Monday, October 17, 2011

இன்றைய செய்திகள்.

சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு?

இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மாத்தாயின் இலங்கைப் பயணத்தை அடுத்து, சீனப் பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்டக் குழுவொன்று கடந்த வாரம் கொழும்பு வந்திருந்தது. 
மேஜர் ஜெனரல் குவான் லிஹுவா தலைமையிலான சீன இராணுவ உயர்மட்டக் குழுவினர் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச'வையும், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய'வையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.
இதன்போது, 10 மில்லியன் யுவான் பெறுமதியான கருவிகளை கொழும்பு பாதுகாப்புச் சேவைகள் கல்லூரிக்கு வழங்குவதற்கான உடன்பாடு ஒன்றும் கையெழுத்திடப்பட்டுள்ளது.அதைவிட சீன இராணுவப் பயிற்சிக் கல்லூரிகளில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு அதிகளவில் இடம் ஒதுக்கவும், இலங்கையில் மேற்கொள்ளப்படும் போர்ப் பயிற்சிகளில் சீனப் படை அதிகாரிகளுக்கு அதிக இடங்களை வழங்கவும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.இந்த இணக்கப்பாடுகள் இந்தியாவுக்கு இன்னும் வெறுப்பேற்றும் ஒன்றாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் குறைப்பதற்காகவே இந்தியா பெருமளவு முதலீடுகளை இங்கு மேற்கொண்டு வருகிறது.அதுபற்றி நேரில் ஆராய இந்திய வெளி விவகாரச் செயலர் ரஞ்சன் மாத்தாய் வந்து சென்ற கையோடு சீன இராணுவ அதிகாரிகள் குழு கொழும்பு வந்தது.
இப்போது தெற்காசியாவில் இந்தியாவின் கட்டுப்பாடுகளை மீறி, அதன் செல்வாக்கை உடைத்துக் கொண்டு சீனா தனது பிடியை வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது.முன்னர் இந்தியாவின் இசைவின்றி எந்த நாடும் எதுவும் செய்யாத நிலையொன்று இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.இலங்கையை அடுத்து மாலைதீவும் இப்போது சீனாவின் பிடிக்குள் மெல்ல மெல்ல வந்து கொண்டிருப்பதான செய்தி இந்தியாவின் பாதுகாப்புத் தரப்பை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அடுத்த மாதம் மாலைதீவில் சார்க் தலைவர்களின் உச்சி மாநாடு நடக்கவுள்ளது.அங்கு வலுவான படைகள் இல்லாததால், சார்க் தலைவர்களின் பாதுகாப்புக்காக இலங்கையில் இருந்து விசேட அதிரடிப் படையினர் மாலைதீவு செல்லவுள்ளனர்.இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளும் சார்க் மாநாட்டுப் பாதுகாப்புக்காக மாலைதீவுக்கு உதவிகளை வழங்கியுள்ளன.
இந்த மாநாட்டின் பாதுகாப்புக்காக சீனா சி.சி..வி. எனப்படும் வீடியோ கண்காணிப்புக் கருவிகளை மாலைதீவுக்கு வழங்கியுள்ளது. பாகிஸ்தான், சீனா, இலங்கை, பங்களாதேஷ் இவையனைத்துமே சார்க் நாடுகள்.சார்க் தலைவர்களின் பாதுகாப்புக்கு இந்த நாடுகள் பாதுகாப்பு உதவிகளை வழங்குவதில் சந்தேகம் இல்லை.ஆனால் சார்க் அமைப்பில் அங்கம் வகிக்காத சீனா எதற்காக மாலைதீவுக்கு சி.சி..வி. வீடியோ கண்காணிப்புக் கருவிகளை வழங்க வேண்டும் என்ற கேள்வி முன்னரே எழுந்தது.
இந்த நிலையில் மாலைதீவில் நீர்மூழ்கிக் கப்பல் துறைமுகம் ஒன்றை நிறுவும் இரகசிய முயற்சியில் இறங்கியுள்ளதான தகவல் ஒன்றும் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.இலங்கையின் பாணியில் மாலைதீவின் மீதும் சீனாவின் கண் விழுந்துள்ளது.இலங்கையில், அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்றை நிறுவியது சீனா. அங்கு விமான நிலையம் ஒன்றையும் அமைக்கிறது.அதுபோலவே மாலைதீவிலும் விளையாடத் தொடங்கியுள்ளது.
மாலைதீவின் ஹவன்டு மற்றும் அதற்கு 10 கி.மீ தொலைவில் உள்ள மாறன்டு ஆகிய தீவுகளில் துறைமுகங்களை அமைக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.1192 தீவுகளைக் கொண்ட மாலைதீவு நாட்டை தனது கைக்குள் போட்டுக் கொள்வதற்கு சீனா எடுத்துள்ள முதல் நடவடிக்கை இதுவாகும்.அடுத்து மாலைதீவின் தலைநகர் மாலியில் உள்ள சர்வதேச விமானநிலையத்துக்கு அடுத்ததாக, இரண்டாவது விமான நிலையம் ஒன்றை ஹனிமன்டு தீவில் அமைப்பதற்கும் சீனா திட்டமிட்டுள்ளது.
மாலைதீவின் வடக்கு மாகாணத்தில் உள்ள 42 தீவுகளில் ஒன்றான இது இந்தியா மற்று இலங்கைக்கு மிகவும் நெருக்கமானது.இந்தியாவுக்குத் தென்மேற்கே 250 மைல் தொலைவில் தான் இது இருக்கிறது.இதைவிட மறாவோ தீவில் நீர்மூழ்கித் துறைமுகம் ஒன்றையும் சீனா அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக இந்தியாவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.எனினும் இதுபற்றிய தகவல்கள் இரகசியமாகவே பேணப்பட்டு வருகின்றன.
கடந்த மே மாதம் சீன மக்கள் தேசிய காங்கிரஸின் நிலையியல் குழுத் தலைவர் மாலைதீவுக்குப் பயணம் மேற்கொண்ட பின்னரே இந்த அதிரடியான மாற்றங்கள் அங்கு நிகழத் தொடங்கியுள்ளன.கிழக்கு ஆபிரிக்கா, சிசெல்ஸ், மொறிசியஸ், மாலைதீவு, இலங்கை, பங்களாதேஷ், மியான்மார், கம்போடியா என்று இந்தியாவைச் சுற்றியுள்ள பல நாடுகளிலும் சீனா கடல்சார் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்கி, உறவுகளை வலுப்படுத்தி வருகிறது.
பாகிஸ்தானில் இன்னும் வலுவாக பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவதார் என்ற இடத்தில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றையும் சீனா அமைத்து வருகிறது.இவையெல்லாம் இந்தியாவைக் கலக்கம் கொள்ள வைக்கின்ற விடயங்களாகவே இருக்கின்றன.மாலைதீவு முன்னர் இந்தியாவின் கைக்குள் இருந்த நாடு தான்.1989ஆம் ஆண்டில் புளொட் அமைப்பின் ஒரு குழுவினர் மாலைதீவுக்குக் கப்பலில் சென்று அதனைக் கைப்பற்ற முயன்றனர்.
அப்போது இந்தியாவே தனது படைகளை அனுப்பி பாதுகாத்தது.அதன் பின்னர் கடற் கண்காணிப்பு சாதனங்கள், டோனியர் கண்காணிப்பு விமானம், ரேடர்கள் என்று இந்தியாவே மாலைதீவுக்கு வழங்கியது.ஆனால் இவற்றுக்கு அப்பால் சீனா தனது அதிகாரத்தை மாலைதீவின் மீது செலுத்த ஆரம்பித்துள்ளது ஆச்சரியம் தான்.மாலைதீவுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நெருக்கம் அதிகம்.
அண்மையில் கூட ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்காக பிரசாரம் செய்வதற்கு மாலைதீவு அதிபர் சென்றிருந்தார்.ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை காப்பாற்றும் நகர்வுகளை மாலைதீவு அதிபர் இரகசியமாக மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.சீனாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழு கடந்த வாரம் கொழும்பில் தங்கியிருந்த போது, மாலைதீவின் பாதுகாப்பு அமைச்சரும் இங்கு தங்கியிருந்தார் என்பதும் இன்னொரு கதை.மாலைதீவுக்கும் சீனாவுக்கும் இடையில் பாதுகாப்பு உறவுகள் பலப்படுவதற்கு இலங்கை துணை நின்றதா என்ற சந்தேகங்களும் உள்ளன.
அப்படியானதொரு நிலை இருந்தால், இந்தியா இந்த விவகாரத்தை கடும் சினத்துடன் பார்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.தன்னைச் சுற்றி சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வருவதை இந்தியாவினால் எந்த வகையிலும் ஜீரணிக்க முடியாது.ஏனென்றால் சீனாவின் இந்த வியூகம் இந்தியாவின் கடல்சார் திறன்களை ஒட்டு மொத்தமாக முடக்கிப் போட்டு விடும்.இதனால்தான் இது இந்தியாவை கடுமையாக கவலை கொள்ளச் செய்துள்ளது.
சீனாவின் ஆதிக்கம் தெற்காசியாவில் வலுப் பெறுவதற்கு இந்தியாவின் இராஜதந்திரத் தவறுகளும் ஒரு காரணம்.ஏனென்றால் இப்போது சீனாவின் செல்வாக்குக்கு உட்பட்டுள்ள நாடுகள் அனைத்துமே, முன்னர் இந்தியாவுடன் நெருக்கமான வரலாற்றுக் காலத் தொடர்புகளைக் கொண்டவை.இத்தகைய பெரும்பாலான நாடுகளில் இந்திய வம்சாவளியினரே வாழ்கின்றனர்.
ஆனால் இந்த நாடுகளை இந்தியாவினால் தனது கைக்குகள் வைத்திருக்க முடியவில்லை.போரின் போது தமிழருக்கு விரோதமான நிலைப்பாட்டை இந்தியா எப்படி எடுத்ததோ, அப்படித் தான் தனது நண்பர்களை தக்க வைத்துக் கொள்ளும் இராஜதந்திரத்தை இந்தியா சரிவரக் கையாளவில்லை.இனிமேலும் இந்தத் தவறை இந்தியா களையாது போனால், தெற்காசியாவில் சீனாவின் பிடி மேலும் இறுகி விடும்.
பொலிஸ்மா அதிபரால் தனது உத்தியோகத்தர்களை நிர்வகிக்க முடியாத நிலை இருக்கிறது: ரணில் குற்றச்சாட்டு.

இலங்கையில் தற்போது மனித உரிமைகளுக்கு மதிப்பில்லை. ஊழல் மோசடிகளே அதிகமாகக் காணப்படுகின்றன. பொலிஸ் துறை செயலிலந்துள்ளது. பொலிஸ்மா அதிபரால் தனது உத்தியோகத்தர்களை நிர்வகிக்க முடியாத நிலை இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே ரணில் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
பொலிஸாரும் பொதுமக்களும் மோதிக்கொள்கிறார்கள். இரு தரப்பினரும் தாக்கப்படுகிறார்கள். இதனால் இரு தரப்பினருமே மரணிக்கிறார்கள். கட்டுநாயக்க, தொம்பே சம்பவங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.அதுமட்டுமல்ல, அரசாங்கத்துக்குள்ளேயே பிரச்சினைகள் இருக்கின்றன. அவர்களே மற்றவர்களுக்கு எதிராக சண்டையிடுகிறார்கள்.
இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது நாட்டில் சட்டமும் ஜனநாயகமும் சரியாக இருப்பதாக வெளியில் பேசுகிறார்கள். இது எந்தவகையில் உண்மை என எனக்குத் தெரியாது.சட்டத்துறை சரியாக இயங்கினால் இன்று இந்தளவு பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லை. அதனை அரச தரப்பினர் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புக் கோருவோர் குறித்த இறுதி முடிவை நானே எடுப்பேன் : மஹிந்த ராஐபக்ச.

என்னிடம் யார் வந்து பாதுகாப்பு கோரினாலும் அதற்கான இறுதி முடிவை நானே எடுப்பேன். இது தொடர்பில் யாரும் என்னை விமர்சிக்க முடியாது. என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியான ஆளும்கட்சியின்  சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மேயர்கள், பிரதிமேயர்கள், தலைவர்கள், உபதலைவர்கள் ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் நேற்று  சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.
அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போதே ஜனாதிபதி மேற்கண்டாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,நாட்டில் கொள்ளை, கப்பம் மற்றும் போதை மருந்து வகைகளின் விற்பனை போன்றவற்றை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதுடன் அதற்கு சகலரது ஒத்துழைப்பும் அவசியம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
என்னிடம் யார் வந்து பாதுகாப்பு கோரினாலும் அதற்கான இறுதி முடிவை நானே எடுப்பேன். இது தொடர்பில் யாரும் என்னை விமர்சிக்க முடியாது.கொலன்னாவில் இடம்பெற்ற துரதிஷ்டவசமான சம்பவம் போன்று இனியும் நடக்கக்கூடாது என்றும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
17ம் திருத்தச் சட்ட மூலம் ரத்து செய்யப்பட்டதன் மூலம் நாட்டில் அராஜகம் தலைதூக்கியுள்ளது – ரணில்.

17ம் திருத்தச் சட்ட மூலம் ரத்து செய்யப்பட்டு 18வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன்  மூலம் நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றாகச் சீர்குலைந்துள்ளதுடன் அராஜகம் தலைதூக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.எனவே 18ஆவது திருத்தத்தை நீக்குவதற்கான போராட்டத்தை தமது கட்சி விரைவில் தொடங்கும் என்றும் அவர் நேற்று அறிவித்தார்.

கொழும்பு மாநகரசபை வெற்றியடைச் செய்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் தெரிவித்துள்ளதாவது: 
நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துள்ளது என்பதற்கு முல்லேரியாவில் அரச தரப்பு அரசியல்வாதிகள் மோதிக்கொண்ட சம்பவமே பெரிய உதாரணம் என்று அவர் கூறினார்.பொலிஸ் ஆணைக்குழு, பொதுச் சேவைகள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியன சுயாதீனமாக இயங்குவதற்கு அரசமைப்பு வழங்கியிருந்த அதிகாரங்களை தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொண்டு வந்த 18ஆவது திருத்தம் இல்லாமல் செய்து விட்டது.
இதனால் இந்த மூன்று துறைகளும் மேலும் மேலும் அரசியல் மயப்பட்டுப் போயுள்ளது என்று பரவலான குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படுகிறது.
அரசமைப்பின் இத்தகைய அரக்கத்தனமான பகுதியை நீக்குவதற்கான போராட்டத்தை நாடாளுமன்றத்தில் நாம் ஆரம்பிப்போம். பின்னர் அதனை மக்களிடம் எடுத்துச் செல்வோம்.18ஆவது திருத்தத்தை அகற்றும்வரை அது தொடரும் என்றார் ரணில்.
அரசமைப்பின் 17ஆவது திருத்தத்தின் மூலம் இந்த மூன்று ஆணைக்குழுக்களையும் உருவாக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எப்படிப் பாடுபட்டது என்பதையும் ரணில் விக்கிரமசிங்க விளக்கினார்.
சுயாதீனமான, சுதந்திரமான தேர்தல் ஆணைக்குழு ஒன்றை உருவாக்குவதற்கு மட்டுமே தவறியிருந்தது எனவும் அவர் கூறினார்.அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்க அந்த ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கு உடன்படாததன் காரணத்ததாலேயே அந்தத் தோல்வியும் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பொலிஸ் துறை உள்ளிட்ட இலங்கை அரச நிர்வாகத் துறைகள் பலவற்றில் சுயாதீனத்தன்மை இல்லை என்று, ஐ.நா. பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்த விடயத்தைத்தான் அப்படியே ஏற்றுக்கொள்கிறார் என்றும் அவர் கூறினார்.
ஜனநாயகம் மட்டுமன்றி இரண்டாயிரம் வருடங்களாக பேணப்பட்டு வந்த சமய, கலாச்சார விழுமியங்களை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட சமூக கட்டமைப்பும் வீழ்ச்சியடைக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள பாதகமான நிலைமையை மாற்றியமைக்க அரசியல் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
மலேசியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற தாயும் மகளும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது.

இலங்கையிலிருந்து மலேசியாவிற்கு சட்டவிரோதமாக பணம், தங்கம் கடத்த முயன்ற தாயும் மகளும் இன்று நள்ளிரவு 12.00  மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விமான நிலைய சுங்கப்பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்படி இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாய் (73 வயது), மகள் (47 வயது) ஆகிய இருவரும் அமெரிக்க கடவுச்சீட்டில் மலேசியா செல்லவிருந்ததாகவும், இவர்களிடமிருந்து இந்தியா, தாய்வான், கொரியா, அமெரிக்க நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட நாணயத்தாள்களின் இலங்கை பெறுமதி 26 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும் 11 கோடி பெறுமதியான சுமார் 18 கிலோ தங்கமும் இவர்களிடம் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கொள்ளையர்களும், கொலைகாரர்களுமே அதிகம் இருக்கின்றனர் : சந்திரிகா.

நாடாளுமன்றில் கொள்ளையர்களும், கொலைகாரர்களுமே அதிகம் இருப்பதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கல்வித்துறையின் மூலம் இந்த சமூகத்தை சீர்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது, அவ்வாறு இல்லாவிட்டால் இந்த சமூகம் சீரழிந்து விடும்.
நாட்டின் வளங்களைக் கொள்ளையிடுவதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றனர்.நாட்டில் மிகவும் லாபகரமான வியாபாரமாக தற்போது அரசியல் மாற்றமடைந்துள்ளது.தந்தை, மகள், மாமி, மாமா மற்றும் மகன் என குடும்பத்தின் அனைத்து தரப்பினரும் அரசியலில் ஈடுபடுவதற்கு போராடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டீவ் ஜாப்ஸ் தினம் அனுசரிப்பு.
கணணி, ஐபோன், ஐபாட், ஐபேட் உள்ளிட்ட அதிநவீன கணணி மற்றும் கைத்தொலைபேசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த 5ம் திகதி இறந்தார்.
ஜாப்ஸ் மறைவை நினைவுகூறும் வகையில் நேற்று(ஞாயிறுக்கிழமை) “ஸ்டீவ் ஜாப்ஸ் தினம்” அனுசரிக்கப்படும் என கலிபோர்னியா மாகாண கவர்னர் ஜெரி பிரவுன் அறிவித்திருந்தார்.இதுகுறித்து அவர் கூறுகையில்,“ஜாப்ஸ் தனது புதிய கண்டுபிடிப்பின் மூலம் உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். மேலும் தனது வாழ்நாளில் கலிபோர்னியா மாகாண வளர்ச்சிக்காகவும் பல்வேறு உதவிகளை செய்துள்ளார்” என்றார்.
லிபியாவில் தொடரும் வன்முறை: கடாபி மாளிகையின் சுவர் இடிப்பு.
லிபியாவில் சர்வாதிகாரி கடாபியின் 42 ஆண்டு கால ஆட்சிக்கு போராட்டத்தின் மூலம் பொதுமக்கள் முற்றுப்புள்ளி வைத்து விட்டனர்.மக்களின் புரட்சி படையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கடாபியின் மனைவி, மகள் மற்றும் 2 மகன்கள் நாட்டை விட்டு ஓடி விட்டனர். மேலும் 2 மகன்கள் புரட்சி படையிடம் சிக்கினர்.ஆனால் கடாபி மட்டும் தலைமறைவாக இருக்கிறார். அவரை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது. அதிபராக இருந்த போது கடாபியும் அவரது குடும்பத்தினரும் மிக ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை நடத்தினர்.
கடாபியின் பிரமாண்டமான மாளிகை பாப் ஆல் அஷிஷ்யா நகரில் உள்ளது. இது லிபியாவின் தலைநகர் திரிபோலியின் புறநகர் பகுதியில் உள்ளது.தற்போது புரட்சிபடையின் பிடியில் இருக்கும் இந்த மாளிகையின் காம்பவுண்டு சுவர்கள் மிக உயரமாக பாதுகாப்புடன் யாரும் நுழைய முடியாத வகையில் கட்டப்பட்டு உள்ளது.
அவை நேற்று புல்டோசர்கள் மூலம் இடித்து தரை மட்டமாக்கப்பட்டன. இதை ஏராளமான மக்கள் கூடி நின்று பார்த்து ரசித்தனர். அப்போது கடவுள் மிகப் பெரியவர், இது நாட்டுக்காக உயிரை விட்ட தியாகிகளின் ரத்தத்தால் கட்டப்பட்டது என்பன போன்ற கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.இதற்கிடையே கடாபியின் ஆதரவு கடைசி நகரான பானிவாலிட்டையும் புரட்சி படை முற்றுகையிட்டு தாக்குல் நடத்தி வருகிறது. அங்கு புரட்சி படையின் வீரர்கள் முன்னேறி வருகின்றனர். சிர்த் நகரிலும் தொடர்ந்து சண்டை நடக்கிறது.
அணு ஆயுதங்களை தயாரிப்பது குறித்த ரகசிய ஆவணங்களை ஈரான் வெளியிட வேண்டும்: அமெரிக்கா நெருக்கடி.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்து வருவது குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி ஏஜன்சிக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நெருக்கடி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் ஈரான் மீதான குற்றச்சாட்டை அந்நாட்டு அதிபர் மறுத்துள்ளார். அமெரிக்காவுக்கான சவுதி அரேபியத் தூதர் அல் ஜூபைர் என்பவரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஈரானிய அமெரிக்கர் மன்சூர் அர்பாப்சியாரை எப்.பி.ஐ சமீபத்தில் கைது செய்தது.அர்பாப்சியாரின் பின்னணியில் ஈரானின் புரட்சிப் படையின் ஒரு பிரிவான குத் படை இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இந்தப் படைகளின் முக்கிய தலைவர்களை ஈரானின் மதத் தலைவரான அயதுல்லா அலி கமேனி தான் நியமிப்பார் என்பதால் அமெரிக்காவின் சந்தேகம் அவர் மீது தான் உள்ளது.
இதுகுறித்து நேற்று முன்தினம் பேட்டியளித்த கமேனி,"அமெரிக்காவின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது. சர்வதேச சமூகத்தில் ஈரானைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக அமெரிக்காவில் உள்ள ஈரானியர்கள் சிலர் மீது அந்நாடு குற்றம் சுமத்தி வருகிறது” என கண்டனம் தெரிவித்தார்.ஈரான் அதிபர் அகமதி நிஜாதி நேற்று அளித்த பேட்டியில்,"ஈரானியர்கள் பண்பட்டவர்கள். அவர்கள் தாக்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஈரான் மீது அதிகளவில் தடைகளை விதிக்க அமெரிக்கா பல்வேறு வழிகளை ஆலோசித்து வருகிறது. கடந்த 12ம் திகதி ஈரான் மீதான தனது நடவடிக்கைக்கு ஐ.நா.வின் பாதுகாப்புக் கவுன்சிலின் ஆதரவு வேண்டும் என அமெரிக்கா கோரியது. இதற்கு பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் ஆதரவு தெரிவித்தன.இதற்கு கண்டனம் தெரிவித்த ஈரான் பாதுகாப்புக் கவுன்சிலுக்கு எழுதிய கடிதத்தில்,"அமெரிக்கா போரை தூண்டி விடுகிறது” என குற்றம்சாட்டியிருந்தது.
இந்நிலையில் ஈரானின் ரகசிய அணு ஆயுத உற்பத்தி தொடர்பான ஆவணங்களை ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி ஏஜன்சி வெளியிட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா நெருக்கடி கொடுத்து வருகிறார்.கடந்த மாதம் அணுசக்தி ஏஜன்சி ஈரானின் ரகசிய அணு ஆயுத உற்பத்தி தொடர்பான ஆவணங்களை வெளியிடுவது குறித்த அறிக்கையை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அணுசக்தி ஏஜன்சி ஒருவேளை அவரது நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து வெளியிடுமானால் ஈரான் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு வசதியாகப் போய்விடும்.அமெரிக்காவின் ஆளும் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினர் இருவரும், ஈரான் மீதான தடைகளை அதிகரிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இரண்டும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நேரத்திலும் அரபுலக நாடுகளில் மக்கள் புரட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையிலும், ஈரான் மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகள் பாதகத்தையே உருவாக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.பெட்ரோலிய பொருட்களை விற்கும் நிறுவனங்களிடம் இருந்து ஈரானின் குத் படை வாங்கி வருவதைத் தடுக்க அதன் மீது தடை விதிப்பது அமெரிக்காவின் ஆலோசனைகளில் ஒன்று.
அப்படி தடைவிதிக்கப்பட்டால் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயரும் என்பது சிலரின் வாதம். இதனால் அமெரிக்காவுக்கே பெட்ரோலிய பொருட்கள் தொடர்பான சிக்கல் ஏற்படும் என்கின்றனர் அவர்கள்.இவ்விவகாரத்தை ஐ.நா.வின் பாதுகாப்புக் கவுன்சிலுக்குக் கொண்டு போகத் தீர்மானித்துள்ளது சவுதி அரேபியா. இதுகுறித்து ஐ.நா பொதுச் செயலர் பான் கி மூனுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,"சவுதி தூதர் கொலை முயற்சி குறித்து பாதுகாப்புக் கவுன்சிலுக்குத் தெரிவியுங்கள். இதற்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என கோரியுள்ளது.
உலக புகழ்பெற்ற தொலைநோக்கியின் பெயரை மாற்ற முடிவு.
உலகின் புகழ்பெற்ற தொலைநோக்கிகளில் ஒன்றான வெரி லார்ஜ் ஆரே என்ற பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள் மற்றும் அறிவியலாளர்களிடம் இருந்து புதிய பெயருக்கான பரிந்துரை வரவேற்கப்படுகிறது.
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணம் சான் அகஸ்டின் நகரை ஒட்டிய பகுதியில் நேஷனல் ரேடியோ அஸ்ட்ரோனமி ஆப்சர்வேட்டரி(என்.ஆர்.ஏ.ஓ) சார்பில் வெரி லார்ஜ் ஆரே என்ற தொலைநோக்கி நிறுவப்பட்டுள்ளது.கடந்த 1970களில் வடிவமைக்கப்பட்ட இந்த தொலைநோக்கி 27 ஆன்டெனாக்கள் மூலம் ரேடியோ சிக்னல்களை பதிவு செய்து ஆய்வு செய்து வருகிறது.
குறிப்பாக பல லட்சம் மைல் தூரத்தில் உள்ள நட்சத்திரங்கள், சூப்பர் நோவாக்கள் மற்றும் பிளாக் ஹோல்ஸ் ஆகியவை பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறது.இந்த தொலைநோக்கி கடந்த 2001ம் ஆண்டு முதல் புதிய தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது உள்ளதைவிட இது 8000 மடங்கு கூடுதல் சக்தி வாய்ந்ததாக இருக்கும். இதற்கு புதிய பெயர் சூட்ட என்.ஆர்.ஏ.ஓ திட்டமிட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பிரதிபலிக்கும் வகையில் புதிய பெயர் இருக்க வேண்டும். புதிய பெயருக்கான பரிந்துரைகள் அறிவியல் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.2012ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள அமெரிக்க வானியல் சங்க மாநாட்டில் தொலைநோக்கியின் புதிய பெயர் அறிவிக்கப்படும்.
மிக மோசமான நிலையில் உலக பொருளாதாரம்: லகர்டே தகவல்.
உலக பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக சர்வதேச நிதியமைப்பு(ஐஎம்எப்) தலைவர் கிறிஸ்டினா லகர்டே தெரிவித்துள்ளார்.ஜி20 நாடுகள் அமைப்பின் நிதியமைச்சர்கள் கூட்டம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறுகிறது.
இதில் ஐஎம்எப் தலைவர் லகர்டே பேசியதாவது: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் உலக பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நிதிநெருக்கடியை சமாளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக கடந்த 3 வாரங்களாக நிலைமையில் முன்னேற்றம் காணப்பட்டது.
எனினும் வளர்ந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த நிதிநெருக்கடி வளரும் நாடுகளுக்கும் பரவி வருவதால் நிலைமை மேலும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.நிதிநெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஒரு வரைவு அறிக்கையை ஐஎம்எப் தயாரிக்கும். இதன்மூலம் படிப்படியாக பிரச்னையிலிருந்து மீள முடியும்.
தள்ளு நடைமேடையை உபயோகிக்கும் பெனடிக்ட்.
போப் இரண்டாம் ஜான்பால் உபயோகித்த தள்ளு நடைமேடையை தற்போதைய போப் 16ம் பெனடிக்ட் உபயோகிக்கிறார்.மறைந்த முன்னாள் போப் இரண்டாம் ஜான்பால் பர்கிசன் என்ற நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் புனித பீட்டர் தேவாலயத்துக்கு செல்வதற்கு தள்ளு நடை மேடையை(மொபைல் பிளாட்பாம்) கடந்த 1999ம் ஆண்டு பயன்படுத்தினார்.சக்கரத்துடன் கூடிய அந்த நடைமேடையை இருவர் தள்ளிச் செல்வர். இரண்டாம் ஜான்பால் மறைவுக்கு பின் அது பயன்படுத்தப்படாமல் இருந்தது.
அதை மீண்டும் பயன்படுத்த தற்போதைய போப் 16ம் பெனடிக்ட் முடிவு செய்தார். கடந்த இரு மாதங்களாக புனித பீட்டர் தேவாலயத்தில் நடைபெறும் பிரார்த்தனைக்கு நடந்து செல்லும் போது போப் 16ம் பெனடிக்ட் மிகவும் சோர்வடைந்தார்.
இதனால் தனது முன்னோடி இரண்டாம் ஜான்பால் பயன்படுத்திய தள்ளு நடை மேடையை பயன்படுத்த 16ம் பெனடிக்ட் முடிவு செய்தார். மேலும் இந்த தள்ளு நடைமேடை பாதுகாப்பானது.கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா பிரார்தனைக்காக புனித பீட்டர் தேவாலயத்துக்கு போப் 16ம் பெனடிக்ட் நடந்து சென்ற போது மனநலம் பாதித்த பெண் ஒருவர் 16ம் பெனடிக்ட்டை தள்ளிவிட்டார். இதனால் போப்பின் பாதுகாப்புக்கு இந்த தள்ளு நடைமேடை சிறந்ததாக இருக்கும் என வாடிகன் வட்டாரம் கருதுகிறது.
இந்தியா - வியட்நாம் ஒப்பந்தம்: சீனா கடும் எதிர்ப்பு.
தெற்கு சீனக் கடலில் எண்ணெய் துரப்பணம் செய்ய இந்தியாவும், வியட்நாமும் செய்து கொண்டுள்ள உடன்பாட்டுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இரு நாடுகளும் இந்த உடன்பாட்டை செய்து கொண்டுள்ளதன் மூலம் சீனாவுக்கு எதிரான அவசர முடிவை எடுத்துள்ளன என்று அந்நாட்டின் அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.
இரு நாடுகளும் சீனாவின் கடல் பகுதியில் எண்ணெய் துரப்பணம் செய்ய உடன்பாட்டை எட்டியுள்ளன. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இரு நாடுகளின் இந்தச் செயலை சீனா உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அந்தப் பத்திரிகை வலியுறுத்தியுள்ளது.
கடல் எல்லை தொடர்பாக சீனாவுடன் நிலவும் சிக்கலைத் தீர்க்க சமீபத்தில் வியத்நாம் உடன்பாட்டை மேற்கொண்டது. இந்த உடன்பாட்டை எட்டிய சில தினங்களில் சீனக் கடல் பகுதியில் எண்ணெய் துரப்பணம் செய்ய இந்தியாவுடன் உடன்பாட்டை எட்டியுள்ளது. இது வியட்நாமின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது என்றும் அந்தப் பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.வியட்நாமுடன் இந்தியா செய்து கொண்டுள்ள உடன்பாட்டை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த உடன்பாட்டின் மூலம் தங்களுக்கு எண்ணெய் கிடைக்கும் என்று மட்டும் நினைக்காமல் அண்டைநாடுகளுடனான உறவினை இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும் என்று அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
மீண்டும் சோவியத் ரஷ்யா உருவாக்கப்பட மாட்டாது: அதிபர் விளக்கம்.
விளாடிமிர் புடின் அடுத்த பிரதமராக வருவது என்பது நாட்டை முந்தைய சோவியத் ரஷ்யாவாக ஆக்கும் முயற்சி அல்ல என அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் தெரிவித்துள்ளார்.ரஷ்யாவில் அடுத்தாண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய பிரதமர் விளாடிமிர் புடின் அதிபர் வேட்பாளராக நிற்கப் போவதாக அறிவித்தார்.
இதையடுத்து சமீபத்தில் ரஷ்யப் பத்திரிகையில் புடின் எழுதிய கட்டுரை ஒன்றில்,“ஐரோப்பிய யூனியனைப் போல முந்தைய சோவியத் நாடுகள் ஒன்றிணைந்த யூரேஷியா என்ற அமைப்பு உருவாக வேண்டும். இது சோவியத் ரஷ்யாவை மீண்டும் உருவாக்கும் முயற்சியல்ல” என கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று ஆளும் ஐக்கிய ரஷ்யக் கட்சித் தொண்டர்களிடையே அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் பேசியதாவது: பிரஸ்னேவ், அண்ட்ரோபோவ், செர்னென்கோ மற்றும் கோர்பசேவ் ஆகியோரின் ஆட்சியில் இருந்த ரஷ்யா வேறு. தற்போதைய ரஷ்யா வேறு.மேலும் புடின் மற்றும் மெட்வடேவ் இருவரில் யார் முற்போக்காளர், அதிகாரம் மிக்கவர் என்ற விவாதம் தேவையற்றது. அதிபர் தேர்தலுக்குப் பின் அரசு நிர்வாகத்தில் விரிவான மாற்றங்கள் செய்யப்படும். புடின் மீண்டும் போட்டியிடுவது முந்தைய சோவியத் ரஷ்யாவை உருவாக்கும் முயற்சி அல்ல.
ராணுவ வீரர் ஒருவருக்காக 1027 கைதிகளை விடுதலை செய்யும் இஸ்ரேல்.
காசா பகுதி ஹமாஸ் பிரிவினரிடம் கடந்த ஐந்து ஆண்டுகளாக சிக்கியுள்ள தனது நாட்டு ராணுவ வீரர் ஒருவரை மீட்பதற்காக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக 477 கைதிகளின் பட்டியலை அந்நாடு வெளியிட்டுள்ளது. கடந்த 2006 ஜூன் 25ம் திகதி இஸ்ரேல்- காசா எல்லைப் பகுதியில் பூமியில் சுரங்கம் தோண்டி நுழைந்த ஹமாஸ் பிரிவினர் இஸ்ரேல் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இருதரப்பிலும் தலா இருவர் பலியாயினர். மூவர் காயம் அடைந்தனர்.இஸ்ரேல் வீரர் கிலாத் ஷாலித் என்பவரை ஹமாஸ் பிரிவினர் பிடித்துச் சென்றனர். அப்போது ஷாலித்துக்கு 19 வயது. இதன் பின் அவரை விடுவிக்க இஸ்ரேல் ஹமாசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இஸ்ரேல் சிறையில் வைத்துள்ள ஒன்பதாயிரம் பாலஸ்தீனர்களை விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் நிபந்தனை விதித்தது. இஸ்ரேல் மறுத்தது. இப்பிரச்னையில் எகிப்து நடுவராக இருந்து பேச்சுவார்த்தையை நடத்தியது.இறுதியில் முதற்கட்டமாக 477 பேரை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும், அதற்குப் பதிலாக இஸ்ரேல் வீரர் கிலாத் ஷாலித் விடுவிக்கப்படுவார். அதைத் தொடர்ந்து மிச்சமுள்ள 550 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என ஒப்பந்தம் தயாரானது.
அதன்படி நேற்று முதற்கட்டமாக விடுவிக்கப்பட வேண்டிய 477 பாலஸ்தீனக் கைதிகளின் பெயர் பட்டியலை இஸ்ரேல் வெளியிட்டது. இதை எதிர்ப்பவர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட 48 மணி நேரத்திற்குள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.கைதிகளான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலில் பல பகுதிகளில் வெடிகுண்டு வீசி பயங்கரத் தாக்குதல் நடத்தியோர், தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியோர் இவர்களை விடுவித்தால் இஸ்ரேல் மீதான தாக்குதல் அதிகரிக்கும்.
இவர்களால் பலியான இஸ்ரேலியர்களுக்கு அரசு என்ன பதில் சொல்லும்? எனக் கோரி பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.எனினும் கோர்ட் அரசின் முடிவுக்கு எதிராக நிற்காது என்றே கருதப்படுகிறது. அதேநேரம் முக்கிய பயங்கரவாதிகளான மர்வான் பர்கவுட்டி, அப்துல்லா பர்கவுட்டி, அகமது சாதத் ஆகிய மூவரை விடுவிக்கப் போவதில்லை என இஸ்ரேல் உறுதியளித்துள்ளது.
ஏழு பில்லியனை தொட்ட உலக மக்கள்தொகை.
உலகில் வாழும் மக்கள் ‌தொகை‌யின் மொத்த எண்ணிக்கை 7 பில்லியனாக அதிகரித்துள்ளதாக ஐ.நா மக்‌கள் தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்துள்ளது.உலகில் உள்ள நாடுகளில் குறிப்பாக மேற்கு ‌ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், ரஷ்யா போன் நாடுகளில் பிறப்பு விகிதம் குறைவாகவும், இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இரண்டு குழந்தைகள் வசிப்போரின் எண்‌ணிக்‌கை அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.மேலும் புருண்டி, உகாண்டா போன்ற ஆப்ரிக்‌க நாடுகளில் அதிகரித்து வரும் பிறப்பு வகிதம் மற்றும் வறுமை போன்றவை கவலையளிப்பாதாகவும் உள்ளது என தெரிவித்துள்ளது.
தற்போது ஆப்ரிக்க கண்டத்தி்ல் 900 மில்லியன் மக்கள் தொகை உள்ளது. இன்னும் 40 ஆண்டுகளில் இ‌தன் எண்ணிக்கை 2 பில்லியனாக அதிகரிக்கும் என நியூயார்க் நகரை மையமாக கொண்டு செயல்படும் மக்கள் ‌தொகை கணக்கெடுப்பு மையத்‌தை சேர்ந்த‌ ஜான் போங்கார்ட்ஸ் தெரிவித்துள்ளார்.சர்வதேச நீர் நிர்வாக மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் 1804ல் உலகின் மொத்த மக்கள் தொகை 1பில்லியனாக இருந்தது. 123 ஆண்டுகளுக்கு பின்னர் அவை 2 பில்லியனாக அதிகரித்தது.
1959ல் 3 பில்லியனாகவும், 1974ல் 4 பில்லியனாகவும், 1987ல் 5 பில்லியனாகவும், 1998ல் 6 பில்லியனாகவும் அதிகரித்து வந்துள்ளது.வரும் 2025ல் 8 பில்லியனாகவும், 2083ல் 10 பில்லியனாகவும் அதிகரிக்ககூடும் எனவும் தெரிவித்துள்ளது. சராசரி மனிதனின் ஆயுட்காலம் 1950ம் ஆண்டுகளில் 48 வயது என்ற நிலைமாறி நவீன மருத்துவ வசதியால் இன்று 69 ஆக உயர்ந்திருப்பதாகவும் ஆய்வில் தெரிவித்துள்ளது.
அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க ஈராக்கில் அமெரிக்க படைகள் நீட்டிப்பு.
ஈராக் நாட்டில் அமைதியை உருவாக்கும் பணியில் அமெரிக்க படைகள் ஈடுபட்டு வருகின்றன.கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஈராக்கில் பாதுகாப்பு அளிப்பதாக கூறி தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர் அமெரிக்க படையினர்.
அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்ற பின்னர் அமெரிக்க படைகள் இந்தாண்டு இறுதிக்குள் படைகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என அறிவித்திருந்தார்.அதனையடுத்து பாதுகாப்பு படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டு வந்த நிலையில் ஈராக் பிரதமர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாஷிங்டனில் அதிபர் ஒபாமாவுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் ‌போது அமெரிக்க படைகள் ஈராக் படையினருக்கு போர் பயிற்சி அளிக்க வேண்டுகோள் விடுத்தனர்.இதனால் ஈராக்கில் அமெரிக்க படைகள் இருப்பது நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது. இந்த தகவலை அசோசியேட் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் பிரதமர் கிலானிக்கு செல்வாக்கு சரிந்தது: கருத்துக்கணிப்பில் தகவல்.
பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கு குறைந்து வருவதாக அந்நாட்டில் எடுக்கப்பட்ட சமீபகால கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், அரசியல்வாதிகளுக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கு குறித்து அறியும் வகையில் கால் ஆப் பாகிஸ்தான் என்ற அமைப்பு பொதுமக்களிடையே கருத்து கணிப்பு நடத்தியது. கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் மூலம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு ஏற்ற இறக்கம் அடைந்து இருப்பது தெரிந்தது.மேலும் மூட்டாஹிதா கியூமி இயக்கத்தின் தலைவர் அல்டாப் உசேன், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கியூ பிரிவு தலைவர் சுஜார் ஆகியோரின் செல்வாக்கும் மக்களிடையே வெகுவாக குறைந்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் யூசப்ராசா கிலானியின் -29 புள்ளிகளை பெற்று, மக்களிடையே செல்வாக்கு குறைந்து காணப்பட்டார். ஆனால் எதிர்கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் செரீப், அவரது தம்பி ஷாபாஷ் செரீப் ஆகியோரின் மதிப்பு உயர்ந்துள்ளது.மேலும் பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் கப்டனும், தெக்ரீக்-இ-இன்சாப் தலைவருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தலைமை நீதிபதி இப்திகார் முகமது சவுத்ரி ஆகியோருக்கு மக்களிடையே பெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் அமெரிக்கா தாக்குதல்: 5 தீவிரவாதிகள் பலி.
பாகிஸ்தானில் தெற்கு வசிரிஸ்தானில் உள்ள ஸபெர்மார்ஸ் என்ற இடத்தில் ஒரு வீட்டில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.அதைத் தொடர்ந்து அமெரிக்க உளவுத்துறையினர் ஆளில்லா விமானங்கள் மூலம் அங்கு 4 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் அந்த வீடு இடிந்து முற்றிலும் தரைமட்டமானது. அதைத் தொடர்ந்து அங்கு பதுங்கியிருந்த 5 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.மற்றவர்கள் காயம் அடைந்தனர். இந்த தகவலை பாகிஸ்தான் டெலிவிஷன் அறிவித்தது. நேற்று வடக்கு வசிரிஸ்தானில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்த துறவி தீக்குளிப்பு.
திபெத்தை ஆக்கிரமித்துள்ள சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எட்டாவது நபராக ஒருவர் தீக்குளித்துள்ளார்.கடந்த 1950 முதல் சீனா திபெத்தை தன் பிடியில் வைத்துள்ளது. திபெத்தின் அரசியல் மற்றும் மதத் தலைவரான தலாய்லாமா இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார்.
இந்நிலையில் திபெத்தை சீனாவின் பிடியில் இருந்து விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டங்கள் வலுத்து வருகின்றன.சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தின் அபா பகுதியில் நேற்று 19 வயதுடைய முன்னாள் புத்த மதத் துறவி ஒருவர் தீக்குளித்தார். அவர் முன்பு அபா பகுதியில் உள்ள கீர்த்தி மடாலயத்தில் துறவியாக இருந்தவர்.
தற்போது திபெத் விடுதலைக்காகச் செயல்பட்டு வருகிறார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் அவரது உடலில் பற்றியிருந்த தீயை அணைத்து விட்டனர்.ஆனால் அவர் தற்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.கடந்த மார்ச் முதல் இதுவரை ஏழு நபர்கள் சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்துள்ளனர். தற்போது இவர் எட்டாவது நபராக தீக்குளிப்புப் பட்டியலில் சேர்ந்துள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF