Thursday, October 13, 2011

இன்றைய செய்திகள்.

கொழும்பு மாநகரசபையில் சுயாதீனமாக இயங்கப் போவதாக மனோ கணேசன் அறிவிப்பு.

கொழும்பு மாநகரசபையில் சுயாதீனக் குழுவாக இயக்கப் போவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.கொழும்பு மாநகரசபையில் 6 ஆசனங்களை கொண்டுள்ள மனோ கணேசனின் கட்சியின் ஆதரவை முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சி கோரியிருந்தது.
எனினும் நிபந்தனையுடன் கூடிய ஆதரவையே தரமுடியும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி கூறியவுடன் ஆதரவு தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடங்கிப்போயின.இந்தநிலையில் சபையில் யாருக்கும் ஆதரவு அளிக்காமல் சுயாதீனமாக செயற்படப் போவதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
மாநகரசபையின் நிர்வாகம் முன்கொணரும் யோசனைகள், மற்றும் பிரேரணைகளின் அடிப்படையை கொண்டு அவற்றுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு காட்டும் அரசியலை மாநகரசபையில் முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எந்த ஒரு கட்சிக்கும் சார்பாக இயங்கப் போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரதவின் கொலையாளிகள் பாதுகாப்பு அமைச்சின் அயல்வாசிகள்: சரத் பொன்சேகா.

படுகொலை செய்யப்பட்ட பாரத லக்சமணனின் கொலையாளிகள் பாதுகாப்பு அமைச்சின் அயல்வாசிகள் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக இன்று நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் மிக மோசமான துர்ப்பாக்கிய நிலையொன்று காணப்படுகின்றது. கேடுகெட்டவர்கள் மக்களின் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளதால் வந்த வினையே இது என்றும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.வெள்ளைக்கொடி வழக்கின் பிரதிவாதிகளின் தரப்பில் சாட்சியங்களை பெறுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று முற்பகல் கூடியது. குறித்த வழக்கின் மனுதாரர் தரப்பின் சாட்சியங்கள் பெறும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.
பிரதிவாதிகளின் தரப்பு சாட்சியங்கள் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா சார்பில் ஆஜராகும் சிரேஷ்ட சட்டத்தரணி நளின் லத்துவஹெட்டியினால் முன்வைக்கப்பட்டது.இதற்கிடையே இன்று சரத் பொன்சேகா நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படும் வழியில் திடீரென வாகனப் போக்குவரத்து நெரிசல் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்போது அவரது பாதுகாவலுக்கு வந்த பொலிசார் தமது வாகனங்களை விட்டுக் கீழே இறங்கியே பாதுகாப்பு நெரிசலை தணித்து, சரத் பொன்சேகாவை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்திருந்தனர்.அதே நேரம் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்னவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்தும் உயர்நீதிமன்றம் இன்று விமர்சித்துள்ளது. சிவில் நபர் ஒருவருக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் எவ்வாறு வழக்குத் தொடர முடியும் என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இலங்கை போன்று ஏனைய நாடுகளிலும் பயங்கரவாதம் முறியடிக்கப்பட வேண்டும்: மன்மோகன் சிங்.

இலங்கை போன்று ஏனைய நாடுகளிலும் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.இதன்பொருட்டு அனைத்து நாடுகளும்- ஒத்துழைக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதுடில்லியில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்திய பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிரான நாடு என குறிப்பிட்டுள்ள அவர்- பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டுமாயின் அனைத்து நாடுகளும் ஒரே விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவ்வாறு அனைத்து நாடுகளும் ஒரேவிதத்தில் செயற்படுவது கடினமாக இருக்குமாயினும்- இந்தியா ஏனைய நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள திட சங்கட்பம் பூண்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார கொள்கையில் மாற்றம் தேவை : ரணில் விக்கிரமசிங்க.

எதிர்கால பொருளாதார வீழ்ச்சியை சரிபடுத்த இலங்கை அரசாங்கம், தென்கொரியா, ஜேர்மனி போன்ற நாடுகளின் முன் மாதிரியை பின்பற்ற வேண்டும்.இந்த யோசனையை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற தேசிய தொழிற்சங்க சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார்.  இலங்கை, சர்வதேச பொருளாதார நிலையை எதிர்கொள்ள வேண்டுமாயின், சமூக சந்தை பொருளாரத்தை உள்ளீர்க்க வேண்டும்.
உலகில் இன்று, பொருளாதார வீழச்சி ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் இலங்கை தொடர்ந்தும் தற்போதைய பொருளாதார முறையை கடைப்பிடித்தால் அந்த வீழ்ச்சியை எதிர்கொள்ள முடியாது.இலங்கையின் ஏற்றம் பெற்று வரும் வாழ்க்கைச் செலவை சமாளிப்பதற்காக மக்கள் தமது செலவுகளை குறைத்துக் கொண்டிருக்க முடியாது.
இந்தநிலையில் உழைக்கும் வர்க்கத்தினருக்கு உரிய சம்பள உயர்வுகளும் சேவைகளும் வழங்கப்பட வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டார்.அல்லது கிரீஸ் நாட்டில் இன்று இடம்பெறுகின்ற நிலையே இலங்கையிலும் இடம்பெறும்.
கிரீஸில் தொழிலற்றோரின் வீதம் உயர்ந்தமையை அடுத்தே அங்கு புரட்சி ஏற்பட்டுள்ளது.அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் தொழிலற்றோர் வீதம் அதிகரித்து செல்கிறது.எனவே இலங்கை தொழிலற்றோர் பிரச்சினையை சமாளிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ரணில் குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கைகள் வெறுக்கத்தக்க செயல் என சந்திரிகா தெரிவிப்பு : விக்கிலீக்ஸ்.

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பம் நடத்திவரும் அரசியல் வெறுக்கத்தக்கது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தூதுவர் பெற்றீசியா பியூட்டினியஸிடம் இந்த கருத்தை சந்திரிகா வெளியிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் ராஜபக்சவின் குடும்பத்தை படிப்பறிவற்ற நாகரீகமற்றவர்கள் என்று சந்திரிகா குறிப்பிட்டதாக பியூட்டினியஸ் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு தெரிவித்துள்ளார்.இலங்கையின் அரசியல் சூழ்நிலை, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் ராஜபக்சவின் அரசியல் ஒரு சாக்கடையாக உள்ளது என்று சந்திரிகா குறிப்பிட்டதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.விக்கிலீக்ஸ் தகவல்படி, இந்த கருத்துக்களை சந்திரிகா பண்;டாரநாயக்க குமாரதுங்க, 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி பியூட்டினியஸிடம் கூறியுள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் ஊழல்கள் மலிந்துள்ளன.
அரசியல் ஆரோக்கியமாக அமையவில்லை. இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புகழை மஹிந்த ராஜபக்ச பாதிக்கச் செய்துள்ளதாக சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, அரசியலில் பிரவேசித்தமை குறித்து தாம் ஆச்சரியப்படுவதாக குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி தேர்தல் நியாயமானதாக இருக்குமானால், பொன்சேகா நிச்சயம் வெற்றி பெறுவார் என்று சந்திரிகா கூறியுள்ளார்.
பௌத்த தீவிரவாத கொள்கையை கொண்ட பொன்சேகா, மஹிந்தவை போலன்றி, தமது உறுதிமொழிகளில் இருந்து விலகிச் செல்லமாட்டார் என்று சந்திரிகா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.இந்தநிலையில் நாடடு மக்கள் மாற்றம் ஒன்றை விரும்புவதாக சந்திரிகா, பியூட்டினியஸிடம் தெரிவித்துள்ளார்.
உத்தேச தேர்தல் முறைமையை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் : திஸ்ஸ அத்தநாயக்க.

உத்தேச தேர்தல் முறைமையை அரசாங்கம் தற்போதேனும் அமுல்படுத்த வேண்டுமேன ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
விருப்பு வாக்கு அரசியல் காரணமாக குரோத அரசியல் கலாச்சாரம் உருவாகியுள்ளது வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஒருவரை ஒருவர் கொலை செய்கின்றனர்.
விருப்பத் தெரிவு மற்றும் தொகுதிவாரி தேர்தல் முறைமையொன்று உருவாக்குவது குறித்த உத்தேச யோசனைத் திட்டம் முன்வைக்கப்பட்டு நீண்ட காலம் கடந்துள்ள போதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முறைமையை மாற்றியமைப்பது குறித்து நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தினால் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஆதரவளிக்கும்.தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த உடனடியாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தெரிந்த சிங்களவர்கள் வடக்கிலும், சிங்களம் தெரிந்த தமிழர்கள் தெற்கிலும் கடமையில் ஈடுபடுவர் : வாசுதேச நாணயக்கார.

தமிழ் மொழியறிவுடைய சிங்களவர்கள் வடக்கிலும், சிங்கள மொழியறிவுடைய தமிழர்கள் தெற்கிலும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேசிய மொழி மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பொதுத்துறையில் கடமையாற்றி வரும் ஊழியர்களுக்கு இவ்வாறு சந்தர்ப்பம் அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் பிளவுபட்டுள்ள இரண்டு சமூகங்களை மீள ஒன்றிணைக்க முடியும் என அமைச்சர் வாசுதேச நாணயக்கார தெரிவித்துள்ளார்.மொழி மற்றும் சமூகக் கலாச்சாரம் தொடர்பான 9ஆவது சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்காலிக நன்மைகளுக்காக சிலர் போலியான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர் : கோத்தபாய.

தற்காலிய நன்மைகளுக்காக சிலர் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.போர்க் குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்கள் பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் சில தரப்பினர் தொடர்ந்தும் போர்க்குற்றச் செயல்களை மெய்ப்பிக்க முயற்சி செய்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நபர்களே இவ்வாறு போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர்.
தொழில்சார் அடிப்படையில் முப்படையினரும் மனிதாபிமான மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.உலகின் வேறு எந்த நாட்டைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளுக்கும் கிடைக்க பெறாத அனுபவங்கள் இலங்கை இராணுவத்தினர் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த அனுபவங்களைப் பயன்படுத்தி சர்வதேச பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க முடியும் என கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.படையினர் ஈட்டிய போர் வெற்றியின் ஊடாக பல்வேறு பாடங்களை கற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
படையினரின் வெற்றியை மழுங்கடிக்கும் குழுக்களின் முயற்சிகளை தோற்கடிக்க வேண்டும்!
தீவிரவாதத்தை தோற்கடித்த தமது படையினரின் வெற்றியை மழுங்கடிக்க பல்வேறு நிகழ்ச்சி நிரல்களின் கீழ் இயங்கும் குழுக்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை தோற்கடிக்க வேண்டிய நிலையில் சிறிலங்கா அரசாங்கம் இருப்பதாகக் கூறியுள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவின் 25 ஆண்டுகால வரலாற்றை எடுத்துக் கூறும் “கிசி வெடகத் சதுரட்ட யட்ட நொவன மா“ ( நான் ஒருபோதும் எதிரியிடம் சரணடையாதவன்) என்ற சிங்கள மொழியில் எழுதப்பட்ட நூலை நேற்று வெளியிட்டு வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“சில குறிப்பிட்ட குழுக்களும், நபர்களும் நாட்டையும், மக்களையும், போர் வீரர்களையும், அவர்களின் வெற்றிகளையும், அரசாங்கத்தையும், சிறிலங்கா அதிபரையும் காட்டிக் கொடுக்க முனைகின்றன.குறுகிய கால நன்மைகளுக்காக அவர்கள் சிறிலங்காப் படையினர் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர்.சிறிலங்காப் படையினர் போரின் போது பொதுமக்களைப் படுகொலை செய்ததாக இவர்கள் கூறும் குற்றச்சாட்டை, தகுந்த சாட்சியங்கள், புள்ளிவிபரங்களின் மூலம் அடிப்படையற்றது என்று நிரூபித்துள்ளோம்.

ஆனாலும் தீயசக்திகள் தொடர்ந்தும் திரும்பத் திரும்ப அதே குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகளால் நீண்டகாலத்துக்குத் தாக்குப் பிடிக்க முடியாது.வெளிநாடுகளில் உள்ள இராணுவ அதிகாரிகளை விடவும் சிறிலங்கா இராணுவத்தில் உள்ள அதிகாரிகள் ஆற்றல் மிக்கவர்களாக இருக்கின்றனர்.மேஜர் ஜெனரலாக தரமுயர்த்தப்படும் இராணுவ அதிகாரி ஒருவர் 10 வெளிநாட்டுப் பயிற்சிகளைப் பெற்றவர்களுக்கு சமமான நிலையில் இருக்கின்றார்.சிறிலங்காப் படையினர் போரில் நிபுணத்துவம் மிக்கவர்கள். அந்த நிபுணத்துவ வழிமுறையிலேயே மனிதாபிமானப் போரை அவர்கள் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

போரை நிறுத்துமாறு சிறிலங்காப் படையினரைக் கண்டித்தவர்கள், இன்று தமது பிரச்சினைகளைத் தீர்க்க எமது நடவடிக்கைகள் குறித்த ஆய்வு செய்கின்றனர்.அதுபோலவே, எமது படையினரைக் கண்டிப்பவர்களும் மனம்மாறி அவர்களைப் பாராட்ட வேண்டும்“ என்றும் கோத்தாபய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.இந்த நிகழ்வில், சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ஹரேந்திர ரணசிங்க எழுதியுள்ள இந்த நூலின் முதற்பிரதியை, சிறப்புப் படைப்பிரிவின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவிடம் கோத்தாப ராஜபக்ச பெற்றுக் கொண்டார்.
சவுதி அரேபிய தூதரைக் கொலை செய்ய தீட்டப்பட்ட சதித்திட்டம் முறியடிப்பு.
அமெரிக்காவுக்கான சவுதி அரேபிய தூதரைக் கொல்ல தீட்டப்பட்ட சதித் திட்டத்தை அமெரிக்க புலனாய்வுத் துறை முறியடித்துள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இக்கொலையின் பின்னணியில் ஈரான் அரசு இருப்பதாகக் கருதும் அமெரிக்கா, அதன் மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளதோடு “இது ஒரு நகைச்சுவை நாடகம்” என கிண்டல் செய்துள்ளது.
பயங்கரவாதத்தைத் தூண்டி விடும் நாடுகளின் பட்டியலில், ஈரானை 1984 முதல் அமெரிக்கா வைத்துள்ளது. ஈரான் அணு உலை விவகாரங்கள், மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான சவுதி அரேபியாவுக்கு எதிராக ஈரானின் வியூகங்கள், தற்போதைய அரபு புரட்சியில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் மீதான ஈரான் விமர்சனம் ஆகியவை தொடர்ந்து இருதரப்பு உறவுகளை சிக்கலுக்குள்ளாக்கியே வந்திருக்கின்றன.
இந்நிலையில் ஈரானை மேலும் தனிமைப்படுத்தும் விதத்தில் அமெரிக்கா புதிய குற்றச்சாட்டை கூறியுள்ளது. அமெரிக்காவுக்கான சவுதி அரேபியத் தூதர் ஏடல் அல் ஜூபைர் என்பவரை ஈரான் கொல்ல திட்டமிட்டது என்பது தான் தற்போதைய குற்றச்சாட்டு.
இந்தத் திட்டத்தை அமெரிக்க புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ கண்டுபிடித்து முறியடித்துள்ளது. கொலைத் திட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த மன்சூர் அர்பாப்சியார்(56) என்பவர் நியூயார்க் விமான நிலையத்தில் கடந்த செப்டம்பர் 29ம் திகதி கைது செய்யப்பட்டார்.இவர் அமெரிக்கா, ஈரான் இரு நாட்டு குடியுரிமைகளும் கொண்டவர். குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய நாட்டவரான கோலம் ஷக்குரி என்பவர் தற்போது ஈரானில் உள்ளார்.நேற்று முன்தினம் அர்பாப்சியார், நியூயார்க் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதுகுறித்த விவரங்கள் எப்.பி.ஐ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவுக்கான சவுதி தூதரை கொலை செய்ய ஈரான் திட்டமிட்டது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
அதனால் அந்நாட்டின் மீது மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இச்சதித் திட்டம், சர்வதேச மற்றும் அமெரிக்க சட்டத் திட்டங்களுக்கு எதிரான செயல். இதுகுறித்து எங்கள் நட்பு நாடுகளுக்கு விளக்குவோம்.இச்செயல் பல நாடுகளின் மீதான எங்கள் சந்தேகங்களை உறுதிப்படுத்தியுள்ளது. இதில் சிக்கியுள்ளவர்கள் மெக்சிகோ போதை மருந்து கடத்தல் கும்பல்களில் இருந்து கொலைகாரர்களை கூலிக்கு அமர்த்த முயன்றுள்ளனர்.
சதித் திட்டம் முறியடிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன்,"சதித் திட்டத்தின் பின்னணியில் ஈரான் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் ஆதரவளிக்கும்” என்றார்.அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் அலி லரிஜானி கூறியதாவது: இது குழந்தைத்தனமான விளையாட்டாக இருக்கிறது. குற்றச்சாட்டுகள் கீழ்த்தரமானவையாக உள்ளன. தங்கள் சொந்தப் பிரச்னைகளை மறைப்பதற்காக ஊடகங்களில் ஊதிப் பெரிதாக்குகிறது அமெரிக்கா.
நாங்கள் சவுதியுடன் நல்ல நட்புறவில் தான் இருக்கிறோம். இதுபோன்று செயல்பட ஈரானுக்கு எவ்வித அவசியமும் இல்லை.ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரமின் மேமன்பரஸ்ட் கூறுகையில், "இந்த நகைச்சுவை நாடகம் அமெரிக்காவால் இட்டுக் கட்டப்பட்டது” என்றார்.
வாஷிங்டனில் உள்ள சவுதி தூதரகம் அமெரிக்காவின் முயற்சிக்குப் பாராட்டும் ஈரானின் செயலுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது. பரபரப்பான இந்தக் காட்சிகளுக்கிடையே உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்கள் தங்கள் பயணங்களில் உஷாராக இருக்கும்படியும், அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளது என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அமெரிக்க போதை மருந்து தடுப்பு ஆணையத்திற்கு மெக்சிகோ போதை மருந்து கும்பல்களில் துப்பு சொல்பவர்கள் - உளவாளிகள் பலர் இருப்பர். அப்படி ஒரு நபரும், அர்பாப்சியாரும் கடந்த மே மாதம் சந்தித்தனர்.
அமெரிக்காவில் உள்ள சவுதி தூதரகத்தைத் தகர்க்கத் தேவைப்படும் வெடி பொருட்கள் பற்றிய விவரங்களை உளவாளியிடம் அர்பாப்சியார் கேட்டார்.
உஷாரான உளவாளி, அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளிடம் கூறினார். அவர்கள் தொடர்ந்து சந்திக்கும்படியும் உரையாடல்களை பதிவு செய்யும் படியும் அறிவுறுத்தினர் இதையடுத்து இருவரும் பல முறை மெக்சிகோவில் சந்தித்தனர்.
அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி அர்பாப்சியாரின் தாக்குதல் திட்டத்தை செயல்படுத்தத் தான் தயார் என உளவாளி தெரிவித்தார்.இதற்கு கூலியாக திட்டத்துக்கு என ஒதுக்கப்பட்ட 1.5 மில்லியன் டொலர் தொகையில் இருந்து உடனடியாக, ஒரு லட்சம் டொலர் உளவாளியின் அமெரிக்க வங்கி கணக்குக்கு ஈரானில் இருந்து செலுத்தப்பட்டது.
"சவுதி தூதர் ஜூபைர் அடிக்கடி செல்லும் உணவு விடுதியில் அவரை நேரடியாக துப்பாக்கியால் சுட்டோ, வெடிகுண்டு மூலம் தாக்கியோ கொல்ல வேண்டும். வேறு வழியில்லை என்றால் அவரோடு உணவு விடுதியில் இருக்கும் 150 பேரும் செத்தாலும் பரவாயில்லை என அர்பாப்சியார் தெரிவித்துள்ளார்.மீதித் தொகைக்கு உத்தரவாதமாக தன்னோடு மெக்சிகோ வர வேண்டும் என உளவாளி அர்பாப்சியாரை வற்புறுத்திய போது அவர் மறுத்து விட்டு, செப்டம்பர் 28ம் திகதி நியூயார்க்கிற்கு விமானத்தில் சென்றார். மறுநாள் அங்கு கைது செய்யப்பட்டார்.
ஈரானில் நிகழ்ந்த இஸ்லாமியப் புரட்சிக்குப் பின் இஸ்லாமிய நெறிமுறைகளைப் பாதுகாக்க, ராணுவத்தின் ஒரு பிரிவாக "புரட்சிப் படை” உருவாக்கப்பட்டது.இப்புரட்சிப் படையின் ஒரு பிரிவு குத் படை. இப்படை வெளிநாடுகளில் இஸ்லாமிய நெறிமுறைகளைப் பரப்ப செயல்படும். இதில் தான் அர்பாப்சியாரின் உறவினர் அப்துல் ரசா ஷாலாய் முக்கிய பதவியில் உள்ளார்.
இவர் தான் அர்பாப்சியாரைத் தொடர்பு கொண்டு சதித் திட்டத்தைச் செயல்படுத்தும்படி கேட்டுக் கொண்டவர். ஷாலாயின் உதவியாளர் தான் கோலம் ஷக்குரி விசாரணையின் போது தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்ட அர்பாப்சியார் தான் இத்தகவல்களைக் கூறியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மோசடிகளை தடுப்பதற்காக புதிய விசா முறை அறிமுகம்.
ஐரோப்பாவின் ஷெங்கன் நிலப்பரப்பில் அமைந்த நாடுகளுக்கு ஐரோப்பியர் அல்லாதவர் செல்ல புதிய விசா முறையை ஐரோப்பிய யூனியன் அறிமுகப்படுத்தியுள்ளது.ஐரோப்பாவின் போர்ச்சுகல் முதல் நோர்வே வரையிலான 25 நாடுகள் கொண்ட நிலப்பரப்பு ஷெங்கன் என அழைக்கப்படுகிறது.
இந்நாடுகளுக்குச் செல்ல இந்நிலப்பரப்பைச் சேர்ந்தவர்களுக்கு எவ்வித விசாவும் தேவையில்லை. ஆனால் பிற நாட்டவர் செல்ல ஷெங்கன் விசா வாங்க வேண்டும். இப்போது இந்த விசாவில் புதிய முறையை ஐரோப்பிய யூனியன் அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி விரல் ரேகைகள், முகப் பதிவு உள்ளிட்ட பயோமெட்ரிக் முறைகளைப் பயன்படுத்தி விசா வழங்கப்படும்.
இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் வெளியிட்ட அறிக்கையில்,“இதன் மூலம் விசா விண்ணப்பங்கள் தங்கு தடையின்றி விரைவில் வழங்கப்படும். விசா மோசடிகளும் தடுக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது 13 கோடி ஷெங்கன் விசாக்கள் வழங்கப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒபாமாவின் வேலைவாய்ப்பு மசோதா: அமெரிக்க செனட் சபை நிராகரிப்பு.
அமெரிக்காவில் வேலையின்மையைக் குறைக்கும் நோக்கில் அதிபர் ஒபாமா கொண்டுவந்த வேலைவாய்ப்பு சட்ட முன்வடிவை அந்நாட்டு செனட் அவை நிராகரித்தது.இதனால் மீண்டும் அதிபராகும் ஒபாமாவின் முயற்சிக்குப் பெருத்த பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.
100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் அவையில் மசோதாவுக்கு ஆதரவாக 50 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் கிடைத்தன. 60 வாக்குகள் ஆதரவாக இருந்தால்தான் மசோதாவை நிறைவேற்ற முடியும்.எனினும் இந்த வாக்கெடுப்பில் தோல்வி ஏற்பட்டுவிட்டதால் மட்டும் இந்த விஷயத்தில் எனது போராட்டம் முடிந்துவிடாது என்று ஒபாமா கூறியுள்ளார். இது தொடர்பாக தமது அடுத்த நடவடிக்கையை கூடிய விரைவில் தொடங்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
செனட் அவையில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 53 உறுப்பினர்கள் உள்ளனர். குடியரசுக் கட்சிக்கு 47 உறுப்பினர்கள் உள்ளனர். 60 பேரின் ஆதரவைப் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக குடியரசுக் கட்சி உறுப்பினர்களுடனும் ஒபாமா பேசி வந்தார். நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று இது தொடர்பாக பிரசாரம் மேற்கொண்டார்.ஆனாலும் குடியரசுக் கட்சியிலிருந்து ஒருவரைக் கூட தமக்கு ஆதரவாக அவரால் இழுக்க முடியவில்லை. அவரது கட்சி உறுப்பினர்களே மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பென் நெல்சன், ஜான் டெஸ்டர் ஆகிய இருவரும் மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர். இவர்கள் தவிர, அவையில் ஜனநாயகக் கட்சியின் தலைவராக இருக்கும் ஹேரி ரீடும் மசோதாவை எதிர்த்து வாக்களித்தார்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை. வேலைவாய்ப்பைப் பெருக்குவதும், பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதுமே இந்த மசோதாவின் நோக்கங்கள் எனக் கூறப்பட்டாலும், 2012-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே இந்த மசோதாவை ஒபாமா கொண்டு வந்திருப்பதாகவும் ஒரு சாரார் குற்றம்சாட்டினர்.மசோதா தோற்கடிக்கப்பட்டிருப்பது ஒபாமா மீண்டும் அதிபராகும் முயற்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.
இந்த மசோதாவின் மொத்த மதிப்பீடு சுமார் ரூ. 20 லட்சம் கோடியாகும். நாட்டில் இருக்கும் 9.1 சதவீத வேலைப்பின்மையைக் குறைக்கும் வகையில் உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது, மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி அளிப்பது போன்ற திட்டங்கள் இந்த மசோதாவில் திட்டமிடப்பட்டிருக்கின்றன.இதனிடையே மசோதாவுக்கு எதிராக குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் வாக்களித்திருப்பதற்கு நிதியமைச்சர் திமோதி கீத்னர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். வேலைவாய்ப்பு மசோதாவை நிராகரித்திருப்பதன் மூலம் நாட்டை வேலையில்லாத் திண்டாட்டத்திலும் பொருளாதார நெருக்கடியிலும் தள்ளப் போகிறார்கள் என்று அவர் எச்சரித்தார்.
பதவி பறிபோய்விடும் என்ற பயத்தில் அமெரிக்காவின் உதவியை நாடிய பாகிஸ்தான் அதிபர்.
பாகிஸ்தானில் பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு தமது ஆட்சியை ராணுவம் கவிழ்த்துவிடும் என்று அதிபர் ஜர்தாரி அஞ்சியதாகவும், அதற்காக அமெரிக்காவின் உதவியை நாடியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.இந்த தகவலை அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் மன்சூர் இஜாஸ் தெரிவித்திருக்கிறார்.பைனான்சியல் டைம்ஸ் இதழில் அவர் எழுதிய கட்டுரையில் இது தொடர்பான நிகழ்வுகளை அவர் விவரித்திருக்கிறார். 
அபோதாபாத்தில் பின்லேடன் கொல்லப்பட்டு ஒரு வாரம் கழித்து மே 9ம் திகதி பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரி ஒருவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார்.பாகிஸ்தான் உளவுப் பிரிவினர், ராணுவத்துக்குத் தெரியாமல் அமெரிக்க அதிகாரிகளிடம் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி ஒரு செய்தியைக் கூற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.தங்களது மண்ணிலேயே ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவம் ஜர்தாரி தலைமையிலான அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடக்கலாம் என்று அவர் அஞ்சினார்.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி பர்வீஸ் கயானியின் மீது அமெரிக்காவின் கண்காணிப்பு இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார். இதன் மூலம் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு போன்ற தவறான வழிகளை ராணுவம் தேர்ந்தெடுக்காது என்று அவர் நம்பினார்.அமெரிக்கா சார்பில் தனது செய்தியைப் பெறுவதற்கு அப்போதைய அமெரிக்க கூட்டுப்படைத் தலைமைத் தளபதியாக இருந்த அட்மிரல் மைக் முல்லனே சரியான நபர் என்றும் பாகிஸ்தான் அதிகாரி என்னிடம் தெரிவித்தார். ஒபாமாவிடம் மட்டுமல்லாமல் கயானியுடனும் அவரால் நேரடியாகப் பேசி ஜர்தாரியின் செய்தியைத் தெரிவிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
அந்தத் தொலைபேசி அழைப்புக் பிறகு அடுத்த இரண்டு நாள்களில் இதே விஷயம் தொடர்பாக பல தொலைபேசி அழைப்புகளும், மின்னஞ்சல்களும் எனக்கு வந்தன.இதையடுத்து ஆப்கானிஸ்தானின் ஹக்கானி குழுவுக்கு உதவி செய்து வருவதாகக் கூறப்பட்ட ஐஎஸ்ஐ அமைப்பின் எஸ் பிரிவை ஒழிக்கும் வகையில் புதிய உறுதியை ஒபாமா நிர்வாகத்துக்கு ஜர்தாரி அளித்தார்.இந்த உறுதிமொழி ஆவணம் மே 10ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு முல்லனிடம் அளிக்கப்பட்டது. மறுநாள் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் வெள்ளை மாளிகையில் முல்லனைச் சந்தித்தனர்.
ஆனாலும் பாகிஸ்தான் உளவுப் பிரிவு அதிகாரிகள், ராணுவத் தளபதிகள் உள்ளிட்ட யாரும் முல்லனின் எச்சரிக்கையைப் பொருள்படுத்தவில்லை, அவரது ஆலோசனையின்படியும் நடக்கவில்லை என்பதை அடுத்தடுத்த நிகழ்வுகள் உணர்த்தின.இதன் பிறகு தனது ஓய்வு பெறும் நிகழ்வின் போது செனட் குழுவுக்கு அளித்த உறுதிமொழி ஆவணத்தில்,"ஆப்கானிஸ்தானில் செப்டம்பர் 11ம் திகதி 77 சர்வதேசப் படை வீரர்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பு உதவியிருக்கிறது என்பதற்கான நம்பகமான தகவல்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன என்று குறிப்பிட்டார்.
அபோதாபாத்தில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவுக்குப் பதிலடி தரும் வகையில் ஐ.எஸ்.ஐ செயல்பட்டு வருகிறது என்றும் முல்லன் குற்றம்சாட்டினார்.ஐ.எஸ்.ஐ அமைப்பின் எஸ் பிரிவு பயங்கரவாதத்துக்குத் துணைபோகும் அமைப்பு என்று அமெரிக்கா அறிவிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. இதைச் செய்யாமல் ஹக்கானி கூட்டமைப்பைத் தடுக்கும் அனைத்து முயற்சிகளும் பலனளிக்காது என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மியான்மரில் கைதிகள் விடுதலை.
மியான்மர் அரசு அறிவித்தபடி பொது மன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகளை நேற்று முதல் விடுவிக்கத் துவங்கியது.இந்த விடுதலை அரசியல் கைதிகளுக்கும் வழங்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. மியான்மரில் ராணுவ ஆட்சி அமலில் இருந்த போது அரசை எதிர்த்த அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மியான்மர் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் விலக்கப்பட வேண்டுமானால் அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட விஷயங்களில் அந்நாட்டு அரசு கவனம் செலுத்த வேண்டும் என அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் தெரிவித்திருந்தன.இந்நிலையில் நேற்று முன்தினம் மியான்மர் அரசு 6,300 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாகவும், விரைவில் அவர்கள் விடுவிக்கப்படுவர் எனவும் தெரிவித்தது. இந்த விடுவிப்பு நேற்று முதல் துவங்கியது.நாட்டின் பிரபல நகைச்சுவை நடிகரும், பர்மிய இயக்குனருமான ஜர்கனார் நேற்று முதலில் விடுவிக்கப்பட்ட குழுவில் வெளியே வந்தார்.
2008ல் மியான்மரைத் தாக்கிய சூறாவளியை அடுத்து, அரசின் நிவாரணப் பணிகள் குறித்து அவர் விமர்சனம் செய்ததால் 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.நேற்று விடுதலையான அவர் இதுகுறித்துக் கூறுகையில்,"நான் மீண்டும் அதுபோல விமர்சனம் செய்தால் உள்ளே போக வேண்டியது தான். நான் இப்போது மகிழ்ச்சியாக இல்லை. என்னைப் போல சிறையில் உள்ள அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்” என்றார்.
மியான்மர் ஜனநாயகத் தலைவர் அவுங் சான் சூச்சியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"120 பேர் நேற்று விடுவிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது” என்றார்.எனினும் 1988 புரட்சியில் ஈடுபட்டோர் உள்ளிட்ட அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
அமெரிக்க செனட்டில் சீன நாணயத்திற்கு எதிரான மசோதா நிறைவேற்றம்: சீனா மிரட்டல் எச்சரிக்கை.
சீன நாணயத்தின் மதிப்பை வலுக்கட்டாயமாக உயர்த்த வழிசெய்யும் மசோதா நேற்று அமெரிக்க செனட் சபையில் நிறைவேறியது.பிரதிநிதிகள் சபையில் மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள சீனா, இம்மசோதாவால் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப் போர் உருவாகும் என எச்சரித்துள்ளது.
சீனா தனது யுவான் நாணயத்தை டொலருக்கு எதிரான மதிப்பில் தொடர்ந்து குறைத்தே வைத்துள்ளது. இதனால் சீன ஏற்றுமதியாளர்களுக்கு அளவற்ற லாபம் கிடைப்பதாகவும், அமெரிக்காவில் ஏற்கனவே நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கும் முயற்சி இது எனவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
ஆனால் அமெரிக்க வேலையில்லா திண்டாட்டத்திற்கு தனது நாணய மதிப்பு காரணமல்ல எனவும், 2005 முதல் இதுவரை யுவானின் மதிப்பை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் சீனா மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் டொலருக்கு எதிராக வெளிநாட்டு நாணயங்களின் மதிப்பைக் குறைப்பதற்காக தங்களின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு மானியம் வழங்கும் நாடுகளின் ஏற்றுமதிப் பொருட்கள் மீது அமெரிக்கா வரி விதிக்க வழி செய்யும் மசோதா நேற்று செனட் சபையில் நிறைவேறியது.ஆனால் இம்மசோதா எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினரின் பிடியில் உள்ள பிரதிநிதிகள் சபையில் நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ஜான் பாய்னர்,"இம்மசோதாவை நான் ஓட்டுக்கு விடப்போவதில்லை. இதனால் உலகின் முதல் மற்றும் மூன்றாம் பொருளாதார நாடுகளிடையிலான உறவுகள் பாதிக்கப்படும்” என்றார்.இம்மசோதாவை எதிர்க்கும் நிபுணர்கள், சீனப் பொருட்களின் மீதான வரி அதிகரிப்பால் வியட்நாம், மலேசியா போன்றவை தான் பயனடையும், அமெரிக்கா அல்ல என்றும், அப்படியே சீனப் பொருட்களின் விலை அதிகரித்தால் அமெரிக்க குடும்பங்களையும் தொழில்களையும் தான் பாதிக்கும் என்றும் கூறுகின்றனர்.
ஆதரவாளர்கள் இதன் மூலம் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும், அமெரிக்க ஏற்றுமதி அதிகரிக்கும் என்கின்றனர். அதிபர் ஒபாமா இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.மசோதாவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா இதுபோன்ற நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கிடையில் வர்த்தகப் போரைத் தான் உருவாக்கும் என மிரட்டியுள்ளது.
பாராசூட் செயலிழந்ததால் பரிதாபமாக உயிரிழந்த பாட்டி.
விமானத்தில் இருந்து குதிக்கும் சாதனையின் போது பாராசூட் எதிர்பாராவிதமாக கோளாறு செய்ததால் 75 வயது பாட்டி, பயிற்சியாளர் பரிதாபமாக பலியாயினர்.
அமெரிக்காவின் நெவாடா மாநிலம் லாஸ் வேகாஸ் நகரை சேர்ந்த பாட்டி கிளாடட் போர்ட்டர்(75). விமானத்தில் இருந்து குதிக்கும் ஸ்கை டைவிங் செய்ய வேண்டும் என்பது இவரது நீண்ட கால ஆசை.இதற்கு ஏற்பாடு செய்யுமாறு கணவர் ஜிம்மிடம் கடந்த 20 ஆண்டுகளாக கூறி வந்துள்ளார். அவரும் ஏதேதோ காரணம் சொல்லி தட்டிக் கழித்து வந்தார்.
பாட்டி கிளாடட்டுக்கு கடந்த மாதம் பிறந்த நாள் வந்தது. அவருக்கு சூப்பர் பர்த்டே கிப்ட் தருவதாக பேத்திகள் உறுதி அளித்தனர். அவருக்கு தெரியாமல் ஸ்கை டைவிங் சாகசத்துக்கு ஏற்பாடு செய்தனர்.ஜிம் போன்ஸ்பெக்(60) என்பவரது உதவியுடன் விமானத்தில் இருந்து குதிப்பதாக முடிவானது. பல படங்களில் ஹீரோவுக்கு டூப்பாக இவர் விமான சாகச நிகழ்ச்சிகளை செய்துள்ளார்.
நெவாடாவின் மெஸ்கொயட் பகுதியில் சாகச நிகழ்ச்சி கடந்த 9ம் திகதி நடந்தது. கணவர் ஜிம் மற்றும் பிள்ளைகள், பேரன், பேத்திகள் ஆகியோர் பாட்டியை வாழ்த்தி விமானத்தில் ஏற்றி வைத்தனர்.பாட்டி மற்றும் பயிற்சியாளருடன் பிரதான பாராசூட், துணை பாராசூட் என 2 பாராசூட்கள் இணைக்கப்பட்டன. நடுவானில் விமானம் பறக்கும்போது, 2 பாராசூட்களுடன் பாட்டியை அணைத்தவாறு பயிற்சியாளர் போன்ஸ்பெக் குதித்தார். சிறிது நேரம் மிதந்த பிறகு பாராசூட்களை விரிக்க முயற்சித்தார். துரதிர்ஷ்டவசமாக 2 பாராசூட்களும் விரியவில்லை.
பல அடி உயரத்தில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். சம்பவ இடத்திலேயே பயிற்சியாளர் இறந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பாட்டி கிளாடட் இறந்தார்.போன்ஸ்பெக் 30 ஆண்டு காலமாக ஸ்கை டைவிங் செய்கிறார். 11 ஆயிரம் முறை விமானத்தில் இருந்து குதித்திருக்கிறார். பாராசூட் கோளாறு காரணமாக இறந்தது துரதிர்ஷ்டவசம் என்கின்றனர் அவரது நண்பர்கள்.
கனடாவில் சர்வர் பிரச்னை: விசாரணைக்கு ரிம் நிறுவனம் உத்தரவு.
ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட பிளாக்பெரி செல்போன் மெசேஜ் சேவை நேற்று மதியம் சரி செய்யப்பட்டது.
‘ரிசர்ச் இன் மோஷன்’ (ரிம்) நிறுவனத்தின் பிளாக்பெரி போனில் அனுப்பப்படும் மெசேஜ்கள் ரகசிய குறியீடுகள் என்பதால் மற்றவர்கள் படிக்க முடியாது.எனவே இதற்கு தனி வரவேற்பு உள்ளது. நேற்று முன்தினம் இன்டர்நெட் மற்றும் மெசேஜ் சேவைகள் துண்டிக்கப்பட்டன.
இதனால் உலகம் முழுவதும் உள்ள பிளாக்பெரி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். ஏராளமான வாடிக்கையாளர்கள் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தங்கள் புகாரை பதிவு செய்தனர்.பிளாக்பெரி மெசேஜ்கள் கனடாவில் உள்ள சர்வர் வழியாக மற்றவர்களுக்கு செல்லும். அதில் ஏற்பட்டுள்ள பழுதுதான் பிரச்னைக்கு காரணம் என தெரிவித்த ரிம் நிறுவனம் நேற்று அதை சரி செய்தது. அத்துடன் பழுது ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
தாய்லாந்தில் புயல் வெள்ளத்துக்கு 269 பேர் பலி.
தாய்லாந்து நாட்டில் மழை வெள்ளத்துக்கு 269 பேர் பலியாகி உள்ளனர். 80 லட்சம் பேர் வீடுகள் இழந்து தவித்து வருகின்றனர்.
தாய்லாந்து நாட்டில் கடந்த 3 மாதங்களாக பெய்து வரும் மழையால் பல மாநிலங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. 60 மாநிலங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் உள்ள 30 மாநிலங்களில் நிலைமை மெல்ல சீரடைந்து வருகிறது. மத்திய பகுதி மாநிலங்களில் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது.
மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 269 பேர் பலியாகி உள்ளனர். 80 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பல மாநிலங்களில் 50க்கும் அதிகமான நெடுஞ்சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.இதனால் பஸ் போக்குவரத்து முடங்கிவிட்டது. தண்டவாளங்களும் தண்ணீரில் மூழ்கியிருப்பதால், ரயில்கள் இயக்கப்படவில்லை. இந்த மாத மத்தியில் மழைக்காலம் முடியும் என்று அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கனில் கொடுமையான முறையில் கைதிகள் சித்ரவதை.
ஆப்கனில் பல்வேறு சந்தேகங்களின் பேரில் கைது செய்யப்படுபவர்கள் மிகவும் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்படுகின்றனர் என்று ஐ.நா சபையின் உதவி அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக தலிபான்களும் வெவ்வேறு பழங்குடி குழுக்களும் ஆயுதம் எடுத்துப் போராடி வருகின்றன. இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டு பொலிஸ் மற்றும் ராணுவ விசாரணைக் கூடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.அவர்கள் தான் மிகவும் கொடூரமாக நடத்தப்படுகின்றனர். ஆனால் இதை ஆப்கானிஸ்தான் அரசு ஊக்குவிப்பதாகவோ உடந்தையாக இருப்பதாகவோ நிரூபிக்க ஆதாரம் ஏதும் இல்லை என்று கூறும் அந்த அறிக்கை இந்தச் சம்பவங்கள் குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்திருப்பதாகத் தெரிவிக்கிறது.
இப்படி சித்திரவதை செய்வதை ஆப்கானிஸ்தானத்துச் சட்டமும் தடை செய்திருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் செய்து நீதிமன்றங்கள் மூலம் நிவாரணம் பெற வழி இருக்கிறது. எனவே அவர்களுக்கு சட்ட உதவிக்குழுக்களின் மூலம் உதவ ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.இந்த அறிக்கையை அடுத்து சம்பந்தப்பட்ட முகாம்களுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விசாரணையைத் தொடங்கிவிட்டது அரசு.
நாகரிகம் உள்ள எந்த நாடுமே சித்திரவதையை அங்கீகரிப்பதில்லை என்றாலும் ராணுவம் மற்றும் பொலிசார் தங்களிடம் சிக்கிவிட்டவர்களை சித்திரவதை செய்துதான் உண்மைகளை வரவழைக்கின்றனர் அல்லது தாங்கள் கூறும் குற்றச்சாட்டுகளை ஏற்கவைக்கின்றனர் என்பது கண்கூடு.தேசிய பாதுகாப்பு இயக்கம் என்ற ராணுவப் படைப்பிரிவும் ஆப்கன் தேசிய பொலிஸ் படைப்பிரிவும் நடத்தும் விசாரணை முகாம்களில்தான் இந்தக் கொடுமைகள் நடந்துள்ளன.
அரசுக்கு எதிராக செயல்படுவோர் என்ற சந்தேகம் ஏற்பட்டாலும்கூட அவர்கள் இந்த முகாம்களுக்கு வரவழைக்கப்படுகின்றனர். சரியானபடி ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் அவர்களுடைய கைகளில் விலங்கு பூட்டி உயரமான இரும்புக் கம்பங்களில் அப்படியே தொங்கவிடுகின்றனர்.உடலின் எடை முழுவதையும் கை மணிக்கட்டு மட்டுமே தாங்க நேருவதால் ஒடிந்துவிடும் அளவுக்கு அவர்களுக்கு வலி ஏற்படுகிறது. இதனால் அவர்கள் வலி தாளாமல் அலறுகின்றனர். அப்படி கத்தினால் மேலும் அடி விழுகிறது.
பருமன் குறைவான அதே சமயம் கனமான ரப்பர் குழாய்களால் உடல்களில் அடிக்கின்றனர். இதனால் ரத்தக்கட்டு ஏற்படும் அளவுக்கு உடலில் காயம் ஏற்படுகிறது. அடியில் சிலருக்கு உடலிலிருந்து சதை பிய்ந்து ரத்தம் பீறிடுகிறது. மின்சார வயர்களால் காலின் அடியில் பாதத்தில் தொடர்ந்து அடிக்கின்றனர்.18 வயதுக்குக் குழந்தைகளாக இருந்தாலும் இந்த சித்திரவதைகளுக்கு உள்படுத்தப்படுகின்றனர். கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் வரவில்லை என்று நினைத்தால் பிறப்புறுப்புகளில் மின்சார வயரை இணைத்து அவ்வப்போது மின்சாரத்தைப் பாய்ச்சி அதிர்ச்சி தருகின்றனர்.
கைகளாலும் கூரிய ஆயுதங்களாலும் பிறப்புறுப்புகளை தாக்கியும் திருகியும் வேதனை ஏற்படுத்துகின்றனர். இரண்டு கைகளையும் நேராக நீட்டிக்கொண்டு முழங்காலை மடித்து அப்படியே பெஞ்சில் உட்கார்ந்திருப்பது போன்ற பாவனையில் ஆடாமல் அசையாமல் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்குமாறு கூறுகின்றனர்.அப்போது கைகளை நீட்டினாலோ முழங்கால்களை நேராக்கிக் கொண்டாலோ மூர்க்கத்தனமாக அடிக்கின்றனர். சில நிமிஷங்களுக்குக் கூட அவர்கள் சொல்லும் நிலையை மாற்ற அனுமதிப்பதில்லை. சிலரிடம் பேசிக் கொண்டே குறடால் அவர்களுடைய கால் கட்டைவிரல் நகங்களைப் பறிக்கின்றனர்.
இந்த நரக வேதனையால் அவர்கள் போடும் கூச்சல் அக்கம் பக்கத்தில் இருப்போருக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இது போக ஆபாசமாகப் பேசுவதற்குக் குறைவே இல்லை.பசிக்கு சோறு கொடுப்பதில்லை, தாகம் எடுத்தால் தண்ணீர் தருவதில்லை. தூங்க விடுவதில்லை. குளிர்ந்த நீரை முகத்தில் ஊற்றி தூக்கத்தைக் கலைத்து கேள்விகேட்கின்றனர். வலி தாளாமல் அரற்றினால் அதற்கு கூடுதலாக தண்டனை தருகின்றனர்.
இவையெல்லாம் அவர்கள் கேட்கும் தகவல்களைத் தரும்வரை தொடருகின்றனர். தலிபான்கள் குறித்து தகவல்களைக் கூறுவதாகக் கூறினாலோ, அவர்கள் சொல்லும்படிக்கு ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்திடுவதாகக் கூறினாலோ உடனே சித்திரவதையை நிறுத்திவிடுகின்றனர். பெண்களை பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப் போவதாக மிரட்டியே பணியவைக்கின்றனர்.அக்டோபர் 2010 முதல் ஆகஸ்ட் 2011 வரையில் சுமார் 379 பேரிடம் ரகசியமாக விசாரணை நடத்தி இந்தத் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. சராசரியாக 40 சதவீதம் பேர் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
இந்தச் சம்பவங்கள் பற்றிய அறிக்கை இப்போது ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படை தளபதிகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. முகாம்களில் சித்திரவதை நடைபெறாமல் தடுக்குமாறும் விசாரணைக்கு அழைத்துச் செல்வோரை மனிதாபிமானத்துடன் நடத்துமாறும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
மரண தண்டனைக்கு இத்தாலி கடும் எதிர்ப்பு.
மனித உரிமைக்கு எதிரான மரண தண்டனையை உலக நாடுகள் நிறுத்த வேண்டும் என்று இத்தாலி கூறியுள்ளது.
மரண தண்டனைக்கு எதிரான உலக தினத்தை முன்னிட்டு இத்தாலி வெளியுறவுத் துறை அமைச்சர் பிரான்கோ பிராடினி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது: மனிதர்களின் கவுரவம், உரிமையை உறுதி செய்யும் வகையில் மரண தண்டனையை இத்தாலி ரத்து செய்துள்ளது.அதேபோல் மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும். குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது பொதுமக்களுக்கு எந்த வகையிலும் உதவாது.
எனவே மரண தண்டனையை இத்தாலி கடுமையாக எதிர்க்கிறது. இதற்கு வாடிகனும் முழு ஆதரவு அளித்துள்ளது. தவிர எதிர்க்கட்சியினரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.உலகளவில் சீனா, ஈரான், சவுதி அரேபியா, அமெரிக்கா, ஏமன் போன்ற நாடுகளில் தான் மரண தண்டனை அதிகமாக நிறைவேற்றப்படுகிறது. இதை அந்த நாடுகள் நிறுத்த வேண்டும் என்று சர்வதேச பொது மன்னிப்பு கழகம் வலியுறுத்தி வருகிறது.
கடாபியின் மகனை நெருங்கிய புரட்சி படை.
லிபியாவில் கடாபியின் மகனை புரட்சி படை நெருங்கியது. அதிபர் கடாபிக்கு எதிராக புரட்சி படை தாக்குதல் நடத்தி லிபியாவை கைப்பற்றியது.இருந்தாலும் கடாபியின் சொந்த ஊரான சிர்த் நகரம் மட்டும் அவரது ராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது. அதன் பெரும் பகுதியை புரட்சி படை வென்று தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
சிர்த் நகரில் உள்ள 2 மாவட்டங்கள் கடாபியின் மற்றொரு மகன் மோடாசிம் கடாபியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர் கடாபியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார். எனவே அதையும் கைப்பற்றும் நடவடிக்கையில் புரட்சிபடை தீவிரமாக உள்ளது. அங்கு ராணுவத்தினருடன் கடும் சண்டையில் ஈடுபட்டு உள்ளது.இதற்கிடையே கடாபியின் மகன் மோடாசிம்மை நெருங்கி விட்டதாக புரட்சி படை தளபதி மொகமது ஆஜ்மீர் அறிவித்துள்ளார். மோடாசிம் தனது ஆதரவாளர்களுடன் பாதுகாப்புடன் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
எனவே அவரது ஆதர வாளர்களின் வீடுகளில் தேடும் பணி நடக்கிறது.வாகனங்களில் சோதனையிடப்பட்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.கடாபியின் மனைவி, மகள், 2 மகன்கள் குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டனர். ஆனால் கடாபி மட்டும் லிபியாவில் பதுங்கி இருக்கிறார். அவர் தனது சொந்த ஊரான சிர்த் நகரில் பாதுகாப்புடன் தங்கி இருப்பதாக புரட்சி படையினர் கருதுகின்றனர். எனவே அவரை பிடிக்க சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.
கியாஸ் இறக்குமதியில் முறைகேடு: உக்ரைன் முன்னாள் பிரதமருக்கு சிறைத்தண்டனை.
உக்ரைன் நாட்டின் முன்னாள் பெண் பிரதமர் பூலியா திமோஸ் கென்கோ. இவர் பதவியில் இருந்த போது கடந்த 2009ம் ஆண்டு ரஷியாவில் இருந்து கியாஸ் இறக்குமதி செய்தார்.அப்போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரஷியாவில் இருந்து கியாஸ் இறக்குமதி செய்யும்படி தனியார் நிறுவனங்களை கட்டாயப்படுத்தினார்.
இதன் மூலம் அவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் மீது கிவ் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி திமோஸ் கென்கோவுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்புக்கு ஐரோப் பிய யூனியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இது திமோஸ் கென்கோவுக்கு அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது என ஐரோப்பிய யூனியனின் தலைவர் காத்ரின் ஆஸ்தான் தெரிவித்துள்ளார்.
ரஷிய பிரதமர் விளாடிமிர் புதின் கூறும் போது, இந்த தீர்ப்பு தனக்கு குழப்பமடைய செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.அதே நேரத்தில் திமோஸ்கென் கோவுக்கு வழங்கப்பட்டுள்ள 7 ஆண்டு ஜெயில் தண்டனை தீர்ப்பு இறுதியானது அல்ல என்று உக்ரைனின் அதிபர் விக்டர் யானுகோவ்ச் தெரிவித்துள்ளார்.
ரயிலில் இளம்பெண் சித்ரவதை: தட்டிக் கேட்ட நபர் படுகொலை.
பாரிஸ் மெட்ரோ ரயிலில் இளம்பெண்ணை சித்ரவதை செய்த வாலிபரை இளைஞர் ஒருவர் தட்டி கேட்டதால் ரயில் முன்பு தள்ளி கொலை செய்யப்பட்டார்.இதுதொடர்பாக வாலிபரை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மெட்ரோ ரயிலில் ராஜிந்தர் சிங்(33) என்பவர் கடந்த மாதம் 29ம் திகதி பயணம் செய்தார்.ரயில் பெட்டியில் ஒரு ஆணும் இளம்பெண்ணும் இருந்தனர். திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பெண்ணை அடித்து உதைத்த அந்த வாலிபரை, பஞ்சாபை சேர்ந்த ராஜிந்தர் சிங் தடுத்தார். பின்னர் அனைவரும் கிரிமி ரயில் நிலையத்தில் இறங்கினர்.
ரயிலில் சண்டை போட்ட அந்த வாலிபர் திடீரென ராஜிந்தர் சிங்கை தண்டவாளத்தில் தள்ளி விட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்து சிங் இறந்ததாக ரயில் நிலையத்தில் நேரில் பார்த்தவர்கள் கூறினர்.இதுகுறித்து பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் சம்பந்தப்பட்ட அந்த பெண் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இந்நிலையில் ராஜிந்தரை கொன்றதாக சந்தேகப்படும் வாலிபரை ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கமெரா மூலம் கண்டுபிடித்து பொலிசார் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட ராஜிந்தர் 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் வந்தார். பாரிசில் உள்ள பீட்சா நிறுவனத்தில் வேலை செய்தார். வீடு வீடாக சென்று பீட்சா டெலிவரி செய்து வந்தார். சம்பளத்தை பஞ்சாபில் உள்ள குடும்பத்தாருக்கு அனுப்பி வைத்தார்.பொது இடத்தில் இளம்பெண்ணை சித்ரவதை செய்த வாலிபரை தட்டி கேட்டதால் சிங்கை ஹீரோவாக வர்ணித்து பிரான்ஸ் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
தடையை மீறி திரைப்படத்தில் நடித்த பெண்ணுக்கு சிறைத்தண்டனை.
தடையை மீறி அவுஸ்திரேலிய திரைப்படத்தில் நடித்த ஈரான் நடிகைக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. 90 சவுக்கடி தரவும் உத்தரவிட்டது.ஈரானை சேர்ந்த பிரபல நடிகை மர்சே வாபமர். அந்நாட்டில் திரைப்படங்களில் நடிக்க நடிகைகளுக்கு அரசின் கட்டுப்பாடு உள்ளது.அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரை சேர்ந்த சியான் பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தின் “மை டெகரான் ஃபார் சேல்” என்ற படத்தில் மர்சே நடித்தார்.
அந்த பட நிறுவனத்தின் படங்களுக்கு ஈரானில் தடை உள்ள நிலையில் மர்சே நடித்த அந்த திரைப்படம் 2010ம் ஆண்டில் பல சர்வதேச விருதுகளை பெற்றது.எனினும் கட்டுப்பாட்டை மீறியதாக நடிகை மர்சே மீது ஈரான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நேற்று அளித்த தீர்ப்பில் நடிகைக்கு ஓராண்டு சிறையும், 90 சவுக்கடியும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF