Friday, October 28, 2011

பெண்களின் குரல் அனைவரையும் வசீகரிப்பதற்கு என்ன காரணம்..


பஸ், ரயில், விமான நிலையங்களில், தொலைபேசியில், செல்போனில் என தினமும் பல இடங்களில் பதிவு செய்யப்பட்ட குரல்களை கேட்கிறோம். பெரும்பாலும் எல்லாமே பெண் குரல்கள் தான்.இதுதவிர கணணிகளில் புரோகிராம் ஓபன், புரோகிராம் குளோஸ், டிரே இன், டிரே அவுட் போன்ற குரல்களும் பெண் குரல்களாகவே உள்ளன. 


 இதற்கு என்ன காரணம் என்று அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கிளிபோர்ட் நாஸ் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு பற்றி கிளிபோர்ட் கூறியதாவது: இயல்பாகவே ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் எல்லாருக்குமே ஆண் குரலைவிட பெண் குரலே அதிகம் பிடிக்கிறது. இதுதொடர்பாக ஓன்லைன் மூலமாகவும் நேரடி சர்வே மூலமாகவும் பலரிடம் கருத்து கேட்கப்பட்டது. ரெக்கார்டட் வாய்ஸ்களில் பெரும்பாலும் பெண்களின் குரலை கேட்கவே விரும்புவதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். 


பெண் குரல் இனிமையாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த நாட்டம் கருப்பையில் இருக்கும்போதே உருவாகிவிடுகிறது. தன்னை பாதுகாப்பாக பெற்று வளர்க்கும் அம்மா மீது இயல்பாகவே பாசம் இருப்பதுபோல, பெண் குரல் மீதான ஈர்ப்பும் இயல்பாகவே மனிதர்களுக்கு இருக்கிறது. கைபேசி, கணணிகளில் தற்போது பெண் குரல்கள் பயன்படுத்தப்படுவது போல இரண்டாம் உலகப் போரின் போதே போர் விமானங்களில் பெண் குரல்கள் பயன்படுத்தப்பட்டன. விமானிகள் கூர்ந்து கவனித்து கேட்க வேண்டும் என்பதற்காக, அவர்களது அறையில் பயன்படுத்தப்படும் பதிவுக் குரல்கள் அனைத்தும் பெண் குரலாகவே பதிவு செய்யப்பட்டிருந்தன. 


 மேலும் பெண் குரலில் நம்பகத்தன்மை அதிகம் இருக்கிறது என்ற உணர்வும் நமக்கு இருக்கிறது. ரிசப்ஷனிஸ்ட், செய்தி அறிவிப்பாளர்கள் போன்ற பணிகளில் பெரும்பாலும் பெண்கள் அமர்த்தப்படுவதற்கு இது முக்கிய காரணம். பல ஆண்டுகளுக்கு முன்பே சொகுசு கார்களில் ரெக்கார்டட் வாய்ஸ் பயன்படுத்தப்பட்டது. ஆண் குரலைவிட பெண் குரலை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர் என்று நுகர்வோர் சர்வேயில் தெரியவந்ததன் அடிப்படையிலேயே பெண் குரல் பயன்படுத்தப்பட்டது. தற்போது ஜிபிஎஸ் வசதிகளிலும் பெண் குரல்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF