Saturday, October 1, 2011

இன்றைய செய்திகள்.

சர்வதேச அரங்கில் இலங்கையை அடியோடு கைகழுவியது இந்தியா : உங்கள் பிரச்சினையை நீங்களே பாருங்கள் என்றார் மன்மோகன்.

இறுதிப் போரின்போதும் அதன் பின்னரும் சர்வதேச அரங்கில் இலங்கைக்குப் பெரும் பாதுகாப்பு அரணாக விளங்கி வந்த இந்தியா இப்போது அந்தப் போக்கைக் கைவிட்டுள்ளது இலங்கையின் எந்தவொரு உள்விவகாரத்திலும் இனி இந்தியா தலையிடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரில் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைப் பிரச்சினையை இலங்கை அரசே இனிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார் என்று அறிய வந்தது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்ற நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி அங்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசினார். இருவருக்குமிடையில் ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை டாக்டர் மன்மோகன் சிங் நேரடியாகவே ஜனாதிபதி மஹிந்தவிடம் தெரியப்படுத்தினார் என அறியமுடிகிறது.

இலங்கைக்கு எதிராகச் சர்வதேச சமூகம் தொடர்ந்து மேற்கொண்டுவரும் அழுத்தங்கள் குறித்து இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி மஹிந்த இந்தச் சந்திப்பில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். இதனை நன்கு கவனமாகச் செவிமடுத்த இந்தியப் பிரதமர் இலங்கை விவகாரத்தில் இந்தியாவுக்கும் அழுத்தங்கள் இருக்கிறது எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார். சர்வதேசத்தின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் கடப்பாட்டை இலங்கையே இனிமேல் வெளிப்படுத்தவேண்டுமெனவும், இலங்கை விவகாரத்தில் தலையிடாதிருக்க இந்தியா உத்தேசித்திருப்பதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரத்தினால் காங்கிரஸ் அரசுக்கு தமிழ்நாட்டிலிருந்தும், சர்வதேசத்திலிருந்தும் அழுத்தங்கள் வருவதை விலாவாரியாக ஜனாதிபதி மஹிந்தவிடம் தெரிவித்திருக்கும் இந்தியப் பிரதமர், இனிமேல் இலங்கைப் பிரச்சினையை இலங்கை அரசே பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார் என்று மேலும் தெரியவருகிறது. சர்வதேச நெருக்கடி மிகுந்த காலத்தில் இந்தியா இவ்வாறு இலங்கையைக் கைவிட்டிருப்பது, கொழும்புக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று கனடா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகையில் இந்தியா இலங்கையைக் கைவிட்டிருப்பது மஹிந்த அரசுக்கு விழுந்த பேரிடி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

UKயில் உளவாளிகளாக செயல்படும் கல்விசார் அமைப்புக்கள்! மாணவர்களைத் தேடி பொலிசார்.

பிரித்தானியாவில் கல்விசார் அமைப்புக்கள் சந்தேகமான விஸாக்களுடன் தங்கியிருப்பதாகக் கருதப்படும் 1500 க்கு அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் பற்றிய விவரங்களை மாதந்தோறும் குடிவரவு அதிகாரிகளுக்கு அறிவித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

27,121 குடி புகுந்தவர்கள் பற்றி 2009 ஆம் ஆண்டுக்கும் 2010 ஆம் ஆண்டுக்கும் இடையில் பல்கலைக்கழகங்களினாலும் வெளிநாட்டு மாணவர்களை அழைப்பவர்களாலும் பிரித்தானியாவின் எல்லைப்புற முகவர் நிலையத்திற்கு
அறிவிக்கப்பட்டுள்ளது.சுதந்திர தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இப்புள்ளிவிவரங்கள் வெளியிடப்படுள்ளது.கடந்த வருடத்தில் 2இலட்சத்து 28ஆயிரம் வெளிநாட்டு மாணவர்கள் பிரித்தானியாவிற்கு வந்துள்ளனர். அவர்களில் 4இல் 3 பேர் ஐரோப்பிய யூனியனுக்கு வெளியிலிருந்து வந்தவர்களாவர்.

மனிபெஸ்ரு அமைப்பு தனது மாணவர் கண்காணிப்பு அறிக்கையில் கடுமையான விஸா கட்டுப்பாடு கல்விசார் அமைப்புக்களை மாணவர்களை உளவு பார்க்கத்தூண்டுவதாகவும் அது கல்விசார் அமைப்புக்களின் சுயாட்சித்தன்மையை பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளது.இது மாணவர்-ஆசிரியர் உறவைப் பாதிப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கல்விசார் அமைப்புக்கள் எல்லைப்புறக் காவலர்கள் அல்லர். அவர்களை மாணவரை உளவு பார்க்க பயன்படுத்தக்கூடாது என்று அந்த அமைப்பின் பணிப்பாளர் தெரிவித்தார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பு இரண்டாக பிளவுபடலாம்?

பொதுநலநாய நாடுகள் அமைப்பு இரண்டாக பிளவடையக் கூடும் என இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியன தொடர்பில் ஆணையாளர் நாயகம் ஒருவரை நியமிக்கும் திட்டத்திற்கு இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.பொதுநலவாய அமைச்சுத் திட்டக் குழுவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. எனினும், இந்த யோசனைத் திட்டம் உறுப்பு நாடுகளுக்கு தண்டனை வழங்கும் வகையில் அமையக் கூடும் என இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பினை வலுப்படுத்தக் கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமே தவிர புதிய அமைப்புக்களை அமைப்பதில் ஆர்வம் காட்ட வேண்டிய அவசியமில்லை என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாரிய மனித உரிமை மீறல் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தக் கூடிய வகையில் புதிய ஆணையாளர் ஒருவரை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை மீது அதீதமான அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலம் பாதக விளைவுகள் ஏற்படக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.ஒரு அளவுக்கு மேல் அழுத்தங்களை பிரயோகித்து துரித கதியில் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் எவ்விதமான நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் மனித உரிமை விவகாரம் தொடர்பிலான ஆணையாளர் ஒருவரை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பொதுநலவாய நாடுகள் அமைப்பில் தோன்றியுள்ள நெருக்கடி குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் அமைச்சர் பீரிஸ் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் இந்தமாதம் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டை இலக்கு வைத்து- சிறிலங்காவுக்கு எதிரான பரப்புரைகளில் குறிப்பிட்ட சில நாடுகள் ஈடுபட்டு வருவதாக அதன்போது அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இம்மாதம் 28ம் நாள் தொடக்கம் 30ம் நாள் வரை மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள பேர்த் நகரில் கொமன்வெல்த் தலைவர்களின் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார்.கொமன்வெல்த் அமைப்பில் இருந்து சிறிலங்காவை இடைநிறுத்த வேண்டும் என்று பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கையை கொமன்வெல்த் நாடுகள் முன்னெடுப்பதை தடுக்கும் முயற்சிகளில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாகவே அமைச்சர் பீரிஸ் நேற்று கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகளை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து இதுபற்றிக் கலந்துரையாடியுள்ளார்.இந்தச் சந்திப்பில் சிறிலங்கா அதிபரின் வெளிவிவகார ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தனவும், வெளிவிவகார அமைச்சின் செயலர் கருணாதிலக அமுனுகமவும் பங்குபற்றியிருந்தனர். இதற்கிடையே பொதுநலவாய நாடுகள் அமைப்பில் பிளவொன்றை உருவாக்கும் வகையில் சிறிலங்காவின் நகர்வுகள் அமைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த குறுகிய மனப்பான்மையும், தாழ்வு மனப்பான்மையும் கொண்டவர்: சோமவன்ச கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறுகிய மனப்பான்மையும், தாழ்வு மனப்பான்மையும் கொண்டவர் என்று சோமவங்ச அமரசிங்க தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. 
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதர் பற்றீசியா புட்டெனிஸ் உடனான சந்திப்பொன்றின் போதே ஜே.வி.பி.யின் தலைவர் சோமவங்ச மேற்கண்டவாறு தெரிவித்திருந்ததாக பற்றீசியா புட்டெனிஸ் இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பியிருந்த ரகசிய கேபிள் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது தொடர்பான தகவல்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செல்வாக்கானதும், மக்களால் மதிக்கப்படுவதுமான பரம்பரையொன்றிலிருந்து அரசியலுக்கு வராதவர் என்பதன் காரணமாக அவருக்குள் தாழ்வுமனப்பான்மையொன்று நிலவுவதாகவும், அத்துடன் அவர் கல்விமான்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் சந்தேக மனப்பான்மை கொண்டவராக இருப்பதாகவும் அந்தச் சந்திப்பின்போது சோமவங்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்போது இலங்கையின் ஐக்கியம் மற்றும் இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டிருந்ததாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
20 விசேட அதிரடிப்படை வெற்றிடங்களுக்கு 13000 விண்ணப்பங்கள்?

20 விசேட அதிரடிப்படை வெற்றிடங்களுக்கு 13000 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.விசேட அதிரடிப்படையின் உப காவல்துறை பரிசோதகர் பதவிக்காக இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்ததாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை பரீட்சிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் மாதம் முதல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.இணைத்துக் கொள்ளப்படும் உத்தியோகத்தர்களுக்கு கட்டுகுறுந்த பிரதேசத்தில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
அரசாங்கத்தின் தேர்தல் செலவுக்கு நகை வியாபாரிகளிடம் அறவீடு.
அரசாங்கத்தின் தேர்தல் செலவுக்காக செட்டியார் தெரு நகை வியாபாரிகளிடமிருந்து பெருந்தொகைப் பணம் அறவிடப்பட்டுள்ளது.
பிரதியமைச்சர் பைசர் முஸ்தபாவின் தலையீட்டின் பேரில் சுமார் பத்து மில்லியன் ரூபா வரையான பெருந்தொகைப் பணம் நகை வர்த்தகர்களிடமிருந்து பலவந்தமாக அறவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளளன.
அதுமாத்திரமன்றி அரசாங்கத்தின் முக்கிய விழாக்கள் போன்றவற்றுக்கும் செலவுத்தொகை என்ற பெயரில் அடிக்கடி நகை வர்த்தகர்கள் தொல்லைப்படுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அதன் காரணமாக தங்கள் நகை வர்த்தகத்தையே கைவிட வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக நகை வர்த்தகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
போலி நாணயத்தாள்களுடன் மாலைதீவுப் பிரஜைகள் கொழும்பில் கைது.
போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களை வைத்திருந்த மாலைதீவுப் பிரஜைகள் இருவர் கொழும்பி;ல் கைது செய்யப்பட்டுள்ளனர்.சர்வதேச அளவில் போலி நாணயங்களைப் பயன்படுத்தும் கும்பல் ஒன்றின் உறுப்பினர்களான அவர்கள் இருவரும் கைதுசெய்யப்படும் போது பெருந்தொகையான அமெரிக்க டொலர்கள் மற்றும் இலங்கை நாணயத்தாள்களை வைத்திருந்துள்ளனர்.
போலி அமெரிக்க டொலர் நாணயங்களைப் பயன்படுத்தி பொருட்களைக் கொள்வனவு செய்திருந்த அவர்கள், அதன் பின் அவ்வாறான நாணயத்தாள்களைப் பயன்படுத்தி கசினோ சாலையொன்றில் சூதாட முயன்ற போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.மாலைதீவு மற்றும் இலங்கைப் பொலிசாரும் கூட்டாக இணைந்தே அவர்களைக் கைது செய்திருந்தனர்.
பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை நிரூபிக்கும் செய்மதிப் படங்கள் ஐ.நாவிடம் - விக்கிலீக்ஸ்.
போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் பீரங்கி மற்றும் விமானத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தெளிவான ஆதாரங்களைக் காட்டும் படங்களை ஐ.நா செய்மதி மூலம் எடுத்திருந்தாக விக்கிலீக்ஸ் தகவல் ஒன்று கூறுகிறது.
2009 ஏப்ரல் 3ம் நாள் கொழும்பில் இருந்த அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிய தகவல் குறிப்பிலேயே இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நாவின் செய்மதிப் படங்கள் பாதுகாப்பு வலயத்தில் எறிகணை மற்றும், விமானத் தாக்குதல்களால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதை தெளிவாகக் காட்டுவதாக அவர் தனது குறிப்பில் கூறியுள்ளார்.
2009 மார்ச் 6, 15, 23 மற்றும் 29ம் நாள்களில் இந்த செய்மதிப் படங்கள் எடுக்கப்பட்டிருந்தன.ஐ.நா திரட்டிய இந்தப் படங்களின் மூலம், பாதுகாப்பு வலயத்தில் பீரங்கி, விமானத் தாக்குதல்களால் 53 பிரதான கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளதையும், 5 கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதையும் அவதானிக்க முடிவதாகவும் பிளேக் தனது தகவலில் குறிப்பிட்டுள்ளார்.
இதில் இடம்பெயர்ந்த மக்களின் கூடாரங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் கணக்கிடப்படவில்லை என்றும் பிளேக் கூறியுள்ளார்.ஐ.நா எடுத்துள்ள படங்களில் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே, புதுக்குடியிருப்பு பகுதியில் மோசமான எறிகணைத் தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் அழிந்து போயிருப்பதை காணமுடிவதாக பிளேக்கின் தகவலில் கூறப்பட்டுள்ளது.
குண்டுத் தாக்குதல்களால் 17 மீற்றர் விட்டமுள்ள பாரிய குழிகள் ஏற்பட்டுள்ளதை ஐ.நாவின் செய்மதிப் படங்கள் மூலம் அவதானிக்க முடிவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.அத்துடன் ஜனவரி 20 தொடக்கம் மார்ச் 31 வரையான காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்களில் 78 வீதமானவர்கள் பாதுகாப்பு வலயப் பகுதியிலேயே மரணமானதாக ஐ.நாவின் புள்ளிவிபரங்கள் கூறுவதாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த செய்மதிப் படங்களை சிறிலங்கா அரசிடம் காண்பிப்பது குறித்து ஐ.நா வதிவிடப் பிரதிநிதி நீல் புனேயிடம் பரிந்துரைத்ததாகவும் பிளேக் தெரிவித்துள்ளார்.அவ்வாறு காண்பிப்பதன் மூலம், தம்மைக் கண்காணிக்கும் பொறிமுறை ஒன்று செயற்படுவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் அறியாதிருந்தால், பீரங்கித் தாக்குதல்கள் பற்றிய ஆதாரங்கள் இருப்பதைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் பீரங்கித் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்கு ஊக்குவிக்கும் என்றும் பிளேக் தனது தகவல் பரிமாற்றக் குறிப்பில் கூறியுள்ளதாக விக்கிலிக்ஸ் மேலும் தெரிவித்துள்ளது. 
ஜே.வி.பி முரண்பாட்டுக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை : கெஹலிய.
ஜே.வி.பி முரண்பாட்டுக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லா தெரிவித்துள்ளார்.தேர்தல் ஆணையாளர் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் கட்சியாக எந்தத் தரப்பை அங்கீகரிக்ககின்றாரோ அந்தத் தரப்பை அரசாங்கமும் ஏற்றுக் கொள்ளும்.
மீண்டும் ஆயுத போராட்டங்களை நடாத்துவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ளவும், விலகிச் செல்லவும் அனைவருக்கும் வாய்ப்பு இருக்கின்றது.
45 ஆண்டுகள் கிளர்ச்சி அரசியலில் ஈடுபட்ட கட்சியொன்றை பிளவுபடுத்த முடிந்தால் அது முக்கிய விடயமாகவே கருதப்பட வேண்டுமென ரம்புக்கெல தெரிவித்துள்ளார்.இதேவேளை, சோமவன்ச தரப்பினரும், பிரேம்குமார் தரப்பினரும் வௌ;வேறு கட்சி பொதுக் கூட்டங்களை நடாத்த உத்தேசித்துள்ளனர்.
கட்சிப் பொதுக் கூட்டத்தில் கிளர்ச்சியாளர்களை இணைத்துக் கொள்வதில்லை என சோமவன்ச தரப்பினர் அறிவித்துள்ளனர்.அதேவேளை, தனியாக பொதுக் கூட்டமொன்றை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரேம் குமார் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
கடாபியின் மகன் அல் சாதி தேடப்படும் குற்றவாளி: இன்டர்போல் அறிவிப்பு.
லிபிய அதிபர் கடாபியின் மற்றொரு மகன் அல் சாதி தேடப்படும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் என்று இன்டர்போல் அறிவித்துள்ளது.லிபியாவில் 42 ஆண்டு சர்வாதிகார ஆட்சி நடத்திய அதிபர் கடாபி, அவரது மகன்கள், ராணுவ ஜெனரல்கள் தலைமறைவாகி விட்டனர்.
லிபிய மாற்று கவுன்சில் தலைவர்கள் கட்டுப்பாட்டுக்குள் லிபியா வந்துள்ளது. கடாபி, சயீப் அல் இஸ்லாம் கடாபி ஆகியோர் மீது மனித உரிமை மீறல் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தது, படுகொலை போன்ற பல குற்றச்சாட்டுகள் உள்ளன.இந்நிலையில் கடாபியின் மற்றொரு மகன் அல் சாதியை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று லிபிய மாற்று கவுன்சில் கோரிக்கை விடுத்தது.இதை முதல் முறையாக ஏற்றுக் கொண்ட சர்வதேச பொலிஸ்(இன்டர்போல்), தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் அல் சாதியை சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அல் சாதி தற்போது ஆப்ரிக்க நாடான நைஜீரியா அருகில் உள்ள நைஜர் நாட்டில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தலைநகர் நியாமேவில் உள்ள வீட்டில் அவர் உள்ளார்.இன்டர்போல் அறிவிப்பால் நைஜீரிய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அல் சாதியை இன்டர்போல் பொலிசாரிடம் ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பசி பட்டினியால் 40 லட்சம் குழந்தைகள் பாதிப்பு.
பாகிஸ்தானில் பட்டினி மற்றும் நோயினால் 40 லட்சம் குழந்தைகள் வாடுகின்றனர். பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது.
இதனால் அங்கு கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதில் அப்பகுதியில் வாழும் சுமார் 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் மற்றும் மறு சீரமைப்பு பணிகளும் நடை பெற்று வருகின்றன.ஆனால் இன்னும் அங்கு நிலைமை சீரடையவில்லை. லட்சக்கணக்கான மக்கள் அரசு அமைத்துள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலர் ரோட்டோரங்களிலும், ரெயில் தண்டவாளங்களிலும் கூடாரம் அமைத்து உள்ளனர்.
பாகிஸ்தானில் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எனவே ஐ.நா சபையிடம் உதவி கோரப்பட்டது. அதை தொடர்ந்து இதுவரை ரூ.1800 கோடி உதவி வழங்கப்பட்டுள்ளது. இருந்தும் அவை போதவில்லை.எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானவர்கள் பசி பட்டினியால் வாடுகின்றனர். அவர்கள் பலவித தொற்று நோயினால் சிக்கி தவிக்கின்றனர். குடிக்க தண்ணீர் கிடைக்காமல் வெள்ள நீரை குடித்து உயிர் வாழ்கின்றனர்.
இந்த நிலை பாதின், மிர்புகாஸ், சங்கார், தாண்டோ அல்லாயார் ஆகிய 4 மாவட்டங்களில் பெருமளவில் உள்ளது. இப்பகுதியில் 40 லட்சம் குழந்தைகள் உண்ண உணவின்றி தவிக்கின்றனர்.மேலும் அவர்களை நோய் கொடுமையும் வாட்டுகிறது. எனவே பசிபட்டினி மற்றும் நோயினால் பறி தவிக்கும் குழந்தைகளை காப்பாற்ற பணக்கார நாடுகள் உதவிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
தென் ஆப்ரிக்க கடலில் குளித்த நபரின் கால்களை கடித்துக் குதறிய சுறா.
தென் ஆப்ரிக்காவில் கடலில் குளித்த பிரிட்டன் நபரின் கால்களை கடித்த சுறா காலுடன் கடலுக்குள் போய் விட்டது.
தென் ஆப்பிரிக்கா நாட்டிலுள்ள கேப்டவுனில் பிஸ் ஹோக் கடற்கரை உள்ளது. இங்கு நேற்று பிரிட்டனை சேர்ந்த மைக்கேல் கோஹன்(43) என்பவர் குளிப்பதற்காக வந்தார்.
அப்போது கடற்கரையை ஒட்டிய பகுதியில் சுறா மீன்கள் சுற்றி திரிவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதை பொருட்படுத்தாத மைக்கேல் கடலில் இறங்கி ஜாலியாக குளித்தார்.அப்போது மைக்கேலை நோக்கி வந்த 2 சுறா மீன்கள் அவரது கால்களை கடித்தது. இதில் அதிக ரத்த போக்கு மற்றும் சேதமடைந்த கால்களுடன் மைக்கேல் போராடி கரையை எட்டினார்.
அங்கு அவரை ஹெலிகாப்டரில் வந்து காப்பாற்றிய பொலிசார் மற்றும் மருத்துவ குழுவினர் அவருக்கு உடனடியாக முதலுதவி அளித்து மருத்துவமனையில் சேர்த்தனர்.அவரது உடல் கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சுறா கடித்ததில் அவரது வலது கால் முழுமையாகவும், இடது கால் முட்டிக்கு கீழேயும் இழந்திருந்தார்.
பிரான்ஸ் - ஆப்ரிக்காவுக்கு இடையே அதிவேக ரயில் சேவை.
பிரான்ஸ் மற்றும் ஆப்ரிக்காவுக்கு இடையேயான அதிவேக ரயில் பாதை திட்டம் டிசம்பர் மாதம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தமானது பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசியின் 2007ம் ஆண்டு மொராக்கோ விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்டது.
2015ம் ஆண்டு வரி சேவை திட்டத்தின் படி இத்திட்டமானது மார்கிஷ் மற்றும் அகாதிர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அல்ஸ்டாம் நிறுவனமானது 400 மில்லியன் யூரோ செலவில் 14 அதிவேக ரயில்களை வழங்குகிறது. இந்த ரயில் திட்டத்திற்கு அரபு நாடுகள், சவுதி அரேபியா மற்றும் குவைத் போன்ற நாடுகள் நிதியுதவி அளிக்கின்றன.
இந்த திட்டத்திற்கு மொராக்கோ நாடு 25 சதவீத நிதியுதவியை வழங்குகிறது. மொராக்கோ விஜயத்தின் போது இவர் முகமது VI சந்தித்து பேசினார்.அப்போது முகமதுவின் அரசியல் சீர்திருத்த கொள்கைகளையும், வர்ணணையும் புகழ்ந்துரைத்தார்.
மணிக்கு 230 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்த குத்துச்சண்டை வீரரின் உரிமம் ரத்து.
உலக குத்துச்சண்டை வீரரான ஆர்தர் ஆப்ரகாம் பெரார் நகரத்தில் மணிக்கு 230 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்தததற்காக அவரது ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.பிரபல குத்துச்சண்டை வீரர் ஆர்தர் ஆப்ரகாம் ஆவார். இவர் பெராரி நகரத்தில் மணிக்கு 230 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்தார். ஜேர்மன் பொலிசார் இதனை கண்டறிந்தனர்.
இவரது காரின் வேகத்தை கண்டறிய ரேடார் கருவி பயன்படுத்தப்பட்டது. ஆனால் பத்திரிக்கை செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,“விழாவிற்கு செல்வது தாமதமான காரணத்தினாலேயே இந்த வேகத்தில் சென்றேன்” என்றார்.இருந்தாலும் இவர் மீது பொலிசார் வழக்கு தொடர்ந்தனர். இதனால் இவருக்கு 1360 டொலர் அபராதமும் மூன்று மாத ஓட்டுநர் உரிமமும் தடை செய்யப்பட்டது.2005 மற்றும் 2009 ஆண்டிற்கன சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடல் தீவுகளுக்கு உரிமை கோரும் பிலிப்பைன்ஸ்: சீனா கடும் எச்சரிக்கை.
தென் சீன கடல் பகுதியில் உள்ள தீவுகள் சீனாவுக்கு சொந்தமானவை. இதை சர்வதேச பிரச்னையாக்க முயற்சித்தால் எந்த பலனும் விளையாது என்று சீனா எச்சரித்துள்ளது.தென் சீன கடல் பகுதியில் சில தீவுகள் உள்ளன. அவை சீனாவுக்கு சொந்தமானவை. அதற்கு யாரும் உரிமை கோர முடியாது என்று சீனா பல ஆண்டுகளாக கூறி வருகிறது.
ஆனால் வியட்நாம், ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் தீவுகள் தங்களுக்குதான் சொந்தம் என்று போராடி வருகின்றன. இந்நிலையில் சீன ராணுவ அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் யான்ஷெங் கூறியதாவது: தென் கடல் பகுதியில் உள்ள தீவுகள் சீனாவுக்கு சொந்தம் என்று தெளிவாக கூறி வருகிறோம்.
அந்த தீவுகளுக்கு உரிமை கோரி அவற்றை பல நாட்டு பிரச்னையாகவோ அல்லது சர்வதேச பிரச்னையாகவோ மாற்ற ஆசிய நாடுகள் முயற்சித்தால் ஒரு பலனும் கிடைக்காது.சீன இறையாண்மையை பாதிக்கும் வகையில் செயல்படுவதை அனுமதிக்க மாட்டோம். தீவுகளுக்கு பிலிப்பைன்ஸ் உரிமை கோருவதை ஏற்க முடியாது.இந்த பிரச்னை குறித்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணவே சீனா விரும்புகிறது. தெற்காசிய பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை பாதிக்கப்படாத வகையில் ஆசிய நாடுகள் செயல்பட வேண்டும்.
எஜமானருக்கு புற்றுநோய் இருப்பதை காட்டிக் கொடுத்த நாய்.
எஜமானருக்கு புற்றுநோய் இருப்பதை மோப்ப சக்தியால் கண்டறிந்து உணர்த்தி உயிரை காப்பாற்றியுள்ளது செல்ல நாய். இது இங்கிலாந்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி லண்டனில் வெளியாகும் டெய்லி ஸ்டார் நாளிதழில் இடம்பெற்ற செய்தி வருமாறு: இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்தவர் பிரெண்டா ஜோன்ஸ். வயது 47.இவரது 5 வயது செல்ல நாய் மர்பி. கடந்த 10 நாட்களுக்கு முன்பிருந்து அதன் நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிந்தது. எப்போது பார்த்தாலும் பிரெண்டாவின் மடியில் வந்து படுத்துக் கொண்டது. வித்தியாசமான சத்தம் எழுப்பியது.
ஒரு வாரமாக அதை கவனித்த பிரெண்டா, ஏன் இப்படி செய்கிறாய் என்று அதை கேட்டபோது, ஒரு காலால் அவரது இடது மார்பகத்தை அழுத்தியது. அந்த இடம் பிரெண்டாவுக்கு கடுமையாக வலித்தது.நாயின் கால் பதிந்த வலி போல அது தெரியாததால் கண்ணாடி முன் அந்த இடத்தை கவனித்தார். அங்கு நாணயம் அளவுக்கு கட்டி போல இருந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்து கொண்டார். பிரெண்டாவுக்கு மார்பக புற்றுநோயின் ஆரம்ப நிலை ஏற்பட்டிருப்பது சோதனையில் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினர். புற்றுநோய் கிருமிகள் மேலும் பரவாமல் செமோதெரபியை தொடர்கின்றனர். கட்டியை மேலும் சில நாட்கள் கவனிக்காமல் விட்டிருந்தால் பிரெண்டாவின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.புற்றுநோய்க்கு பலியாக இருந்த தன்னை செல்ல நாய் மர்பிதான் காப்பாற்றியதாக அனைவரிடமும் பெருமை பொங்க கூறுகிறார் பிரெண்டா. இதுபற்றி மருத்துவ நிபுணர் ஒருவர் கூறுகையில்,“மோப்ப சக்தி மூலம் புற்றுநோய் கிருமியை நாய் கண்டுபிடித்துள்ளது. அதை சரியான நேரத்தில் தொட்டுக் காட்டியுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது” என்றார்.
பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்: பிரதமர் கமரூன்.
பிரிட்டனின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடிகள்(சூப்பர் மார்க்கெட்) வரம்பின்றி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகின்றனர். இது எச்சரிக்கைக்குரியது என பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் பைகள் பயன்ப்பாட்டை குறைக்க வேண்டும். இல்லாவிடில் கட்டாயம் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.கடந்த ஆண்டை விட பிளாஸ்டிக் பைகளின் எண்ணிக்கை 333 மில்லியன் உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டைவிட 5% அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்தார்.
ஒசாமா பின்லேடனின் பாதுகாவலர் விடுதலை.
அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் பின்லேடன். கடந்த மே 2ந் திகதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் அமெரிக்க ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.அதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்த அவர் அமெரிக்கா ராணுவ தாக்குதல் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 2001ம் ஆண்டு பாகிஸ்தானுக்குள் புகுந்தார்.
அவருடன் அமின் அல்-ஹாக் என்பவரும் பாகிஸ்தானுக்கு வந்தார். இவர் பின்லேடனின் பாதுகாவலர் ஆவார். பாகிஸ்தான் வந்த அவர் பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துக்கு நிதி ஆதாரங்களை திரட்டி வழங்கி வந்தார்.இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உளவுத்துறையால் லாகூரில் கைது செய்யப்பட்டார். இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் பின்லேடனுடன் இவருக்கு இருந்த தொடர்பு நிரூபிக்கப்படவில்லை. எனவே இவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த தகவலை லண்டனில் இருந்து வெளிவரும் டெலிகிராப் பத்திரிகை தெரிவித்துள்ளது. 51 வயதான அமின் அல்-ஹாக் கடந்த 1980ம் ஆண்டு சோவியத் ரஷியாவின் ராணுவத்தால் ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் சூடான் சென்ற அவர் அங்கிருந்து பின்லேடனை 1996ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு அழைத்து வந்தார்.
நிலநடுக்கத்தின் நினைவுப்புத்தகம்: ஜப்பான் வெளியீடு.
ஜப்பானில் நான்கு நிமிடம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உண்டான அழிவுகளை காட்டும் விதமாக படங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை ஜப்பான் வெளியிட்டுள்ளது.ஜப்பான் நாட்டின் ரிகுலென்டாக்டா பகுதியில் மார்ச் 11-ல் நான்கு நிமிடம் நீடித்த நிலநடுக்கம் பல்வேறு அழிவுகளை உண்டாக்கியது, இதைத் தொடர்ந்து அங்கு சுனாமியும் ஏற்பட்டது. இதனை பிரதிபலிக்கும் வகையில் "நான்கு நிமிடத்தில் நகரத்தின் அழிவு' என்ற புத்தகத்தை ஜப்பான் வெளியிட்டுள்ளது.
இதற்கு தேவையான படங்களை புகைப்படக் கலைஞர்கள் ஷின்யா கொமாஸ், டொயொடா ஆகியோர் தொகுத்தனர்.நூறு பக்கங்கங்களைக் கொண்ட இந்த புத்தகம் 40 பேரிடம் பேட்டி கண்டு தொகுக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் நிலநடுக்கத்தின் போது நின்று போன கடிகாரம், கட்டட இடிபாடுகளுக்கிடையே சிரிக்கும் மனிதன் போன்ற படங்கள் தொகுக்கப்பட்டுள்ள.
ஆயுதங்களை கொள்முதல் செய்வதில் இந்தியா முதலிடம்.
வளரும் நாடுகளில் ஆயுதங்கள் கொள்முதலில் செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2010ம் ஆண்டு இந்தியா 580 கோடி டொலர் மதிப்பிலான பல்வேறு ஆயுதங்களை வாங்கியுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தைவான்(270 கோடி டொலர்களுடன்) உள்ளது. சவுதி அரேபியா, பாகிஸ்தான் அடுத்த இடங்களில் உள்ளன.
பெரும்பகுதி ஆயுதங்களை இந்தியா தொடர்ந்து ரஷியாவிடமிருந்துதான் வாங்கி வருகிறது. எனினும் இந்தியா இப்போது நவீன தொழில்நுட்பம் வாய்ந்த ஆயுதங்களை இஸ்ரேல், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து கொள்முதல் செய்கிறது.வளரும் நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில் அமெரிக்கா முதலிடத்திலும், ரஷியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. ரஷியா 780 கோடி டொலர் மதிப்புள்ள ஆயுதங்களை வளரும் நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது.
2010ம் ஆண்டில் மட்டும் 4,040 கோடி டொலர் மதிப்பிலான ஆயுதங்கள் விற்பனையாகின. 2009ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 38.1 சதவீதம் அதிகம் ஆகும். 2003ம் ஆண்டில்தான் மிகக் குறைந்த அளவு ஆயுதங்கள் விற்பனையாகின.தெற்காசிய பகுதியில் நவீன ஆயுதங்கள் விற்பனையில் ரஷியாவின் முன்னிலை வகிப்பது அமெரிக்காவுக்கு கவலையளிப்பதாக உள்ளது. குறிப்பாக பாகிஸ்தான், இந்தியா இடையிலான மோதல் போக்குதான் அமெரிக்காவின் கவலைக்கு காரணமாக கூறப்படுகிறது.
உலக பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்த போதும், ஆசிய நாடுகளில் சில பெரிய அளவில் ஆயுதங்கள் கொள்முதல் செய்துள்ளன. குறிப்பாக சவுதி அரேபியாவும், ஆசியப் பகுதியில் இந்தியாவும் அண்மையில் அதிகளவில் ஆயுதங்களை வாங்கியுள்ளன. இவ்விரு நாடுகளின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதால் அவை ஆயுதக் குவிப்பில் ஈடுபட்டிருக்கலாம்.ஆயுதப் போட்டியை நீர்த்துப் போக செய்யும் நடவடிக்கையாக இந்தியாவுக்கு ராணுவ ஒத்துழைப்பு அளிப்பதுடன் ஆயுதங்கள் விற்பனையை அமெரிக்கா அதிகரித்துள்ளது.
ஆனால் இந்தியா ஆயுதக் கொள்முதலை பரவலாக்கியுள்ளது. 2008ம் ஆண்டில் அமெரிக்காவிடமிருந்து ஆறு சி13ஜே ரக சரக்கு விமானங்களை வாங்கி உள்ளது.2010ம் ஆண்டில் 57 ஹாக் ஜெட் பயிற்சி விமானங்களை 100 கோடி டொலர் மதிப்பில் இங்கிலாந்திடமிருந்து வாங்கியுள்ளது. அதே ஆண்டு 12 ஏடபிள்யு ஹெலிகாப்டர்களை இத்தாலியிடமிருந்து இந்தியா வாங்கியுள்ளது.
எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஹிலாரி சந்திப்பு.
எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது கமல் புதன்கிழமை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை சந்தித்தார்.எகிப்து நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டங்கள் யாவும் 2012 ஜூன் மாதத்துக்குள் முடிவுக்கு வந்து விடும் என்று ஹிலாரி கிளிண்டன் அப்போது நம்பிக்கை தெரிவித்தார்.
எகிப்தின் இடைக்கால ராணுவ கவுன்சில் அடுத்த ஆண்டு ஜூன் வரை அவசரகால சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் என முன்னர் தெரிவித்திருந்தது.அவசரகால சட்டங்களை உரிய காலக்கெடுவுக்குள் ரத்து செய்ய வேண்டுமென அமெரிக்கா விரும்புவதாகவும் எகிப்தின் ஆளும் கவுன்சிலும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் ஹிலாரி கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஹிலாரி உரிய காலக்கெடுவுக்கு முன்னரே அவசரகாலச் சட்டங்கள் ரத்து செய்யப்படுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம். சட்டத்தின் ஆட்சி மலர்வதற்கு இது முக்கியம். எகிப்து மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்தவும் இது அவசியம் என்றார்.வெளிப்படைத்தன்மை வாய்ந்த தேர்தலையும் சரியான ஆட்சி மாற்றத்தையும் எகிப்து மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுகுறித்து எங்கள் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதிபருக்கான தேர்தல் அதன் பிறகு நடைபெறும் என்றார் ஹிலாரி.
மேலும் ஹிலாரி கூறுகையில்,“பல வழிகளில் எகிப்துக்கு அமெரிக்கா உதவியுள்ளது, தொடர்ந்து உதவுவோம். எதிர்காலத்தில் எங்கள் நட்பும் ஒத்துழைப்பும் தொடரும். மத்திய கிழக்கில் நிலைத்தன்மை மற்றும் அமைதி நிலைக்க இரு நாடுகளும் கடந்த காலங்களில் நிறைய உழைத்துள்ளன. இதனை எதிர்காலத்திலும் தொடர்வோம்” என்றார்.எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சர், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டாவையும் சந்தித்து தற்போதுள்ள நிலவரம் குறித்து விவாதித்தார்.
ஏமன் தலைநகரில் தொடரும் கலவரம்.
ஏமன் தலைநகரில் அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடக்கிறது.ஏமன் அதிபராக அலி அப்துல்லா சலே கடந்த 32 ஆண்டுகளாகப் பதவியில் நீடித்து வருகிறார். அவர் பதவி விலக வலியுறுத்தி கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர்.
நான் பதவி விலகினால் அல்கொய்தா பயங்கரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் எனக் கூறி பதவியிலிருந்து இறங்க மறுத்து வருகிறார் சலே.அதிபர் மாளிகை மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் சலே தீக்காயம் அடைந்தார். இதனால் சவுதியில் மூன்று மாத காலம் சிகிச்சை பெற்று சமீபத்தில் நாடு திரும்பினார்.அதிபர் மீண்டும் நாடு திரும்பியதால் ஆத்திரமடைந்த கிளர்ச்சியாளர்கள், அரசுப் படைகளுக்கெதிராகச் சண்டையிட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் நடந்த சண்டையில் ராணுவ விமானத்தை கிளர்ச்சியாளர்கள் தகர்த்தனர். இதைத் தொடர்ந்து நடந்த சண்டையில் 40 பேர் கொல்லப்பட்டனர்.நேற்றும் தலைநகர் சனாவில் இருதரப்புக்கும் இடையே கடும் சண்டை தொடர்ந்தது. இதில் எத்தனை பேர் பலியானார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள வேண்டாம்: ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு கமிட்டிக் கூட்டம் இந்தியா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.அக்கூட்டத்தில் எந்தச் சூழலிலும் பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள வேண்டாம் என உறுப்பு நாடுகளை பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக் கொள்ளும் என அறிக்கை வெளியிடப்பட்டது.
தங்கள் நாட்டில் தங்க பயங்கரவாதிகளை அனுமதிக்காமல் நீதியின் முன் அவர்களை நிறுத்துங்கள் என்று அந்த அறிக்கை கேட்டுக்கொண்டது. பயங்கரவாதத்தைத் தடுக்கவும் அதை எதிர்த்துப் போராடவும் உறுப்பு நாடுகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கை கேட்டுக்கொண்டது.பயங்கரவாத எதிர்ப்புக் கமிட்டி தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியொன்றில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.மேலும் செப்டம்பர் 11ம் திகதி நடந்த அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மீதான தாக்குதலுக்கு எதிராக பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றி 10 ஆண்டுகள் ஆவதையும் இந்நிகழ்ச்சி குறித்தது.
எல்லைப் பகுதிகளை தகுந்த கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் பயங்கரவாதிகளின் ஆயுத நடமாட்டத்தை தடுப்பதில் உறுப்பு நாடுகள் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் அந்த அறிக்கை கேட்டுக்கொண்டது.சில அறக்கட்டளை நிறுவனங்களுக்குச் சென்று சேரும் நிதி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படாமல் இருப்பதை உறுப்பு நாடுகள் உறுதி செய்ய வேண்டும்.
பயங்கரவாத நடவடிக்கையின் நோக்கம் எதுவாக இருந்தாலும்,“பயங்கரவாதம் ஒரு குற்றமே, அதை நியாயப்படுத்த முடியாது” என்பதை உறுப்பு நாடுகள் உறுதி செய்யவேண்டும் என்று அறிக்கை கேட்டுக்கொண்டது.போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் மற்றும் ஹவாலா தொழிலில் ஈடுபடுதல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டுவரும் சர்வதேசக் கும்பல்களுக்கும் பயங்கரவாதக் குழுக்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து அறிக்கை கவலை தெரிவித்தது.
பயங்கரவாத எதிர்ப்புக் கமிட்டி உருவாகி 10 ஆண்டுகள் ஆன பின்னரும் தேசிய, சர்வதேச, பிராந்திய அளவில் செய்யவேண்டியவை நிறைய உள்ளன என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், அமெரிக்கா மீதான தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் ஆன பின்னரும் பயங்கரவாதம் முக்கிய ஆபத்தாக இன்னமும் உள்ளது. இந்த ஆபத்தால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரை இழக்கின்றனர். பிராந்திய இணக்கம் குலைகிறது என்று கவலை தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் சிங் புரி, பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் உறுப்பு நாடுகளிடையே ஓர் ஒற்றுமையை உருவாக்கியிருக்கிறது. சர்வதேச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தையை சாத்தியமாக்கியிருக்கிறது என்றார்.பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ளாமல் இருப்பது என்பது பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தல், தங்கள் மண்ணைப் பயன்படுத்த பயங்கரவாதிகளை அனுமதித்தல் ஆகியவற்றுக்கு எதிரானது என்றார் ஹர்தீப் சிங்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF