Tuesday, May 3, 2011

ஊழியர்கள் எவரும் தற்கொலை செய்யக் கூடாது! வற்புறுத்தி கையொப்பம் வாங்கும் அப்பிள் ஐபோன் நிறுவனம்.

சீனாவில் அப்பிள் ஐபோன் மற்றும் ஐபேட் நிறுவனங்களில் தொழில்புரிய வரும் ஊழியர்கள், வேலையில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு முன், தற்கொலை செய்துகொள்ள மாட்டோம் என்ற ஒரு உறுதிப்பத்திரத்தில் ஒப்பமிடுமாறு வற்புறுத்தப்படுகின்றனர். 

இவ்வாறான தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுள் குறைந்த பட்சம் 14 பேர் கடந்த 16 மாத காலத்தில் தற்கொலை செய்துள்ளனர். 

தொழிற்சாலைகளில் காணப்படும் மிக மோசமான வசதியீனங்களே இந்தத் தற்கொலைகளுக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. அதனையடுத்தே அப்பிள் நிறுவனம் இந்த நடைமுறையைப் பின்பற்றுகின்றது. செங்டு அல்லது சென்சன் பிரதேசங்களில் உள்ள அப்பிள் விநியோக நிலையத் தொழிற்சாலைகளில் பல தற்கொலைகள் தடுக்கப்பட்டும் உள்ளன. 

புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்படும் ஊழியர்கள் தற்கொலை செய்து கொள்ள மாட்டோம் என்ற உறுதிப்பத்திரத்தில் ஒப்பமிட வற்புறுத்தப் படுகின்றார்கள் என்பது இங்குள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் இரண்டு மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. 

இதையும் மீறி அவர்கள் தற்கொலை செய்து கொண்டால் அவர்களின் குடும்பத்தவர்கள் குறைந்த பட்ச நட்டஈட்டையே கோருவார்கள் என்றும் இந்தப் பத்திரத்தின் மூலம் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் ஐந்து லட்சம் ஊழியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட விசாரணைகளின்போதே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன. சீனத் தொழிற்சாலைகளில் ஊழியர்கள் பணிபுரிவதற்கான நிலைமைகள் மிகவும் மோசமாகவே இருக்கின்றன. வாராந்தம் சுமார் 36 மணிநேரம் வேலை செய்ய வேண்டிய ஒரு ஊழியர் 98 மணிநேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். 

13 தினங்கள் வேலை செய்த பின் ஒரு நாள் அவர்களுக்கு ஓய்வு கிடைக்கின்றது. சரியாக வேலை செய்யாத ஊழியர்கள் மற்றவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்படுகின்றனர். வேலை நேரத்தின் போது தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக் கூட அனுமதிக்கப்படுவதில்லை. இவ்வாறு பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF