Tuesday, October 11, 2011

மாணவர்களின் அறிவுத்திறனை பரிசோதிக்கும் போட்டிகளை நடத்த யூடியூப் திட்டம்..


மாணவர்களை அறிவியல், கணிதம் மற்றும் பொறியியல் துறைகளில் ஊக்குவிக்கவும் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தவும் யூடியூப் மற்றும் லெனோவோ நிறுவனங்கள் புதிய அறிவியல் போட்டியை அறிவித்துள்ளன.
உலக அளவில் நடக்கவுள்ள இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் விண்வெளியில் பறக்கவுள்ளனர். இதுதொடர்பாக யூடியூப் மற்றும் லெனோவோ நிறுவனங்கள் இணைந்து “ஸ்பேஸ் லேப்” என்ற போட்டியை அறிவித்துள்ளன.இதில் உலகம் முழுவதிலும் உள்ள 14 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். விண்வெளியில் சுற்றிவரும் ஆய்வு மையத்தின் புவிஈர்ப்பு விசை முற்றிலும் இல்லாத சூழலுக்கு மாணவர்கள் உட்படுத்தப்பட்டால், அங்கு எவ்வகையான ஆய்வுகளை அவர்களால் மேற்கொள்ள இயலும் என்பது குறித்த 2 நிமிட வீடியோவை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்பதே போட்டியின் முக்கிய நிபந்தனை.
இதில் வெற்றி பெறும் 2 மாணவர்கள் விண்வெளிக்கு அழைத்துச்செல்லப்படுவர். அவர்களின் பரிசோதனைகள் விண்வெளி ஆய்வு மையத்தில் செய்து காண்பிக்கப்படுவதுடன், அவை யூடியூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.மாணவர்களிடையே அறிவியல், கணிதம் மற்றும் பொறியியல் துறைகளில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக இப்போட்டி நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ள ஒருங்கிணைப்பாளர்கள், இப்போட்டி மாணவர்களுக்கு ஒரு அறிவியல் மூலதனமாகவும் இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
மாணவர்கள் தங்களின் பரிசோதனை வீடியோக்களை யூடியூப் மூலமாக வரும் டிசம்பர் 7ம் திகதிக்குள் அனுப்ப வேண்டும். உலகம் முழுவதிலும் இருந்து வரும் வீடியோக்களில் இருந்து, வரும் ஜனவரி 3ம் திகதி 60 சிறந்த வீடியோக்கள் தேர்ந்தெடுக்கப்படும்.இவற்றில் இருந்து சிறந்த 6 வீடியோக்களை தேர்ந்தெடுக்கும் பணியில் மிகச்சிறந்த விஞ்ஞானிகள் ஈடுபடுத்தப்படுவர். மாபெரும் வானியல் வல்லுநரான ஸ்டீபன் ஹாக்கின்ஸ், நாசாவின் பில் கிரெஸ்டென்மியர் உள்ளிட்டோர் அவர்களில் சிலர்.60 வீடியோக்களில் இருந்த தேர்ந்தெடுக்கப்படும் 6 பேர், ஜீரோ கிராவிட்டி என்று அழைக்கப்படும் புவியீர்ப்பு சக்தியற்ற அனுபவங்களை பெறுவர். மேலும் அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.
இந்த 6 பேரில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு பேர், ஒருவர் 14 முதல் 16 வயதுடையவராகவும், மற்றொருவர் 17 முதல் 18 வயதுடையவராகவும் இருப்பார். இவர்கள் 2 பரிசுகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.ஒன்று அவர்கள் ஜப்பான் சென்று, தங்களது பரிசோதனைகளை நேரில் காண்பது. இரண்டாவது அவர்கள் 18 வயதான பின் ரஷ்யாவில் உள்ள விண்வெளி ஆய்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுவது. இதில் பயிற்சி பெறும் மாணவர்கள் விண்வெளி செல்லவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF