Tuesday, October 18, 2011

இன்றைய செய்திகள்.

பாரத லக்ஸ்மனைக் கொலை செய்ய கோத்தபாய உத்தரவிட்டாரா?

முல்லேரியா துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த ஜனாதிபதியின் ஆலோசகர் பாரத லக்ஸ்மனைக் கொலை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொலன்னாவையில் நடைபெற்ற இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினர் மீது பாரத லக்ஸ்மன் குற்றம் சுமத்தியிருந்தார்.
துமிந்த சில்வா போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும் பாதாள உலகக் கோஷ்டியினரை இதற்காக வைத்திருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ள அவர் பாதுகாப்புத் தரப்பினர் கண்டும் காணாததுபோல் இருப்பதால் இவர்களுடைய அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.எவ்வாறெனினும் கொலன்னாவை மக்களை பாதுகாப்பதே தனது தலையாய கடமை என்றும் கூட்டத்தின்போது தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக கொலன்னாவை பொலிஸார் துமிந்த சில்வா மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.இதனையடுத்து கோத்தபாயவின் உத்தரவின் பேரில் திட்டமிட்டே கொலை செய்யப்பட்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கொழும்பு மாநகர முதல்வராக முஸம்மில் பதவியேற்பு.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற ஏ.ஜே.எம். முஸம்மில் மாநகர சபை மேயராக இன்று உத்தியோகபூர்வமாக பதிவியேற்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று முற்பகல் 11.00  மணியளவில் நடைபெற்ற விசேட நிகழ்வின்போது இவர் பதவியேற்றதாக கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் மைக்கல் பெரேரா, ரவி கருணாநாயக்க, டி.எம். சுவாமிநாதன், ஜோன் அமரதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
கொழும்பு நகரில் எந்தவொரு வீட்டையும் அகற்றுவதற்கு இடமளிக்கப் போவதில்லை - ரணில் சூளுரை.

கொழும்பு வாழ் மக்களை மையப்படுத்தியதான கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகம் இங்குள்ள அனைத்து மக்களினதும் பாதுகாப்பினையும் உரிமையினையும் உறுதிப்படுத்துவதற்கு உறுதிபூண்டிருக்கின்றது.
அத்துடன் குறை வருமானம் பெறுவோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது பிரதான பணியாகும். இதற்கு சகலரினது ஒத்துழைப்பும் மிகமிக அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.ஐக்கிய தேசியக் கட்சி உறுதியளித்ததுபோல் கொழும்பில் எந்தவொரு வீடும் உடைத்து அப்புறப்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.இதனை நிலைப்படுத்துவதற்கு கொழும்பு மாநகரசபையின் அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் சத்தியப்பிரமாண நிகழ்விலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் கூறுகையில்,
கொழும்பு மாநகரசபையின் முதல்வர் எனும் போது அது ஆசியாவிலேயே மிகவும் பழைமை வாய்ந்ததும் அதே நேரம் கௌரவம் மிக்கதுமான பதவியாகும்.இவ்வாறான பெருமைமிகு பதவியானது முஸம்மிலுக்கு கிடைத்தமை மற்றும் பிரதிநிதி முதல்வர் பதவி டயட்டஸ் பெரேராவுக்கு கிடைத்ததையிட்டு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநகர முதல்வர் எனும் பதவிக்கு விஷேடத்தன்மை வாய்ந்த சக்தி இருக்கின்றது என்பதை முன்னாள் முதல்வரும் அமரருமான சுகததாச நிரூபித்திருக்கின்றார்.எனவே இந்த பதவியினுடாக கொழும்பு வாழ் மக்களுக்கு சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு பிரதி மேயர் உள்ளிட்ட சகல உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பு அவசியமானதாகும்.
நாம் வீதிகளுக்கு காபட் போடுவதாகக் கூறி வாக்குகளைக் கேட்கவில்லை.மாறாக கொழும்பு நகரில் வீடுகள் உடைக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதாகவும் முச்சக்கரவண்டி மற்றும் நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட குறை வருமானம் பெறுவோரைப் பாதுகாத்து கொழும்பு வாழ் அனைத்து மக்களினதும் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துவோம் என்றே வாக்குறுதியளித்தோம்.
அந்தவகையில் நாம் அளித்த வாக்குறுதிகள் அவ்வாறே நிறைவேற்றப்படும்.
கொழும்பு நகரில் எந்தவொரு வீடும் உடைத்து அகற்றப்படுவதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை. கீழ் மட்டம், மேல் மட்டம் என்ற வேறுபாடுகள் இங்கு இடமில்லை. கொழும்பு வாழ் மக்களுக்கான சேவையே இங்கு பிரதானமாகும்.மேலும் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வாய்க்கால்கள் கான்கள் சுத்தப்படுத்துதல், பாதைகள் சீரமைத்தல், மின்சார வசதிகள் பாடசாலைகளுக்கான தேவைகள் ஆகியவை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.
கொழும்பு வாழ் மக்கள் அனைவருக்குமே கொழும்பு நகர் சொந்தமானது. அந்த உரிமையை நாம் பெற்றுக் கொடுப்போம். தொழில் வசதிகள் கடன் திட்டங்கள் என பல்வேறு வேலைத் திட்டங்கள் எம்மிடத்தில் உள்ளன. புதிதாக பதவியேற்றுள்ள மேயர் கொழும்பு வாழ் மக்களுக்காக பல திட்டங்களை வகுத்துள்ளார்.அவற்றை நிறைவேற்றுவதற்கும் மக்களின் தேவையறிந்து செயற்படுத்துவதற்கும் சபைக்குத் தெரிவாகியுள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கொழும்பு மக்களை மையப்படுத்திய நிர்வாகமாக இந்த சபை அமைய வேண்டும் என்றார்.
சுவிஸ் வங்கிகளில் ரூ.1200 கோடியை பதுக்கிய முபாரக் மகன்கள்.
சுவிர்சர்லாந்து வங்கிகளில் ரூ.1,200 கோடியை முபாரக் மகன்கள் பதுக்கி வைத்துள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
எகிப்தில் அதிபராக இருந்த முபாரக்கின் 30 ஆண்டு கால ஆட்சியை எதிர்த்து கடந்த பெப்பிரவரி மாதம் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.850 பேர் கொல்லப்பட்டனர். 18 நாள் போராட்டத்துக்கு பிறகு முபாரக் ஆட்சி வீழ்ந்தது. தற்போது அங்கு ராணுவ ஆட்சி நடக்கிறது. முபாரக்கும், அவரது மகன்கள் காமல், அலா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், லஞ்ச ஊழலில் ஈடுபட்டு சொத்துக்களை குவித்ததாகவும் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது ராணுவ கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.இதற்கிடையே முபாரக்கும், அவரது உறவினர்களும் ஐரோப்பிய நாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்து வைத்திருந்த பணம் மற்றும் சொத்துக்கள் முடக்கப்பட்டன. இந்த நிலையில் முபாரக் மகன்கள் காமல், அலா ஆகியோர் சுவிட்சர்லாந்து வங்கிகளில் ரூ.1,200 கோடி பணம் பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதில் ரூ.1000 கோடி அலாவுக்கு சொந்தமானது. இந்த தகவலை கோர்ட்டு விசாரணையின் போது லஞ்ச ஒழிப்பு துறை தலைவர் அசீம் எல்-கோகரி தெரிவித்தார்.மேலும் அவர் கூறும் போது, முபாரக்கின் குடும்பத்தினர் சுவிட்சர்லாந்தில் பதுக்கி வைத்திருந்த ரூ.1,250 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டு விட்டன என்றும் தெரிவித்தார்.
லிபியாவில் கடாபியின் நகரை புரட்சிப்படை கைப்பற்றியது.
லிபியாவில் கடாபி ஆதரவு நகரை புரட்சிப்படை கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து அங்கு புதிய கொடி பறக்க விடப்பட்டது.
லிபியாவில் கடாபி ஆட்சி வீழ்ந்தாலும் அவரது சொந்த ஊரான சிர்த் மற்றும் பழமை வாய்ந்த பானிவாலிட் ஆகிய 2 நகரங்களும் புரட்சி படையின் கட்டுப்பாட்டில் வரவில்லை.எனவே அவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் முழுமையாக கொண்டு வர ராணுவத்துடன் புரட்சிப்படை போரிட்டு வருகிறது. சிர்த் நகரின் பெரும்பகுதி புரட்சிப்படையின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது.
அதே நேரத்தில் பானிவாலிட் நகரில் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக கடும் சண்டை நடக்கிறது. இந்த நிலையில் நேற்று பானிவாலிட் நகரின் மையப் பகுதியை புரட்சிப்படை கைப்பற்றியது.இதைத் தொடர்ந்து லிபியாவில் தற்போது ஆட்சி செய்து வரும் இடைக்கால அரசின் புதிய கொடி அங்கு பறக்க விடப்பட்டது. இந்த தகவலை புரட்சிப்படையின் தளபதி அப்துல்லா நாகெர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது பானிவாலிட் முழுவதும் விரைவில் கைப்பற்றப்பட்டு விடும் என தெரிவித்தார். பானிவாலிட் லிபியாவில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்று.மலைகளால் சூழப்பட்ட இது தலைநகர் திரிபோலியில் இருந்து தெற்கே 150 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. புராதன நகரமான இந்த நகரம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.
சோமாலிய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த கென்ய ராணுவம்.
கென்ய ராணுவம் நேற்று சோமாலியா எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகளைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இது சோமாலியாவின் இறையாண்மையை மீறிய செயல் என அந்நாட்டின் தூதர் தெரிவித்துள்ளார்.சோமாலியாவின் தென் பகுதி முழுவதும் அல் ஷபாப் என்ற பயங்கரவாதக் குழுவின் பிடியில் உள்ளது. அந்நாட்டில் அரசு என்பது பெயரளவுக்குத் தான் செயல்படுகிறது.
அது, தலைநகரைச் சுற்றி சில கிலோமீற்றர் தூரம் வரை மட்டுமே அதிகாரம் உள்ளதாக இருக்கிறது. நாட்டின் பிற பகுதிகள் இனக் குழுக்கள், பழங்குடிகளிடம் சிக்கியிருக்கிறது.இந்நிலையில் சோமாலியாவின் தெற்கில் உள்ள கென்யாவுக்குள் சமீப காலமாக அல் ஷபாப் பயங்கரவாதிகள் புகுந்து அந்நாட்டிற்கு சுற்றுலா வந்த மேற்கத்திய பயணிகளைக் கடத்துவதும், கொல்வதுமாக அட்டூழியம் செய்து வருகின்றனர்.
இவ்வாறு கடத்தப்பட்டோரில் ஐ.நா சார்பில் பஞ்ச நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இரு வெளிநாட்டவரும் அடக்கம். ஏற்கனவே அல் ஷபாப் எல்லை கடந்த பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக கென்யா குற்றம் சாட்டி வருகிறது.இந்நிலையில் அல் ஷபாப்பின் கொட்டத்தை அடக்க நேற்று கென்ய ராணுவத்தின் நூற்றுக்கணக்கான கவச வாகனங்கள், பீரங்கிகள் மற்றும் ராணுவ வீரர்கள் சோமாலியாவுக்குள் புகுந்தனர். அதேநேரம் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் சோமாலியாவுக்குள் சென்றுள்ளன.
இது குறித்து கென்ய வெளியுறவு அமைச்சர் மோசஸ் மசிகா வெடாங்குலா கூறுகையில்,"சோமாலிய அரசின் வேண்டுகோளின் படியும், கென்ய மக்களின் நலன் கருதியும் இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றார்.ஆனால் ஐ.நா.வுக்கான சோமாலியா தூதர், இது சோமாலியாவின் இறையாண்மையை மீறிய செயல் என குற்றம் சாட்டியுள்ளார். கென்யாவுக்கான சோமாலியா தூதர் முகமது அலி நூர் கென்ய ராணுவம் உள் நுழைந்தது என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
சிரிய அரசுடன் எதிர்கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: அரபு லீக் கோரிக்கை.
தங்கள் கூட்டமைப்பில் இருந்து சிரியாவை நீக்குவது குறித்து கலந்தாலோசித்த அரபு லீக் அந்த முடிவைக் கைவிட்டு சிரிய அரசும் எதிர்க்கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.எகிப்து தலைநகர் கெய்ரோவில் நேற்று முன்தினம் அரபு நாடுகளின் கூட்டமைப்பான அரபு லீக் கூடியது. அதில் கூட்டமைப்பில் இருந்து சிரியாவை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
எனினும் சில நாடுகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. அதனால் சிரியாவை அமைப்பில் இருந்து நீக்கும் முயற்சி கைவிடப்பட்டது. தொடர்ந்து பேசிய பொதுச் செயலர் நபில் அல் அரபி கூறுகையில்,"இன்னும் 15 நாட்களுக்குள் கெய்ரோவில் சிரிய அரசும் எதிர்க்கட்சிகளும் பேச்சுவார்த்தையைத் துவக்க வேண்டும். வன்முறையை நிறுத்துவற்கான நடவடிக்கைகளைத் துவக்க சிரியாவில் செயல்படும் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து சிரிய அரசு தொலைக்காட்சியில் வெளியான செய்தியில்,“கெய்ரோவில் பேச்சுவார்த்தை நடத்த சிரிய அரசுக்குத் தயக்கம் உள்ளது. இந்த விவகாரத்தை தானே சமாளித்துக் கொள்வதாக சிரிய அரசு கூறியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் பல பொருளாதாரத் தடைகளை சிரியா மீது விதித்துள்ள நிலையில் அரபு லீக்கும் சிரியாவைக் கைகழுவி விட்டால் சிரிய அரசுக்குக் கடும் நெருக்கடி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா - பாகிஸ்தான் இடையே மீண்டும் உறவு.
கடந்த மே மாதம் பாகிஸ்தான் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையேயான நட்புறவால் விரிசல் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதரகம் மற்றும் ராணுவத்தின் மீது நடந்த தாக்குதல்களில் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
இதனால் உறவில் சிக்கல் உருவானது. இதுகுறித்து இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில் பேசி தீர்க்கப்பட்டு விட்டதாக தெரிகிறது.அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் -அமெரிக்கா இடையே மீண்டும் உறவு தொடர்வதாக கூறப்படுகிறது. அமெரிக்கா வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் இந்த வார இறுதியில் முஸ்லிம் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அப்போது லிபியாவின் இடைக்கால அரசின் தலைவர்கள், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அதிபர்களை சந்தித்து பேசுகிறார். இந்த பேச்சின் மூலம் இருநாடுகளுக்கும் இடையேயான நிலைமை முற்றிலும் சரியாகி விடும் என பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த வார மத்தியில் இஸ்லாமாபாத் வரும் ஹிலாரி கிளிண்டன் அங்கு ஒருநாள் தங்குகிறார்.
கடிதம் மூலம் மக்களின் குறைகளை தெரிந்து கொள்ளும் ஒபாமா.
அமெரிக்க அதிபர் ஒபாமா மக்கள் அனுப்பும் 10 கடிதங்களை தினமும் படிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். சில கடிதங்களுக்கு மறக்காமல் பதில் கடிதமும் போடுகிறாராம்.2008ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று முதல் கறுப்பின அதிபராக பதவியேற்றவர் பராக் ஒபாமா. அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலுக்கும் தயாராகி வருகிறார்.
நாடு முழுவதும் இருந்து அதிபருக்கு தினமும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் வரும். மின்னஞ்சலும் வரும். இவற்றை படிப்பதற்கென ஒபாமா தினமும் நேரம் ஒதுக்குகிறார்.தினமும் 10 கடிதங்கள் படிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். முக்கியம் என கருதும் சில கடிதங்களுக்கு தவறாமல் பதிலும் அனுப்புகிறார். சில நேரங்களில் அவர்களுக்கு போன் செய்தும் பேசுகிறார்.
கஷ்டத்தில் இருப்பதாக கடிதம் எழுதிய சிலருக்கு செக் அனுப்பி வைத்திருக்கிறார். நேரில் சந்திக்கும்போதுகூட மக்கள் தங்கள் கருத்துகள், எண்ணங்களை அதிபருடன் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை.பாதுகாப்பு ஏற்பாடுகள் தான் இதற்கு காரணம். கடிதங்கள் மூலமாக மக்களின் எண்ணத்தை அதிபர் நேரடியாக புரிந்து கொள்ள முடிகிறது என்று அமெரிக்க இதழ்கள் பாராட்டு தெரிவிக்கின்றன.
புதிய நாஜி படைத் தலைவருக்கு ஹொட்டலில் அனுமதி மறுப்பு.
உடோவின் அரசியல் கொள்கைகள் காரணமாக அவருக்கு ஹொட்டல் ஒன்றில் உரிமை மறுக்கப்பட்டது. இவர் வலதுசாரி டெமாக்ரேடிக் கட்சியின் தலைவர் ஆவார்.இதனால் ஜேர்மன் பெடரல் நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக அறிவித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு உடோவின் மனைவி Esplanade ஹொட்டலில் நான்கு நாட்கள் தங்குவதற்காக அறை ஒன்றை பதிவு செய்து இருந்தார். ஆனால் ஹொட்டலின் நோக்கங்கள் நிறைவேற்றப்படவில்லை என கூறி அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ஹொட்டலில் தங்க வரும் முஸ்லிம்கள், கறுப்பு இனத்தவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாத நபர்கள் போன்றோர்களால் இவர்களது வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என ஹொட்டலின் வழக்கறிஞர்கள் கூறினர்.இதற்கு உடோவின் வழக்கறிஞர்கள் பதில் தெரிவிக்கையில், இது ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் மக்களிடையே பாகுபாடுகள் பார்க்க கூடாது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என கூறினார்.
சவுதி மன்னருக்கு முதுகில் அறுவை சிகிச்சை: மருத்துவமனையில் அனுமதி.
சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா. இவருக்கு வயது 87. இவர் மிகக் கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார்.எனவே கடந்த ஆண்டு இவர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதுகெலும்பில் 2 ஓபரேசன்கள் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து குணமடைந்த அவருக்கு முதுகில் மீண்டும் வலி ஏற்பட்டது.
எனவே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முதுகெலும்பில் மீண்டும் ஓபரேசன் செய்ய வேண்டும் என ஆலோசனை கூறினார்கள்.ஆகவே அவர் ரியாத் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது முதுகெலும்பில் உள்ள மூன்றாவது எலும்பு பகுதியில் ஓபரேசன் நடைபெற உள்ளது.
ரகசிய ஆவணங்களை குப்பைத் தொட்டியில் வீசிய அமைச்சர்.
அல்கொய்தா தீவிரவாதிகள் மற்றும் உளவுத்துறை தகவல்கள் அடங்கிய ரகசிய ஆவணங்களை இங்கிலாந்து அமைச்சர் குப்பை தொட்டியில் வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் கேபினட்டில் அமைச்சராக இருப்பவர் ஆலிவர் லெட்வின்(55). கமரூனுக்கு வலது கரமாக இருப்பவர்.பிரதமர் அலுவலகத்தில் நடக்கும் முக்கிய கூட்டம், ரகசிய ஆலோசனை கூட்டம் எதுவாக இருந்தாலும் ஆலிவர் கண்டிப்பாக இருப்பார்.
பாகிஸ்தானுடன் அல்கொய்தா தீவிரவாதிகளின் தொடர்பு, இங்கிலாந்து உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டங்கள் பிரதமர் தலைமையில் கடந்த ஆண்டு பலமுறை நடந்துள்ளன.அவற்றில் ஆலிவரும் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்த பிறகு உளவுத் துறை ரகசியங்கள் அடங்கிய ஆவணங்களை அமைச்சர் என்ற முறையில் ஆலிவர் எடுத்து செல்வது வழக்கம்.
கடந்த மாதம் 7ம் திகதியும் இதுபோன்ற முக்கிய கூட்டம் ஒன்று பிரதமர் அலுவலகத்தில் நடந்தது. அதில் கலந்துகொண்ட ஆலிவர் கூட்டம் முடிந்த பிறகு ஆவணங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். அவற்றை லண்டன் செயின்ட் ஜேம்ஸ் பூங்கா அருகே உள்ள குப்பைத் தொட்டியில் அவர் வீசியது கண்காணிப்பு கமெராவில் பதிவானது.2010ம் ஆண்டு ஜூலை 27ம் திகதி முதல் கடந்த 30ம் திகதி வரையில் ஐந்து முறை இவ்வாறு ரகசிய ஆவணங்களை அவர் இந்த குப்பை தொட்டியில் வீசி சென்றது அம்பலமானது.
நூற்றுக்கணக்கான ரகசிய ஆவணங்கள் குப்பையில் வீசப்பட்டிருப்பதால் உள்நாட்டு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்று மீடியாக்கள் பக்கம் பக்கமாக செய்தி வெளியிட்டு வருகின்றன.இது பிரதமர் கமரூனுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் ஆலிவர் இப்போதுகூட அலட்டிக் கொள்ளவில்லை. இதுதொடர்பாக ஆலிவர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில்,“குப்பை தொட்டியில் வீசப்பட்டவை முக்கியமான ஆவணங்கள் இல்லை” என்றனர். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: பேரலைகள் உருவானதால் அதிர்ச்சியில் மக்கள்.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. கடந்த சில வருடங்களாக இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.நேற்று சிமேலு தீவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டும், கட்டிடங்களை விட்டும் வெளியேறினார்கள். ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர். பீதி அடங்கியதும் மீண்டும் வீடுகளுக்கு திரும்பினர்.
இதற்கிடையே 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்தது. பூமிக்கு அடியில் 45.80 கிலோமீற்றர் ஆழத்தில் இது நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டது.நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. வழக்கத்தை விட உயரமான அலைகள் எழுந்ததால் சுனாமி ஏற்படும் என பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
உலகளவில் விரிவடையும் போராட்டம்: மூன்று லட்சம் டொலர் நிதியுதவி.
அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் துவங்கி நேற்றோடு ஒரு மாதம் நிறைவாகியுள்ளது.போராட்டத்திற்கான நிதியுதவி தற்போது மூன்று லட்சம் டொலராக அதிகரித்துள்ளது. இந்நிலையில் லண்டனில் லண்டன் ஆக்கிரமிப்பு போராட்டம் மூன்றாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த செப்டம்பர் 17ம் திகதி மன்ஹாட்டன் பகுதியில் வால் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் நடந்த 1,000 பேர் மட்டும் பங்கேற்ற சிறு போராட்டம் இன்று உலகளவில் தீப்பிடித்தது போல பரவி வருகிறது.வால் ஸ்ட்ரீட் போராட்டம் நேற்றுடன் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில் அதற்கான நிதியுதவி மற்றும் பொருளுதவிகள் குவிந்து கொண்டே வருகின்றன.
இதுவரை இந்த அமைப்பிற்கு மூன்று லட்சம் டொலர் நிதியுதவி வந்துள்ளது. இந்தப் பணம் அனைத்தும் அமெரிக்காவின் மிகப் பழமையான வங்கியான அமல்கமேட்டட் வங்கியில் போடப்பட்டுள்ளது. இந்த வங்கி அமெரிக்கத் தொழிலாளர் அமைப்பால் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்கின் ஜூகோட்டி பூங்காவில் தற்போது நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கான உணவு, படுக்கைகள், மருந்துப் பெட்டிகள், தண்ணீர் பாட்டில்கள், உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருட்கள் அனைத்தும் தினசரி பெட்டி பெட்டியாக வந்து குவிகின்றன.இந்தப் பொருட்கள் அனைத்தையும் வைப்பதற்கு வசதியாக பூங்கா அருகில் உள்ள ஐக்கிய ஆசிரியர்கள் சங்கம் என்ற அமைப்பு தங்கள் கட்டடத்தின் கீழ் தளத்தை அளித்துள்ளது.இந்தப் பொருட்கள் அனைத்தும் போராட்டம் நீண்ட நாட்கள் நடப்பதற்கு உதவும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், வாஷிங்டனில் நடந்த மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அதிபர் பராக் ஒபாமா பேசுகையில்,“இன்று மார்ட்டின் லூதர் கிங் இருந்திருப்பாரானால் வால் ஸ்ட்ரீட்டின் செயல்பாடுகளுக்கு குந்தகம் நேராமல், வேலையில்லாதோர் அதன் வரம்பு மீறல் போக்கை எதிர்கொள்ள வேண்டும் என கூறியிருப்பார்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள புனித பால் கதீட்ரல் முன்பு நேற்று மூன்றாவது நாளாக லண்டன் ஆக்கிரமிப்பு இயக்கத்தினர் தங்கள் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்தனர்.கடந்த 15ம் திகதி இதே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி நடத்திய ஆர்ப்பாட்டத்திற்குப் பின் 200க்கும் அதிகமானோர் அங்கு கூடாரங்கள் அமைத்து தங்கிவிட்டனர். அவர்களின் ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடப்பதாலும், கதீட்ரலின் அன்றாட நடவடிக்கைகளுக்கு அவர்கள் இடையூறு செய்யாததாலும் கதீட்ரல் நிர்வாகம் இதை அனுமதித்துள்ளது.
பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்க ராணுவ வீரர்கள் குவிப்பு.
பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. இங்கு பதுங்கியுள்ள தீவிரவாதிகளை அழிக்க புதிய படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் அப்பகுதியில் உயர் கோபுரம் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வீடு, வீடாக சென்று சோதனை நடத்துவதுடன், பாகிஸ்தானின் எல்லை நகரான குலாம் கான் மற்றும் கோஸ்ட் முக்கிய இணைப்பு சாலையை மூடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஆனால் அமெரிக்கா மற்றும் நேட்டோ படையிடம் இருந்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. எல்லை பகுதியில் போர் விமானங்கள் பலமுறை வட்டமிட்டதாக குலாம் கான் கிராம மக்கள் தெரிவித்தனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF