
காடுகள் அழிக்கப்படுவதாலும், நிலம், நீர், காற்று ஆகிய மூன்றும் வேகமாக மாசுபடுத்தப்படுவதாலும் ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் அந்த ஓட்டையின் அளவு 97 லட்சம் சதுர மைல்கள் அதாவது 250 லட்சம் சதுர கிலோமீற்றர்கள் அளவுக்கு இருக்கிறது என்று செயற்கைக் கோள்கள் படம் பிடித்துக் காட்டியுள்ளன.கடந்த செப்டம்பர் மாதம் 14ம் திகதி ஓசோன் ஓட்டை படம் பிடிக்கப்பட்டு அளக்கப்பட்டது. இன்றைய வட அமெரிக்கக் கண்டத்தின் பரப்பளவுக்குச் சமமான அளவுக்கு ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது. இவ்வளவு பெரியதை ஓட்டை என்று சொல்வதே பொருத்தம் இல்லை.
ஆறுதல் தரும் ஒரே விஷயம் ஏற்கெனவே ஒரு முறை இதைவிட அதிக அளவில் இந்த ஓட்டை அளக்கப்பட்டிருக்கிறது. அதாவது 2006ல் 1,060 லட்சம் சதுர மைல்கள் அளவுக்கு ஓட்டை இருந்தது. சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் கூடி உறுதியான நடவடிக்கைகளை எடுத்தால் தான் புவியைக் காப்பாற்ற முடியும். அண்டார்டிகா துருவப்பகுதியில் ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டிருக்கிறது என்பதை 1970களில் செயற்கைக் கோள்கள் தான் முதல் முறையாகக் கண்டுபிடித்தன.ஆனால் அது குறித்து கவலைப்பட்டும் எச்சரித்தும் பேசிய உலகின் முன்னேறிய நாடுகள் அனைத்துமே ஓசோன் படலம் ஓட்டை விழாமல் காப்பதற்கான நடவடிக்கைகளில் உளப்பூர்வமாக ஈடுபடவில்லை என்பதே உண்மை.
இதனால் 1980களிலும், 1990களிலும் இந்த ஓட்டை பெரிதாகிக் கொண்டே வந்துள்ளது. ஆர்டிக் கடல்பகுதியில் புவிக்கு மேலே உள்ள வளிமண்டலத்தில் கடுமையான குளிர்ச்சி ஏற்பட்டது. அதன் பிறகு ஓசோன் படலத்தைக் கரையவைக்கும் ரசாயனங்கள் உயிர்ப்படைந்து ஓட்டையைப் பெரிதாக்கின.புவிக்கு மேலே உள்ள பகுதியில் வேண்டுமானால் ஓசோன் என்பது மாசுப்படலமாக இருக்கலாம். ஆனால் விண்வெளியிலிருந்து புவியை நோக்கி வரும் பாதகமான புறஊதாக் கதிர்களைத் தடுத்து அப்படியே திருப்பி அனுப்பும் கேடயமாக ஓசோன் படலம் செயல்படுகிறது.
குளோராபுளோரா கார்பன்கள் தான் ஓசோன் படலத்தைத் துளைக்கின்றன என்பதால் அவற்றுக்கு இப்போது தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஓரளவுக்கு ஓசோன் படலம் மீட்சி பெற்று வருகிறது. அப்படியும் மிக மெதுவாக இந்தச் சிதைவு தொடர்கிறது. புவியிலிருந்து 8.7 மைல் முதல் 13.7 மைல் வரையிலான உயரத்தில் தான்(14 கிலோமீற்றர் முதல் 22 கிலோமீற்றர் வரை) இந்தச் சிதைவு ஏற்பட்டிருக்கிறது.
முதல் முறையாக இந்த ஆண்டு ஆர்டிக் கடல் பரப்பிலும் ஓசோன் படலத்தில் துளை ஏற்பட்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு தொடர்கிறது.இம்மாதம் 27ம் திகதி நாசாவின் மற்றொரு செயற்கைக் கோள் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள சிதைவின் தன்மையை வெகு நெருக்கமாகச் சென்று படம் பிடித்து ஆய்வு செய்யப் போகிறது.