Sunday, October 23, 2011

இன்றைய செய்திகள்.

பாரத லக்ஷ்மன் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டாரா?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத்த லக்ஸ்மன் பிரேமசந்திர திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
படுகொலைச் சம்பவம் குறித்த விசாரணை பல கோணங்களில் நடைபெற்று வருவதாக ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பாரத திட்டமிட்ட வகையில் குறித்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பாரதவுடன் இருந்தவர்களின் செயற்பாடுகள் குறித்தும் தற்பேர்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்களின் அடிப்படையில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக இரகசிய காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் பத்து பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீசா கட்டணத்தை குறைக்குமாறு இந்தியா, இலங்கையிடம் கோரிக்கை.

இலங்கையின் புதிய வீசா ஒழுங்குகள் குறித்து இந்தியா தமது கவனத்தை திருப்பியுள்ளது.
புதிய நடைமுறையின்படி வீசா கட்டமாக 50 டொலர்கள் அறிவிடப்படவுள்ளன.
எனினும் இந்த தொகையை குறைக்குமாறு இந்தியா, இலங்கையை வலியுறுத்தியுள்ளது.
பிரித்தானியாவை அடுத்து இந்தியாவே இலங்கையின் சுற்றுலா சந்தை என்ற நிலையிலேயே .இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் கடந்த வியாழக்கிழமை தமது எழுத்து மூல கோரிக்கையை இலங்கையின் குடிவரவு கட்டுப்பாட்டாளருக்கு விடுத்துள்ளது.
மஹிந்த ராஐபக்ஷ மற்றும் கோத்தபாயவின் அமைச்சுக்கு அதிகளவான நிதி ஒதுக்கீடு.

2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ளது.
இந்தநிலையில் அதற்கான முன்கூட்டிய ஒதுக்கீடு அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்படி 2.22 ரில்லியன் ரூபாய் செலவுகள் காட்டப்பட்டுள்ளன.
வரவு - செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகையாக 1.105 ரில்லியன்கள் ரூபாய் காட்டப்பட்டுள்ளன.
இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தின் கீழ் உள்ள அமைச்சுகளுக்காக 20 வீதமான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலகத்துக்கு 6.161 பில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கீழ் வரும் அமைச்சுக்காக 230 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
2011 ஆம் ஆண்டு இந்த துறைகளுக்கு 215 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : நாமல் ராஜபக்ஷ.

ஆயுத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் முறைமையில் குறைபாடுகள் காணப்படுகின்றன, இந்த முறைமை விரைவில் இல்லாதொழிக்கப்படும்.
மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து கொள்ளாதவர்களினால் நீண்ட காலத்திற்கு அரசியல் நடத்த முடியாது.
இளைய அரசியல்வாதி என்ற ரீதியில் வன்முறை அரசியலை வெறுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
சில தரப்பினர் குற்றம் சுமத்துவதனைப் போன்று அதீத அதிகாரத்தை பயன்படுத்துவதில்லை, ஜனாதிபதியின் புதல்வர் என்ற காரணத்தினால் எனக்கு சலுகைகள் கிடைப்பதாக தெரிவிக்கப்படுவதில் உண்மையில்லை.
ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் : கரு ஜயசூரிய.

அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தொடர்ச்சியாக எதேச்சாதிகார போக்கில் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றது.
எதிர்க்கட்சிகளின் பலம் மக்களின் பலமாக கருதப்பட வேண்டும் எனவும், எதிர்க் கட்சிகள் பலவீனமடைவதனால் மக்கள் பாதிக்கப்படக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சில கருத்து முரண்பாடுகள் நிலவி வருவதனை மறுப்பதற்கில்லை.
எனினும், ஆளும் கட்சிக்குள் அதனை விட பாரிய குழப்ப நிலைமைகள் காணப்படுகின்றன, இதன் விளைவே துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்.
சில அமைச்சர்கள் அரசாங்கத்திற்குள் எவ்வித மறுப்பினையும் தெரிவிக்காத போதிலும், வெளியில் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான மனிதாபிமான உதவிகளை நேரடியாக வழங்க முடியாது : பிரித்தானியா.

இலங்கையில் மனிதாபிமான பணிகளை மேற்கொள்ளும் போது நிதியுதவிகளை நேரடியாக இலங்கை அரசாங்கத்துக்கு வழங்க பிரித்தானிய அரசாங்கம் மறுத்துள்ளது.
மனிதாபிமான உதவிகளாக வழங்கப்பட்ட நிதிகளை இலங்கை அரசாங்கம் கையகப்படுத்தியதாக பிரித்தானிய எதிர்க்கட்சியினர் தெரிவித்த குற்றச்சாட்டை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பொதுச்சபையால் கடந்த வெள்ளிக்கிழமையன்று இது தொடர்பில் அந்த நாட்டின் சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய சர்வதேச அபிவிருத்தி திணைக்களம், இலங்கையுடனான இருதரப்பு திட்டங்களை 2006 ஆம் ஆண்டில் முடிவுக்கு கொண்டு வந்தது.
எனினும் அதன் பின்னர் மனிதாபிமான பணிகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டன.
இந்தநிலையில் அவையும் சர்வதேச உதவி நிறுவனங்கள் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் பிரித்தானியா ஏற்கனவே சர்வதேச விசாரணையை கோரியுள்ளது.
அத்துடன் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கும் அந்த நாடு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
நாட்டிலிருந்து இன்னமும் பயங்கரவாதம் ஒழிக்கப்படவில்லை – சஜித்.

நாட்டிலிருந்து இன்னமும் பயங்கரவாதம் ஒழிக்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்ட போதிலும், வேறு விதமான பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது.
நாடு ஜனநாயக நெறிமுறைகளை விட்டு விலகிச் சென்றிருப்பதாக சஜித் வருத்தம் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலைமை நீடித்தால் எதிர்காலத்தில் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி, குண்டு, கத்தி, வாள் போன்றனவே நாட்டை ஆட்சி செய்கின்றன.
இந்த நிலைமைக்கு அரசியல்வாதிகளே பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவுஸ்திரேலியாவுக்கு விஜயம்?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடுத்த வாரமளவில் அவுஸ்திரேலியா செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இம்மாதம் 28 ம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்குகொள்வதற்காகவே இவர் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையே இந்த மாநாடு இடம்பெறும் என்பதுடன் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அவுஸ்திரேலிய பேர்த் நகரில் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாடுகளின் சுயாதீனத் தன்மையைப் பாதுகாத்துக்கொள்வது தொடர்பில் இவ்வருட மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ச மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் அவுஸ்திரேலியா விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் வெளியீடு.
புற்றுநோயால் இறந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், புற்றுநோய்க்கு ஆரம்ப கட்டத்தில் அறுவை சிகிச்சை செய்ய மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவன நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த 5ம் திகதி இறந்தார். இந்நிலையில் ஸ்டீவ் வாழ்க்கை குறிப்பு பற்றி 630 பக்க புத்தகம் ஒன்றை வால்டர் இசாக்சன் என்பவர் வெளியிட்டார்.
அதில் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி, சகோதரி, நண்பர்கள், அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் திரட்டப்பட்ட தகவல்கள் மற்றும் கடைசி 2 ஆண்டுகளுக்கு மேலாக அவரிடம் நடத்திய நேர்காணல்கள் மூலம் கிடைத்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
மேலும் வெளி உலகிற்கு தெரியாத ஸ்டீவ் பற்றிய அந்தரங்க வாழ்க்கை, திருமண பந்தம், சகோதரி, தொழிலதிபர்கள், நண்பர்களுடனான உறவுகள், ஆப்பிள் ஸ்மார்ட்போன் மற்றும் கணணியின் புதிய கண்டுபிடிப்புகளும் அடங்கும்.
ஸ்டீவுக்கு புற்றுநோய் தாக்கியது முதல் முறையாக 2003ம் ஆண்டு தெரிந்தது. ஆரம்ப கட்ட நிலையிலேயே அறுவை சிகிச்சை மூலம் நோயை குணப்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் மறுத்தார்.
பதிலாக பழரசங்கள், மூலிகை மருந்துகள், அக்குபஞ்சர் முறையே போதும் என்று கூறியுள்ளார். அறுவை சிகிச்சை செய்ய மனைவி லயூரெனெ பவல், சகோதரி மோனோ சிம்சன், குடும்பத்தினர், நண்பர்கள் வலியுறுத்தியும் அதை நிராகரித்தார்.
நோயின் அறிகுறி அதிகம் தென்பட்ட பின்னரே அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்கு ஒத்துழைத்தார். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தந்திருந்தால் ஸ்டீவ் ஜாப்ஸ் இன்று நம்முடன் இருந்திருப்பார் என்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஐந்தே நாட்களில் பொருளாதாரப் பேரழிவு: பிரிட்டன்- ஐரோப்பியத் தலைவர்கள் சந்திப்பு.
உலகப் பொருளாதாரத்தைப் பேரழிவிலிருந்து மீட்க இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. இதன் பிறகு யூரோ மண்டலத்தின் கடன்களிலிருந்து வங்கிகளை மீட்க 110 பில்லியன் பவுண்டு தேவைப்படும்.
பிரிட்டன் பிரதமர் கமரூன் 26 ஐரோப்பிய உறுப்பினர்களுடன் பிரஸ்ஸல்ஸ் மாநகருக்குச் செல்கிறார். பிரிட்டனின் பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும் நிலைமைகளைச் சமாளிக்கவும் வளர்ந்து வரும் வங்கிக்கடன் நெருக்கடியைத் தீர்க்கவும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி நாட்டு அதிபர்களுக்கிடையே இருந்து வரும் மனக்கசப்பினால் இவர்கள் பொருளாதார மீட்சிக்கு ஒற்றுமையாக ஒத்துழைப்பதில்லை. இதனால் மீண்டும் வரும் புதன்கிழமை மற்றொரு தலைவர்கள் கூட்டம் நடக்கின்றது. இந்தக் கூட்டத்திலும் நல்ல முடிவு கிடைக்கவில்லை என்றால் குழப்பம் ஏற்படும்.
வங்கிகளால் 70 முதல் 110 பில்லியன் பவுண்டு வரை கொண்டுவர முடியவில்லை என்றால் பொதுத்துறை நிறுவனங்கள் இத்தொகையை வங்கிக்கு வழங்க வேண்டும். புதன்கிழமை நடைபெறும் கூட்டத்தில் கிரீஸ் நாட்டுக் கடனைத் தீர்க்க பெரிய அளவில் பிணையத் தொகையை யூரோ மண்டலத்தின் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
யூரோ மண்டலப் பிரச்சனைக்கான தீர்வு உலகளவிலும் பிரிட்டன் நாட்டின் வளர்ச்சிக்கும் பெரியளவில் ஊக்கம் கொடுக்கும் என்று ஜார்ஜ் ஆஸ்பான் தெரிவித்தார்.
பிரான்ஸ் நாட்டிற்கு 383 பில்லியன் பவுண்டு வங்கியில் செலுத்த தேவைப்படுகிறது. இதன் பிறகு ஐரோப்பிய மத்திய வங்கியில் இருந்து பணத்தை பிரான்ஸ் பெற முடியும். ஆனால் இந்தப் பணப் பரிவர்த்தனைக்குத் தடையாக ஜேர்மனி குறுக்கே நிற்கிறது.
அதிகாரிகள் பிரிட்டிஷ் வங்கிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் கண்ணுங்கருத்தமாய் செயல்படுகின்றனர். ஸ்காட்லாந்தில் உள்ள ராயில் வங்கி பகுதி தேசியமயமாக்கப்பட்டது.
யூரோ மண்டலம் நிதிச்சரிவின் போது இவ்வங்கியை மீட்க அரசுக்கு அதிக அளவில் பணம் தேவைப்படும். தங்கள் வங்கிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் யூரோ மண்டல நிதி நெருக்கடியைச் சமாளிக்க பிரிட்டன் ஐரோப்பியத் தலைவர்களின் முழு ஒத்துழைப்பையும் விரைந்த செயற்பாட்டையும் எதிர்பார்ப்பதில் வியப்பொன்றும் இல்லை.
அடுத்த அதிபர் தேர்தலில் சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஹாலண்டி போட்டி.
சுமார் 4000 உறுப்பினர்களைக் கொண்ட சோசலிஸ்ட் கட்சியும், அதன் ஆதரவாளர்களும் பாரிசில் ஒன்று கூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
அடுத்த வருடம் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளராக ப்ரான்காய்ஸ் ஹாலண்டியை நியமிப்பதாக அறிவித்தனர். பிரான்சின் எதிர்கட்சியான சோசலிஸ்ட் கட்சியானது தங்கள் வேட்பாளரான ஹாலன்டி தேர்தலில் ஜெயிப்பார் என்று கருத்து வெளியிட்டது.
பிரான்சில் நடந்த கணக்கெடுப்பின் படி, ஹாலண்டி 2.8 பில்லியன் வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இரண்டாவது கணக்கெடுப்பின்படி 64 சதவீத வாக்கு வித்தியாசத்தில் அவர் ஜெயிப்பார் என்று கூறப்பட்டது.
பிரான்சின் சோசலிஸ்ட் கட்சியும், அதன் ஆதரவாளர்களும் இந்த முடிவுகளை அறிந்து ஆரவாரம் செய்தனர். 57 வயதான ஹாலண்டி சட்டம் அறிந்தவர், ஆனால் அமைச்சராக பணிபுரிந்தது கிடையாது. தன்னை எதிர்த்து நின்ற 5 வேட்பாளர்களை தோற்கடித்தவர்.
இப்போது இருக்கும் அதிபர் சர்கோசியைப் போன்று ஹாலண்டிக்கு பிரான்சை வழிநடத்திச் செல்வதற்கு தேவையான அனுபவம் கிடையாது என்றும், அவர் சர்கோசியை தனக்கு சாரம்சமாக பின்பற்ற வேண்டும் என்றும் கருத்துக் கணிப்பாளர்கள் கூறினர்.
பாகிஸ்தானில் 231 எம்.பி, எம்.எல்.ஏக்கள் தற்காலிக பதவி நீக்கம்.
குறித்த காலவரையறைக்குள் தங்களது சொத்துக்கணக்கை அளிக்காத காரணத்துக்காக 231 எம்.பி, எம்.எல்.ஏ.க்களை தற்காலிக பணிநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது உடனடியாக அமலுக்கும் வந்துள்ளது. தற்காலிகமாக பதவி இழந்தவர்களில் நிதி அமைச்சர் அப்துல் ஹபீப் சேக், உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக், பாதுகாப்பு அமைச்சர் சௌதிரி அகமது முக்தர், வர்த்தக அமைச்சர் மக்தூம் அமின் பாகிம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
நாடாளுமன்ற கீழவையில் 13 பேரும், மேலவையில் 103 உறுப்பினர்களும்,115 சட்டமன்ற உறுப்பினர்களும் ஆக மொத்தம் 231 பேர் தங்களது சொத்துக் கணக்கை குறித்த காலத்துக்குள் தாக்கல் செய்யவில்லை.
ஆண்டுதோறும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் செப்டம்பர் 30ம் திகதிக்குள் தேர்தல் ஆணையரகத்திடம் சொத்துக்கணக்கை தாக்கல் செய்வது கட்டாயம் ஆகும்.
கடாபியின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்: ஐ.நா வலியுறுத்தல்.
லிபிய சர்வாதிகாரி கடாபியின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணைய அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது: கடாபி சண்டையின் போது கொல்லப்பட்டாரா அல்லது பிடிபட்டப்பின் கொல்லப்பட்டாரா என்பது விசாரிக்கப்பட வேண்டும். அவரின் இறுதி நிமிடங்களைக் காட்டும் இரண்டு செல்போன் வீடியோ பதிவுகள் தெளிவில்லாமல் உள்ளன.
எட்டு மாதகால உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு இதை அறியும் உரிமை உள்ளது. கொடுங்கோலர்களாக இருந்தாலும் அவர்களும் நீதி முன்பு நிறுத்தப்பட்ட பின்புதான் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
அனைத்துத் தரப்பினரும் ஆயுதங்களை வைத்து விட்டு, ஒன்றிணைந்து பணியாற்றி லிபியாவில் புதிய அத்தியாயத்தை தொடங்க வேண்டும் என்று ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கேமரூன் அதிபராக பியா ஆறாவது முறையாக தேர்வு.
கேமரூன் அதிபராக ஆறாவது முறையாக பால் பியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேமரூன் நாட்டில் அதிபர் தேர்தல் கடந்த 9ம் திகதி நடைபெற்றது. அதில் 66 சதவீத மக்கள் வாக்களித்தனர்.
தேர்தலில் இப்போதைய அதிபர் பால் பியா, எதிர்க்கட்சித் தலைவர் ஜான் ஃப்ரு நிடி உள்ளிட்டோர் போட்டியிட்டனர். வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன.
இதில் பால் பியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு 78 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நிடிக்கு வெறும் 11 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே கிடைத்தன.
78 வயதான பால் பியா அந்நாட்டின் அதிபராக கடந்த 29 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். அவர் கேமரூன் மக்கள் ஜனநாயக இயக்கம் என்ற கட்சியைச் சேர்ந்தவர்.
தேர்தல் முடிவுகள், மக்களின் முடிவு என அக்கட்சியின் பொதுச் செயாலாளர் ரெனி சாடி தெரிவித்தார். தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்குத் தொடரப் போவதாக சமூக ஜனநாயக ஃபண்ட் கட்சி தெரிவித்துள்ளது.
அதிபர் தேர்தலில் தோவ்வியை தழுவிய நிடி இக்கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் தேர்தலை எதிர்த்து தோல்வி அடைந்த மேலும் 6 வேட்பாளார்கள் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். எதிர்க்கட்சிகள் நாட்டில் குழப்பத்தை உண்டாக்க முயல்வதாக அதிபர் பியா கூறினார்.
அசம்பாவிதங்களை தவிர்க்க பொலிசார் பதற்றம் நிறைந்த பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். வர்த்தக தலைநகரான தாவ்லாவில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் 66 சதவீத வாக்குகளும், 1997ல் நடந்த தேர்தலில் 81 சதவீத வாக்குகளும் பதிவாகின. தேர்தலில் அனைத்து நிலைகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக கேமரூன் நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் ஜாக்சன் கூறியுள்ளர்.
ஏமன் அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும்: ஐ.நா.
ஏமனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது அதிகளவில் ராணுவ வன்முறையை பிரயோகித்து வரும் அதிபர் சலே உடனடியாகப் பதவி விலக வேண்டும் என ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் கூறியுள்ளது.
ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் நேற்று ஏமன் தொடர்பாக முக்கிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
அதில் வளைகுடா கூட்டுறவு கவுன்சில் பரிந்துரைகள் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். அதற்கு ஏதுவாக அதிபர் உடனடியாக பதவி விலகி தனது பொறுப்பை துணை அதிபரிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஏமனில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று தலைநகர் சனாவில் ராணுவத்திற்கும் எதிர்த்தரப்பிற்கும் இடையிலான மோதல் கடுமையாக நடந்தது.
எதிர்த்தரப்பினர் முகாமிட்டுள்ள பகுதிகளின் மீது சலே ராணுவம் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதால் புகை மண்டலமாக காட்சியளித்தது. சில இடங்களில் சலேவுக்கு ஆதரவான பேரணிகளும் நடத்தப்பட்டன.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் வேறு கல்வி நிறுவனங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவர்: அமெரிக்க அதிகாரிகள்.
டிரிவேலிப் பல்கலைக்கழகத்தால் மோசடி செய்யப்பட்ட இந்திய மாணவர்களில் 435 பேரை வேறு கல்வி நிறுவனங்களில் சேர்த்துக் கொள்ள அமெரிக்க அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ப்ளசன்டன் என்ற இடத்தில் இயங்கி வந்த டிரிவேலி பல்கலைக்கழகத்தின் விசா மோசடியால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து டிரிவேலி பல்கலைக்கழகம் கடந்த ஜனவரியில் இழுத்து மூடப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்களில் பெரும்பாலோர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவர்களை வேறு கல்வி நிறுவனங்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என இந்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு, வெளியுறவு, குடியேற்றம் ஆகிய துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பாதிக்கப்பட்ட மாணவர்களில் 435 பேரை வேறு கல்வி நிறுவனங்களில் சேர்க்க ஒப்புக் கொண்டனர். ஆனால் 145 பேரை வேறு கல்வி நிறுவனங்களில் சேர்க்க மறுப்பு தெரிவித்தனர்.
மேலும் 145 பேருக்கு குடியேற்றச் சலுகைகளை ரத்து செய்யும் “நோட்டீசஸ் ஆப் இன்டென்ஷன் டூ டினை” என்ற நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
இவர்கள் மறு குடியேற்றத்துக்கு இன்னும் 30 நாட்களில் உரிய ஆவணங்களுடன் மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும் சிலரது கல்வி நிறுவன மாற்றம் குறித்த வழக்குகள் பரிசீலனையில் உள்ளன.
புரட்சிக்கு வித்திட்ட துனிஷியாவில் இன்று பொதுத் தேர்தல்.
அரபு நாடுகளின் புரட்சிக்கு வித்திட்ட துனிஷியா நாட்டில் இன்று பொதுத் ‌தேர்தல் நடைபெற உள்ளது.
மொத்தமுள்ள 218 உறுப்பினர்கள‌ை தேர்ந்தெடுப்பதற்காக 100க்கும் மேற்பட்ட கட்சிகள் மோதும் பொது தேர்தல் இன்று நடைபெறுகிறது.
கடந்த ஜனவரி மாதம் துனிஷியாவில் புரட்சி வெடித்தது. இதனையடுத்து அங்கு ஆட்சியில் இருந்த அதிபர் ஆட்சி அகற்றப்பட்டு இடைக்கால அரசு பதவி‌‌யேற்றது.
‌தொடர்ந்து பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து சுதந்திர அமைப்பு கொண்ட தேர்தல் கமிஷனை அமைத்தது. பின்னர் அக்டோபர் மாதம் 16ம் திகதி பொது தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
ஆனால் வாக்காளர் பட்டியல் புதிய வாக்களார்களை சேர்ப்பது மற்றும் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது என பிற பணிகள் இருப்பதை அரசியல் கட்சிகள்‌ சுட்டிகாட்டியதை தொடர்ந்து இன்று(23ம் திகதி) தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அத‌னை தொடர்ந்து இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்த ‌தேர்தலில் நாட்டில் உள்ள மக்‌கள் தொக‌ையில் சுமார் 7.9 மில்லியன் மக்கள் வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் மாத கணக்கெடுப்பின் படி 55 சதவீத மக்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக உள்ளனர். அந்நாட்டில் 100க்கும் மேற்பட்ட கட்சிகள் இருந்த போதிலும் நஹ்தா கட்சிக்கும், புரோகிரசிவ் டெமாக்ரடிக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெறும் தேர்தலின் முடிவு அரசியல் கட்களின் ஆ‌லோசனைப்படி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
கடாபியின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் திட்டம் இல்லை: ஜலீல்.
கொலை செய்யப்பட்ட லிபியா சர்வாதிகாரி கடாபியின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் திட்டம் இல்லை எனவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என லிபியா இடைக்கால கவுன்சில் தெரிவித்துள்ளது.
லிபியாவை கடந்த 42 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி செய்த கடாபி கடந்த வெள்ளியன்று சிர்தே நகரில் கிளர்ச்சியாளர்களால் கொடூரமாக தாக்கப்பட்டும், துப்பாக்கியால் சுடப்பட்டும் கொலை செய்யப்பட்டார். தற்போது மிஸ்ரட்டாவில் உள்ள காய்கனி சந்தையில் குளிர்சாதன பெட்டியில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து லிபியா இடைக்கால கவுன்சில் தலைவர் முஸ்தாபா அப்துல் ஜலீல் கூறுகையில், கடாபி கொல்லப்படுவதற்கு முன்பு எப்படி பிடிப்பட்டார். அவரை கிளர்ச்சியாளர்கள் ‌கொடூரமாக தாக்கியதும், பின்னர் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டதும் வீடியோ காட்சிகள் ‌மூலம் தெரிகிறது.
தற்போது அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யும் எண்ணமில்லை. எனினும் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.
தற்போது அல்ஜீரியாவில் தஞ்சமடைந்துள்ள கடாபியின் மனைவி சபீயா கூறுகையில், கடாபி கொல்லப்பட்டதில் மனித உரிமை மீறல் நடந்துள்ளது. ஐ.நா விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
சவுதி அரேபிய இளவரசர் மரணம்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் சுல்தான் பின் அப்துல் லாசிஷ் அல்-சவுத். புற்றுநோயால் அவதிப்பட்ட அவர் கடந்த ஜுன் மாதம் முதல் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அங்கு அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86.
கடந்த 40 ஆண்டுகளாக சவுதி அரேபியாவின் ராணுவ மந்திரியாகவும், விமான போக்குவரத்து துறை மந்திரியாகவும் பதவி வகித்தார்.
அவரது இறுதி சடங்கு வருகிற 25ந் திகதி(செவ்வாய்க்கிழமை) சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடக்கிறது. இந்த தகவலை சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
சிகரெட் பிடித்தபடி உயிரை விட்ட கடாபியின் மகன்.
சிர்த் நகரில் பதுங்கியிருந்த போது கடாபி கொல்லப்பட்டார். இந்த சண்டையின் போது அதை வழிநடத்தி சென்ற அவரது மகன் முட்டாசிம் கடாபியும் புரட்சி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது உடலை பொது மக்கள் பார்வைக்காக புரட்சிப்படையினர் வைத்திருந்தனர். அப்போது அவர் பேண்ட் மற்றும் பனியன் அணிந்திருந்தார்.
கழுத்தில் குண்டுகள் துளைத்ததால் காயம் இருந்தது. இதனால் உடல் முழுவதும் ரத்த வெள்ளமாக காட்சி அளித்தது. சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு அவர் ஒரு மறைவிடத்தில் பதுங்கி இருந்தார்.
இதை அறிந்த புரட்சி படை அங்கு சென்றது. அப்போது அவர் வலது கையில் பாட்டிலை பிடித்து தண்ணீர் குடித்து கொண்டிருந்தார். இடது கையில் சிகரெட்டை பிடித்தபடி புகைத்து கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் புரட்சி படை வீரர்கள் அவரை சுட்டுக்கொன்றனர். எனவே அவர் பிணமாக கிடந்த இடத்தில் பாதி தண்ணீர் பாட்டிலும், பாதி நிலையில் எரிந்த சிகரெட்டும் கிடந்தது.

இறுதி கட்ட சண்டையின் போது கடாபி அவரது மகன் மற்றும் ஆதரவாளர்கள் பலர் பலியாகினர். இதற்கிடையே கடாபியின் நெருங்கிய ஆதரவாளர் சயீப்- அல்-இஸ்லாம் குண்டு காயங்களுடன் உயிருடன் பிடிபட்டார்.
தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது புகைப்படம் விரைவில் வெளியிடப்படும் என இடைக்கால அரசு அல் அரேபியா தொலைக்காட்சியில் அறிவித்தது. கடாபியின் சொந்த ஊரான சிர்த் நகரம் இவரது கட்டுப்பாட்டில் தான் இருந்தது. இவர் தான் ராணுவத்தை வழி நடத்தி சென்றார்.


சர்வதேச அளவில் தேடப்படும் தீவிரவாதியின் பெயர் அறிவிப்பு.
ஜேர்மன் காப்பீட்டாளர் விக்டோரியா தீவிரவாதி ஒருவருடன் இணைந்து சுமார் இரண்டு வருடங்களுக்கும் மேலாக காப்பீடு ஒப்பந்தம் செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை அந்நாட்டின் செய்தி நாளிதழான ஹாண்டல்ஸ்பாலட் வெளியிட்டிருந்தது. மேலும் அந்த நாளிதழில் வெளியான செய்தியில் அந்த தீவிரவாதியின் பெயர் யாசர் அபு ஷாவீஸ் எனவும், அவர் பாலஸ்தீனத்தை சேர்ந்தவன் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவன் பல மோசடிகள் செய்து சிறப்பு சான்றிதழ், சாலை விபத்து இவற்றிற்காக காப்பீட்டாளரிடமிருந்து நிறைய காப்பீட்டு ஒப்பந்தங்கள் செய்துள்ளான்.
அவ்வாறு பெற்ற தொகையை ஒருங்கிணைந்த நாடுகளில் இருக்கும் தன்னுடைய தீவிரவாத குழுவுக்கு செலவிட திட்டமிட்டிருந்தான் என தெரியவந்துள்ளது. அவனுடைய தீவிரவாத குழுவானது அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்பு கொண்டது.
யாசர் அபு செப்டம்பர் 2004ல் விக்டோரியாவுடன் நிறைய காப்பீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டான். அதில் தன் பெயரில் 21,805 டொலரும், தன் மனைவி பெயரில் 21,660 டொலரும் மற்றும் மூன்றாம் நபரின் பெயரில்  2 மில்லியன் டொலரும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சட்டம் மற்றும் பாதுகாப்பு அலுவலகம் கொடுத்த எச்சரிக்கையின் மூலம் அபு ஷாவீஸின் ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தம் ரத்தானது. ஆனால் அவன் மனைவி மற்றும் மூன்றாம் நபர் மூலம் செய்யப்பட்ட கடன் காப்பீடு மட்டும் டிசம்பர் 2006 வரை தொடர்ந்தது.
ஒருங்கிணைந்த நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் அளித்த தகவலின் படி 2009ல் அபு சாவீஸ் 9 காப்பீடு ஒப்பந்தங்கள் செய்து கொண்டான். அதன் மதிப்பு 1.2 மில்லியன் டொலர். மேலும் அவன் செய்த 19 காப்பீட்டு ஒப்பந்தங்களின் மதிப்பு டொலர் 4 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பத்திரிக்கை பிரதிநிதி அலெக்சாண்டர் பெக்கர் கூறுகையில், அபு சாவீஸ் 2004-2006ம் ஆண்டுகளில் ஒருங்கிணைந்த நாடுகளில் தேடப்படும் குற்றவாளியாக இருந்தான்.
2007ல் அவன் செய்த பல மோசடி செயல்களுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான். அவன் குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டு ஐந்தரை வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றான் என குறிப்பிட்டார்.
கனடா மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரம் வலுவடைய வேண்டும்.
கனடாவின் பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் குறித்துத் தான் கவலைப்படவில்லை என்றும் ஜரோப்பா பற்றியே அதிகம் கவலைப்படுவதாகவும் கனடா நிதிமந்திரி ஜிம்ஃபிளாஹெர்ட் தெரிவித்தார்.
ஜரோப்பாவின் கடன் நெருக்கடி தீர்ந்தால் மட்டுமே மேற்கத்திய நாடுகளின் நிதிநிலை சீறாகும். கடந்த செப்டம்பர் மாதத்தில் கனடாவில் பணவீக்கம் 3.2 % மாக உயர்ந்தது. விலைவாசி ஒன்று முதல் மூன்று சதவீதம் வரை ஏறியும் இறங்கியும் இருந்துவந்தன.
ஆயினும் கனடாவின் வளர்ச்சி அதாவது பொருளாதார வளர்ச்சி குறித்து அக்கறைப்படுவதாக நிதிமந்திரி ஒட்டவா நகரில் நடந்த ஒரு கூட்டத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார். வடமெரிக்கா இன்னும் பிற்காலத்தில் வேலைவாய்ப்புகளில் பிரதிபலிக்கக் கூடிய வகையில் பொருளாதார முன்னேற்றம் தென்படுகின்றது.
ஜரேப்பா மற்றும் அமெரிக்காவில் எதிர்பார்க்கப்படும் இன்னொரு பொருளாதார மந்தநிலை மற்றும் சீனாவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஆகியன அண்மைக் காலங்களில் கனடா நாட்டின் ஏற்றுமதியில் மிகுந்த பாதிப்பில் ஏற்படுத்தியுள்ளது. இப்பாதிப்பு இந்த நாட்டின் பொருளாதாரச்சிறப்புக்கு ஆதாராமாக இருந்த ஏற்றுமதித்துறையை வலுவிழக்கச் செய்துள்ளது. பொருளாதார பாதிப்பு நாட்டின் 1.4 மில்லியன் பேரை வேலையில்லாத திண்டாட்டத்தில் சிக்க வைத்துள்ளது.
இதனால் இந்நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்தின் விகிதம் 7.1 சதவீதமாகி விட்டது. அடுத்த ஆண்டு கனடாவன் பொருளாதாரம் 2.4 உயர்வை எட்டும். ஆனால் அமெரிக்காவோ 2.5 சதவீதம் உயர்வை எட்டிப் பிடிக்கும். கடன் பிரச்சனை வங்கி செயற்பாடுகளை முடக்கும் உலகளாவிய நிதிநெருக்கடி புதிதாகத் தோன்றும். அப்பொழுது 2008 இல் லேமன் சகோதரர்கள் நிறுவனங்களில் ஏற்பட்ட நெருக்கடி போலப் புதிய நெருக்கடிகள் உருவாகக் கூடும். எனவே ஜரோப்பிய தலைவர்கள் நிதிநெருக்கடி குறித்து விரிவாக சிந்தித்து தக்க தீர்வுகளை ஆராய்ந்து தங்கள் தலைமைப்பண்பை உறுதிப்படுத்த வேண்டும்.
ஃபிளாஹெர்ட்டிக்கு எரிச்சலுட்டும் நிலை என்னவென்றால் பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் நாட்டுத்தலைவர்கள் தனித்தனியே அறிக்கை வெளியிடுவது தான். இவர்கள் சேர்ந்து சிந்திக்க வேண்டும் என்று கனடா நிதியமைச்சர் விரும்புகிறார். ஜரோப்பாவில் நிதி நெருக்கடிக்கான தீர்வில் அவசரம் காட்டாமல் வாரக்கணக்காக காலந்தாழ்த்துவது குறித்து பிரிட்டன் மற்றும் அமெரிக்கத் தலைவர்களும் ஃபிளாஹெர்ட்டியும் கோபமும் எரிச்சலும் அடைகின்றன.
ஜரோப்பாவின் போக்கு உலகப் பொருளாதாரத்திற்கு அபாயச்சங்கு ஊதுகின்றது என்பது கனடா நிதியமைச்சரின் கவலையாகும். தாமதப்போக்கினை தலைவர்கள் உடனடியாகத் தம் சந்தை நிலையை அறிந்து தனது பொருளாதார வீழ்ச்சி பிறநாடுகளிடம் ஏற்படுத்தும் தாக்கத்தை உணர வேண்டும் அதிகமாக கடன் வாங்குவதும் அந்தக் கடனுக்கு கூடுதலாகத் தவனைத்தொகை காட்டுவதும் பொருளாதாரச் சீர்கேட்டை விலைவிக்கும் என்பதை உணர வேண்டும் என்கிறார்.
தான் கனடாவின் நிதியமைச்சராக இருப்பது குறித்து மகிழ்ச்சியும் பெருமிதமும் தெரிவித்தார். மற்ற வளர்ந்த நாடுகளை விட கனடா பொருளாதார நிலையில் வீழ்ச்சி அடையாமல் இருப்பதற்கு காரணம் தொழில்வரியை குறைத்தது தான் என்கிறார். இதனால் தொழில்வளம் பெருகி பொருளாதார நிலை மோசம் அடையாமல் இருக்கிறது. ஜரோப்பியாவில் நிதிநிலைமை சீரடைந்தால் அமெரிக்காவிலும் கனடாவிலும் பொருளாதாரம் பலம் பெறும் என்பது கனடா நிதியமைச்சரின் கருத்தாகும்.
கடாபியின் சொத்துக்களை தேடும் புரட்சி படை.
லிபியாவில் கொல்லப்பட்ட அதிபர் கடாபி உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கில் சொத்துக்கள் மற்றும் பணத்தை குவித்து வைத்துள்ளார்.
அவற்றை மீட்கும் முயற்சியில் லிபிய புதிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். லிபியாவுக்கு கச்சா எண்ணெய் மூலம் பல ஆயிரக்கணக்கான கோடி வருவாய் கிடைக்கிறது.
இதை அதிபர் கடாபி, அவரது மகன்கள், குடும்பத்தார் பல நாடுகளில் குவித்துள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பா, தென் ஆப்ரிக்கா போன்ற பல நாடுகளில் சொத்துக்கள் உள்ளன.
அவற்றை மீட்க சட்டரீதியான நடவடிக்கைகளை லிபியாவின் புதிய தலைவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
தவிர உள்நாட்டிலேயே தலைநகர் திரிபோலி கடாபியின் சொந்த ஊரான சிர்தே போன்ற நகரங்களில் ஏராளமான டொலர்கள் மற்றும் தங்கத்தை கடாபி புதைத்து வைத்துள்ளார். அவற்றை கண்டுபிடிக்கவும் பல இடங்களில் தோண்டி பார்த்து வருகின்றனர்.
அமெரிக்காவில் முதலீடு செய்துள்ள பல ஆயிரக்கணக்கான கோடி டொலர் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தொகையை லிபிய புரட்சி படையினருக்கு வழங்க ஐ.நா. அனுமதி வழங்கியது.
சட்டவிரோதமாக வெளிநாடுகளில் குவிக்கப்படும் பணம், சொத்துக்களை மீட்டு சம்பந்தப்பட்ட நாட்டுக்கே வழங்குவது தொடர்பாக சர்வதேச சட்டவிதிகள் எதுவும் இல்லை.
ஆனால் உலக நாடுகளின் ஒப்புதலுக்கு பின் அந்த பணத்தை அறக்கட்டளையாக நிர்வகிக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
லிபியாவின் வெற்றி: சிரியா, ஏமன் புராட்சியாளர் உற்சாகம்.
லிபியாவின் தலைவர் கடாபியின் மரணம் சிரியா, ஏமன் புரட்சியாளர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையயும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சிரியா நாட்டில் ஹோம்ஸ் இட்லிப் போன்ற நகரங்களின் தெருக்களில் மக்கள் “இன்றைக்கு கடாபி, நாளைக்கு நீ” என்று தங்கள் நாட்டின் அதிபரான பஷாரின் பெயரை உறக்கக் கூறினார்.
சிரியாவில் பல இடங்களில் தேசியப் பாதுகாப்பு படையினர் எந்திரத்துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை இராணுவ வண்டிகளில் சுமந்தவாறு சென்று சுமார் 24 பேரைக் கொன்றனர்.
சிரியாவின் ஒன்றிணைப்புக் குழுக்கள் இந்தப் படையினரை எதிர்த்து போராடின. இப்போரட்டம் ஒரு மக்கள் போராட்டமாகும். கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து நடத்தும் விடுதலை போராகும்.
ஏமன் நாட்டிலும் அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் புரட்சி செய்து வருகின்றனர். பதினேழு மாகாணங்களில் புரட்சி வெடித்தது. ஆயிரக்கணக்கானோர் கூடினர்.
“சலே(அதிபர்) இன்று கடாபியன் நிலையைப் பார். அவரது படைகளால் அவரைக் காப்பற்ற இயலவில்லை நாளை உனக்கும் இதே நிலைமைதான்” என்று உரத்த குரலில் கூறிச் சென்றனர்.
பெண்கள் ஏமன் நாட்டில் நடைபெறும் சமாதானப்புரட்சி வெற்றி பெற ரோஜாகொத்துக்களை ஏந்திச் சென்றனர். கடாபிக்கு ஏற்பட்ட நிலைமையைப் பார்த்தபிறகு சலே உறங்க மாட்டார்.
கடாபி தன்னைவிட வலிமையானவர் என்பது அவருக்கு தெரியும். இருப்பினும் அவர் புரட்சியாளரால் வீழ்த்தப்பட்டார்.
சனா என்ற நகரத்தில் வாழும் இளம் போராளி முகம்மது அல் சலாமி அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை குறித்துப் பேசும் போது, இது மக்களின் காலம். எங்கள் சொத்துக்களை அபகரிக்க விரும்பும் குடும்பங்கள்(அதிபர்) இனியும் எங்களை ஆட்சிசெய்வதை நாங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது என்றார்.
ஆப்கனில் 24 பயங்கரவாதிகள் கொலை.
ஆப்கனில் நடந்த வெவ்வேறு சண்டைகளில் 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 10 பேர் உயிருடன் பிடிபட்டுள்ளனர்.
இந்த தகவலை சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
ஆப்கன் தேசிய பொலிஸ், ஆப்கன் ராணுவம் மற்றும் நேசப் படையினர் இணைந்து காபூல், காஸ்னி, கந்தகார் மாகாணங்களின் ஐந்து இடங்களில் இந்த அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் பிடிபட்டதாகவும் ஆப்கன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர்களிடம் இருந்து ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் 12, கைத்துப்பாக்கி 3, இயந்திரத் துப்பாக்கி 1, ஒரு வாகனம், 568 துப்பாக்கி ரவைகள், 100 கிலோ வெடிமருந்து, 2 கிலோ போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஹக்கானி தீவிரவாதிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பு.
ஹக்கானி தீவிரவாதிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியதாக கிளிண்டனின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தலிபான்களை நேரில் சந்தித்து அவர்களின் ஆர்வத்தையும் உறுதியையும் சோசித்து பார்த்ததாகவும் தெரிவித்தார்.
ஹிலாரி கிளிண்டன் கூறுகையில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து நடத்தும் பேச்சுவார்த்தையே உண்மையான பேச்சுவார்த்தையாக இருக்க முடியும். ஆனால் இவ்வாறு பேசுவதால் மட்டுமே தலிபான் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்து விடாது என்றும் கூறினார்.
ஆப்கானிஸ்தான் மேற்கொள்ளும் சமாதான முயற்சிக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என்றும், இதனால் இனி வன்முறை இருக்காது, அல்கொய்தா இயக்கம் இருக்காது, ஆப்கானிய பெண்கள் சமஉரிமை பெறுவர், சட்டம் நீதியும் மதிக்கப்படும் என்றார். இந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை அமைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானும், அமெரிக்காவும் போரிட வேண்டும், சமாதானமாய் போகக்கூடாது என்று எவர் நினைத்தாலும் அதற்கும் அமெரிக்கா தயாராக இருக்கிறது என்றும் ஹிலாரி குறிப்பிட்டார்.
சமாதான முயற்சி வெற்றி பெற அமெரிக்கா மாதக்கணக்கில் காத்திருக்காது, ஒரு சில நாட்களில் அல்லது வாரங்களில் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்துகிறது.
நிலைமையின் அவசரத்தையும் அவசியத்தையும் கருத்தில் கொண்டு விரைவாகப் பேசி மூன்று நாடுகளும் சேர்ந்து ஒரு முடிவெடுக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா அக்கறை காட்டுகிறது என்றார்.
பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டும் என்றால் நீங்கள் தொடர்ந்து போரிட வேண்டும் என்ற ஹிலாரி கிளிண்டனின் கருத்தும் வெளிப்பட்டது.
சண்டையை நிறுத்தாமல் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்துவது அமெரிக்காவின் புதிய முறையிலான அமைதிக் கொள்கையாகும்.
ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் இடம்பிடித்தது.
ஐ.நா சபையில் இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. இதுதவிர 5 நாடுகள் ஓராண்டுக்கு தற்காலிக பதவி வகிக்கும்.
இந்த 5 நாடுகள் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படும். இதற்காக ஐ.நா உறுப்பு நாடுகள் ஓட்டளிக்க வேண்டும். கடந்த 2003ம் ஆண்டுக்கு பின் பாகிஸ்தானுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இந்தாண்டு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக இடம்பெற பாகிஸ்தான் முயற்சி செய்தது. காஷ்மீர் பிரச்னையால் இதற்கு இந்தியா ஆதரவு அளிக்குமா என்று பல நாடுகள் சந்தேகப்பட்டன.
ஆனால் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் இடம்பெற இந்தியா ஆதரவு அளித்தது. மேலும் பல நாடுகள் ஆதரவு தெரிவிக்க கவுன்சிலில் இடம்பெற பாகிஸ்தான் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதையடுத்து ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல்லா உசைன் ஹாரூணை கட்டியணைத்து ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ஹர்தீப் சிங் புரி வாழ்த்து தெரிவித்தார். இதை பார்த்து பல நாட்டு தலைவர்களும் ஆச்சரியப்பட்டனர்.
இதுகுறித்து அப்துல்லா கூறுகையில், இந்த நாள் மிகச் சிறந்த நாள். இந்திய தூதருக்கும் இந்தியாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாடுகளுக்கு இடையில் காஷ்மீர் பிரச்னை உள்பட பல பிரச்னைகள் உள்ளன.
காஷ்மீரை பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும். கவலைப்பட ஒன்றுமில்லை. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற பாகிஸ்தானுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று நம்பினேன். அது நடந்தது என்றார்.
ஹர்தீப் சிங் கூறுகையில்,“பல பிரச்னைகளில் இருநாடுகளுக்கும் ஒத்த கருத்து உள்ளது” என்றார்.
டிராம் வண்டியை திருடிச் சென்று அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த சிறுவன்.
ரஷ்யாவில் டிராம் வண்டியை திருடி சென்ற சிறுவனை 40 நிமிடங்களுக்கு பின்னர் பொலிசார் மடக்கி பிடித்தனர்.
ரஷ்யாவின் ஜிலாடவுஸ்ட் மாகாண யுரால்ஸ் நகரை சேர்ந்த 15 வயது சிறுவன்(பெயர் வெளியிடவில்லை) டிராம் வண்டியை திருடி சென்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளான்.
இதுகுறித்து ஜிலாடவுஸ்ட் மூத்த பொலிஸ் அதிகாரி பாவெல் பாவ்லோவ் கூறியதாவது: சமீபத்தில் யுரால் பகுதியில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராம் வண்டியை சிறுவன் ஓட்டிச் சென்று விட்டான். வண்டி வழக்கமாக நிற்கும் நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளான்.
அதேபோல் பயணிகள் இறங்க வேண்டிய இடங்களிலும் டிராமை நிறுத்தி உள்ளான். டிராம் ஓட்டுவது சிறுவன் என்பது தெரியாமல் மக்களும் அதில் பயணம் செய்துள்ளனர்.
டிராம் காணாமல் போன தகவல் கிடைத்தவுடன் உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கினோம். சுமார் 40 நிமிடங்கள் கழித்து அதை மடக்கினோம். அதை ஓட்டியது சிறுவன் என்று அதிர்ச்சி அடைந்து விட்டோம்.
டிராம் வண்டி பற்றி அவன் அதிகமாக படித்திருக்க வேண்டும். வண்டியை எப்படி இயக்குவது, எப்படி நிறுத்துவது என்று நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் வண்டியை அவ்வளவு எளிதாக ஓட்ட முடியாது. 40 நிமிடங்களாக டிராம் ஓட்டினாலும் எந்த விபத்தையும் சிறுவன் ஏற்படுத்தவில்லை. இதுகுறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
வண்டியை திருடுபவர்களுக்கு 5 ஆண்டு தண்டனை விதிக்கப்படும். ஆனால் சிறுவனின் எதிர்காலம் கருதி அவனை கைது செய்யவில்லை. கடுமையாக எச்சரித்தோம்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF