Friday, October 28, 2011

இன்றைய செய்திகள்.




 ''கறுப்பு ஒக்டோபர் 2011'' 
வடமாகாண முஸ்லிம்கள் வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு இந்த ஒக்டோபர் மாதத்துடன் 21 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. இந்த சம்பவம் ஆண்டுதோறும் வடமாகாண முஸ்லிம்களால் நினவு கூறப்படுகின்றது.இந்த ஆண்டும் நினைவுகூறும் நிகழ்வுகள் இன்று தொடக்கம் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை கொழும்பு ,கண்டி, புத்தளம், மன்னார், யாழ்பாணம் ஆகிய பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த ''கறுப்பு ஒக்டோபர் 2011''  நிகழ்வுகளின் கருப்பொருளாக முஸ்லிம் மீள்குடியேற்றத்தை ஊக்கிவித்தல், தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் மீண்டும் புரிந்துணர்வையும் , ஒருமைப்பாட்டையும் ஊக்குவித்தல். வடமாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் போது மிகப்பெரிய கொள்ளை சம்பவமொன்றும் இடம் பெற்றுள்ளது.
அது வரலாற்றில் சரிவர பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துதல் ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டு சொற்பொழிவு, தமிழ், முஸ்லிம் சமூக கலந்துரையாடல், இரத்ததானம், விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டல் ஆகிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஷ
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் வாலிபர் போரம் மேற்கொண்டுள்ளது.இதன் முதல் கட்டமாக விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதுடன் , சொற்பொழிவு நிகழ்சிகள் இன்று நாளையும் புத்தளத்திலும் கண்டியிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இவற்றை அஷ்ஷெய்க் எஸ் .எம் மஸாஹிம் மற்றும் அஷ்ஷெய்க் மின்ஹாஜ் ஆகியோர் நடத்தவுள்ளனர். இதை தொடர்ந்து எதிர்வரும் ஞாயிற்றுகிழமை கொழும்பில் தமிழ், முஸ்லிம் சமூக கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஏனைய நிகழ்வுகள் குறித்த பிரதேசங்களில் இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் வாலிபர் ஒன்றியம் என்ற அமைப்பு கடந்த ஆண்டும் கறுப்பு ஒக்டோபர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு புத்தபிக்குகள் நன்றி தெரிவிப்பு.
இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு புத்த பிக்குகள் நன்றி தெரிவித்துள்ளனர்.  அவுஸ்ரேலியாவில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்ஷவை காப்பாற்றியதற்காக சிங்கள ராவய என்ற புத்த பிக்குகளைக்கொண்ட அமைப்பு அவுஸ்ரேலியா அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளது.
அவுஸ்ரேலிய அரசாங்கம் தக்க தருணத்தில் தமது தலைவரையும் நாட்டையும் காப்பாற்றியுள்ளதாகவும் புத்தபிக்குகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்திற்கு இன்று முற்பகல் சென்ற இந்த அமைப்பைச் சேர்ந்த புத்த பிக்குகள் அவுஸ்திரேலிய தூதுவரிடம் மகஜர் ஒன்றை வழங்கியதுடன், தமது அமைப்பின் சார்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
இலங்கைக்கு எதிராகவும் ஜனாதிபதிக்கு எதிராகவும் பிரிவினைவாதிகள் அவுஸ்திரேலியாவில் வழக்கு தாக்கல் செய்த போது அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்து நாட்டின் தலைவரை காப்பாற்றியமைக்காக தாம் நன்றி தெரிவிப்பதாக புத்த பிக்குகள் அவுஸ்திரேலிய தூதுவரிடம் வழங்கிய மகஜரில் தெரிவித்துள்ளனர்
ரணிலின் அனுமதியின்றி கூட்டங்களை நடத்த முடியாது! ஐ.தே.க. உத்தரவு.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியின்றி கூட்டங்களை நடத்தக் கூடாது என கட்சி உறுப்பினர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைமையின் அனுமதியின்றி ஊடகவியலாளர் சந்திப்புக்களையோ அல்லது கூட்டங்களையோ எவரும் நடத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் சற்று முன்னர் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான கட்சியின் கிளர்ச்சிக் குழு உறுப்பினர்களின் நடவடிக்கைகளை முடக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சியத்த தொலைக்காட்சி மீது தாக்குதல் நடத்தியது நாம் தான் - துமிந்தவின் ஆதரவாளர் வாக்குமூலம்.
சியத்த மற்றும் வெற்றி ஊடக நிறுவனம் மீது 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தானே முன்னின்று நடத்தியதாக தெமட்டகொட சமிந்த என்றழைக்கப்படும் பாதாள உலகக் குழுவின் பிரதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெமட்டகொட சமிந்தவை கைது செய்தனர்.
அவர் அளித்த வாக்குமூலத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
தெமட்டகொட சமிந்த என்ற நபர் துமிந்த சில்வாவுக்கு மிக நெருக்கமானவராவார். பாரத லக்ஸ்மன் கொலை செய்யப்பட்ட பிறகு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றவர்களில் இவரும் ஒருவர்.
நீண்ட காலமாக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முல்லேரியா கொலைச் சம்பவத்தினால் முழு நாட்டுக்குமே களங்கம் ஏற்பட்டுள்ளது : விமல் வீரவன்ச.
சர்வதேச ரீதியில் இலங்கை தலைவர்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்பவர்கள், அதற்கான ஆதாரங்களை தேடிக் கொண்டிருக்கின்றனர்.இந்த நிலையில் அரசாங்கத்தின் அரசியல்வாதிகள், பாதாள உலகக்குழுக்களை பாதுகாப்பதும் அவர்களை கொண்டு தாக்குதல்களை மேற்கொள்வது நாட்டின் நன்மதிப்பை பாதிக்கும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
முல்லேரியா சம்பவம் தொடர்பில் கருத்துரைத்துள்ள அமைச்சர் வீரவன்ச, அரசாங்க கட்சிக்குள் உள்ள இருவர், ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியமையானது அரசாங்கத்துக்கு மாத்திரமல்லாமல் முழு நாட்டுக்கும் அபகீர்த்தியான செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சி தலைமையின் கடும் நடவடிக்கைகள்.
கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன மற்றும் மேல்மாகாணசபை உறுப்பினர் சிரால் லக்திலக்க ஆகியோரின் உறுப்புரிமையை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நிராகரித்துள்ளது.
நேற்று நடைபெற்ற செயற்குழுக்கூட்டத்தில் இதற்கான யோசனையை கட்சியின் பிரதிதலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்தார்.
எனினும் இக் கோரிக்கையை நிராகரித்த கட்சியின் செயற்குழு, இருவரும் முன்னாள் சட்டமா அதிபர் திலக் மாரப்பனவின் தலைமையிலான குழுவினால் ஒழுக்காற்று விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவர் என்று அறிவித்தது.
இந்தநிலையில் குறித்த இரண்டு உறுப்பினர்களும் மன்னிப்பு கோரினால், அவர்களுக்கு எதிராக தடையை நீக்கிக்கொள்ளலாம் என்ற யோசனையை தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ளார்.இது சாத்தியமாகும் பட்சத்தில் இருவரினதும் கட்சி உறுப்புரிமை மீண்டும் வழங்கப்படும் என்று கட்சியின் செயற்குழு தரப்புகள் தெரிவித்துள்ளன.
கட்சியின் ஒழுங்குகளை மீறி கடந்த உள்ளுராட்சி தேர்தலில் கோட்டே மற்றும் மாத்தறையில் இரண்டு சுயாதீனக்குழுக்களை தேர்தலில் போட்டியிட வைத்தமையே இரண்டு பேரின் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும்.இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை, பகிரங்கமாக விமர்சித்த கடசியின் பிக்கு முன்னணி தலைவரான மெத்தேகொட குணரட்ன தேரரை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கும் கட்சியின் செயற்குழு நேற்று தீர்மானித்தது.
தலைமன்னாரில் ஹெரோயின் மீட்பு: நால்வர் கைது.
தலைமன்னாரில் 1 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின்பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தலைமன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலை அடுத்து தலைமன்னார் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 500 கிராம் நிறை கொண்ட கெரோயின் போதைப்பொருளை தலைமன்னார் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மன்னால் பொலிஸ்நிலைய தலைமையக பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த போதைப்பொருளை மீட்டுள்ளதோடு 4 பேரையும் கைது செய்துள்ளனர்.
வீட்டில் உள்ள அலுமாரி ஒன்றினுள் மறைத்து வைத்திருந்த மூன்று பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். பின் அதனை அதனை சோதனைக்குற்படுத்திய போது அப்பொதிகள் அனைத்திலும் ஹெரோயின் போதைப்பொருள் காணப்பட்டமை தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து குறித்த வீட்டில் இருந்த ஒரு பெண் உட்பட நான்கு பேரை தலைமன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் 1 கிலோ 500 கிராம் நிறை கொண்டதாகவும் இதன் பெறுமதி 1 கோடி ரூபாய் எனவும்; தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதியின் ஆலோசகராக மிலிந்த மொரகொட நியமனம்!
கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் மேயர் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டு படுதோல்வியடைந்த முன்னாள் அமைச்சரும் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அண்மைக்கால நெருக்கத்துக்குரிய நண்பருமான மிலிந்த மொரகொடவுக்குப் புதிய பதவி ஒன்றை வழங்க மஹிந்த தீர்மானித்துள்ளார்.
இதன்படி அவருக்கு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பதவி வழங்கப்படவுள்ளது. சர்வதேச விவகாரம் மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான ஆலோசகராகவே இவர் இரண்டொரு வாரங்களில் நியமிக்கப்படவுள்ளார்.
அமெரிக்க காங்கிரஸ் உட்பட அந்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் சர்வதேச ரீதியாக பல தலைவர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள மிலிந்த மொரகொட, கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போது தன்னை கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக ஆளுங்கட்சி சார்பில் நிறுத்தினால் சர்வதேச நாடுகளின் உதவிகளைத் தன்னால் பெற்றுத் தர முடியும் என்றும் தற்போது சிறிலங்கா அரசுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையிலிருந்து ஓரளவு விடுவிப்பையையும் பெற்றுத் தர முடியும் எனவும் கூறியிருந்தார்.
இதன் அடிப்படையிலேயே அவர் ஆளுந்தரப்பில் தேர்தல் களத்தில் முதன்மை வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். இருப்பினும் அவரால் வெற்றி பெற முடியாத நிலையேற்பட்டது.
இந்த நிலையிலேயே மிலிந்தவைத் தன்னுடன் தொடர்ந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி மஹிந்த இவருக்கு ஆலோசகர் பதவியை வழங்கத் தீர்மானித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு ஆதரவான நாடு இந்தியா: பயங்கரவாத அமைப்புகள் கடும் எதிர்ப்பு.
பாகிஸ்தானுக்கு மிகவும் ஆதரவான நாடு இந்தியா என்று பாகிஸ்தான் அங்கீகரித்துள்ளதற்கு அங்குள்ள பயங்கரவாத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.காஷ்மீருக்குள் கடந்த 1947ம் ஆண்டு அக்டோபர் 27ம் நாளில் இந்திய ராணுவம் நுழைந்ததை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்கங்கள் கறுப்பு தினமாக அனுசரித்து வருகின்றன.
இதையொட்டி பாகிஸ்தானில் லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயங்கங்கள் நேற்று கறுப்பு தினத்தை அனுசரித்தன. இஸ்லாமாபாத்தில் உள்ள அப்பாரா சவுக் பகுதியில் முத்தாகிதா ஜிகாத் கவுன்சில் தலைவர் சயித் சலாவுதீன் தனது ஆதரவாளர்களிடையே பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,“காஷ்மீரில் இருந்து கடைசி இந்திய ராணுவ வீரன் வெளியேறும் வரையில் அனைத்து இயங்கங்களும் இணைந்து அனைத்து வகையிலும் போராட வேண்டும். காஷ்மீர் சுதந்திரம் அடையும் வரை இந்த போராட்டம் நீடிக்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து லஷ்கர் -இ- தொய்பா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் உள்ள உறவு துப்பாக்கிகளுக்கும், தோட்டாக்களுக்கும் உள்ள உறவு போன்றது. வர்த்தக ரீதியில் எந்த உறவும் கிடையாது. இந்தியாவை பாகிஸ்தானுக்கு ஆதரவான நாடு என்று பாகிஸ்தான் அங்கீகரித்திருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது” என்றார்.
இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் உளவு நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள இரண்டு கிலோ மீற்றருக்குள் நடந்த கூட்டத்தில் பயங்கரவாத இயங்களின் தலைவர்கள் இவ்வாறு பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவில் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்.
சவுதி அரேபியாவில் ஒரு தம்பதியை வாகனத்தை ஏற்றி கொன்ற நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.கற்பழிப்பு, கொலை, ஆயுதத்தை காட்டி கொள்ளையடித்தல், போதை கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
மரண தண்டனை அளிக்கும் நடைமுறையை ரத்து செய்யும்படி ஐ.நா மனித உரிமை கமிஷன் பல ஆண்டுகளாக சவுதி அரேபியாவை வற்புறுத்தி வருகிறது.
இருப்பினும் இதை ஏற்க மறுத்து இஸ்லாமிய சட்டப்படி மரண தண்டனையை நிறைவேற்றி வருகிறது. முகமது அல் ஹார்பி என்ற நபர் சவுதியைச் சேர்ந்த தம்பதியை உள்நோக்கத்துடன் வாகனத்தை ஏற்றி கொலை செய்துள்ளார்.இதற்காக அல் ஹார்பிக்கு சவுதி உள்துறை அமைச்சகம் நேற்று தலையை துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றியது.
சீனாவில் ஆதிக்க போக்கை எதிர்த்து புத்த துறவி தீக்குளிப்பு.
சீனாவின்  ஆதிக்கத்தை எதிர்த்து திபெத்தை சேர்ந்த புத்த மதத் துறவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.இதுவரை 10 துறவிகள் இதுபோல் தற்கொலை செய்து கொண்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
திபெத்தை சீனா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. சுதந்திரம் வேண்டி திபெத்தியர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்தே தங்களுக்கு என தனி அரசை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சீனாவின் பல நகரங்களில் திபெத்தை சேர்ந்த புத்த துறவிகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் சீன அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னொரு புத்த துறவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திபெத்தியர்கள் நடத்தி வரும் அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கிழக்கு திபெத்தில் உள்ள கார்ஸ் பகுதியில் புத்த துறவி தவா செரிங் என்பவர், சீனாவின் ஆதிக்கத்தை கண்டித்து 25ம் திகதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தீயில் எரியும் போது புத்த மதத் தலைவர் தலாய் லாமா திபெத் திரும்ப வேண்டும். சீன அரசை கண்டித்து போராட வேண்டும். சுதந்திர திபெத்தில் எல்லோருக்கும் சம உரிமை கிடைக் வேண்டும் என்று கோஷமிட்டார் என்று தெரிவித்தார்.இதுவரை 10 புத்த மதத் துறவிகள் தற்கொலை செய்து கொண்டது சீன அரசுக்கு சர்வதேச அளவில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
சர்வதேச நீதிமன்றத்தில் சரணடைய தயார்: கடாபியின் மகன் அறிவிப்பு.
புரட்சிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் சர்வதேச நீதிமன்றத்தில் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
லிபியாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகாரியாக இருந்த கடாபிக்கு எதிராக கடந்த பிப்ரவரியில் புரட்சி வெடித்தது. பொதுமக்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டதால் புரட்சியாளர்களுக்கு உதவ நேட்டோ படையை மார்ச் மாதம் ஐ.நா சபை அனுப்பியது.
இந்நிலையில் கடந்த 20ம் திகதி தனது சொந்த ஊரான சிர்தேவிலிருந்து தப்பிக்க முயன்ற கடாபியை நேட்டோ உதவியுடன் புரட்சிப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
கடாபிக்கு மொத்தம் 8 மகன்கள். இவர்களில் 4 மகன்கள் அல்ஜீரியா அல்லது நைஜீரியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. சைப் அல் இஸ்லாம் என்பவர் கடாபியின் அரசியல் வாரிசாக கருதப்பட்டார். இவர் இன்னமும் லிபியாவில் பதுங்கி இருப்பதாகவும் மற்ற மகன்கள் போரில் பலியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
“லிபியாவுக்காக போரிடுகிறோம், லிபியாவிலேயே உயிரைவிடவும் தயார்” என சைப் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
இந்நிலையில் தனது நிலையை மாற்றிக் கொண்டு தனது உறவினர் மற்றும் முன்னாள் உளவு பிரிவு அதிகாரி அப்துல்லா அல் சென்னுசி ஆகியோருடன் சர்வதேச நீதிமன்றத்தில் சரணடைய விரும்புவதாக தேசிய இடைக்கால அரசு அதிகாரியான அப்துல் மஜித் லெக்டா கூறியுள்ளார். இதன் மூலம் கடாபியின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடாபி, சைப், சென்னுசி ஆகியோர் மீது போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தை ஏவியதாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அடுத்த ஒரு வாரத்தில் நேட்டோ படையை வாபஸ் பெற ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் திட்டமிட்டுள்ளது.
துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம்.
துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்கிழக்கு பகுதியில் 5.4 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் ஈராக் அருகே யுக்செகோவா நகரில் இன்று காலை உணரப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 7.2 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 523 பேர் உயிரிழந்தனர்.இந்த நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தினால் புதிதாக பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
சோமாலிய மக்களுக்கு உதவி புரியும் அரச தம்பதி.
வில்லியமும், கேத் மிடில்டனும் சுயமாக பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும் 13 பில்லியன் கென்ய மற்றும் சோமாலிய மக்களுக்கு உதவி புரிகின்றனர்.இந்த றொயல் தம்பதிகள் மனிதநேய அமைப்பான யூனிசெப்பின் பொருட்கள் வழங்கும் மையமான கோபன்ஹாஜென்னிற்கு அடுத்த வாரம் செல்கின்றனர்.
இதற்கு காரணம் கிழக்கு ஆப்பிரிக்காவில் 60 வருடங்களாக ஏற்பட்ட வறட்சியால் மூன்று லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் மரணிக்கும் நிலையில் இருக்கின்றனர் என்பதே ஆகும். இந்த பகுதியில் தான் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக நிச்சயித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.பிரிட்டனில் யுனிசெப் முதல்வர் டேவிட்புல் கூறுகையில்,“கேம்பிரிட்ஜின் இளவரசரும், இளவரசியும் உதவுவது ஆச்சர்யமாக இருக்கிறது” என்றார்.
துனிஷியாவில் இஸ்லாமிய கட்சி வென்றது: நாட்டின் லிபரல் சட்டங்களை தூக்கி நிறுத்துவோம் என சபதம்.
அரபு நாடுகளின் போராட்டத்திற்கு வித்திட்ட துனிஷியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் இஸ்லாமியக் கட்சியான என்னாஹ்டா வெற்றி பெற்றுள்ளது.தேர்தலில் இஸ்லாமிய கட்சி வென்றதை தொடர்ந்து பிரதமர் பதவிக்கு போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் இரண்டாவது முக்கிய நபருமான ஹமாடி ஜீப்லி பொறுப்பேற்றார்.
வெற்றி குறித்து ஜீப்லி கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது, நாட்டில் உள்ள சட்ட திட்டங்களான சுற்றுலாப் பயணிகளுக்கான ஒழுங்கு முறைகள், பெண்கள் உடையணிவதில் இருக்கும் சட்டங்கள், ஆல்கஹால் பயன்படுத்துவதில் உள்ள சட்டங்கள் இவைகள் முறைப்படுத்தப்படும் என உறுதி அளித்தார்.
என்னாஹ்டா கட்சியானது அரசை நிறுவியுள்ளது. அது அரசுக்கு பொருளாதாரத்தை எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. முக்கியமான துறைகளுக்கு(முக்கியமான சுற்றுலாத் துறை) இருந்த தடைகள் தளர்த்தப்பட்டு அவை சுதந்திரமாக செயல்பட இவ்வரசு உதவும் எனவும் கூறினார்.நாங்கள் இஸ்லாமிய வங்கியை உலகமயமாக்கப் போவதில்லை, அவ்வாறு இருக்கும் வங்கியை மூடப்போவதும் இல்லை எனவும் கூறினார்.
இந்த நிகழ்ச்சி நிரலானது, துனிஷியாவின் முஸ்லீம் மக்களும் முஸ்லீம் அல்லாத பிற மக்களும் இருக்கும் பகுதியில் நடந்தது. என்னாஹடா முஸ்லீமுடன் சகோதரத்துவம் கொண்டுள்ளது. அரபுநாடுகளில் உள்ள அரசியல் கட்சிகளில் இக்கட்சி அதிகாரப்பூர்வமானது.லிபியாவின் தற்காலிக அதிபர் ஜலீல் கூறியதாவது, இஸ்லாமியர் எண்ணிக்கை அதிகமுள்ள லிபியாவில் இஸ்லாமியர்களுக்கென்று உள்ள வங்கியில், பல இனத்தவரையும் எளிதாக அனுமதிக்கின்றனர். அங்கு இஸ்லாமியர்களைப் போன்றே இவர்களுக்கும் வரிவிதிப்பதில்லை, இது மதச்சார்பற்ற அமைப்புகளிடையெ அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.
டெய்லி டெலிகிராப்பின் மூத்த அதிகாரி பெர்ஜனி கூறுகையில், என்னாஹ்டா கட்சியின் உறுப்பினர்கள், தேர்தலில் அக்கட்சி வெற்றி பெறுவதற்காக எகிப்தைப் போல் பாடுபட்டனர். உலகமானது உண்மையான குடியரசை உருவாக்குகிறதோ இல்லையோ, உண்மையான குடியாட்சியாளர்களை உருவாக்கி விடுகிறது என்று தெரிவித்தார்.
தேர்தல் புள்ளி விவரங்களை அறிவித்த இமைல் ஹோகாலம் கூறுகையில், நாங்கள் உணர்வுப்பூர்வமான, தொடர்ந்து நீடிக்கக் கூடிய உறவை ஒருங்கிணைந்த நாடுகள், ஐரோப்பியா, லத்தீன், அமெரிக்கா, ஆசியா, ரஷ்யா, ஆப்ரிக்கா இவைகளுடன் வைத்துக் கொள்ள விரும்புகிறோம். மேலும் என்னாஹ்டா கட்சியின் வெற்றியானது இரண்டு முனைகளைக் கொண்ட கத்தியைப் போன்றது என்றார்.
என்னாஹ்டா கட்சியின் வெற்றியானது மற்ற நாடுகளிலுள்ள மக்களும், மதச்சார்பற்ற நாட்டைச் சேர்ந்தவர்களும் அரபு நாடுகளில் எப்பொழுதும் இஸ்லாமியர்கள் தான் தொடர்ந்து ஜெயிப்பர் என்பதை தீர்மானிக்கிறது.
அல்ஷபாப் தீவிரவாதிகளை கென்யா வேட்டையாடுவது சரியானதே: சோமாலிய பிரதமர்.
அல்-ஷபாப் தீவிரவாதிகளை கென்ய ராணுவம் வேட்டையாடுவது சரியானதே என சோமாலிய பிரதமர் கூறியுள்ளார்.அல்ஷபாப்பின் படைகளை எதிர்ப்பதற்காக கென்ய படைகள் 12 நாட்களுக்கு முன்பாகவே ஆப்ரிக்காவில் உள்ள அனார்சிக் ஹார்ன் என்ற பகுதியில் தங்கியுள்ளன.குற்றவாளியான அல்ஷாபாவை கென்யா எதிர்ப்பதற்கு காரணம், தங்கள் சொந்த மண்ணில் அவன் செய்த கடத்தல் குற்றங்களும், அடிக்கடி நடத்திய தாக்குதல்களுமே ஆகும்.
சோமாலிய பிரதமர் முகமது அலி கூறுகையில், என்னுடைய அரசு கென்யா தன் பாதுகாப்பிற்காக அல்ஷபாப்பின் மீது எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் ஆதரவாக இருக்கும். சோமாலியாவின் உள்ளிருந்து கென்யா நடத்தும் இந்த தாக்குதலுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம். ஆனால் அல்ஷபாப்பை தோற்கடிப்பதற்கு எங்கள் படைகளுக்கு கென்யா ரயில் போக்குவரத்து வசதி, மற்ற இராணுவ வசதிகளை செய்து தரவேண்டும் என தெரிவித்தார்.
மேலும் சோமாலிய படைகள் இந்த தாக்குதலை வழிநடத்தும், எங்கள் இராணுவம் இந்த தாக்குதலுக்கு தலைமை ஏற்கும் எனவும் கூறினார்.
சூடான் படைகள் லிபிய போராட்டக்காரர்களுடன் இணைந்து செயல்பட்டன: அதிபர் பஷீர் தகவல்.
சர்வாதிகாரியான கடாபியை லிபியப் படைகள் வென்றதற்கு காரணம், போராட்டக்காரர்களுடன் தங்கள் நாட்டு ராணுவம் இணைந்து செயல்பட்டதே என்று சூடான் அதிபர் ஓமர்-அல்-பஷீர் கூறியுள்ளார்.
தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பஷீர் கூறியதாவது, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் நீதி மற்றும் நடுநிலை இயக்கத்தின் டர்பரி போராட்டக் குழுவானது கர்டூம்மை தாக்கியது. அப்போது கடாபி போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
கடவுளின் கிருபையாக சூடானுக்கு லிபிய புரட்சிப் படையினரால் லாரிகள், ஆயுதங்கள், யுத்த தளவாடங்கள், பணம் மற்றும் மனித நேய ஆதரவு கிடைத்தது. லிபியா செய்த உதவிக்கு கைமாறாக சூடான் இப்பொழுது உதவியது என கூறினார்.புதிதாக அமையவிருக்கும் லிபிய அரசுடன் உறவு கொள்ள விரும்புவதாகவும், அந்நாட்டின் எல்லைப் பகுதியான டர்பரியில் ஏற்படும் சண்டைகளுக்கு லிபியா ஆயுத உதவி வழங்க வேண்டும் என சூடான் அதிகாரிகள் விரும்புவதாகவும் பஷீர் தெரிவித்தார்.
பாங்காக்கில் கடும் வெள்ளம்: புகலிடம் தேடி மக்கள் ஓட்டம்.
பெருவெள்ளத்தை ஒட்டி பாங்காக்கில் ஐந்து நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாங்காக்கின் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களும், சாலைகளும் புகலிடம் தேடி ஓடிவரும் மக்களால் நிறைந்துள்ளன.வடக்கு மாவட்டங்களில் 90 சதவீத பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. கடந்த பத்து நாட்களில் மட்டும் 360க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளத்திற்கு பலியாகியுள்ளனர்.
இதற்கு முந்தைய அரசு வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளில் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்பொழுது யிங்லுக் ஷினாவாத்ரா இந்த ஓகஸ்ட் மாதம் பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.இந்த வெள்ளம் இவருடைய தலைமைக்கும் திறமைக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது. இந்த ஐந்துநாள் விடுமுறை என்பது வியாழக்கிழமை முதல் வரும் திங்கட்கிழமை வரை பாங்காக் மற்றும் இருபது மாகாணங்களில் அறிவிக்கப்பட்டள்ளது.
தலைநகருக்கு வடக்கேயுள்ள டான் முவாஸ், பாஸ் பிலாத் மற்றும் தாவி வட்டானா மாவட்டங்களில் வாழும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு பாங்காக்கின் கவர்னர் சுகம்பந்த் பரிபத்ரா கோரிக்கை விடுத்துள்ளார்.பிரதமரும் தலைநகரின் சில பகுதிகளில் வெள்ளம் சூழும் என்று எச்சரித்துள்ளார். சாஓ பிராயா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இவ் ஆறு தலைநகரின் குறுக்கே பாய்வதால் தலைநகரின் சில பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாகப் பிரதமர் தெரிவித்தார். இந்த வெள்ளம் வடிய அதிக பட்சம் ஒரு மாதம் ஆகலாம். ஆனால் பிற மாகாணங்களில் ஐந்தாறு அடி உயரத்திற்கு வெள்ள நீர் நிரம்பியுள்ளது.
ஒன்பது கோடிப்பேர் வாழும் நகரத்தில் சில கடைகளே திறந்துள்ளன. அரிசி, முட்டை போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்கள் ரேஷன் முறையில் வழங்கப்படுகின்றன. பல இடங்களில் குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை. சிலர் வீடுகளுக்கும் கடைகளுக்கும் முன்பு மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் உள்ளே வராமல் தடுக்கின்றனர்.விமான ஓடுபாதையில் வெள்ளநீர் நிரம்பியுள்ளதால் விமானப் போக்குவரத்து அடுத்த வியாழன் வரை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஆனால் விமான நிலையத்தின் இரண்டாவது மாடியில் இயங்கிவரும் வெள்ள நிவாரண அலுவலகத்தின் இடம் மாற்றப்படவில்லை.
யூரோ பிரச்னைக்கு தீர்வு காண போராடும் ஐரோப்பியத் தலைவர்கள்.
யூரோ செலாவணியை நிலைப்படுத்தவும் சந்தையை அமைதிப்படுத்தவும் வழி கண்டறிய பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த கூட்டத்தில் யூரோ மண்டலத் தலைவர்கள் இன்னும் தடுமாறிக் கொண்டு தான் இருக்கின்றனர்.புதன்கிழமை தான் கடைசிநாள் என்று அறிவித்த பிறகும் கூட 17 தலைவர்களாலும் ஒரு நல்ல முடிவுக்கு வர இயலவில்லை.
கிரேக்க நாட்டின் கடனுக்கு விலக்கு அளிக்கவும் நலிந்துவரும் வங்கிகளை வலிமைப்படுத்தவும் ஐரோப்பாவில் பிணைய நிதியைத் திரட்டும் பெரும் முயற்சி குறித்து தலைவர்கள் இக்கூட்டத்தில் விவாதித்தனர். ஆனால் ஆறு மணி நேரத்துக்கு மேலாக விவாதம் நடந்த பிறகும் ஐரோப்பாவில் திவாலான வங்கிகளைப் பற்றிய பேச்சே தொடர்ந்தது.
மறு முதலீட்டுத் திட்டம் பிரிட்டன் வங்கிகளை உள்ளடக்கவில்லை. இத்திட்டத்திற்கு தேவைப்படும் நுறு பில்லியன் யூரோவை வங்கிகள் அடுத்த யூலை மாதத்திற்குள் தனியார் முதலீடு மூலமாகத் திரட்ட இயலவில்லை என்றால் தேசியக் கருவூலங்களில் இருந்துதான் பெறவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இத்தலைவர்கள் கூட்டத்தில் ஒன்றரை மணி நேரம் கலந்து கொண்ட பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் கிளம்பிவிட்டார். ‘சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’ என்று நிரூபர்களிடம் தெரிவித்தார்.கிரேக்கக் கடனை விலக்கிவிடவும் பிணைய நிதியை அதிகப்படுத்தவும் ஒப்பந்தங்கள் உருவானால் மட்டுமே இக்கூட்டம் எதிர்பார்த்த நன்மையைப் பெறமுடியும். பிறகும் கூட இந்தத் தொகையால் சந்தையைத் திருப்திப்படுத்த முடியாது.
ஜேர்மன் அதிபரும் பிரான்ஸ் அதிபரும் தலைவர்கள் கூட்டத்திலிருந்து பாதியிலேயே எழுந்து உலகவங்கிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கடன் தள்ளுபடி பற்றி பேசுவதற்குப் பக்கத்து அறைக்குச் சென்றனர்.
வங்கிப் பிரதிநிதிகள் 40 சதவீத தள்ளுபடிக்கு ஒத்துக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு மேல் வங்கிகளால் தள்ளுபடி செய்ய இயலாது என்று வங்கிப் பிரதிநிதிகள் தெரிவித்துவிட்டனர்.ஆனால் இந்தத் தள்ளுபடியால் சந்தை நிலையைச் சரிக்கட்ட இயலாது. இதனால் கிரேக்கக் கடன் பிரச்னை ஒரு தொற்று நோய் போல யூரோ செலாவணி புழக்கத்தில் உள்ள ஐரோப்பாவின் பிற நாடுகளுக்கும் பரவக்கூடும். இப்போது முதலாவதாக இத்தாலி நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
அடுத்ததாக நவம்பர் மாதம் 3,4 திகதிகளில் கேன்ஸில் நடக்கும் G20 கூட்டமே யூரோ மண்டலப் பிரச்சனைகளை தீர்க்கக் கடைசி நாளாகும் என்று தெரிவித்த அதிகாரிகள், அன்று இறுதித் தொகையை வரையறுக்க இயலாமற்போனாலும் பெரிய அளவிலான ஓர் ஒப்பந்தம், G20 உறுப்பினர்களைக் கொண்டு உருவாகும். அதன் பிறகு இந்த நிதிநெருக்கடிப் பிரச்னை நல்ல தீர்வை நோக்கி புதிய பாதையில் பயணிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட ஆப்கனை இந்தியா தூண்டி விடுகிறது: முஷாரப் குற்றச்சாட்டு.
பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கனை இந்தியா தூண்டி விடுவதாக முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியதாவது, பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று வரை ஆப்கானிஸ்தான் எங்களுக்கு எதிராகத்தான் உள்ளது.
இந்நிலையில் இந்தியா, ஆப்கானிஸ்தானை வைத்து பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தானை உருவாக்க இந்தியா முயற்சித்தால், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ இந்தியாவை வெறுமனே விட்டு விடாது எனவும் எச்சரித்துள்ளார்.
சோவியத் யூனியன் மற்றும் இந்தியா ஆகியவை ஆப்கனுடன் மிக நல்ல உறவை வைத்திருப்பதால் ஆப்கன் எங்களிடம் நடந்து கொள்ளும் முறை சரியில்லை என முஷாரப் தெரிவித்தார்.முன்னதாக இந்தியா வந்த ஆப்கன் அதிபர் கர்சாய் கூறுகையில், பாகிஸ்தான் எங்களது சகோதரன், இந்தியா எங்களது நண்பன், இந்தியா- ஆப்கனுடைய உறவு பாகிஸ்தானை ஒருபோதும் பாதிக்காது எனக் கூறியது நினைவுகூரத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF