Monday, October 3, 2011

இன்றைய செய்திகள்.

மன்னாரில் வணிக ரீதியான எரிவாயு உற்பத்தி சாத்தியமா என்பது உறுதியாகவில்லை.

மன்னார் கடற்படுக்கையில் எரிவாயு வளம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளபோதும், அது வணிக ரீதியான பெறுமதி கொண்டதா என்பதை உறுதிப்படுத்த மேலும் துளையிடப்பட வேண்டியுள்ளதாக கெய்ன் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. 

கண்டியில் நேற்ற நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, மன்னார் கடற்படுக்கையில் எரிவாயு வளம் இருப்பதை கண்டறிந்துள்ளதாக துளையிடும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனம் தமக்கு அறிவித்துள்ளதாக கூறியிருந்தார். இது சிறிலங்காவை அபிவிருத்தி செய்வதற்குப் பெரிதும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். CLPL-Dorado-91H/1z என்று பெயரிடப்பட்டுள்ள கிணற்றில் 1354 மீற்றர் ஆழத்தில் 25 மீற்றருக்கு இந்த திரவ எரிவாயுப் படலம் காணப்படுவதாக கெய்ன் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது. 

ஆனாலும், இங்கு எரிவாயுவை வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்ய முடியுமா என்பதை உறுதி செய்வதற்கு மேலும் துளையிடும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. மன்னாருக்கு அப்பால் எண்ணெய் வளம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட கடற்பகுதியில் எட்டுத் துண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு துண்டமே கெய்ன் இந்தியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு துண்டம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
மேலும் ஐந்து துண்டங்களுக்கு கேள்விப் பத்திரங்கள் கோரப்படவுள்ளன. 

இதனிடையே, வணிக ரீதியாக இங்கு எரிவாயு உற்பத்தி சாத்தியமானால், ஏனைய ஐந்து துண்டங்களுக்கும் கேள்விப் பத்திரம் கோரும் போது கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த தெரிவித்துள்ளார்.

16 நாடுகளுடன் இணைந்து நடத்தும் பாரிய போர்ப்பயிற்சி - சிறிலங்கா இராணுவத்தை கழற்றி விட்டது இந்தியா.

இந்திய இராணுவம் 16 நட்பு நாடுகளின் படைகளுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ள பாரிய போர்ப்பயிற்சியில் பங்கேற்க சிறிலங்கா இராணுவத்துக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 1.13 மில்லியன் படையினரைக் கொண்ட இந்திய இராணுவம் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் நட்பு நாடுகளுடன் இணைந்து பாரிய அளவிலான போர்ப்பயிற்சியை மேற்கொள்ளவுள்ளது. 

நட்பு நாடுகளின் இராணுவங்களுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்தக் கூட்டுப் போர்ப்பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஸ்யா, மொங்கோலியா, கசாக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், பங்களாதேஸ், மியான்மர், நேபாளம், மாலைதீவு, சிசெல்ஸ், சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய 16 நாடுகளின் இராணுவங்கள் இந்த கூட்டுப் போர்ப்பயிற்சியில் பங்கேற்கவுள்ளதாக இந்திய இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். 

அறுபதாண்டு கால போர் அனுபவத்தைக் கொண்டுள்ள தமது இராணுவத்துடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு ஏனைய நாடுகளின் இராணுவங்கள் ஆர்வமாக இருப்பதாகவும், குறிப்பாக கிராமப்புற, நகரப்புற, அரைநகரப் புறங்களில் கிளர்ச்சி மற்றும், தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகளை மையப்படுத்தி இந்தப் போர்ப் பயிற்சிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்திய இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அதேவேளை இந்தப் போர்ப்பயிற்சிக்கு சிறிலங்கா இராணுவத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் அயல் நாடுகளான பங்களாதேஸ்,நேபாளம், மாலைதீவு, மியான்மர் போன்றவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதும் சிறிலங்காவுக்கு மட்டும் இந்த அழைப்பு விடுக்கப்படவில்லை. 

அண்மையில் திருகோணமலைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடற்படை போர்ப்பயிற்சி ஒன்றை மேற்கொண்டிருந்தது. ஆனால் இந்திய இராணுவம், சிறிலங்கா இராணுவத்துக்கு கூட்டுப் போர்ப்பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்காதது சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சிறிலங்கா இராணுவத்தை மையப்படுத்தியே போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதால், சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக இந்திய இராணுவம் சிறிலங்காவைக் கழற்றி விட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகங்கள் ஊடக மஹிந்த ராஐபக்சவுக்கு அழைப்பாணை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய 30 பக்க அழைப்பாணையை இலங்கையில் உள்ள ஊடகங்கள் உட்பட 100 ஊடகங்களில் வெளியிட உள்ளதாக அமெரிக்காவின் அரசமைப்பு சட்டத்தரணி புரூஸ் பெய்ன் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் அந்த அழைப்பாணை ஜனாதிபதியைச் சென்றடைந்தமை உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
செப்ரெம்பர் 30ஆம் திகதி குறித்த நீதிமன்ற ஆவணம் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகச் சட்டத்தரணி புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார். சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகளுக்குப் பொறுப்பானவர் என்று கூறி ஜனாதிபதி மீது அமெரிக்காவில் சித்திரவதைக்கு உள்ளானோரைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
படையினரால் படுகொலை செய்யப்பட்ட மூவரின் சார்பில் அமெரிக்க சமஷ்டி நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதியிடம் இருந்து 30 மில்லியன் டொலர் நட்டஈடு கேட்டுத் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குத் தொடர்பான அழைப்பாணை ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஜனாதிபதி மாளிகையோ வெளிவிவகாரத்துறை அமைச்சோ நீதி அமைச்சோ அதனைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டன.
இதையடுத்தே ஊடகங்களின் மூலம் அழைப்பாணையை ஜனாதிபதிக்கு எட்டச் செய்ய அனுமதிக்குமாறு புரூஸ் பெய்ன் அமெரிக்க சமஷ்டி நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தார். இந்த அழைப்பாணையை இலங்கை ஜனாதிபதி நீண்டகாலத்துக்குப் புறக்கணிக்க முடியாது என்றும், ஜனாதிபதியிடம் அழைப்பாணை சமர்ப்பிக்கப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் என்று தாம் நம்புகின்றனர் எனவும் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடருக்கா நியூயோர்க் சென்றிருந்த சமயம் அங்குள்ள குயின்ஸ்சில் புத்த விகாரைக்குச் சென்றபோது அழைப்பாணையை கையளிக்க அமெரிக்க அதிகாரிகள் முனைந்தனர் எனவும், ஆனால் அவரது பாதுகாவலர்கள் அந்த ஆவணத்தை கையளிக்க முடியாமல் தடுத்து விட்டதாகவும் சட்டத்தரணி மேலும் கூறியுள்ளார். அழைப்பாணை பெறுவதை அவர் தவிர்ப்பது தெளிவாகியுள்ளதால், நீதிபதிகள் மகிழ்ச்சியடையவில்லை. எனவே இந்த அழைப்பாணையை பரிமாற ஊடகங்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார். அழைப்பாணையை முழுமையாக வெளியிட முன்வருமாறு உலகிலுள்ள ஊடகங்களுக்கு குறிப்பாக இலங்கையில் உள்ள ஊடகங்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
எழுத்து மூலம் கோரினால் கலக நிலைமைகளின் போது இராணுவத்தினரை ஈடுபடுத்த முடியும் : ஜகத் ஜயசூரிய.
பொலிஸ் மா அதிபர் எழுத்து மூலமான கோரிக்கை விடுத்தால் மட்டுமே கலக நிலைமைகளின் போது இராணுவத்தினரை நிலைநிறுத்த முடியும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு அவசியம் என பொலிஸ் மா அதிபர் எழுத்து மூல கோரிக்கை விடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் எதிர்ப்பு, கலகங்கள் மற்றும் போராட்டங்களின் போது  பொலிஸார் அல்லது விசேட அதிரடிப் படையினரால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் இராணுவத்தினரின் உதவியை பெற்றுக் கொள்ள முடியும்.
எனினும், இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் நேரடியாக எழுத்துமூலக் கோரிக்கை விடுக்க வேண்டும்.குறைந்தளவு அதிகாரத்தை பயன்படுத்தி கலகங்களை கட்டுப்படுத்துமாறு இராணுவத்தினருக்கு தாம் பணிப்புரை விடுத்துள்ளதாக இராணுவத் தளபதி ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்காக 4500 படையினர் அனுப்பி வைக்கப்பட உள்ளனர் : இராணுவ தளபதி.
ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளுக்காக 4500 இலங்கை இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக ஹெய்ட்டி மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் இலங்கை இராணுவத்தினர் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.அமைதி காக்கும் பணிகளுக்காக தெரிவு செய்யபட்ட படைவீரர்கள் ஏற்கனவே தயார் நிலையில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.தே.கவுக்குப் பாதகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படாது!- ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு தீர்மானத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்காது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியை ஆதரிப்பதாக வெளிவந்த செய்திகள் குறித்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யார் எந்த தீர்மானத்தை எடுத்தாலும் கொழும்பில் வாழும் மூவின மக்களும் எமது கட்சியையே ஆதரிக்கின்றனர். இதை எவரது தீர்மானத்தாலும் மாற்றமுடியாது என்றும் ரணில் கூறினார்.அரசு - கூட்டமைப்பு ஆகிய இரு தரப்பினருக்கும் இடையில் மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வு யோசனையை அரசிடம் முன்வைத்துள்ளது. அதேபோல், அரசும், தனது தீர்வு யோசனையை முன்வைக்க வேண்டும் இருதரப்பினரிடையில் ஓர் இணக்கம் ஏற்படவேண்டும்.
அரசு தனது அரசியல் தீர்வு யோசனையை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு சமர்ப்பித்தால் அதைப் பரிசீலித்து எமது நிலைப்பாட்டை நாம் தெரிவிப்போம்.எப்படியிருப்பினும், அரசியல் தீர்வு விரைவாக வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே என்று ரணில் மேலும் கூறினார்.
அரசியல் தீர்வு, மனித உரிமை மீறல்கள் மற்றும் நிபுணர்கள் குழு அறிக்கை போன்றவை தொடர்பில் இலங்கை அரசு இந்த வருட முடிவுக்குள் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இல்லையேல் இலங்கை மீது சர்வதேச நாடுகளின் தலையீடுகள் அதிகரித்துவிடும் எனவும் அவர் எச்சரித்தார்.
புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வரும் குணரட்னம் கொழும்பில் தோன்றினார்.
தேசிய புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வரும் ஜே.வி.பி. கிளர்ச்சிக் குழு தலைவர் குமார் குணரட்னம் கொழும்பில் தோன்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.அண்மையில் கிளர்ச்சிக் குழு உறுப்பினர் புபுது ஜாகொடவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மக்கள் கருத்தரங்கொன்றில் பிரேம் குமார் இரகசியமாக கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிகப்பு நிற வாகனமொன்றில் பிரேம் குமார் சென்றதாகவும், அவருடன் ஜே.வி.பியின் தலைவர் ரோஹண விஜேவீரவுக்கு நிகரான தோற்றமுடைய நபர் ஒருவரும் சென்றிருந்ததாகவும் சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.கொழும்பு புதிய நகர மண்டபத்தில் கடந்த புதன்கிழமை இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது.
இறுதி வரிசை ஆசனமொன்றில் அமர்ந்து கருத்தரங்கினை செவிமடுத்த பிரேம்குமார், கருத்தரங்கு நிறைவடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் வெளியேறிச் சென்றதாகக் குறிப்பிடப்படுகிறது.இதேவேளை, பிரேம்குமார் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக திவயின பத்திரிகை செய்தியொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழர் பிரச்சினை தொடர்பில் பிரேம்குமார் தரப்பினர் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜே.வி.பி கிளர்ச்சியின் போதும், தமிழீழ விடுதலைப் புலிகள் போர் ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னரும் பெருமளவான ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களில் சொற்ப அளவிலான ஆயுதங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.எஞ்சிய ஆயுதங்களுக்கு என்னவாயிற்று என்பது புரியாத புதிராக நீடித்து வருவதாக திவயின தெரிவித்துள்ளது.
ஐ.நாவிற்கு இரகசிய தகவல்கள் வழங்கிய தமிழ் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும்!- குணதாஸ அமரசேகர.
அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு தரப்புக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஐ.நா. நிபுணர் குழுவிற்கு இரகசிய தகவல்களை வழங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடனடியாக தடைசெய்து அனைத்து உறுப்பினர்களையும் விசாரணைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியறுத்தியுள்ளது.அரசாங்கம் இனி எந்தவொரு பேச்சுவார்த்தையையும் கூட்டமைப்புடன் முன்னெடுக்கக் கூடாது. இனப்பிரச்சினையை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகளை உடனடியாக ரத்து செய்து விட்டு நாட்டிற்கு எதிரான சக்திகளை தண்டிக்க வேண்டும். என்றும் அவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர கூறுகையில்,புலிப் பயங்கரவாதிகளின் அரசியல் பிரிவுதான் கூட்டமைப்பு, இவர்கள் தொடர்ந்தும் இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். தேசிய அரசியலில் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டு நாட்டிற்கு எதிராக அவர்கள் செயல்படுவதை இனி ஒரு போதும் அனுமதிக்க முடியாது.ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழுவிற்கு அரசிற்கும் பாதுகாப்பு தரப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தகவல்களை வழங்கியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. இது தொடர்பாக அரசாங்கம் கூடுதலான கவனம் செலுத்தி உண்மை நிலையை உறுதிப்படுத்த வேண்டும்.
அவ்வாறு நாட்டிற்கு எதிரான தகவல்களை கூட்டமைப்பு, ஐ.நா. விற்கு வழங்கியிருக்குமாயின் அக்கட்சியை உடனடியாக தடைசெய்ய வேண்டும். அது மட்டுமன்றி அனைத்து உறுப்பினர்களையும் விசாரணை செய்து தண்டனை வழங்கவேண்டும். ஏனென்றால் நாட்டிற்கு எதிராக செயற்படுபவர்களை பதவி தராதரம் பாராமல் தண்டனை வழங்குவதே முறையாகும்.
கூட்டமைப்புக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டிற்கோ தமிழ் மக்களுக்கோ நன்மை செய்தது கிடையாது. பிரிவினை வாதத்தை தூண்டிவிட்டு அழிவுகளையும் பின்னடைவுகளையுமே தமிழர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொடுத்துள்ளது.இவர்கள் உள்நாட்டில் இருந்து கொண்டு சர்வதேசத்தில் இடம்பெறும் நாட்டிற்கு எதிரான சதிகளுக்கு துணைப் போகின்றனர் என்றார்.
இலங்கைக்கு எதிரான அழுத்தங்களினால் ஐ.நா பிளவுபடக் கூடிய அபாயம் : ரிவிர.
இலங்கைக்கு எதிரான அழுத்தங்களினால் ஐக்கிய நாடுகள் அமைப்பு பிளவுபடக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக ரிவிர பத்திரிகையின் அரசியல் பத்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் இலங்கைக்கு எதிராக தேவையற்ற அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக கூடுதலாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் உறுப்பு நாடுகள் பிளவடைந்து வேறும் ஓர் அமைப்பு உருவாகக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் இலங்கைக்கு எதிராக பழிவாங்கும் எண்ணத்துடன் செயற்பட்டு வருதாக அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னாரில் எண்ணெய்வளம் கண்டுபிடிப்பு! இலங்கை எதிர்காலத்தில் செல்வந்த நாடாக மாறும்!- ஜனாதிபதி.
எதிர்காலத்தில் இலங்கை ஒரு செல்வந்த நாடாக மாறக்கூடிய தகவல் தமக்கு இன்று கிடைத்ததாக, கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 
மேலும் கருத்து தெரிவித்த ஐனாதிபதி,
எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனமொன்று இலங்கையில் எரிபொருள் மற்றும் பெற்றோலிய வளம் இருப்பதாக இன்று காலை எனக்கு அறிவித்தது. இதன் காரணமாக நாம் எதிர்காலத்தில் செல்வந்த நாடாகக் கூடிய சாத்தியம் இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.
மன்னார் கடற்படுகையில் எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் பெற்றோலிய அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கெய்ர்ன் இந்தியா எனும் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.ஓகஸ்ட் மாத முற்பகுதியில் கிணறொன்றை தாம் அகழ்ந்ததாகவும் கடந்த வாரம் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கெய்ர்ன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மன்னார் கடற்படுகையில் எஸ்.எல்.2007-01-001 எனக் குறிப்பிடப்பட்ட பகுதியில் பெற்றோலிய அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுவத்றகான உரிமை கெய்ர்ன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.அந்நிறுவனத்தின் ஒரு அங்கமான கெய்ர்ன் லங்கா (பிரைவேட்) லிமிடெட் எனும் நிறுவனம் மன்னார் பகுதியில் மேற்படி ஆய்வில் ஈடுபட்டுள்ளது.'சிக்யு' எனும் அகழ்வுக் கப்பலை பயன்படுத்தி அப்பகுதியில் 3 கிணறுகளை கெய்ர்ன் நிறுவனம் தோண்டவுள்ளது. இதற்கான செலவு 110 மில்லியன் டொலர்களாகும்.
இரண்டாம் இணைப்பு
இலங்கையின் வடமேற்கே மன்னார் கடற்பரப்பில் எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.கண்டியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்திருக்கின்றது.மன்னார் கடற்பரப்பில் எரிபொருள் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்திடமிருந்து இந்தத் தகவல் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
மன்னார் கடலுக்கடியில் 33 ஆயிரம் கிலோ மீற்றர் பரப்பளவான இடத்தில் ஒரு பில்லியன் பீப்பாய்கள் எரிபொருள் வளம் காணப்படுவதாக கடலுக்கடியில் நடத்தப்பட்ட ஆய்வுத் தகவல்களின் மூலம் தெரியவந்திருப்பதாக இலங்கை அரசு தெரிவித்திருந்தது.லண்டனில் பதிவு பெற்றுள்ள கெயின் நிறுவனத்தின் கிளை நிறுவனமாகிய கெயின் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமாகிய கெயின் சிறிலங்கா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தப் பணியை மன்னார் கடற்பரப்பில் ஆரம்பித்திருந்தது.
எண்ணெய் அகழ்வு முயற்சிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்த எட்டு இடங்களில் ஒன்றிலேயே இப்போது எரிவாயு கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றது.மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் வளம் இருப்பது பற்றிய தகவல்கள் கிடைத்ததையடுத்து, இந்திய மற்றும் சீன தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் எரிபொருள் கிணறு தோண்டுவதற்கான அனுமதி இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த போதிலும், அந்த நிறுவனங்கள் திட்டமிட்டபடி தமது பணிகளைத் தொடங்கவில்லை.
கடற்படுகையில் 4442 அடி ஆழத்தில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிவாயு வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தத் தக்கதா இல்லையா என்பதை அறிய மேலும் அகழ்வு வேலைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக கெயின் நிறுவனம் அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது.
இலங்கை தனது எரிபொருள் தேவைக்காக இறக்குமதியையே நம்பியிருக்கின்றது என்பதும், 2009 ஆம் ஆண்டில் மாத்திரம் இதற்கென 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை அது செலவு செய்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அட்டையில் வாக்கம் கிளீனர் தயாரித்து இங்கிலாந்து மாணவர் சாதனை.
பொருட்களை பேக்கிங் செய்ய பயன்படும் அட்டையில் வாக்வம் கிளீனர் இயந்திரத்தை தயாரித்து அசத்தியிருக்கிறார் இங்கிலாந்து மாணவர்.சிக்கனமான தொழில்நுட்பம் என்ற வகையில் இந்த படைப்பு பல விருதுகளை வென்றுள்ளது. இங்கிலாந்தின் லப்பாரோ பல்கலைக்கழகத்தில் தொழிலக டிசைன் இன்ஜினியரிங் துறை மாணவர் ஜேக் டைலர்(22).
இன்ஜினியர்கள் மாணவர்கள் அனைவரும் இறுதியாண்டில் ஏதாவது ஒரு தொழிற்சாலையில் ஓராண்டு பயிற்சி பெற வேண்டும். பயிற்சி நிறைவு செய்யும்போது ஏதாவது ஒரு கருவியை உருவாக்க வேண்டும்.
வாக்வம் கிளீனர் தயாரிக்கும் வேக்ஸ் நிறுவனத்தில் ஜேக் டைலருக்கு அனுமதி கிடைத்தது. வொர்சஸ்டர்ஷயர் நகரில் உள்ள வேக்ஸ் தொழிற்சாலையில் அவர் பயிற்சியை மேற்கொண்டார்.
பயிற்சி நிறைவின் போது மிகமிக குறைந்த செலவில் வாக்வம் கிளீனர் தயாரிக்க ஜேக் முடிவு செய்தார். இதற்காக தொழிற்சாலையின் ஒவ்வொரு நிலையில் நடக்கும் பணிகளையும் தெளிவாக தெரிந்துகொண்டார்.அதன் பிறகு சிக்கன வாக்வம் கிளீனர் தயாரிப்பை தொடங்கினார். வேக்ஸ் கம்பெனியில் பேக்கிங் செய்ய பயன்படும் அட்டையை வைத்தே வாக்வம் கிளீனர் தயாரிக்க முடிவு செய்தார்.
திரும்ப பயன்படுத்தக்கூடிய நைலான் பிளாஸ்டிக், பேக்கிங் அட்டைகள்.. இவை மட்டுமே அவர் பயன்படுத்திய பொருட்கள். வேக்ஸ் நிறுவனத்தின் டிசைன் பிரிவு அதிகாரிகள் உதவியுடன் அட்டை வாக்வம் கிளீனரை தயாரித்தார்.லண்டனில் உள்ள வர்த்தக டிசைன் மையம், இங்கிலாந்தின் நியூ டிசைனர்ஸ் கண்காட்சி உள்பட பல இடங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த அட்டை வாக்கம் கிளீனர் பல விருதுகளை அள்ளியுள்ளது.
இதுகுறித்து ஜேக் கூறியதாவது: தொழில்நுட்பத்தின் பயன் சாமானிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். இந்த இரண்டையும் நோக்கமாகக் கொண்டே அட்டை வாக்வம் கிளீனரை உருவாக்கினேன்.மோட்டார் தவிர இதில் இருக்கும் பொருட்கள் ரிப்பேர் ஆனால் வீட்டிலேயே சரிசெய்துவிடலாம். மிச்சம், மீதி அட்டைகள் இருந்தால் போதும். பென்சில், ஸ்கெச் பேனா, ஸ்டிக்கர்கள் இருந்தால், வெளிப்புற டிசைனை மாற்றிக்கொண்டே இருக்கலாம்.
ஏமனில் விமானத் தாக்குதல்: 30 வீரர்கள் பலி.
ஏமன் ராணுவம் சனிக்கிழமை மாலை தவறுதலாக நடத்திய விமானத் தாக்குதலில் 30 வீரர்கள் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.ஏமன் நாட்டில் அதிபருக்கு எதிராக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. தெற்கு அபியான் மாகாணத்தில் உள்ள பள்ளிக் கட்டடம் ஒன்றில் ராணுவத்தின் 119வது படைப்பிரிவினர் தங்கியிருந்தனர்.
அபியான் மாகாணத்தின் தலைநகரான ஜின்ஜிபாருக்கு கிழக்கே இப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த மே மாதத்திலிருந்து இப்பகுதி முழுவதும் அல்கொய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாதக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அதை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக ராணுவம் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வந்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.இதுகுறித்து ஏமன் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“விமானத் தாக்குதல் நடைபெற்றதும், அந்தப் பள்ளிக்கு வந்த தீவிரவாதிகள் காயமடைந்த ராணுவ வீரர்களைத் துப்பாக்கியால் சுட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன” என்றார்.
மக்களின் எதிர்ப்பால் சீனாவுடன் இணைந்து அணை கட்டும் திட்டம் ரத்து.
சீனாவுடன் இணைந்து மாலி மற்றும் மாய் நதிகளின் குறுக்கே ரூ.17,650 கோடியில் பிரம்மாண்ட அணை கட்டும் திட்டத்தை மக்கள் எதிர்ப்பால் மியான்மர் அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கும் நாடு மியான்மர். நீர் மின்சாரம் தயாரிக்க தேவையான நதிகள், நீர் வீழ்ச்சிகள் ஆகியவை சீனாவின் கவனத்தை கவர்ந்தன.ஏற்கனவே மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக உலக நாடுகள் பல பொருளாதார தடைகளை விதித்துள்ளதால் மியான்மருடன் நெருங்கி அதன் வளங்களை தன் வசதிக்கு பயன்படுத்த சீனா விரும்புகிறது.
அந்த வகையில் மாலி, மாய் நதிகளின் குறுக்கே மைட்சோன் என்ற பிரம்மாண்ட அணை கட்டி நீர் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் மியான்மருடன் ஒப்பந்தம் செய்தது.அதுவும் மியான்மர் அரசு பழங்குடியின தீவிரவாதிகள் இடையே நீண்ட காலமாக சண்டை நடந்து வரும் பகுதி அது. எனவே கடும் எதிர்ப்பு கிளம்பியது.அணை கட்டும் திட்டத்துக்கு எதிராக மியான்மர் ஜனநாயக ஆதரவு தலைவர் ஆங் சான் சூ கியும் களத்தில் இறங்கினார். பழங்குடியினருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.இதையடுத்து தனது ஆட்சிக் காலத்தில் அணை கட்டும் பணி தொடராது என்று அதிபர் தேய்ன் செய்ன் நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்தார்.
மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்தாலும் சமீபத்தில் ஜனநாயக அரசை ஏற்படுத்துவதாக கூறி அதிபராக தேய்ன் செய்னை ராணுவம் நியமித்தது.மக்கள் எதிர்ப்பை ராணுவ அரசு மதிக்காத நிலையில் அதனால் நியமிக்கப்பட்ட அதிபர் அணை கட்டும் திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது மியான்மர் வரலாற்றில் புதிய நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்துவதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் எலக்டிரிக் கார்களில் குறைந்த கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் திட்டம் அறிமுகமாகியுள்ளது.இதன்மூலம் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தும் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் கார் போக்குவரத்தை குறைக்க முடியும் என்று பிரான்ஸ் அரசு நம்புகிறது.
முதல்கட்டமாக பாரீசில் 66 எலக்டிரிக் கார்கள் வாடகைக்கு தயாராக உள்ளன. அவற்றை சார்ஜ் செய்ய 33 சார்ஜிங் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்த எண்ணிக்கையை விரைவில் 3,000 கார்களாகவும் 1,000 சார்ஜிங் மையங்களாகவும் அதிகரிக்க பாரீஸ் மேயர் பெர்ட்ரான்ட் டெலோனே திட்டமிட்டுள்ளார்.
இந்த வாடகை கார் திட்டத்தின்கீழ் எலக்டிரிக் காரை அரை மணி நேரத்துக்கு 4 முதல் 8 யூரோ செலுத்தி பெறலாம். ஆட்டோலிப் எனப்படும் இந்த வசதியை பெற அடையாள அட்டை, முகவரி சான்று அளித்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் அதிகபட்சம் 250 கிலோமீற்றர் வரை மற்றும் 4 மணி நேரம் இந்த எலக்டிரிக் கார் ஓடும். ரெனால்ட்ஸ் மற்றும் அதன் ஜப்பானிய துணை நிறுவனம் நிசான் மோட்டார் ஆகியவை இந்த திட்டத்தில் 400 கோடி யூரோ முதலீடு செய்துள்ளன.
இதுபற்றி ஆட்டோலிப் பொது மேலாளர் மொரல்ட் சிபோட் கூறுகையில்,“ஒரு காரை சொந்தமாக்கி கொள்வதால் அதிக செலவு, சுற்றுச்சூழல் சீர்கேடு, எரிபொருள் செலவு, பராமரிப்பு செலவு ஆகியவை ஏற்படுகிறது. அதனால் சொந்தமாக கார் வாங்கும் எண்ணத்தை மக்கள் தவிர்க்க இந்த திட்டம் உதவும். அதேநேரம் கார் குறித்த எந்த கவலையும் இன்றி கார் பயண அனுபவத்தை குறைந்த செலவில் அவர்கள் பெறலாம்” என்றார்.
ஆப்கன் அதிபரை கொலை செய்தவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்: அரசு அறிவிப்பு.
ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ரப்பானியை கொலை செய்தவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என ஆப்கன் அரசு கூறியுள்ளது.ஆப்கனின் குற்றச்சாட்டுகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் கிலானி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆப்கன் முன்னாள் அதிபர் பர்ஹனுதீன் ரப்பானியின் படுகொலை பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் உள்ள தலிபான்களின் தலைமையகத்தில் திட்டமிடப்பட்டதற்கான செயற்கைக்கோள் ஆதாரங்களை நேற்று முன்தினம் ஆப்கன் அரசு பாகிஸ்தானிடம் அளித்தது.இதையடுத்து பேசிய ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் செய்தித் தொடர்பாளர் சியாமாக் ஹெராவி,“தலிபான்களுடனான அமைதிப் பேச்சு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வாய்ப்புள்ளது” என்றார்.
இதற்கிடையில் கடந்த செப்டம்பர் 21 முதல் 25 வரை ஆப்கனின் குனார் மற்றும் நூரிஸ்தான் மாகாணங்களின் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நூற்றுக்கணக்கான ராக்கெட் தாக்குதல்களை நடத்தியதாகவும், அவை யாவும் முறியடிக்கப்பட்டதாகவும் அம்மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில் ஆப்கன் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜனன் மொசாசாய் நேற்று அளித்த பேட்டியில்,“கடந்த மூன்றாண்டுகளில் பாகிஸ்தானுடனான எங்களது உறவை நம்பிக்கை மற்றும் உறுதி அடிப்படையில் மேம்படுத்தினோம். ஆனால் பாகிஸ்தான் அதை நிறைவேற்றவில்லை” என்றார்.
ஆப்கன் மற்றும் பாகிஸ்தான் இருதரப்பும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வரும் நிலையில் ஆப்கனுக்குள் தலிபான்களை ஊடுருவ வைப்பதில் ஐ.எஸ்.ஐ ஈடுபட்டிருப்பது, எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல், ரப்பானி கொலையில் ஐ.எஸ்.ஐ.யின் தொடர்பு ஆகியவற்றை கண்டித்து தலைநகர் காபூலில் நேற்று நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடந்தது.
ஆப்கனின் குற்றச்சாட்டுகளுக்கு நேற்று பதிலளித்த பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி,“பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் பிரச்னை இருந்தால் கர்சாய் எங்களுடன் பேசலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் அவர் எங்கள் உள்நாட்டு விஷயங்களில் தலையிடுவதை அனுமதிக்க முடியாது. நாட்டின் இறையாண்மையை விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்றார்.
உலகில் பெண்கள் வாழ சிறந்த நாடுகளின் பட்டியல்: ஐஸ்லாந்து முதலிடம்.
உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது என்ற கருத்து கணிப்பை அமெரிக்காவைச் சேர்ந்த “நியூஸ்வீக்” என்ற நாளிதழ் நடத்தியது. மொத்தம் 165 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு ஏற்ற நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து பெற்றுள்ளது. இதற்கு அடுத்து சுவீடன், கனடா, டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன.
இதே நேரத்தில் மாலி, காங்கோ, ஏமன், ஆப்கானிஸ்தான், சாத் ஆகிய நாடுகள் கடைசி ஐந்து இடங்களை பெற்றுள்ளன. இப்பட்டியலில் அயர்லாந்து மொத்தமாக 100க்கு 100 சதவீதம் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. இதில் பொருளாதாரத்தில் 100க்கு 88, சுகாதாரத்தில் 100க்கு 90.5, அரசியலில் 100க்கு 92.8, கல்வியில் 96.7 சதவீதத்தை பெற்றுள்ளது.
வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மர், இலங்கை உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை விட மேலிடத்தில் உள்ளன. இப்பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் வந்த ஒரே ஆசிய நாடு பிலிப்பைன்ஸ்(17வது இடம்) மட்டுமே.
நியூயோர்க் நகரில் ஆர்ப்பாட்டம்: 700 பேர் கைது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து ப்ரூக்ளின் பாலத்தில் பேரணி நடத்த முயன்ற ஆயிரக்கணக்கானோரில் 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பிற நகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அமெரிக்க அரசியலில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை நீக்க வேண்டும், அமெரிக்க சமூகத்தில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வு அகற்றப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 17ம் திகதி முதல் “வால் தெரு ஆக்கிரமிப்பு இயக்கம்” தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது.
நியூயோர்க்கின் மன்ஹாட்டனில் உள்ள ஜுகோட்டி பூங்காவில் வால் தெரு ஆக்கிரமிப்பு இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள், கூடாரங்கள் அடித்துத் தங்கி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த செப்டம்பர் 25ம்  திகதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் 80 பேர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரிடம் பொலிசார் வரையறையின்றி நடந்து கொள்வதைக் கண்டித்தும், நேற்று முன்தினம் மன்ஹாட்டனில் உள்ள ப்ரூக்ளின் பாலத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலத்தின் நடைபாதையில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பொலிசார் அனுமதி வழங்கியிருந்த போதிலும் கூட்டம் அதிகரித்ததால் மக்கள் போக்குவரத்துப் பாதையில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதனால் அப்பாலத்தில் போக்குவரத்து பல மணிநேரம் பாதிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரில் 700க்கும் மேற்பட்டோரை பொலிசார் கைது செய்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
பாலஸ்தீனத்துக்கான நிதியுதவி: அமெரிக்கா நிறுத்திவைப்பு.
பாலஸ்தீனத்துக்கான ரூ. 983 கோடி நிதியுதவியை அமெரிக்க நாடாளுமன்றம் நிறுத்தி வைத்தது.ஐ.நா.வில் முழுமையான உறுப்பு நாடாக ஆவதற்கு பாலஸ்தீனம் முயன்றுவரும் நிலையில் நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது.
பாலஸ்தீனம் எடுத்துவரும் முயற்சிகள் தொடர்பாக ஒரு முடிவு ஏற்படும் வரை நிதியுதவி நிறுத்திவைக்கப்படும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகக் கமிட்டி செனட்டின் வெளியுறவு கமிட்டி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.தற்போது ஐ.நா.வில் உறுப்பினராவதற்கு பாலஸ்தீனம் எடுத்துவரும் முயற்சியால் அமெரிக்கா கோபம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண் எம்.பி.க்கள் குறித்த கருத்து: மன்னிப்பு கோரிய பிரதமர்.
இங்கிலாந்து நாட்டின் பெண் எம்.பி.க்‌கள் குறித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு‌‌ ‌கோரியுள்ளார் பிரதமர் டேவிட் கமரூன்.
இங்கிலாந்தில் வெளிவரும் பத்திரிகை ஒன்றுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் பேட்டியளித்தார்.அப்போது தன்னுடைய கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் பெண் எம்.பி நாடின் டோரிஸ் மற்றும் எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியை ‌சேர்ந்த பெண் எம்.பி ஏஞ்சலா ஈகிள் ஆகி‌யோரை குறித்து கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.
இந்த கருத்து பெண் எம்.பி.க்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பிரதமர் டேவிட் கமரூன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்த பிரதமர் முழுக்க முழுக்க இது என்னுடைய கருத்து தான், பெண் எம்.பி.க்களிடை‌யே பிரச்னை எழுந்துள்ளதற்கு தான் அதிர்ச்சி அடைந்துள்ளேன். எனவே நான் ‌தெரிவித்த கருத்திற்கு மன்னிப்பு கேட்டு கொள்வதாக தெரிவித்துள்ளார்.
சிரியாவில் எதிர்க்கட்சிகளின் தேசிய மாற்றக் கவுன்சில் உருவாக்கம்.
வெளிநாடுகளில் இயங்கும் சிரியா எதிர்க் கட்சிகள் அனைத்தும் “தேசிய ஐக்கிய கவுன்சில்” என்ற பெயரில் ஒருங்கிணைந்துள்ளன.இதன் மூலம் அந்நாட்டின் எதிர்க் கட்சிகள் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான போராட்டங்களை இன்னும் வலுவாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
சிரியாவில் அதிபர் அசாத்துக்கு எதிரான போராட்டம் மேலும் தீவிரம் அடையாததற்கு அங்குள்ள எதிர்க் கட்சிகள் ஓரணியாகத் திரளாததே காரணம் என அரசியல் நிபுணர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கூடிய சிரியா எதிர்க் கட்சிகள் மாநாட்டில் தேசிய ஐக்கிய கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சோர்போர்ன் பல்கலைகழகத்தில் சமூகவியல் பேராசிரியராக பணியாற்றி வரும் புர்ஹான் கில்யோன் கவுன்சிலின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,“இக்கவுன்சிலில் அனைத்து சிரியா மக்களும் சேரலாம். சிரியா மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் அவர்களின் இறையாண்மையைக் காக்கும் சுயேச்சையான அமைப்பாக இது செயல்படும்” என்றார்.
சிரிய விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீட்டை நிராகரித்துள்ள கவுன்சில் சிரியா மக்களைப் பாதுகாக்க ஐ.நா சிரியா அரசைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளது.சிரியா போராட்டத்தில் கவுன்சிலின் உருவாக்கம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயலாகக் கருதப்படுகிறது. இதற்கிடையில் தலைநகர் டமாஸ்கசில் இருந்து 180 கி.மீ தொலைவில் உள்ள ரஸ்தான் நகரின் பெரும்பகுதியை எதிர்ப்பாளர்களிடம் இருந்து சிரியா ராணுவம் கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்தில் தானியங்கி எந்திரம் மூலம் சிகரெட் விற்பனைக்குதடை.
இங்கிலாந்தில் கடைகளில் மட்டுமின்றி கிளப்புகள், மது விடுதிகளில் தானியங்கி எந்திரங்களின் மூலம் சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.அந்த எந்திரத்திற்குள் ரூபாயை செலுத்தினால் அதற்குரிய சிகரெட் அதிலிருந்து தானாக வெளியே வரும்.
இந்த முறையிலான விற்பனையின் மூலம் இங்கிலாந்தில் தினமும் 80 லட்சம் பேர் சிகரெட் பிடிக்கின்றனர். அவர்களில் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் அடங்குவர்.
சிகரெட் பழக்கத்தால் குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. எனவே அதை முடிவுக்கு கொண்டு வர இங்கிலாந்து அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.அதன்படி எந்திரம் மூலம் சிகரெட் விற்க தடை விதித்துள்ளது. கிளப்புகள் மற்றும் மது விடுதிகளில் எந்திரம் மூலம் சிகரெட் விற்றால் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதார செயலாளர் ஆண்ட்ரூ லான்ஸ்லீ தெரிவித்தார்.
மெக்சிகோ நாட்டில் காண்ட்ராக்ட் முறையில் திருமணம்.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் தற்போது கலாசார சீரழிவு ஏற்பட்டுள்ளது. திருமணம் என்பது ஒரு பொழுதுபோக்காக ஆகிவிட்டது.தம்பதிகளிடையே அதிக அளவில் விவாகரத்துகள் ஏற்படுகின்றன. அதற்கு ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் காரணமாக கூறப்படுகிறது.
இங்கு இந்த திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இதனால் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை செல்கின்றனர். அதை தடுக்க மெக்சிகோவில் திருமண சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.அதன்படி திருமணத்தை காண்டிராக்ட் முறையில் செய்து கொள்ளலாம். தொடக்கத்தில் கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து வாழ 2 ஆண்டுகள் மட்டும் ஒப்பந்தம் அமலில் இருக்கும்.
அதன் பின்னர் அவர்களுக்கு இடையே சுமூகமான உறவு தொடர்ந்தால் ஒப்பந்தம் நீடிக்கப்படும். இல்லாவிட்டால் இருவரும் பரஸ்பரம் பிரிந்துவிடலாம். இதன் மூலம் கோர்ட்டுக்கு அலைந்து விவாகரத்து பெறுவது தவிர்க்கப்படும்.இந்த சட்டதிருத்தம் இன்னும் ஒரு வாரத்தில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட உள்ளது. அதை நிறைவேற்றுவதில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இத்தகைய திருமணத்துக்கு கிறிஸ்தவ தேவாலயங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சவால்களை எதிர்கொள்ள சோஷலிச ஜனநாயகம் தேவை: சீனப் பிரதமர்.
சீனா தற்போது எதிர்கொண்டு வரும் சவால்களை சமாளிக்க வேண்டுமானால் நமக்கு சீன சோஷலிச முறையிலான ஜனநாயகம் தேவை என சீன பிரதமர் வென் ஜியாபோ தெரிவித்துள்ளார்.சீனாவில் மக்கள் ஜனநாயக சீனா உருவான 62 வது ஆண்டு விழா நேற்று தியானன்மென் சதுக்கத்தில் கொண்டாடப்பட்டது.
அப்போது பிரதமர் வென் ஜியாபோ பேசியதாவது: விலைவாசி அதிகரிப்பு, அன்றாடச் செலவு மற்றும் சம்பளத்திற்கிடையிலான சமச்சீரற்ற விகிதம், வேலையில்லா திண்டாட்டம், உணவுப் பாதுகாப்பு, ஊழல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகிய பிரச்னைகளை சீனா எதிர்கொண்டு வருகிறது.
இவற்றைச் சமாளிக்க நமக்கு இன்னும் அதிகமான ஜனநாயக நடைமுறைகள் தேவை. இந்த ஜனநாயகம் சீன சோஷலிச பாணியில் அமைந்த ஜனநாயகமாக இருக்க வேண்டும்.சீனாவில் பொதுவாக ஜனநாயகம் என்பது ஆட்சித் தலைவர்களால் அடிக்கடி உச்சரிக்கப்பட்டாலும் இன்னும் அங்கு அது கனவாகவே இருந்து வருகிறது.
இந்த ஆண்டு விழாவையொட்டி பல நூறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல நூறு பேர் பீஜிங்கில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பூமியை தாக்க காத்திருக்கும் மற்றொரு செயற்கை கோள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தை சேர்நத செயற்கை கோள் செயலிழந்து பூமியில் விழுந்தது.இதனையடுத்து அதே போன்ற தொரு செயற்கை கோள் மீண்டும் பூமியில் விழ இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தற்‌போது பூமியில் விழ உள்ள செயற்கை‌‌ கோள் ஜேர்மனி நாட்டிற்கு சொந்தமானதாகும். ‌ரோசாட் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கை கோள் கடந்த 1990ல் விண்வெளி்க்கு அனுப்பப்பட்டது.
1998ல் அது முற்றிலும் செயல் இழந்த நிலையில் அதனுடைய பாகங்கள் வரும் நவம்பர் மாதத்ததில் பூமியில் விழ உள்ளதாக ஜேர்மன் வான்வெளி ஆராய்ச்சி மையத்தின் செய்தி குறிப்பில் ‌தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அமெரிக்காவின் செயற்கை ‌‌கோள்களை காட்டிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் அச்சம் தெரிவித்துள்ளது.
வரலாற்றை பறைசாற்றும் பனிப்பாலங்களை இழக்கும் கனடா.
கனடாவின் நீண்ட வரலாற்றைக் கொண்ட இரு பனிப்பாலங்கள் இந்த வருட கோடைகாலத்தில் குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளன.இவற்றில் ஒன்று கிட்டத்தட்ட முழுவதும் மறைந்துபோயுள்ளது எனக் கனேடிய விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான கனேடிய ஆர்டிக் பகுதியின் இழப்புக்கு மிக முக்கியமான காரணியாக புவிவெப்பமடைதல் உள்ளது.உடைந்து மிதக்கும் பனிப்பாலங்கள் எண்ணெய் அகழ்விற்கும் கப்பல் பாதைகளுக்கும் ஆபத்தைத் தரக்கூடும் என்று விஞ்ஞானிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இது சூழலுக்கு உதவும் நுண்ணுயிர்களின் வாழ்க்கையையும் இல்லாமற் செய்வதுடன் கனடாவின் கரையோரப் பகுதியின் தோற்றத்தினையும் மாற்றியுள்ளது.ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவின் பேராசிரியர் ஒருவர் 205 சதுர கிலோமீற்றர்களாக இருந்த Serson பனிப்பாலம் இரண்டு துண்டுகளாக 5 வருடங்களின் முன்னர் உடைந்ததாகவும் அது தற்போது இன்னும் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுபோல Ward Hunt பனிப்பாலத்தின் மையப்பகுதி மிதக்கத் தொடங்கியுள்ளதாகவும் 340ச.கி.மீ. இலிருந்து இது தற்போது 227ச.கி.மீ. ஆகக் குறைந்துள்ளதெனவும் தெரிவித்தார்.இந்தப் பனிப்பாலமே இதுவரையில் பெரிதாக இருந்ததென்றும் இது நிலையாக இருக்குமென்றும் விஞ்ஞானிகள் நம்பியதாகவும் தெரிவித்தார்.இந்த வருடம் மட்டும் கரைந்த பனியின் அளவு 3 பில்லியன் தொன்களாகுமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஆர்டிக் பகுதி வழியே எல்ஸ்மியர் தீவின் வடகரையோரமாகத் தான் கனடாவின் பாரிய பனிப்பாலங்கள் காணப்படுகின்றன.இவற்றின் தடிப்பு 40 மீற்றர்களாக உள்ளன. இது 10 மாடிக் கட்டடத்திற்குச் சமனானது. சில இடங்களில் இவை 100மீ. ஆகவும் காணப்படுகின்றன.
1906-1982 இற்குமிடையில் கியூபெக் லாவல் பல்கலைக்கழகத்தின் தரவின்படி 90 வீதமான குறைவு காணப்பட்டது. முன்னர் ஒரே பகுதியாக இருந்த எல்ஸ்மியர் தீவு பனிப்பாலம் Serson, Petersen, Milne, Ayles, Ward Hunt, Markham ஆகிய 6 பிரிவுகளாகப் பிரிந்தது.
2005 இல் Ayles பனிப்பாலம் முழுவதும் உடைந்திருந்தது. 2008 இல் Markham பனிப்பாலமும் உடைந்திருந்தது. இவைபோலவே இந்த வருடம் Serson என்ற பாலம் உடைகின்றது.கடந்த 5-6 வருடங்களில் வட எல்ஸ்மியர் தீவில் பனிக்கால வெப்பநிலை 1 பாகை செல்சியசாக உயர்ந்துள்ளதெனவும் கனேடிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விண்கற்களால் பூமிக்கு ஆபத்து ஏதும் இல்லை: நாசா.
பூமிக்கு அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் விண்கற்களில் 90 சதவீதத்தை அமெரிக்காவின் நாசா கண்டறிந்துள்ளது. மேலும் இந்த விண்கற்களால் பூமிக்கு ஆபத்தில்லை என்றும் நாசா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நாசா ஆய்வு மையத்தால் வைஸ் என்ற விண்கலம் 2009ல் ஏவப்பட்டது. பூமிக்கு வெகு அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் விண்கற்கள், பால்வழி அண்டங்கள், நட்சத்திரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வதற்காக இந்த விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி அந்த விண்கலம் மொத்தம் 981 விண்கற்கள் பூமிக்கு அருகில் சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த 981 கற்களில் 911 கற்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டவை.இதற்கு முன்பு நடந்த ஆய்வுகளின்படி 3,300 அடிக்கும் அதிகமான அகலம் கொண்ட இந்த கற்கள் எந்நேரம் வேண்டுமானாலும் பூமியைத் தாக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் வைஸ் விண்கலம் இந்த விண்கற்களின் சுற்றுப் பாதைகளைக் கண்டறிந்துள்ளதால் இவற்றில் பெரும்பாலானவற்றால் பூமிக்கு ஆபத்து எதுவும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
அதே நேரம் இதுவரை 3,300 அடி அகலத்துக்கு குறைவாக நடுத்தர அளவுள்ள விண்கற்கள் மிகக் குறைவான அளவிலேயே இருக்கின்றன எனக் கருதப்பட்டது.ஆனால் 330 அடியிலிருந்து 3,300 அடி அகலம் வரையிலான 19,500 விண்கற்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன என்பதையும் வைஸ் கண்டறிந்துள்ளது. இவற்றில் 5,200 விண்கற்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் போலி மற்றும் திருட்டு பொருட்களை தடுக்கும் ஒப்பந்தம்: 8 நாடுகள் கையெழுத்து.
உலகளவில் போலி மற்றும் திருட்டுப் பொருட்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில் ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட எட்டு நாடுகள் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
உலகளவில் பிரபலமான பொருட்களைப் போல போலியாக உற்பத்தி செய்வது, திரைப்படம் மற்றும் இசைத் துறையில் திருட்டு சீ.டி.க்கள் தயாரித்து உலகளவில் பரப்புவது ஆகியவற்றால் சம்பந்தப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதோடு இப்பொருட்கள் பரவும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படுகிறது.
இதைத் தடுக்கும் வகையில் 2008 முதல் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இதன் இறுதிக்கட்டமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று ஜப்பான், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, மொராக்கோ, நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா ஆகிய எட்டு நாடுகள் போலி மற்றும் திருட்டு பொருட்களை தடுக்கும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இதில் ஐரோப்பிய யூனியன், மெக்சிகோ மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் சேர விருப்பம் தெரிவித்துள்ளன. எனினும் அந்நாடுகளின் பார்லிமென்ட்டுகளில் அதற்குரிய மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.அதேநேரம் போலி மற்றும் திருட்டுப் பொருட்கள் மிக அதிகளவில் உற்பத்தியாகும் சீனா இந்த ஒப்பந்தத்தில் சேர்ந்து கொள்ளவில்லை.
பாகிஸ்தானில் கவர்னரை சுட்டுக் கொன்றவருக்கு இரட்டை மரண தண்டனை.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண கவர்னர் சல்மான் டசீரைக் கொலை செய்த அவரது பாதுகாவலர் மாலிக் மும்தாஜ் உசேன் கத்ரிக்கு இரட்டை மரண தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண கவர்னர் சல்மான் டசீர், மதத் துவேஷ சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி வந்தார்.
அதோடு மதத்துவேஷ சட்டத்தின்படி தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவப் பெண்ணுக்கு ஆதரவாகவும் செயல்பட்டார். இதனால் அவர் மீது கோபமடைந்த கத்ரி கடந்த ஜனவரி 4ம் திகதி இஸ்லாமாபாத்தில் வைத்து சுட்டுக் கொன்றார்.விசாரணையில் கத்ரி தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார். அவருக்கு ஆதரவாக வாதாட எந்த வக்கீலும் முன்வரவில்லை. எனினும் மதத்துவேஷ சட்ட ஆதரவாளர்கள் கத்ரியை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்தனர்.
விசாரணை முடிந்த நிலையில் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறை வளாகத்தில் அமைக்கப்பட்ட பயங்கரவாதத் தடுப்புக் கோர்ட்டின் தற்காலிக அலுவலகத்தில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.நீதிபதி பர்வேஸ் அலி ஷா, கத்ரி மீதான இரு குற்றச்சாட்டுகளுக்கு இரட்டை மரண தண்டனைகள் விதித்தார். தீர்ப்பளிக்கப்படுவதை ஒட்டி நேற்று ராவல்பிண்டி நகரில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.
அடுத்த 60 ஆண்டுகளில் உயிரிழப்புகள் அதிகரிக்கும்: ஆய்வாளர்கள் தகவல்.
அடுத்த 60 ஆண்டுகளில் ஓசோன் மாசுபாட்டால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.பூமி வெப்பமயமாதலால் பருவ நிலை சீர்கேடுகள் ஏற்படும். அதனால் நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக பெல்ஜியம், பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளில் இத்தகைய பாதிப்புகள் அதிகம் இருக்குமாம். அங்கு இறப்பு விகிதம் 10 முதல் 14 சதவீதம் அதிகரிக்கும் என்கின்றனர். ஓசோன் மாசுபாடு பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் இந்த சதவீதம் அதிகமாக இருக்காது என்ற ஆறுதல் தகவலையும் கூறுகின்றனர்.ஈரோபியன் ரெஸ்பிரேடரி சங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ள தகவல்கள் வருமாறு: ஓசோன் ஸ்ட்ராடோஸ்பியர் பகுதியில் உள்ளது. புறஊதாக் கதிர்கள் பூமியை தாக்காமல் பாதுகாப்பது இதுதான்.
இந்தக் கதிர்கள் பூமியை நேரடியாக தாக்கும் போது பூமியில் வெப்பம் அதிகரிப்பதோடு மனிதர்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும். இத்தகைய தாக்குதல்களில் இருந்து உயிரினங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஓசோன் படலத்தில் ஓட்டைகள் விழத் தொடங்கியுள்ளது குறித்து விஞ்ஞானிகள் அவ்வப்போது எச்சரித்து வருகின்றனர்.
பூமி வெப்பமயமாதல்(குளோபல் வார்மிங்), பனிப்பாறைகள் உருகுவது மற்றும் அதனால் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவது குறித்து தொடர் எச்சரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.ஓசோன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் உலகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வளவு எச்சரிக்கை, விழிப்புணர்வையும் மீறி இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
நுரையீரல் பாதிப்புகளால் சுவாசிப்பதில் சிக்கல், ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரிக்கும் சாத்தியங்கள் அதிகம். இந்த நிலையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஓசோன் படலம் மேலும் சேதமடையாமல் பாதுகாக்க வேண்டும். இதற்கு ஒவ்வொரு தனிநபரின் பங்களிப்பும் இருக்க வேண்டியது அவசியம் என்கிறது ஆராய்ச்சி தரப்பு.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF