இந்தத் தகவல்களை அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அமைச்சர் இதனை சுட்டிக் காட்டியுள்ளார்.இதுவரை இலங்கை அரசாங்கம் பொலிஸ், காணி அதிகாரங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வழங்கப்போவதில்லை என்று தெரிவித்து வந்தது.எனினும் தற்போது பொலிஸ் அதிகாரங்களை ஒரு மட்டத்துக்கு வழங்க அது இணங்கியிருப்பது பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அழுத்தமா? அல்லது நாளை நடைபெறவுள்ள கொழும்பு மற்றும் கல்முனை மாநகரசபை தேர்தல்களில் தமிழ் மக்களின் வாக்குகளை திசைதிருப்புவதற்காகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்று பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வதந்திகளின் மூலம் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சி : ஜனாதிபதி.
வதந்திகளின் மூலம் மக்களை பிழையாக வழிநடத்தும் நடவடிக்கைகளை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், இவ்வாறான முயற்சிகள் குறித்து அமைச்சர்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான நாசவேலைகள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
சில இணைய ஊடகங்களில் போலியான பிரச்சாரங்களும் குரோத உணர்வுகளைத் தூண்டும் செய்திகளும் பிரசுரமாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.சில இணைய ஊடகங்களின் செய்திகள் அமெரிக்காவிலிருந்து பிரசுரமாவதாகவும், அவற்றுக்கு இங்கிருந்து செய்திகள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நவம்பர் மாதம் 21ம் திகதி வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படும்.
2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உத்தேச மதிப்பீட்டு அறிக்கை இம்மாதம் 18ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.எதிர்வரும் நிதியாண்டுக்கான உத்தேச செலவுகளின் மொத்தத் தொகை 2020 பில்லியன் இலங்கை ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.2012ம் ஆண்டுக்கான உத்தேச வருமானம் 1115 பில்லியன் இலங்கை ரூபாக எனக் குறிப்பிடப்படுகிறது.
அரசியல் களத்தில் நேருக்கு நேர் மோதிப் பார்க்க தயாரா? : சவால் விடும் சரத் பொன்சேகா.
கோழைகளைப் போன்று செயற்படுவதில் அர்த்தமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, வெள்ளைக் கொடி வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்றைய தினம் நடைபெற்றது.மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதவான் குழாமினால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இனவாதத்தை தூண்டும் வகையில் போலியாக இந்த வெள்ளைக் கொடி குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக பிரதி சொலிசுட்டர் ஜெனரல் புவனேக அலுவிஹாரே தெரிவித்துள்ளார்.வெள்ளைக் கொடி ஏந்தி வந்த எவரும் சுடப்படவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் சாவேந்திரா சில்வா ஆகியோரின் சாட்சியங்களின் மூலம் தெளிவாவவதாகக் குறிப்பிட்டுள்ளார்.தமக்கு தெரிந்த வகையில் அவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இமட்பெறவில்லை என சரத் பொன்சேகா சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இலங்கையிலிருந்து 2 கிலோ தங்க நகைகளை கடத்தி வந்த 8 பேர் சென்னை விமானநிலையத்தில் கைது.
இதையடுத்து அவர்களை அதிகாரிகள் தனியாக அழைத்துச் சென்றனர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடந்த விசாரணையின்போது அவர்கள் உருப்படியான தகவலைக் கூறாமல் இழுத்தடித்து வந்தனர். இதையடுத்து அவர்களை முறைப்படி அதிகாரிகள் விசாரித்ததைத் தொடர்ந்து உண்மையைக் கக்கினர்.
இதையடுத்து அவர்களது உடமைகளை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது யாருக்கும் தெரியாத வகையில் பெண்கள் அணியும் தங்க வளையல்களை அவர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.மொத்தம் 2 கிலோ எடை கொண்ட ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நகைகள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டன. அதனையடுத்து அவர்கள் எட்டு பேரையும் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.இந்த எட்டு பேரும் கூலிக்காக அமர்த்தப்பட்டவர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒசாமாவின் மனைவிகளை சவுதி அரேபியாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டம்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள அபோதாபாத் நகரில் அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்தார்.அவரை அமெரிக்க படை வீரர்கள் கடந்த மே மாதம் சுட்டுக் கொன்றனர். அங்கிருந்த ஒசாமாவின் 3 மனைவிகள், குழந்தைகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்து சிறை வைத்துள்ளனர்.
இவர்களில் கைரியா சபார்(எ) உம் ஹம்சா, சிஹம் சபா(எ) உம் காலித் ஆகிய 2 பேர் சவுதியை சேர்ந்தவர்கள். 29 வயதாகும் அமல் அகமது அப்துல்லாபதா ஏமனை சேர்ந்தவர். அமெரிக்க வீரர்கள் தாக்குதலின் போது இவர் காயம் அடைந்தார். இவர்கள் 3 பேரிடமும் அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.இந்நிலையில் ஒசாமாவின் மனைவிகள், குழந்தைகளை அவர்களது தாய்நாடான சவுதி அரேபியாவுக்கு திருப்ப அனுப்ப பாகிஸ்தான் அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
அவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று சவுதி அரேபியா மற்றும் ஏமன் அரசுகளை பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து இந்த நாடுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.பாகிஸ்தான் அரசுக்கு தெரியாமல் அபோதாபாத்தில் ஒசாமா தங்கியிருந்தது எப்படி என்ற நீதி விசாரணை பாகிஸ்தானில் நேற்று மீண்டும் தொடங்கியது.
அப்போது ஒசாமா மனைவிகள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட தடையை விசாரணை கமிஷன் விலக்கிக் கொண்டது. இதையடுத்து அவர்களை சவுதிக்கு அனுப்ப பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லிபியாவில் சிர்த் நகரில் கடும் துப்பாக்கி சண்டை: 10 வீரர்கள் பலி.
லிபியாவில் அதிபர் கடாபியின் 42 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சிக்கு போராட்டம் மூலம் மக்கள் முடிவு கட்டி விட்டனர். தற்போது புரட்சி படையின் வசம் ஆட்சி அதிகாரம் உள்ளது.எனவே கடாபியின் குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்டனர். ஆனால் கடாபி மட்டும் இன்னும் லிபியாவில் இருக்கிறார். மறைவிடத்தில் பதுங்கி இருந்தபடி தனது ஆதரவு ராணுவத்தை புரட்சி படை அரசுக்கு எதிராக தூண்டி வருகிறார்.லிபியாவில் கடாபியின் சொந்த ஊரான சிர்த் நகரம் மட்டும் புரட்சி படையின் கட்டுப்பாட்டில் இன்னும் முழுமையாக வரவில்லை. எனவே அந்த நகரை கைப்பற்ற புரட்சி படை பல நாட்களாக தீவிரமாக போரிட்டு வருகிறது.
நேற்று மதியம் ராணுவத்துக்கும் புரட்சி படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது ராக்கெட் குண்டுகளும் வீசப்பட்டன. நேட்டோ விமானங்களும் குண்டு மழை பொழிந்தன.இந்த தாக்குதலில் புரட்சி படைக்கு அதிக அளவில் சேதம் ஏற்பட்டது. 10 வீரர்கள் உயிரிழந்தனர். 150 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சிர்த் நகரை கைப்பற்றும் நிலையில் புரட்சி படை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தனது ஆதரவாளர்களுக்கு கடாபி வேண்டுகோள் விடுத்து அவர் ஆற்றிய உரை சிரியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஆர்ரை தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.
அதில் லிபியா மக்களே நீங்கள் அனைவரும் வீடுகளை விட்டு விட்டு வீதிகளுக்கும், சதுக்கங்களுக்கும் வந்து புரட்சி படையினருக்கு எதிராக போராடுங்கள். யாரை கண்டும் பயப்படாதீர்கள். லட்சக்கணக்கில் திரண்டு புரட்சி படையை எதிர்கொள்ளுங்கள். இந்த பூமி உங்களுடையது. அதை காக்க போராடுங்கள் என்று பேசினார்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா செயல்படுகிறது: முஷாரப் குற்றச்சாட்டு.
பாகிஸ்தானை பலவீனப்படுத்தி அதன் மூலம் ஆதிக்க செலுத்துவதே இந்தியா தனது நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருவதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் குற்றம்சாட்டி உள்ளார்.மேலும் உலக அளவில் தனது சக்தியை நிரூபிக்க முடியாவிட்டாலும் பாகிஸ்தானில் தனது சக்தியை நிலைநாட்ட வேண்டும் என இந்தியா முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் வளர்ச்சிக்கான பணிகள் குறித்தும் முஷாரப் குற்றம் சாட்டி உள்ளார்.ஆப்கானிஸ்தானின் உளவுத்துறை, செயல்பாடு, ராணுவம், மக்கள் பாதுகாப்பு பாகிஸ்தானிற்கே அதிகளவில் தெரியும். ராணுவ வீரர்கள் பயிற்சிக்கான அனைத்து வசதிகளையும் இலவசமாக வழங்க பாகிஸ்தான் தயாராக உள்ளது.இருப்பினும் பாகிஸ்தானிற்கு பயிற்சி பெற வருவதற்கு ஒருவரும் தயாராக இல்லை. அனைவரும் இந்தியாவிற்கே பயிற்சி பெற செல்கின்றனர்.
சீனாவில் ஒரே நாளில் மூன்று சாலை விபத்துகள்: 56 பேர் பலி.
சீனாவில் நேற்று ஒரேநாளில் நடந்த 3 பெரிய சாலைவிபத்துகளில் 56 பேர் பலியாயினர். ஜிங்குவா செய்தி நிறுவனம் இதைத் தெரிவித்துள்ளது.தியான்ஜின் துறைமுக நகரில் கார் ஒன்றின் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 35 பேர் பலியாயினர்.
இதேபோல் பனிமூட்டம் காரணமாக அன்ஹூய் மாகாணத்தில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.மத்திய ஹீனன் மாகாணத்தில் டிரக் ஒன்று மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.சீனாவில் வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுவதாலும், டிரைவர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததாலும் அடிக்கடி பெரிய அளவிலான வாகன விபத்துகள் நிகழ்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகின் மிகச்சிறந்த பல்கலைகழகங்களின் பட்டியல் வெளியீடு.
உலகின் மிகச்சிறந்த பல்கலைகழகங்களை ஆய்வு செய்து டைம்ஸ் உயர் கல்வி இதழ் பட்டியல் வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில் 200 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகம் காணப்படுகிறது.
இந்திய, சீன மாணவர்கள் அமெரிக்கர்களுக்கு சவாலாக உள்ளனர். அவர்களுக்கு இணையாக தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க மாணவர்களை அதிபர் ஒபாமா தொடர்ந்து எச்சரித்து வருகிறார்.
ஆனால் இந்த பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த 75 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. சிறந்த முதல் 10 பல்கலைக்கழகங்களில் 7 அமெரிக்காவை சேர்ந்தவை. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், இம்பீரியல் ஆகியவை மற்ற 3 இடங்களை பிடித்துள்ளன.பட்டியலில் இங்கிலாந்து(32), ஜேர்மனி(12), நெதர்லாந்து(12) கனடாவை சேர்ந்த 9 பல்கலைகள் இடம்பெற்றுள்ளன. தவிர தைவான், பிரேசில், சிங்கப்பூர், தென் ஆப்ரிக்கா, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த பல பல்கலைக்கழங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை கருவி.
இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கைக்கான முழு சோதனை வருகிற 12ம் திகதி நடைபெறுகிறது.மக்கள் வெளியேற்றம் உட்பட இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளும் சோதனை நடவடிக்கைகள் இதில் இடம்பெறுகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டரில் 9.2 புள்ளிகளாக பதிவான அதனால், சுனாமி பேரலைகள் எழுந்து இந்தியா உட்பட 14 நாடுகளின் கடலோர பகுதிகளை தாக்கின. நிலநடுக்கம் ஏற்பட்டு 12 மணி நேரத்துக்கு பிறகு கடைசியாக தென் ஆப்ரிக்க கடலோரத்தில் சுனாமி தாக்கியது.இந்த இயற்கை சீற்றத்துக்கு 2.3 லட்சம் பேர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் காணாமல் போயினர். இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரள கடலோரங்களில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.
இதையடுத்து இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை நடைமுறை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ நடவடிக்கை எடுத்தது. 2005ம் ஆண்டு இதற்கான இந்திய பெருங்கடல் நாடுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தப்பட்டது.அதன் பிறகு நிலநடுக்கம் ஏற்படும்போதெல்லாம் ஜப்பான் புவியியல் மையம் மற்றும் சுனாமி எச்சரிக்கை அமைப்பின் மூலம் 28 நாடுகளுக்கு உடனுக்குடன் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
2012ம் ஆண்டு வரை அது தொடரும் என்ற போதிலும் இந்திய பெருங்கடல் பகுதிக்கு தனி சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான சோதனை வருகிற 12ம் திகதி நடக்கிறது.அதில் இந்தியா, மலேசியா உட்பட பல நாடுகள் ஒத்துழைக்க உறுதி அளித்துள்ளன. அதன்படி போலியான சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு கடலோர பகுதி மக்கள் மீட்பு மற்றும் சுனாமி நிர்வாகம் ஆகியவை சோதனை செய்யப்பட உள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
12ம் திகதி சோதனையில் பங்கேற்க இந்தியா, அவுஸ்திரேலியா, வங்கதேசம், காமரோஸ், பிரான்ஸ், இந்தோனேசியா, ஈரான், கென்யா, மடகாஸ்கர், மலேசியா, மாலத்தீவு, மொரிஷியஸ், மொசாம்பிக், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், செஷல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தான்சானியா, தாய்லாந்து, திமோர், ஏமன் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளதாகவும் யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
ஸ்டீவ் ஜாப்ஸின் இறுதி தருணங்கள்.
புற்றுநோய் தன்னைத் தாக்கியது கடந்த 2004-ம் ஆண்டே ஸ்டீவ் ஜாப்ஸுக்குத் தெரிந்துவிட்டது. அதைத் தொடர்ந்து சில முறை சிகிச்சை மேற்கொண்டார்.அதுமட்டுமல்லாமல் கல்லீரல் மாற்று அறுவையும் செய்து கொண்டார். ஆனாலும் கடந்த பிப்ரவரியிலேயே அவருக்குத் தனது இறுதி நாட்கள் தெரிந்துவிட்டன. தனது நாட்கள் எண்ணப்படுவது தெரிந்ததும், மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் விஷயத்தைச் சொல்லிவிட்டார்.
அந்த நண்பர்கள் மூலம் இன்னும் பலருக்கும் தகவல் பரவ அடுத்து வந்த நாட்களில் தினசரி நண்பர்கள் அவரது பாலோ ஆல்டோ இல்லத்துக்கு வருகை தர ஆரம்பித்துவிட்டார்கள்.குறிப்பாக அவர் தனது ராஜினாமாவை அறிவித்த நாளிலிருந்து ஏராளமான நண்பர்கள் வர ஆரம்பித்துவிட்டனராம். ஸ்டீவுடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு அவருக்கு பிரியா விடை கொடுத்துச் சென்றவண்ணம் இருந்தனராம் இந்த நண்பர்கள்.
தான் வாழும் காலத்திலேயே எல்லாருக்கும் நல்ல முறையில் குட்பை சொன்ன திருப்தி ஸ்டீவுக்கு. வருகிற நண்பர்களை வரவேற்று நன்றி சொல்லி அனுப்பக் கூட முடியாத அளவுக்கு களைத்துப் போனாராம் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லூரென்.இறுதி நாள் நெருங்க நெருங்க தன் வீட்டில் நடமாடக்கூட முடியாத அளவுக்கு மெலிந்து பலவீனமாகிவிட்டாராம் ஸ்டீவ் ஜாப்ஸ்.ஆனாலும் யார் யாருக்கெல்லாம் தன் இறுதிப் பயணம் குறித்த சொல்லி விடைபெற வேண்டும் என்பதை மனதுக்குள் ஒரு லிஸ்ட் போட்டுக் கொண்டாராம். தனது நெருங்கிய நண்பரும் உடல்நல ஆலோசகருமான டீன் ஆர்னிஷை ஒரு நாள் இரவு உணவுக்கு அழைத்து விருந்து கொடுத்தாராம்.
தனது மற்றொரு நண்பரும் வென்சர் கேபிடலிஸ்டுமான ஜான் டோர், ஆப்பிள் போர்டு உறுப்பினர் பில் கேம்ப்பெல், டிஸ்னி நிறுவன தலைமை நிர்வாக ராபர்ட் ஏ ஐகர் என ஒவ்வொரு நாளும் ஒருவரை அழைத்து தன் மனதிலிருப்பதைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.ஆப்பிள் ஐஃபோனின் லேட்டஸ்ட் பதிப்பான 4 எஸ் மாடலை வடிவமைத்தவர்கள், நிர்வாகிகளையும் அழைத்து அதை எப்படி அறிமுகப்படுத்த வேண்டும் என கடைசியாக அறிவுரைகள் தந்துள்ளார்.ஆனாலும் தனது பெரும்பாலான நேரத்தை தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் செலழித்துள்ளார். தனது வாழ்க்கை வரலாற்றை எழுத வால்டர் ஜஸாக்ஸன் என்பவரையும் பணித்திருக்கிறார்.
இன்று ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி மற்றும் குழந்தைகள் 6.5 பில்லியன் டொலர் சொத்துக்கு சொந்தக்காரர். கூடவே உலகின் மிகப்பெரிய முன்னோடி மனிதரான ஒருவரின் சாம்ராஜ்யத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் அவருக்கு வந்திருக்கிறது.அவரது இறுதி நாட்கள் குறித்து டாக்டர் ஆர்னிஷ் கூறுகையில், "ஸ்டீவ் ஒரு நிமிடத்தைக் கூட வீணடித்ததில்லை. காரணம் ஏற்கெனவே அவரது வாழ்நாளின் முடிவு தெரிந்து விட்டதால், தனக்கு வேண்டாத ஒரு விஷயத்திலும் மனதைச் செலுத்தியதில்லை. கடைசி நாள் வரை, தன் வாழ்க்கை தனது கட்டுப்பாட்டில் இருக்கும்படியும், தான் செய்ய விரும்பியதைச் செய்து முடிக்கும் வகையிலும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்" என்கிறார்.
ஸ்டீவ் ஜாப்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு விடுமுறையில் இருந்தபோது அவருக்கு பல விருதுகள் மற்றும் பாராட்டு விழாக்களுக்கு ஏற்பாடு செய்து அழைத்துள்ளனர். ஆனால் அவை எதையும் ஏற்க மறுத்துவிட்டாராம் ஸ்டீவ்.நண்பர்கள் தொடர்ந்து அவரைப் பார்த்து வந்தாலும் இறுதி வாரங்களில் ஸ்டீவ் ஜாப்ஸின் வீடு முழுக்க செக்யூரிட்டிகள் மயமாக இருந்ததாம். கேட் பூட்டப்பட்டு எப்போதும் இரு கறுப்பு நிற சொகுசு வாகனங்கள் தயாராக இருந்தன. வேறு யாராலும் அவரைப் பார்க்க முடியவில்லை.
ஆனால் வியாழனன்று கேட் திறக்கப்பட்டு வாகனங்கள் அகற்றப்பட்டன. அந்த இடம் முழுக்க மலர்கள், ஒரு வாய் கடிக்கப்பட்ட ஆப்பிள்கள், மலர் வளையங்கள் என நிரம்ப ஆரம்பித்துவிட்டன.ஸ்டீவ் ஜாப்ஸ் தன்னை ஒரு பெரிய சாதனையாளராக, கண்டுபிடிப்பாளராக கருதி நடந்து கொண்டதே இல்லை. ஒரு சாதாரண மனிதனை விட பல மடங்கு இயல்பாக அனைவரிடமும் நடந்து கொண்டார். அன்பு காட்டினார்.அவர்களின் தேவைக்கேற்ற கண்டுபிடிப்புகள் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதுதான் இந்தத் துறையில் யாருக்கும் கிடைக்காத புகழ், பெருமை மக்களின் அன்பை அவருக்கு சம்பாதித்துக் கொடுத்துள்ளது என்கிறார் டாக்டர் ஆர்னிஷ்.
பொருளாதாரத்தை சீர்செய்ய கோரி நியூயார்க்கில் தொடரும் போராட்டம்.
அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு எதிராக பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் பரவி வருகின்றன.பொருளாதார சரிவின் போது வங்கிகளுக்கு ஊக்கத்தொகை அளித்த அமெரிக்க அரசு வேலை இழந்தோரை தவிக்க விட்டு விட்டது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அமெரிக்காவில் “வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தின்” போராட்டம் மூன்றாவது வாரமாகத் தொடர்கிறது. நியூயார்க் மட்டுமல்லாமல் தற்போது நாடு முழுவதும் போராட்டம் பரவி வருகிறது.இப்போராட்டத்திற்கு அமெரிக்கப் பேரறிஞர் நோம் சாம்ஸ்கி போன்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் நியூயார்க், பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நேற்றும் இவை தொடர்ந்தன.
இந்நிலையில் இந்த வாரத்தில் டென்னிசி மாகாணத்தின் மெம்பிஸ், மேரிலேண்ட் மாகாணத்தின் பால்டிமோர், மின்னசோட்டா மாகாணத்தின் மின்னபோலிஸ், ஹவாய் தீவின் ஹிலோ, டெக்சாஸ் மாகாணத்தின் மெக் அலன் ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கப் போவதாக “தொடர் ஆக்கிரமிப்பு” என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் பரவ வழி செய்யும் வகையில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும்படி தொடர் ஆக்கிரமிப்பு இணையதளம் அறிவுறுத்தியுள்ளது.நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தனியார் நிறுவன தலைவர்களின் பணப் பேராசையை அடையாளப்படுத்தும் விதத்தில் பேய் போல வாயில் பணத்தைக் கவ்வியபடி வேடங்கள் அணிந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இன்னொருபுறம் பெரிய நிறுவனங்களில் வேலை இழந்தவர்களும் போராட்டங்களில் குதித்துள்ளனர். இவர்களுடன் கல்லூரி மாணவர்களும், பல்வேறு தொழிற்சங்கங்களும் பங்கேற்றுள்ளனர்.
போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் ஒபாமா, மக்களின் கோபத்தின் மூலம் நமது நிதி அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார்.அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. அதனால் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு இன்னும் முற்றிலுமாக நீங்காத நிலையில் மற்றொரு அறுவை சிகிச்சைக்கு அமெரிக்க மக்கள் தயாராக இல்லை. இதனை எதிர்த்து மக்கள் போராடிவருகின்றனர்.
நியூயார்க் நகர ஆக்கிரமிப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர்கள் இதுகுறித்துக் கூறியதாவது: தனியார் நிறுவனங்கள், சட்டவிரோதமான முறையில் எங்கள் வீடுகளைக் கைப்பற்றுகின்றனர். மக்கள் பணத்தில் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளுடன் அவர்கள் தங்கள் நிறுவனங்களை கடனில் இருந்து மீட்டுக் கொள்கின்றனர்.தங்கள் தலைமை அதிகாரிகளுக்கு கணக்கிட முடியாத அளவிற்கு சம்பளத்தை வாரி வழங்குகின்றனர். அதோடு தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் எங்களைப் போன்றவர்களை வெளியே தள்ளிவிட்டு வெளியிடப் பணி(அவுட்சோர்சிங்) மூலம் தங்கள் வேலைகளை முடித்துக் கொள்கின்றனர். இதனால் பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம், காப்பீட்டுத் திட்டச் செலவு எல்லாம் அவர்களுக்கு மிச்சமாகிறது.
அமெரிக்கப் பத்திரிகைகள் இந்த ஆர்ப்பாட்டங்களைப் பற்றி தரக் குறைவான விமர்சனங்களை வாரித் தெளிக்கின்றன. ஆர்ப்பாட்டங்கள் பற்றி அடக்கி வாசிக்கின்றன. அதேநேரம் அமெரிக்கா மட்டுமின்றி உலகளாவிய சிந்தனையாளர்கள் வட்டாரத்தில் இவை பெரும் ஆதரவு பெற்று வருகின்றன.நியூயார்க்கின் ஜூகோட்டி பூங்காவில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கியுள்ளனர். இவர்கள் தங்களுக்கான அடிப்படைத் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்கின்றனர். இங்கிருந்தபடியேதான் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன.எகிப்து புரட்சிக்கும் இப்போராட்டத்திற்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் எகிப்து புரட்சி, நாட்டின் தலைமையை எதிர்த்து நடந்தது. இப்போதைய அமெரிக்க போராட்டம் நிதி சீர்கேட்டை எதிர்த்து நடக்கிறது.
அமைதிக்கான நோபல் பரிசு: மூன்று பெண்களுக்கு பகிர்ந்தளிப்பு.
எலன் ஜான்சன் சர்லீப், லேமா போவீ மற்றும் தவக்குல் கர்மன் ஆகிய 3 பெண்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.அமைதிக்கான நோபல் பரிசு சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை எலன் ஜான்சன் சர்லீப், லேமா போவீ மற்றும் தவக்குல் கர்மன் ஆகிய 3 பெண்கள் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றனர். அவர்களுக்கு 1.5 மில்லியன் டொலர் பரிசுத் தொகை பிரித்துக் கொடுக்கப்படும்.
எல்லன் ஜான்சன் சர்லீப் மேற்கு ஆப்ரிக்க நாடான லைபீரியாவின் அதிபராக உள்ளார். “லைபீரியாவின் இரும்பு பெண்மணி” என்று அழைக்கப்படும் அவர் தான் ஒரு ஆப்பிரிக்க நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.அவரும் லேமா போவீ, கர்மன் ஆகியோர் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்ணுரிமைக்காக அஹிம்சா முறையில் போராடி வருவதற்காக அவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
லேமா போவீ மத்திய லைபீரியாவில் பிறந்தவர். 6 குழந்தைகளின் தாய். அவர் லைபீரியப் பெண்களைத் திரட்டி அமைதி இயக்கத்தை துவங்கினார். அதன் மூலம் பெண்ணுரிமைக்காக அமைதியான முறையில் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.தவக்குல் கர்மன் ஒரு ஏமேனி அரசியல்வாதி, மனித உரிமை ஆர்வலர், பெண் பத்திரிக்கையாளர்கள் அமைப்பின் தலைவர். ஏமன் அதிபர் அலி அப்துல்லா சாலேவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி கைதானவர். மனித உரிமைக்காக போராடி வருபவர்.
ஜேர்மனியில் அமையவிருக்கும் புதிய அணு உலைக்கு கடும் எதிர்ப்பு.
வடகிழக்கு ஜேர்மானிய அதிகாரிகள் புதிய அணு உலைகளை எல்லை பகுதியில் அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றனர்.பிராண்டன்பெர்க் மனிலா சுற்றுப்புற சூழல் அமைச்சானது தலைநகர் பெர்லினில் 100கி.மீ தொலைவில் இந்த புதிய அணு உலையினை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளது.
ஆயினும் தலைநகர் பெர்லினில் இருந்து வெளியிடப்படுகின்ற Tagesspiegel செய்திதாளில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தியின் படி மனிலா முதலமைச்சர் பிராண்டன்பெர்க் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது யாதெனில் ஆரம்பத்தில் புதிய அணு உலையினை Schwedt அருகாமையில் உள்ள க்ரைபினோ-வில் அமைக்கவே திட்டமிட்டு இருந்தனர்.ஆயினும் அங்குள்ள மக்கள் இத்திட்டத்திற்கு பாரிய எதிர்ப்பு தெரிவித்திருந்தமையை அடுத்து பிராண்டன்பெர்க் எல்லையில் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். பெர்லின் தலைநகரில் இருந்து 345 கி.மீ தொலைவில் உள்ள பால்டிக் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட உள்ளது.இந்த அணு உலை திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டபோதிலும் 1986 ஆம் ஆண்டு ஏற்பட்ட உண்ணாவிரதத்தினை தொடர்ந்து கைவிடப்பட்டது.
பெர்ன்ஹார்ட் ரிம்டி பிராண்டன்பெர்க்ஸ் கொள்வனவு பாதுகாப்பு பணியாளர் கருத்து வெளியிடுகையில், போலந்தானது ஐரோப்பிய யூனியனில் இணைந்ததை போன்று இந்த திட்டம் ஜேர்மனிக்கு பெரிய வெற்றியினை ஈட்டித்தரும் என கூறினார்.
பவளப்பாறை மீது படகு மோதி விபத்து: 25 மாலுமிகள் மாயம்.
நியூசிலாந்திலிருந்து 12 மைல் தூரத்தில் பயணித்துக் கொண்டிருந்த லைபிரியக் கப்பல் பவளப்பாறை மீது மோதியதில் நடுக்கடலில் விபத்துக்குள்ளாகியது.இக்கப்பலில் பயணம் செய்த 25 மாலுமிகள் காயமடைந்ததுடன் கனமாக எரிபொருள் தாங்கிகள் பாதிப்புற்று ஆபத்திலுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து இக்கப்பலில் இருந்த 2000 கலங்களும் விழாமல் இருந்தது அதிசயமிக்க விடயமாகவும் கூறப்படுகின்றது.47,230 தொன் நிறையுள்ள Rena என்ற கப்பல் நியூசிலாந்தின் North Island என்ற தீவின் கிழக்குக் கரையிலிருந்து 12 மைல் தொலைவில் உள்ள பாறையிலேயே மோதுண்டுள்ளது.இதனால் 236 மீற்றர் நீளக்கப்பலில் பல இடங்களில் துளை ஏற்பட்டதுடன் சிறிதளவு எண்ணெயும் கசிவதாகவும் இதிலுள்ள சரக்குகள் என்னவென்று அடையாளம் காணப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.
இக்கப்பலுக்கு காலநிலையில் பிரச்சினையில்லாததால் இதுவரை எந்தவிதப் பிரச்சினையுமில்லையென்றும் இரு சரக்குகளில் நீர் ஏறியிருந்தாலும் அவை அகற்றப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.10 பாகையால் சரிந்துள்ள கப்பலின் சேதமடைந்த பகுதியிலிருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்தாகவும் எனினும் இது அவ்வளவு ஆபத்தைத் தரக்கூடியதல்லவென்றும் கூறப்படுகின்றது.
ஷெரீப்பீன் சொத்துக்களை விடுவிக்க லாகூர் கோர்ட் உத்தரவு.
பாகிஸ்தான் பிரதமராக நவாஷ் ஷெரீப் இருந்த போது ராணுவ புரட்சி மூலம் பெர்வேஸ் முஷாரப் ஆட்சியை பிடித்தார்.அதிபராக முஷாரப் பதவியேற்ற பிறகு ஷெரீப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. முஷாரப்பை கொல்ல சதி செய்த வழக்கில் ஷெரீப்புக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஷெரீப் அவரது குடும்பத்தாரின் சொத்துக்கள் கடந்த 2001ம் ஆண்டு முடக்கப்பட்டன.
ஊழல் தடுப்புத் துறை மற்றும் தீவிரவாத தடுப்புத் துறையினர் தொடர்ந்த பல வழக்குகளில் விதிக்கப்பட்ட தண்டனையை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. ஆனால் சொத்துக்களை விடுவிக்கவில்லை.
பத்து கோடி ரூபாய் ஷேர் சர்டிபிகேட், 11 கோடி பத்திரங்கள், சர்க்கரை ஆலை, இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனம், ஷிப்பிங் கார்ப்பரேஷன் உட்பட பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை விடுவிக்க கோரி ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர்.இந்த வழக்கை லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மன்சூர் அலி ஷா, முகமது காலித் முகமது கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து தீர்ப்பளித்தது. அதில் ஷெரீப், அவரது குடும்பத்தாரின் எல்லா சொத்துக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஊழல் தடுப்பு துறை அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்: இணையத்தில் குவிந்த அஞ்சலி.
ஆப்பிள் நிறுவனத் தந்தை ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவால் உலகெங்கும் உள்ள தகவல் தொழில்நுட்பத்துறையினர்,இளம் விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள்,மாணவர்கள் என அனைத்துத் தரப்பினருமே சோகமடைந்துள்ளனர்.இணையதளங்களில் ஜாப்ஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியும், அவரது சாதனைகளைப் புகழ்ந்தும் செய்திகள் குவிந்து கொண்டிருக்கின்றன.ஸ்டீவ் ஜாப்ஸின் தயாரிப்புகள் உலகம் முழுவதும் அவர் பால் பெரும் அன்பையும், மரியாதையையும், ஆச்சரியத்தையும் வாரியிறைத்துக் கொண்டுள்ளன.
ஸ்டீவ் மரணச் செய்திக்கு ட்விட்டர் மூலம் லட்சக்கணக்கானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். விநாடிக்கு 10 ஆயிரம் ட்விட்டர்கள் அனுப்பப்பட்டு புதிய சாதனையும் படைக்கப்பட்டுள்ளது. இதுவரை இணையதள வரலாறு காணாத இரங்கல் தகவல் இது.இதற்கு முன்பு அமெரிக்கப் பாடகி பியான்ஸுக்குத்தான் அதிக அளவிலான ட்விட்டர்கள் வந்திருந்தன. தான் கர்ப்பமாக இருப்பதாக அவர் அறிவித்தபோது அதற்குப் பாராட்டு தெரிவித்து விநாடிக்கு 8868 ட்விட்டர்கள் வந்திருந்தன.
அதேபோல பின்லேடன் மறைவின்போது 5000 ட்விட்டர்கள் வந்திருந்தன. ஜப்பான் நிலநடுக்கம் மற்றும் சுனாமியின்போது 5530 ட்விட்டர்கள் வந்திருந்தன. ஆனால் அத்தனையையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ்.சாதாரண ஆளாக வளராமல், வாழாமல், ஒட்டுமொத்த உலக சமுதாயத்தின் முகத்தை மாற்றியமைத்து, மாடர்னைஸ் செய்து மறைந்து போன ஸ்டீவ் ஜாப்ஸ் மரணத்திற்குப் பிறகும் கூட சாதனையாளராக உருவெடுத்திருப்பது வியப்புக்குரிய ஒன்று. ஒவ்வொரு இளம் சாதனையாளர்களுக்கும், இளம் தொழிலதிபர்களுக்கும் ஜாப்ஸ் ஒரு முன்னோடி என்பதில் சந்தேகமில்லை.
கனேடியாவின் ஆர்டிக் பகுதியில் விமான விபத்து: இருவர் பலி.
யெலோநைப் பகுதியிலிருந்து புறப்பட்ட விமானம் கனேடிய ஆர்டிக் பகுதியில் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளாகி இருவர் பலியாகியதுடன் இருவர் காயமடைந்தனர்.இங்கு குறுகிய காலத்திற்குள் இடம்பெற்ற மூன்றாவது விபத்து இதுவாகும். இப்பகுதி சுமார் 400 மக்களை மட்டுமே கொண்டுள்ளது. இதேவேளை வீதிப்போக்குவரத்து வசதிகளற்ற பகுதியாகும்.
இதனாலேயே இங்கு அனைத்துப் பொருட்களும் விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகின்றது. இவ்விபத்திற்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் விமானத்தில் உள்ள வானொலித் தொடர்புகள் விமானம் பறக்கத்தொடங்கி சிறிது நேரத்தில் காணாமல் போய்விட்டது எனவும் கூறப்படுகின்றது.றோயல் கனேடியன் வான்படையின் ஹேர்கியூலஸ் உலங்கு வானூர்தியால் விழுந்த செஸ்னா வகை விமானத்தைத் தேடி தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.