க வேண்டும்: வாக்கெடுப்பில் தகவல்.
இங்கிலாந்து நாட்டிலிருந்து ஸ்காட்லாந்தை தனி நாடாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் வாக்கெடுப்பின் மூலம் வலுத்து வருகிறது.ஐரோப்பிய நாடுகளில் உள்ள மிகப்பெரிய நாடான இங்கிலாந்து நாட்டின் ஒரு மாகாணமாக ஸ்காட்லாந்து இருந்து வருகிறது. இம்மாகாணத்தை தனிநாடாக அறிவிக்க அந்நாட்டு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.
அந்நாட்டின் ஸ்காட்லாந்து தேசிய கட்சியின்(எஸ்.என்.பி) தலைவரும், அமைச்சருமான அலெக்ஸ்சல்மோண்ட் என்பவர் ஸ்காட்லாந்து தனி நாடு குறித்து மக்கள் கருத்தை அறிய வேண்டும் என்றார்.இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் காம்ரெஸ் என்ற அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் அமைப்பு, ஸ்காட்லாந்‌து தனிநாடாக பிரிவது குறித்த மக்கள் வாக்கெடுப்பினை கடந்த மே மாதம் நாடு முழுவதும் நடத்தி தனது அறிக்கையினை ஓன்லைன் வாயிலாக வெளியிட்டது.
அதில் மொத்தம் 6 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இதில் 39 சதவீத வாக்களிக்கும் வயதுடையவர்கள் ஸ்காட்லாந்து தனிநாடு உருவாக ஆதரித்துள்ளனர். 38 சதவீதத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தின் மிகப்பெரிய கட்சிகளான தொழிலாளர் கட்சி 39 சதவீத ஆதரவும், கன்சர்வேட்டிவ் கட்சி 37 சதவீத ஆதரவும் தெரிவித்துள்ளன. மீதமுள்ள சில கட்சிகள் 14 சதவீதம் ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தற்போது நாட்டின் பொருளாதாரத்தினை பொறுத்து பிரதமர் டேவிட் கமரூன் ஸ்காட்லாந்து தனிநாடு விஷயத்தில் நல்ல முடிவு எடுப்பார் என 30 சதவீத மக்கள் கருத்தும், 49 சதவீதம் எதிர்கருத்தும் உருவாகியுள்ளதாகவும் காம்‌ரெஸ் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
93 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சை வந்தடைந்த ஓவியம்.
பிரான்சில் 93 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ஓவியத்தை அமெரிக்க அதிகாரிகள் திரும்ப ஒப்படைத்தனர்.பிரான்சின் கூரியர்ஸ் பகுதியை சேர்ந்த ஓவியர் ஜூல்ஸ் பிரிட்டன். 1827ல் பிறந்து 1906ல் மறைந்தவர். தத்ரூப ஓவியங்கள் வரைவதில் புகழ்பெற்றவர்.
19ம் நூற்றாண்டின் தலைசிறந்த பிரெஞ்சு ஓவியர்களில் ஒருவராக புகழப்படுபவர். இவரது சிறந்த படைப்புகளில் ஒன்றாக போற்றப்படுவது “உனி பில்லே டி பெச்சூர்” (எ பிஷர்மேன்ஸ் டாட்டர்) என்ற ஓவியம்.மீனவர் ஒருவரது பெண் கையில் வலையை வைத்துக் கொண்டு ஒரு பாறையில் சாய்ந்திருப்பதை சித்தரிக்கும் இயல்பான ஓவியம். பிரான்சின் டவாய் நகர அருங்காட்சியகத்தில் இந்த ஓவியம் வைக்கப்பட்டிருந்தது.
1918ல் முதல் உலகப் போரின் போது ஜேர்மானிய படைகளால் இந்த ஓவியம் உள்பட பல்வேறு கலைப் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. பின்னர் இவை பெல்ஜியத்தில் வைக்கப்பட்டன1919ல் பல கலைப் பொருட்கள் மீண்டும் பிரான்சுக்கு அனுப்பப்பட்டன. “பிஷர்மேன்ஸ் டாட்டர்” ஓவியம் மட்டும் அப்போது அனுப்பப்படவில்லை. இதை அனுப்புமாறு பிரான்ஸ் அரசு பல முறை கோரிக்கை விடுத்தது.இந்நிலையில் கடந்த ஆண்டில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரை சேர்ந்த அருங்காட்சிய நிர்வாகம் இந்த ஓவியத்தை ஏலம் எடுத்து அமெரிக்காவுக்கு கொண்டு வந்தது.
அமெரிக்காவில் இருந்து ஓவியத்தை பெற இன்டர்போல் மூலமாக பிரான்ஸ் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. பிரான்ஸ் தூதரக அலுவலகத்தில் 2 நாள் முன்பு நடந்த விழாவில் ஓவியத்தை பிரான்ஸ் அரசிடம் அமெரிக்க அதிகாரிகள் ஒப்படைத்தனர்.93 ஆண்டுகளுக்கு பிறகு ஓவியம் திரும்ப கிடைத்திருப்பது பிரான்ஸ் கலை ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஓவியத்தின் தற்போதைய மதிப்பு ரூ.73 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியுறவுக் கொள்கையின் மையமாக பொருளாதாரம் இருக்க வேண்டும்: கிளிண்டன்.
வளர்ந்துவரும் நாடுகளான இந்தியா மற்றும் பிரேசிலில் உள்ளது போல வெளியுறவுக் கொள்கையின் மையப் பகுதியாக பொருளாதாரம் இருக்க வேண்டும் என கிளிண்டன் தெரிவித்துள்ளார்.“பொருளாதார ராஜதந்திரம்” என்னும் பொருளில் நியூயோர்க் பொருளாதார கிளப்பில் பேசிய அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் பேசியதாவது: உலகின் முக்கிய சக்தியாக அமெரிக்கா விளங்க வேண்டுமென்றால் வெளியுறவுக் கொள்கையின் மையப்பகுதியாக பொருளாதாரம் இருக்க வேண்டும். வளர்ந்துவரும் முக்கிய நாடுகளான இந்தியாவும் பிரேசிலும் இவ்வாறே செய்துள்ளன.இந்த இரு நாடுகளின் தலைவர்கள் எந்த சர்வதேச சவால்களை அணுகினாலும் அதனை உள்நாட்டுப் பிரச்னை போலவே அணுகுகின்றனர். அவர்கள் கேட்கும் முதல் கேள்வியே இப்பிரச்னை எந்த அளவுக்கு தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதாகும். இதே கேள்வியை நாமும் கேட்கப் பழக வேண்டும்.
அமெரிக்காவின் முக்கிய ராஜதந்திர இலக்கே தனது பொருளாதாரத் தலைமையை விரிவுபடுத்துவதும், உள்நாட்டில் மீண்டும் பொருளாதார மீட்சியை விரைவுபடுத்துவதும் தான். உலகெங்கும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு பொருளாதார ராஜதந்திரம் குறித்த ஆலோசனைகள் அவ்வப்போது வழங்கப்படும்.
கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பெரும் பகுதி தேவையின் அடிப்படையில் பெரும் ஆபத்துகள் நிறைந்த பகுதிகள் குறித்து கவனிக்க வேண்டியதாயிற்று.இனி வரும் ஆண்டுகளில் நமது வெளியுறவுக் கொள்கை, எங்கெங்கு நமக்கு வாய்ப்புகள் உள்ளனவோ அந்தப் பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும். உலகுக்கு தலைமையேற்கும் தகுதியை நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். உலகின் முக்கியத்துவமும் பொருளாதார ஈர்ப்பு விசையும் இப்போது கீழை நாடுகளை நோக்கித் திரும்பியுள்ளன.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா மிகுந்த கவனம் செலுத்துகிறது. அட்லாண்டிக் பிராந்தியத்தில் உறவுகளைப் பலப்படுத்த ஒரு நூற்றாண்டுக் காலமாக அமெரிக்கா மேற்கொண்டு வந்துள்ள நடவடிக்கைகள் தற்போது பலன் தருகிறது.
பொருளாதார நெருக்கடியால் அரசுகள் கவிழ்வதை நாம் காண்கிறோம். துனிசியாவின் ஒரு சந்தைப் பகுதியில் உருவான புரட்சி இன்று அந்நாடு முழுவதும் பரவியிருக்கிறது.இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இப்போது ஐரோப்பா மிக மோசமான பொருளாதார சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது.
தாய்லாந்தில் பயங்கர சூறாவளி: 80 லட்சம் பேர் பாதிப்பு.
ஆசிய நாடுகளான தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், பிலிப்பைன்சில் சூறாவளி மழை வெள்ளத்துக்கு 80 பேர் லட்சம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரம் மற்றும் ஒருங்கிணைப்புக்கான அலுவலகம் கூறியதாக சீனாவின் ஜிங்வா செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல் வருமாறு: ஆசிய நாடுகளான தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், கம்போடியா, வியட்நாம், லாவோஸ் ஆகியவற்றில் மழை பெய்து வருகிறது.
அடுத்தடுத்த சூறாவளிகளால் எங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வார இறுதியில் மேலும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையங்கள் எச்சரித்துள்ளன. சூறாவளி, மழை வெள்ளத்துக்கு தாய்லாந்து, கம்போடியா நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.தாய்லாந்தில் 26 மாவட்டங்களை சேர்ந்த 24 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் பாங்காக் உட்பட 12 மாவட்டங்களில் மேலும் பலத்த மழை பெய்யும் என்பதால் ஆறுகள் உடைப்பெடுத்து வெள்ளம் சூழும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கம்போடியாவில் 10 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். வியட்நாமில் 2.5 லட்சம் பேரும், லாவோசில் 4.9 லட்சம் பேரும், பிலிப்பைன்சில் 40 லட்சம் பேரும் பலத்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து மீட்பு பணிகளை அந்நாட்டு அரசுகள் துரிதப்படுத்துவதுடன் சமூக நல அமைப்புகளும் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க முன்வர வேண்டும்.
இன்று உலக உணவு தினம்.
உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டியது மனிதனின் அடிப்படை உரிமை. ஒவ்வொருவருக்கும் போதுமான அளவில் தரமான உணவு கிடைக்க வேண்டும்.வசதி வாய்ப்பற்றவர்களுக்கு, உடல் ஊனமுற்றவர்களுக்கு, இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க வேண்டியது அரசின் கடமை என்கிறது ஐ.நா சபை.
இதை உலக நாடுகள் பலவும் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த ஆண்டு “உணவு விலை - நெருக்கடியில் இருந்து உறுதித் தன்மை” என்ற மையக் கருத்தோடு உலக உணவு தினம் அக்டோபர் 16ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது.
உலகில் அதிகரிக்கும் மக்கள் தொகை பெருக்கத்தால் வறுமையும் அதிகரிக்கிறது. அடுத்த வேலை உணவு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருப்பவர்களும், உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். மக்கள் தொகை வளர்ச்சியை ஒப்பிடும்போது உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைவாகவே உள்ளது.உலகில் 85 கோடிப்பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 82 கோடிப் பேர் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். ஆண்டு தோறும் பட்டினியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 50 லட்சத்துக்கும் அதிகம்.
இந்த எண்ணிக்கையை பாதியாக குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டும் ஒவ்வொரு ஆண்டும் பட்டினி மரணங்கள் அதிகரித்து வருகின்றன.
உணவு உற்பத்தியை பெருக்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேளையில் ஒவ்வொரு அரசும், அவை அனைவருக்கும் விநியோகிக்கபட வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.உலகில் வாழும் அனைவருக்கும் தேவையான உணவு இருந்தாலும் அதை பெறும் அளவு பணம் இல்லாத நிலையே மரணங்களுக்கு காரணம்.
உலகில் வளரும் நாடுகளில் நிலவும் விலைவாசி உயர்வால் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழைகளுக்கு மூன்று வேளை உணவு என்பது கடினமான விஷயமாகிறது.உலக வங்கியின் அறிக்கையின் படி 2010 - 2011ம் ஆண்டில் உணவுப் பொருட்களுக்கான விலை ஏற்றத்தால் உலகம் முழுவதும் 7 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹக்கானி பயங்கரவாத குழுவை அடியோடு ஒழிப்போம்: அமெரிக்கா.
ஹக்கானி பயங்கரவாதக் குழுவை ஒழித்தே தீருவோம் என்று கூறிவரும் அமெரிக்கா அதற்கான தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.கடந்த செப்டம்பர் 13ம் திகதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் ஹக்கானி குழு இருப்பதாகவும், அக்குழுவுக்கும் ஐ.எஸ்.ஐ.க்கும் இடையிலான தொடர்பு உடனடியாக அறுக்கப்பட வேண்டும் எனவும் கடந்த மாதம் அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்து வந்தது.
அதற்குப் பதிலளித்த பாகிஸ்தான் ஹக்கானி குழு மீது எவ்வித ராணுவ நடவடிக்கையும் எடுக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தது. ஆனால் ஹக்கானி குழுவை ஒழித்தே தீருவது என அமெரிக்கா கங்கணம் கட்டியுள்ளது.அதனால் பாகிஸ்தானின் வடக்கு வாஜிரிஸ்தானின் மிரான்ஷா பகுதியில் தீவிர குண்டு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களில் அப்பகுதியில் நான்கு முறை நிகழ்ந்த குண்டு வீச்சில் ஹக்கானி குழுவின் 19 பேர் பலியாகியுள்ளனர்.
இவர்களில் அக்குழுவின் முக்கிய நபரான ஜன்பாஸ் ஜத்ரான் என்ற ஜமில் ஒருவரும் பலியானார். இவர் ஹக்கானி குழுவின் தொலைத் தொடர்பு மற்றும் போக்குவரத்துத் துறையின் தலைவராகச் செயல்பட்டவர்.
இரு வாரங்களுக்கு முன் கடந்த செப்டம்பர் 29ம் திகதி வாஷிங்டனில் நடந்த தேசிய பாதுகாப்புக் குழு(என்.எஸ்.சி) கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.இதுகுறித்து பாகிஸ்தானுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. தாக்குதலின் இலக்குகளில் ஜமிலும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் இப்பிரச்னையை அமெரிக்கா எவ்வளவு தீவிரமாக அணுகுகிறது என்பது பாகிஸ்தானுக்கு காட்டப்பட்டது.
என்.எஸ்.சி கூட்டத்தில் ஹக்கானி குழு மீது தரைவழித் தாக்குதல் உள்ளிட்ட சில வழிகள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அரசு கவிழ்வதற்கு வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதால் இந்நேரத்தில் தரைவழித் தாக்குதல் வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.பாகிஸ்தான் மீதான நம்பிக்கையை இழந்து விட்டாலும் அங்குள்ள அல்கொய்தாவை அடியோடு அழிக்க வேண்டும் என அதிபர் ஒபாமா தெரிவித்தார்.
இம்முடிவுகள் அனைத்தையும் ஒபாமாவின் என்.எஸ்.சி ஆலோசகர் தாமஸ் டோனிலோன் சவுதி அரேபியாவில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி கயானியைச் சந்தித்த போது தெரிவித்தார்.ஹக்கானி தலைவர்களைக் கொல்வது, அவர்களைக் கொல்வதற்கு அமெரிக்காவிற்கு உதவுவது அல்லது அமைதிப் பேச்சுவார்த்தையில் அவர்களை ஈடுபடுத்துவது ஆகிய மூன்று வழிகள் தான் இருப்பதாக டோனிலோன் கயானியிடம் தெரிவித்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைக் குழு ஆலோசனை கூட்டம் துவக்கம்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் ஆறாவது கூட்டம் நேற்று தலைநகர் பீஜிங்கில் துவங்கியது. நான்கு நாட்கள் நடக்கும் இக்கூட்டம் இப்போதைய தலைமையின் கீழ் நடக்கும் இறுதிக் கூட்டமாகும்.அடுத்தாண்டு கட்சித் தலைமை மாற உள்ள நிலையில் இக்கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் 200 உறுப்பினர்களும், 150 ராணுவ உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர்.
நாட்டில் அதிக விலைவாசி, வீட்டு வசதிகளின் விலை உயர்வு, சமூக ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு, கிராமப்புறங்களில் பொருளாதார சிக்கல்களால் கொந்தளிப்பு அதிகரிப்பு ஆகிய சூழலில் இக்கூட்டம் கூடியுள்ளது.
சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஷின்ஹூவா இக்கூட்டம் வழக்கமான ஒன்றுதான் எனக் கூறியிருந்தாலும் பிற ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளன.அடுத்தாண்டு அதிபர் ஹூ ஜிண்டாவோ தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுகிறார். அதேபோல் பிரதமர் வென்ஜியாபோ தலைமையிலான அரசின் பதவிக்காலமும் முடிவடைகிறது.
இதனால் அடுத்ததாக நாட்டின் தலைமைப் பொறுப்பை யார் ஏற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதேநேரம் பதவியை விட்டு விலகும் முன் அதிபர் தனது ஆதரவாளர்களுக்கு பதவிகளைத் தேடித் தந்து விட்டுத்தான் செல்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்தாண்டு நடந்த மத்திய குழுக் கூட்டத்தில் துணை அதிபர் ஷி ஜின்பிங், ராணுவக் கமிட்டியின் துணைத் தலைவராக உயர்த்தப்பட்டார். அதன் மூலம் அவர் தான் அடுத்த அதிபர் என்பது உறுதியாக்கப்பட்டது.இந்நிலையில் பிரதமர் உள்ளிட்ட பதவிகளுக்கான தலைவர்கள் யார் என்பது இக்கூட்டத்தின் மூலம் தெரிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈராக்கில் வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவங்கள் அதிகரிப்பு.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட இரட்டை குண்டு வெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர், 50 பேர் காயமடைந்தனர்.பாக்தாத் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷித்தே மாகாணத்தில் உள்ள சத்தார் நகரில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.
தலைநகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். ஒரு நாள் இடைவெளியில் மீண்டும் இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.அமெரிக்க படைகள் வெளியேறி வருவதைத் தொடர்ந்து பிரிவினையைத் தூண்டும் விதமாக சன்னி முஸ்லிம் பிரிவினர் இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சத்தார் நகரில் ஒரு வீட்டின் அருகே முதலாவது குண்டு வெடித்தது. குண்டு வெடிப்பு நிகழ்ந்த பகுதியைச் சுற்றி மக்கள் திரண்டபோது ஒரு நிமிஷ இடைவெளியில் மற்றொரு குண்டு வெடித்தது. இதில் 17 பேர் இறந்தனர்.
இரண்டாவதாக வெடித்த குண்டு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்ததாக பொலிசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் பெண்கள், 2 பேர் பொலிஸ் அதிகாரிகள்.அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து வெளியேறும் பணியை மேற்கொண்டு வரும் நிலையில் தினசரி இதுபோன்ற குண்டுவெடிப்பு, தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
உலகின் சிறந்த கல்வி நிறுவனமாக கனடா கல்வி நிறுவனம் தெரிவு.
கனடாவில் உள்ள டொரண்டோவில் எம்.பி.ஏ கல்வியைக் கற்றுக் கொடுக்கும் கல்வி நிறுவனமான ஸுலிச்(Schulich) கல்வி நிறுவனம் உலகின் சிறந்த கல்வி நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.பிரிட்டிஷின் முன்னணி பத்திரிக்கை எடுத்த கருத்துக்கணிப்பில் நியூயார்க் வணிகக் கல்வி நிறுவனம் 9வது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் கனடாவில் உள்ள ஐந்து கல்வி நிறுவனங்கள் இந்த ரேங்கிங்கில் உள்ளது பெருமைக்குரிய விஷயமாகும்.
நியூஹாம்ப்ஷயரில் உள்ள டார்ட்மவுத் கல்லூரி முதலாவது இடத்தையும், சிகாகோவில் உள்ள பூத் வணிகக் கல்வி நிறுவனமும் உள்ளதாக அந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது.வணிகக் கல்விக்கு புகழ்பெற்ற ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் 5வது இடத்தையும், லண்டன் பிஸினஸ் ஸ்கூல் 13 இடத்தையும் பெற்றுள்ளது.கனடாவின் இரண்டாவது மிகப்பெரிய மாண்ட்ரீல் நகரில் உள்ள மேலாண்மை மெக்கில் பல்கலைக்கழகம் பட்டியலில் 64வது இடத்தை பெற்றுள்ளது.
கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கு தகவல் பரிமாற்றம் தேவை: இந்தியா வலியுறுத்தல்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாடு நடைபெறுகிறது.இந்த மாநாட்டில் கலந்து கொண்டு இந்திய நாட்டின் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி கிடைப்பதை தடுத்து நிறுத்துவதற்கும் தகவல் பரிமாற்றம் தேவை.
இதில் எவ்வித கட்டுப்பாடும் விதிக்க கூடாது. வரி ஒப்பந்தங்களில் விதிமுறைகளை உட்படுத்தி கறுப்பு பணம் கிடைக்கச்செய்வதை ஒரு சில நாடுகள் தடுக்கின்றன.தற்‌போது இந்நிலை மாறி பல நாடுகள் வங்கி தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளது. வரி ஏய்ப்பு, வரி தவிர்ப்பு, வரிமோசடி உட்பட அனைத்து தகவல்களையும் தன்னிச்சையாகவே பரிமாறிக் கொள்ளும் நடைமுறையை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.
பணமோசடியில் ஈடுபட்டதற்காக மிகைல் மீது விசாரணை ஆரம்பம்.
பணமோசடியில் ஈடுபட்டதற்காக ரஷ்ய எண்ணெய் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சனிக்கிழமை வெளியான செய்தித்தாள் தகவலின் படி இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அந்த பத்திரிக்கை செய்தி வெளியிடுகையில் ஜேர்மனியில் இவரது வங்கி கணக்கில் 20 – 25 மில்லியன் யூரோ அளவில் பணம் உள்ளது.பிராங்க்பர்ட், தெற்கு ஜேர்மனி மற்றும் சுவிஸ் தனியார் வங்கிகளில் உள்ள இவரது வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன.ரஷ்ய எண்ணெய் நிறுவனத்தில் இவர் செய்த மோசடிகள் இவருக்கு எதிரான அரசியல் பிரசாரமாக அமைந்தது. ரஷ்ய நீதிமன்றமானது இவர் நிறுவனத்திற்கு எதிராக செயல்படுகிறார் என தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியில் விமானங்கள் மோதி விபத்து.
சீனாவின் வடமேற்கு பகுதியில் ஷான்சி மாகாணத்தில் புசெங் பகுதியில் உள்ள நெய்பூ விமான நிலையத்தில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது.அப்போது பறக்கும் சிறுத்தை என்றழைக்கப்படும் ஜெ.எச்.7 ரக போர் விமானங்கள் நடுவானில் பறந்து சாகசத்தில் ஈடுபட்டன. அப்போது விமானங்கள் ஒன்றையன்று உரசியபடி பறந்ததால் மோதிக் கொண்டன.
உடனே 2 விமானங்களில் இருந்த விமானிகள் பாராசூட்கள் மூலம் குதித்தனர். இதனால் அவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். அதே நேரத்தில் போர் விமானங்கள் கீழே விழுந்து நொறுங்கின.
அதில் இருந்து கரும்புகை கிளம்பியது. இருந்தும் சாகச நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தது. சீனாவில் சாகச நிகழ்ச்சியின் போது இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இதுவரை நடந்ததில்லை.எனவே இது சீன விமான தயாரிப்பில் ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது. எனவே இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த நெய்பூ விமான நிலையத்துக்கு நிபுணர்கள் விரைந்துள்ளனர்.
உகாண்டாவில் தீவிரவாதிகளை ஒடுக்க ராணுவ வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு.
ஆப்ரிக்க நாடான உகாண்டாவின் வடக்கு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர்.இதுவரை 30 ஆயிரம் அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்துள்ளனர். பெண்களை கடத்தி கற்பழித்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
சிறுவர்களை கடத்தி சென்று அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்து பயங்கரவாதிகளாக மாற்றி வருகின்றனர். அவர்களை ஒடுக்கும் பணியில் உகாண்டா ராணுவம் ஈடுபட்டுள்ளது.இருந்தும் அவர்களை அடக்க முடியவில்லை. எனவே அமெரிக்காவின் உதவியை அந்த நாட்டு அரசு நாடியுள்ளது.அதை ஏற்று அமெரிக்கா ராணுவ வீரர்கள் 100 பேரை உகாண்டாவுக்கு அனுப்ப உள்ளது. இதுகுறித்து தகவல்களை அமெரிக்க பாராளுமன்றத்தில் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக செயல்பட மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடும் அமெரிக்கா.
சவுதி அரேபியத் தூதரைக் கொல்ல தீட்டப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் ஈரான் மத்திய வங்கி மீது தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது.அதே நேரம் ஈரான் மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க அதிகாரிகள் சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கா, ஈரானின் மத்திய வங்கி மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. ஆனால் பலதரப்பு பொருளாதாரத் தடைகளை விதிப்பதில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவை அமெரிக்காவால் கடந்த 20 ஆண்டுகளாகப் பெற முடியவில்லை.ஈரான் மத்திய வங்கி, எண்ணெய் உற்பத்தித் துறை உள்ளிட்டவற்றில் முதலீடு செய்து வருகிறது. பலதரப்பு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் ஒரு வெளிநாட்டு நிறுவனம் ஈரான் மத்திய வங்கியுடன் இணைந்து செயல்படுவதா அல்லது அமெரிக்காவுடன் செயல்படுவதா என முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் நேரிடும். அதாவது வெளிநாட்டு நிறுவனங்கள், வங்கிகள் ஈரான் மத்திய வங்கியுடனான தொடர்பைத் துண்டிக்க நேரிடும்.
இதுகுறித்து அமெரிக்க நிதித் துறை அதிகாரி டேவிட் கோஹென் நேற்று அளித்த பேட்டியில்,"ஈரான் மத்திய வங்கி மீது பலதரப்பு பொருளாதாரத் தடை விதிக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் அதைச் செய்து முடிப்போம்” என்றார்.
இதன் மூலம் மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது தெளிவாகியுள்ளது. அதேநேரம் ஈரான் மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டு உள்நாட்டிலேயே பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.அமெரிக்க அதிகாரிகள் சிலர் இதுகுறித்துக் கூறுகையில்,"ஈரான் மீது மேலும் தடைகளை விதிக்க அமெரிக்கா மிகத் தீவிரமாக செயல்படுவது மக்கள் மத்தியில் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. மேலும் ஏற்கனவே தடைகள் விதிக்கப்பட்ட அந்நாட்டின் மீது மேலும் தடைகள் விதிப்பது சர்வதேச உறவுகளைச் சீர்குலைக்கும். இந்த நடவடிக்கைகள் ஒபாமாவின் அடுத்தாண்டு தேர்தலுக்காகவே நடத்தப்படுவதாக மக்கள் கருதுகின்றனர்” எனத் தெரிவித்தனர்.
உலகப் பொருளாதார சீர்கேடுகளுக்கு எதிர்ப்பு: உலகின் முக்கிய நகரங்களில் வெடிக்கும் வன்முறை.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடந்த வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தின் போராட்டம் தற்பொழுது உலகம் முழுவதும் பரவி வருகிறது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், உலகப் பொருளாதாரம் சீர்கேடு அடைவதற்குக் காரணமான வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசியல்வாதிகளைக் கண்டித்தும் போராட்டங்கள் உலகளவில் துவங்கியுள்ளன.வால் தெரு ஆக்கரமிப்பு இயக்கம் கடந்த செப்டம்பர் 17ம் திகதி நியூயோர்க்கில் துவக்கிய போராட்டம் தற்போது அமெரிக்காவின் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியுள்ள தனியாருக்குச் சொந்தமான ஜூகோட்டி பூங்காவில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றும் நோக்கில் அந்தப் பூங்காவைத் தூய்மைப்படுத்தப் போவதாக பூங்கா உரிமையாளரான ப்ரூக்பீல்டு பிராபர்ட்டீஸ் நிறுவனம் அறிவித்தது.தூய்மைப்படுத்திய பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் பூங்காவில் மீண்டும் தங்கலாம் எனவும் கூறியிருந்தது. ஆனால் இதன் மூலம் தங்கள் ஆர்ப்பாட்டத்தை நசுக்க நியூயோர்க் பொலிசார் முயல்வதாகக் கருதிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பூங்காவில் நேற்று திரண்டு அங்கிருந்து செல்ல முடியாது என தெரிவித்தனர்.

இதன் பின் கடைசி நேரத்தில் தனியார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் பூங்காவை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் உலகளவில் பரவி வருகிறது. தென்னாப்ரிக்கா, தென் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆசியா, தெற்காசியா, ரஷ்யா என உலகம் முழுவதும் போராட்டங்கள் நேற்று முதல் துவங்கின.
இதற்காக  http://15october.net/ என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் இந்தியா உள்ளிட்ட 82 நாடுகளில் 951 நகரங்களில் "வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு” போராட்டம் நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக அவுஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன் நகரங்களிலும், நியூசிலாந்தின் ஆக்லாண்ட், வெல்லிங்டன், கிறிஸ்ட்சர்ச் நகரங்களிலும், தைவான் தலைநகர் தாய்பெய்யிலும், ஜப்பானின் டோக்கியோ, ரோப்போங்கி நகரங்களிலும், தென்கொரியத் தலைநகர் சியோலிலும் நேற்று போராட்டங்கள் நடந்தன.அதேநேரம் ரோம், ஏதென்ஸ், மாட்ரிட் போன்ற நகரங்களிலும், தென்னாப்ரிக்காவின் டர்பன், கேப்டவுன், ஜோகன்னஸ்பர்க் நகரங்களிலும், ஜேர்மனியின் பிராங்பர்ட்டிலும் நேற்று போராட்டங்கள் நடந்தன.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடந்த போராட்டத்தில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் கலந்து கொண்டார். இத்தாலியின் ரோம் நகரில் நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கார்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF