Wednesday, October 12, 2011

பற்றி எரியும் எரிவாயு அரசியல்...


மன்னார் கடற்படுக்கையில், எரிவாயு வளம் இருப்பதை கெய்ன் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியிருப்பதாக கண்டியில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்த செய்தி உலகிலுள்ள ஏராளமான ஊடகங்களில் செய்தியாகியுள்ளது.போர் பற்றியும் அதற்குப் பின்னர் போர்க்குற்றங்கள், மனிதஉரிமைகள் தொடர்பாகவுமே இலங்கையில் இருந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் - இந்தச் செய்தி சிறிலங்காவை வேறொரு கோணத்தில் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

அதனால் தான் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்ட செய்தியை பெரும்பாலான ஊடகங்கள் முக்கியமாக உற்று நோக்கியுள்ளன.அNதுவேளை, சர்வதேச அளவில் இந்தச் செய்தி பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்க, இலங்கையில் இதுபற்றிய சந்தேகங்களும் கிளம்பவே செய்துள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்த பின்னர் தான் கெய்ன் இந்தியா நிறுவனம் தாம் தோண்டுகின்ற எண்ணெய்க் கிணற்றில் இருந்து எரிவாயு கண்டறியப்பட்டது பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது.மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் வளம் இருப்பதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்ட பகுதியை அரசாங்கம் எட்டுத் துண்டுகளாப் பிரித்து வைத்துள்ளது.

இவற்றில் ஒன்று கெய்ன் இந்தியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏனையவற்றில் ஒன்று சீனாவுக்கும் மற்றொன்று இந்தியாவுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் ஐந்து துண்டங்கள் யாருக்கும் வழங்கப்படாமல் உள்ளது.கெய்ன் இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட துண்டில் தான் கடந்த ஓகஸ்ட் மாதம் பரீட்சார்த்தமாக எண்ணெய் கிணறு ஒன்றைத் துளையிடும் பணி தொடங்கப்பட்டது.CLPL-Dorado-91H/1z என்று பெயரிடப்பட்ட இந்தக் கிணற்றில் இருந்தே இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.

கெய்ன் இந்தியா நிறுவனம் இதனை உறுதி செய்திருக்கின்ற போதும், இது வணிக ரீதியான உற்பத்திக்கு ஏற்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள மேலும் துளையிட வேண்டும் என்று கூறியுள்ளது.அதற்கிடையில் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டதை ஒருதரப்பினர் பெருமையாக கூறிக்கொள்ள இன்னொரு தரப்பு இதெல்லாம் வெறும் தேர்தல் விளையாட்டு என்று மறுத்தாடத் தொடங்கியது.கண்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த அறிவிப்பை வெளியிட்டது ஒரு தேர்தல் நோக்கம் கருதிய கூட்டத்தில் தான்.அவர் மீண்டும் கண்டிக்கு வந்து போகம்பறையில் பெற்றோல் கிடைத்துள்ளதாக கூறினாலும் ஆச்சரியமில்லை என்று ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு எரிவாயு விவகாரத்தை சர்ச்சையாக்கியுள்ளதற்கும் காரணங்கள் உள்ளன.முன்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க பேசாலையில் பெற்றோல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்ததாகவும், சந்திரிகா குமாரதுங்க மன்னாரில் பெற்றோலிய வளம் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.அதுபோலவே இதுவும் இருக்கலாம் என்பது அவரது சந்தேகம். அதனால் தான் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய அறிவிப்பை நாடாளுமன்றத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று சவால் விடுத்துள்ளார். இதனை அரசாங்கம் நிறைவேற்றுமா என்று தெரியவில்லை.

அதேவேளை அமைச்சர்கள் சிலர் எரிவாயு வந்து விட்டதால், இனிமேல் இலங்கை அபிவிருத்தி அடைந்து விடும் என்பது போல குதிக்கிறார்கள்.இப்போது கண்டுபிடிக்கப்பட்டது வெறும் இயற்கை எரிவாயு தான்.இது திரவ எரிவாயு அல்ல. திரவ எரிவாயுவாக இதனை மாற்றினால் தான் அதனை சமையல் தேவைக்கோ அல்லது வேறு தேவைகளுக்கோ பயன்படுத்த முடியும்.அதற்கு இந்த எரிவாயுவை கடல் மட்டத்துக்கு கொண்டு வந்து சுத்திகரிக்க வேண்டும். அதற்கான தொழில்நுட்பங்களுக்கு பெருமளவில் செலவிட வேண்டும்.

அதை கெய்ன் இந்தியா நிறுவனம் பார்த்துக் கொள்ளும் என்றாலும், அதனை கடல் மட்டத்துக்கு கொண்டு வந்து சுத்திகரிக்க- வணிக ரீதியாக உற்பத்தி செய்யும் அளவுக்கு போதுமான எரிவாயு மன்னாரில் உள்ளதா என்ற கேள்வியே முக்கியமானது.பல ஆயிரம் கோடி ரூபாவை செலவழித்து தொழில்நுட்ப சாதனங்களைப் பொருத்தி கிணறுகளை அமைத்த பின்னர், போதிய எரிவாயு இல்லையென்று அதனை மூடுவதால் பெரும் நட்டம் தான் ஏற்படும்.எனவே 1354 மீற்றர் ஆழத்தில் உள்ள இயற்கை எரிவாயுவை வணிக ரீதியாக உற்பத்தி செய்ய முடியுமா என்ற கேள்விக்கு இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை.பசுபிக், அத்திலாந்திக் பகுதிகளில் தாராளமாகவே இயற்கை எரிவாயு இருக்கின்ற போதும், அவற்றை வணிக ரீதியாக உற்பத்தி செய்ய முடியாது. அதுபோலவே மன்னாரிலும் எரிவாயு வளம் வணிகரீதியாக உற்பத்தி செய்யக் கூடிய நிலையில் உள்ளதா என்பது சந்தேகம் தான் என்பதே ரணில் விக்கிரமசிங்கவின் வாதம்.

எரிவாயு வளம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது மகிழ்ச்சியான விவகாரம் என்ற போதும் அது இலங்கைக்கு எந்தளவுக்கு உதவக் கூடும் என்று பார்ப்பது முக்கியமானது.கெய்ன் இந்திய நிறுவனம் எண்ணெய்க் கிணற்றைத் துளையிடத் தொடங்கியதும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இலங்கையில் எண்ணெய் வளம் இருப்பது உறுதி செய்யப்பட்டால், மத்திய கிழக்கு நாடுகளைப் போன்று இலங்கையும் மேற்குலக அச்சுறுத்தல்களையும், சவால்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார்.எரிவாயு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இங்கு எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்படுவதை தடுக்கவே நோர்வே புலிகளுக்கு ஆதரவளித்து வந்ததாக அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த கூறியுள்ளார்.

ஆக இலங்கையில் எண்ணெய் வளம் இருப்பதையோ, இலங்கை எண்ணெய் வளம் கொண்ட நாடாக மாறுவதையோ மேற்குலகம் விரும்பவில்லை என்றே அரசாங்கம் கருதுவதாக தெரிகிறது.இலங்கையில் எண்ணெய் வளம் இருந்தால், அதனை கட்டுப்படுத்த முடியாது என்று மேற்குலகம் கருதுகிறதா என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது.ஆனால் இந்தளவுக்கும் நோர்வே தான் இலங்கைக்கு எண்ணெய் வளம் இருப்பதை கண்டறிந்து கொடுக்க உதவியது. அந்த ஆய்வுகளின் அடிப்படையில் தான் எண்ணெய் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எரிவாயு அல்லது எண்ணெய் வளம் மன்னார் கடலில் இருப்பது உறுதியானால், அது இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் வலுப்பெற வைக்கும். ஆனால் அது ஒன்றும் உடனடிச் சாத்தியமான விடயம் அல்ல. வணிக ரீதியான உற்பத்தியை தொடங்கவே இரண்டுஇ மூன்று ஆண்டுகள் ஆகலாம்.ஆனால் ஒன்று இந்த எண்ணெய்க் கிணற்றில் எரிவாயு வளம் இருப்பது உறுதி செய்யப்பட்டால், மீதமுள்ள 5 துண்டங்களையும் அரசாங்கம் நல்ல விலைக்கு விற்று விடும்.மன்னார் கடற்பகுதியில் 1 பில்லியன் பரல் எண்ணெய்வளம் இருப்பதாக கூறியே அரசாங்கம் இந்தப் பகுதிக்கு முதலில் கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டன. மன்னார் கடற்பரப்புக்கு அப்பால் இந்திய எல்லைக்குள் இந்தியா சுமார் 30 எண்ணெய் கிணறுகளை துளையிட்டுள்ளது. இவற்றில் 26 கிணறுகளிலும் எரிவாயு தான் கிடைத்தது. ஐந்து கிணறுகளில் இருந்து எண்ணெய்யும், எரிவாயுவும் சேர்ந்து கிடைக்கின்றன.

மன்னாரில் துளையிடப்பட்ட கிணற்றில் இருந்து எண்ணெய் கிடைத்தால் தான் அதற்கு மிகப்பெரிய பெறுமதி உள்ளது. ஆனால் அதற்கான தடயங்கள் ஏதும் இதுவரை சிக்கியதாக தெரியவில்லை. எரிவாயு இருப்பது மட்டும் உறுதியாகியுள்ளது.இப்போதைக்கு இது ஒரு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. ஆனால் இது இலங்கையின் பொருளாதாரத்துக்கு உதவுமா என்பதை இப்போது தீர்மானிக்க முடியாது.மன்னாரில் எண்ணெய் வள உற்பத்தி தொடங்கப்பட்டால், அது இலங்கையின் மீதான சர்வதேச கவனத்தை ஈர்க்கும். அது பொருளாதார ரீதியாக முக்கிய மாற்றத்தைக் கொடுக்கும்.

இருந்தபோதும் மேறகுலக நாடுகள் குறித்து அரசாங்கம் எதற்காக அச்சப்படுகிறது என்று தான் தெரியவில்லை.ஆனால் அரசாங்கம் செய்கின்ற பிரசாரங்களைப் பார்க்கும் போது, எண்ணெய் எரிவாயுவளம் பற்றி பெரும் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கொண்டிருக்கிறது என்றே தெரிகிறது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் அளவுக்கு எண்ணெய் வளம் இலங்கையில் இருக்கிறதா என்பது தெரியவில்லை.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF