Thursday, October 20, 2011

இன்றைய செய்திகள்.

இலங்கை சோமாலியாவைப் போன்று உருவாகியுள்ளது – ரணில்.

இலங்கை சோமாலியாவைப் போன்று உருவாகியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நீதி மற்றும் அமைதி சீர்குலைந்துள்ளது, நீதிமன்றம், ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு, காவல்துறைசேவை ஆகியவற்றின் சுயாதீனத்தன்மைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.ஆயுததாரிகளினால் நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைகளை தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றில் முன்வைத்த பிரேரணைக்கு ஆதரவாக உரையாற்றிய போது ரணில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலையவில்லை எனவும், சிறு குழுவினர் குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவும் பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
பாரதவின் படுகொலையாளி இன்னமும் கைது செய்யப்படவில்லை – சரத் பொன்சேகா.

பாரதவின் படுகொலையாளி இன்னமும் கைது செய்யப்படவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அதிருப்தி வெளியிட்டுள்ளார். 
உடதலவின்ன படுகொலைச் சம்பவத்தின் போது தனது மாமனாரான ஜெனரல் அனுருத்த ரத்வத்தவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கைது செய்திருந்தார்.
எனினும், பாரதவை படுகொலை செய்த நபர்கள் இன்னமும் சுதந்திரமாக இருக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இரத்த பரிசோதனைக்கான வைத்தியசாலைக்கு சென்றிருந்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தெற்கு மட்டுமன்றி வடக்கிலும் பெளத்த விகாரைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் : பிரதமர்.

பயங்கரவாதம் இல்லாது ஒழிக்கப்பட்டமையால்,  வடக்கு விஹாரைகளை வலுப்படுத்த முடிந்துள்ளது என பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.தெற்கு மட்டுமன்றி வடக்கு கிழக்கில் காணப்படும் பௌத்த விஹாரைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிக்குகளே பௌத்த மதத்தை பாதுகாத்து வந்தனர், நெருக்கடியான நிலைமைகளிலும் பிக்குகள் விஹாரைகளை விட்டு வெளியேறவில்லை.அண்மையில் கெபதிகொல்லாவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாரத கொலை விசாரணைகளை மூடிமறைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மூடி மறைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.கொலைச் சம்பவம் குறித்த விசாரணைகளை நடத்தி வந்த காவல்துறை உத்தியோகத்தர் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கொலையாளிகளை பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு திடீர் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொலன்னாவ நிலைமைகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
தமது கருத்தை கேட்பதற்கு பதிலாக நாடாளுமன்றிலிருந்து தம்மை வெளியேற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளா லக்ஸ்மன் ஹீலுகல்ல, துமிந்த சில்வா குற்றவாளியல்ல என எவ்வாறு கூற முடியும், அதனை காவல்துறையினரின் விசாரணைகளின் பின்னரே தீர்மானிக்க முடியும்.
பாதுகாப்புச் செயலாளர் நிறுவன சட்ட விதிகளை மீறி அரசியலில் ஈடுபட்டு வருவதாக தயாசிறி குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆளும் கட்சி உறுப்பினர்களை திருப்திப்படுத்துவதில் நெருக்கடிகளை எதிர்நோக்கும் மஹிந்த.

ஆளும் கட்சி உறுப்பினர்களை திருப்திப்படுத்துவதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக லங்காதீப பத்திரிகையின் குருதா விக்ரஹாய கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலன்னாவை சம்பவத்தின் பின்னர் இந்த நிலைமை வெளிப்படையாக தெரியத் தொடங்கியுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு நாட்டு மக்கள் மீதிருக்கும் அபிமானத்தைக் கொண்டே ஆட்சி நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.குறிப்பாக போர் வெற்றியினால் ஏற்பட்ட பிரபல்யமே தேர்தல் வெற்றிகளுக்கு வழியமைத்துள்ளதாகவும், இந்த அபிமானம் எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என்பது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஆட்சி நடத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கங்கள் கொள்கை அடிப்படையில் ஆட்சியை நடத்திய போதிலும், தற்போதைய அரசாங்கம் எந்தவிதமான கொள்கைகளும் இன்றி ஆட்சி நடத்தி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.இன்றைய அரசு ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதனை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் உத்திகளைப் பின்பற்றி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு சமவுரிமை வழங்குதல், குற்றவாளிகளை பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக லங்காதீப பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் சீனா.
ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர நாடுகளின் வரிசையில் இந்தியா இடம் பெற சீனா உதவி செய்யும் என்று நம்பிக்‌கையுடன் இருந்த நேரத்தில் சீனா ‌திடீரென பாகிஸ்தானிற்கு ஆதரவு அளித்துள்ளது.ஐ.நா பாதுகாப்பு சபையில் வீட்டோ என்றழைக்கப்படும் நிரந்தர உறுப்பு நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா உட்பட ஐந்து நாடுகள் இடம்பெற்றுள்ளன.
உறுப்பினர்களி்ன் எண்ணிக்‌கையை அதிகரிக்க வேண்டுமென வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகள் ‌வேண்டுகோள் விடுத்து வரும் நேரத்தில் இந்தியா உறுப்பு நாடுகளின் வரிசையில் இடம் பெறுவதற்கு சீனா உட்பட பல்வேறு நாடுகளின் ஆதரவை இந்தியா கோரி வருகிறது.
இந்த ‌கோரிக்கைக்கு சீனாவும் ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில் ஆதரவு நிலையி்ல் இருந்து தன் முடிவை சீனா மாற்றிக்‌ கொண்டுள்ளது. தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவு தர போவதாக தெரிவித்துள்ளது.இது குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் ஜியாங்யூ கூறியதாவது: சீனாவும், பாகிஸ்தானும் அனைத்து விசயங்களிலும் ஒத்த கருத்து கொண்டவையாக திகழ்கி்ன்றன. இந்தியா நிரந்தர உறுப்பு நாடு ஆவதற்கு சீனா எவ்வித உறுதியையும் அளிக்கவில்லை என தெரிவித்தார்.
அணுமின் வளாகத்தில் தங்கியிருந்தவர்களுக்கு கதிர்வீச்சு பாதிப்பு இல்லை: நிபுணர்கள் தகவல்.
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கடலுக்கு அடியில் பயங்கர நில அதிர்வு ஏற்பட்டது. இதையடுத்து கடலில் சுனாமி உருவானது.நிலநடுக்கமும், சுனாமியும் ஒரே நேரத்தில் ஏற்பட்டு ஜப்பானின் கடலோர பகுதிகளை சின்னாபின்னமாக்கியது. கடலில் 13 மீட்டர் உயரத்துக்கு எழும்பிய சுனாமி அலை அணு உலைகளை தாக்கியது.
புகுஷிமா அணுமின் நிலையம் பலமான தாக்குதலுக்கு உள்ளானது. இதையடுத்து அங்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. கதிர்வீச்சு பயத்தின் காரணமாக இந்த அணு உலையை சுற்றி வசித்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர். சுனாமியினால் ஏராளமானவர்கள் வீடுகளை இழந்து அகதிகளாயினர்.ஜப்பானில் கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய சுனாமி பாதிப்பு இதுவாகும். சுனாமியில் வீடுகளை இழந்தவர்களில் சிலர் எங்கு செல்வது என்று வழி தெரியாமல், உள்ளூரில் உள்ள அணுமின் நிலைய வளாகத்தில் தஞ்சம் புகுந்தனர். வளாகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் அவர்கள் தங்கி இருக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சமயத்தில் சுனாமி தாக்கிய அணுமின் நிலையங்களில் அணு உலைகள் சேதம் அடைந்து கதிர்வீச்சு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வேகமாக பரவின.அணு உலையை சுனாமி அலை தாக்கிய போதும், அவை சேதம் அடையவில்லை. எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று அணு விஞ்ஞானிகள் அறிவித்தனர். எனினும் பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வு இருந்து வந்தது. அதே சமயம் அணு உலைகளின் பாதுகாப்புக்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
வெளிப்பட்ட லேசான கதிர் வீச்சுக்களும் அணு விஞ்ஞானிகளின் முயற்சியினால் தடுக்கப்பட்டது. சுனாமியால் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையங்களை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
இவ்வளவு பரபரப்புக்கும் இடையிலும், உள்ளூர் அணுமின் நிலைய வளாகத்தில் தஞ்சம் புகுந்த பொதுமக்கள் எவ்வித சலனமும் இன்றி அமைதியாக வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். கடந்த 3 மாதமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் அணுமின் நிலைய வளாகத்தில் தங்கி இருக்கின்றனர்.அவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா? என்று கண்டறிய சமீபத்தில் அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஆச்சரியப்படும் வகையில் முடிவு வந்தது. 3 மாதமாக அணுமின் நிலை வளாகத்தில் தங்கி இருந்தும் ஒருவருக்கும் கூட கதிர்வீச்சு ஏற்படவில்லை. அனைவரும் இயல்பான உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
அணுமின் நிலையங்களினால் ஆபத்து ஏற்படும் என்று அச்சப்பட்டு வரும் மக்களுக்கு இந்த தகவல் அந்த எண்ணத்தை மாற்றி நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று அணு விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.ஜப்பானின் மொத்த மின்சார தேவையில் பெரும் பகுதியை அணுமின் சக்தி நிலையங்களே பூர்த்தி செய்கின்றன. இப்போது ஏற்பட்டுள்ள புதிய நம்பிக்கையால், ஜப்பானில் எதிர்காலத்தில் மேலும் சில அணு உலைகளை நிறுவுவது பற்றிய விவாதம் தொடங்கிவிட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தல் சவாலானதாக இருக்கும்: ஒபாமா.
2012ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் சவாலான தேர்தலாக அமையும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் தெரிவித்தது: அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் நெருக்கடியானதாக அமையும்.
அடுத்த 4 ஆண்டுகளில் நடைபெற உள்ளதை தீர்மானிப்பதாக அல்லாமல், வரப்போகும் 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு நடைபெற உள்ளதை தீர்மானிப்பதாக அமையும் என்பதால் அமெரிக்க மக்களுக்கு இது மிக முக்கியமான தேர்தலாகும்.வரப்போகும் தேர்தல் கடுமையானதாக அமையும் என்பதை உறுதியாகச் சொல்வேன். காரணம் இப்போதைய அமெரிக்கப் பொருளாதாரம் எங்கிருக்க வேண்டுமோ அங்கு இல்லை.
தடுமாறும் பொருளாதாரத்தால் எனக்கு கடும் சவால் காத்திருக்கிறது. பொருளாதாரத்தை நேர்படுத்த நாம் தேர்ந்தெடுத்த அனைத்துத் தெரிவுகளும் சரியானவைகளே என நான் நம்புகிறேன். எனினும் கடினமான சூழலை நாம் கடந்து கொண்டிருக்கிறோம் என்று ஒபாமா தெரிவித்தார்.
9.1 சதவீத வேலையின்மை, ஏற்றம் பெறாத பொருளாதாரம் ஆகிய காரணங்களால், இன்னும் தேர்ந்தெடுக்கப்படாத அதிபர் பதவிக்கான போட்டி வேட்பாளருக்கு முன்பாக தாம் தோல்வியுறும் நிலையில் இருப்பதாக இம்மாதத் தொடக்கத்தில் ஒபாமா தெரிவித்திருந்தார்.தனக்கு சாதகமாக இல்லாத வடக்கு கரோலினா, வெர்ஜீனியா மாநிலங்களுக்கு ஒபாமா பஸ் யாத்திரை சென்றுள்ளார்.
பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் சீனா.
ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர நாடுகளின் வரிசையில் இந்தியா இடம் பெற சீனா உதவி செய்யும் என்று நம்பிக்‌கையுடன் இருந்த நேரத்தில் சீனா ‌திடீரென பாகிஸ்தானிற்கு ஆதரவு அளித்துள்ளது.ஐ.நா பாதுகாப்பு சபையில் வீட்டோ என்றழைக்கப்படும் நிரந்தர உறுப்பு நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா உட்பட ஐந்து நாடுகள் இடம்பெற்றுள்ளன.
உறுப்பினர்களி்ன் எண்ணிக்‌கையை அதிகரிக்க வேண்டுமென வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகள் ‌வேண்டுகோள் விடுத்து வரும் நேரத்தில் இந்தியா உறுப்பு நாடுகளின் வரிசையில் இடம் பெறுவதற்கு சீனா உட்பட பல்வேறு நாடுகளின் ஆதரவை இந்தியா கோரி வருகிறது.
இந்த ‌கோரிக்கைக்கு சீனாவும் ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில் ஆதரவு நிலையி்ல் இருந்து தன் முடிவை சீனா மாற்றிக்‌ கொண்டுள்ளது. தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவு தர போவதாக தெரிவித்துள்ளது.இது குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் ஜியாங்யூ கூறியதாவது: சீனாவும், பாகிஸ்தானும் அனைத்து விசயங்களிலும் ஒத்த கருத்து கொண்டவையாக திகழ்கி்ன்றன. இந்தியா நிரந்தர உறுப்பு நாடு ஆவதற்கு சீனா எவ்வித உறுதியையும் அளிக்கவில்லை என தெரிவித்தார்.
கிரீஸின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்.
கிரீஸ் பார்லிமென்டில் சிக்கன நடவடிக்கைகளுக்கான இரு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதுமான 48 மணி நேர வேலை நிறுத்தம் நேற்று துவங்கியது.
விமானம் முதல் சாதாரண ஆட்டோ வரையிலான அனைத்துப் போக்குவரத்துகளும், அரசு அலுவலகம் முதல் கடைத் தெரு வரையிலான அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன. முக்கிய நகரங்களில் லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடன் நெருக்கடியில் சிக்கிய கிரீசுக்கு சர்வதேச நிதியமைப்பு(ஐ.எம்.எப்), ஐரோப்பிய யூனியன்(இ.யு) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி(இ.சி.பி) ஆகிய மூன்று அமைப்புகளும் கடன் தவணை வழங்கின.
முதலில் 110 பில்லியன் யூரோவும், இரண்டாவதாக 109 பில்லியன் யூரோவும் கடன் தவணை வழங்குவதாக இந்த அமைப்புகள் உறுதியளித்தன.பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளின் பேரில் தான் இந்தக் கடன் தவணைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.முதல் தவணையில் இருந்து 8 பில்லியன் யூரோ வழங்க வேண்டிய நிலையில் சிக்கன நிபந்தனைகளை கிரீஸ் நிறைவேற்றியதா என மூன்று அமைப்புகளின் பிரதிநிதிகளும் கடந்த இரு வாரங்களுக்கு முன் ஏதென்சில் பரிசோதனை நடத்தினர்.
அதன்பின் 8 பில்லியன் யூரோ வழங்கலாம் என பரிந்துரைத்தனர். ஆனால் அது பற்றி இம்மாதம் 23ம் திகதி கூடும் ஐரோப்பிய நிதியமைச்சர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்படும் என மூன்று அமைப்புகளும் கூறிவிட்டன.மூன்று அமைப்புகளின் நிபந்தனைகளை முழுமையாக அமலாக்கும் விதத்தில் இரு மசோதாக்கள் கிரீஸ் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட உள்ளன.ஒரு மசோதாவில் வரி உயர்வு, ஓய்வூதியம், சம்பளம் குறைப்பு, ஒப்பந்தத் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புதல் உள்ளிட்டவையும், மற்றொரு மசோதாவில் நாட்டின் மொத்தம் 7 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்களில் 30 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்புவது, குறைந்த சம்பளத்திலான பணிகள் உள்ளிட்டவையும் அடங்கியுள்ளன.
பார்லிமென்டில் பிரதமர் ஜார்ஜ் பப்பண்ட்ரீயின் கட்சிக்குப் பெரும்பான்மை இருந்தாலும், மசோதாக்களுக்கு எதிராக அவரது கட்சியினர் இருவர் ஓட்டளிக்கப் போவதாக மிரட்டியுள்ளனர். மசோதாக்களை நிறைவேற்றித் தருமாறு அவர் எம்.பி.க்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏற்கனவே உயர்த்தப்பட்ட வரி, குறைக்கப்பட்ட சம்பளம் இவற்றை எதிர்த்து கடந்த பல மாதங்களாக அரசு ஊழியர்கள் அவ்வப்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.அரசின் சிக்கன நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கும் சூழலில் அரசு மற்றும் தனியார் துறையினர் ஒன்றிணைந்து தங்கள் எதிர்ப்பை அரசுக்குக் காட்டும் வகையில் நேற்று முதல் 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.நாட்டின் இரு மிகப் பெரிய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தை நடத்துகின்றன. இதில் மொத்தம் 40 லட்சம் ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர்.
அரசு அலுவலகங்கள், அமைச்சகங்கள், தனியார் நிறுவன அலுவலகங்கள் என நேற்று அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டன. பஸ், ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகள் முடங்கின.மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் இணைந்துள்ளனர். விமான ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை 48 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாகக் குறைத்துக் கொண்டனர். இதனால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 150 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, 160 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டது.
குப்பை அள்ளுவோர் ஏற்கனவே 17 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் குப்பை அள்ளும் பணி நடந்தது.எனினும் நாட்டின் முக்கிய நகரங்களின் தெருக்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. பைரியாஸ் என்ற முக்கிய துறைமுகம் நேற்று மூடப்பட்டது. இதன் ஊழியர்கள் 400 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைநகர் ஏதென்சில் நேற்று 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான தெசலோனிகியில், 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.பிரதமர் ஜார்ஜ் பப்பண்ட்ரீ, வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
கிரீஸ் பார்லிமென்ட் நிறைவேற்ற உள்ள மசோதாக்களின் முக்கிய அம்சங்கள்:
கிரீசின் 190 ஆண்டுக்கால வரலாற்றில் முதன்முறையாக பொதுத் துறை ஊழியர்கள் 7,50,000 பேரும், புதிய சம்பளத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவர்.அத்திட்டத்தின்படி அடிப்படைச் சம்பளம் குறைக்கப்படும், போனஸ் கிடையாது. இவற்றின் மூலம் ஒருவரின் வருமானத்தில் 20 சதவீதம் குறைக்கப்படும். கடந்தாண்டு சிக்கன நடவடிக்கையின்படி இவர்களின் வருமானத்தில் ஏற்கனவே 20 சதவீதம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன்படி ஒவ்வொரு ஊழியருக்கும் மாதச் சம்பளம் 1,900 யூரோவைத் தாண்டாது. இதன் மூலம் ஆண்டுக்கு 2 பில்லியன் யூரோ சேமிக்கப்படும்.வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக 30 ஆயிரம் ஊழியர்கள் அடையாளம் கண்டறியப்படுவர். இவர்கள் 2009 டிசம்பரில் வாங்கிய சம்பளத்தில் 60 சதவீதம் மட்டும் பெறுவர். ஓராண்டுக்குள் மாற்று வேலைகள் கண்டறியப்படாவிடில் இவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவர்.
இவர்களில் பாதிப் பேர் ஏற்கனவே ஓய்வு பெறும் வயதில் உள்ளனர். இதன் மூலம் ஆண்டுக்கு 300 மில்லியன் யூரோ சேமிக்கப்படும்.ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப விரும்பும் நிறுவனங்களுக்கு வசதியாக ஒரு பிரிவு மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது.
மாதம் 1,000 யூரோவுக்கு மேல் ஓய்வூதியம் பெற்றால் அதில் இனி 20 சதவீதம் துண்டிக்கப்படும். முன்னாள் பொலிஸ், ராணுவ வீரராக இருந்தாலும் வயது 55க்கு குறைவாக இருந்தாலும் 40 சதவீதம் குறைக்கப்படும்.பிற துறை சார்ந்த ஓய்வூதியம் பெறுவோருக்கு 15 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறைப்பு நிர்ணயிக்கப்படும். ஓய்வு பெறும் போது வாங்கும் பெரிய தொகையில் 15 சதவீதம் குறைக்கப்படும். இந்த குறைப்பால் 1 பில்லியன் யூரோ சேமிக்கப்படும்.
வரி உச்சவரம்பு ஆண்டுக்கு 8,000 யூரோவில் இருந்து 5,000 யூரோவாக குறைக்கப்படும்.இதுகுறித்து கிரீஸ் நாட்டின் பிரதமர் ஜார்ஜ் பப்பண்ட்ரீ கூறுகையில்,"நாட்டின் மக்களாக, ஓர் அரசாக, ஒரு பார்லிமென்ட் அமைப்பாக, நாட்டுக்காக நாம் இந்தப் போரில் தோற்று விடக் கூடாது. நாம் நிச்சயம் வெல்வோம்” என்றார்.
அமெரிக்க தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் எச்சரிக்கை.
வடக்கு வஜிரிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் முன் நன்கு யோசித்துக்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் அமெரிக்கா தனது படைகளை குவித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கயானி, பாகிஸ்தான் ஒன்றும் ஈராக் இல்லை என்றும், வடக்கு வஜிரிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் முன் நன்கு யோசித்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா கவனம் கொள்ள வேண்டியது ஆப்கானிஸ்தான் தான் என்றும், பாகிஸ்தான் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜூலியனுக்கு உயரிய விருதான புக்கர் பரிசு அறிவிப்பு.
ஆங்கில இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதான புக்கர் பரிசு, பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜூலியன் பர்னசுக்கு வழங்கப்படுகிறது.காமன்வெல்த் நாடுகளை சேர்ந்த எழுத்தாளர்கள் படைக்கும் சிறந்த ஆங்கில நாவல்களுக்கு ஆண்டுதோறும் உயரிய பரிசான புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.
1968 முதல் இது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பரிசை இங்கிலாந்தை சேர்ந்த எழுத்தாளர் ஜூலியன் பர்னஸ் வென்றுள்ளார். அவரது சென்ஸ் ஆப் அன் என்டிங் என்ற நாவலுக்காக இந்த பரிசு வழங்கப்பட்டது.
ஜூலியன் ஏற்கனவே 1984, 1998, 2005 ஆகிய ஆண்டுகளில் இந்த பரிசுக்கான இறுதி பட்டியல் வரை சென்று வாய்ப்பை இழந்தவர். தற்போது அவரது கனவு நிறைவேறியுள்ளது.லண்டனில் நேற்று நடந்த விழாவில் பரிசுத் தொகை ரூ.39 லட்சம் அவரிடம் வழங்கப்பட்டது. ஜூலியன் பர்னஸ், 10 நாவல்கள், 3 சிறுகதை புத்தகங்கள் படைத்துள்ளார். அவரது படைப்புகள் 30க்கும் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
பயனற்ற நிலையில் சுனாமி எச்சரிக்கை கருவி: ஜேர்மனி குற்றச்சாட்டு.
கடந்த 2004ல் இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.இந்த பயங்கர நிலநடுக்கத்திற்கு பின் ஜேர்மனி சுமார் 45 மில்லியன் யூரோ செலவில் பயோஸ் என்னும் சுனாமி எச்சரிக்கை செய்யும் கருவியை இந்தோனேசியாவிற்கு வழங்கியது.
ஆனால் அக்கருவி இந்தோனேசிய அரசின் கவனக்குறைவால் பயனற்றுக் கிடக்கிறது. இந்த குற்றச்சாட்டை இந்தோனேசிய அரசு ஏற்க மறுக்கிறது.
கடல்சார் ஆய்வாளர் அல்ரிச் உல்ப் இதுபற்றி கூறுகையில், அதிக செலவில் பலனடைவது பயனற்றது என்கிறார். ஏனெனில் சுனாமி எச்சரிக்கை செய்யும் கருவியானது பல மில்லியன் செலவுகளை ஏற்படுத்துகிறது. ஆனால் நிலத்தின் அடியில் வைக்கும் சிஸ்மிக் கருவியானது சுனாமி வருவதற்கு முன்பே கண்டுபிடித்து விடும்.வெகு விரைவில் பயோஸ் திட்டம் சரிசெய்யப்படும் என்றும், அதுவே இந்தோனேசிய அரசின் இதயத்துடிப்பாக இருக்கும் எனவும் இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது.
டேல்பார்ம் நடைபாதையை அகற்றும் பணி தொடக்கம்.
லண்டனில் உள்ள மிகப்பெரிய டேல்பார்ம் நடைபாதையில் சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.இதை அகற்றும் பணியில் பொலிசார் ஈடுபட்டனர். அப்போது கலவரம் ஏற்பட்டது. செங்கல்லையும், குப்பை கூளங்களையும் பொலிசாரின் மீது கலவரக்காரர்கள் வீசினர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் கலவரக்காரர்கள் முகமூடி அணிந்து கொடூரமான மருந்துக் கருவிகளால் அங்கே குடியிருப்பவர்களை தாக்கினர்.இதுகுறித்து BBC செய்தி தொடர்பாளர் ஜெ்ரீமி குக்கீ கூறியதாவது, கலவரக்காரர்கள் பொலிசாரின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தனர் என்றும், சினிமாவில் வரும் சண்டைக்காட்சி போன்று கலவரம் இருந்தது என்றார்.
கடந்த திங்கட்கிழமை ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்ற தலையீட்டை நிராகரித்தனர். இப்பிரச்சனையை தங்கள் பேசில்டன் கவுன்சில் மூலம் வெளியேற விரும்புவதாகவும் தெரிவித்தனர்.இதுகுறித்து பேசில்டன் கவுன்சில் தலைவர் டோனி பால் கருத்து வெளியிடுகையில்,“டேல்பார்ம் நடைபாதை அகற்றும் பணியை செய்வது கஷ்டமான வேலை. அதை எப்படி ஒழுங்கான முறையில் பாதுகாப்பாக செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை” என்றார்.
பரிசினை பெறுவதற்காக ஆட்டுக்கு ஊக்கமருந்து: பரிசோதனையில் கண்டுபிடிப்பு.
அமெரிக்காவின் கொலராடோ மாநிலம் பெப்ளூ நகரில் “கொலராடோ மாநில கண்காட்சி” என்ற பெயரில் ஆண்டுதோறும் பிரமாண்ட விழா நடத்தப்படுகிறது.1872ம் ஆண்டு முதல் அக்டோபர் மாதத்தில் இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது. மாநில விவசாய மற்றும் தொழில் சங்கம் நடத்தும் இந்த விழாவில் பல்வேறு போட்டிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இதன் ஒரு பகுதியாக ஆடு, மாடுகள் விற்பனையும் நடக்கும். கொழுகொழு என்று இருக்கும் ஆடு, மாடுகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும்.செடாலியா என்ற பகுதியை சேர்ந்த சூசன் என்பவரதும் ஆடு “தியோடர்” இந்த போட்டியில் பங்கேற்றது. அதிகபட்சமாக ரூ.2.69 லட்சத்துக்கு ஏலம் போன அந்த ஆடு போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது.
அவர்கள் வளர்த்த இன்னொரு ஆடு சிறப்பு பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. ஆடுகள் தேர்வு செய்யப்பட்ட பிறகு ஆடுகளின் சிறுநீர் எடுக்கப்பட்டு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட 2 ஆடுகளின் சிறுநீரிலும் ரெக்டோபமைன் இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி சூசன் கூறுகையில்,“ஆடுகளுக்கு வழக்கமான உணவு மட்டுமே கொடுக்கிறோம். வேறு எந்த மருந்தும் கொடுப்பதில்லை. கண்காட்சிக்கு வந்த இடத்தில் ஏதோ உணவுப் பொருள் மாறியிருக்கிறது. முதல் பரிசை தடுக்க சதி நடந்ததாக தெரியவில்லை. ஆனால் குழப்பம் நடந்திருக்கிறது” என்றார்.
கண்காட்சி நிர்வாகிகள் கூறும் போது, பன்றிகளின் சிறுநீரில் ரெக்டோபமைன் இருப்பது தவறல்ல. ஆனால் ஆடுகளை பொருத்தவரை இது தடை செய்யப்பட்ட ரசாயனமாகும். எனவே ஊக்க மருந்து பயன்படுத்தியதாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. கண்காட்சி விதிமுறைப்படி பரிசுத் தொகை வழங்கப்பட மாட்டாது” என்றனர்.
கனடாவில் வெளிநாட்டவர்கள் குடியேற்றம் அதிகரிப்பு.
கனடாவில் வெளிநாட்டவர்கள் வந்து குடியேறுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் குடியேற்றத்தால் அந்நாட்டின் பொருளாதாரம், பண்பாடு வளர்ந்து வருகிறது.கடந்த 20 வருடங்களில் வருகை புரிந்த 250,000 வெளிநாட்டவர்கள் கனடாவில் நிரந்தரமாகவே தங்கியுள்ளனர். படிப்படியாக 50 வருடங்களில் இவர்களது எண்ணிக்கையானது 280,000ஆக அதிகரித்துள்ளது என்று டொரன்டோவின் விரிவுரையாளர் ஜெப்ரே ரெய்ட்ஸ் கூறியுள்ளார்.
கடந்த 15 முதல் 20 வருடங்களில் வெளிநாட்டவர்கள் குடியேறுவது அதிகரித்து உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் படித்தவர்களாகவும், வேலையில் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர் என்று கனடாவின்  RPP நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கனடாவின் சுற்றுப்பகுதிகளான அட்லாண்டிக் கனடா, குயிபெக் மற்றும் பிராரீஸ் பகுதிகள் வெளிநாட்டவர்களின் வருகையை 62  சதவிகிதம் ஆதரிப்பதாகவும், ஆதரவு அளிக்காத பகுதிகளான ஒன்டோரியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதிகளிலும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் ரெய்ட்ஸ் கூறியுள்ளார்.
கடந்த நவம்பரில் நடந்த பொதுமக்கள் கருத்துக்கணிப்பில், வெளிநாட்டவர்கள் வருகை கனடாவில் பல பண்பாட்டு கலாச்சாரத்தை வளர்த்து வருவதாகவும், அது கனடாவுக்கு பெருமை தரக்கூடியது என்றும் அறிவித்துள்ளது.வேலைவாய்ப்பு அதிகம் தரும் மற்ற நாடுகளைக் காட்டிலும் கனடாவில் வெளிநாட்டவர்கள் அதிகரித்து இருப்பது விதிவிலக்கான ஒன்று. மற்ற நாடுகளான அமெரிக்கா, லண்டன், நெதர்லாந்து மற்றும் பிரான்ஸை கனடா திரும்பி பார்க்க வைக்கிறது.
2012ம் ஆண்டுக்கான அதிபர் தேர்தல்: சர்கோசியை எதிர்த்து ஹாலண்டே போட்டி.
அடுத்த ஆண்டு பிரான்சில் நடைபெறும் அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் சர்கோசியை ஹாலண்டே எதிர்த்துப் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.இவர் சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். இவரது கட்சிக்கு 56 சதவீத வாக்குகள் கிடைத்தன. இவரை எதிர்த்து போட்டியிடப் போகும் வலதுசாரி வேட்பாளரான மாரட்டின் யுஸ்ரீபிரி ஒர் பழமைவாதி. இவருக்கு 43 சதவீத மக்கள் ஆதரவு இருந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாவது சுற்றுத் தேர்தலில் ஃபிராங்கோய்ஸ் ஹாலண்டே வெற்றி பெற்றுள்ளார். 2.8 கோடி மக்கள் 900 வாக்கு மையங்களில் வாக்களித்தனர். இவற்றில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் எண்ணப்பட்டதில் மார்ட்டின் யுஸ்ரீபிரியை எதிர்த்த ஹாலண்டே 56 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
57 வயதான ஹாலண்டே எவ்வித அரசுப் பதவியும் இதுவரை வகித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலண்டேயிடம் இரண்டு சுற்றுக்களிலும் தோல்வி கண்ட மார்ட்டின் யுஸ்ரீபிரி தொழில் துறை அமைச்சராகவும் சோசலிஸ்ட் கட்சியின் தற்போதையத் தலைவராகவும் இருந்து வருகிறார்.பிரான்ஸ் நாட்டில் வாரத்திற்கு 35 மணிநேரம் பணியாற்ற வேண்டும் என்ற மார்ட்டின் யுஸ்ரீபிரி அறிமுகம் செய்ததால் இவரை நவீன பிரான்ஸ் நாட்டின் சிற்பி என்று அழைக்கின்றனர்.
தனது முழு உடலையும் தானமாக அளித்து சாதனை படைத்த நபர்.
இங்கிலாந்தில் உள்ள டோர்குலே பகுதியை சேர்ந்தவர் ஆலன் பில்லிஸ்(61). டாக்சி டிரைவரான இவர் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு பெரும் அவதிப்பட்டு வந்தார்.கடந்த ஜனவரி மாதம் ஆலன் இறந்தார். தான் இறந்த பிறகு தனது உடலை எகிப்து அரசர்களை போன்று மம்மி வடிவில் உருவாக்கி பரிசோதனைக்கு தானமாக அளிக்க வேண்டும் என விரும்பினார்.
அவரது விருப்பப்படி உடல் வடக்கு இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு மருத்துவ மையத்தில் தானமாக வழங்கப்பட்டது. அங்கு அவரது உடல் சிறப்பு ஓபரேசன் செய்து மருந்துகள் தடவப்பட்டு அழுகாத நிலையில் மம்மி போன்று உலர வைக்கப்பட்டது. தற்போது அவரது உடல் முழுமையாக மம்மி ஆகிவிட்டது.
யோர்க் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் நிபுணர் மருத்துவர் ஸ்டீபன் பக்லீ இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணமாக இருந்தார். மூன்று மாதங்களில் இந்த சாதனையை அவர் செய்து முடித்தார். மூன்று ஆயிரம் ஆண்டுகளில் டாக்சி டிரைவர் ஆலன் பில்லிஸ் முதல் மம்மி மனிதர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இங்கிலாந்தில் குப்பைகளை பொறுக்கும் அதிகாரிகள்.
இங்கிலாந்தில் மார்க்கெட்டிங் உள்பட பல துறைகளில் முக்கிய தகவல்களை திரட்டுவதற்காக குப்பையை பொறுக்கும் வேலையை அரசே செய்து வருகிறது.பொதுவாக வீடுகளில் வீசப்படும் குப்பைகள், லாரிகள் மூலம் கிடங்குகளுக்கு எடுத்து செல்லப்படும். அங்கு அழிக்கப்படும். இந்த வேலையை சற்று வித்தியாசமாக செய்கிறது இங்கிலாந்து அரசு.
வீடுகளின் குப்பையில் கிடக்கும் பேப்பர், பாலிதீன் கவர், கிறுக்கிவிட்டு தூக்கி போட்ட பேப்பர், சிப்ஸ் உறை என ஒன்று விடாமல் எல்லாவற்றையும் பொறுக்கி எடுக்கிறார்கள்.பெரும்பாலும் இந்த வேலையில் அதற்கான அதிகாரிகளே ஈடுபடுகிறார்கள். குப்பை அதிகமானால் அவுட்சோர்சிங் முறையில் ஆட்களை வரவழைத்து இந்த வேலையை முடிக்கின்றனர்.
முதலில் வீடுகளில் இருந்து கழிவுகளாக தூக்கிவீசப்படும் குப்பைகள் தெருவாரியாக சேகரிக்கப்படுகின்றன. பின்னர் இவற்றை உணவு பொருள் உறை, பழைய பேப்பர், எழுதிய பேப்பர் என்பது போல 13 வகையாக பிரிக்கின்றனர்.அதை 52 இனங்களில் தரம் பிரிக்கும் பணி 2-வது கட்டமாக நடக்கிறது. எந்த வகையான உணவு வகைகள் அதிகம் விற்பனை ஆகின்றன, எதை மக்கள் அதிகம் மிச்சம் வைக்கின்றனர், எந்த வகையான பொருட்களை எங்கு வாங்குகின்றனர் என்பது போன்ற பல முக்கிய தகவல்கள் இந்த குப்பைகள் வாயிலாக சேகரிக்கப்படுகின்றன.
இதன் மூலம், மக்கள் எந்த பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர் என்று கணக்கிடப்பட்டு அவை தாராளமாக சப்ளை செய்யப்படுகின்றன என்கின்றனர் அதிகாரிகள்.வீடுகளில் எந்த குப்பை அதிகம் சேருகிறது என்பதை தெரிந்துகொண்டு இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்தகவல்கள் பயன்படுகின்றன என்றும் கூறுகின்றனர். கடந்த ஆண்டில் 30 ஆயிரம் வீடுகளின் குப்பைகளில் இருந்து முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இப்பணியில் 40-க்கும் அதிகமானோர் ஈடுபட்டனர். அரசு சார்பில் இயங்கும் பிரத்யேக கவுன்சில் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.இத்திட்டத்துக்கு எதிர்ப்பும் இல்லாமல் இல்லை. இதுபற்றி பிக் பிரதர் வாச் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் இயக்குனர் நிக் பிக்கல்ஸ் கூறுகையில்,“குப்பையில் இருந்து பயனுள்ள தகவல்கள் கிடைப்பது உண்மைதான். அதே நேரம் இந்த பணி தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதாக இருக்க கூடாது. மருந்து சீட்டு, மாத்திரைகள் சாப்பிடும் விவரம் போன்ற பேப்பர்களை ஆராய ஆரம்பித்தால் அது மனித உரிமை மீறலாகும்“ என்றார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF