Wednesday, October 19, 2011

இன்றைய செய்திகள்.

முஸம்மில் கடமைகளைப் பொறுப்பேற்க விடாது அரசாங்கம் தடை விதிப்பு!- ஐ.தே.க குற்றச்சாட்டு.

கொழும்பு மாநகர சபை புதிய மேயர் தனது கடமைகளை பொறுப்பேற்பதை தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி இன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
நடைபெற்று முடிந்த தேர்தலில் கொழும்பு மாநகர சபையை ஐ.தே.க. கைப்பற்றியது. அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற ஏ.ஜே.எம். முஸம்மில் நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
பதவிப் பிரமானம் செய்தவுடன் முஸம்மில் தமது கடமைகளைப் பொறுப்பேற்க விரும்பியதாகவும் அதற்கு அரசாங்கம் தடை விதித்ததாக தெரிவித்துள்ள ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, கொழும்பு மாநகர சபை இன்னும் விசேட ஆணையாளரின் அதிகாரத்தின் கீழ் உள்ளது. இது பாரதூரமானதாகும் எனவும் கூறியுள்ளார்.
ரவி கருணாநாயக்க எம்.பியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பேசிய உள்ளூராட்சி பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக்க, இத்தகைய பிரச்சினை குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும் இத் தேர்தலில் மக்களின் அபிப்பிராயத்திற்கு அரசாங்கம் தலைவணங்குவதாகவும் கொழும்பு மாநகர சபையை ஐ.தே.க. எவ்வித பிரச்சினையுமின்றி நிர்வகிக்க அரசாங்கம் உதவி செய்யும் எனவும் தெரிவித்தார்.
அதேவேளை பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைத்து ஐ.தே.கவின் பண்டாரவளை மாநகர சபை மேயரை அரசாங்கம் தொந்தரவுக்கு உள்ளாக்குவதாகவும் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியதற்கு இது தொடர்பாக முறையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் இவ்விடயத்தை ஆராய்ந்து பார்க்கத் தயார் எனவும் அமைச்சர் இந்திக பண்டாரநாயக்க பதிலளித்துள்ளார்.
அவசியம் கருதி எந்த வாகனத்தையும் செலுத்தலாம்!- பொலிஸ் மா அதிபர் ரணிலுக்கு பதில்.


பொலிஸ் வாகன சாரதிகள் பொலிஸ் வாகனங்களை மாத்திரமல்ல. ஏனைய வாகனங்களையும் செலுத்தமுடியும் என்று இலங்கையின் பொலிஸ் மா அதிபர் என் கே இளங்கக்கோன் தெரிவித்துள்ளர்.இது தொடர்பில் அவர் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அண்மையில் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் வரப்பிரசாத பிரச்சினை ஒன்றை எழுப்பியிருந்தார்.அதில், பொலிஸ் சாரதிகள் பொலிஸ் வாகனங்களை மாத்திரமே செலுத்தலாம் என்று பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்திருப்பது தமது வரப்பிரசாதத்தை மீறும் செயல் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவசர தேவைகளை கருதி பொலிஸ் சாரதிகள் ஏனைய வாகனங்களையும் செலுத்த முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.இதனையடுத்தே தற்போது பொலிஸ் மா அதிபர் தமக்குரிய பதிலை ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ளார்.
அமெரிக்க அழைப்பாணை... ஆடிப்போன மஹிந்த ராஜபக்ச!

அமெரிக்க நீதிமன்றத்தின் உத்தரவால் ஆட்டம் கண்டு போயிருக்கிறார் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச.ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்க விசாரணைக் குழு ஒன்றை அமைத்தபோது, இலங்கையில் இருந்து உயிர் தப்பித்து வந்தவர்கள், அந்தக் குழுவிடம் தங்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
அதில் முக்கியமானவர் வத்சலாதேவி. புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கேணல் ரமேஷின் மனைவி இவர். 'என் கணவரின் கொலைக்குக் காரணமான ராஜபக்சவைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்’ என்று நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் இவர் வழக்குத் தொடர்ந்தார். இது தொடர்பான  அழைப்பாணையை ராஜபக்ச வாங்கவில்லை.
இந்தச் சூழ்நிலையில், டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன் என்பவர், 'என் உறவினர்களை சர்வதேசப் போர் விதிமுறைகளுக்கு மாறாக ராஜபக்ச உத்தரவுப்படி அவரது இராணுவத்தினர் கொன்று குவித்து இருக்கிறார்கள். அதனால், அவரிடம் விசாரணை நடத்தி, அவருக்கு தண்டனை வழங்க வேண்டும்.’ என்று அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.அது தொடர்பாக, ராஜபக்சவுக்கு நீதிமன்றம் மூலமாக அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால், அதிபர் தரப்பு  அழைப்பாணையை வாங்காமல் திருப்பிவிட்டது.இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்டவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புரூஸ் பெயின், நீதிமன்றத்தில் இருந்து எந்த உத்தரவு அனுப்பினாலும், அதை ராஜபக்ச அரசு மதிப்பதே கிடையாது. அந்த உத்தரவைப் பெற்றுக்கொள்வதும் கிடையாது.
அதனால், இலங்கையில் இருந்து வெளிவரும் இரண்டு முன்னணிப் பத்திரிகைகள் மற்றும் 'தமிழ்நெற்’ இணையத்தளத்தின் முதல் பக்கத்தில் இந்த நீதிமன்ற உத்தரவை வெளியிட உத்தரவிட வேண்டும். அதையே ராஜபக்சவுக்கு அனுப்பிய அழைப்பாணையாக அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.விசாரித்த நீதிபதி கோடெல்லி, ராஜபக்சவுக்கு அனுப்பிய  அழைப்பாணையை இலங்கையில் இருந்து வெளிவரும் செய்தித்தாள்களிலும், இணையத்தளத்திலும் வெளியிட உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின்படி அவை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன.
அமெரிக்க நீதிமன்றத்தில் அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு இந்த அறிவிப்பு மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.ராஜபக்ச மீது இது போன்ற ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு அவருக்கு  அழைப்பாணைகள் அனுப்பப்பட்டும், இப்போதுதான் முதல் முறையாக இப்படி ஓர் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்து இருக்கிறது.
இனி எல்லா வழக்குகளிலுமே இதையே முன் உதாரணமாகக் காட்டி ராஜபக்சவுக்கு பகிரங்கமாக அழைப்பாணை வெளியிடக் கோரப்போகிறோம். அவற்றுக்கு ராஜபக்ச பதில் சொல்லியே ஆக வேண்டும்!'' என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.அமெரிக்க நீதிமன்றம் போட்ட கிடுக்கிப்பிடி உத்தரவு, ராஜபக்சவின் பதவிக்கே ஆப்பு வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!
ஜூனியர் விகடன்.
அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் பாதுகாப்புச் செயலாளருடன் பேச்சுவார்த்தை.

இலங்கைக்க விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்களுக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவும் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்க காங்கிரஸ் சபையின் மூன்று உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
சனல்4  ஊடகத்தினால் வெளியிடப்பட்ட காணொளிக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட காணொளியும் அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது தடவையாக அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பலம் பொருந்திய கைகளே சகோதரனின் கொலைக்குக் காரணம்!- பாரதவின் சகோதரர்கள் குற்றச்சாட்டு.

பாரத லக்ஸ்மனுடைய சேவையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மறந்துவிட்டது. பலம்பொருந்திய கைகளே அவருடைய கொலைக்குக் காரணம் என கொலன்னாவ துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பாரத லக்ஸ்மனின் சகோதரர்கள் இன்று தெரிவித்தனர்.கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் பாரதவின் சகோதரர்களான அசோக பிரேமச்சந்திர, சுவர்ணா குணரத்ன, சுனெத்ரா அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.இதன்போது பாதுகாப்புத் தரப்பினர், சுதந்திரக் கட்சியினர் மீதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீதும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.
அங்கு கருத்து தெரிவித்த பாரதவின் மூத்த சகோதரி சுவர்ணா குணரத்ன,
நிராயுதபாணியாகச் சென்ற எமது சகோதரனைக் கொல்வதற்கு வாகனமொன்றில் ரி 56 ரக துப்பாக்கிகள் 14 கொண்டுவரப்பட்டமை எவ்வாறு? சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் ஓரிரு மணித்தியாலங்களுக்குள் இந்தியாவுக்கு எப்படித் தப்பிச் சென்றனர். ஒரு சில மணித்தியாலங்களில் கடவுச்சீட்டு, வீசா பெற முடியுமா?
உயிருக்குப் போராடுவோரை அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிப்பது வழமை. பாரதவை ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதித்த அவர்கள் துமிந்தவை மாத்திரம் ஜயவர்தனபுர வைத்தியசாலையில் ஏன் அனுமதிக்க வேண்டும்.அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்கள் பொலிஸார் அல்ல. பாதாள உலகத்தைச் சேர்ந்த கொலைகாரர்கள். வைத்தியசாலைக்குச் செல்வோரிடம் பலவந்தமாக அவர்கள் விசாரணை நடத்தியுள்ளார்கள்.
இவ்வளவு சம்பவம் நடந்தும் ஜனாதிபதி எம்முடன் ஒருவார்த்தை கூட பேசவில்லை.பாரத, கொலன்னாவையில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக குரல்கொடுத்தார்.போதைப்பொருள் கடத்தல், பாவனையிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்தார்.இதனை விரும்பாத பலம்பொருந்திய கைகள் அவரைக் கொலை செய்வதற்கான பொறுப்பை மற்றுமொரு பலம்பொருந்திய கைகளுக்கு வழங்கின.
இது திட்டமிடப்பட்ட கொலையாகும். அதில் எந்த சந்தேகமும் இல்லை “ என்றார்.நீங்கள் சந்தேகப்படும் குற்றவாளி யார் என்பதை வெளிப்படையாகச் சொல்லுங்கள் என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அசோக பிரேமச்சந்திர, “ அது உங்களால் ஊகிக்க முடியும் என நினைக்கிறேன். யாருக்குப் பலம் இருக்கிறதோ அவர்கள்தான் செய்திருக்கிறார்கள்” என்றார்.
இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை அமெரிக்கா நீடித்துள்ளது.

2010 ஆண்டு இறுதியில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை அமெரிக்கா நீடித்துள்ளது.இந்த சலுகை 2013 ஆம் ஆண்டு இறுதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் வர்த்தக திணைக்களம் அறிவித்துள்ளது.இந்த திணைக்களம் வர்த்தக அமைச்சின் கீழ் செயற்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இதற்கான உடன்படிக்கையில் மீண்டும் கையெழுத்திடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்தநிலையில் அவர் கையெழுத்திட்ட 15 நாட்களில் இலங்கைக்கான ஜிஎஸ்பி வரிச்சலுகை நடைமுறைக்கு வரும் என்று இலங்கை வர்த்தக திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறீலங்காவுக்கு அமெரிக்கா கடும் தொனியில் எச்சரிக்கை.

சிறிலங்கா அரசாங்கம் அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் வரை அமெரிக்கா அது பற்றிய எந்தவொரு முடிவுக்கும் வராது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.வொசிங்டனில் நேற்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் ரோனரிடம், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு அவர், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை போதுமானதா என்பதைத் தீர்மானிப்பதற்கு, அது வெளியிடப்படும் வரை அமெரிக்கா காத்திருக்கவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் வரை அது தொடர்பான எந்த முடிவையும் அறிவிக்க தாம் விரும்பவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.கடந்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருந்தார்.
“குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க வேண்டியது சிறிலங்கா அரசின் பொறுப்பு. மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறிலங்கா அரசின் விசாரணைகள் வெளிப்படையானது என்பதை நிருபிக்க வேண்டிய தேவை உள்ளது“ என்றும் மார்க் ரோனர் மேலும் கூறியுள்ளார்.
“சிறிலங்கா அரசாங்கம் அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறினால், சுதந்திரமான பொறிமுறை குறித்த அழுத்தங்களை சந்திக்க நேரிடும்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்த உள்நாட்டுக்குள்ளேயே இதைச் செய்ய வேண்டியது முக்கிமானது.சிறிலங்கா அதனை தாமாகவே செய்து கொள்ளும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.அதை அவர்கள் செய்யாது போனால், நாங்கள் பலமுறை கூறிவிட்டோம் -. ஏனைய பல பொறிமுறைகளின் மீது கவனம் செலுத்துவதற்கான அனைத்துலக அழுத்தங்கள் அதிகரிக்கும்.“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மதத்துக்கு எதிராக பேசியவருக்கு சிறைத் தண்டனை.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர், மதத்துக்கு எதிராகப் பேசியதற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தெற்கு சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர் மெஹ்ரம் வாகோச்சா. ஓய்வுபெற்ற பள்ளி ஆசியரான இவர் மதத்துக்கு எதிராகப் பேசியதாக வாரா பகுதியைச் சேர்ந்த அமீர் அலி என்பவர் புகார் செய்தார். அதன் பேரில் பொலிசார் வழக்குத் தொடர்ந்தனர்.
இதில் அவருக்கு ஒரு மாத காலம் சிறைத் தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் தீர்ப்புக் கூறியிருந்தது. இதை எதிர்த்து வாகோச்சா மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில் அவருக்குக் கூடுதல் தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அமீர் அலியும் மனு தாக்கல் செய்திருந்தார்.இதை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அக்டோபர் 13ம் திகதி தீர்ப்புக் கூறியது.இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மதத்துக்கு எதிராகப் பேசியதாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சிந்து மாகாணப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு, பூங்கா மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகளான தாஹிர் இஜாஸ், அக்தர் மெஹ்மூத், ஜுல்பிகார் சுலேரியா உள்ளிட்ட 6 பேர் மீது 5 கோடியே 20 லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. கைது செய்யப்பட்ட 6 பேரும், ஜாமீன் கோரி லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.மனுவை விசாரித்த நீதிபதி இஜாஸ் செளத்ரி தலைமையிலான அமர்வு, குற்றம்சாட்டப்பட்டவர்களை குர்ஆன் மீது சத்தியமிட்டு வாக்குமூலம் அளிக்கக் கூறியது. அதிகாரிகளும், தாங்கள் தவறேதும் செய்யவில்லை என சத்தியமிட்டனர். இதையடுத்து அனைவருக்கும் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மக்களின் ஆதரவை பெறுவதற்காக பஸ் யாத்திரை மேற்கொள்ளும் ஒபாமா.
அமெரிக்காவில் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களின் ஏகபோகத்துக்கு எதிராக மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது.
இந்நிலையில் பொருளாதாரச் சீர்திருத்தம் தொடர்பாக கொண்டு வரப்படும் மசோதாவை நிறைவேற்ற முட்டுக்கட்டை போடும் எதிர்க்கட்சியைக் கண்டித்து அதிபர் ஒபாமா செவ்வாய்க்கிழமை பஸ் யாத்திரை தொடங்கினார்.  பொருளாதார பின்னடைவு காரணமாக வாக்காளர்களுக்கு ஒபாமா மீது அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மக்களிடம் ஆதரவு பெறுவதற்காக அவர் இந்த யாத்திரையை தொடங்கியுள்ளார்.
3 நாள்களில் வடக்கு கரோலினா, வெர்ஜினியா மாகாணங்கள் வழியாக பஸ் யாத்திரையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவில் 9.1 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைப்பதற்காக 447 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான மசோதாவை ஒபாமா கொண்டு வந்தார்.
ஆனால் இந்த மசோதாவை செனட் சபையில் நிறைவேற்றவிடாமல் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் பிரநிதிகள் முட்டுக்கட்டைப் போட்டுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த ஒபாமா கூறியதாவது: ஆண்டுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் உள்ள பணக்காரர்களிடமிருந்து நிதி திரட்ட இந்த மசோதா வகை செய்யும்.
இதுபோன்ற மசோதாக்களை நான் சார்ந்துள்ள ஜனநாயகக் கட்சியும், தற்போதைய எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியும் முந்தைய காலங்களில் ஆதரித்து வந்துள்ளன. இந்நிலையில் தற்போது நான் அறிமுகப்படுத்தியுள்ள மசோதாவுக்கு குடியரசுக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பை வழங்கவும், சாலைகள் மற்றும் மேம்பாலங்கள், விமான நிலையங்களை கட்டுவதற்கும், பொருளாதார ரீதியாக சிரமப்படும் சிறிய தொழில் நிறுவனங்கள் மற்றும் மத்திய தர வர்க்கத்தினரின் வரிச் சுமையை குறைப்பதற்கும் குடியரசுக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அதே சமயம் பணக்காரர்கள் மீது விதிக்கப்படும் வரியை குறைப்பதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் என எதிர்க்கட்சிகள் மீது ஒபாமா குற்றம்சாட்டினார்.ஒபாமா மேலும் கூறியது: இந்த மசோதாவுக்கு 63 சதவீத அமெரிக்க மக்கள் ஆதரவளிப்பதாக ஒரு கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் குடியரசுக் கட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் இந்த மசோதாவுக்கு எதிராக செனட் சபையில் வாக்களித்துள்ளனர் என்றார் ஒபாமா.
ஏமனில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு: 12 பேர் பலி.
ஏமன் தலைநகர் சனாவில் அந்நாட்டு அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலககோரி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது அரசு படை தாக்குதல் நடத்தியதில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.எகிப்தில் தொடங்கி லிபியா, சிரியா தொடர்ந்து ஏமனிலும் அதிபர் அலி அப்துல்லா சலே அரசை விரும்பாத அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
முன்னதாக நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு பெண்களை அதிபர் சலேவின் மகன் அகமது கைது செய்ததையடுத்து போராட்டம் தீவிரமானது.இதையடுத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போராட்டத்தில் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலக கோரி பேரணி நடத்தினர்.
போராட்டத்தை களைக்க முயன்ற அரசு படையினர், அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைக்க இயலாததால் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் ப‌ோராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 12 பேர் உயிரிழந்தனர், 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.சலேயின் அரசை கவிழ்க்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உதவ வேண்டு‌ம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் உள்நாட்டு போரை ஏற்படுத்தி மக்களை கொன்றதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் சலே மீது சர்‌வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தலிபான்களின் புகலிடமாக மாறும் கரோடாபாத்: பாகிஸ்தான் பத்திரிக்கை தகவல்.
ஹக்கானி குழுவுக்கு பாகிஸ்தானின் வடக்கு வஜீரிஸ்தான் புகலிடமாக இருப்பது போல ஆப்கன் தலிபான்களுக்கு பலுசிஸ்தானில் உள்ள கரோடாபாத் என்ற பகுதி புகலிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் மாகாணங்களில் ஒன்றான பலுசிஸ்தான் தலைநகர் க்வெட்டாவின் புறநகர்ப் பகுதியில் இருக்கிறது கரோடாபாத் என்ற இடம். இப்பகுதி தற்போது ஆப்கன் தலிபான்கள் சுதந்திரமாக வந்து போகும் இடமாக மாறிவிட்டிருப்பதாக பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் பத்திரிகை கூறியுள்ளது.இதுகுறித்து அப்பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது: குவெட்டாவில் ஆப்கன் தலிபான்கள் இல்லை என பாகிஸ்தான் அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய உளவுத் துறைகள் குவெட்டாவில் தான் ஆப்கன் தலிபான்களின் மத்திய செயற்குழுவான க்வெட்டா ஷூரா இயங்குவதாகக் குற்றம்சாட்டி வருகின்றன.
கரோடாபாத்தில் உள்ள மதரசாக்களுக்கு மாதம் தோறும் பல தலிபான்கள் வருகின்றனர். ஆப்கனில் நடந்து வரும் தாக்குதல்களில் இருந்து இளைப்பாறவும் புத்துணர்ச்சி பெறவும் அவர்கள் இங்கு வருகின்றனர்.கரோடாபாத் மதரசாக்கள் அவர்களுக்கு தங்கும் இடம், உணவு உள்ளிட்டவற்றை அளிக்கின்றன. வருபவர்கள் சும்மா இருப்பதில்லை. மதரசாக்களில் படிக்கும் மாணவர்கள், அப்பகுதியில் உள்ளவர்கள் என சில பேரை பொறுக்கி எடுத்து தலிபான்களிடம் பயங்கரவாதப் பயிற்சிக்கு அனுப்புகின்றனர்.
இவ்வகையில் மாதத்துக்கு ஆறில் இருந்து எட்டுப் பேர் ஆப்கனுக்கு அனுப்பப்படுகின்றனர். இவ்வாறு செல்லும் மாணவர்களுக்கு 75 சி.சி திறன் கொண்ட புதிய இருசக்கர வாகனங்கள் அளிக்கப்படுகின்றன. எல்லைச் சாவடிகளில் எப்படித் தப்பிக்க வேண்டும் என சொல்லிக் கொடுக்கப்படுகிறது. வரைபடமும் அளிக்கப்படுகிறது.ஒரு வாகனத்தில் இருவர் மட்டும் செல்ல வேண்டும், தலா ஒருவருக்கு 5,000 ரூபாய் தரப்படும், அதை வைத்து பெட்ரோல் நிரப்பிக் கொள்ள வேண்டும் என மாணவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இவர்களில் சிலர் தங்கள் பெற்றோர் சம்மதத்தோடும் பலர் பெற்றோருக்குத் தெரியாமலும் தலிபான்களிடம் செல்கின்றனர்.
இந்த மாணவர்களுக்கு பாகிஸ்தான் எம்.பி மவுலானா எஸ்மத்துல்லா தலைமையிலான ஜாமியத் உலேமா இ இஸ்லாம் கட்சி ஊக்கம் அளிக்கிறது. பின்லேடன் இறந்ததற்கு எஸ்மத்துல்லா பாகிஸ்தான் பார்லிமென்ட்டில் பிரார்த்தனை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆப்கன் போரில் காயம்பட்ட தலிபான்கள் கரோடாபாத்தில் விமானநிலையச் சாலையில் அமைந்துள்ள ஐந்து தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து ரகசியமாக சிகிச்சை பெறுகின்றனர். சர்வதேச அரசு சாரா அமைப்பு ஒன்று தலிபான்களின் சிகிச்சைக்கு நிதி அளிக்கிறது.
இதை டாக்டர். அப்துல் காலிக் நினைவு மருத்துவமனை நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒப்புக் கொண்டார். அதே சர்வதேச அரசு சாரா அமைப்பு, பொலிஸ் அல்லது உளவுத் துறையினரை தலிபான்களைப் பார்க்க அனுமதிக்காது.தலிபான்கள் கரோடாபாத்துக்கு வந்து செல்வதால் அமெரிக்க விமானங்களின் குண்டு வீச்சுக்கு தாங்களும் பலியாக நேரிடுமோ என இப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
பயங்கரவாதிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் அரசு கூறி வந்தாலும் உண்மை அதற்கு நேர் மாறாகத் தான் உள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் 1990 முதல் இதுவரை 800 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் இதுவரை இவற்றில் 475 மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளன.இச்சம்பவங்களோடு தொடர்புடையவர்கள் என இரண்டாயிரத்து 200 பேர் கைது செய்யப்பட்டனர். சரியான ஆதாரங்கள் இல்லாததால் இவர்களில் ஆயிரத்து 650 பேர் அதாவது 75 சதவீதம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இத்தகவலையும் எக்ஸ்பிரஸ் டிரிபியூன் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
லிபியாவுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட ஹிலாரி.
லிபியாவில் கடாபி ஆதரவாளர்கள் வசம் இருந்த பானி வாலித் நகரின் பெரும்பகுதி எதிர்ப்பாளர்கள் வசம் வந்தது.இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் நேற்று முன்னறிவிப்பு எதுவுமின்றி லிபியத் தலைநகர் திரிபோலிக்கு திடீர் பயணம் மேற்கொண்டார்.
லிபியாவில் கடாபி ஆதரவாளர்கள் வசம் பானி வாலித், சிர்ட், சபா, ஜூப்ரா ஆகிய நகரங்கள் உள்ளன. எதிர்ப்பாளர்கள் நாட்டைக் கைப்பற்றி இரு மாதங்கள் ஆகியும் இந்நகரங்கள் இழுபறியில் இருந்தன.பானி வாலித் நகர் மீது இருநாட்கள் முன் எதிர்ப்பாளர்கள் வலுவான தாக்குதல் தொடுத்தனர். இதையடுத்து நேற்று அந்நகரின் பெரும்பகுதிகள் அவர்கள் வசம் வந்தன.
சில பகுதிகளில் மட்டும் கடாபி ஆதரவாளர்கள் உடனான சண்டை தொடர்கிறது. லிபிய வான்வெளி மீது விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடையில் ஒரு பாதியை விலக்கிக் கொள்ள நேட்டோவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதை இடைக்கால அரசு உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கான ஒப்பந்தம் மால்டா நாட்டில் இம்மாதம் 13ம் திகதி கையெழுத்தானது என போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சர் அன்வர் அல் பைட்டோரி தெரிவித்தார். போரில் காயம்பட்டவர்கள், பலியானவர்களைக் கொண்டு போவதற்கு இத்தடை விலக்கம் பயன்படும் என அவர் கூறினார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் நேற்று திடீரென லிபியாவுக்கு முன்னறிவிப்பு எதுவுமின்றி பயணம் மேற்கொண்டார். லிபியாவின் தேசிய இடைக்கால கவுன்சில் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல், பிரதமர் மஹ்மூத் ஜிப்ரீல், நிதியமைச்சர் அல் தர்ஹவுனி ஆகியோரைச் சந்தித்து அவர் பேசினார்.அவரது இந்த பயணம் இருதரப்பு உறவை வலுப்படுத்தவும், தேசிய இடைக்கால கவுன்சிலுக்கு அமெரிக்காவின் ஆதரவை தெரியப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
விக்கிலீக்ஸ் நிறுவனத்திலிருந்து ஊழியர்கள் விலகல்: அசாஞ்ச் மறுப்பு.
நிதி நெருக்கடி காரணமாக விக்கிலீக்ஸ் நிறுவனத்திலிருந்து ஊழியர்கள் வெளியேறி வருகின்றனர் என்ற செய்தியை அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் மறுத்துள்ளார்.பிரிட்டன் தலைநகர் லண்டனில் தங்கியுள்ள அசாஞ்ச் அங்கிருந்தபடி பெரு நாட்டின் லிமா நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இணையதள வீடியோ மூலம் நேற்று பேசினார்.அப்போது அவரிடம் நிதி நெருக்கடி காரணமாக விக்கிலீக்சில் இருந்து ஊழியர்கள் வெளியேறி வருவது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
இதற்குப் பதிலளித்த அவர், கடன் அட்டை மூலம் பேபால் போன்ற நிறுவனங்கள் வழியாக நிதித் திரட்டுவதில் தான் தற்போது பிரச்னை உள்ளது.மற்றபடி விக்கிலீக்சுக்கு போதுமான நிதியாதாரங்கள் உள்ளன. எந்த ஊழியரையும் நாங்கள் அனுப்பவில்லை என்றார்.
இஸ்ரேல் வீரர் விடுதலை: காசா, ரமல்லாவில் கொண்டாட்டம்.
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையிலான ஒப்பந்தப்படி ஹமாஸ் பிரிவினர் பிடியில் இருந்த இஸ்ரேல் வீரர் கிலாத் ஷாலித்(25) விடுவிக்கப்பட்டார்.இதையடுத்து பாலஸ்தீன கைதிகள் நூற்றுக்கணக்கானோர் இஸ்ரேலில் இருந்து விடுவிக்கப்பட்டனர். காசா மற்றும் ரமல்லா பகுதியில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் திரண்டு நின்று உற்சாகமாக அவர்களை வரவேற்றனர்.
கடந்த 2006ல் இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் பிரிவினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் வீரர் கிலாத் ஷாலித் பிடித்துச் செல்லப்பட்டார்.அவரை விடுவிப்பதற்காக இஸ்ரேல் ஹமாசுடன் பேச்சு நடத்தியது. அவருக்குப் பதிலாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள 1,027 பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் நிபந்தனை விதித்தது.
அதை ஒப்புக் கொண்ட இஸ்ரேல் கடந்த 16ம் திகதி தான் விடுவிக்க உள்ள பாலஸ்தீன கைதிகளின் பட்டியலை வெளியிட்டது. இதையடுத்து நேற்று ஹமாஸ் பிரிவினர் சினாய் தீபகற்பத்தில் இஸ்ரேல் அதிகாரிகளின் முன்னிலையில் எகிப்திய அதிகாரிகளிடம் ஷாலித்தை ஒப்படைத்தனர்.ஷாலித் உடல்நலத்தை பரிசோதித்த இஸ்ரேல் அதிகாரிகள் அவரை அவரது குடும்பம் இருக்கும் இஸ்ரேலின் மத்திய பகுதியில் உள்ள டெல் நாப் என்ற இடத்திற்கு விமானத்தில் அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரது குடும்பத்துடன் இணையும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவில் பேசிய பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹூ,"ஷாலித்தின் விடுதலைக்கு இஸ்ரேல் மிக அதிக விலை கொடுத்துள்ளது. எனினும் தனது ஒரு வீரரை மீட்பதற்குக் கூட இஸ்ரேல் எந்த தியாகத்தையும் செய்யும். அதேநேரம் விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனக் கைதிகள் மீண்டும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டால் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்” என எச்சரிக்கை விடுத்தார்.தனது விடுதலை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஷாலித்,"இன்னும் பல பாலஸ்தீனக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். இந்த ஒப்பந்தம் மூலம் இருதரப்புக்கும் இடையில் நல்லுறவு மலர வேண்டும்” என்றார். இதன் பின் நாட்டின் வடபகுதியில் உள்ள அவரது சொந்த ஊரான மிட்ஜ்ப் ஹிலாவுக்கு பெற்றோருடன் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்.
தலாய்லாமாவுக்கு விசா வழங்க தென்னாப்ரிக்க அரசு மறுப்பு: எதிர்க்கட்சிகள் வழக்கு பதிவு.
தலாய்லாமாவுக்கு விசா வழங்க தென்னாப்ரிக்க அரசு மறுத்ததை எதிர்த்து அந்நாட்டு எதிர்க்கட்சிகள் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளன.தென்னாப்ரிக்காவின் பிரபல பிஷப் டெஸ்மாண்ட் டுட்டுவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக தலாய்லாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் எந்தக் காரணமும் தெரிவிக்காமல் உரிய நேரத்தில் அவருக்கு தென்னாப்ரிக்க அரசு விசா வழங்கவில்லை. இதற்கு சீனாவுடனான அதன் வர்த்தக பேரம் தான் காரணம் என ஆதாரங்களுடன் அந்நாட்டுப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.இதையடுத்து “இன்கதா விடுதலைக் கட்சி” மற்றும் “மக்கள் காங்கிரஸ்” ஆகிய இரு எதிர்க்கட்சிகள் கேப்டவுனில் உள்ள ஐகோர்ட்டில் அரசுக்கு எதிராக நேற்று வழக்கு தொடர்ந்துள்ளன.
இதுகுறித்து அக்கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சட்டம் மற்றும் அரசியல் அமைப்பு ரீதியாக விசா மீது அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை. தலாய்லாமாவுக்கு விசா வழங்கப் பிடிக்கவில்லை என்று கூறக் கூட அரசுக்கு உரிமை உண்டு. ஆனால் எதுவும் சொல்லாமல் சட்டத்தை மீற அரசுக்கு உரிமையில்லை” என குறிப்பிட்டுள்ளன.இவ்வழக்கு நவம்பர் 22ம் திகதி விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் இன்கதா விடுதலைக் கட்சித் தலைவர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு விழாவில் கலந்து கொள்ள தென்னாப்ரிக்காவுக்கு வரும்படி தலாய்லாமாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருக்கிறது. எனவே இந்தியா செல்லும் மற்றும் இந்தியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு துறை நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: சமீப காலத்தில் இந்திய அரசின் அறிவுரைகள் மற்றும் அங்குள்ள பத்திரிகைகளில் வரும் செய்திகள், இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதை சுட்டிக் காட்டுகின்றன.எனவே இந்தியாவுக்கு செல்லும் அமெரிக்க பயணிகள் மற்றும் அங்கு தங்கியிருக்கும் அமெரிக்கர்கள் எப்போதும் உச்சநிலை விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
உள்ளூர் செய்திகளை கவனிக்க வேண்டும். தாங்கள் செல்லும் பொது இடங்களில் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.மேலும் மார்க்கெட், ரயில்கள், பஸ்கள், புனித நகரங்கள், ஹொட்டல்கள், லாட்ஜ்கள் தீவிரவாதிகளின் இலக்கு என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ம் திகதி வரை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் காணமால் போன 11 மாத குழந்தையை தேடும் பணி தீவிரம்.
அமெரிக்காவில் காணாமல் போன 11 மாத குழந்தையை அந்நாட்டு அதிரடிப்படை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறது.அமெரிக்காவின் முசோரி மாநிலம் கன்சாஸ் நகரை சேர்ந்தவர் ஜெர்மி இர்வின் மற்றும் பிராட்லி தம்பதியினரின் 11 மாத குழந்தை லிசா இர்வின்.
இக்குழந்தையை அக்டோபர் 4ம் திகதி இரவு படுக்கை அறையில் தூங்கிக்கொண்டு இருந்த லிசாவை காணவில்லை. தற்போது லிசாவை தேடும் பணியில் பொலிசார் மட்டுமல்லாமல் அமெரிக்க அதிரடி படையினரும் ஈடுபட்டுள்ளனர். அம்மாநில கவர்னரே இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.அக்டோபர் 15ம் திகதி ஜெர்மி இர்வினின் வீட்டு அருகே இருக்கும் ஆள் இல்லாத வீட்டில் தேடினர். அங்கு குழந்தைகள் அணியும் சில உடைகள், பேபி நாப்கின் போன்றவை இருந்தன. இதையடுத்து பொலிசாருக்கு குழந்தை கடத்தலில் சில தடயங்கள் கிடைத்தன.
உள்ளூர் திருடர்கள் இந்த கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரிக்கின்றனர். சந்தேகத்தின் பேரில் ஜெர்சி என்ற திருடன் விசாரிக்கப்பட்டான். ஆனால் அவன் மீது முழுமையாக சந்தேகம் எழவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.இதற்கிடையே குழந்தை பற்றி தகவல் தருவோருக்கு 5 கோடி ரூபாய் பரிசு தரப்படும் என அறிவிக்கப்பட்டது. எப்.பி.ஐ எனப்படும் சிறப்பு புலனாய்வு அதிகாரிகளும் குழந்தையை தேடுகின்றனர்.குழந்தை பற்றி ஏற்கனவே எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் நாளிதழ்களில் வெளியிட்டுள்ளனர்.
ஹிட்லர் தற்கொலை செய்து கொள்ளவில்லை: இங்கிலாந்து பத்திரிக்கையாளர் தகவல்.
அடால்ப் ஹிட்லர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என இங்கிலாந்து பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.ஜேர்மனியைச் சேர்ந்த சர்வாதிகாரி ஹிட்லர். நாஜி படைத் தலைவராக இருந்த இவர் இரண்டாம் உலகப் போரில் முக்கிய பங்கு வகித்தார்.கடந்த 1945ம் ஆண்டு ஜேர்மனியில் உள்ள பெர்லினில் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அவர் தற்கொலை செய்யவில்லை. தனது இறுதி நாட்களில் அர்ஜென்டினாவில் வாழ்ந்து இறந்தார். இந்த தகவலை இங்கிலாந்து பத்திரிகையாளர் ஜெர்ரார்டு வில்லியம்ஸ் சைமன் டன்ஸ்டன் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.ஹிட்லரின் சரித்திரத்தை மாற்றி எழுத நாங்கள் விரும்பவில்லை. அதே நேரத்தில் சில குறிப்புகள் மற்றும் தகவல்கள் அவர் தற்கொலை செய்யவில்லை. அர்ஜென்டினாவில் வாழ்ந்து மறைந்தார் என தெரிவிக்கின்றன. எனவே இக்கருத்தும் தவிர்க்க முடியாதது என்றும் கூறியுள்ளார்.
இங்கிலாந்து பிரதமரிடம் கேள்வி கேட்ட பெண்ணால் பரபரப்பு.
ரயிலில் சென்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூனிடம், நீங்க தான் பிரதமரா? என்று இந்திய இளம்பெண் கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மும்பையை சேர்ந்தவர் சன்யோஜிதா மெயர். பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் லண்டன் சென்றார். கணவர் யான்கோ, 3 மாத பெண் குழந்தை சயாமாவுடன் ஷாப்பிங் சென்றார்.சுரங்க பாதையில் செல்லும் டியூப் ரயிலில் சன்யோஜிதா சென்றார். வெஸ்ட்மினிஸ்டர் ரயில் நிலையத்தில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் ரயிலில் ஏறினார்.
காரில் செல்வதை விட ரயிலில் செல்வதால் நேரம் மிச்சம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ரயில் பயணிகளை உற்சாகப்படுத்தவும் கமரூன் ரயிலில் பயணம் செய்தார்.பயணிகளிடம் பேசி வரும் போது சம்யோஜிதாவை பார்த்து, இது உங்கள் குழந்தையா, அழகாக இருக்கிறாள் என்று கமரூன் கூறினார்.அதற்கு நன்றி தெரிவித்த சம்யோஜிதா இவர் யார்? என்று கணவனிடம் கேட்டார். அதற்கு அவர்தான் இங்கிலாந்து பிரதமர் என்று கூறினார்.
அதை நம்பாத சம்யோஜிதா, நேராக கமரூனிடம் சென்று நீங்கதான் பிரதமரா? என்று கேள்வி கேட்டார். அதற்கு ஆமாம் என்று அவரும் பதில் அளித்தார். அப்போதும் நம்பாமல் சம்யோஜிதா வாய்விட்டு சிரித்தார். இதனால் ரயிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரு மாதிரி என்னை பார்த்தனர். அதன்பின் அவர்தான் பிரதமர் என்று அறிந்து மன்னிப்பு கேட்டேன். அவர் சிரித்து கொண்டே சென்று விட்டார். நம் ஊரில் பிரதமர் உள்பட பெரிய பதவிகளில் இருப்பவர்கள் ரயிலில் செல்வதில்லை என்று பிரதமரிடம் கூறினேன் என்று சம்யோஜிதா ஆச்சரியமாக கூறினார்.
கனடாவின் முக்கிய நகரங்களிலும் வெடிக்கும் போராட்டம்.
கனடாவில் உள்ள டொரன்டோ, வான்கூவர் மற்றும் மிக முக்கியமான நகரங்களில் தொடர் போராட்டங்களை நூற்றுக்கும் மேற்பட்டோர் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் திங்கட்கிழமை நடத்தினர்.திங்கட்கிழமை காலையில் சில எதிர்ப்பாளர்கள் டொரன்டோவின் நெருக்கடியான மாவட்டங்களில் சுற்றி வருவதாகவும், அவர்கள் டொரன்டோவில் உள்ள ஆதரவாளர்களிடம் தொடர்பு கொண்டு பாரிய போராட்டங்களை நடத்தப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்ப்பாளர்கள் டொரன்டோ மற்றும் மற்ற நகரங்களில் இருந்து கொண்டு தங்களது குறைகளை எடுத்துரைத்தனர், உதாரணமாக ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையேயான சமநிலையற்ற தன்மை. ஆனால் இதுகுறித்து நிறுவனர்கள் கூறுகையில்,“இது ஒரு தலை பிரச்சனை கிடையாது” என்றனர்.
இதுகுறித்து வான்கூவர் பிரதிநிதி மாட் பெர்கோவிட்ச் கூறியதாவது, சமுதாயத்தின் அடிப்படையான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. சமநிலையற்ற தன்னை என்பது உலகெங்கும் உள்ளது. அத்தன்மையானது வறுமை, லஞ்சம், போர், இயற்கை சீரழிவு மூலம் உருவாகி உள்ளது என்பதாகும்.இதே பிரச்சனைகளை கருத்தில் கொண்டு போராட்டக்காரர்கள் ஹாலிபேக்ஸ், கால்கரி, எட்மண்டன், ஒட்டாவா மற்றும் மொன்றியல் நகரங்களில் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டமானது சில வாரங்களில் முடியலாம் அல்லது சில மாதங்களில் முடியலாம் என்று பெர்கோவிட்ஸ் கூறினார். எங்கள் கோரிக்கை நிறைவேறுவதே எங்களின் நோக்கம்.அது இன்றோ அல்லது நாளையோ அல்லது சில வாரங்களில் நிறைவேறலாம். எங்களின் இயக்கமும், அமைப்பும் ஒவ்வொருவரின் கருத்திலும், உழைப்பிலும் இயங்குகிறது என்று வான்கூவர் எதிர்ப்பாளர் டான் ரிச்சர் கூறினார்.
447 பாலஸ்தீன கைதிகள் விடுதலை.
இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே நல்லுறவு ஏற்படும் விதமாக இன்று இருதரப்பு‌ கைதிகள் பரிமாற்றம் நடந்தது.இஸ்ரேலில் 5 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீன கைதிகள் 477 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.அதே போன்று பாலஸ்தீனத்தின் பிடியில் இருந்த இஸ்ரேல் கைதிகள் விரைவில் விடுக்கப்படவுள்ளனர். இஸ்ரேலின் கிலாத்ஷகாலில் சிறையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு குற்றவழக்குகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களை நேற்று இஸ்ரேல் அரசு விடுவித்தது. அதன்படி 447 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இன்று பேருந்து வழியாக காஸா நகருக்கு வந்தனர்.மேலும் கடந்த இரண்டு மாதங்களில் 550 ‌பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் விரைவில் விடுதலையாகின்றனர்.
இதே போன்று பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினரின் பிடியில் இருக்கும் இஸ்ரேல் கைதிகளும் விடுவிக்கப்படவுள்ளனர்.பாலஸ்தீன தனிநாடு கோரிக்கை ஐ.நா.வின் பார்வைக்கு வைக்கப்பட்ட பி்ன்பு இரு நாடுகளிடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்ரிக்க நாட்டில் நடுவானில் விமான வெடித்து விபத்து: 8 பேர் பலி.
ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் இயற்கை காட்சிகளையும், வனவிலங்குகளையும் கண்டுகளிக்க குட்டி விமானம் பயன்படுத்தப்படுகிறது.அங்குள்ள ஷகானாகா என்ற இடத்தில் இருந்து ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் புறப்பட்டது.
அதில் இங்கிலாந்து, சுவீடன், பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த 7 பேர் பயணம் செய்தனர். அந்த விமானத்தை இங்கிலாந்தை சேர்ந்த விமானி ஓட்டினார்.இந்த விமானம் ஷாகானாகாவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் நடுவானில் வெடித்து சிதறியது. அதில் விமானி உள்பட பயணம் செய்த 8 பேரும் உடல் கருகி பலியானார்கள். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில் அதிபர் மகனை கடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் சதித்திட்டம்.
பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மகன் பிலாவல்(23), இங்கிலாந்தில் வசிக்கிறார். இவர் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவராகவும் உள்ளார்.இவர் அடிக்கடி பாகிஸ்தான் வந்து செல்கிறார். இவரை கடத்தி செல்ல அல்கொய்தா, தலிபான் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர்.எனவே பிலாவலுக்கு பலத்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் கூறினார்.
மாலிக் மேலும் கூறுகையில், அதிபர் சர்தாரி மகன் உள்பட பல முக்கிய தலைவர்களை கடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளது குறித்து கடந்த மாதம் ரகசிய தகவல் கிடைத்தது.உடனடியாக அதிபர், பிரதமர் கிலானிக்கு இந்த தகவலை தெரிவித்து பாதுகாப்பை அதிகரிக்க கேட்டுக் கொண்டேன். அதன்பின் அக்டோபர் 14ம் திகதி உயர் மட்டக் குழு கூட்டம் நடந்தது. அதில் கடத்தல் திட்டம் தீட்டியுள்ள தீவிரவாதிகளை பிடிக்க உத்தரவிடப்பட்டது.
மறைந்த பஞ்சாப் கவர்னர் சல்மான் தசீரின் மகன் ஷாபாஸ் கடந்த ஆகஸ்ட் 26ம் திகதி லாகூரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.அவரை கொன்று விட்டதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் அவர் உயிருடன் இருப்பதாக எங்களுக்கு இப்போது தகவல் கிடைத்துள்ளது.ஆப்கன் எல்லையில் பழங்குடியினர் வசிக்கும் மலைப்பகுதியில் அவரை தீவிரவாதிகள் வைத்துள்ளதாக தெரிகிறது என்றார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF