
பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர் அவர் அபோதாபாத்தில் வசிப்பதனை உறுதி செய்யும் பொருட்டு அவ்விடத்தில் போலி மருத்துவ முகாமொன்றினை நடத்தி அமெரிக்க உளவுப் பிரிவினருக்கு தகவல் வழங்கிய வைத்தியருக்கு தகுந்த தண்டனை வழங்கவேண்டுமென சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சகில் அப்ரிடி என்ற குறித்த வைத்தியர் அந்நாட்டு உளவுப் பிரிவினரால் ஒசாமா சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது கடும் சித்திரவதைக்குள்ளாகி வருவதாகவும், அவருக்கென வாதாட வழக்கறிஞர் ஒருவரைக்கூட நியமிக்க அந்நட்டு உளவுப் பிரிவினர் அனுமதிக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டால் தூக்குத்தண்டனை வழங்கப்படாலாம் என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் அவரை விடுதலை செய்யும் படியும், அவரை அமெரிக்காவில் குடியமர்த்த தாம் தயாராகவுள்ளதாகவும் அமெரிக்க அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும் பாகிஸ்தான் இதற்கு இணங்க வில்லையெனத்தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே பாகிஸ்தானில் வைத்து ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் போது, சேதமடைந்த அமெரிக்க ஹெலிகொப்டரை பரிசோதிக்க சீன பொறியியலாளருக்கு பாகிஸ்தான் அனுமதியளித்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இவ்விரு நாடுகளுக்கிடையேயான உறவு சுமூகமான நிலையில் இல்லாதபோது இச்சர்ச்சை கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF