அதிக பசியின் காரணமாக டைனோசர்கள் பல மைல் தூரம் மலை ஏறியிருப்பதற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.உலகில் 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உயிரினம் டைனோசர். 16 கோடி ஆண்டுகள் உயிர் வாழ்ந்த இந்த இனம் ஆறரை கோடி ஆண்டுகள் முன்பு அழிந்ததாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உலகின் பல பகுதிகளிலும் நடக்கும் தொல்பொருள் ஆராய்ச்சிகளின் போது டைனோசர்களின் படிமங்கள், எலும்புகள், பற்கள் போன்றவை கிடைத்து வருகின்றன.
அமெரிக்காவின் உடா மாநில அருங்காட்சியகத்தில் டைனோசர்களின் பற்கள், எலும்புகள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. சமீபத்திய ஆய்வின் போது கிடைத்த பற்களின் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதுபற்றி ஆராய்ச்சியாளர் ஹென்றி பிரிக் கூறியதாவது: டைனோசர் வாழ்ந்த காலம் ஜுராசிக் காலம் எனப்படுகிறது. இந்த கால கட்டத்தில் தாவரங்கள் தின்னும் டைனோசர்கள் பெரும்பாலும் மலையடிவாரங்களிலேயே வாழ்ந்திருக்கின்றன. அங்கு உணவு கிடைக்காத சூழ்நிலையில் உணவு, தண்ணீர் தேடி மலைகளில் பல மைல் தூரம் டைனோசர்கள் அலைந்துள்ளன. டைனோசர்களின் 32 பற்களை ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளது.