அதிக பாவனையாளர்களைக் கொண்ட சமூகவலையமைப்பான பேஸ்புக் அதிகரித்து வரும் பாவனையாளர்களைக் கருத்திற்கொண்டு பிரமாண்ட 'டேட்டா சென்டர்' ஒன்றினை அமைக்கவுள்ளது.பேஸ்புக் முதன்முறையாக சேர்வர் பார்ம் ஒன்றினை அமெரிக்காவுக்கு வெளியில் நிர்மாணிக்கவுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.
சுவீடன் நாட்டின் வட பகுதி நகரான லுலீயாவில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இது அமையவுள்ளது. இதற்கான மொத்த மின்சக்தித் தேவை 120 mw எனக் கணக்கிடப்பட்டுள்ளது.இச் சக்தியானது அருகிலுள்ள நீர்த்தேக்கத்தின் மூலம் உற்பத்திசெய்யப்படவுள்ளது. எதிர்வரும் 2014 ஆம் ஆண்டளவில் இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 'சேர்வர் பார்ம்' எனப்படுவது இணைய நிறுவனங்கள் தங்களது தரவுகளை முகாமை செய்யும் சேர்வர்களை ஒரே இடத்தில் பாரியளவில் நிறுவி செயற்படுத்தும் இடம் என இலகுவாக விளக்கமுடியும்.
ஆர்டிக் வட்டப் பகுதியில் இருந்து சுமார் 60 மைல்கள் தொலைவில் உள்ள இவ்விடத்தினை பேஸ்புக் தேர்ந்தெடுக்கப் பிரதான காரணம் குளிர் ஆகும்.பொதுவாக சேர்வர்களை இலகுவாக வெளிப்பிரதேச வளியைக் கொண்டு குளிர்விக்க முடியுமென்ற காரணத்தினாலேயே குளிர்ப்பிரதேசங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.இதன் காரணமாகவே கூகுளும் பின்லாந்தில் தனது சேர்வர் பார்ம் ஒன்றினை அமைத்தது, மேலும் மைரோசொப்ட்டும் சைபீரியாவில் சேர்வர் பார்ம் ஒன்றினை ஆரம்பிக்கும் திட்டத்தினைக் கொண்டிருந்த போதிலும் அதனைப் பின்னர் கைவிட்டது.கூகுள் முதல் பேஸ்புக் வரையான மிகப்பெரிய இணைய நிறுவனங்களின் முதுகெலும்பு இத்தகைய 'சேர்வர் பார்ம்கள்' என்பது குறிப்பிடத்தக்கது.