வளைகுடா நாடுகளை இணைக்கும் 2,117 கி.மீ. நீளமுள்ள அதிநவீன ரயில்வே திட்டம் 2018-ம் ஆண்டுவாக்கில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இத்திட்டத்திற்கு சுமார் ரூ. 50 ஆயிரம் கோடி செலவிடப்படும். இதற்கான கட்டுமானப் பணிகள் 2014-ம் ஆண்டு தொடங்கும். வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் அதிகாரிகள் குறைந்த செலவிலான போக்குவரத்தை மக்களுக்கு வழங்க இந்தத் திட்டத்தை விரைவுபடுத்தியுள்ளனர்.
இத்திட்டம் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் ரயில்வே ஆணையத்தால் செயல்படுத்தப்படும். அரசு மற்றும் பொதுத்துறை முதலீடுகளின் உதவியுடன் இத்திட்டம் நிறைவேற்றப்படும். பஹ்ரைன், குவைத், ஓமன், கடார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய 6 நாடுகள் இத்திட்டத்தால் பலனடையும்.இதுதொடர்பாக நடந்த மாநாட்டில் பேசிய நிபுணர்கள் இப்போது அமைக்கப்பட்டுள்ள ரயில்வே ஆணையம் உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை நிறைவேற்றப் பாடுபடும் என்றனர்.அடுத்த ஆண்டு முற்பகுதியில் ரயில்வே திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஆவணம் தயாராகிவிடும் என வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் செயலகத்தின் மூத்த ஆலோசகர் டாக்டர் ரமீஸ் அல் அஸ்ஸார் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: இத்திட்டத்தில் தனியார் துறையின் முதலீடு மிக முக்கியமானதாக இருக்கும். அதேநேரத்தில் ஆலோசனை தொழில்நுட்ப விஷயங்களுக்கு மட்டுமே உலக வங்கி பயன்படுத்தப்படும். வளைகுடா மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் எளிதாகச் சென்று வரவும் இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
மஸ்கட் வழியாக ஏமனை இணைப்பது என்ற முக்கிய முடிவினை அண்மையில் எடுத்துள்ளோம். இந்த மாபெரும் ரயில்வே திட்டம் 2018-ல் அமலுக்கு வந்தாலும், முழுமையாக நிறைவடைய 2019 முதல் 2022-ம் ஆண்டுவரை ஆகலாம் என்றார் ரமீஸ்.ரயில்வே திட்டத்துக்கான வரைபடம் தயாரிக்கப்பட்டு விட்டதாக கடார் ரயில்வே நிறுவனத்தின் இயக்குநரும் பொறியாளருமான கனிம் அல் இப்ராஹிம் தெரிவித்தார்.