Saturday, October 22, 2011

கடாஃபி உடலை ரகசியமாகப் புதைக்கத் திட்டம்?


லிபியாவின் மிஸ்ரதா நகரில் உள்ள பிரேதப் பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் மம்மர் கடாஃபியின் உடல். )லிபியாவில் புரட்சிப் படையினரால் வியாழக்கிழமை கொல்லப்பட்ட அந்நாட்டின் முன்னாள் அதிபர் மம்மர் கடாஃபியின் உடலை ரகசியமாகப் புதைக்க இடைக்கால அரசு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.எங்கே எவ்வாறு அவரது உடலைப் புதைப்பது என்பது குறித்து லிபிய அதிகாரிகள் இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை என பிபிசி கூறுகிறது.அதேநேரத்தில் ஒசாமா பின் லேடனை புதைத்தது போல் கடாஃபியின் உடலை கடலில் புதைப்பது குறித்தும் அதிகாரிகள் விவாதித்து வருகின்றனர். எதிர்காலத்தில் கடாஃபியின் கல்லறை புனிதச் சின்னமாக மாறிவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

சிர்டே நகரில் அவர் பிடிபட்டதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது பற்றி நிறைய கேள்விகள் எழுந்துள்ளன. அவரது உடல் இப்போது மிஸ்ரடா நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுவதை அதிகாரிகள் மறுத்தனர். அவர் பிடிபட்டபோது அவரது விசுவாசிகளின் படைக்கும் புரட்சிப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அப்போது அவரது தலையில் குண்டு பாய்ந்தது என்று ஜிப்ரில் எனும் அதிகாரி கூறினார். தெரு வழியாக கடாஃபி இழுத்துச் செல்லப்படுவதை விடியோ பதிவுகள் காட்டுகின்றன.பிபிசியிடம் பேசிய புரட்சிப்படை வீரர் ஒருவர், பாதாள சாக்கடை குழாய்க்குள் கடாஃபி பதுங்கி உட்கார்ந்திருந்ததாகவும் தன்னை சுட்டு விட வேண்டாமென கெஞ்சியதாகவும் கூறினார். கடாஃபியிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத் துப்பாக்கியையும் அவர் காட்டினார்.

'கடாஃபி வேண்டுமென்றே கொல்லப்பட்டிருந்தாலும் அதற்கு அவர் பொருத்தமானவரே. அவரை ஆயிரம் முறை கொன்றால் கூட, அது லிபியாவுக்கு அவர் செய்திருக்கும் கொடுமைகளுக்கு ஈடாகாது. அவரால் 70 ஆயிரம் பேரை நாங்கள் இழந்திருக்கிறோம்' என்று இடைக்கால அரசின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறினார்.இன்னும் சில மணி நேரங்களில் தங்களது லிபியப் பணி முடிவடைந்து விட்டதாக நேச நாடுகளின் படை (நேட்டோ) அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ், அமெரிக்கா கருத்து: கடாஃபி இறந்துவிட்டார் என்றால், லிபியாவில் நேட்டோவின் ராணுவத் தலையீடு முடிவுக்கு வந்துவிட்டது என்று பொருள் என பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சார்கோஸி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், கடாஃபியின் மரணம் லிபிய மக்களுக்கான புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்றார்.கடாஃபி கொல்லப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்த வெனிசூலா அதிபர் ஹுயூகோ சாவெஸ், இந்தச் சம்பவம் கண்டிக்கத்தக்கது. அவரை வேண்டுமென்றே கொன்றுவிட்டார்கள் என்றார்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF