Saturday, October 22, 2011

இன்றைய செய்திகள்.

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும் : விக்கிரமபாகு கருணாரட்ன.

அரச பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டில் மக்கள் எழுச்சிகள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. சட்ட ஒழுங்குகள் அதிகார வர்க்கத்தினரால் மிகவும் மோசமான முறையில் உதாசீனம் செய்யப்படுகின்றன.இதுவே மாற்று சக்திகள் உருவெடுப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் மாத்திரம் அல்ல நாட்டின் அனைத்து பகுதிகளிலுமே அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் விஸ்தரித்துள்ளது. எனவே அரசின் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய தலைவர்களே இலங்கைக்கு தேவையென்றும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் நேற்று வெள்ளிக்கிழமை சீனோர் விருந்தகத்தில் வைத்து, வைபவரீதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினரான விக்கிரமபாகு கருணாரட்ன சத்தியப்பிரமாணம் மேற் கொண்டதன் பின்னர் உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு கூறினார்.
இவர் இங்கு தொடர்ந்து கூறுகையில்,
ஜனநாயகம் மற்றும் சுதந்திரமற்ற அச்சுறுத்தலான சூழலிலேயே தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றோம். ஆளும் தரப்பு முக்கியஸ்தர்களுக்கு இடையிலேயே துப்பாக்கிச் சூடுகள் கூட இடம்பெற்றன. பாதுகாப்பிற்கு வருவபவர்கள் எவ்விதமான தயக்கம் இன்றி சுட்டுக் கொள்கின்றனர். அதே போன்று அனுமதியின்றி அரசியல் முக்கியஸ்தர்கள் வீடுகளை சோதனை இடுகின்றனர்.
நாட்டில் சட்ட ஒழுங்குகள் பாரியளவில் மீறப்படுகின்றன. பொதுமக்கள் பொறுமையிழந்து சட்டத்தைக் கையிலெடுக்க ஆரம்பித்துவிட்டனர். ஜனநாயகத்திற்கு எதிரான அரச பயங்கரவாதத்திற்கு எதிராக பாரிய சக்திகள் உருவாகியுள்ளன. இச்சக்திகள் வெளிப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. வடக்கில் ஜனநாயக அரசியலை மேற்கொள்ள முடியவில்லை. தெற்கிலும் அதே நிலை தான் காணப்படுகின்றது. எனவே நாட்டில் சட்ட ஒழுங்கினை பாதுகாக்க கட்சி பேதங்களை மறந்து செயற்பட வேண்டும் என்றார்.
இனவாத கொள்கையை மாற்றி அமைத்த சந்திரிக்கா : ராஜித பெருமிதம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இனவாத கொள்கைகளில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவே மாற்றத்தை ஏற்படுத்தியதாக மீன்பிடித்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட ரீதியில் சந்திரிக்காவை தமக்கு பிடிக்காத போதிலும், அவரது கொள்கைகளை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இனவாத கோட்பாடுகளிலிருந்து சுதந்திரக் கட்சியை லிபரல் கோட்பாடுகள் நோக்கி நகர்த்தியவர் சந்திரிக்காவே என அவர் தெரிவித்துள்ளார்.சந்திரிக்காவின் கணவர் விஜயகுமாரதுங்க லிபரல் கொள்கைகளில் அதீத நம்பிக்கை கொண்டிருந்தாகக் குறிப்பிட்டுள்ளார்.சந்திரிக்காவின் தந்தையான எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவினால் அறிமுகம் செய்யப்பட்ட தனிச் சிங்கள கொள்கையினால் ஏற்பட்ட தவறுகளை சந்திரிக்கா திருத்தி அமைத்தார் என அவர் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கும் தமது கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் சுயகௌரவம் நிலைநாட்டப்படும் வரையில் இலங்கையின் சுயகௌரவத்தை நிலைநாட்ட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன அடிப்படையில் காணிகளை வகையீடு செய்ய முடியாது : விமல் வீரவன்ச.

நாட்டின் காணிகளை ஏதேனும் ஓர் இன அடிப்படையில் வகையீடு செய்ய முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.சகல காணிகளும் அரசாங்கத்திற்கு சொந்தமானது, இனவாத அடிப்படையில் காணிகளை பிரிக்க முடியாது.
சில நபர்கள் நாட்டுக் காணிகளை இனவாத அடிப்படையில் பிரிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.இவ்வாறு காணிகள் வகையீடு செய்யப்பட்டால் மீண்டும் நாட்டில் இனவாதம் தலைதூக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கம்பஹா திமித்திநஹாவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சீனா இலங்கையில் தொலைக்காட்சி நிலையத்தை அமைக்கவுள்ளது.

சீனா இலங்கையில் தொலைக்காட்சி நிலையம் ஒன்றையும் சீன கலாசாரத்தையும் மொழியையும் பரப்பும் நிலையங்களும்; நிறுவவுள்ளது.சீனாவின் மொழி மற்றும் ஒளிபரப்புத்துறையை மேம்படுத்துவதன் நோக்கிலேயே இந்த நிறுவனங்கள் அமைக்கப்படவுள்ளன.
இலங்கையின் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கும் சீனாவின் கல்வியமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களை அடுத்தே இந்த நிறுவனங்கள் இலங்கையில் அமைக்கப்படவுள்ளன.இதேவேளை சீனா இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டங்களையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
முஸ்லிம் நாடுகளின் பலத்தை மேற்குலகிற்கு சவாலாக எடுத்துக் காட்டியவர்களுள் கடாபியும் ஒருவர் : அலவி மௌலானா.

உலக முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி இஸ்லாமியர்களின் பலத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஏகாதிபத்திய மேற்குலக சதியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கான ஓர் எடுத்துக்காட்டாகவே கேர்ணல் கடாபியின் படுகொலை அமைந்துள்ளது. என மேல் மாகாண ஆளுநர் எஸ்.அலவி மௌலானா தெரிவித்துள்ளார்.லிபிய முன்னாள் தலைவர் கேர்ணல் கடாபியின் படுகொலை குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது
முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி அவர்களைப் பலவீனப்படுத்தி ஏகாதிபத்திய மேற்குலக சதியாளர்கள் மேற்கொண்ட உத்திகள் பலவிதம். முஸ்லிம் நாடுகளின் பலத்தை மேற்குலகுக்கு சவாலாக எடுத்துக்காட்டிய தலைவர்களுள் மறைந்த கேணல் கடாபியும் குறிப்பிடத்தக்கவர்.அவரது பலத்தை பலவீனப்படுத்தி முஸ்லிம் உலகை பலவீனப்படுத்துவதே மேற்குலக ஏகாதிபத்தியவாதிகளின் நோக்கமாகும்.
முஸ்லிம்களின் நாடுகளின் தலைவர்களை விரட்டும் சத்தித் திட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ் வேளையில் முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து இச் சதித் திட்டத்தை முறியடிக்க ஒன்று பட வேண்டும்.ஆகவே நாம் பேதங்களை மறந்து ஒற்றுமையாக ஒன்றிணைந்து எமது பலத்தை மேம்படுத்தி மேற்குலக சதிகாரர்களின் சதித்திட்டத்தை முறியடித்து இஸ்லாமிய உலகையும் முஸ்லிம்களையும் பாதுகாப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
எங்களுக்கே இந்த நிலை என்றால் தமிழர்களுக்கு என்ன நிலை? : ரணில் கேள்வி.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு, மாநகர சபையின் நிர்வாகத்தை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியிருந்தும் இன்னும் ஏன் நிர்வாகத்தைக் கையளிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எங்களுக்கே இவ்வாறானதொரு நிலை என்றால் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களுக்கு இந்த அரசாங்கம் எவ்வாறு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கப் போகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
லிபியாவின் இடைக்கால அதிபராக முஸ்தபா அப்துல் ஜலீல் பதவியேற்பு.
ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள லிபியா நாட்டின் அதிபராக இருந்தவர் கடாபி. இவர் கடந்த 42 ஆண்டுகளாக அந்த நாட்டின் அதிபராக இருந்தார்.
அவரது ஆட்சியை எதிர்த்து கடந்த மார்ச் மாதம் மக்கள் போராட்டம் வெடித்தது. போராட்டத்தை அடக்கி ஒடுக்க அவர் ராணுவத்தை பயன்படுத்தினார்.இதை தொடர்ந்து மக்களின் புரட்சி படை உருவாக்கப்பட்டது. இவர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நேட்டோ படையும் களத்தில் குதித்தது.இதை தொடர்ந்து கடாபியின் ராணுவத்துக்கும், புரட்சிபடைக்கும் இடையே சண்டை நடந்தது. தொடக்கத்தில் பெங்காசி நகரை கைப்பற்றிய புரட்சிப்படை படிப்படியாக பல நகரங்களை தங்கள் வசமாக்கியது.
கடந்த மாதம் தலைநகர் திரிபோலியை பிடித்தது. இதை தொடர்ந்து கடாபி தலைமறைவானார். இறுதியாக பிடிபடாமல் இருந்த கடாபியின் சொந்த ஊரான சிர்த் பானிவாலிட் ஆகிய 2 இடங்களை பிடிக்க கடும் சண்டை நடந்தது.பானி வாலிட் பிடிபட்ட நிலையில் சிர்த் நகரமும் புரட்சிப்படையிடம் வீழ்ந்தது. அப்போது ஒரு பதுங்கு குழியில் பதுங்கி இருந்த கடாபியை புரட்சிப்படையினர் கண்டுபிடித்தனர்.அப்போது அவர் தனது 2 கால்களிலும் காயத்துடன் இருந்தார். எனவே அவரை சுட்டுக்கொல்ல புரட்சிப்படையினர் துப்பாக்கியை நீட்டினர். தன்னை சுட்டுக்கொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் கடாபி கெஞ்சினார்.
ஆனால் அதை பொருட்படுத்தாமல் அவரை புரட்சி படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். இந்த தகவலை இடைக்கால அரசின் பிரதமர் முகமது ஜிப்ரில் செய்தியாளர்களிடம் அறிவித்தார். இந்த தருணத்தைதான் நாங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்தோம் என தெரிவித்தார்.இதைதொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்ட கடாபியின் உடல் அல்-அராபியா மற்றும் அல் ஜசீரா டெலிவிஷன்களில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது அவர் உடல் முழுவதும் ரத்த வெள்ளமாக இருந்தது.
அவரது உடல் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் மிஸ்ரதா நகருக்கு அருகே எடுத்து செல்லப்பட்டதாக அல்-அரா பியா டெலிவிஷனில் காட்டப்பட்டது.கடாபியின் உடல் ஒரு வாகனத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. அதை சுற்றி மக்கள் கூட்டமாக நின்று கொண்டு கடாபிக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். அவர் கொல்லப்பட்டதை அடுத்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
கடாபியுடன் அவரது மகன் முடாசிம் என்பவரும் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் மிஸ்ரதாவுக்கு எடுத்து செல்லப்பட்டதாக புரட்சி படை வீரர் முகமது லெய்த் தெரிவித்தார்.கடாபி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து லிபியாவில் அரசியல் ஸ்திரதன்மை ஏற்படும் நிலை உள்ளது. அதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இடைக்கால அரசின் தலைவராக முஸ்தபா அப்துல் ஜலீல் பதவி ஏற்க உள்ளார். அவரே லிபியாவின் இடைக்கால அதிபராகவும் பதவி ஏற்கிறார்.
கனடா மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரம் வலுவடைய வேண்டும்.
கனடாவின் பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் குறித்துத் தான் கவலைப்படவில்லை என்றும் ஜரோப்பா பற்றியே அதிகம் கவலைப்படுவதாகவும் கனடா நிதிமந்திரி ஜிம்ஃபிளாஹெர்ட் தெரிவித்தார்.ஜரோப்பாவின் கடன் நெருக்கடி தீர்ந்தால் மட்டுமே மேற்கத்திய நாடுகளின் நிதிநிலை சீறாகும். கடந்த செப்டம்பர் மாதத்தில் கனடாவில் பணவீக்கம் 3.2 % மாக உயர்ந்தது. விலைவாசி ஒன்று முதல் மூன்று சதவீதம் வரை ஏறியும் இறங்கியும் இருந்துவந்தன.
ஆயினும் கனடாவின் வளர்ச்சி அதாவது பொருளாதார வளர்ச்சி குறித்து அக்கறைப்படுவதாக நிதிமந்திரி ஒட்டவா நகரில் நடந்த ஒரு கூட்டத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார். வடமெரிக்கா இன்னும் பிற்காலத்தில் வேலைவாய்ப்புகளில் பிரதிபலிக்கக் கூடிய வகையில் பொருளாதார முன்னேற்றம் தென்படுகின்றது.
ஜரேப்பா மற்றும் அமெரிக்காவில் எதிர்பார்க்கப்படும் இன்னொரு பொருளாதார மந்தநிலை மற்றும் சீனாவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஆகியன அண்மைக் காலங்களில் கனடா நாட்டின் ஏற்றுமதியில் மிகுந்த பாதிப்பில் ஏற்படுத்தியுள்ளது. இப்பாதிப்பு இந்த நாட்டின் பொருளாதாரச்சிறப்புக்கு ஆதாராமாக இருந்த ஏற்றுமதித்துறையை வலுவிழக்கச் செய்துள்ளது. பொருளாதார பாதிப்பு நாட்டின் 1.4 மில்லியன் பேரை வேலையில்லாத திண்டாட்டத்தில் சிக்க வைத்துள்ளது.
இதனால் இந்நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்தின் விகிதம் 7.1 சதவீதமாகி விட்டது. அடுத்த ஆண்டு கனடாவன் பொருளாதாரம் 2.4 உயர்வை எட்டும். ஆனால் அமெரிக்காவோ 2.5 சதவீதம் உயர்வை எட்டிப் பிடிக்கும். கடன் பிரச்சனை வங்கி செயற்பாடுகளை முடக்கும் உலகளாவிய நிதிநெருக்கடி புதிதாகத் தோன்றும். அப்பொழுது 2008 இல் லேமன் சகோதரர்கள் நிறுவனங்களில் ஏற்பட்ட நெருக்கடி போலப் புதிய நெருக்கடிகள் உருவாகக் கூடும். எனவே ஜரோப்பிய தலைவர்கள் நிதிநெருக்கடி குறித்து விரிவாக சிந்தித்து தக்க தீர்வுகளை ஆராய்ந்து தங்கள் தலைமைப்பண்பை உறுதிப்படுத்த வேண்டும்.
ஃபிளாஹெர்ட்டிக்கு எரிச்சலுட்டும் நிலை என்னவென்றால் பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் நாட்டுத்தலைவர்கள் தனித்தனியே அறிக்கை வெளியிடுவது தான். இவர்கள் சேர்ந்து சிந்திக்க வேண்டும் என்று கனடா நிதியமைச்சர் விரும்புகிறார். ஜரோப்பாவில் நிதி நெருக்கடிக்கான தீர்வில் அவசரம் காட்டாமல் வாரக்கணக்காக காலந்தாழ்த்துவது குறித்து பிரிட்டன் மற்றும் அமெரிக்கத் தலைவர்களும் ஃபிளாஹெர்ட்டியும் கோபமும் எரிச்சலும் அடைகின்றன.
ஜரோப்பாவின் போக்கு உலகப் பொருளாதாரத்திற்கு அபாயச்சங்கு ஊதுகின்றது என்பது கனடா நிதியமைச்சரின் கவலையாகும். தாமதப்போக்கினை தலைவர்கள் உடனடியாகத் தம் சந்தை நிலையை அறிந்து தனது பொருளாதார வீழ்ச்சி பிறநாடுகளிடம் ஏற்படுத்தும் தாக்கத்தை உணர வேண்டும் அதிகமாக கடன் வாங்குவதும் அந்தக் கடனுக்கு கூடுதலாகத் தவனைத்தொகை காட்டுவதும் பொருளாதாரச் சீர்கேட்டை விலைவிக்கும் என்பதை உணர வேண்டும் என்கிறார்.
தான் கனடாவின் நிதியமைச்சராக இருப்பது குறித்து மகிழ்ச்சியும் பெருமிதமும் தெரிவித்தார். மற்ற வளர்ந்த நாடுகளை விட கனடா பொருளாதார நிலையில் வீழ்ச்சி அடையாமல் இருப்பதற்கு காரணம் தொழில்வரியை குறைத்தது தான் என்கிறார். இதனால் தொழில்வளம் பெருகி பொருளாதார நிலை மோசம் அடையாமல் இருக்கிறது. ஜரோப்பியாவில் நிதிநிலைமை சீரடைந்தால் அமெரிக்காவிலும் கனடாவிலும் பொருளாதாரம் பலம் பெறும் என்பது கனடா நிதியமைச்சரின் கருத்தாகும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஈராக்கில் அமெரிக்க படைகள் வாபஸ்: ஒபாமா.
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் முழுவதும் இந்த ஆண்டு இறுதிக்குள் வாபஸ் பெறப்படும் என்று அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.ஈராக்கில் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட பின்னும், அமைதியை ஏற்படுத்துவதாக கூறி ஏராளமான அமெரிக்க படைகள் தொடர்ந்து அங்கேயே தங்கியுள்ளன.அவர்கள் மீது அவ்வப்போது தீவிரவாத தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதில் அமெரிக்க வீரர்கள் 4,400 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். இது அமெரிக்காவுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
இதனால் ஈராக்கில் இருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் படைகள் வாபஸ் பெறப்படும். நாட்டின் பாதுகாப்பை ஈராக் மக்களே ஏற்றுக் கொள்வார்கள் என்று அமெரிக்கா கூறி வந்தது.ஆனால் படைகளை வாபஸ் பெற்றால் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரிக்கும், ஈராக்கில் மீண்டும் கலவரம் அதிகரிக்கும் என்று உலக நாடுகள் அச்சம் தெரிவித்து வருகின்றன. எனினும் படைகள் இந்த ஆண்டுக்குள் முற்றிலும் வாபஸ் பெறப்படும் என்று அதிபர் ஒபாமா நேற்று திட்டவட்டமாக அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 9 ஆண்டுகளாக ஈராக்கில் நடந்து வந்த சண்டை முடிந்துவிட்டது. நான் ஏற்கனவே உறுதி அளித்தபடி அமெரிக்க வீரர்கள் அனைவரும் அங்கிருந்து வாபஸ் பெறப்படுவார்கள் என்றார்.முன்னதாக ஈராக் பிரதமர் நவ்ரி அல்மாலிக்குடன் ஆலோசனை நடத்தினார். அப்போது படைகளை வாபஸ் பெற இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உளவுத்துறை தலைவர் பதவி விலக வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை.
பிரான்ஸ் நாட்டு அதிபர் சர்கோசியின் நண்பரும் உளவுத்துறை தலைவருமான பெர்னார்டு பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டின் சோசலிஸ்ட் கட்சி கோரிக்கை எழுப்பியுள்ளது.உளவுத் துறை தலைவர் லீமாண்டி என்ற நிருபரை உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது.பிரான்ஸ் நாட்டு சட்டமானது குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கை நீதிமன்றம் முன்பு நீதிபதிகள் விசாரிக்க அனுமதி வழங்குகிறது. இந்த விசாரணை நீதிபதி, பொலிஸ் உயர் அதிகாரியை விசாரிப்பார்.
காவல்துறை பத்திரிக்கையாளரின் தொலைபேசி அழைப்புகளை 2010ல் ஆராய்ந்ததில் இவருக்கு 2007ல் பெருந்தொகையை லஞ்சமாக கொடுத்த லிலியானா என்ற கோடீஸ்வரனுடன் தொடர்பு கொண்டு இருந்தது தெரியவந்தது.இவ்வாறு பத்திரிக்கையாளரை வேவு பார்ப்பது தவறு என்று கூறி எதிர்க்கட்சித் தலைவர் பதவி விலக வேண்டும் என்று சோசலிஸ்ட் கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.
பெர்னாட்டின் பதவி விலகலை வலியுறுத்தும் எதிர்கட்சித்தலைவர் அடுத்த தேர்தலில் அதிபர் பதவிக்குப் போட்டியிடுகிறார். நடந்த விஷயம் இவ்வளவு மோசமானதாக இருக்கும் போது இன்றும் உளவுத் துறை தலைவரை உள்ளாட்சி துறை அமைச்சர் பதவி விலக சொல்லாதது ஏன் என்று இவர் வினா எழுப்புகிறார்.பத்திரிக்கையாளரை உளவு பார்ப்பது மிகப்பெரிய குற்றம் என்றும் இதற்குரிய தண்டனையை உளவுத்துறை தலைவர் உடனடியாக பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அணு ஆயுதங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார்: வடகொரியா.
எந்த வித நிபந்தனையும் இன்றி அணு ஆயுத உற்பத்தியை கைவிடுவது குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடகொரியா அறிவித்துள்ளது.வடகொரியா அதிபர் கிம் ஜோங் ரஷிய பத்திரிகை ஏஜென்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, அணு ஆயுத உற்பத்தியை கைவிடுவது தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த வித நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்து இருக்கிறார்.கடந்த 2008ம் ஆண்டுக்கு பின் அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு இடையே வருகிற 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
ஹோங்கொங்கில் படகு விபத்து: 74 பேர் படுகாயம்.
ஹோங்கொங்கில் பயணிகள் படகு ஒன்று நங்கூரத் தூண் மீது மோதியது. இதில் 74 பேர் படுகாயமடைந்தனர்.
இவ்விபத்து சியுங் சௌ எனும் தீவிலிருந்து ஹோங்கொங் நகருக்குச் செல்கையில் வெள்ளிக்கிழமை நடந்தது. படுகாயமடைந்த 9 பேர் விமானத்தின் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.140 பயணிகளுடன் சென்ற படகு அதிகாலை 5 மணிக்கு விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து விசாரனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், விபத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றும் ஹோங்கொங் கப்பற்படை செய்தித்தொடர்பாளர் வோங் தெரிவித்தார்.
கடாபி சுட்டுக் கொலை: உலக தலைவர்கள் கருத்து.
கடந்த 42 ஆண்டுகளாக லிபியாவை ஆட்சி செய்து வந்த முன்னாள் அதிபர் கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இதுகுறித்து உலகின் முக்கிய தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நேட்டோவின் அரசாங்க அமைச்சர் ஆண்டர்ஸ் போக்ரஸ்மஸ்ஸன்:கடந்த 42 வருடங்களாக இருந்து வந்த கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
லிபியா தன் வரலாற்றில் வரைந்திருந்த கறுப்பு பக்கம் மறைந்தது. உண்மையில் லிபிய இனமக்கள் தங்கள் எதிர்காலத்தை இப்பொழுது தாங்களே தீர்மானிக்கலாம்.அனைத்து லிபிய இனமக்களும் தங்களுக்குள்ளான வேறுபாடுகளை மறந்து ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என அழைக்கிறேன்.நேட்டோவும், அதன் கூட்டு நாடுகளும் ஒருங்கிணைந்து லிபிய மக்களின் பாதுகாப்பிற்காக பாடுபடும். நாம் நமது குறிக்கோளை அடைவதற்காக ஒருங்கிணைந்த நாடுகள் மற்றும் தேசிய ஒருங்கிணைந்த கவுன்சில் மூலம் செயலாற்றுவோம்.
டேவிட் கமரூன்: கடாபியின் இறப்பை பிரதமர் ஜிப்ரில் உறுதிப்படுத்தினார். அனைவருடைய நினைவிலும் இந்த நாள் இருக்கும் என நினைக்கிறேன்.விமானம் மூலம் லண்டன் தெருக்களில் நடந்த சண்டை, IRA தீவிரவாதிகளால் மக்கள் உயிரிழப்பு, லிபியாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் போன்ற பல உயிரிழப்பு சம்பவங்கள் சர்வாதிகாரி கடாபியின் ஆட்சியில் மறக்க முடியாதவை.
ஏஞ்சலா மார்க்கெல்: இந்த நாள் கடாபியின் ஆட்சிக்கு முடிவு கட்டிய நாள். லிபிய இன மக்களுக்கு மிக முக்கியமான நாள். இந்த நாள் புதிய அமைதியான அரசியல் தொடங்குவதற்கு வழி வகுக்கட்டும்.லிபிய நாடு கடாபியின் பிடியிலிருந்து விலகியதால் குடியரசு நடத்திட ஜேர்மனி ஆதரவு தந்து செயல்படும்.
நிக்கோலஸ் சர்கோசி: லிபிய மக்கள் கடந்த 8 மாதங்களாக நடத்திய போராட்டத்தின் விளைவாக சர்வாதிகாரி மற்றும் வன்முறையாளரான கடாபியிடம் இருந்து சுதந்திரம் அடைந்தனர்.அடக்கு முறைக்கு எதிராக லிபிய மக்கள் முன்னேற துவங்கியுள்ளனர். பிரான்ஸ் நாடு லிபியாவின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தருகிறது. லிபிய இன மக்கள் ஒற்றுமையாகவும், சுதந்திரமாகவும் ஒருங்கிணைந்து செயல்பட புதிய வருடம் துவங்கியுள்ளது.
பான் கீ மூன்: லிபியாவின் வரலாற்றில் வேதனை தரும் துயர சம்பவங்கள் முடிந்தன. புதிதாக தேசிய ஒருங்கிணைப்பு, நீதி, மனித உரிமைகளுக்கு மரியாதை மற்றும் சட்டத்தின் படி ஆட்சி செய்தல் என்ற புதிய பக்கங்கள் உருவாகின.லிபிய மக்கள் அனைவரும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பிற்காக வருங்காலத்தில் இணைந்து செயல்பட உறுதி எடுக்க வேண்டும். லிபிய மக்கள் வலியை தாங்கிக் கொண்டு தைரியமாகவும், வேகமாகவும் செயலாற்றியதற்கு புகழாரம் செலுத்துகிறேன்.
வாடிகன்: கடாபியின் மறைவு சர்வாதிகாரம் மற்றும் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. லிபிய மக்களால் உருவாகும் புதிய தலைவர்கள் சட்டதிட்டங்களின் படி நடந்து நாட்டில் ஒற்றுமை, அமைதி, நீதி இவற்றை உருவாக்க வேண்டும்.
இறைச்சி கூடத்தில் கடாபியின் உடல்: அடக்கம் செய்வதில் இழுபறி.
புரட்சி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் உடலை புதைப்பதில் இடைக்கால அரசின் அதிகாரிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.இறைச்சி கூடமாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் கடாபி உடல் அனாதையாக கிடக்கிறது. இது லிபிய மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ஆப்ரிக்கா நாடான லிபியாவை புரட்சி மூலம் கைப்பற்றி 42 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் கடாபி(69). கடந்த பிப்ரவரியில் அவருக்கு எதிராக கிளர்ச்சி தொடங்கியது. அவரை எதிர்த்தவர்கள் ஓரணியில் திரண்டு புரட்சி படை என்ற பெயரில் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு அமெரிக்கா உட்பட நேட்டோ படைகளும் ஆதரவு அளித்தன.
கடந்த ஆகஸ்ட் 23ம் திகதி தலைநகர் திரிபோலியை புரட்சி படை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அப்போது முதல் 2 மாதமாக தலைமறைவாகி இருந்த கடாபி அவரது சொந்த ஊரான சிர்தி யில் நெடுஞ்சாலைக்கு அடியில் செல்லும் பாதாள சாக்கடை குழாயில் பதுங்கி வாழ்ந்துள்ளார்.அவரது இருப்பிடத்தை நேற்று முன்தினம் புரட்சி படையினர் கண்டுபிடித்தனர். துப்பாக்கி முனையில் அவரை வெளியே இழுத்துப் போட்டனர். அப்போது சுட்டு விடாதீர்கள் என்று கடாபி கதறியதாக புரட்சி படை வீரர் ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இருப்பினும் அவர் தப்ப முயன்றதாகவும், அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறி புரட்சி படையினர் சுட்டதில் கடாபி பலியானார்.அவரது உடலை மிஸ்ரடா பகுதியில் முன்பு இறைச்சி கூடமாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் வைத்துள்ளனர். கடாபி உடலை அடக்கம் செய்வதில் இடைக்கால அரசை சேர்ந்தவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மத வழக்கப்படி உடலை உடனடியாக அடக்கம் செய்ய வேண்டும் என்று ஒரு பிரிவினர் கூறினர்.
ஆனால் சர்வாதிகார ஆட்சி நடத்திய கடாபி பலியானதில் சந்தேகம் ஏற்படாமல் இருக்க சில நாட்கள் அவரது உடலை வைத்திருக்கலாம் என்று சிலர் தெரிவித்தனர்.ஈராக்கில் தூக்கிலிடப்பட்ட சதாம் உசேனை மத சடங்குகள்படி அடக்கம் செய்தது போல கடாபியையும் அடக்கம் செய்ய ஒரு பிரிவினர் வலியுறுத்தினர்.
ஆனால் கடாபியை அடக்கம் செய்யும் இடத்தை ரகசியமாக வைத்திருக்கவும், அவரது ஆதரவாளர்கள், உறவினர்களுக்கு தெரிந்து நினைவிடமாக வழிபடாமல் தடுக்கவும் வேண்டும் என்று சிலர் கூறினர். வேறு சிலரோ மகன் உட்பட உறவினர்கள் இருப்பதால் அவர்களை கொண்டு இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்றனர்.இதனால் பலியாகி 2 நாட்கள் ஆகியும் கடாபி உடல் அடக்கம் செய்யப்படாமல் கிடக்கிறது. இதுபற்றி தேசிய மாற்று அரசு கவுன்சில்(என்.டி.சி) கமாண்டர் அப்துல் சலாம் கூறுகையில்,“கடாபி உடல் முழு மரியாதையுடன் இஸ்லாமிய வழக்கப்படி 24 மணி நேரத்துக்குள் அடக்கம் செய்யப்படும்” என்றார்.
இதற்கிடையே கடாபி உயிருடன் பிடிபட்டும் அவரை சுட்டதுடன், ரத்த காயங்களுடன் கதறிய அவரை புரட்சி படையினர் அடித்து சுட்டுக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.அதை உறுதிப்படுத்தும் வகையில் அதிர்ச்சி அளிக்கும் செல்போன் வீடியோ காட்சிகள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மனித உரிமைகளை காப்பதாக கூறும் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் இதற்கு என்ன பதில் சொல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடாபியிடம் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்த ஐ.நா மனித உரிமை அமைப்பு உத்தரவிட்டுள்ளது. மேலும் கடாபி மறைவுக்கு பிறகு லிபியாவில் ஜனநாயகம் மலர்ந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ள நிலையில் புதிய அரசு அமைப்பதில் புரட்சி படைக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாகவும், தலைமை பொறுப்புக்கு மோதல் உருவாகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுட வேண்டாம் சுட வேண்டாம் கடாபியின் கடைசி வார்த்தை.
2011- 10- 20 லிபியர்களின் வாழ்நாளில் மறக்கமுடியாத நாள். காரணம், அந்நாடு முழுமையாக சர்வாதிகாரியின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது.

காலை 8.30 - கடாபி மற்றும் அவரது சிறிய படையணியொன்றும் சிர்தே நகரைவிட்டுத் தப்பியோட முயற்சித்த போது அப் படையணி மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் கடாபியின் முக்கிய ஆதரவாளர்கள் பலர் கொல்லப்பட்டனர்.காலை 11.05 - லிபிய இடைக்கால அரசபடைகள் அந்நாட்டின் இறுதிப் பகுதியான சிர்தே நகரை முற்றிலுமாகக் கைப்பற்றியதுடன், மீதமிருக்கும் கடாபி ஆதரவாளர்களைத் தேடிக்கொண்டிருப்பதாக அறிவித்தனர். பகல் 2.00 - இதில் தப்பித்த கடாபி கொன்கிறீட் குழாய் ஒன்றினுள் நுழைந்து பதுங்கியுள்ளார்.

பின்னர் அவ்விடத்திற்கு வந்த இடைக்கால நிர்வாக அரச படையினர் அவரை அதற்குள் இருந்து இழுத்து வெளியே எடுத்துள்ளனர்.அதன்போது அவரிடம் தங்கத் துப்பாக்கியொன்று இருந்துள்ளது.தனது உயிருக்கு அஞ்சிய கடாபி தன்னைச் சுட வேண்டாம் எனக் கெஞ்சியுள்ளார்.பின்னர் அங்கிருந்தவர்கள் கோபத்தில் அவரை மோசமாகத் தாக்கியுள்ளனர்.இறுதியில் அவரது தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பகல் 2.30 - கடாபி கொல்லப்பட்டதாக அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

பகல் 2.45 - கடாபி கொல்லப்பட்டமையை கடாபி ஆதரவு ஊடகமொன்று மறுக்கின்றது.

பகல் 3.00 - லிபியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் தொடங்குகின்றன. மக்கள் வெற்றியைக் கொண்டாடுகின்றனர்.

பகல் 3.44 - கடாபி கொல்லப்பட்ட காட்சி வெளியாகிறது.

பகல் 4.30 - கடாபி கொல்லப்பட்டுள்ளதாக லிபியாவின் இடைக்கால பிரதமர் மஹுமூட் ஜிப்ரில் தொலைக்காட்சியில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றார்.

பகல் 4.31 - கடாபியின் மகன்முடாசிம் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இரவு 7.50 கடாபியின் மகன் சயிப் கொல்லப்பட்டுள்ளதாக அல்ஜெசீரா ஊடகம் செய்தி வெளியிட்டது

இவ்வாறு கடாபி மற்றும் அவரது எஞ்சிய படையணியின் ஓட்டம் முடிவுக்கு வந்தது.எனினும் கடாபி கொல்லப்பட்ட விதம் தொடர்பில் பல சமூக ஆர்வலர்கள் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.மனிதாபிமானமற்ற முறையில் அவர் தனது இறுதித்தருணத்தில் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.







பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF