Monday, October 24, 2011

இன்றைய செய்திகள்.

கடாபி கொலை தொடர்பில் இலங்கை விளக்கம் கோரியுள்ளது.

லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் கொலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் விளக்கம் கோரியுள்ளது.
கேணல் கடாபி கொல்லப்பட்ட விதம் தமக்கு சந்தேகம் தருவதாக கூறியுள்ள சிறிலங்கா அரசங்கம் அது தொடர்பில் தமக்கு விளக்கம் வேண்டும் என கூறியுள்ளது.
வெளிவிவகார அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் அவ்வாறு கோரப்பட்டுள்ளது.
லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் முவம்மர் கடாபியின் மரணத்தை சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து விரிவான ஒரு விளக்க அறிக்கை தேவைப்படுவதாகவும் இதனை ஐக்கிய நாடுகள் சபை செய்யவேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜேர்மனி செய்மதியின் பாகங்கள் சிறிலங்காவில் வீழ்ந்தன? ஆபத்தை எச்சரிக்கத் தவறிய விஞ்ஞானிகள்.

விண்வெளியில் செயலிழந்த ஜெர்மனியின் ஆய்வுச் செய்மதியின் உடைந்த பாகங்கள் தென்கிழக்காசியாவில் விழுந்திருக்கலாம் என்று ஜேர்மனிய விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். சிறிய பேருந்து ஒன்றின் அளவுடைய - 1.87 தொன் எடையான இந்த செய்மதி செயலிழந்து, 30 துண்டுகளாக உடைந்து 450 கி.மீ வேகத்தில் பூமியில் விழுந்துள்ளது.1990ம் ஆண்டில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்த செய்மதி 1999ம் ஆண்டில் செயலிழந்த நிலையில் புவிச்சுற்று வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருந்தது. இந்த செய்மதி சனிக்கிழமை இரவு 9.45 மணிக்கும், 10.15 மணிக்கும் இடையில் புவியை நெருங்கியதாகவும், அது தரையில் விழுவதற்கு 10 தொடக்கம் 15 நிமிடங்களே எடுத்திருக்கும் என்றும் ஜேர்மனி விண்வெளி ஆய்வு நிலையம் கூறியுள்ளது.

இந்தத் துண்டுகள் எங்கு விழுந்தன என்பது இன்னமும் உறுதி செய்ய்யப்படவில்லை என்றும் இவை மனிதர்கள் வசிக்கும் பகுதியில் விழவில்லை என்றும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்மதியின் பாகங்கள் விழுவதால், ஐரோப்பா, ஆபிரிக்கா, அவுஸ்ரேலியுக்குப் பாதிப்பு ஏற்படாது என்று முன்னரே கணிக்கப்பட்டிருந்தது. அதேவேளை அமெரிக்க இராணுவ விஞ்ஞானிகள் இந்த செய்மதிப் பாகங்கள் சிறிலங்காவின் கிழக்குப் பகுதி மியான்மர் கரையோரத்துக்கு அப்பாலுள்ள அந்தமான் கடல், மியான்மர் அல்லது சீனாவின் உள்பகுதியில் விழலாம் என்று எதிர்பார்த்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மில்லியன் கணக்கான மக்கள் வாழும் சீனாவின் சொங்குயிங் மற்றும் செங்டு நகரங்களின் மீது இவை வீழ்ந்தால் பெரும் அழிவுகளை ஏற்படலாம் என்றும் கருதப்பட்டது. இதற்கிடையே ஜேர்மனிய செய்மதி தென்கிழக்காசியாவில் வீழ்ந்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார். எனினும் இவை எங்கு விழுந்தன என்பதை அவர் உறுதி செய்யவில்லை. இந்த செய்மதிப் பாகங்கள் சிறிலங்காவின் கிழக்குப் பகுதியில் வீழ்ந்தனவா என்பது குறித்த தகவல்கள் ஏதும் தெரியவரவில்லை.

இந்த செய்மதிப் பாகங்கள் பூமியில் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு 2000இல் ஒரு பங்கு வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் முன்னரே கூறியிருந்தனர். ஆனாலும், இந்த செய்மதி பாகங்களால் சிறிலங்காவுக்கு ஆபத்து உள்ளதாக முன்னரே கணித்திருந்த அமெரிக்க, ஜேர்மானிய விஞ்ஞானிகள் இது குறித்த முன்னெச்சரிக்கைகள் எதையும் பொதுமக்களுக்கு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என் தந்தை கொலைக்கு பழி வாங்குவேன்: கடாபி மகன் சபதம்.

லிபியாவில் சிர்த் நகரில் சுட்டுக்கொல்லப்பட்ட கடாபிக்கு 2 மனைவிகள் மூலம் 7 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர். அவர்களில் 2 பேர் தங்கள் குடும்பத்துடன் அல்ஜீரியாவுக்கு தப்பி சென்றுவிட்டனர். நேட்டோ படை குண்டு வீச்சில் ஒருவர் பலியாகிவிட்டார். முட்டாசிம் என்ற மகன் கடாபியுடன் கொல்லப்பட்டார்.மற்றொரு மகன் சயீப் அல்- இஸ்லாம் என்பவர் தலைமறைவாகி விட்டதால் உயிருடன் இருக்கிறார். அவர் சிரியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு தனி யார் டி.வி.யில் திடீரென தோன்றினார். அப்போது தனது ஆதரவாளர்களுக்கு உரை நிகழ்த்தினார்.
அவர் கூறியதாவது:-

நான் சாகவில்லை, இன்னும் உயிருடன் சுதந்திரமாக இருக்கிறேன். லிபியா மக்களுக்காக நான் இறுதிவரை போராடுவேன். என் தந்தையை (கடாபியை) கொன்றவர்களை எதிர்த்து போராடி பழிவாங்குவேன். அதுவரை எனது போராட்டம் ஓயாது என்று ஆவேசமாக பேசினார். சயீப் அல்-இஸ்லாம் கடாபி ராணுவத்தில் கமாண்டராக இருந்தார். புரட்சி படையை எதிர்த்து போரிட்டு வந்த அவர் திடீரென சரண் அடைவதாக அறிவித்தார். பின்னர் தலைமறைவாகிவிட்டார்.

இன்று ஐ.நா தினம்.
ஐ.நா தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 24ல் கொண்டாடப்படுகிறது. ஐ.நா அமைப்பின் நோக்கம், சாதனை, எதிர்காலத் திட்டம் போன்றவற்றை மக்களிடம் சேர்ப்பது இத்திட்டத்தின் நோக்கம்.
முதல் உலகப் போர் நடந்த போது அது போல் மீண்டும் ஒரு பயங்கரம் நடக்கக் கூடாது என உலக நாடுகள் எண்ணின. அதற்காக உலக நாடுகளின் ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்க முயற்சித்தனர். அது தோல்வியில் முடிந்தது. அதன் பின் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டு உலகில் பேரழிவை ஏற்படுத்தியது.
இனி இன்னொரு போர் உலக நாடுகளிடையே ஏற்பட்டுவிடக் கூடாது. உலகில் அமைதியும் சமநிலையும் ஏற்பட வேண்டும் என்பதற்காக 1945 ஏப்ரல் 25 மற்றும் ஜூன் 26ல் சான்பிரான்சிஸ்கோ நகரில் உலக நாடுகளின் கூட்டம் நடந்தது. அதன் விளைவாக ஐ.நா சபை 1945 அக்டோபர் 24ல் தோற்றுவிக்கப்பட்டது.
இச்சபை முறைப்படி செயல்படத் துவங்கிய அக்டோபர் 24 ஐ.நா தினமாக அறிவிக்கப்பட்டது. 51ல் இருந்து 193 அமைதியை விரும்பும் எந்த நாடும் இதன் உறுப்பினராகச் சேரலாம். ஐ.நா தொடங்கப்பட்ட போது 51 உறுப்பு நாடுகள் இருந்தன. தற்போது 193 நாடுகளாக உயர்ந்துள்ளன.
ஐ.நா.வின் நிரந்தர உறுப்பு நாடாக அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய 5 நாடுகள் உள்ளன. நிரந்தரமாக இல்லாத நாடுகளில் இந்தியா உள்ளிட்ட 10 நாடுகள் ஒப்பந்த அடிப்படையில் நிரந்தர உறுப்பினராக உள்ளது.
ஐ.நா.வின் அலுவலக மொழிகளாக ஆங்கிலம், சீனம், அரபி, பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ் ஆகிய 6 மொழிகள் உள்ளன. 5 ஆண்டுக்கு ஒருமுறை உலகில் உயர்ந்த பதவியாக ஐ.நா.வின் பொதுச்செயலர் பதவி கருதப்படுகிறது. இந்த அமைப்புத் தொடங்கிய 60 ஆண்டுகளில் இதுவரை 6 பேர் அதன் பொதுச் செயலர்களாக இருந்துள்ளனர்.
இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஒருவரே இருமுறை இப்பதவியை வகிக்கிலாம். அந்த வகையில் இதுவரை பதவி வகித்த அனைவரும் இருமுறை பதவி வகித்துள்ளனர்.
தற்போதைய ஐ.நா பொதுச்செயலராக அமெரிக்க ஆதரவு நாடான தென்கொரியாவைச் சேர்ந்த பான்-கீ-மூன் இரண்டாவது முறையாக நீடிக்கிறார். உலக நாடுகளிடையே அமைதி ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் ஐ.நா துவங்கப்பட்டது. இன்று இந்த அமைப்பு வல்லரசு நாடுகளின் பிடியில் உள்ளது.
தீவிரவாதிகளை ஒழிக்க இந்தியா உதவி புரிய வேண்டும்: வங்கதேசம் கோரிக்கை.
வங்கதேசத்தில் உள்ள தீவிரவாதிகளை அழிக்க இந்தியா, வங்கதேசத்திற்கு ரூ.10,000 கோடியிலிருந்து ரூ.15,000 கோடி வரை தர வேண்டும் என்று வங்கதேச போர் நடவடிக்கைத் துறை அமைச்சர் டாஜுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கும், வங்கதேசத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்தின் போது சனிக்கிழமை அவர் இவ்வாறு தெரிவித்ததாக பிரதோம் அலோ பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
வங்கதேசத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவிரவாதிகள் இந்தியாவிற்கு எதிரான செயல்களில் ஈடுபடுகின்றனர். எங்களது அரசு பதவியேற்றதிற்குப் பிறகு வங்கதேச மண்ணில் உள்ள தீவிரவாதிகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
நாகாலாந்து, மிசோரம், அசாம் மாநிலங்களிலிருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் பாகிஸ்தான் உதவியோடு இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதச் செயல்களுக்கு வங்கதேச மண்ணை பயன்படுத்திக் கொண்டனர்.
2008ம் ஆண்டிற்குப் பிறகு எங்களது அரசு பதவியேற்ற பின் நிலைமை முற்றிலும் மாறியது. அவர்களை அங்கிருந்து நாங்கள் அகற்றிவிட்டோம் என்று அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முன்னாள் தலைவர் மரணம்.
பாகிஸ்தானின் மறைந்த முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவின் தாயார் நசரத் புட்டோ(82) நேற்று காலமானார்.
பாகிஸ்தான் அதிபர் ஜூல்பிகர் அலி புட்டோவின் மனைவியான நசரத் புட்டோ 1929 மார்ச் 23ம் திகதி ஈரானின் எஸ்பகான் என்ற இடத்தில் பிரபல தொழிலதிபருக்கு மகளாகப் பிறந்தார்.
அதன் பின் அவரது குடும்பம் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு குடிபெயர்ந்தது. கடந்த 1951ல் ஜூல்பிகர் அலி புட்டோ நசரத்தை இரண்டாவது மனைவியாக மணந்தார். 1979ல் ஜூல்பிகர் தூக்கிலிடப்பட்ட பின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று வழிநடத்தினார்.
அதன் பின் தனது மகள் பெனசிர் புட்டோவிடம் கட்சியை ஒப்படைத்தார். கடந்த 1990களில் பெனசிர் புட்டோ துபாயில் வசிக்கத் துவங்கிய போது அவரோடு துபாய் சென்றார்.
2007ல் பெனசிர் நாடு திரும்பிய போதும் கூட நசரத் துபாயிலேயே இருந்தார். அல்சீமர் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று துபாயில் காலமானார். அவரது உடல் சிந்து மாவட்டத்தில் உள்ள லர்கானாவுக்குக் கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்படும்.
40 கோடி ரூபாய் தர வேண்டும்: எண்ணெய் நிறுவனங்களுக்கு தலிபான்கள் மிரட்டல்.
பாகிஸ்தான் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனம் மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனம் இரண்டும் தலா 20 கோடி ரூபாய் தர வேண்டும் என பாகிஸ்தானி தலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தாரிக் இ தலிபான் பாகிஸ்தான் பிரிவைச் சேர்ந்த தளபதி ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்த தகவலில் கூறியதாவது: பாகிஸ்தான் தேசிய எண்ணெய் நிறுவனம் மற்றும் ஷெல் பாகிஸ்தான் எண்ணெய் நிறுவனம், இரண்டின் நிர்வாக இயக்குனர்களிடம் நான் தனிப்பட்ட முறையில் பேசி ஆளுக்கு 20 கோடி ரூபாய் தர வேண்டும் என்று கூறியுள்ளேன். தரவில்லையெனில் அந்த நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் எனவும் எச்சரித்துள்ளேன். இவ்வாறு தலிபான் தளபதி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தேசிய எண்ணெய் நிறுவனம் பத்திரிகைகளுக்கு இதுகுறித்து அளித்த செய்தியில், தாங்கள் நேட்டோவுக்கு அளித்து வரும் எண்ணெய் வினியோகத்தை தடுக்கப் போவதாக தலிபான்கள் மிரட்டியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்த தலிபான் தளபதி, பணத்தைப் புரட்ட தங்களுக்கு அவகாசம் கோரியுள்ளனர். அதேநேரம் நேட்டோவுக்கான வினியோகத்தை நாங்கள் தடுக்கப் போவதாக மிரட்டியதாக வந்த செய்தி தவறானது.
அவர்கள் என்ன செய்தாலும் எங்களுக்குக் கவலையில்லை. இன்னும் 20 நாட்களில் 40 கோடி ரூபாய் எங்களுக்கு வந்தாக வேண்டும் என்பதை மட்டும் சுட்டிக்காட்டியுள்ளேன் என்றார்.
துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்: 1000 பேர் பலி.
துருக்கியின் தென்கிழக்கு மாகாணம் ஒன்றில் நேற்று நிகழ்ந்த 7.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் ஈரான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள வான் இலி மாகாணத்தில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகள் பதிவான இந்நிலநடுக்கத்தில் வான் நகரில் 10 அடுக்கு மாடிக் கட்டடங்களும், அருகில் உள்ள எரிக்ஸ் மாவட்டத்தில் 25ல் இருந்து 30 கட்டடங்களும் இடிந்து விழுந்ததாக துணைப் பிரதமர் பெசிர் அட்டாலாய் தெரிவித்தார்.
இக்கோரச் சம்பவத்தில் 500ல் இருந்து 1,000 பேர் பலியாகியிருக்கலாம் என அந்நாட்டு நிலநடுக்கவியல் நிறுவன இயக்குனர் முஸ்தபா எர்டிக் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. மக்கள் பீதியில் தெருக்களில் குவிந்தனர்.
எரிக்ஸ் மாவட்ட மேயர் ஜூல்பிகர் அரபோகு கூறுகையில்,"நிறைய கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன, பலர் பலியாகியுள்ளனர். எனினும் எத்தனை பேர் என்பது தெரியவில்லை. அவசர மீட்புப் பணிகளுக்காகக் காத்திருக்கிறோம்” என்றார்.
வான் நகரில் மீட்புப் படையினர் இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ள நபர்களையும், பலியானவர்களின் உடல்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெனிசுலா அதிபர் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார்: மருத்துவர்கள் தகவல்.
வெனிசுலா நாட்டின் அதிபர் ஹியூகோ சாவேஷ். இவர் எலும்பு புற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார்.
அதற்காக அவர் சால்வேடர் உள்ளிட்ட வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை பெற்று திரும்பிய அவர் தற்போது தான் நலமுடன் இருப்பதாக வெனிசுலா மக்களுக்கு ஆற்றிய உரையின் போது தெரிவித்தார்.
ஆனால் அவர் இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பார் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் நவரத் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகைக்கு மருத்துவர் நவரத் பேட்டி அளித்துள்ளார். அதில் வெனிசுலா அதிபர் சாவேஷ் கடுமையான எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதை நான் உறுதி பட கூறுகிறேன்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் 2 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ முடியும். அது அவருக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளார்.
ஏமன் தலைநகர் சனாவில் தாக்குதல்: 12 பேர் பலி.
ஏமன் அரசுப்படை வீரர்களுக்கும், அரசுக்கு எதிராக செயல்படும் புரட்சிப்படை வீரர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
சண்டையில் ஏற்பட்ட கலவரத்தில் அதிகமான மக்கள் காயமடைந்தனர். ஐரோப்பிய யூனியனின் பாதுகாப்பு கவுன்சில் அந்நாட்டின் அதிபர் அலி அப்துல்லாஹ் சாலேவிடம் சில சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியது.
ஹாசாபா மாவட்டம் சில மாதங்களாகவே பதட்டமான நிலையில் இருந்து வந்தது. அதற்குக் காரணம் 33 வருடங்களாக ஆட்சி செய்யும் அந்நாட்டு அதிபரின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதே ஆகும்.
புரட்சிப்படை வீரர்களுக்கு அலி மோஹ்சன் அல் அஹமர் என்பவர் தலைமை ஏற்று அதிபர் சலேவை எதிர்த்து பிப்ரவரி மாதம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.
கலவரத்தின் போது தலைநகர் வடக்கு பகுதியில் இருக்கும் மாவட்டங்களான ஹாகாபா, கௌபன் மற்றும் நாடா இவற்றில் ராக்கெட்டால் எறியப்படும் குண்டுகள், பீரங்கி தாக்குதல் மற்றும் தானியங்கி ஆயுதங்களால் தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடந்தன.
இதனால் நகர் முழுவதும் தீ மற்றும் புகை கிளம்பியது. நாடு முழுவதும் ஏற்பட்ட புகைமண்டலம் பக்கத்து நாடுகளுக்கும் பரவியது.
கென்ய வாழ் அமெரிக்கர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்: அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை.
அல் ஷபாப் என்ற இஸ்லாமியத் தீவரவாத அமைப்பு அல்கொய்தாவுடன் தொடர்புடையது. இந்த அமைப்பு சோமாலியாவில் இஸ்லாமியச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்கிறது.
சோமாலியாவின் அண்டை நாடான கென்யா தன் படைகளை சோமாலியாவில் நிறுத்தி வைத்துள்ளது. இந்தப் படைகளை விரட்டியடிப்போம் என்று அல் ஷபாப் தெரிவித்துள்ளது.
இந்தப் படைகள் சோமாலியாவின் இறையாண்மைக்கு அறைகூவல் விடுப்பதாகக் கூறிவரும் அல் ஷபாப் கென்யாவிற்குள் நுழையவும் தயாராக உள்ளது.
இதனால் கென்யாவில் வாழும் அமெரிக்கர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்கத் தூதரகம் அறிவுறுத்துகிறது. கென்யா செல்ல விரும்பும் அமெரிக்கச் சுற்றுலாப் பயணிகளை அவர்களின் பயணத்தை தவிர்க்குமாறு அல்லது தற்சமயத்திற்கு ஒத்திவைக்குமாறு கூறியுள்ளது.
கென்யாவில் செப்டம்பர் மாதம் 11ம் திகதி பயணி ஒருவர் சோமாலியரால் கடத்தப்பட்டார். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த டேவிட் தன் மனைவி ஜுடித்துடன் கென்யாவில் ஒரு கடற்கரைக் குடிலில் தங்கி விடுமுறையைக் கழித்தார்.
அப்போது அங்கு வந்த கடத்தல்காரர்கள் தம்முடன் எதிர்த்துப் போராடிய டேவிட்டைச் சுட்டுவிட்டு அவர் மனைவி ஜுடித்தை இயந்திரப் படகில் கடத்திச் சென்றனர்.
ஓக்டோபர் 1ம் திகதி கென்யாவின் மண்டா தீவில் ஓய்வெடுத்து வந்த புற்று நோயாளியான 60 வயது பிரெஞ்சு மூதாட்டியை சோமாலியர் கடத்திச் சென்றனர். இவர் ஒரு விபத்தின் காரணமாக நடமாட இயலாமல் சக்கரவண்டியின் உதவியுடன் வாழ்ந்து வந்தார்.
இவருக்கு உரிய மருந்துகளை கடத்தல்காரர்கள் கொடுக்க மறுத்ததால் இவர் இறந்துபோனார். இந்த தகவலை பிரான்ஸ் அரசு தெரிவித்தது.
மேலும் இந்த மாதத் தொடக்கத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள இரண்டு மருத்துவர்களை துப்பாக்கி முனையில் சோமாலிய எல்லையை விட்டு 50 மைல் தூரத்துக்குக் கடத்திச் சென்றனர். இவ்வாறு பல கடத்தல்கள் சமீபத்தில் நடைபெற்றன.
அல் ஷபாப் மேற்கூறிய எந்தக் கடத்தலுக்கும் பொறுப்பேற்கவில்லை. ஆனாலும் இந்த இஸ்லாமிய மதவாதிகளால் அமெரிக்க மக்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று எண்ணி அமெரிக்கத் தூதரகம் தன் நாட்டு மக்களை எச்சரிக்கின்றது.
கடாபியை சுட்டுக் கொண்ட வாலிபர் பரபரப்பு பேட்டி.
லிபிய முன்னாள் அதிபர் கடாபியை சுட்டுக் கொன்றது நான் தான் என்று வாலிபர் ஒருவர் கூறியுள்ளார்.
லிபிய முன்னாள் அதிபர் கடாபியை எதிர்த்து கடந்த 9 மாதங்களாக புரட்சிப் படையினர் தாக்குதல் நடத்தி வந்தனர்.
கடந்த 20ம் திகதி சொந்த ஊரான சிர்தேவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து ஐ.நா. அறிக்கை கேட்டுள்ளது.
இந்நிலையில் கடாபியை சுட்டுக் கொன்றது நான்தான் என்று சனாத் அல்சதக் அல்யுரிபி என்ற வாலிபர் கூறியுள்ளார். இதற்கு ஆதாரமாக இன்டர்நெட்டில் புதிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் சனாத்தை சிலர் பேட்டி எடுக்கின்றனர். அவரை சுற்றி சிலர் ராணுவ உடையில் இருக்கின்றனர். சிலர் சனாத்தை பாராட்டுகின்றனர்.
கடாபியின் தங்க மோதிரம், ரத்தக் கறை படிந்த சட்டையை காட்டுகின்றனர். அந்த தங்க மோதிரத்தில் கடாபியின் 2வது மனைவி சபியாவின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
பேட்டியின் போது, கடாபியை 2 முறை துப்பாக்கியால் சுட்டேன். ஒரு குண்டு அவரது தோளிலும் மற்றொரு குண்டு தலையிலும் பாய்ந்தது. ஆனால் கடாபி உடனடியாக சாகவில்லை. அரை மணி நேரம் கழித்துதான் இறந்தார் என்று சனாத் கூறியுள்ளார்.
போலந்து நாட்டில் புதைக்கப்பட்ட நாஜி ஜேர்மனி வீரர்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு.
இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்டவர்களை போர் நடந்த இடங்களில் ஆங்காங்கே புதைத்து விட்டனர்.
அவ்வாறு புதைக்கப்பட்டவர்களை போலந்து நாட்டின் போமோஸ்த் என்ற அமைப்பினர் மீண்டும் தோண்டியெடுத்து இராணுவக் கல்லறைத் தோட்டத்தில் இராணுவ மரியாதையுடன் மறுஅடக்கம் செய்கின்றனர்.
அண்மையில் போலந்து நாட்டில் இவ்வாறு புதைக்கப்பட்ட 618 ஜேர்மன் வீரர்களின் சடலங்களை முறைப்படி சமயச்சடங்குகளுடன் போஸ்னான் என்ற ஊரில் மறு அடக்கம் செய்தனர். இந்த ஊரில் ஏற்கனவே சுமார் 140000 வீரர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜேர்மனியானது இந்த மறு அடக்கத்திற்கு போமோஸ்த் என்ற சமூக அமைப்பிற்கு நிதி உதவி அளிக்கின்றது. 1991இல் மறு அடக்கத் திட்டத்திற்காக போலந்து நாட்டின் தலைநகரமான வார்சாவிலும், ஜேர்மனியின் தலைநகரான பெர்லினிலும் ஓர் ஒப்பந்தம் உருவானது.
அதன்படி போலந்து நாட்டில் உள்ள 13 ஜேர்மன் இராணுவக் கல்லறைத் தோட்டங்களில் ஒரு லட்சத்து ஐம்தாயிரம் வீரர்களின் சடலங்கள் மறு அடக்கம் செய்யப்பட்டன.
போலந்தின் தென்பகுதியில் உள்ள சீமினோவிஸ் ஸ்லாஸ்கி என்ற இடத்தில் சுமார் 31,000 பேர் மறு அடக்கம் செய்யப்பட்டனர். பெரும்பாலும் கட்டட வேலைக்காகத் தோண்டும் போது இத்தகைய சடலங்கள் பெருவாரியாக கிடைக்கின்றன. அவற்றை இராணுவ மரியாதையுடன் மறு அடக்கம் செய்கின்றனர்.
முதலாம் உலகப்போரின் போது சுமார் நான்கு லட்சம் பேரும், இரண்டாம் உலகப்போரின் போது சுமார் நான்கு லட்சத்து அறுபத்தெட்டாயிரம் பேரும் போரில் மரணம் அடைந்ததாக ஜேர்மனியின் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.
போர் முடிந்து 66 ஆண்டுகளுக்கு பிறகும் கூட ஒரு கோடி ஜேர்மன் வீரர்கள் மற்றும் பொதுமக்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. போருக்குப் பிறகு மேற்கு ஜேர்மனிக்கும் சோவியத் யூனியனுக்கும் இருந்த கசப்புணர்வில் அப்போது சோவியத்தின் ஒரு பகுதியாக இருந்த போலந்து நாட்டில் புதைக்கப்பட்ட வீரர்களின் சடலங்களை மீட்க இயலவில்லை. ஆனால் 1989-91 இல் சோவியத்தின் இரும்புத் திரை விலக்கப்பட்ட பின்னர் மறு அடக்கப் பணிகள் ஆரம்பமாயின.
பெருந்துயர நிகழ்வின் போது கொல்லப்பட்ட ஆறு கோடி யூதர்களில் போலந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் சரிபாதி ஆவர். இப்போது போமோஸ்த் போன்று வேறு சில அமைப்பு பழைய பகையை மறந்து இறந்து போன வீரர்களின் சடலங்களுக்கு சமயச் சடங்குகளை நடத்தி முறையாக மறு அடக்கம் செய்து வருகின்றன.
பாகிஸ்தானுக்கு எப்பொழுதும் துணை நிற்போம்: ஆப்கன் அதிபர் கர்சாய் பேட்டி.
அமெரிக்கா, இந்தியா போன்ற எந்த நாடுகள் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினாலும் ஆப்கானிஸ்தான் துணை நிற்கும் என ஹமீத் கர்சாய் கூறியுள்ளார்.
ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் பாகிஸ்தானிலுள்ள ஜியோ செய்திக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பாகிஸ்தானுடன் சண்டையிடும் நாடு எதுவாக இருந்தாலும், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியாவாக இருந்தாலும் நாங்கள் பாகிஸ்தான் பக்கம் துணை நிற்போம் என்றார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், எவரேனும் பாகிஸ்தானை தாக்கினால் ஆப்கானிஸ்தான் எப்போதும் பாகிஸ்தானுக்கு துணை நிற்கும். ஆப்கனின் சகோதர நம்பிக்கை துரோகம் செய்யாது. பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே நிகழும் பதற்றமான சூழ்நிலைக்கு காரணம் ஹக்கானி பிரச்சனையே.
அமெரிக்கா தாக்குதல் நடத்தும் போது, ஆப்கன் படைகள் பாகிஸ்தானுக்கு துணை நிற்கும் என்றும், பாகிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும் இடையே போர் நடந்தால் ஆப்கனின் உதவி பாகிஸ்தான் மக்களுக்கே கிடைக்கும் எனவும் கூறினார்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மற்றும் அமைதி தூதர் புர்ஹானுதின் ரப்பானி படுகொலைக்குப் பின் பாகிஸ்தானில் ஆபத்தான சூழ்நிலை நிலவுவதாகவும், பாகிஸ்தான் ஆதரவு இல்லாமல் தலிபான் ஒரு இஞ்ச் தூரம் கூட நகர முடியாது என்றும் கூறினார்.
நியூயார்க் கலவரம்: கனடிய இளைஞர் கைது.
நியூயோர்க் நகரத்தில் நடைபெற்ற கலவரத்தில் கனடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நியூயோர்க் நகரத்தில் உள்ள மான்காட்டன்ஸ் ஜியூனோட்டி பூங்காவில் கலவரம் நடந்தது. அப்போது 24 வயதான இளைஞன் ஒருவன் அப்பூங்காவிலுள்ள 70 அடி உயரமுள்ள உருவச்சிலையின் மீது ஏறி இருந்தான்.
அச்சிற்பமானது ஜோய் டீ விவ்ரே என்பவரின் உருவச்சிலையாகும். நியூயோர்க் பொலிசார் கண்டித்தும், அவன் அச்சிலையை விட்டு இறங்க மறுத்துவிட்டான்.
மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் சிலையை விட்டு அவனை பொலிசார் கீழே கொண்டு வந்தனர். பொலிஸ் அதிகாரி டப்பி கூறுகையில், அவன் நடந்து கொண்ட விதத்தை கிரிமினல் செயலாக கருதக்கூடாது என்றார்.
பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் மனோதத்துவ மருத்துவரிடம் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டான்.
அவன் பெயரானது டைலன் ஸ்போல்ட்ரா எனவும், அவன் கனடாவில் ரொடரண்டோ மாகாணத்தை சேர்ந்தவன் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF